Showing posts with label வசிஷ்டர். Show all posts
Showing posts with label வசிஷ்டர். Show all posts

Sunday, 7 July 2024

ஸ்ரீராம பட்டாபிஷேகம் - திருமுடிச் சூட்டு | யுத்த காண்டம் சர்க்கம் - 128 (125)

Coronation of Sri Rama | Yuddha-Kanda-Sarga-128 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளும்படி ராமனை வேண்டிய பரதன்; ஸ்ரீராம பட்டாபிஷேகம்; விருந்தினர்களுக்குக் காணிக்கைகளை அளித்து, அவர்களுக்கு விடைகொடுத்தனுப்பிய ராமன்...

Sri Rama Pattabhishekam


கைகேயியாநந்தவர்தனனான {கைகேயியின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான} பரதன், சிரசில் அஞ்சலி செய்தபடியே {கைக்கூப்பியபடியே}, சத்திய பராக்கிரமனும், தனக்கு மூத்தவனுமான ராமனிடம் {பின்வருமாறு} பேசினான்:(1) "என் மாதாவை {கைகேயியைப்} பூஜித்து, இந்த ராஜ்ஜியம் எனக்கு தத்தம் செய்யப்பட்டது. நீர் எனக்கு கொடுத்தது எப்படியோ, அப்படியே அதை {ராஜ்ஜியத்தை} மீண்டும் நான் உம்மிடம் கொடுக்கிறேன்.(2) பலமுடைய பெரும் ரிஷபத்தால் {உதவியேதுமின்றி} தனியாகச் சுமக்கப்பட்ட பெரும்பாரம் கன்றுக் குட்டிக்கு {இயலாமல் போவது} எப்படியோ, அப்படியே இந்த {ராஜ்ஜிய} பாரத்தைச் சுமப்பது என்னால் இயலாது.(3) நீரின் மஹத்தான வேகத்தால் உண்டாகும் விரிசல்களின் மூலம் உடையும் சேதுவை {அணையை / பாலத்தை /கரையைப்} போல மறைக்கப்படாமல் இருக்கும் இந்த ராஜ்ஜியத்தின் ஓட்டைகளை அடைப்பது {குறைகளைச் சரி செய்வது} கடினமானது என நினைக்கிறேன்.(4) அரிந்தமரே, வீரரே, அஷ்வத்தின் {குதிரையின்} கதியைக் கழுதையோ, ஹம்சத்தினுடையதை வாயஸமோ {அன்னத்தின் கதியை காக்கையோ} அடைய முடியாததைப் போல, ராமரே, உமது மார்க்கத்தை என்னால் பின்பற்ற இயலாது.(5)

நிவேசனத்திற்குள் ஒரு விருக்ஷம் {வீட்டிற்குள் ஒரு மரம்} நடப்பட்டு, பெருந்தண்டுடனும், பெருங்கிளைகளுடனும் ஏற முடியாத அளவில் பெரிதாக வளர்ந்து,{6} புஷ்பித்தபிறகு, பழங்களைத் தராமல் செழிப்பை இழக்குமென்றால் {பட்டுப்போகுமென்றால்}, எந்த அர்த்தத்திற்காக, எதற்கு ஹேதுவாக அது நடப்பட்டதோ, அதன் பலனை ஒருவன் அனுபவிக்கமாட்டான்.{7} மஹாபாஹுவே,  இதுவே உபமானம் {இதுவே உமக்கான உவமை}. மனுஜேந்திரரே, பக்தியுள்ள அடியவர்களான எங்களைத் தலைவரான நீர் ஆளாமல் போனதன் அர்த்தத்தை நீரே புரிந்து கொள்வீராக[1].(6-8) இராகவரே, மத்தியானத்தில் சுடர்மிகும் தேஜஸ்ஸுடன் பிரகாசமாக ஒளிரும் ஆதித்யனை {சூரியனைப்} போல, அபிஷேகம் செய்து கொண்டவராக, இன்றே ஜகம் உம்மைக் காணட்டும்.(9) தூரியங்களுடன் கூடிய கோஷங்களுடனும், காஞ்சீநூபுரங்களின் {மேகலை, சிலம்பு ஆகியவற்றின்} சுவனங்களுடனும், மதுரமான கீத சப்தங்களுடனும் ஆசுவாசமாகக் கண்விழிப்பீராக.(10) எதுவரை சக்கரம் சுழலுமோ, எதுவரை வசுந்தரை {பூமி} நிலைக்குமோ[2], அதுவரை இங்கே நீர் உலகத்தின் ஸ்வாமித்வத்தை {தலைமைத்துவத்தை} கவனிப்பீராக" {என்றான் பரதன்}.(11)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "மஹாபாஹூ, வீட்டிற்குள் ஒரு வ்ருக்ஷத்தை நடுகையில், அது மிகுதியும் வளர்ந்து, சிறிதும் ஏறமுடியாதபடி பெரிய கிளைகள் அடர்ந்து புஷ்பங்களும் நிறைந்து, பலிக்காமலே பாழடையுமாயின் அதை எதற்காக நட்டுவளர்த்தானோ அந்தப் பயன் வளர்த்தவனுக்கு விளையாமற்போமல்லவா? தசரதர் புத்ரகாமேஷ்டி முதலியவற்றைச் செய்து உன்னைப் பெறுகையில், நீயும் வளர்ந்து மஹாபராக்ரமசாலியாகி பந்துக்களும், நண்பர்களும், பெரியோர்களும் சூழப்பெற்று மங்கள குணங்களெல்லாம் அமைந்து விளங்குகின்றனை. அப்படிப்பட்ட நீ உன்னைப் பெற்றதற்குப் பயனாக ராஜ்யத்தைப் பாதுகாத்து பக்தர்களும், ப்ருத்யர்களுமான எங்களை ஆளாது போவாயாயின், முன்பு உதஹரித்த வ்ருக்ஷம் உபமானமாகும். இந்த உவமை உனக்காகவே மொழிந்தேனாகையால் இதன் பொருளை நீயே அறிவாயாக" என்றிருக்கிறது. 

[2] தர்மாலயப் பதிப்பில், "சூரியசந்திரர்களடங்கிய ஜோதிமண்டலம் எவ்வளவு காலம் சுழலுகிறதோ, பூமி எவ்வளவு விஸ்தாரமோ அவ்வளவு காலம் அந்த எல்லாவற்றிற்கும் சக்கிரவர்த்தியாயிருத்தலை தேவரீர் இப்பொழுது வகித்தருள்விராக" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நக்ஷத்ரமண்டலம் எவ்வளவு காலம் உலாவுமோ, பூமி எவ்வளவு காலம் நிலைநின்றிருக்குமோ, அவ்வளவு காலம் நீ இங்கு ஸமஸ்த ராஜ்யத்திற்கும் ப்ரபுவாயிருப்பாயாக" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில்,"சூரிய-சந்திர-நட்சத்திர மண்டலம் எதுவரை சுழல்கிறதோ, இந்த பூமி எவ்வளவு காலம் நிலைத்து இருக்கிறதோ, அந்தக் காலம்வரை தாங்களே இவை எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

பரபுரஞ்சயனான {பகை நகரங்களை வெற்றி கொள்பவனான} ராமன், பரதனின் சொற்களைக் கேட்டு, அவற்றை ஏற்கும் வகையில், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, ஒரு சுபமான ஆசனத்தில் அமர்ந்தான்.(12) அப்போது, சுகமான கைகளுடன் சீக்கிரமாகச் செயல்படக்கூடிய நிபுணர்களான சிமஷ்ருவர்தகர்கள் {நாவிதர்கள் / அம்பட்டர்கள்}, சத்ருக்னனின் வசனத்தின் பேரில், ராகவனை {ராமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(13) பூர்வத்தில் {முதலில்} பரதனும், அதன்பிறகு, மஹாபலவானான லக்ஷ்மணனும், வானரேந்திரனான சுக்ரீவனும், ராக்ஷசேந்திரனான விபீஷணனும்,{14} ஜடையை நீக்கி, ஸ்நானம் செய்தபிறகு, சித்திர மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், விலைமதிப்புமிக்க வஸ்திரங்களை உடுத்திக் கொண்டும் அங்கே அவன் ஸ்ரீயுடன் {ராமன் செழிப்புடன்} ஜ்வலித்தபடி நின்று கொண்டிருந்தான்.(14,15) இலக்ஷ்மீவானும், இக்ஷ்வாகுகுலவர்தனனுமான வீரியவான் {சத்ருக்னன்}, ராமலக்ஷ்மணர்களுக்குரிய அலங்காரத்தை கவனித்துக் கொண்டான்.(16)

அப்போது, மனஸ்வினிகளான தசரதஸ்திரீகள் {உன்னத மனம் கொண்டவர்களான தசரதனின் மனைவியர்} அனைவரும், தாங்களே முன்னின்று சீதையின் அலங்காரத்தை மனோஹரமாக {மனம் கொள்ளை போகும் வகையில்} செய்தனர்.(17) பிறகு, புத்ரவத்ஸலையான {மகன்களிடம் அன்பு கொண்டவளான} கௌசல்யை, வானரபத்னிகள் அனைவரையும் யத்னத்துடன் சோபிக்கச் செய்தாள்.(18) அப்போது, சத்ருக்னனுடைய வசனத்தின் பேரில், சுமந்திரன் என்ற பெயருடைய சாரதி, சர்வ அங்கங்களிலும் சோபிக்கும் வகையில் ரதத்தைப் பூட்டி அணுகினான்.(19) மஹாபாஹுவும், பரபுரஞ்சயனுமான ராமன், அர்க்க மண்டலத்திற்கு ஒப்பான திவ்ய ரதம் {சூரிய மண்டலத்திற்கு ஒப்பான பிரகாசம் கொண்ட தேர் தன் முன்} இருப்பதைக் கண்டு, அதில் ஆரோஹணம் செய்தான் {ஏறினான்}.(20)

மஹேந்திரனுக்கு ஒப்பான ஒளியுடன் கூடிய சுக்ரீவனும், ஹனுமானும், ஸ்நானம் செய்துவிட்டு, திவ்யமான தோற்றமுடைய வஸ்திரங்களையும், சுபமான குண்டலங்களையும் தரித்துக் கொண்டனர்.(21) சர்வ ஆபரணங்களையும் பூண்டவர்களான அந்த சுக்ரீவனின் பத்னிகளும் {மனைவியரும்}, சுபகுண்டலங்களுடன் கூடிய சீதையும், {அயோத்தி} நகரைக் காணும் உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.(22) 

அயோத்யையில், ராஜா தசரதனின் அமைச்சர்கள், புரோஹிதரை {வசிஷ்டரை} முன்னிட்டுக் கொண்டு, அனைத்து அர்த்தங்களையும் {நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் குறித்துத்} திட்டமிட்டனர்.(23) அசோகனும், விஜயனும், சித்தார்த்தனும், ராமனின் விருத்திக்கான அர்த்தத்திற்காகவும், நகரின் செழிப்புக்கான அர்த்தங்களையும் சமாஹிதத்துடன் ஆலோசித்தனர்.(24) "ஜயத்திற்குத் தகுந்த மஹாத்மா ராமரின் அபிஷேக அர்த்தத்திற்கான சர்வ தேவைகளையும் மங்கலப் பூர்வமாகச் செய்வதே உமக்குத் தகும்",(25) என்று புரோஹிதரிடம் {வசிஷ்டரிடம்} அறிவுறுத்திய அந்த சர்வ மந்திரிகளும், ராமனை தரிசிக்கும் நோக்கத்துடன் நகரத்தைவிட்டுத் துரிதமாகப் புறப்பட்டுச் சென்றனர்.(26)

அனகனான {களங்கமற்றவனான} ராமன், பச்சைக்குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சஹஸ்ராக்ஷனை {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனைப்} போல, உத்தம ரதத்தில் ஏறி நகரை நோக்கிப் பிரயாணம் செய்தான்.(27) பரதன், கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டான். சத்ருக்னன் அவனது {ராமனின்} தலைக்கு மேல் குடையைப் பிடித்தான். இலக்ஷ்மணன் சாமரம் வீசிக் கொண்டிருந்தான்.{28} இராக்ஷசேந்திரன் விபீஷணன், முன் நின்று கொண்டு சந்திரனுக்கு ஒப்பாகப் பிரகாசிக்கும் மற்றொரு வெண்சாமரத்தைப் பிடித்திருந்தான்.(28,29) அப்போது, ரிஷிசங்கத்தினரும், தேவர்களும், மருத்கணங்களும் ஆகாசத்தில் இருந்து ராமனைப் புகழ்வது மதுரத்வனியாக {இன்னொலியாகக்} கேட்டது.(30)

பிறகு, பிலவகரிஷபனும், மஹாதேஜஸ்வியுமான சுக்ரீவன், பர்வதத்திற்கு ஒப்பானதும், சத்ருஞ்ஜயம் என்ற பெயருடையதுமான குஞ்சரத்தின் {யானையின்} மீது ஆரோஹணஞ்செய்தான் {ஏறிக் கொண்டான்}.(31) வானரர்கள், மனுஷ வடிவம் தரித்துக் கொண்டு, சர்வ ஆபரணங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு, ஒன்பதாயிரம் நாகங்களின் {யானைகளின்} மீது ஏறிச் சென்றனர்.(32) அந்தப் புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்}, சங்குகளின் சப்தமும், துந்துபிகளின் சுவனமும் கொண்ட நாதத்துடன், அரண்மனைகளை மாலையாகக் கொண்ட அந்தப் புரீக்கு {அயோத்தி நகரத்திற்குப்} பிரயாணித்தான்.(33) 

அப்போது, எதிர்வந்து அழைக்க வந்தவர்கள் {அயோத்திவாசிகள்}, அழகிய வடிவத்துடன் கூடிய அதிரதன் ராகவன் {ராமன்}, ரதத்தில் வருவதைக் கண்டனர்.(34) காகுத்ஸ்தனை வாழ்த்தி, ராமனால் பதிலுக்கு வாழ்த்தப்பெற்ற அவர்கள், உடன்பிறந்தோர் சூழ வந்த மஹாத்மாவை {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(35) அமைச்சர்களாலும், பிராமணர்களாலும், பிரக்ருதிகளாலும் {சாதரணர்களாலும் / குடிமக்களாலும்} சூழப்பட்ட ராமன், நக்ஷத்திரங்களுடன் கூடிய சந்திரனைப் போலத் தன்னொளியால் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(36) கையில் தூரியங்கள், தாளங்கள், ஸ்வஸ்திகங்களுடன் {இசைக்கருவிகளுடன்} முன் சென்று, மங்கலச் சொற்களை ஆனந்தமாகக் கூறியவர்களால் சூழப்பட்டவனாக அவன் {ராமன்} சென்றான்.(37) ஜாதரூபமாகத் தெரியும் அக்ஷதையுடன் {தங்கம்போலத் தெரியும் மஞ்சள் கலந்த அரிசியுடன்} இருக்கும் நரர்கள் {மனிதர்கள்}, பசுக்கள், கன்னிகைகள், கையில் மோதகங்களுடன்[3] கூடிய துவிஜர்கள் ஆகியோரும் ராமனுக்கு முன்னே சென்றனர்.(38)

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மோதகம் = குழக்கட்டை, லட்டென்று சிலர் கூறுவர்" என்றிருக்கிறது.

