Tears wiped | Yuddha-Kanda-Sarga-046 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரஜித் மறைந்திருப்பதைக் கண்ட விபீஷணன்; சுக்ரீவனைத் தேற்றியது; இராமலக்ஷ்மணர்களைக் கொன்றுவிட்டதாக ராவணனிடம் அறிவித்த இந்திரஜித்...
பிறகு வானத்தையும், பிருத்வியையும் பார்த்துக் கொண்டிருந்த வனௌகசர்கள் {வனத்தை வசிப்பிடமாகக் கொண்ட வானரர்கள்}, உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் பாணங்களால் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.(1) அப்போது, மழை பொழியும் தேவனை {இந்திரனைப்} போலத் தன் கர்மத்தைச் செய்துவிட்டு ராக்ஷசன் {இந்திரஜித்} ஓய்ந்ததும், அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} சுக்ரீவனுடன் சேர்ந்து விபீஷணனும் வந்தான்.(2) நீலன், துவிவிதன், மைந்தன், சுஷேணன், குமுதன், அங்கதன் ஆகியோரும் ஹனுமதனுடன் சேர்ந்து விரைவில் கூடி ராகவர்களுக்காக {ராமலக்ஷ்மணர்களுக்காக} வருந்திக் கொண்டிருந்தனர்.(3)