அப்போது, சுக்ரீவனுடன் உண்டான நட்பையும், அநிலாத்மஜனின் {வாயு மைந்தனான ஹனுமானின்} பிரபாவத்தையும், அந்த வானரர்களின் கர்மத்தையும் குறித்து மந்திரிகளிடம் ராமன் சொன்னான்.(39) அயோத்யாபுரவாசிகள், அந்த வானரர்களின் கர்மத்தையும், அந்த ராக்ஷசர்களின் பலத்தையும் கேட்டதில் வியப்பை அடைந்தனர்.(40) பிறகு, விபீஷணனைச் சந்தித்தது குறித்தும், மந்திரிகளிடம் சொன்னான். ஒளிமிக்கவனான ராமன், வானரர்களுடன் சேர்ந்து அதை நினைவுகூர்ந்த பிறகு,{41} மகிழ்ச்சியில் திளைத்த ஜனங்கள் சூழ அயோத்யாவிற்குள் பிரவேசித்தான்.(41,42அ) அப்போது, பௌரர்கள் {புரவாசிகள் / நகரவாசிகள்}, கிருஹத்திற்கு கிருஹம் பதாகைகளை ஏற்றினர். ஐக்ஷ்வாகுக்கள் வசித்த தன் பிதாவின் ரம்மியமான கிருஹத்தை அவன் {ராமன்} அடைந்தான்.(42ஆ,43அ)

பிறகு, தர்மவான்களில் சிறந்தவனான பரதனிடம், ராஜபுத்திரன் ரகுநந்தனன் {ரகுக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான ராமன்}, அர்த்தம் பொதிந்த சொற்களை மதுரமாக {இனிமையாகப் பின்வருமாறு} பேசினான்.{43ஆ,44அ} பிதாவின் பவனத்தை அடைந்து, அதற்குள் பிரவேசித்த மஹாத்மா {ராமன்}, கௌசல்யாவையும், சுமித்ரையையும், கைகேயியையும் வணங்கினான்:(43ஆ-45அ) "அசோக வனிகையுடனும், முத்து, வைடூரியங்களுடனும் கூடிய, என்னுடைய இந்த மஹத்தான பவனத்தை சுக்ரீவனுக்குக் கொடுப்பாயாக" {என்று பரதனிடம் சொன்னான் ராமன்}.(45ஆ,46ஆ)

சத்திய விக்ரமனான பரதன், அவனுடைய {ராமனின்} அந்த வசனத்தைக் கேட்டவுடன், சுக்ரீவனின் கையைப் பற்றிக் கொண்டு, {ராமனின்} அந்த ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.(46ஆ,47அ) பிறகு, சத்ருக்னனால் ஆணையிடப்பட்ட சிலர், பிரகாசிக்கும் தைலதீபங்கள் {எண்ணெய் விளக்குகள்}, மஞ்சங்களுக்கான விரிப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சீக்கிரமே {அந்த மாளிகைக்குள்} நுழைந்தனர்.(47ஆ,48அ)

மஹாதேஜஸ்வியான ராகவானுஜன் {ராகவனின் தம்பி பரதன்}, சுக்ரீவனிடம், "பிரபோ, ராமரின் அபிஷேகத்தின் பொருட்டு {அபிஷேகத்திற்கான நீரைக் கொண்டு வர} தூதர்களுக்கு ஆணையிடுவாயாக" என்று சொன்னான்.(48ஆ,49அ) அந்த சுக்ரீவன், சர்வ ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட நான்கு சுவர்ண கடங்களை {பொற்குடங்களை} நான்கு வானரேந்திரர்களிடம் சீக்கிரமாகக் கொடுத்தான்.(49ஆ,50அ) "வானரர்களே, நான்கு சாகரங்களின் நீரால் பூர்ணமடைந்த கடங்களுடன், பிரதியுஷா சமயத்தில் {விடியற்காலையில் இங்கே} நீங்கள் காத்திருப்பது எப்படியோ, அப்படி செயல்படுவீராக" {என்றான் சுக்ரீவன்}.(50ஆ,51அ) வாரணங்களுக்கு {யானைகளுக்கு} ஒப்பானவர்களும், கருடனைப் போல சீக்கிரம் செல்லக்கூடியவர்களும், மஹாத்மாக்களுமான வானரர்கள், இவ்வாறு சொல்லப்பட்டதும், சீக்கிரமே ககனத்தில் {வானத்தில்} எழுந்தனர்.(51ஆ,52அ) 

பிறகு, ஜாம்பவானும், ஹனுமானும், வேகதர்சி என்றழைக்கப்பட்ட வானரனும்,{52ஆ} ரிஷபனும், பூர்ணஜலம் கொண்ட கலசங்களை {நீர் நிறைந்த குடங்களைக்} கொண்டு வந்தனர். அந்தக் கும்பங்களில் ஐநூறு நதிகளின் {நீர் கலந்த} ஜலத்தைக் கொண்டு வந்தனர்.(52ஆ,53) பிறகு, சத்வசம்பன்னனான {வலிமை நிறைந்தவனான} சுஷேணன், பூர்வ சமுத்திரத்திலிருந்து {கிழக்குப் பெருங்கடலில் இருந்து} பூர்ணஜலம் கொண்டதும், சர்வ ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான கலசத்தை கொண்டு வந்தான்.(54) ரிஷபன், தக்ஷிண சமுத்திர {தெற்குப் பெருங்கடலின்} ஜலத்தை, சிவந்த சந்தனக் கிளைகளால் மறைக்கப்பட்ட காஞ்சன கடத்தில் {பொற்குடத்தில்} கொண்டுவந்தான்.(55) மாருதவிக்ரமனான கவயன், பஷ்சிமா மஹார்ணவத்தின் {மேற்குப் பெருங்கடலின்} குளிர்ந்த நீரை, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மஹத்தான கும்பத்தில் கொண்டு வந்தான்.(56) கருடாநில விக்ரமங்கொண்டவனும் {கருடன், வாயு ஆகியோரின் ஆற்றலைக் கொண்டவனும்}, சர்வகுணங்களும் பொருந்தியவனும், தர்மாத்மாவுமான அந்த நளன், உத்தரத்தில் {வடக்கில்} இருந்து ஜலத்தை சீக்கிரமே கொண்டு வந்தான்.(57) பிறகு, அமைச்சர்கள் சஹிதனான சத்ருக்னன், ராமனின் அபிஷேகத்திற்காக அந்த வானரசிரேஷ்டர்களால் கொண்டுவரப்பட்ட அந்த ஜலத்தைக் குறித்து,{58} புரோஹிதர்களில் சிறந்தவரிடமும் {வசிஷ்டரிடமும்}, நண்பர்களிடமும் அறிவித்தான்.(58,59அ)

*******ஸ்ரீராம பட்டாபிஷேகம்*******

அப்போது, பெரியவரும், தளரா ஊக்கமுடையவரும், பிராமணர்களுடன் கூடியவருமான வசிஷ்டர், சீதையுடன் கூடிய ராமனை ரத்னமயமான பீடத்தில் அமரச் செய்தார்.(59ஆ,60அ) வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காசியபர்,{60ஆ} காத்யாயனர், சுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகியோர், வசுக்கள்[4] சஹஸ்ராக்ஷனான வாசவனுக்கு {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனுக்கு} எப்படியோ, அப்படி தெளிந்த, சுகந்த நீரைக் கொண்டு நரவியாகரனுக்கு {மனிதர்களில் புலியான ராமனுக்கு} அபிஷேகம் செய்து வைத்தனர்.(60ஆ-62அ) பெரும் மகிழ்ச்சியுடன் கூடிய அவர்கள், முதலில் ரித்விக்குகளான பிராமணர்களைக் கொண்டும், அதே போல கன்னிகைகள், மந்திரிகளைக் கொண்டும்,{62ஆ} போர்வீரர்கள், வணிகர்கள் ஆகியோரைக் கொண்டும் அபிஷேகம் செய்து வைத்தனர், சர்வ ஔஷதிகளின் ரசத்தைக் கொண்டு, நபத்தில் {ஆகாயத்தில்} கூடியிருந்த தைவதங்களும் {தேவர்களும்},{63} லோகபாலர்கள் நால்வரும், சர்வ தேவர்களும் {ராமனுக்கு அபிஷேகம் செய்து வைத்தனர்}[5].(62ஆ-64அ) 

[4] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "1. ஆபன் (நீர்), 2. துருவன் {துருவ நட்சத்திரம்}, 3. சோமன் {சந்திரன்}, 4. தரன், 5.அநிலன் {வாயு / காற்று}, 6. பாவகன் {அக்னி / நெருப்பு}, 7. பிரதியுஷன் {விடியற்காலை}, 8. பிரபாசன் {ஒளி} ஆகியோரே அஷ்ட வசுக்களாவர்" என்றிருக்கிறது.

[5] மாணிக்கப் பலகை தைத்து வயிரத் திண் கால்கள் சேர்த்தி
ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுறச் சமைத்த பீடம்
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர் அதனின்மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ {10321}
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய்ச் 
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை ஒலிப்ப தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பூ மழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து அபிடேகம் செய்தார்

- கம்பராமாயணம் 10321. 10322ம் பாடல்கள், யுத்த காண்டம், திருமுடி சூட்டு படலம்

பொருள்: மாணிக்கத்தால் செய்த பலகையைப் பொருத்தி, வைரத்தின் கால்களைச் சேர்த்து, உயர்ந்த பொன்னால் சுற்றும் முற்றும் முழுமையாக்கி அழகுடன் செய்யப்பட்ட பீடத்தை, பெருமையுடைய பளிங்கு மாடத்தில் இட்டனர். அதன் மீது அணிகலன்களை அணிந்த திரண்ட தோள்களைக் கொண்ட வீரன் {ராமன்}, திருவோடு {சீதையுடன்} அழகுற வீற்றிருந்தான்.{10321} மங்கலப் பாடல்கள் பாடப்பட, வேதவொலி முழங்க, பெரிய வாயைக் கொண்ட சங்குகள் குமுற, தாளமும், மத்தளமும் ஓசை எழுப்ப, குற்றமில்லா பல்வகை இசைக்கருவிகள் மேலெழுந்து ஆரவாரிக்க, பூ மழை பொழிய, விண்ணோர் {தேவர்கள்} எங்கள் நாயகனை {ராமனை} தனித்தனியாக எதிரில் சென்று நீராட்டிவிட்டனர்.{10322}

இரத்தினங்களால் சோபிக்கும் கிரீடம் ஒன்று பூர்வத்தில் பிரம்மனால் நிர்மிதம் செய்யப்பட்டது.{64ஆ} ஒளிரும் பிரகாசத்துடன் கூடிய எதைக்கொண்டு, பூர்வத்தில் மனு அபிஷேகிக்கப்பட்டானோ, அவனது {மனுவின்} வழிவந்த ராஜர்கள், எதைச் சூட்டி அபிஷேகிக்கப்பட்டனரோ,{65} அத்தகையது {அந்த கிரீடம்}, ஹேமத்தால் {பொன்னால்} இழைக்கப்பட்டதும், மஹாதனத்துடன் சோபிப்பதும், நானாவித ரத்தினங்களின் சித்திர அலங்காரத்துடன் சோபிப்பதுமான சபையில் இருந்தது.{66} நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் விதிப்படி வைக்கப்பட்ட அந்த கிரீடத்தைக் கண்ட மஹாத்மாவான வசிஷ்டர்,{67} ரித்விக்குகளுடன் சேர்ந்து, பூஷணங்களுடன் {ஆபரணங்களுடன்} சேர்த்து அதை {அந்தக் கிரீடத்தை} ராகவனிடம் சேர்ப்பித்தார் {ராமனுக்குச் சூட்டினார்}.(64ஆ-68அ)

சத்ருக்னன் அவனுக்கு சுபமான வெண்குடையைப் பிடித்தான்.{68ஆ} வானரேஷ்வரனான சுக்ரீவன், ஒரு வெண்சாமரத்தையும், ராக்ஷசேந்திரனான விபீஷணன் சந்திரனுக்கு ஒப்பான மற்றொன்றையும் {மற்றொரு வெண்சாமரத்தையும்} பிடித்தனர்.(68ஆ,69) வாசவனால் தூண்டப்பட்ட வாயு, ஒளிரும் வடிவுடன் கூடிய நூறு புஷ்கரங்களாலான {தாமரைகளாலான} காஞ்சன மாலையை ராகவனுக்குக் கொடுத்தான்.(70) சக்ரனால் {இந்திரனால்} தூண்டப்பட்டவன் {வாயு}, சர்வ ரத்தினங்களுடன் கூடியதும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு முத்தாரத்தையும் நரேந்திரனுக்குக் கொடுத்தான்.(71) மதிமிக்கவனும், தகுந்தவனுமான ராமனின் அபிஷேகத்தில், தேவர்களும், கந்தர்வர்களும் பாடினர்; அப்சரகணங்கள் நர்த்தனம் புரிந்தனர்.(72) இராகவ உத்சவத்தின் போது, பூமியில் பயிர்கள் செழித்தன; மரங்கள், கந்தம் நிறைந்த புஷ்பங்களும், கனிந்த பழங்களும் கொண்டவை ஆகின.(73)

மனுஜரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்}, முதலில் பிராமணர்களுக்கு நூறாயிரம் அஷ்வங்களையும் {குதிரைகளையும்}, கன்றுகளுடன் கூடிய பசுக்களையும், நூறு விருஷபங்களையும் {காளைகளையும்} கொடுத்தான்.(74) இராகவன், முப்பது கோடி ஹிரண்யங்களையும் {பொன்நாணயங்களையும்}, விலைமதிப்புமிக்க நானாவித ஆபரண, வஸ்திரங்களையும் மீண்டும் பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(75) மனுஜாதிபன் {மனிதர்களின் தலைவனான ராமன்}, அர்க்கனின் {சூரியக்} கதிர்களுக்கு ஒப்பாகத் தெரிந்த மணிகள் பதிக்கப்பெற்றதும், திவ்யமானதுமான காஞ்சன ஹாரத்தை சுக்ரீவனுக்குக் கொடுத்தான்.(76) மகிழ்ச்சிமிக்கவனான அவன் {ராமன்}, மணிரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சித்திரமான வைடூரியங்கள் பதிக்கப்பெற்றதுமான அங்கதங்களை {தோள்வளைகள்} வாலிபுத்திரனான அங்கதனுக்குக் கொடுத்தான்.(77) 

இராமன், மேன்மையான மணிகள் இழைக்கப்பெற்றதும், சந்திரக்கதிர்களைப் போல் ஒளிர்வதுமான மிகச்சிறந்த முத்தாரத்தை சீதைக்குக் கொடுத்துவிட்டு,{78} தூய்மையான, திவ்யமான வஸ்திரங்களையும், சுபமான ஆபரணங்களையும்,(78,79அ)  வைதேஹியைப் பார்த்துக் கொண்டே, வாயு மைந்தனுக்கு {ஹனுமானுக்குக்} கொடுத்தான்.{79ஆ} ஜனகநந்தினியும், தன் கண்டத்தில் {கழுத்தில்} இருந்த ஹாரத்தை எடுத்து, தன் பர்த்தாவையும் {தன் கணவன் ராமனையும்}, சர்வ ஹரிக்களையும் {குரங்கினர் அனைவரையும்} மீண்டும் மீண்டும் பார்த்தாள்[6].(79ஆ,80) இங்கிதஜ்ஞன் அவளைக் கண்டு {இங்கிதங்களை / உடல் மொழியால் மனவிருப்பத்தை அறியக்கூடியவனான ராமன், சீதையைக் கண்டு}, அந்த ஜனகாத்மஜையிடம் {ஜனகனின் மகளான சீதையிடம் பின்வருமாறு} பேசினான், "அன்புக்குரியவளே, பாமினி {அழகிய பெண்ணே, சீதே}, எவரிடம் நிறைவடைந்திருக்கிறாயோ, எவரிடம் தேஜஸ், உறுதி, புகழ், தாக்ஷியம் {கைத்திறன்}, சாமர்த்தியம், விநயம் {பணிவு}, நயம் {உலகியலறிவு}, பௌருஷம் {ஆண்மை}, விக்ரமம், புத்தி ஆகியவை எப்போதும் இருக்குமோ,[7] அவருக்கே ஹாரத்தைக் கொடுப்பாயாக" {என்றான் ராமன்}.(81,82)

[6] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸீதை, ராமன் அந்த ஸதஸ்ஸில் தனக்கு முக்தாஹாரங்கொடுத்தது தன் கையால் எவர்க்கோ கொடுப்பிக்க நினைத்தே கொடுத்தானென்று அபிப்ராயத்தைக் கண்டு, பின்பு இதை எவர்க்குக் கொடுக்கத் தகுமோ என்று எல்லா வானரர்களையும், பர்த்தாவின் அபிப்ராயம் எவனிடத்திலோ என்று பர்த்தாவையம் அடிக்கடி பார்த்தாளென்று தெரிகிறது" என்றிருக்கிறது.

[7] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸமுத்திரந்தாண்டினமையால் பலமும், லங்கையைக் கொளுத்தினமையால் பராக்கிரமமும், அசோகவனிகையில் ப்ரவேசிக்கையால் புத்தியும் மிகுந்திருக்கப் பெற்றவன் ஹனுமானே யென்று ராமன் இங்கு ஸூசிப்பித்து, மீளவும் பிறரை அவமதித்தாற்போல் தோற்றுகையால், "உனக்கு எவனிடத்தில் ஸந்தோஷம் உளதோ அவனுக்குக் கொடுப்பாய்" என்றனன் - என்று தெரிகிறது" என்றிருக்கிறது.

அந்தக் கருவிழியாள் {சீதை}, வாயுபுத்திரனிடம் ஹனுமானிடம் அந்த ஹாரத்தைக் கொடுத்தாள். வானரரிஷபனான ஹனூமான், ஒரு மலை வெண்மேகத்தால் எப்படியோ, அப்படி சந்திரக் கதிர்களின் திரளைப் போன்றிருந்த அந்த ஹாரத்தால் ஒளிர்ந்தான்.(83,84அ) சர்வ வானரப் பெரியோரும், பிற வானரோத்தமர்களும் {முதன்மையான வானரர்களும்} தகுந்த வஸ்திரங்களாலும், பூஷணங்களாலும் {அலங்கார ஆபரணங்களாலும்} பூஜிக்கப்பட்டனர்.(84ஆ,85அ) பிறகு, பரந்தபனான வசுதாதிபன் {பகைவரை அழிப்பவனும், பூமியின் தலைவனுமான ராமன்},  மைந்தனுக்கும், துவிவிதனுக்கும், நீலனுக்கும் அவரவர் விருப்பத்திற்குரிய அனைத்தையும் பார்த்துக் கொடுத்தான்.(85ஆ,86அ) விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான் ஆகியோரும், சர்வ வானரப் பெரியோரும், களைப்பில்லாமல் கர்மங்களைச் செய்யக்கூடிய ராமனால்,  தகுந்த முறையில் பூஜிக்கப்பட்டனர். பிறகு, விருப்பத்திற்குரிய ஏராளமான ரத்தினங்களுடனும், மகிழ்ச்சியான மனத்துடனும் அவர்கள் அனைவரும், வந்தபடியே திரும்பிச் சென்றனர்.(86ஆ-88அ)

பிறகு, மஹாத்மாக்களான சர்வ வானரரிஷபர்களும் பார்த்திபேந்திரனை {பூமியின் தலைவர்களுக்குத் தலைவனான ராமனை} வணங்கி, விடைபெற்றுக் கொண்டு கிஷ்கிந்தையை அடைந்தனர்.(88ஆ,89அ) வானரசிரேஷ்டனான {வானரர்களில் சிறந்தவனான} சுக்ரீவன், ராமாபிஷேகத்தைக் கண்டுவிட்டு, ராமனால் பூஜிக்கப்பட்டவனாக, கிஷ்கிந்தாபுரீக்குள் பிரவேசித்தான்.(89ஆ,90அ) தர்மாத்மாவும், பெரும் புகழ்பெற்றவனுமான ராஜா விபீஷணனும்கூட, குல தனத்தை[8] அடைந்ததும், நைர்ருதரிஷபர்களுடன் {இரவுலாவிகளில் காளைகளான ராக்ஷசர்களுடன்} லங்கைக்குத் திரும்பிச் சென்றான்.(90ஆ,91அ)

[8] தர்மாலயப் பதிப்பில், "பெரும்புகழ்படைத்தவரும், தர்மாத்மாவுமான விபீஷண மன்னரும், குலபூஜையை பெற்றுக் கொண்டு அந்த அரக்கச்ரேஷ்டர்களுடன் இலங்கைக்குப் போய்ச்சேர்ந்தார்" என்றிருக்கிறது. 

நரசிம்மாசாரியர் பதிப்பில், "(ராமன் விரும்பினவற்றையெல்லாம் கொடுத்துப் பூஜிக்கையில்) ராக்ஷஸ ராஜனாகிய விபீஷணன், இக்ஷ்வாகு வம்சத்தரசர்களின் குலதனமாகிய ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்கைக்குப் போயினன்" என்றிருக்கிறது.  அதன் அடிக்குறிப்பில், "இக்ஷ்வாகு வம்சத்தரசர்களின் குலதனமாவது - அவரது குல தெய்வமான ஸ்ரீரங்கவிமானமென்று ஸம்ப்ரதாயம். இங்ஙனம் கோவிந்தராஜர். மஹேஸ்வர தீர்த்தர், "இங்கு குலதனமாவது - ராமன் முன்பு கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்திருந்த ராக்ஷஸ குலதனமான லங்கா ராஜ்யமேயன்றி ஸ்ரீரங்க விமானமன்று. ஏனெனில் - ராமன் தனது அவதாரம் முடியும் ஸமயத்தில் விபீஷணனுக்கு ஸ்ரீரங்க விமானத்தைக் கொடுத்ததாக உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்டதாகையால், பட்டாபிஷேக ஸமயத்திலேயே விபீஷணன் ரங்கவிமானத்தைப் பெற்றானென்பது பொருந்தாது. அங்ஙனம் உத்தர காண்டத்தில், "மஹாபலமுடைய ராக்ஷஸராஜனே, மற்றும் ஒன்று உன்னோடு சொல்ல நினைக்கிறேன். இக்ஷ்வாகுகுலதெய்வமான ஜகந்நாதனை ஆராதிப்பாயாக" என்று ராமன் அவதாரம் முடியும் பொழுது விபீஷணனோடு சொல்லினன். அங்ஙனமே பாத்மபுராணத்திலும்,  "சந்திரனும், ஸூர்யனும் உள்ளவரையிலும் பூமி உள்ளவரையிலும் நீ ராஜ்யத்தைப் பரிபாலனஞ்செய்து கொண்டு ஸுகமாகயிருப்பாயாக. அதன் பிறகு மஹா ப்ரளயத்தின் பொழுது என்னிடம் வந்து சேருவாய்" என்று ராமன் மொழிந்து தன் பிரிவைப் பொறுக்கமாட்டாத விபீஷணனுக்கு இக்ஷ்வாகு வம்சத்தரசர்களின் குலதெய்வமும், தன்னிடமிருப்பவருமான ஸ்ரீரங்கஸாயுமான பகவானைக் கொடுத்தனன். விபீஷணன் ரங்கவிமானத்தைப் பெற்று லங்காபுரிக்குப் போனான்" என்று ராமாவதாரஸமாப்தி ஸமயத்தில் வந்த விபீஷணனுக்கு ராமன் ரங்கவிமானங் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறது. ஆகையால் ராமன் முன்பு சொன்ன லங்கா ராஜ்யங் கொடுப்பதையே மீளவும் இங்குச் சொல்லுகிறதன்றி வேறன்று என்கிறார். இதற்கு ஸமாதானமெப்படி யென்னில் - மேற்கண்ட இத்யாதி சுலோகங்களிரண்டும் புதிதாகச் சேர்ந்தவையேயென்று சிலர் கூறுவதாக மஹேஸ்வர தீர்த்தரே மொழிந்திருக்கின்றனர். அவை சேர்க்கப்பட்டவையே யென்றும், பாத்ம புராண வசனங்கள் கல்பாந்தரத்தில் நடந்த வ்ருத்தாந்தத்தைக் குறித்தவையென்றும் கருத்துக் கொள்ளின் முன்னமே ப்ராப்தமான லங்காராஜ்யத்தை மீளவும் பெற்றானென்பது வீணென்பதை ஆராய்ந்தறிகையில் இந்த தோஷத்திற்குப் பரிஹாரம் ஏற்படும் ஆகையால் கோவிந்தராஜர் மதத்தின்படி குலதனமாவது ஸ்ரீரங்கவிமானமே யென்றுணர்க" என்றிருக்கிறது.

கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "அறத்தை உயிராகக் கொண்ட விபீஷணன், தன் பரம்பரைச் செல்வமான (குலதனமாகிய) இலங்கை அரசை அடைந்தவனாக, அரக்கப் பிரமுகர்களுடன் இலங்கைக்குப் போய்ச் சேர்ந்தான். (குறிப்பு:- ‘இக்ஷ்வாகு குலதனமான ரங்கவிமானத்தை இராமன் அளித்தார்’ என்ற விளக்கம் பொருத்தமாக இல்லை; வேறு புராணங்களில் காணப்படும் வரலாற்றுக்கு விரோதமாக இருக்கிறது. இக்ஷ்வாகு குலதனம் பற்றிய பேச்சு, முன்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் பேசப்படவில்லை; விபீஷணன் கேட்கவும் இல்லை)" என்றிருக்கிறது.

பகைவருக்கு முடிவு கட்டிவிட்டு, அகில ராஜ்ஜியத்தையும் ஆண்டவனும், பெரும்புகழ்பெற்றவனும், பரமோதாரனுமான அந்த ராகவன் {தாராள மனம் கொண்டவனுமான அந்த ராமன்}, பெரும் மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். தர்மவத்ஸலனான {தர்மத்தில் பற்றுடைய} ராமன், தர்மஜ்ஞனான {தர்மத்தை அறிந்தவனான} லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(91ஆ,92) "தர்மஜ்ஞா, படையுடன் பூர்வத்தில் ராஜாக்கள் ஆண்டதுபோல, என்னுடன் சேர்ந்து இந்தப் பூமியை ஆள்வாயாக. யௌவராஜ்ஜியத்தில் நிறுவப்பட்டு, பித்ருக்களால் சுமக்கப்பட்ட அந்த பாரத்தை எனக்குத் துல்லியமாக நீயும் சுமப்பாயாக" {என்றான் ராமன்}[9].(93)

[9] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமன் தன் தந்தை முன்பு தனக்குப் பட்டாபிஷேகஞ் செய்ய ப்ரயத்னிக்கும் பொழுது பரதன் அருகில் இல்லாமையால் லக்ஷ்மணனைப் பார்த்து, "லக்ஷ்மணா! நீ என்னோடு கூட இந்த பூமியைப் பாலனஞ் செய்து வருவாய்" என்றனன்" என்கிறபடியே ராமன் முதலில் ஒன்று சொல்லி மீளவும் மற்றொன்று சொல்லானாகையால் அந்த வார்த்தையின்படி, லக்ஷ்மணனைக் காட்டிலும் ஜ்யேஷ்ட்டனாகிய பரதன் இருப்பினும் லக்ஷ்மணனையே யௌவராஜ்யத்தில் பட்டங் கட்டிக் கொள்ளும்படி நியமித்தானென்று தெரிகிறது" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் ராமன் லக்ஷ்மணனிடம் பேசும் அந்தக் குறிப்பிட்ட வசனம் ஆயோத்தியா காண்டம் 4ம் சர்க்கம் 43ம் சுலோகத்தில் வருகிறது.  

சர்வாத்மாவால் {அனைத்தின் ஆத்மாவான ராமனால்} எல்லா வகையிலும் வற்புறுத்தப்பட்டாலும், சௌமித்ரி, யோகத்தை {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன், அந்தப் பொறுப்பை} ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பேரில் அந்த மஹாத்மா {ராமன்}, பரதனை யௌவராஜ்ஜியத்தில் நிறுவினான்.(94) பார்த்திபாத்மஜன் {ராமன்}, பௌண்டரீகங்களையும், அஷ்வமேதங்களையும், வாஜபேயங்களையும் {ஆகிய வேள்விகளையும்}, விதவிதமான வேறு பல யஜ்ஞங்களையும் பலமுறை செய்தான்.(95) இராகவன், பத்தாயிரம் வருஷங்கள் ராஜ்ஜியத்தை அனுபவித்தபடியே, சிறந்த அஷ்வங்களுடனும், ஏராளமான தக்ஷிணைகளுடனும் கூடிய நூறு அஷ்வமேதங்களைச் செய்தான்.(96) முழங்கால் வரை நீளும் கைகளையும், அகன்ற மார்பையும் கொண்ட பிரதாபவானான அந்த ராமன், தன்னை லக்ஷ்மணன் பின்தொடர இந்தப் பிருத்வியை ஆண்டு வந்தான்.(97) தர்மாத்மாவான ராகவனும், சிறந்த ராஜ்ஜியத்தை அடைந்து, மகன்கள், உடன்பிறந்தவர்கள், பந்துக்கள் ஆகியோருடன் பலவிதமான வேள்விகளைச் செய்தான்.(98)

இராமன் ராஜ்ஜியத்தை ஆண்டுவந்தபோது, விதவைகளின் புலம்பலில்லை. கொடூர விலங்குகளின் பயமில்லை. வியாதிகளின் பயமில்லை.(99) உலகம் தஸ்யுக்களற்றதாக {திருடர்களற்றதாக} இருந்தது. யாரையும் அனர்த்தம் {வறுமை / அறியாமை} அணுகவில்லை. முதியவர்கள் பாலர்களின் பிரேதகாரியங்களைச் செய்யவில்லை.(100) அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அனைவரும் தர்மபரர்களாக {தர்ம நோக்கம் கொண்டவர்களாக} இருந்தனர். இராமனையே பார்த்துக் கொண்டு, பரஸ்பரம் {ஒருவருக்கொருவர்} தீங்கிழைக்காமல் இருந்தனர்.(101) இராமன் ராஜ்ஜியத்தை ஆண்டபோது, சோகத்தில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபட்டவர்களாக, ஆயிரக்கணக்கான புத்திரர்களுடன் கூடியவர்களாக, ஆயிரம் வருஷங்கள் இருந்தனர் {மக்கள் வாழ்ந்திருந்தனர்}.(102) 

இராமன், ராஜ்ஜியத்தை ஆண்டபோது, "ராம, ராம, ராம" என்றே பிரஜைகள் பேசிவந்தனர். ஜகத்தானது ராமபூதமானது {உலகம் ராமமயமானது}.(103)  அங்கே தாவரங்கள் நித்தியம் புஷ்பங்களுடனும், நித்யம் பழங்களுடனும் இருந்தன. பர்ஜன்யன் காலத்திற்கு வர்ஷித்தான் {உரிய காலத்தில் மழை பொழிந்தது}. மாருதன் சுக ஸ்பரிசங்கொண்டவனாக இருந்தான் {காற்று இனிய தென்றலாக வீசியது}.(104) பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் லோபத்தில் {பேராசையில்} இருந்து விடுபட்டவர்களாக, சொந்த கர்மங்களில் ஈடுபட்டு, சொந்த கர்மங்களில் நிறைவுடன் இருந்தனர்.{105} இராமன் ஆளும்போது, அவர்கள் {குடிமக்கள்} பொய் பேசாதவர்களாகவும், தர்மபரர்களாகவும் {தர்மநோக்கம் கொண்டவர்களாகவும்} இருந்தனர்.(105,106அ) அனைவரும் லக்ஷணசம்பன்னர்களாக {நல்ல குறியீடுகள் / பண்புகள் நிறைந்தவர்களாக} இருந்தனர். அனைவரும் தர்மபராயணர்களாக {தர்மப்படி நடப்பவர்களாக} இருந்தனர். ஸ்ரீமான் ராமன், உடன்பிறந்தோர் சஹிதனாக பத்தாயிரம் வருஷங்கள் ராஜ்ஜியத்தை ஆண்டான்.(106ஆ,107அ)

*******ஸ்ரீராம பட்டாபிஷேகம் முற்றும் *******

தர்மத்துடன் கூடியதும், புகழையும், ஆயுசையும், ராஜர்களுக்கான விஜயத்தையும் {மன்னர்களுக்கான வெற்றியையும்} பெற்றுத்தரக்கூடியதும்,{107ஆ} உன்னதமானதும், பூர்வத்தில் வால்மீகியால் இயற்றப்பட்டதுமான  இந்த ஆதிகாவியத்தை {ராமாயணத்தை} உலகில் எந்த நரன் படித்தாலும், கேட்டாலும் பாபத்திலிருந்து விடுபடுவான்.(107ஆ,108) உலகில் ராம அபிஷேகத்தைக் கேட்கும் மனுஜன், புத்திரர்களை விரும்பினால் புத்திரர்களையும், தனத்தை விரும்பினால் தனத்தையும் அடைவான்;{109} இராஜா {அவனே மன்னனாக இருந்தால்}, பகைவரை அடக்கி ஆண்டு, மஹீயை {பூமியை} வெல்வான்.(109,110அ) மாதா {கௌசல்யை} ராகவனையும், சுமித்ரை லக்ஷ்மணனையும், கைகேயி பரதனையும் எப்படியோ, அப்படியே {இதைப் படிக்கும்} ஸ்திரீகளும் ஜீவபுத்திரர்களை {நீண்ட ஆயுளுடைய பிள்ளைகளைக்} கொண்டவர்களாக, புத்திர, பௌத்திரர்களுடன் சதா ஆனந்தத்தில் திளைப்பார்கள்.(110ஆ,111) களைப்பில்லாமல் கர்மங்களைச் செய்த ராமனின் விஜயத்தையும் {வெற்றியையும்}, சர்வத்தையும் {மற்றும் அனைத்தையும்} சொல்லும் இந்த ராமாயணத்தைக் கேட்பவன் தீர்க்காயுசை அடைவான்.(112)

பூர்வத்தில் வால்மீகி இயற்றிய இந்தக் காவியத்தை, சிரத்தையுடன் {கவனமாகக்} கேட்பவன் எவனோ, அவன் கோபத்தை வென்று, கடப்பதற்கரியனவற்றை {கடப்பதற்கரிய ஆபத்துகளை / இடையூறுகளைக்} கடப்பான்.(113) பூர்வத்தில் வால்மீகி இயற்றிய இந்தக் காவியத்தைக் கேட்பவர்கள் எவரோ, அவர்கள் பரவாசத்தை {வீட்டில் இல்லாத நிலையை / பயணத்தை} முடித்து, பந்துக்கள் சகிதராக {உறவினர்களுடன்} ஒன்று கூடி மகிழ்ச்சியை அடைவார்கள்.(114) ராகவனிடம் {ராமனிடம்} பிரார்த்தித்த சர்வ வரங்களையும் அவர்கள் இங்கேயே பெறுவார்கள். நம்பிக்கையுடன் இதைக் கேட்பவர்களிடம் சர்வ ஸுரர்களும் {தேவர்களும்} பிரீதி அடைவார்கள்.(115)

{இராமாயணத்தைப் படிக்கும்} எவனுடைய கிருஹத்திலும் உள்ள இடையூறு செய்யும் சக்திகள் சாந்தமடையும். {இராமயணத்தைப் படிக்கும்} இராஜா, மஹீயை {பூமியை} வெல்வான். பயணம் போனவன், பாதுகாப்பை அடைவான்.(116) இரஜஸ்வலைகளான ஸ்திரீகள் {மாதவிடாய் முடித்த பெண்கள்} உத்தம புத்திரர்களைப் பெற்றெடுப்பார்கள். இந்தப் புராதன இதிஹாசத்தைப் படிப்த்துப் பூஜிப்பவன் சர்வ பாபங்களில் இருந்து விடுபட்டு, தீர்க்காயுசைப் பெறுவான்.(117) க்ஷத்திரியர்கள், {ராமாயணத்தை} சிரத்தால் வணங்கி, நித்தியம் துவிஜர்கள் மூலம் கேட்க வேண்டும். இந்த மொத்த ராமாயணத்தைப் படிப்பவனும் {உரைக்கும் துவிஜனும்}, கேட்பவனும் {கேட்கும் க்ஷத்திரியனும்}, ஐஷ்வர்யத்தையும், புத்திர லாபத்தையும் ஐயத்திற்கிடமில்லாமல் அடைவார்கள்.(118,119) {படிக்கும் / கேட்கும்} அவனிடம், சநாதன விஷ்ணுவும், ஆதிதேவனும், மஹாபாஹுவும், ஹரியுமான ராமன், சதா பிரியத்துடன் இருக்கிறான். இரகுசிரேஷ்டனான ராமனே சாக்ஷாத் நாராயணப் பிரபுவும், லக்ஷ்மணனே சேஷனும் ஆவர் என்று சொல்லப்படுகிறது.(120,121அ)

இவ்வாறே பூர்வ விருத்தமான இந்த ஆக்யானத்தை {விவரிப்பைக் கேட்பவரிடம்} நம்பிக்கையுடன் சொல்வீராக. உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும், உங்களுக்குள் விஷ்ணு பலம் அதிகரிக்கட்டும்.(121ஆ,122அ) இதைக் கேட்டுப் புரிந்து கொள்வதால், சர்வ தேவர்களும் திருப்தியடைகிறார்கள். இராமாயணத்தைக் கேட்பதால், பித்ருக்கள் சதா மகிழ்ச்சியடைகிறார்கள்.(122ஆ,123அ) எந்த நரர்கள், ரிஷி {வால்மீகி} இயற்றிய, ராமனின் சம்ஹிதையை பக்தியுடன் எழுதுவார்களோ, அவர்கள் திரிவிஷ்டஸத்தில் {பரலோகத்தில் / சொர்க்கத்தில்} வாசம் செய்வார்கள்.(123ஆ,124அ) மஹா அர்த்தம் பொருந்திய இந்த சுப காவியத்தைக் கேட்பதன் மூலம், குடும்ப விருத்தியையும், தன, தானிய விருத்தியையும், முக்கிய ஸ்திரீகளையும், உத்தம சுகத்தையும், சர்வ அர்த்த சித்திகளையும் புவியிலேயே அடையலாம்.(124ஆ,இ) புத்தியை விரும்பும் நல்லோர்கள், ஆயுசு, ஆரோக்கியம், புகழ், ஸௌப்ராத்ருகம் {நல்ல நட்பு}, புத்தி, நலன், சுபம் ஓஜஸ் {வலிமை} ஆகியவற்றைத் தரவல்ல இந்த ஆக்யானத்தை {விவரிப்பை / ராமாயணத்தை} நியமத்துடன் கேட்க வேண்டும்.(125)

யுத்த காண்டம் சர்க்கம் – 128ல் உள்ள சுலோகங்கள்: 125

*******யுத்த காண்டம் முற்றும்*******
****** இராமாயணம் முற்றிற்று ******

Previous | Sanskrit | English | Next

Friday, 3 February 2023

ஸ்ரீபாதுகா பட்டாபிஷேகம் - திருவடிச்சூட்டல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 115 (27)

Consecration of sacred sandals. | Ayodhya-Kanda-Sarga-115 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சத்ருக்னனுடன் சேர்ந்து நந்திக்கிராமத்திற்குச் சென்ற பரதன்; அமைச்சர்களும், புரோஹிதரும், படையும், அயோத்தியின் குடிமக்களும் பின்தொடர்ந்து சென்றது; ராமனின் பாதுகைகளுக்கு நடந்த பட்டாபிஷேகம்...

Paduka Pattabhishekam

திடவிரதனான பரதன், தன் மாதாக்களை அயோத்திக்குத் திருப்பி அழைத்து வந்ததும், சோக சந்தாபத்துடன் கூடியவனாக தன் குருக்களிடம் {பெரியோரிடம் பின்வருமாறு} கூறினான்:(1) "இதோ நான் நந்திக்கிராமத்திற்குச் செல்கிறேன். உங்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொள்கிறேன். இராகவர் இல்லாத இந்த துக்கமனைத்தையும் அங்கே நான் சகித்துக் கொள்வேன்.(2) இராஜா திவத்தை {சொர்க்கத்தை} அடைந்தார். என் குரு {மூத்தவர் ராமன்} வனத்தில் இருக்கிறார். புகழ்மிக்க ராமரே ராஜா என்பதால், ராஜ்ஜியத்தை அளிக்க அவருக்காக நான் காத்திருப்பேன்" {என்றான் பரதன்}.(3)

மஹாத்மாவான பரதனின் இந்த சுப வாக்கியங்களைக் கேட்ட புரோஹிதர் வசிஷ்டரும், மந்திரிகள் அனைவரும் {பின்வருமாறு} சொன்னார்கள்:(4) "பரதா, உன்னுடன் பிறந்தானிடம் கொண்ட அன்பினால், நீ சொன்ன இந்தச் சொற்கள் சிலாகிக்கத்தகுந்தவை. இஃது உனக்குத் தகுந்ததே.(5) பந்துக்களிடம் ஆசையுடனும், உடன்பிறந்தாரிடத்தில் எப்போதும் திடமான நட்புடனும், ஆரிய மார்க்கத்தில் {உயர்ந்த வழியில்} அர்ப்பணிப்புடன் இருக்கும் உன்னுடன் {உன் சொற்களுடன்} எந்த மனிதன் உடன்படமாட்டான்?" {என்றனர்}.(6)

தன் அபிலாசையின்படியே மந்திரிகள் சொன்ன பிரிய வசனத்தைக் கேட்டவன் {பரதன்}, சாரதியிடம், "என் ரதம் ஆயத்தமாகட்டும்" என்ற வாக்கியத்தைச் சொன்னான்.(7) மகிழ்ச்சியான வதனத்துடன் கூடிய அந்த ஸ்ரீமான் {பரதன்}, தன் மாதாக்கள் அனைவரையும் சேவித்துவிட்டு, சத்ருக்னனுடன் சேர்ந்து ரதத்தில் ஏறினான்.(8) பரதசத்ருக்னர்கள் இருவரும் சீக்கிரமாக ரதத்தில் ஏறி, மந்திரிகள், புரோஹிதர்கள் சூழ பரம பிரீதியுடன் புறப்பட்டுச் சென்றனர்.(9) அவர்கள், வசிஷ்டர் தலைமையிலான குருக்கள் அனைவரையும், துவிஜர்கள் பிறரையும் முன்னிட்டுக் கொண்டு நந்திக்கிராமம் இருந்த திசையை நோக்கிக் கிழக்குமுகமாகச் சென்றனர்.(10) பரதன் சென்றதும், கஜ, அசுவ, ரதங்கள் {யானை, குதிரை, தேர்கள்} நிறைந்த பலமும் {படையும்}, நகரவாசிகள் அனைவரும் அழைக்கப்படாமலேயே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(11) 

உடன்பிறந்தானிடம் அன்பு கொண்ட தர்மாத்மாவான அந்த பரதன், சிரசில் பாதுகைகளை வைத்துக் கொண்டே ரதத்தில் நந்திக்கிராமத்தைத் துரிதமாக அடைந்தான்.(12) அப்போது, நந்திக்கிராமத்திற்குள் சீக்கிரமாகப் பிரவேசித்த அந்த பரதன், ரதத்தில் இருந்து துரிதமாக இறங்கி, குருக்களிடம் {பெரியோரிடம்} இதைச் சொன்னான்:(13) "என்னுடன் பிறந்தவர் தானாக ஸந்நியாஸத் தன்மையுடன்[1] இந்த ராஜ்ஜியத்தை எனக்கு தத்தம் செய்தார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பாதுகைகள் யோகக்ஷேமத்தை {வளர்ச்சியையும், பாதுகாப்பையும்} அருளும்" {என்றான் பரதன்}.(14)

[1] நம்பிக்கைச் சின்னமாக என்பது இங்கே பொருள். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "எனக்குத் தமையனாரால் இந்த ராஜ்யமானது தானாக தர்மகர்த்தாவெனும் தன்மையுடையதாய் அளிக்கப்பட்டது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "எனதண்ணன் இந்த ராஜ்யத்தை என்னிடத்தில் நிக்ஷேபமாகவே வைத்திருக்கின்றனன். ஆகையால் இதை முழுவதும் அவனுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியதே. நிக்ஷேபமாக வைத்ததை ரக்ஷிக்கை முதலிய ஸ்வாதந்த்ர்யம் எனக்கில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "நிக்ஷேபம் - பாதுகாத்து வைக்கும்படி ஒருவன் மற்றொருவனிடம் கொடுத்த வஸ்து. இதையே நயாஸமென்றுஞ் சொல்லுவர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "எம்மையர் இந்த ராஜ்ஜியத்தை நியாஸம் போலளித்தருளினர்" என்றிருக்கிறது.

ஸந்நியாஸமான {நம்பிக்கைச் சின்னமான அந்தப்} பாதுகைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த பரதன், துக்க சந்தாபத்துடன் தன் அமைச்சுக் குழுக்கள் அனைத்திடமும் {அமைச்சர்கள் அனைவரிடமும் பின்வருமாறு} பேசினான்:(15) "ஆரியரின் {ராமரின்} பாதங்களாக ஏற்கப்படும் இவற்றுக்கு சீக்கிரம் {வெண்கொற்றக்} குடை பிடிப்பீராக. என் குருவின் {ராமரின்} இந்த மரப்பாதுகைகளால் ராஜ்ஜியத்தில் தர்மம் நிலைநாட்டப்படும்.(16) என்னுடன் பிறந்தவரின் அன்பால் இந்த ஸந்நியாஸம் {நம்பிக்கைச் சின்னம்} எனக்கு அளிக்கப்பட்டது. அத்தகைய இஃது அந்த ராகவரின் வரவு வரை பரிபாலிக்கப்படும்.(17) {அவர் திரும்பிய உடனேயே} இவற்றை நானாக  ராகவரின் பாதங்களில் சீக்கிரம் சேர்த்து, இந்தப் பாதுகைகளுடன் கூடிய அவரது சரணங்களை {பாதங்களை} மீண்டும் காண்பேன்.(18) அப்போது, இந்த பாரத்துடன் கூடிய நான் ராகவரை {ராமரை} அடைந்து, என் குருவிடம் {ராமரிடம்} ராஜ்ஜியத்தை ஒப்படைத்து, குருவுக்கான தொண்டில் ஈடுபடுவேன்.(19) ஸந்நியாஸமான {நம்பிக்கைச் சின்னமான} இந்தச் சிறந்த பாதுகைகளின் மூலம், இந்த ராஜ்ஜியத்தையும், அயோத்தியையும் ராகவருக்கு தத்தம் செய்து, என் பாபங்களை நான் கழுவிக் கொள்வேன்.(20) காகுத்ஸ்தருக்கு அபிஷேகம் செய்யும்போது, ஜனங்கள் பரம மகிழ்ச்சியடைவார்கள். இராஜ்ஜியத்தைவிட நான்கு மடங்கு புகழையும், மகிழ்ச்சியையும் அஃது எனக்கு அளிக்கும்" {என்றான் பரதன்}.(21)

பெரும்புகழ்மிக்கவனான அந்த பரதன், இவ்வாறு அழுது துக்கித்துத் துயருடன் இருந்தாலும், நந்திக்கிராமத்தில் மந்திரிகள் சகிதனாக ராஜ்ஜியத்தை ஆண்டான்.(22) பிரபுவும், வீரனுமான அந்த பரதன், மரவுரிகளும், ஜடாமுடியும் தரித்து முனிவேஷம் பூண்டு, சைனியங்களுடன் அந்த நந்திக்கிராமத்திலேயே வசித்தான்.(23) உடன்பிறந்தானுக்குக் கீழ்ப்படிந்தவனும், உடன்பிறந்தவர்களிடம் அன்பு கொண்டவனும், பிரதிஜ்ஞைபாரகனுமான {உறுதிமொழி மாறாதவனுமான} அந்த பரதன், ராமனின் வரவை எதிர்பார்த்து, பாதுகைகளுக்கு அபிஷேகஞ் செய்து இவ்வாறே நந்திக்கிராமத்தில் வசித்திருந்தான்[2].(24,25அ) 

[2] நந்தியம் பதியிடை நாதன் பாதுகம்
செந்தனிக் கோல்முறை செலுத்த சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.

- கம்பராமாயணம் 2514ம் பாடல்

பொருள்: அந்தியும், பகலும் ஓயாமல் அழுத கண்ணுடன், நந்திக்கிராமத்தில் தலைவனின் திருவடி செங்கோல் முறை செய்ய, மனத்தினால் இந்திரியங்களை அடக்கி, அங்கேயே வசித்திருந்தான்.

பரதன், குடையையும், சாமரத்தையும் தரித்துக் கொண்டு, சாசனங்கள் அனைத்தையும் அந்த மரப்பாதுகைகளிடம் அறிவித்தான்.(25ஆ,26அ) ஸ்ரீமானான பரதன், ஆரியனின் {மூத்தவன் ராமனின்} பாதுகைகளுக்கு அபிஷேகம் செய்து வைத்து, {அவற்றுக்குக் கீழ்ப்படிந்து} எப்போதும் பணிவுடன் ராஜ்ஜிய காரியங்களைச் செயல்படுத்தினான்.(26ஆ,27அ) அந்த பரதன், ஏதோவொரு சிறிய காரியம் நேர்ந்தாலும், மதிப்புமிக்க காணிக்கை அளிக்கப்பட்டாலும், பிரதமம் {முதலில்} அந்த மரப்பாதுகைகளிடம் அறிவித்து, அதன்பிறகே முறைப்படி செயல்பட்டான்.(27ஆ-உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 115ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Tuesday, 31 January 2023

அடித்தலம் சூடிய முடி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 113 (24)

Sandals were worn as headgear | Ayodhya-Kanda-Sarga-113 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்கு மாற்றாக அவனது பாதுகைகளைப் பெற்று அயோத்திக்குத் திரும்பிச் சென்ற பரதனும், சத்ருக்னனும்...

Bharata wore Ramas sandals as crown

அப்போது பரதன், சிரசில் பாதுகைகளை வைத்துக் கொண்டு, சத்ருக்னனுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ரதத்தில் ஏறினான்.(1) அவர்களின் முன்னால் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி ஆகியோரும், ஆலோசனைகளுக்காகப் பூஜிக்கப்படும் மந்திரிமார் அனைவரும் சென்றனர்.(2) பிறகு அவர்கள் சித்திரகூட மஹாகிரியை பிரதக்ஷிணம் செய்து, கிழக்கு முகமாகச் சென்று ரம்மியமான மந்தாகினியை அடைந்தனர்.(3) பரதன், தன் சைனியத்தாருடன் கூடியவனாக அருகில் விதவிதமான ஆயிரக்கணக்கான தாதுக்களைக் கண்டபடியே அந்தத் தாழ்வரையில் {சித்திரகூட மலையின் அடிவாரத்தில்} பயணித்தான்[1].(4) 

[1] முன் சர்க்கத்தில் யானையின் தலையில் வைக்கப்பட்ட பாதுகைகளை பரதன் தன் தலையில் வைத்துக் கொண்டதாக இங்கே சொல்லப்படுகிறது.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவையென முறையின் சூடிடான்
படித்தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்

- கம்பராமாயணம் 2510ம் பாடல்

பொருள்: மண்ணில் புழுதி படிந்ததால் பொன்மயமான மேனியைக் கொண்ட பரதன், அழுத கண்ணுடன் ராமனின் திருவடிகள் இரண்டையும் "எனக்கு முடிகள் இவையே" என்ற முறையில் ஒழுகித் தன் தலையிற் சூடி, {ராமனின் முன்பு} மண்ணில் விழுந்து வேண்டி வணங்கிச் சென்றான்.

அப்போது பரதன், சித்திரகூடத்தின் அருகில் பரத்வாஜ முனிவர் வசிக்கும் ஆசிரமத்தை கண்டான்.(5)  பிறகு, புத்திமானான அந்த பரதன், பரத்வாஜரின் வசிப்பிடமான அந்த ஆசிரமத்தை அடைந்து, ரதத்தில் இருந்து இறங்கி, அவரது பாதங்களில் பணிந்தான்.(6) அப்போது மகிழ்ச்சியடைந்த பரத்வாஜர், இந்த வாக்கியங்களைச் சொன்னார், "தாதா {ஐயா}, காரியம் நிறைவேறியதா? இராமனை நீ சந்தித்தாயா?" {என்று கேட்டார்}.(7)

மதிமிக்கவரான பரத்வாஜர் இவ்வாறு கேட்டதும், தர்மவத்சலனான பரதன், அந்த பரத்வாஜரிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8) "குருவும் {வசிஷ்டரும்}, நானும் வேண்டிக்கொண்டாலும், திடவிக்கிரமரான அந்த ராகவர் {ராமன்}, பரமப்ரீதியுடன் வசிஷ்டரிடம் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னார்:(9) "சதுர்தச வருஷங்கள் வனத்தில் {பதினான்காண்டுகள் காட்டில்} வசிப்பேன் என்று என் பிதாவிடம் பிரதிஜ்ஞை செய்திருக்கிறேன். என் பிதாவிடம் உறுதியளித்த அந்தப் பிரதிஜ்ஞையை நிச்சயம் நான் காப்பேன்" {என்றார்}.(10) 

இவ்வாறு {ராமர்} சொன்னதும், மஹாபிராஜ்ஞரும், வாக்கியஜ்ஞருமான {வாக்கியங்களை அமைத்துப் பேசுவதில் வல்லவருமான} வசிஷ்டர், நல்வாக்கியங்களைச் சொல்பவரான அந்த ராகவரிடம் {ராமரிடம், பின்வரும்} மகத்தான சொற்களை மறுமொழியாகக் கூறினார்:(11) "மஹாபிராஜ்ஞனே {அனைத்தையும் அறிந்தவனே}, அயோத்தியில் அமைதியையும், வளர்ச்சியையும் விளைவிக்கக் கூடியதும், ஹேமத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டதுமான உன் பாதுகைகளை அளிப்பாயாக" {என்றார் வசிஷ்டர்}.(12)

வசிஷ்டர் இவ்வாறு சொன்னதும், அந்த ராகவர் {ராமன்} கிழக்கு முகமாக நின்று, அந்தப் பாதுகைகளில் தன் பாதங்களைப் பதித்து, ராஜ்ஜியத்தை எனக்கு தத்தம் செய்தார்.(13) மஹாத்மாவான அந்த ராமரிடம் இருந்து இந்த மங்கலப் பாதுகைகளை அடைந்து, {அவரிடம்} விடைபெற்றுக் கொண்டு, அயோத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்" {என்றான் பரதன்}.(14)

மஹாத்மாவான அந்த பரதனின் சுபவாக்கியங்களைக் கேட்ட பரத்வாஜ முனிவர், இன்னும் சுபமிக்க இந்த வாக்கியங்களை அவனிடம் சொன்னார்:(15) "நரவியாகரா {மனிதர்களில் புலியே}, உத்தம சீலனே {நடத்தையிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனே}, பள்ளத்தில் அதிக நீர் தங்குவதைப் போல, உன்னில் ஆரியம் {உன்னத நடை} நிலைத்திருப்பது வியப்பிற்குரியதல்ல.(16) தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, தர்மவத்ஸலனுமான {தர்மத்தை விரும்புகிறவனுமான} உன்னைப் பெற்ற மஹாபாஹு தசரதன் அமிர்தனாகிவிட்டான் {இறவாத அமரனாகிவிட்டான்}" {என்றார் பரத்வாஜர்}.(17) 

அந்த ரிஷி {பரத்வாஜர்}, இந்த வாக்கியங்களைச் சொன்னதும், {பரதன்} தன் கைகளைக் குவித்து, அவரது பாதங்களைத் தீண்டி, விடைபெற்றுக் கொண்டான்.(18) ஸ்ரீமானான பரதன், மீண்டும் மீண்டும் பரத்வாஜரை பிரதக்ஷிணஞ் செய்துவிட்டு, மந்திரிகள் சகிதனாக அயோத்தியை நோக்கிச் சென்றான்.(19) 

யானங்கள், வண்டிகள், குதிரைகள், யானைகள் உள்ளிட்ட பரதனுக்குரிய அந்த விஸ்தீரணமான சம்மு {படை} மீண்டும் தொடர்ந்து சென்றது.(20) பிறகு அவர்கள் அனைவரும், திவ்யமானதும், அலைகளையே மாலையாகக் கொண்டதுமான யமுனா நதியைக் கடந்து சென்று, சுபஜலம் கொண்ட அந்த கங்கா நதியைக் கண்டனர்.(21) சைனியத்துடனும், பந்துக்களுடனும் கூடியவன் {படைகளுடனும், சொந்தங்களுடனும் கூடியவனான அந்த பரதன்}, அந்த ரம்மியமான நீரை {யமுனை ஆற்றைக்} கடந்து, ரம்மியமான சிருங்கிபேரபுரத்திற்குள் பிரவேசித்தான். சிருங்கிபேரபுரத்தில் இருந்து புறப்பட்டவன், அதன்பிறகு அயோத்தியைக் கண்டான்.(22)

பிதாவும், உடன்பிறந்தவர்களும் இல்லாத அயோத்தியைக் கண்ட பரதன், துக்கத்தால் பீடிக்கப்பட்டவனாகத் தன் சாரதியிடம் இதைச் சொன்னான்:(23) "சாரதியே, வெறுமையானதும், ஆனந்தமற்றதும், தீனமானதுமான அயோத்தியைக் காண்பீராக" என்று தடைபட்டக் குரலுடன் {சொன்னான்}.(24)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 113ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Tuesday, 24 January 2023

முற்றுகை விரதம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 111 (32)

The vow of siege | Ayodhya-Kanda-Sarga-111 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஆசிரியரின் சொல்லை மீறலாகாதென்ற வசிஷ்டர்; தந்தையின் சொல் மேலானது என்று மறுத்த ராமன்; தரையில் படுத்து விரதமிருப்பேன் என்ற பரதன்; மறுத்து சமாதானம் கூறிய ராமன்...

Bharata besieges Rama

இராஜபுரோஹிதரான வசிஷ்டர், ராமனிடம் பேசிவிட்டு, தர்மம் நிறைந்த சொற்களை மீண்டும் {பின்வருமாறு} சொன்னார்:(1) "காகுத்ஸ்தா, ராகவா, இங்கு பிறந்த ஒவ்வொரு  புருஷனுக்கும், ஆசாரியர், பிதா, மாதா என்ற மூன்று குருக்கள் உள்ளனர்.(2) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, பிதாவானவன் இந்தப் புருஷனைப் பெறுகிறான். ஆசார்யர் {அவனுக்கு விழிப்புணர்வை} பிரஜ்ஞையை அளிக்கிறார். எனவேதான், குரு என்று அவர் {மேன்மையான பெரியவர் என்று அந்த ஆசாரியர்/ ஆசிரியர்} அழைக்கப்படுகிறார்.(3) பரந்தபா {பகைவரை தபிக்கச் செய்பவனே}, உன் பிதாவுக்கும், உனக்கும் ஆசாரியன் நானே. என் சொற்களுக்குக் கீழ்ப்படிவதால் சத்கதியை {நல்வழியை} நீ மீறியவனாக மாட்டாய்[1].(4) தாதா {ஐயா}, இந்த பரிஷதர்களும் {சபையோரும்}, பிறரும், வணிகக்கூட்டத்தினரும், துவிஜர்களும் உன்னுடையவர்களே. இவர்களுக்காக தர்மத்தைப் பின்பற்றுகையில் சத்கதியை நீ மீறியவனாக மாட்டாய்.(5) தர்மசீலையும் {அறம் ஒழுகுபவளும்}, முதிர்ந்தவளுமான உன் மாதாவை {கௌசல்லையை} விட்டு விலகுவது உனக்குத் தகாது. இவளது சொற்களின்படி செயல்படுவதால் சத்கதியை நீ மீறியவனாக மாட்டாய்.(6) இராகவா, சத்தியதர்ம பராக்கிரமா {ராமா}, உன்னிடம் மன்றாடும் பரதனுடைய சொற்களின்படி செயல்படுவதால் உன் ஆத்மாவின் அழைப்பை நீ மீறியவனாக மாட்டாய்" {என்றார் வசிஷ்டர்}.(7)

[1] இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் மறுஇல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்க பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் என்பரால்
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையானால்
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான்

- கம்பராமாயணம் 2497, 2498 பாடல்கள்

பொருள்: மதம்பெருக்கும் யானையைக் கொண்டவனே, இம்மையிலும், மறுமையிலும் பயன் தருமாறு குற்றமற்ற கல்வியைப் பண்போடு கற்பித்த ஒருவனே {ஆசிரியனே} நன்மை தரும் இயல்பினைச் செய்த குரவர்கள் {ஆசிரியர்கள்} எல்லோரினும் மேம்பட்டவன் {குரு} என்று சொல்வார்கள். எனவே, ஐயா, நான் உன்னை வளர்த்து கல்வி ஒன்றல்லாமல் பலவற்றைக் கற்பித்தேன் என்ற உண்மையால், இன்று எனது ஆணையை இல்லை என்று சொல்லாமல், உனக்குரிய நாடு சென்று, நன்றாகக் காப்பாயாக என்றான் {வசிட்டன்}.

இவ்வாறாக, குருவே நேரடியாக மதுரமான சொற்களைச் சொன்ன போது, புருஷரிஷபனான ராமன், அங்கே அமர்ந்திருந்த வசிஷ்டரிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8) "மாதாவும், பிதாவும் தங்கள் தனயனை உறங்கச் செய்தும், உடுத்தியும், வளர்த்தும், பிரியமுடன் பேசியும் நித்தியம் அவனுக்குத் தங்கள் சக்திக்கேற்ற நல்லதைச் செய்கிறார்கள். எனினும், மாதாவும் பிதாவும் செய்யும் எதற்கும் கைம்மாறு செய்ய இயலாது {அவர்கள் நமக்குச் செய்யும் எதையும் நம்மால் அவர்களுக்குத் திரும்பவும் செய்ய முடியாது}.(9,10) என்னைப் பெற்றவரும், என் பிதாவுமான அந்த தசரத ராஜா, எனக்கு எதை ஆணையிட்டாரோ அதை என்னால் பொய்யாக்க முடியாது" {என்றான் ராமன்}.(11)

இராமன் இவ்வாறு உரைத்ததும், தாராள மனப்பான்மை கொண்ட பரதன், மனத்தில் பெரும் வருத்தமடைந்து, அருகில் நின்று கொண்டிருந்த சூதனிடம் {சுமந்திரனிடம், பின்வருமாறு} சொன்னான்:(12) "சாரதியே, எனக்காக இங்கே தரையில் குசப்புற்களை சீக்கிரம் பரப்புவீராக. எனக்கு நிறைவேற்படும் வரை இந்த ஆரியரை முற்றுகையிட {அவரது வழியில் படுத்துக்கிடக்கப்} போகிறேன்.(13) இவர் திரும்பாத வரையிலும், தனமில்லாத ஒரு துவிஜனைப் போல, வெளிச்சமின்றி {கண்களை மூடிக் கொண்டு}, ஆஹாரமின்றி {உணவைத் துறந்து பட்டினியாக} இந்த சாலையின் {பர்ணசாலையின்} முன்பே கிடந்திருப்பேன்" {என்றான் பரதன்}[2].(14)

[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸாரதியே, இப்பொழுதே தரையில் எனக்காக தருப்பைகளை உடனே பரப்பும். எனக்கு அனுக்கிரகம் புரியாதிருக்கிறது எதுவரைக்குமோ அதுவரைக்கும் ஸ்ரீராமரை நான் தகைவேன். இவர் திரும்பியெழுந்தருளாதிருக்கிறது எதுவரையிலுமோ இப்பொழுது முதலதுவரை காரியம் கைகூடப்பெறாத க்ஷத்திரியனாகும் நான் பர்ணசாலையினது வாயிலில் பட்டினிகிடப்பவனாய் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கிடப்பேன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸாரதீ, எனக்கு இங்குத் தரையின் மேல் தர்ப்பங்களைச் சீக்ரம் பரப்புவாயாக. எனதையனாகிய ராமன் என்மீது அருள்புரியாதிருக்கும் வரையிலும் அவர்க்குக் குறுக்கே படுத்திருக்கப் போகிறேன். வட்டிக்காகத் தனது பணங்களையெல்லாம் கடன் கொடுத்த ப்ராஹ்மணன், கடன் வாங்கிக் கொண்டவன் வாசலில் குறுக்காக ஆஹாரமின்றி முகத்தை மூடிக் கொண்டு படுத்திருக்கும் விதமாக நானும் ராமன் அயோத்யைக்குத் திரும்பி வராதிருக்குமளவும் ஆஹாரத்தைவிட்டு முகத்தில் துணியைப் போட்டு மூடிக்கொண்டு பர்ணசாலையின் வாசலில் படுத்துக் கொள்கிறேன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "சூதரே, நீர் விரைவாக இவ்விடத்திலேயே தூப்புற்களைக் கொணர்ந்து பரப்புக; யானிங்கே பிராயோபவேசஞ்செய்து எம்மையர் அருள் செய்யுமளவும் படுத்திருப்பேன்; இந்தச் சாலையின் வாயிலில் கடன் கொடுத்தவன் போலப் படுத்து உணவு நீங்கிக் கிடப்பேனல்லாது, என்னையனருள்செய்யுமளவு மெழேன்" என்றிருக்கிறது.

சுமந்திரன், {அனுமதி எதிர்பார்த்து} ராமனைப் பார்த்துக் கொண்டே இருப்பதைக் கண்டு மனம் நொந்தவன் {பரதன்}, தானே குசப்புற் குவியலைக் கொண்டு வந்து, பூமியில் பரப்பினான்.(15) மஹாதேஜஸ்வியும், ராஜரிஷிகளில் சிறந்தவனுமன ராமன், அவனிடம் {பின்வருமாறு} பேசினான், "தாதா {ஐயா}, பரதா, என்னை முற்றுகையிட்டுக் கிடக்கும் அளவுக்கு நான் என்ன {குற்றம்} செய்தேன்?(16) இவ்வுலகில் ஒரு பிராமணர் நரர்களைத் தடுக்கும் வகையில் ஒரே பக்கமாகக் கிடக்கலாம். மூர்த்தாபிஷேகத்திற்குரியவர்கள் {முடிசூட்டுக்குரியவர்கள் / க்ஷத்திரியர்கள்} இவ்வாறு முற்றுகையிட்டுக் கிடக்க எந்த விதியும் இல்லை.(17) இராகவா, நரசார்தூலா {மனிதர்களில் புலியே}, இந்தப் பயங்கர விரதத்தைக் கைவிட்டு எழுவாயாக. இங்கிருந்து நகரங்களில் சிறந்த அயோத்திக்கு சீக்கிரம் செல்வாயாக" {என்றான் ராமன்}.(18)

இன்னும் அவ்வாறே கிடந்த பரதன், சுற்றிலும் இருந்த நகர, ஜானபத ஜனங்களைப் பார்த்து, "ஆரியரை நெறிப்படுத்த மாட்டீரா?" என்று கேட்டான்.(19)

நகர, ஜானபதவாசிகளான அந்த ஜனங்கள், அந்த மஹாத்மாவிடம் {பரதனிடம்} {பின்வருமாறு} மறுமொழி கூறினர், "காகுத்ஸ்தனை நன்கறிவோம். இராகவன், சரியாகத்தான் பேசுகிறான்.(20) இந்த மஹாபாகன் {பெருந்தகையாளன்}, பிதாவின் சொற்களில் திடமாக இருக்கிறான். உண்மையில் அதனாலேயே அவனைத் திருப்பும் சக்தியற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம்" {என்று கூறினர்}.(21)

அவர்களின் சொற்களை அறிந்த ராமன், {பரதனிடம் பின்வருமாறு} பேசினான், "தர்மத்தில் கண்கொண்ட {தர்மத்தை சரியாகக் காணும்} உன் நண்பர்களின் சொற்களைக் கேட்பாயாக.(22) மஹாபாஹுவே, இராகவா, {நான் சொன்னது, அவர்கள் சொன்னது என்ற} இரண்டையும் கேட்டு, நன்றாகச் சிந்திப்பாயாக. எழுந்து {இனி இதுபோல் செய்யேனெனும் உறுதியுடன்} என்னையும், நீரையும் தீண்டுவாயாக" {என்றான்}.(23)

பிறகு, பரதன் எழுந்து, ஜலத்தைத் தீண்டி, {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான், "பரிஷதர்களும் {சபையோரும்}, மந்திரிகளும், வணிகக் கூட்டத்தாரும் நான் சொல்வதைக் கேட்பாராக.(24) நான் என் பிதாவிடம் ராஜ்ஜியத்தை யாசிக்கவில்லை. {இவ்வாறு செய்யென} என் மாதாவைத் தூண்டவுமில்லை; பரமதர்மஜ்ஞரும் {தர்மங்களை அறிந்தவர்களில் உயர்ந்தவரும்}, ஆரியருமான ராமரை {அரண்யம் செல்ல} அனுமதிக்கவுமில்லை.(25) பிதாவின் சொற்களுக்காக {ஆணைக்காக} இங்கே வாழ வேண்டுமென்பது அவசியமெனில், நானே பதினான்கு ஆண்டுகள் வனத்தில் வாழ்வேன்" {என்றான்}.(26)

தர்மாத்மாவான ராமன், தன்னுடன் பிறந்தானின் இயல்பான வாக்கியங்களில் வியப்படைந்து, நகர ஜானபதத்தாரைப் பார்த்து {பின்வருமாறு} பேசினான்:(27) "ஜீவித்திருந்த என் பிதாவால் முடிவாக விற்கப்பட்டதையும், வாங்கப்பட்டதையும் என்னாலோ, பரதனாலோ மாற்ற முடியாது.(28) எனக்கு மாற்றாக வனவாசஞ் செய்வது என்னால் ஏற்கமுடியாத வெறுக்கத்தக்க காரியம். கைகேயி உரைத்தது சரியே. என் பிதா செய்ததும் நற்செயலே.(29) பரதன், சாந்தன். பெரியோரிடம் அர்ப்பணிப்புள்ளவன் என்பதை நான் அறிவேன். சத்தியசந்தனான இந்த மஹாத்மாவுக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.(30) வனத்தில் இருந்து திரும்பியதும் என்னுடன் பிறந்தானான இந்த தர்மசீலனின் துணையுடன் நான் பிருத்வியின் உத்தம பதியாக {பூமியின் நல்ல தலைவனாகத்} திகழ்வேன்.(31) இராஜா {தசரதர்}, கைகேயியால் கட்டுப்படுத்தப்பட்டார். நான் அந்தச் சொற்களின்படியே செயல்படுகிறேன். அதனால், நீயும் மஹீபதியான நம் பிதாவைப் பழியில் இருந்து விடுவிப்பாயாக" {என்றான் ராமன்}.(32)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 111ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

மனுவம்சம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 110 (36)

The lineage of Manu | Ayodhya-Kanda-Sarga-110 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரம்மனைக் குறித்தும், இக்ஷ்வாகு குலத்தால் நிலைநிறுத்தப்பட்ட தர்மங்களைக் குறித்தும் விளக்கிச் சொன்ன வசிஷ்டர்; மூத்த மகனே அரியணையில் அமர வேண்டும் என ராமனிடம் அவர் வலியுறுத்தியது...

Vashishta, the Rishi of three lifetimes

வசிஷ்டர், ராமனின் கோபத்தை அறிந்து {பின்வருமாறு} மறுமொழி கூறினார், "ஜாபாலியும் இவ்வுலகின் போக்குவரத்தை {பிறப்பிறப்பை / இம்மையையும், மறுமையையும்} நன்கறிவார்.(1) நீ {அயோத்திக்குத்} திரும்பி வர வேண்டும் என்ற தம் ஆசையாலேயே இந்த வாக்கியங்களைச் சொன்னார். லோகநாதா, உலகின் தோற்றத்தைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(2) 

சர்வமும் நீர்மயமாயிருந்தது. அதில் பிருத்வி {பூமி} அமைக்கப்பட்டது. அதன்பிறகு, தைவதங்கள் அனைத்துடன் {தேவர்கள் அனைவருடன்} சேர்ந்து சுவயம்பூவான பிரம்மன் தோன்றினான்.(3) பின்னர் அவன் வராஹ வடிவை ஏற்று அந்த வசுந்தரையை {பூமியை நீரிலிருந்து} உயர்த்திவிட்டு, தூய ஆத்மாக்களைக் கொண்ட தன் புத்திரர்கள் சகிதராக மொத்த ஜகத்தையும் படைத்தான்.(4) ஆகாசத்தில் தோன்றியவனும், சாசுவதமானவனும் {எப்போதும் இருப்பவனும்}, மாற்றமற்றவனும், அழிவற்றவனுமான பிரம்மனுக்கு, மரீசி பிறந்தார், மரீசியின் மகன் கசியபர் ஆவார்.(5) 

கசியபருக்கு விவஸ்வான் {சூரியன்} பிறந்தான். மனு வைவஸ்வத சுதனாவார் {விவஸ்வானின் மகனாவார்}. பூர்வத்தில் அவரே பிரஜாபதியாக {படைப்பின் தலைவராக} இருந்தார். இக்ஷ்வாகு மனுவின் மகனாவான்.(6) மனு, இந்த வளமான மஹீயை {நிலத்தை} முதலில் எவனுக்கு தத்தம் செய்தாரோ, அந்த இக்ஷ்வாகுவே அயோத்தியின் முதல் ராஜா என்பதை அறிவாயாக.(7) 

இக்ஷ்வாகுவின் மகன், ஸ்ரீமான் குக்ஷி என்று அறியப்பட்டான். அதன்பிறகு, வீரன் விகுக்ஷி, குக்ஷியின் மகனாகப் பிறந்தான்.(8) விகுக்ஷிக்கு, மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான பாணன் புத்திரனானான். பாணனுக்கு மஹாபாஹுவும், சிறப்புமிக்கவனுமான அனரண்யன் பிறந்தான்.(9) நல்லோரில் சிறந்தவனான இந்த அனரண்யன் மஹாராஜாவாக இருந்தபோது, மழை பொய்ப்பதோ, பஞ்சம் நேர்வதோ இல்லை, எவனும் கள்வனாக இல்லை.(10) அனரண்யனுக்கு, மஹாபாஹுவான ராஜா பிருது பிறந்தான். பிருதுவுக்கு மஹாராஜா திரிசங்கு பிறந்தான். அந்த வீரனே {திரிசங்குவே}, தன் சத்திய வசனத்திற்காக சரீரத்துடன் திவத்திற்கு {ஸ்வர்க்கத்திற்குச்} சென்றான்.(11,12அ) திரிசங்குவுக்கு, சிறப்புமிக்க துந்துமாரன் மகனாகப் பிறந்தான். துந்துமாரனுக்கு மஹாதேஜஸ்வியான யுவனாஷ்வன் பிறந்தான்.(12ஆ,13அ) ஸ்ரீமான் மாந்தாதா, யுவனாஷ்வனின் மகனாகப் பிறந்தான். மாந்தாதாவுக்கு, மஹாதேஜஸ்வியான ஸுஸந்தி பிறந்தான். ஸுஸந்திக்கு, துருவசந்தி, பிரஸேனஜித் என்ற இரு புத்திரர்கள் இருந்தனர். துருவசந்திக்கு, சிறப்புமிக்கவனும், ரிபுசூதனனுமான {பகைவரை அழிப்பவனுமான} பரதன் பிறந்தான்.(13ஆ-15அ) 

மஹாபாஹுவான பரதனுக்கு, அசிதன் என்ற பெயரில் பிறந்தவனுக்கு, பிரதிராஜாக்களான {பகை மன்னர்களான} ஹேஹயர்கள், தாலஜங்கர்கள், சசபிந்துக்கள் சத்ருக்களானார்கள்.(15ஆ,16) அந்த ராஜா {அசிதன்}, அவர்கள் அனைவருக்கும் எதிராக வியூகம் வகுத்தாலும், யுத்தத்தில் {அவர்களால்} விரட்டப்பட்டான். அவன் சிறந்த ரம்மியமான ஒரு சைலத்தில் {மலையில்} அபிரத முனியானான் {அர்ப்பணிப்புள்ள முனிவனானான்}.(17) அவனது பாரியைகள் இருவரும் கர்ப்பிணிகளாக இருந்தனர் என்பது சுருதி {கேள்வி}. {அவர்களில்} ஒருத்தி, தன் சகபத்தினியின் கர்ப்பத்தை அழிக்க அவளுக்கு நஞ்சைக் கொடுத்தாள்.(18) 

சியவனர் என்ற பெயரைக் கொண்ட பார்க்கவர் {பிருகு குலத்தவர்}, ஹிமவந்தத்தில் {இமய மலையில்} வசித்து வந்தார். காளிந்தி {நஞ்சுண்டவள்} அந்த ரிஷியை அணுகி அவரை வணங்கினாள். புத்திரன் பிறக்க வரம் வேண்டி வந்தவளிடம் அவர் {பின்வருமாறு} பேசினார்: (19,20அ) "தேவி, மஹாத்மாவும், உலகப் புகழ்பெற்றவனும், தார்மிகனும், நல்லொழுக்கம் கொண்டவனும், வம்ச கர்த்தனும் {குலத்தைத் தழைக்கச் செய்பவனும்}, அரிசூதனனுமான {பகைவரை அழிப்பவனுமான} புத்திரன் உனக்குப் பிறப்பான்" {என்றார் சியவனர்}.(20ஆ,21அ)

மகிழ்ச்சியடைந்த அந்த தேவி {காளிந்தி}, அந்த முனியை பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து}, அனுமதி பெற்றுக் கொண்டு, வீட்டை அடைந்து, பத்மத்தின் இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், பத்மகர்ப்பனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பான ஒளியுடனும் கூடிய, ஒரு புத்திரனைப் பெற்றாள்.(21ஆ,22) கர்ப்பத்தை அழிக்கும் நோக்கில் சகபத்தினியால் நஞ்சு கொடுக்கப்பட்டு, அந்த நஞ்சுடனேயே பிறந்ததால் அவன் ஸகரன் ஆனான் {நஞ்சுடன் கூடியவன் என்ற பெயரைப் பெற்றான்}.(23) எவன் யாகம் செய்து, பருவ காலங்களில் {பௌர்ணமி, அமாவாசைகளில்} இந்தப் பிரஜைகளை அச்சுறுத்தும் சமுத்திரத்தைத் தோண்டச் செய்தானோ அந்த ராஜாவே ஸகரன் என்ற நாமம் கொண்டவன்.(24)

அஸமஞ்சன் சகரனின் புத்திரன் ஆவான். அவன் செய்த பாபகர்மங்களுக்காக அவனது பிதா உயிரோடு இருக்கும்போதே விரட்டப்பட்டான் என்று கேள்விப்படுகிறோம்.(25) அஸமஞ்சனுக்கு அம்சுமான் என்றழைக்கப்பட்ட வீரியவான் புத்திரனாக இருந்தான். திலீபன் அம்சுமானின் புத்திரன், பகீரதன் திலீபனின் மகன்.(26) பகீரதனக்கு ககுத்ஸ்தன் பிறந்தான். அவனது பெயராலேயே காகுத்ஸ்தர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். அந்த ககுத்ஸனுக்கு ரகு என்ற புத்திரன் பிறந்தான். அவனது பெயராலேயே இராகவர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.(27) தேஜஸ்வியான பிரவிருத்தன் இரகுவுக்குப் புத்திரனாகப் பிறந்தான். அவன் புருஷாதகன், கல்மாஷபாதன்[1], சௌதாசன் என்ற பெயர்களில் புவியில் அறியப்படுகிறான்.(28) கல்மாஷபாதனின் புத்திரன், புகழ் பெற்றவனான சங்கணன், அவனது {தன் தந்தை கல்மாஷபாதனின்} வீரியத்தைப் பெற்றிருந்தாலும், தன் சைனியத்துடன் சேர்ந்து அழிந்தான்.(29)

[1] கல்மாஷபாதன் வசிஷ்டரின் சாபத்தால் ராக்ஷசனானான். மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதிகள் 178, 179, 184, கர்ண பர்வம் பகுதி 45, அநுசாஸன பர்வம் பகுதிகள் 78, 79, 80, அஸ்வமேத பர்வம் பகுதி 57, 58 ஆகியவற்றில் கல்மாஷபாதனின் கதை வெவ்வேறு கோணங்களில் இருந்து அணுகப்படுகிறது.

ஸ்ரீமான் சுதர்சனன், சங்கணனின் புத்திரனாவான். சுதர்சனனுக்கு அக்னிவர்ணன், அக்னிவர்ணனுக்கு சீக்கிரகன்,{30} சீக்கிரகனின் புத்திரன் மரு, மருவின் புத்திரன் பிரசுஷ்ருகன், பிரசுஷ்ருகனுக்கு மஹாதேஜஸ்வியான அம்பரீசன் புத்திரனாகப் பிறந்தான்.{31} அம்பரீசனுக்கு சத்தியவிக்ரமனான நஹுஷன் புத்திரனாகப் பிறந்தான். நஹுஷனின் புத்திரன் பரம தார்மிகனான நாபாகன்.{32} அஜன், ஸுவிரதன் ஆகிய இருவரும் நாபாகனின் மகன்கள். அஜனின் மகன் தர்மாத்மாவான ராஜா தசரதன்.(30-33) அவனது வாரிசும், {அரசாளும் உரிமை பெற்ற} மூத்த மகனுமான நீ, ராமன் என்று நன்கறியப்படுகிறாய். நிருபா, அந்தக் காரணத்தாலேயே ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டு, ஜனங்களை கவனித்துக் கொள்வாயாக.(34) 

இக்ஷ்வாகு குலம் முழுவதிலும் பூர்வஜனே {மூத்தவனே} ராஜாவாகிறான்; மூத்தவன் இருக்கையில் இளையவன் {ராஜா} ஆக முடியாது. மூத்த புத்திரனே ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்யப்படுவான்.(35) பெரும்புகழ்மிக்கவனே, ராகவர்களின் {ரகு குலத்தின்} சநாதன குல தர்மத்தை இப்போது கைவிடுவது உனக்குத் தகாது. விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் நிறைந்ததும், மேதினியில் பரந்த ராஷ்டிரமுமான இதை உன் பிதாவைப் போல் ஆள்வாயாக" {என்றார் வசிஷ்டர்}.(36)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 110ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Thursday, 19 January 2023

அன்னையர் வருகை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 104 (32)

The arrival of the mothers | Ayodhya-Kanda-Sarga-104 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கௌசல்யை அடைந்த வேதனை; ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர் ராஜமாதாக்களையும், வசிஷ்டரையும் வணங்கியது...

Vasishta guiding royal mothers on path

வசிஷ்டர், தசரதனின் மனைவியரைப் பாதுகாப்பாக முன்னிட்டுக் கொண்டு, ராமனை தரிசிக்கும் ஆவலுடன் அவ்விடத்தை நாடி நடந்தார்.(1) அந்த ராஜபத்தினிகள் மந்தாகினியை {மால்யவதி நதியை} நோக்கி மெதுவாக நடந்து சென்று, ராம லக்ஷ்மணர்கள் சேவித்தத் தீர்த்தத்தைக் கண்டனர்.(2) 

கௌசல்யை, மெலிந்த முகத்தில் நிறைந்திருக்கும் கண்ணீருடன், சுமித்திரையிடமும், {அங்கிருந்த} பிற ராஜமகளிரிடமும் பரிதாபகரமாக {பின்வருமாறு} பேசினாள்:(3) "களைப்பின்றி செயல்புரிபவர்களான யாவர், அநாதைகளாக நாடு கடத்தப்பட்டனரோ அவர்கள் வனத்தின் கிழக்கு மூலையில் உள்ள இந்தத் தீர்த்தத்தை {இந்தப் புனிதத்தலத்தைத்} தான் பயன்படுத்துகிறார்கள்.(4) சுமித்ரே, உன் புத்திரனான சௌமித்ரி {லக்ஷ்மணன்}, இங்கிருந்துதான் என் புத்திரனின் {ராமனின்} காரணத்திற்காக எப்போதும் சோம்பலின்றி ஜலத்தைக் கொண்டு செல்கிறான்.(5) தாழ்ந்த இச்செயலைச் செய்தாலும், தன்னுடன் பிறந்தானுக்குப் பயன்படும் குணங்கள் நிறைந்த அனைத்தையும் செய்வதால் உன் புத்திரன் ஒருபோதும் பழிக்கப்படமாட்டான்.(6) துன்பத்திற்குப் பழகாதவனும், அதற்குத் தகாதவனுமான உன் புத்திரன், இழிவானதும், கஷ்டத்தைத் தரும் செய்தியுமான இக்கடுஞ்செயலில் இருந்து இனியாவது விடுபடட்டும்" என்றாள்.(7)

அப்போது அந்த நீள்விழியாள் {கௌசல்யை}, தரையில், தெற்கு நோக்கிய நுனிகளுடன் பரப்பப்பட்டிருந்த தர்ப்பையில், பிதாவுக்காக வைக்கப்பட்ட இங்குணப் பிண்ணாக்கை {பிண்டத்தைக்} கண்டாள்.(8) கௌசல்யா தேவி, துயருற்ற ராமனால் பிதாவுக்காக பூமியில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, தசரதன் ஸ்திரீகள் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னாள்:(9) "இராகவன் {ராமன்}, இக்ஷ்வாகுநாதரும், மஹாத்மாவும், ராகவருமான தன் பிதாவுக்காக விதிப்படி எதை தத்தம் செய்திருக்கிறான் பாரீர்.(10) தேவர்களுக்குச் சமமாக போகத்தின் மத்தியில் வாழ்ந்தவரும், மஹாத்மாவுமான அந்தப் பார்த்திபருக்கு {தசரத மன்னருக்குத்} தகுந்த போஜனமாக இதை நான் கருதவில்லை.(11) நான்கு எல்லைகளைக் கொண்ட பூமியை அனுபவித்தவரும், மஹேந்திரனுக்கு ஒப்பான வலிமைமிக்கவருமான அந்த வசுதாதிபர் {பூமியின் தலைவரான தசரதர்} இங்குணப் பிண்ணாக்கை எவ்வாறு புசிப்பார்?(12) செல்வந்தனான ராமன், தன் பிதாவுக்கு இங்குணப் பிண்ணாக்கை தத்தம் செய்திருப்பதைக் காட்டிலும் உலகத்தில் வேதனைமிக்கது வேறு எதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.(13) இராமன் தன் பிதாவுக்கு இங்குணப் பிண்ணாக்கை தத்தம் செய்திருப்பதைக் கண்டும், துக்கத்தால் ஏன் இன்னும் ஆயிரந்துண்டுகளாக என் ஹிருதயம் பிளவாமல் இருக்கிறது?(14) ஒரு மனிதன் உண்பதே அவனது தேவதைகளுக்கும் உணவாகிறது என்ற லௌகிக ஸ்ருதி {உலகத்தாரின் சொல் வழக்கு} உண்மை என்றே எனக்குத் தோன்றுகிறது" {என்றாள் கௌசல்யை}.(15)

சகபத்தினிமார், இவ்வாறு துன்பத்தால் பீடிக்கப்பட்டவளை {கௌசலையைத்} தேற்றிக் கொண்டே சென்று, ஸ்வர்க்கத்தில் இருந்து நழுவிய அமரனைப் போலிருந்த ராமனை ஆசிரமத்தில் கண்டனர்.(16) போகங்கள் அனைத்தையும் இழந்தவனாக ராமனைக் கண்ட அந்த மாதாக்கள், சோகத்தால் பீடிக்கப்பட்டுக் கண்ணீர் சிந்தி துக்கத்துடன் உரக்க அழுதனர்.(17) மனுஜவியாகரனும், சத்தியசங்கரனுமான {மனிதர்களில் புலியும், அனைவருக்கும் உண்மையுள்ளவனுமான} ராமன் எழுந்து தன் மாதாக்களான அவர்கள் அனைவரின் சுபச் சரணங்களை {அருள் பாதங்களைப்} பற்றிக் கொண்டான்.(18) அந்த நீள்விழியினர் {ராமனின் அன்னையர்}, சுக ஸ்பரிசத்தைத் தரும் மிருதுவான தங்கள் விரல்களாலும், உள்ளங்கைகளாலும், அழகிய கைகளாலும் ராமனின் முதுகில் உள்ள தூசியைத் துடைத்துவிட்டனர்.(19) சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, தன் மாதாக்கள் அனைவரையும் கண்டு துக்கமடைந்தவனாக, அர்ப்பணிப்புடன் ராமனுக்குப் பிறகு மெதுவாகத் தன் வணக்கத்தைச் செலுத்தினான்.(20) அந்த ஸ்திரீகள் அனைவரும், தசரதனுக்குப் பிறந்தவனும், சுபலக்ஷணங் கொண்டவனுமான லக்ஷ்மணனிடமும் ராமனிடம் போலவே நடந்து கொண்டனர்.(21) 

துக்கத்தால் பீடிக்கப்பட்ட சீதையும், தங்கள் மாமிமாரின் சரணங்களைப் பற்றி, அவர்களின் முன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் நின்றாள்.(22) கௌசல்யை, துக்கத்தால் பீடிக்கப்பட்டும், வனவாசத்தால் மெலிந்தும், பரிதாபகரமாக நிற்கும் அவளை {சீதையை}, மகளை அணைக்கும் தாய்ப் போலத் தழுவிக் கொண்டு {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னாள்:(23) "விதேஹ ராஜரின் {ஜனகரின்} மகளும், தசரதரின் மருமகளுமான ராமனின் பத்தினி {சீதை}, ஜனங்களற்ற இந்த வனத்தில் எப்படித் துன்புறலாம்?(24) வெப்பத்தில் வதங்கிய பத்மத்தைப் போலும், வாடிய நீலோற்பலத்தைப் போலவும், தூசி படிந்த காஞ்சனத்தைப் போலவும், மேகங்களில் மறைந்த சந்திரனைப் போலவும் உன் முகத்தைக் காணும்போது, வைதேஹி, விசனமெனும் அரணியால் மனத்துக்குள் உண்டாகும் சோகாக்னி என்னைக் கடுமையாக எரிக்கிறது" {என்றாள் கௌசல்யை}.(25,26)

பரதாக்ரஜனான ராகவன் {பரதனின் அண்ணனான ராமன்}, தன்னைப் பெற்றவள் இவ்வாறு துன்புற்றுப் பேசிக் கொண்டிருக்கையில், வசிஷ்டரிடம் சென்று அவரது பாதங்களைப் பற்றிக் கொண்டான்.(27) உண்மையில் அக்னிக்கு ஒப்பானவரும், மஹாதேஜஸ்வியுமான தன் புரோஹிதரின் பாதங்களைப் பற்றிய ராகவன் {ராமன்}, அமராதிபதியான இந்திரன் பிருஹஸ்பதியுடன் {அமர்வதைப்} போல, அவரது அருகில் அமர்ந்தான்.(28) 

அவர்கள் அமர்ந்த பிறகு, மந்திரிமார், நகரத்தலைவர்கள், சைனிகர்கள் ஆகியோருடனும், தர்மத்தை அறிந்த ஜனங்கள் சகிதனாக தர்மவானான பரதனும் தன் அண்ணனின் {ராமனின்} அருகில் அமர்ந்தான்.(29) வீரியவானான பரதன், கம்பீரத்துடன் ஜொலிக்கும் ராகவனை {ராமனை} தபஸ்வியின் வேஷத்தில் கண்டு, தன் கைகளைக் கூப்பி வணங்கி, பிரஜாபதியின் முன் மஹேந்திரனைப் போல அவனது முன்னிலையில் அமர்ந்தான்.(30) "இராகவனை {ராமனைப்} பணிந்து வணங்கிய இந்த பரதன், இப்போது என்னென்ன நல்ல வாக்கியங்களைச் சொல்லப் போகிறான்" என்ற உத்தமப் பேராவல் அந்த ஆரிய ஜனங்களின் மனங்களில் எழுந்தது.(31) சத்தியத்தில் திடமான ராகவனும் {ராமனும்}, மஹானுபாவனான லக்ஷ்மணனும், தார்மிகனான பரதனும், யாக சபையோரால் விளங்கும் மூன்று அக்னிகளை {கார்ஹபத்ய, ஆஹவனீய, தக்ஷிணமெனும் மூன்று வேள்வி நெருப்புகளைப்} போல நல்லிதயத்தார் {நண்பர்கள்} சூழ ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(32)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 104ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Wednesday, 9 November 2022

சித்திரகூடத்தை அடைந்த பரதன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 093 (27)

Bharata reached Chitrakuta | Ayodhya-Kanda-Sarga-093 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சித்திரகூடத்திற்குப் பயணித்த பரதன்; புகை வரும் இடத்தைக் கண்டு, அதுவே ராமனின் ஆசிரமம் எனத் தீர்மானித்து அதை நோக்கி நடந்தது...

Soldiers observed at distance a plume of smoke rising

அந்த மகத்தான கொடிபடை அணிவகுத்துச் சென்றபோது, வனவாசிகளான மதங்கொண்ட மந்தைத் தலைவர்கள் {காட்டு யானைகள்} பீதியடைந்து கூட்டமாக ஓடின.(1) வன வழிகளிலும், கிரிகளிலும், நதிகளிலும் என எங்கும் கரடிகளும், புள்ளிமான்களும், கலைமான்களும் காணப்பட்டன.(2) தர்மாத்மாவான அந்த தசரதாத்மஜன் {தசரதன் மகனான பரதன்}, சதுராங்கங்களைக் கொண்ட மகத்தான சேனையின் நாதம் சூழ பிரீதியுடன் அணிவகுத்துச் சென்றான்.(3) சாகர வெள்ளம் போன்ற மஹாத்மா பரதனின் சேனையானது, மழைக்கால வானத்தில் மேகங்களைப் போல மஹீயை {பூமியை} மறைத்தது.(4) அந்தக் காலத்தில் மஹாவேகத்துடன் கூடிய வாரணதுரங்கங்களின் {யானை, குதிரைகளின்} வெள்ளத்தில் மூழ்கிய பூமியானது, நீண்டகாலம் புலப்படாமல் இருந்தது.(5) 

வாஹனங்கள் {இழுவை விலங்குகள்} களைத்துப் போகுமளவுக்கு நீண்ட தூரம் யாத்திரை செய்த அந்த ஸ்ரீமான் பரதன், வசிஷ்டரையும், சிறந்தவர்களான தன் மந்திரிமாரையும் நோக்கி {பின்வருமாறு} சொன்னான்:(6) "நான் காணும் எந்த ரூபமும், கேட்கும் எதுவும் பரத்வாஜர் சொன்ன தேசத்தை {இடத்தை} நாம் அடைந்துவிட்டோம் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றன.(7) இந்த கிரியே சித்திரகூடம்; இந்த நதியே மந்தாகினி; தூரத்தில் நீல மேகம் போலப் பிரகாசித்தது இந்த வனமே.(8) இரம்மியமான சித்திரகூட கிரியின் முகடுகள், பர்வதங்களுக்கு ஒப்பான என்னுடைய வாரணங்களால் {யானைகளால்} நசுக்கப்படுகின்றன.(9) பர்வத முகடுகளில் உள்ள இந்த மரங்கள், மழைக்காலத்தில் நீரைப் பொழியும் கனத்த நீல மேகங்களைப் போல  மலர்களைப் பொழிகின்றன[1].(10) 

[1] பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு காதலின்
உருகிய தளிர்த்தன உலகை ஈட்டமே

- கம்பராமாயணம் 2397ம் பாடல்

பொருள்: பெருகிய செல்வத்தை நீ ஏற்றுக் கொள் என்று சொன்ன கைகேயியிடம் எழுந்த சீற்றத்தால் முகம் சிவந்தவனும், கரிய நிறம் கொண்டவனுமான அண்ணல் பரதனைக் கண்டு அவன் மீது கொண்ட அன்பினால் பட்டுக் கிடந்த மரக்கூட்டமும் மனம் இரங்கி தளிர்த்தன.

சத்ருக்னா, கின்னரர்கள் சஞ்சரிக்கும் இந்த பர்வதம், மகரங்கள் நிறைந்த சாகரத்தைப் போலச் சுற்றிலும் ஹயங்களால் {குதிரைகளால்} நிரம்பி வழிவதைப் பார்.(11) {நமது துருப்புகளால்} விரட்டப்பட்டு அதிவேகமாக ஓடும் இந்த மிருக கணங்கள் {மான் கூட்டங்கள்}, சரத்கால அம்பரத்தில் {கூதிர் கால வானில்} வாயுவால் விரட்டப்படும் மேகக்கூட்டங்களைப் போலத் தெரிகின்றன.(12) மேகங்களைப் போலப் பிரகாசிக்கும் கிளைகளுடன் கூடிய இந்த மரங்கள், தாக்ஷிணாத்திய நரர்களை {தென்பகுதி மக்களைப்} போல நறுமணமிக்க மலராபரணங்களால் தங்கள் சிரஸை அலங்கரித்திருக்கின்றன[2].(13) நிசப்தமாகவும், காண்பதற்கு கோரமாகவும் இருந்த இந்த வனமே, இப்போது ஜனங்கள் நிறைந்த அயோத்தியைப் போல எனக்குத் தெரிகிறது.(14) {குதிரைகளின்} குளம்புகள் கிளப்பும் புழுதியானது திவத்தை {சொர்க்கத்தை / வானத்தை} மறைத்து நிற்கும்போது, எனக்குப் பிரியமானதைச் செய்வது போல அநிலன் {காற்றானவன்} அவற்றை சீக்கிரமாகக் கொண்டு செல்கிறான்.(15)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "தென்னாட்டு மனிதர்கள் மேகம் போல் கறுத்து விளங்குகின்ற தலைமயிர்களை ஒருவிதமாக உயர எடுத்துக் கட்டி அவற்றில் பூமாலைகளைச் சூடுவது போல், இந்த வ்ருக்ஷங்களும் மேகம் போல் கறுத்திருக்குந் தமது சிரஸுக்களில் நிரம்பப் பூத்திருக்கிற புஷ்பங்களைச் சிரோபூஷணமாகத் தரித்திருக்கின்றன" என்றிருக்கிறது.

சத்ருக்னா,  துரகங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டும், முக்கிய சூதர்களால் {சாரதிகளால்} இயக்கப்பட்டும் கானகத்தில் சீக்கிரமாக விரைந்து செல்லும் சியந்தனங்களை {தேர்களை} இதோ பார்.(16) பிரிய தரிசனந்தரும் {காண்பதற்கினியவையான} இந்த மயில்களும், பறவைகளும், {தேர்களின் ஒலியைக் கேட்டு} அச்சமடைந்து தங்கள் வசிப்பிடங்களுக்குள் சீக்கிரமாக நுழைவதை இதோ பார்.(17) ஸ்வர்க்கத்திற்கான பாதை போலிருக்கும் இந்த தேசம் {இடம்}, எனக்கு அதிமனோகரமானதாகத் தெரிகிறது. இது தபஸ்விகளின் வசப்பிடமாக வெளிப்படுகிறது.(18) வனத்தில் பெண்மான்களுடன் கூடிய புள்ளிமான்கள் பலவும், {மேனியில்} மலர்களால் சித்திரஞ்செய்யப்பட்டதை {வரையப்பட்டதைப்} போன்ற மனோகரமான ரூபங்களில் புலப்படுகின்றன.(19) சைனியத்தினரே, புருஷ வியாகரர்களான {மனிதர்களில் புலிகளான} ராமலக்ஷ்மணர்கள் இருவரும் புலனாகும் வரை இந்தக் கானகத்தில் முந்திச் சென்று தேடுவீராக" {என்றான் பரதன்}.{20)  

சஸ்திரபாணிகளான சூரபுருஷர்கள் {ஆயுதந்தரித்த வீர மனிதர்கள்}, பரதனின் சொற்களைக் கேட்டு, அந்த வனத்திற்குள் புகுந்தனர்; பிறகு தூமத்தையும் {புகையையும்} கண்டனர்.(21) தூமாக்ரத்தை {புகைச் சுழலைக்} கண்ட அவர்கள், பரதனிடம் திரும்பிச் சென்று, {இவ்வாறு} சொன்னார்கள், "அமனுஷ்யத்தில் {மனிதர்கள் இல்லாத இடத்தில்} அக்னி இராது. இராகவர்கள் அங்கே இருக்கின்றனர் என்பதே {இதன்மூலம்} வெளிப்படுகிறது.(22) நரவியாகரர்களும், பரந்தபர்களுமான {மனிதர்களில் புலிகளும், பகைவரை அழிப்பவர்களுமான} அந்த ராஜபுத்திரர்கள் அங்கே இல்லையெனில், ராமரைப் போன்ற வேறு தபஸ்விகள் அங்கே இருப்பது வெளிப்படும்" {என்றனர்}.(23)

அமித்ரபலமர்தனனான {பகைவரின் படையை அழிப்பவனான} பரதன், சாதுக்களும் சம்மதிக்கும் {நல்லவர்களும் உடன்படும்} அந்த சொற்களைக் கேட்டு, சைனியத்தினர் அனைவரையும் நோக்கி {பின்வருமாறு} சொன்னான்:(24) "இதற்கு மேலும் முன்னேறாமல் இங்கேயே தயாராகக் காத்திருப்பீராக. நானும், சுமந்திரரும், குருவும் {வசிஷ்டரும்}[3] தனியாக அங்கே செல்வோம்" {என்றான்}.(25)

[3] சில பதிப்புகளில் இங்கே வசிஷ்டருக்குப் பதில், திருதி எனும் மந்திரி குறிப்படப்படுகிறான்.

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவர்கள் அனைவரும் அங்கேயே {நாற்புறத்திலும் காத்து} நின்றனர். புகைச்சுழல் தோன்றும் இடத்திலேயே பரதனின் பார்வை நிலைத்திருந்தது.(26) அங்கேயே நிற்குமாறு ஆணையிடப்பட்ட அந்த சம்முவினர் {படையினர்}, தங்கள் முன் தூமத்தை {புகையை} கவனித்தாலும், தங்கள் பிரியத்திற்குரிய ராமனை சீக்கிரமே காணப்போகிறோமென உணர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.(27)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 093ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Saturday, 15 October 2022

சான்றவர் உரை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 082 (32)

Speech of the noble | Ayodhya-Kanda-Sarga-082 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் அரியணையை அபகரிக்க மறுத்த பரதன்; கானகம் செல்ல ஆயத்தமானது...

Bharata in his Sabha with ministers and people

புத்திமானான பரதன், நன்கறியப்பட்ட கிரஹங்களுடனும், பூர்ணச்சந்திரனுடனும் கூடிய இரவைப் போல ஆரிய கணங்கள் {மதிப்புமிக்க மனிதர்கள்} நிறைந்த அந்த சபையைக் கண்டான்.(1) அந்த உத்தம சபையானது, தத்தமக்குரிய ஆசனங்களில் அமர்ந்த ஆரியர்களின் நறுமணமிக்க வஸ்திரங்களால் உண்டான ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது.(2) வித்வஜனங்களால் சம்பூர்ணமடைந்த {கற்றோரால் நிறைந்த} அந்த அழகிய சபையானது, கூதிர் காலத்தில் பூர்ணச்சந்திரனுடன் கூடிய இரவைப் போலத் தெரிந்தது.(3)

தர்மத்தின் வித்தாகத் திகழ்பவரான புரோஹிதர் {வசிஷ்டர்}, இராஜனின் மொத்த பிரகிருதியர்கள் {இராஜ இயல்புடன் கூடிய / அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்} அனைவரையும் கண்டு, பரதனிடம் இந்த மிருதுவான வாக்கியங்களைச் சொன்னார்:(4) "தாதா {குழந்தாய்}, தர்மம் பயின்றவனான தசரத ராஜா, தன, தானியங்களுடன் கூடிய இந்தப் பரந்த பிருத்வியை உனக்கு அளித்துவிட்டு ஸ்வர்க்கத்திற்குச் சென்றார்.(5) சத்தியத்தில் திடமாக இருந்த ராமனும், நல்லோரின் தர்மத்தை நினைவுகூர்ந்து, ஜோதியைக் கைவிடாமல் உதிக்கும் சந்திரனைப் போல, தன் பிதாவின் ஆணையைப் புறக்கணிக்காமல் சென்றான்.(6) உன் தந்தையும் {தசரதனும்}, உன்னுடன் பிறந்தவனும் {ராமனும்}, முள்ளகன்ற {பகைவரற்ற} ராஜ்ஜியத்தை உனக்கு அளித்திருக்கின்றனர். மகிழ்ச்சியுடன் கூடிய அமாத்தியர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்ந்து அதை அனுபவிப்பாயாக. சீக்கிரமே அபிஷேகம் செய்து கொள்வாயாக.(7) வடக்கத்தியர்களும், மேற்கத்தியர்களும், தெற்கத்தியர்களும், அபராந்தகர்களும் {எல்லையோர / கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களும்}, சாமுத்திரர்களும் {கடல் வாணிபர்களும் / தீவுகளில் வசிப்பவர்களும்} கோடிக்கணக்கான ரத்தினங்களை உனக்குச் செலுத்தட்டும்" {என்றார் வசிஷ்டர்}.(8)

தர்மத்தை அறிந்தவனான பரதன், இந்த வாக்கியங்களைக் கேட்டு, சோகத்தில் மூழ்கி, தர்மத்தை விரும்பும் மனத்துடன் ராமனிடம் தன் மனத்தைச் செலுத்தினான்.(9) அந்த யுவன் {இளைஞனான பரதன்}, ஹம்சம் போன்ற ஸ்வரத்தில் {அன்னப்பறவை போன்ற குரலில்}, கண்ணீர் நிறைந்த வேண்டுகோளுடன் சபை மத்தியில் புலம்பியபடியே, அந்தப் புரோஹிதரை {வசிஷ்டரைப் பின்வருமாறு} கண்டித்தான்:(10) "பிரம்மசரியம் {கண்டிப்புடன் கூடிய தூய்மையைப்} பயில்பவரும், வித்யைகளை அறிந்தவரும், மதிமிக்கவரும், தர்மத்தில் அர்ப்பணிப்புமிக்கவருமான ஒருவரின் ராஜ்ஜியத்தை என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு அபகரிப்பான்?(11) தசரதருக்குப் பிறந்தவன் எவ்வாறு ராஜ்ஜியத்தை அபகரிப்பவனாவான்? இந்த ராஜ்ஜியமும், நானும் ராமருக்கே சொந்தம். இங்கே தர்மத்தைச் சொல்வதே {உமக்குத்} தகும்.(12) ஜேஷ்டரும் {மூத்தவரும்}, சிரேஷ்டரும் {சிறந்தவரும்}, தர்மாத்மாவும், திலீபன், நஹுஷன் ஆகியோருக்கு ஒப்பானவருமான அந்த காகுத்ஸ்தரே {ராமரே}, தசரதரைப் போல ராஜ்ஜியத்தை அடையத் தகுந்தவர்.(13) 

உலகத்தில் இக்ஷ்வாகு குலத்தின் புகழை நான் கெடுத்தால், ஸ்வர்க்கத்திற்கு இட்டுச் செல்லாத அநாரியம் {ஆரியமற்ற செயலைப்} பயின்ற பாபம் இழைத்தவனாவேன்.(14) என் மாதா செய்த பாபம் எனக்கு விருப்பமானதல்ல[1]. கடப்பதற்கரிய வனத்தில் இருப்பவரை {ராமரை} இங்கிருந்தே கூப்பிய கைகளுடன் நான் வணங்குகிறேன்.(15) நான் ராமரையே பின்பற்றுவேன். இரு பாதங்களைக் கொண்டவர்களில் {மனிதர்களில்} சிறந்தவரான அவரே {ராமரே} ராஜா. இராகவரே, மூவுலகங்களின் ராஜ்ஜியத்திற்கும் தகுந்தவர்" {என்றான் பரதன்}.(16)

[1] மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வனாய் முதல்
தோன்றினன் இருக்க யான் மகுடஞ் சூடுதல்
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ

- கம்பராமாயணம் 2257ம் பாடல்

பொருள்: மூன்று உலகினுக்கும் ஒரே முதல்வனாக முதல் தோன்றியவன் இருக்க நான் மகுடம் சூடுதல், சான்றோர்  தாமே உரைக்க தர்மம் என்றாகிவிட்டால், என்னை ஈன்றவள் செய்கையில் இழுக்கேதும் இல்லையென்றாகாதா?

ராமனையே தங்கள் மனங்களில் நிலைநிறுத்தியவர்களான சபை உறுப்பினர்கள் அனைவரும், தர்மம் நிறைந்த அந்த வாக்கியங்களைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.(17)

{மீண்டும் பரதன்}, "வனத்திலிருந்து அந்த ஆரியரை {என் அண்ணன் ராமரை} என்னால் அழைத்தவர முடியவில்லை என்றால், ஆரியனான லக்ஷ்மணனைப் போல நானும் அந்த வனத்திலேயே வாழ்வேன்.(18) குணவர்தனர்கள் {நற்குணங்களை வளர்த்துக் கொள்பவர்கள்}, சாதுக்கள் {நல்லவர்கள்}, ஆரியர்கள் {உன்னதர்கள்}, மஹான்கள் ஆகியோரின் முன்னிலையில் அவரை திருப்பி அழைத்து வருவதற்கான சர்வ உபாயங்களையும் கட்டாயம் நான் பயன்படுத்துவேன்.(19) எனக்கு விருப்பமான இந்த யாத்திரைக்காக, மார்க்க சோதனை ரக்ஷகர்கள் {சாலைகளை சோதித்துச் செப்பனிடுபவர்கள்}, கூலி வேலையாட்கள் ஆகியோர் அனைவரையும் ஏற்கனவே நான் அனுப்பிவிட்டேன்" {என்றான் பரதன்}.(20)

தர்மாத்மாவும், உடன் பிறந்தவனிடம் பாசம் கொண்டவனுமான பரதன், இவ்வாறு சொல்லிவிட்டு, தன்னருகே இருந்தவனும், ஆலோசனை வழங்குவதில் சமர்த்தனுமான சுமந்திரனிடம் இதைச் சொன்னான்:(21) "சுமந்திரரே, எழுந்து துரிதமாகச் செல்வீராக. என் சாசனப்படி யாத்திரைக்கு ஆணையிட்டு, பலத்தை {படைகளை} சீக்கிரம் அழைத்து வருவீராக" {என்றான் பரதன்}.(22)

மஹாத்மாவான பரதன் இவ்வாறு சொன்னதும் மகிழ்ச்சியடைந்த சுமந்திரன், விருப்பத்திற்குரிய அவ்வாணையை ஏற்று, அனைத்தையும் ஏற்பாடு செய்தான்.(23) இராகவனைத் திருப்பி அழைத்து வருவதற்கான படையின் யாத்திரையைக் கேட்ட அந்தப் பிரகிருதியர்களும் {அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும்}, படை அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.(24) ஒவ்வொரு கிருஹத்திலும் {வீட்டிலும்} உள்ள யுத்தவீரர்களின் மனைவியர் அனைவரும், அந்த யாத்திரையைக் குறித்து அறிந்ததும், மகிழ்ச்சி அடைந்தவர்களாகத் தங்கள் பர்த்தாக்களை {கணவர்களைத்} துரிதப்படுத்தினார்கள்.(25) படையதிகாரிகள், சீக்கிரமாகச் செல்லும் ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, கோரதங்களிலும் {காளைகளால் இழுக்கப்படும் தேர்களிலும்}, பெரும் வேகங்கொண்ட தேர்களிலும் படைவீரர்களுடன் செல்லுமாறு மொத்த படையையும் தூண்டினர்.(26)

அந்தப் படை தயாராக இருப்பதைக் கண்ட பரதன், தன் குருவின் {வசிஷ்டரின்} முன்னிலையில், தன் அருகே இருந்த சுமந்திரனிடம், "என் ரதத்தைத் துரிதப்படுத்துவீராக" என்றான்.(27)

பரதனின் ஆணையை ஏற்றவன் {சுமந்திரன்}, பரமவாஜிகள் {சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்ட ரதத்தை எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் அவனை அணுகினான்.(28) சத்தியத்தில் திடமாக இருந்தவனும், திடமான சத்திய விக்கிரமனும் {பொறுமையும், வல்லமையுங் கொண்டவனும்}, பிரதாபவானும், எப்போதும் யுக்தியுடன் பேசுபவனும், ராகவனுமான அந்த பரதன், அப்போது மஹாரண்யத்தில் வசித்திருக்கும் புகழ்மிக்க குருவின் {ராமரின்} அருளை அடையும் நோக்கில் {பின்வருமாறு} பேசினான்:(29) "சுமந்திரரே, எழுவீராக, படையை ஆயத்தம் செய்யப் படை அதிகாரிகளிடம் துரிதமாகச் செல்வீராக. வனஸ்தராக இருக்கும் ராமரின் அருளைப் பெற்று, ஜகத்தின் இதத்திற்காக அவரைத் திருப்பி அழைத்து வர நான் விரும்புகிறேன்" {என்றான் பரதன்}.(30)

இவ்வாறு பரதனால் ஆணையிடப்பட்டவனான அந்த சுமந்திரன், தன் ஆசை முழுவதும் நிறைவேறியவனாக, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், படை முக்கியஸ்தர்கள், நட்பு ஜனங்கள் ஆகியோர் அனைவருக்கும் {பரதன் சொன்னவாறே} ஆணையிட்டான்.(31) அதன்பேரில், ராஜ, வைசிய, விருஷல {சூத்திர}, விப்ர {பிராமண} குலாகுலங்களைச் சேரந்தவர்கள் எழுந்திருந்து, தங்கள் ரதங்களில் நல்ல குலத்தில் பிறந்த ஒட்டகங்களையும், கோவேறு கழுதைகளையும், நாகங்களையும் {யானைகளையும்}, ஹயங்களையும் {குதிரைகளையும்} பூட்டினர்.(32)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 082ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை