Showing posts with label குஹன். Show all posts
Showing posts with label குஹன். Show all posts

Wednesday, 29 October 2025

நந்திகிராமம் | யுத்த காண்டம் சர்க்கம் – 125 (46)

Nandigrama | Yuddha-Kanda-Sarga-125 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனால் அனுப்பப்பட்ட ஹனுமான், ராமனின் வரவை குஹனிடமும், பரதனிடமும் அறிவிப்பது...

Hanuman Bharata and Shatrugna

பிறகு, துரிதவிக்ரமனும், பிரியத்தை விரும்புகிறவனுமான ராகவ ராமன், அயோத்தியை நினைத்து பிரியமானதைக் குறித்துச் சிந்தித்தான்.(1) மதிமிக்கவனும், தேஜஸ்வியுமான அவன் இவ்வாறு சிந்தித்துவிட்டு, வானரர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தி, பிலவங்கமனான ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பிலவகசத்தமா {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனே}, சீக்கிரம் துரித கதியில் அயோத்திக்குச் சென்று, நிருபதிமந்திரத்தில் {அரசமாளிகையில்} உள்ள ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிவாயாக.(3) 

Wednesday, 16 November 2022

திருமகள் விடுதூது | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 099 (42)

Emissary of the goddess of wealth | Ayodhya-Kanda-Sarga-099 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அருகில் சீதையுடன் ஆசிரமத்தில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்ட பரதனின் புலம்பல்; இராமனின் பாதங்களில் வீழ்ந்தது; தழுவிக் கொண்ட ராமன்...

Bharata and Shatrugna fell at the feet of Rama

அப்போது பரதன், சேனையை முகாமிடச் செய்துவிட்டு, சத்ருக்னனிடம் {ராமனின் வசிப்பிடத்தைச்} சுட்டிக்காட்டிக் கொண்டு, தன்னுடன் பிறந்தானை {ராமனைக்} காண உற்சாகத்துடன் சென்றான்.(1) குருவத்சலனான {பெரியோரிடம் பற்று கொண்டவனான} அவன், வசிஷ்ட ரிஷியிடம், "என் மாதாக்களை சீக்கிரம் அழைத்து வாருங்கள்" என்று சொல்லிவிட்டு, துரிதமாக முன்னே சென்றான்.(2) பரதனைப் போலவே ராம தரிசனத்தில் ஆவல் கொண்ட சுமந்திரனும், சிறிது தூரத்தில் சத்ருக்னனைப் பின்தொடர்ந்து சென்றான்.(3) 

இவ்வாறு ஸ்ரீமானான அந்த பரதன் சென்று கொண்டிருந்தபோது, தன்னுடன் பிறந்தவனின் பர்ணக்குடிலையும் {ஓலைக் குடிசையையும்}, தாபசாலையில் {தபசிகள் வசிக்கும் இடத்தில்} அமைந்திருக்கும் மற்றொரு {சிறிய} குடிலையும் கண்டான்.(4) பிறகு பரதன், அந்த சாலையின் முன்புறத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் விறகுகளையும், சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புஷ்பங்களையும் கண்டான்.(5) ராமலக்ஷ்மணர்களால் விருக்ஷங்களில்  கட்டப்பட்ட குசப் புற்கள் மற்றும் மரவுரிகளின் தடயங்கள் சிலவற்றை அங்கேயும் இங்கேயுமென ஆசிரமத்திற்குச் செல்லும் வழியில் அவன் கண்டான்.(6) குளிர் காயுங் காரணத்திற்காக ஆயத்தமாக வைக்கப்பட்ட மான்கள், எருமைகளுடைய உலர்ந்த வரட்டிகளின் பெருங்குவியல்களையும் அவன் கண்டான்.(7)

ஒளிவீசுபவனும், மஹாபாஹுவுமான பரதன் அவ்வாறு சென்று கொண்டிருந்த போது, சத்ருக்னனிடமும், தன்னைச் சுற்றிலும் இருந்த அமாத்தியர்களிடமும் மகிழ்ச்சியுடன் {பின்வருமாறு} சொன்னான்:(8) "பரத்வாஜர் சொன்ன இடத்தை அடைந்துவிட்டோமென நினைக்கிறேன். மந்தாகினி நதி தூரத்தில் இல்லை {அருகிலேயே இருக்கிறது} என்றும் நான் நினைக்கிறேன்.(9) மரவுரிகள் மேலிருந்து கட்டப்பட்டிருக்கின்றன. அகாலத்தில் {வழியைக் கண்டுபிடித்துச்} செல்ல விரும்பி லக்ஷ்மணனால் அடையாளங் குறிக்கப்பட்ட பாதையாக இது இருக்கலாம்.(10) நீண்ட தந்தங்களைக் கொண்டவையும், வேகமானவையுமான குஞ்சரங்கள் அன்யோன்யம் {யானைகள், ஒன்றோடொன்று கொண்ட பகையால்} மூர்க்கமாக பிளிறுக் கொள்ளும் இடமாக இந்த சைல ஓரம் {மலையோரம்} திகழ்கிறது.(11) வனத்தில் தாபஸ்விகள் {காலையிலும், மாலையிலும் என ஹோமஞ் செய்வதற்காக} எப்போதும் வைத்துக் கொள்ள விரும்பும் அக்னியில் இருந்து இந்த சங்குல தூமம் {அடர்ந்த புகை} எழுகிறது.(12) புருஷவியாகரரும் {மனிதர்களில் புலியும்}, குருசத்கார காரணரும் {பெரியோரை மதிப்பவரும்}, மஹரிஷியைப் போன்றவரும், ஆரியருமான ராகவரை {ராமரை} மகிழ்ச்சியுடன் இங்கே காணப் போகிறேன்" {என்றான் பரதன்}.(13)

பிறகு அந்த ராகவன் {பரதன்}, ஒரு முஹூர்த்த காலம் சித்திரகூடத்தில் சென்று, மந்தாகினியை அடைந்து, அந்த ஜனங்களிடம் {மந்திரிகள் உள்ளிட்ட பிறரிடம்} இதைச் சொன்னான்:(14) "புருஷவியாகரரான அந்த ஜனேந்திரர் {மனிதர்களில் புலியும், ஜனங்களின் தலைவருமான ராமர்}, ஜனங்களற்ற இடத்தை அடைந்து, வெறுந்தரையில் {இடது காலை வலது முட்டியில் வைத்து} வீராசனத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறார்.  என் பிறவிக்கும், ஜீவிதத்திற்கும் {வாழ்வுக்கும்} ஐயோ.(15) பெருங்காந்தியைக் கொண்டவரும், லோகநாதருமான ராகவர் {ராமர்}, என்னால் இந்த விசனத்தை அடைந்து, இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு வனத்தில் வசிக்கிறார்.(16) இவ்வாறு உலகத்தால் பழிக்கப்படும் நான், இன்று ராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரின் பாதங்களில் விழுந்து அருள் வேண்டப் போகிறேன்" {என்றான் பரதன்}.(17)

அந்த தசரதாத்மஜன் {பரதன்} இவ்வாறு புலம்பிக் கொண்டிருந்தபோதே, புண்ணியம் நிறைந்ததும், மனோஹரமானதும், மஹத்தானதுமான பர்ண சாலையை {ஓலைக் குடிலைக்} கண்டான்.{18} ஆச்சா, பனை, அஷ்வ மரங்களின் மிருதுவான இலைகள் பலவற்றால் கூரைவேயப்பட்டதும், விசாலமான வேதியைப் போன்ற பீடத்தில் குசப்புற்கள் {தருப்பங்கள்} பரப்பப்பட்டதும்,{19} பெருஞ்சக்தியுடன் சத்ருக்களுக்குப் பாதகமேற்படுத்தும் பார சாதனைகளுக்கான சக்ரனின் {இந்திரனுடைய} ஆயுதத்தைப் போல் பிரகாசிக்கும் பொற்பூச்சு கொண்ட விற்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{20}  அர்க்கனின் {சூரியனின்} கதிர்களைப் போலவும், போகவதியில் ஒளிரும் வதனங்களுடன் கூடிய சர்ப்பங்களைப் போலவும் கோரமாகப் பிரகாசிக்கக்கூடிய சரங்கள் நிறைந்த அம்பறாத்தூணிகளுடன் கூடியதும்,{21} தங்க உறைகளில் இருக்கும் இரு வாள்களால் அலங்கரிக்கப்பட்டதும், தங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கேடயங்களால் விளங்குவதும்,{22} பொன்னாலான விரலுறைகள் தொங்குவதுமான சுவருடன் கூடிய அது {பர்ணசாலை}, மான்கள் அணுகாத சிங்கத்தின் குகையைப் போல பகைக்கூட்டத்தினர் அணுக முடியாததாக இருந்தது.(18-23) 

அந்த ராமநிவேசனத்தின் {ராமனுடைய வசிப்பிடத்தின்} வடகிழக்கு மூலையில் விசாலமானதும், எரிந்த பாவகனுடன் {அக்னியுடன்} கூடியதும், புண்ணியமானதுமான வேதியை {வேள்விப் பீடத்தை} பரதன் கண்டான்.(24) சுற்றிலும் ஒரு முஹூர்த்த காலம் பார்த்துக் கொண்டிருந்த பரதன், குடிலில் ஜடாமண்டலதாரியாக அமர்ந்திருக்கும் தன் குருவான {அண்ணனான} ராமனைக் கண்டான்.(25) மான்தோல் உடுத்தியவனும், மரவுரி தரித்தவனும், பாவகனுக்கு {அக்னிக்கு} ஒப்பானவனும், சிங்கம் போன்ற பிடரியைக் கொண்டவனும், மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, தாமரைக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், தர்ம வழி நடப்பவனும், சாகரம் வரையுள்ள பிருத்வியின் தலைவனுமான அந்த ராமன், தன் அருகில் சீதையுடனும், லக்ஷ்மணனுடனும், அழிவில்லா பிரம்மனைப் போல தர்ப்பை பரப்பப்பட்ட தரையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(26-28) 

ஸ்ரீமானும், தர்மாத்மாவும், கைகேயிசுதனுமான பரதன், அவனை {ராமனைக்} கண்டதும், துக்கத்திலும், சோகத்திலும் மூழ்கியவனாக அவனை நோக்கி ஓடிச் சென்றான்.(29) அவன் {இவ்வாறு தன் அண்ணனைக்} கண்டு, தைரியத்தால் துக்கத்தை அடக்க இயலாதவனாக, கண்ணீரால் தழுதழுத்த குரலில் கதறியபடியே இந்தச் சொற்களைச் சொன்னான்:(30) "சபையில் அமைச்சர்கள் குழுவால் வழிபடத்தகுந்த என் அண்ணன், வனத்தில் மிருகங்களால் வணங்கப்படுகிறார்.(31) பூர்வத்தில், தமக்கு உசிதமான பல்லாயிரம் வஸ்திரங்களை பயன்படுத்திய இந்த மஹாத்மா, {இப்போது வானப்ரஸ்த} தர்மத்தைப் பின்பற்றி மிருகத் தோல்களை உடுத்திக் கொண்டிருக்கிறார்.(32) விதவிதமான வண்ணங்களில் பலவகை மலர்களைச் சூடியிருந்த இந்த ராகவர் {ராமர்}, எவ்வாறு இந்த ஜடாபாரத்தைத் தாங்குகிறார்?(33) விதிமுறைப்படி யாகங்கள் செய்து தர்மத்தை ஈட்டியவர், இப்போது சரீரத் துன்பத்தால் உண்டாகும் {வானப்ரஸ்த} தர்மத்தைத் தேடுகிறார்.(34) எவருடைய அங்கங்கள் வெண்சந்தனத்தால் சேவிக்கப்பட்டனவோ அந்த ஆரியரின் அங்கங்கள் இப்போது புழுதியால் சேவிக்கப்படுகின்றன.(35) சுகத்தையே அனுபவித்து வந்த ராமர் என்னால் இந்த துக்கத்தை அடைந்தார். உலகத்தால் பழிக்கப்படும் கொடூரனான என் ஜீவிதத்திற்கு ஐயோ {என்னைப் போன்ற கொடூரன் ஏன் வாழ வேண்டும்?}" {என்றான் பரதன்}.(36)

முகத்தாமரை வியர்த்த பரதன், இவ்வாறு தீனமாக அழுது புலம்பி, ராமனின் பாதங்களைத் தீண்டாமல் கதறியபடியே கீழே விழுந்தான்[1].(37) மஹா பலசாலியும், ராஜபுத்திரனுமான பரதன், துக்கத்தில் மூழ்கியவனாக, "ஆரியரே" என்று ஒரேமுறை அலறி, சிறிது நேரத்தில் பேசமுடியாத தீன நிலையை அடைந்தான்.(38) சிறப்புமிக்கவனான ராமனைக் கண்டதும், "ஆரியரே" என்று மட்டும் உச்சக் குரலில் அலறியவனின் கண்டம் {தொண்டை} கண்ணீரால் தடைபட்டதால் அதற்குமேல் அவனால் பேச இயலவில்லை.(39) சத்ருக்னனும் அழுது கொண்டே ராமனின் சரணங்களில் விழுந்தான். அவர்கள் இருவரையும் வாரி அணைத்துக் கொண்ட ராமனாலும் தன் கண்ணீரை அடக்கிக் கொள்ள முடியவில்லை.(40)

[1] கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனள் நலத்தின் நீங்கினாள்
வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான்

- கம்பராமாயணம் 2426ம் பாடல்

பொருள்: குற்றமில்லாத நல்ல தவத்தைச் செய்து, தன் மனக்கருத்தை அறிந்த தன் நாதனைப் பிரிந்து, நன்மைகள் ஏதுமின்றி வேதனையில் மெலிந்த திருமகளே {ராஜ்ஜியலக்ஷ்மியே} அனுப்பிய தூதனைப் போல பரதனும் தொழுது தோன்றினான்.

அப்போது அம்பரத்தில் சுக்கிரனும், பிருஹஸ்பதியும், திவாகரனையும், நிசாகரனையும்  நோக்குவது போல் {வானத்தில் வெள்ளியும், வியாழனும், ஞாயிறையும், திங்களையும் பார்ப்பது போல்} அரண்யத்தில் சுமந்திரனும், குஹனும், அந்த ராஜசுதர்களை {ராமனையும், லக்ஷ்மணனையும்} கண்டனர்.(41) வனத்தில் வசிப்பவர்கள் {முனிவர்கள்} அனைவரும், வாரணக்கூட்டங்களின் {யானைக் கூட்டங்களின்} தலைவர்களுக்கு ஒப்பான அந்தப் பார்த்திபர்களின் சந்திப்பை அந்த மஹத்தான அரண்யத்தில் கண்டு, தங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து, கண்ணீர் சிந்தினர்.(42)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 099ல் உள்ள சுலோகங்கள்: 42

Previous | Sanskrit | English | Next

Monday, 14 November 2022

இராமாசிரமம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 098 (18)

The hermitage of Rama | Ayodhya-Kanda-Sarga-098 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் ஆசிரமத்தைக் கண்டுபிடித்ததில் பரதன் அடைந்த மகிழ்ச்சி...

Bharata in search of Rama

பாதங்களைக் கொண்டோரில் {மனிதர்களில்} உத்தமனான அந்தப் பிரபு {பரதன்}, தன் சேனையை முகாமிடச் செய்து, தன் குருவிடம் {தந்தை தசரதனிடம்} அர்ப்பணிப்புள்ள ராமனிடம் பாத நடையாகச் செல்ல விரும்பினான்.(1) நல்ல முறையில் சைனியத்தை முகாமிடச் செய்ததும், தேசத்திற்குரிய {இடத்திற்குரிய} விதிப்படியே அந்த பரதன், சத்ருக்னனிடம் இதைச் சொன்னான்:(2) "சௌம்யா {மென்மையானவனே}, நீயும், வேடர்களுடன் கூடிய இந்த நர சங்கங்களும் {மனிதக் கூட்டங்களும்}, இந்த வனத்தின் அனைத்துப் பக்கங்களிலும் தேடுவீராக.(3) குஹன், ஆயிரக்கணக்கான தன் ஞாதிகளுடன் {உறவினர்களுடன்}, சரங்களும், விற்களும், வாள்களும் தரித்துக் கொண்டு, நேரடியாகச் சென்று காகுத்ஸ்தர்களை {ராமலக்ஷ்மணர்களைத்} தேடட்டும்.(4) அமாத்யர்கள் {அமைச்சர்கள்}, புரவாசிகள் {நகரவாசிகள்}, குருக்கள் {புரோஹிதர்கள்}, துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்} சகிதனான {ஆகியோருடன் கூடிய} நானும் இந்த வனம் முழுவதும் பாதநடையாகவே திரிவேன் {சென்று தேடுவேன்}.(5) 

மஹாபலம் பொருந்திய ராமரையும், மஹா பாக்கியசாலியான லக்ஷ்மணனையும், வைதேஹியையும் காணும் வரை நான் சாந்தியடைய மாட்டேன் {எனக்கு மன நிம்மதி உண்டாகாது}.(6) பத்மபத்ரங்களுக்கு {தாமரை இதழ்களுக்கு} ஒப்பான கண்களுடன் கூடியதும், சந்திரனுக்கே ஒப்பானதுமான நம்முடன் பிறந்தவரின் சுபவதனத்தை {அழகிய முகத்தைக்} காணும் வரை நான் சாந்தியடைய மாட்டேன்.(7) பார்த்திபர்களுக்கேயுரிய அடையாளங்களைக் கொண்ட நம்முடன் பிறந்தவரின் சரணங்களை {பாதங்களை} என் சிரசில் {தலையில்} தாங்கும் வரை நான் சாந்தியடைய மாட்டேன்.(8) அந்த ராஜ ஆரியர் {ராஜ்ஜியத்தின் மகுடத்திற்குரிய நம் அண்ணன் ராமன்}, ஜலத்தால் அபிஷேகஞ் செய்யப்பட்டு நம் பித்ரு பிதாமஹர்களுக்குரிய {நம் தந்தைக்கும், நம் முப்பாட்டன்களுக்குமுரிய} ராஜ்ஜியத்தில் ஸ்தாபிக்கப்படும் வரை நான் சாந்தியடைய மாட்டேன்.(9)

தாமரைக் கண்களைக் கொண்டவரும், களங்கமற்ற சந்திரனுக்கு ஒப்பான பேரொளியைக் கொண்டவருமான ராமரின் முகத்தைக் காணும் லக்ஷ்மணனே உண்மையில் சித்தார்த்தன் {நோக்கம் நிறைவேறி சாதித்தவன்}.(10) சாகரம் வரையுள்ள பிருத்வியின் தலைவரை {பூமியின் பாதுகாவலரான ராமரைப்} பின்தொடர்ந்து சென்ற மஹாபாக்கியவதியான ஜனகாத்மஜையே {ஜனகனின் மகளான சீதையே} நோக்கம் நிறைவேறியவள் {கொடுத்து வைத்தவள்}.(11) நந்தனத்தில் {சைத்திரரதமென்னும் உத்தியானவனத்தில்} வசிக்கும் குபேரனைப் போல, அந்த காகுத்ஸ்தர் {ராமர்} வசிக்கும் இந்தச் சித்திரகூட கிரியே, கிரிராஜனுக்கு {இமயத்திற்கு} ஒப்பான நல்ல பாக்கியம் பெற்றது.(12) காட்டு விலங்குகள் வசிக்கும் இந்த துரக வனம் {அடர்ந்த காடு}, மஹாதேஜஸ்விகளிலும் {பேரொளியுடன் திகழ்பவர்களிலும்}, சஸ்திரந் தரிப்பவர்களிலுஞ் {ஆயுதம் தரிப்பவர்களிலும்} சிறந்தவர் {ராமர்} வசிப்பதால் நல்வினையுற்றது" {என்றான் பரதன்}[1].(13)

[1] கே.எம்.கே. மூர்த்தி பதிப்பில் 13ம் சுலோகத்துடன் இந்த சர்க்கம் நிறைவடைகிறது. பிற பதிப்புகளில் இன்னும் ஐந்து சுலோகங்கள் வருகின்றன. அவை பின்வருமாறு

மஹாதேஜஸ்வியும் {பெரும் வலிமைமிக்கவனும்}, மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, புருஷரிஷபனுமான {மனிதர்களில் காளையுமான} பரதன், இவ்வாறு சொல்லிவிட்டு, அந்த மஹத்தான வனத்திற்குள் பாதநடையாகவே பிரவேசித்தான்.(14) நாநயம் மிக்கவர்களில் சிறந்தவனான அவன், அந்த கிரியின் சாரல்களில் முற்றாக மலர்ந்திருக்கும் உச்சிகளைக் கொண்ட மரக்கூட்டங்களுக்கு மத்தியில் நடந்தான்.(15) சித்திர கூடத்தின் மேல், மலர்ந்திருக்கும் சால மரத்தை {ஆச்சா மரத்தை} அடைந்ததும், ராமாசிரமத்தின் அக்னியில் இருந்து உயர்ந்தெழும் துவஜத்தை {நெருப்பின் கொடியான புகையைக்} கண்டான்.(16) பந்துக்கள் {உறவினர்கள்} சகிதமாகச் சென்ற ஸ்ரீமான் பரதன் அதைக் கண்டதும், ராமன் அங்கே இருப்பதை அறிந்து, நீரைக் கடந்தவன் {மறுகரையை அடைந்தவனைப்} போல மகிழ்ச்சியடைந்தான்.(17) அந்த மஹாத்மா {பரதன்}, ராமாசிரமம் இருக்கும் சித்திரகூட கிரியில் புண்ணிய ஜனங்கள் வசிப்பதைக் கேட்டறிந்து, தொலைவில் முகாமிட்டிருக்கும் சம்முவிடம் {படையிடம்} மீண்டும் சென்று, குஹனுடன் துரிதமாகச் சென்றான்.(18)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 098ல் உள்ள சுலோகங்கள்: 18

Previous | Sanskrit | English | Next

Wednesday, 26 October 2022

பரதன் ஏற்ற உறுதி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 088 (30)

Bharata's vow | Ayodhya-Kanda-Sarga-088 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வருத்தமடைந்த பரதன்; ஓர் உறுதியை ஏற்றது...

Bharata seeing the grass bed where Rama slept with Guha

அவை அனைத்தையும் நன்றாகக் கேட்ட பரதன், தன் மந்திரிகளுடன் சேர்ந்து அந்த இங்குண மரத்தடியை அடைந்து, ராமனின் சயனத்தைக் கண்டான்.{1} அதன் பிறகு அவன் தன் அன்னையர் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னான், "இங்கே தான் அந்த மஹாத்மா {ராமர்}, தம் மேனி பூமியில் அழுந்தக் கிடந்திருக்கிறார்.(1,2) மஹாபாக்கியவானும், மதிமிக்கவருமான தசரதரின் பெருமைமிகு குலத்தைச் சேர்ந்த ராமர் வெறுந்தரையில் உறங்குவது தகுமோ?(3) மான் தோலால் மறைக்கப்பட்ட ஆடம்பர மெத்தைகளுடன் கூடிய மஞ்சங்களில் உறங்கும் அந்த புருஷவியாகரர் {மனிதர்களில் புலி}, வெறுந்தரையில் எவ்வாறு உறங்கினார்?(4) 

விமானங்களுக்கு ஒப்பானவையும், சிறந்த விரிப்புகளுடன் கூடியவையும், புஷ்பக்குவியல்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனம், அகில் ஆகியவற்றால் நறுமணமூட்டப்பட்டவையும், உயர்ந்த வெண் மேகங்களைப் போல் பிரகாசிப்பவையும், கிளிகளின் கீச்சுகளை எதிரொலிப்பவையும், சிறந்த அரண்மனைகளையும் விஞ்சியவையும், குளுமையானவையும், நறுமணமிக்கவையும், பொன்னால் சுவர்கள் அமைக்கப்பட்டவையும், மேருவுக்கு நிகரானவையுமான கூட கோபுர, மாட மாளிகைகயில் வசித்து, கீதங்களும், வாத்தியங்களும் முழங்க, சிறந்த ஆபரணங்களின் ஒலிகள் மேலெழ, மிருதங்கங்களின் இன்னொலி அதிலும் மேலெழ, ஸூத, மாகத, வந்திகள் பலரும் துதிபாட அந்த பரந்தபர் {பகைவரை அழிப்பவரான ராமர்} சரியான காலத்தில் எழுப்பப்படுவாரே.(5-9) 

இவ்வுலகில் இது நம்பமுடியாதது, எனக்கு சத்தியமாகவும் தோன்றவில்லை. என் மனம் உண்மையில் தடுமாறுகிறது. இஃது ஒரு ஸ்வப்னமாக {கனவாக} இருக்க நான் விரும்புகிறேன்.(10) தாசரதியான அந்த ராமரே வெறுந்தரையில் உறங்க வேண்டுமெனில் நிச்சயம் தைவதம் {தெய்வம்} காலத்தைவிடக் கொஞ்சமேனும் பலம்வாய்ந்ததில்லை.(11) 

விதேஹ ராஜனின் மகளும், காண்பதற்கு இனிமையானவளும், தசரதரின் பிரியத்திற்குரிய மருமகளுமான சீதையும் வெறுந்தரையில் உறங்க வேண்டி வந்ததே.(12) இஃது என்னுடன் பிறந்தவரின் சயனமே. கடுந்தரையில் அங்கங்களால் நசுக்கப்பட்ட இந்தக் குசப்புற்கள் அனைத்திலும் இதோ சுவடுகள் தெரிகின்றன.(13) ஆங்காங்கே கனக {தங்கத்} துகள்கள் சிக்கியிருப்பது தென்படுகின்றன. உத்தமியான சீதை தன் ஆபரணங்களுடன் இந்த சயனத்தில் உறங்கியிருப்பாள் என நான் நினைக்கிறேன்.(14) அப்போது சீதையின் மேலாடை இங்கே சிக்கியிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவேதான் ஒளிரும் இந்த பட்டு இழைகள் இங்கே தென்படுகின்றன.(15) பர்த்தாவின் சயனமே சதிக்கு {கணவனின் படுக்கையே மனைவிக்கு} சுகமானது. சிறுமியும், சுகுமாரியும் {மென்மையானவளும்}, பரிதாபத்திற்குரியவளுமான அந்த மைதிலி துக்கத்தை உணர்ந்திருக்க மாட்டாள்.(16)

என்னால்தான் ராகவர் தன் பாரியையுடன் இத்தகைய சயனத்தில் அநாதையைப் போலக் கிடந்தார். ஹா, ஐயோ, நான் கொடூரன்[1].(17) பேரரசர்களின் குலத்தில் பிறந்தவரும், சர்வலோகத்திற்கும் சுகம் தருபவரும், சர்வலோகத்தின் பிரியத்திற்குரியவரும், கருநெய்தல் போன்ற கரிய நிறத்தையும், சிவந்த கண்களைக் கொண்டவரும், காண்பதற்கு இனியவரும், சுகத்திற்கே தகுந்தவரும், துக்கத்திற்குத் தகாதவருமான ராகவர், உத்தம ராஜ்ஜியத்தையும், சுகத்தையும் துறந்து எவ்வாறு வெறுந்தரையில் உறங்கினார்?(18,19)

[1] இயன்றது என் பொருட்டினால் இவ்விடர் உனக்கு என்ற போழ்தும்
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில்
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே

- கம்பராமாயணம் 2342ம் பாடல்

பொருள்: இந்த இடர் உனக்கு என்னால் உண்டானது என்ற போதும், கிழங்கும், காயும் அமுதம் போல உண்டாய் எனவும், உறங்க இயலாத புற்படுக்கையில் உறங்கினாய் எனவும் அறிந்தாலும் நான் உயிரை விட்டேனில்லை. சுடரும் பொன்னால் செய்யப்பட்ட உயர்ந்த மகுடத்தை நான் சூடிக் கொள்வேன் போலும்.

சுபலக்ஷணங்களுடன் கூடிய லக்ஷ்மணன், தன்னுடன் பிறந்த ராமருடன் இக்கட்டான காலத்தில் சென்றான். அவனே பாக்கியவான். அவனே அதிர்ஷ்டசாலி.(20) பதியுடன் வனம் சென்ற வைதேஹியும் நிறைவடைந்தவளே. அந்த மஹாத்மாவுடன் இல்லாத நாம் அனைவரும் {அவரை அடைவோமா? மாட்டோமா? என்று} சந்தேகத்தில் அல்லாடுகிறோம்.(21) தசரதர் ஸ்வர்க்கத்தை அடைந்தார். இராமர் அரண்யத்தில் தஞ்சமடைந்தார். இந்தப் பிருத்வி மாலுமியற்ற ஓடத்தைப் போல எனக்குத் தெரிகிறது.(22) அவர் வனத்தில் வசித்தாலும், அவரது பாகுவீரியத்தால் {கைவலிமையால்} ரக்ஷிக்கப்பட்ட {பாதுகாக்கப்பட்ட} இந்த வசுந்தரையை {பூமியை} எவரும் மனத்தினாலும் வேண்டுவதில்லை.(23) ரக்ஷகர்கள் {காவலர்கள்} இல்லாத சூனிய மதில்களுடனும், கட்டுப்பாடற்ற ஹய துவிபங்களுடனும் {குதிரைகளுடனும், யானைகளுடனும்}, ரக்ஷிப்போரின்றி திறந்து கிடக்கும் நகர வாயில்களுடனும், மகிழ்ச்சியற்ற படைகளுடனும், வெறுமையாகவும், சீரற்ற முறையிலும் கிடக்கும் அந்த ராஜதானியை {தலைநகரான அயோத்தியை} நஞ்சுமிக்க உணவைப் போல சத்ருக்கள் விரும்புவதில்லை {கைப்பற்ற நினைக்கவில்லை}.(24,25)

இன்று முதல் நான் ஜடாமுடியும், மரவுரியும் தரித்துக் கொண்டு, பழங்களையும், கிழங்குகளையும் நித்தியம் உண்டு, வெறுந்தரையிலோ, புல்லின் மீதோ படுத்துக் கொள்வேன்.(26) அவரது உறுதிமொழியை வீணாக்காமல் நிறைவேற்ற, அவருக்காக {அவருக்குப் பதிலாக} எஞ்சிய காலமும் வனத்தில் சுகமாக வசித்திருப்பேன்.(27) சத்ருக்னனும், உடன் பிறந்தவருக்காக வசிக்கும் என்னுடன் இருப்பான். அந்த ஆரியர் {ராமர்}, லக்ஷ்மணனுடன் அயோத்தியைப் பரிபாலிப்பார்.(28)

இருபிறப்பாளர்கள் அந்தக் காகுத்ஸ்தரை {ராமரை} அயோத்தியில் அபிஷேகம் செய்விப்பார்கள். தேவர்கள் என்னுடைய இந்த மனோரதத்தை சத்தியமாக்குவார்கள்.(29) சிரந்தாழ்ந்து பலவகைகளில் நான் முன்வைக்கும் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், அவர் வனத்தில் திரியும் காலம் வரை, நானும் அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பேன். இஃது அவர் அலட்சியம் செய்யத் தகாதது" {என்றான் பரதன்}.(30)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 088ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next

Monday, 24 October 2022

செவ்வழி உள்ளத்து அண்ணல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 087 (24)

Master, whose mind set on right path | Ayodhya-Kanda-Sarga-087 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மயங்கி விழுந்த பரதன்; இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் எவ்வாறு தங்கள் நேரத்தைக் கடத்தினர் என்பதை பரதனிடம் சொன்ன குகன்...

Guha showing the place where Rama slept to Bharata

பரதன், கேட்பதற்கு மிகவும் பிரியமற்ற குஹனின் சொற்களைக் கேட்டு, எங்கே அந்த பிரியமற்ற சொற்கள் கேட்கப்பட்டனவோ அங்கேயே தன் மனத்தைக் குவித்து தியானம் செய்தான் {சிந்தித்தான்}.(1) சுகுமாரனும் {மென்மையானவனும்}, பெரும் வலிமை கொண்டவனும், பெருங்கைகளைக் கொண்டவனும், சிங்கத்திற்கு ஒப்பான தோள்களைக் கொண்டவனும், மலர்ந்த தாமரையைப் போன்ற நீண்ட விழிகளைக் கொண்டவனும், அழகிய தோற்றத்தைக் கொண்டவனுமான அந்த இளைஞன் {பரதன்},(2) பெருந்துயரில் ஒரு முஹூர்த்த காலம் பெருமூச்சுவிட்டபடியே இருந்து, தோமரங்களால் {அங்குசங்களால் / மாவெட்டிகளால்} நெஞ்சில் குத்தப்பட்ட துவிபத்தை {யானையைப்} போல சட்டெனத் தரையில் விழுந்தான்.(3) பரதன் மூர்ச்சித்ததைக் கண்ட குஹன், வதன நிறம் குன்றியவனாக {முகம் வெளுத்தவனாக}, நிலநடுக்கத்தில் ஒரு மரம் நடுங்குவதைப் போல அங்கே நடுங்கிக் கொண்டிருந்தான்[1].(4) அருகில் இருந்த சத்ருக்னன், அந்நிலையில் கிடக்கும் பரதனை ஆரத் தழுவிக் கொண்டு, சோகத்தில் மூழ்கிப் புலனுணர்வை இழந்து {மெய்மறந்து} உரக்க அழுதான்.(5)

[1] ஒரு சில பதிப்புகளில் இந்த சுலோகம் விடுபட்டிருக்கிறது.

பர்த்தாவின் {கணவன் தசரதனின்} சோகமுடிவில் ஆறுதலடையாமல் தீனமடைந்தவர்களும், உண்ணாமல் மெலிந்தவர்களுமான பரதனின் மாதாக்கள் அனைவரும் {அவனை நோக்கி} விரைந்து வந்தனர்.(6) அழுதவாறே இருந்த அவர்கள் அனைவரும் தரையில் விழுந்து கிடந்த பரதனைச் சூழ்ந்து கொண்டனர். சோக மனத்துடன் கூடிய கௌசல்யை, குனிந்து அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.(7) சோகத்தால் கலக்கமடைந்தவளும், பரிதாபத்திற்குரியவளுமான அந்த வத்சலை {பாசமுள்ள கௌசல்யை, பசுவானது}, தன் கன்றை அணைத்துக் கொள்வதைப் போல மார்போடு அணைத்துக் கொண்டு {பின்வருமாறு} பரதனைக் கேட்டாள்:(8) "புத்திரா, உன் சரீரத்தை வியாதிகள் ஏதும் பீடிக்கவில்லை என நான் நம்புகிறேன். இனி இந்த ராஜகுலத்தின் ஜீவிதம் உன் ஆதீனமே {இந்த ராஜகுலம் தழைப்பது உன்னைச் சார்ந்ததே}.(9) புத்திரா, ராமன் தன்னுடன் பிறந்தானுடன் {வனம்} சென்றுவிட்டான். ராஜா தசரதரும் இறந்துவிட்டார். உன்னைப் பார்த்தே நான் ஜீவித்து வருகிறேன். இப்போது நீயே எங்கள் நாதனாக {தலைவனாக / காவலனாக} இருக்கிறாய்.(10) புத்திரா, லக்ஷ்மணனையோ, தன் பாரியையுடன் {சீதையுடன்} வனம் சென்ற என் ஏக புத்திரனையோ {ராமனையோ} குறித்து பிரியமற்ற செய்தி எதையும் நீ கேட்கவில்லை என நம்புகிறேன்" {என்று கேட்டாள்}.(11)

பெரும்புகழ்மிக்கவனான அவன் {பரதன்}, ஒரு முஹூர்த்த காலம் ஓய்ந்த பிறகு, அழுது கொண்டிருந்த கௌசல்யையைத் தேற்றிவிட்டு, குஹனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(12) "குஹனே, என்னுடன் பிறந்தவரும் {ராமரும்}, சீதையும், லக்ஷ்மணனும் ராத்திரியை எங்கே கழித்தனர்? என்ன உண்டனர்? எந்த சயனத்தில் கிடந்தனர்? என்பனவற்றை எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டான்}[2].(13)

[2] அவ்வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன
செவ்வழி உள்ளத்து அண்ணல் தென்திசைச் செங் கை கூப்பி
எவ்வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன்
இவ்வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான்.

- கம்பராமாயணம் 2340ம் பாடல்

பொருள்: அவ்வாறே அவனை {குகனை} நோக்கி, அருள் தரும் கடலுக்கு ஒப்பானவனும், நேர் வழியில் செல்லும் உள்ளம் கொண்டவனுமான {பரதன்}, தென் திசையைப் பார்த்து தன் சிவந்த கைகளைக் கூப்பி, "நம் அண்ணன் எங்கே தங்கினான்?" என்றதும், வேடர் வேந்தனான குகன், "இங்கேதான். வீரனே, நானே காட்டுவேன். எழுக" என்றான்.

நிஷாதாதிபதியான அந்த குஹன், தனக்குப் பிரியனும், ஹிதனும், அதிதியுமான {அன்பனும், நண்பனும், விருந்தினனுமான} ராமனுக்கு எவ்விதமான ஏற்பாடுகளைச் செய்தான் என்பதைப் பரதனிடம் மகிழ்ச்சியுடன் சொன்னான்:(14) "உண்பதற்கான பல வகைகளிலான அன்னங்களையும், பக்ஷணங்களையும், விதவிதமான பழங்களையும் ராமனிடம் ஏராளமாகக் கொண்டு வந்தேன்.(15) சத்தியபராக்கிரமனான ராமன் அவை அனைத்தையும் மறுத்தான். அவன் க்ஷத்ர தர்மத்தை நினைத்தே அவற்றை ஏற்கவில்லை.(16) ராஜாவே, அந்த மஹாத்மா {ராமன்}, "சகாவே, நாங்கள் எப்போதும் கொடுக்கவே வேண்டும்; எதையும் ஏற்கக்கூடாது" என்று சொல்லி, எங்களைத் தணித்தான்.(17) பெரும்புகழ்மிக்கவனான அந்த ராகவன் {ராமன்}, லக்ஷ்மணன் கொண்டு வந்த நீரை, சீதையுடன் சேர்ந்து பருகி உபவாசம் இருந்தான்.(18) பிறகு எஞ்சிய ஜலத்தை அந்நேரத்தில் லக்ஷ்மணன் பருகினான். அவர்கள் மூவரும் வாக்கு நியமத்துடன் {பேசாமல் இருந்து} மாலை சந்தியை வழிபட்டனர்.(19)

பிறகு சௌமித்ரி {லக்ஷ்மணன்}, தானே சென்று குச {தர்ப்பைப்} புற்களைக் கொண்டு வந்து, ஒரு சுபமான படுக்கையை அந்த ராகவனுக்காக சீக்கிரம் ஏற்பாடு செய்தான்.(20) இராமனும், சீதையும் அந்தப் படுக்கையில் அமர்ந்தனர். இலக்ஷ்மணன் அவர்களின் பாதங்களைக் கழுவிவிட்டுத் தொலைவாக நகர்ந்து சென்றான்.(21) இதோ இந்த இங்குண மரத்தின் அடியில், இந்தப் புல்லில்தான் அந்த ராத்திரியில் ராமனும், சீதையும் சயனித்திருந்தனர்.(22) பகைவரை தஹிக்கச் செய்பவனான லக்ஷ்மணன், விரல்களுக்குத் தோலுறை அணிந்து கொண்டும், சரங்கள் சம்பூர்ணமான அம்பறாதூணிகள் இரண்டை முதுகில் கட்டிக்கொண்டும், நாணேற்றப்பட்ட மஹத்தான தனுவைத் தரித்துக் கொண்டும் அவ்விரவில் அவனை {ராமனைச்} சுற்றித் தனியாக நடந்து கொண்டிருந்தான் {ராமனைக் காத்து நின்றான்}.(23) உத்தம பாணங்களையும், வில்லையும் தரித்துக் கொண்ட நான் அந்நேரத்தில், களைப்பில் இருந்து விடுபட்டவர்களும், விற்களைத் தரித்தவர்களுமான என் ஞாதிகளுடன் {உறவினர்களுடன்} சேர்ந்து, மகேந்திரனைக் காப்பது போல் {ராமனைக் காத்து} நின்ற லக்ஷ்மணன் இருந்த இடத்தில் நிலைத்தேன்" {என்றான் குஹன்}.(24)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 087ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Saturday, 22 October 2022

நயனம் இமைப்பிலன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 086 (25)

He did not blink his eyes | Ayodhya-Kanda-Sarga-086 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனுடன் இரவில் பேசியதையும், சீதையுடன் ராமலக்ஷ்மணர்கள் ஆற்றைக் கடந்தையும் பரதனிடம் நினைவுகூர்ந்த குஹன்...

Rama and Lakshmana matted their hair with the latex of a banyan tree

அதன்பின்னர், கஹனகோசரனான {காட்டில் திரிபவனான} குஹன், அளவிடற்கரிய மகிமை பொருந்திய பரதனிடம், மஹாத்மாவான லக்ஷ்மணனின் நற்குணங்களைக் குறித்து {பின்வருமாறு} சொன்னான்[1]:(1) "நற்குணங்களைக் கொண்டவனும், சரங்களையும், வில்லையும், வாளையும் ஏந்தியவனும், தன்னுடன் பிறந்தவனின் பாதுகாப்பிற்காக அதிக விழிப்புடன் இருந்தவனுமான அந்த லக்ஷ்மணனிடம், நான் {பின்வருமாறு} பேசினேன்:(2) "தாதா {ஐயா}, ராகவநந்தனா, இதோ உனக்காக சுகமான சயனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நிம்மதியாகவும், சுகமாகவும் இதில் நீ ஓய்ந்திருப்பாயாக.(3) தர்மாத்மாவே,  இந்த ஜனங்கள் அனைவரும் துக்கங்களுக்குப் பழக்கப்பட்டவர்கள். நீயோ சுகத்திற்குப் பழக்கப்பட்டவன். இவனை {ராமனைப்} பாதுகாப்பதற்காக நாங்கள் விழிப்புடன் இருப்போம்.(4) 

[1] அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து உயிர்ப்போடும் வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்

- கம்பராமாயணம் 2344ம் பாடல்

பொருள்: "மலையை அடக்கும் உயர்ந்த தோள்களைக் கொண்டவனே {பரதா}, இருளை அடக்கி அமைந்த மேனி அழகனும் {கரிய ராமனும்}, அவளும் {சீதையும்} உறங்க, அந்த வீரன் {லக்ஷ்மணன்}, வில்லை ஊன்றிய கையோடும், வெப்பப் பெருமூச்சுடனும், கண்கள் நீர் சொரிய, இரவின் எல்லையைக் காணுமளவும் கண்களை இமைக்காமல் இருந்தான்" என்றான் {குகன்}.

இப்புவியில் ராமனைவிட எனக்குப் பிரியமானவன் வேறு எவனுமில்லை. மேலும் நீ நிம்மதியிழக்க வேண்டாம். உன் முன்னிலையில் நான் இந்த சத்திய வாக்கியத்தைச் சொல்கிறேன்.(5) இப்புவியில் மஹத்தான புகழையும், பெருந்தர்மத்தையும், கலப்பில்லா அர்த்தத்தையும் {செல்வத்தையும்}, காமத்தையும் {இன்பத்தையும்} இவனது {ராமனின்} அருளால் நான் அடைய விரும்புகிறேன்.(6) சீதையுடன் சயனங் கொண்டிருக்கும் பிரியசகாவான ராமனை என் ஞாதிகளுடனும் {உறவினர்களுடனும்}, கையில் தனுசுடனும் {வில்லுடனும்} நான் காப்பேன்.(7) சதா வனத்தில் திரியும் எனக்குத் தெரியாதது ஏதுமில்லை. யுத்தத்தில் சதுரங்க பலத்தையும் {நால்வகை படைகளையும்} பொறுத்து எதிர்க்க எங்களால் முடியும்" {என்றேன்}.(8)

நாங்கள் இவ்வாறு சொன்னதும், தர்மத்தை மட்டுமே உணரும் மஹாத்மாவான லக்ஷ்மணன், நீதியை அனுசரித்து எங்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} பேசினான்:(9) "தாசரதர் {ராமர்}, சீதையுடன் பூமியில் சயனித்திருக்கையில், நித்திரையையோ {உறக்கத்தையோ}, ஜீவிதத்தையோ {வாழ்வையோ}, சுகங்களையோ என்னால் எவ்வாறு பெற முடியும்?(10) குஹனே, தேவாசுரர்கள் அனைவராலும் சகித்துக் கொள்ள முடியாதவர் எவரோ, அவர் சீதையுடன் புல்லில் கிடப்பதைப் பார்.(11) இவர், விதவிதமான பரிசிரமங்களை எதிர்கொண்டு மஹத்தான தபசு செய்த தசரதருக்கு ஒப்பான லக்ஷணங்களுடன் பெறப்பட்ட ஏகபுத்திரர் ஆவார்.(12) இவர் நாடு கடத்தப்பட்டதால் அந்த ராஜா {தசரதர்} நீண்ட காலம் பிழைத்திருக்க மாட்டார். விரைவில் நிச்சயம் இந்த மேதினி  விதவையாகப் போகிறாள்.(13) பேரொலியுடன் அலறிய ஸ்திரீகள் களைத்துப் போய் அழுவதை நிறுத்தியிருப்பார்கள். இப்போது அந்த ராஜநிவேசனம் நிச்சயம் நிர்கோஷமாகவே {ஒலியின்றியே} கிடக்கும்.(14) 

கௌசல்யை, ராஜா {தசரதர்}, என்னைப் பெற்றவள் {சுமித்திரை} ஆகியோர் அனைவரும் இவ்விரவில் பிழைத்திருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.(15) சத்ருக்னனைப் பார்த்துக்கொண்டாவது என் மாதா {சுமித்திரை} ஜீவித்திருக்கலாம். ஆனால் இந்த வீரரைப் பெற்றவளான கௌசல்யை துக்கத்தால் மாண்டிருப்பாள்.(16) விஞ்சியது விஞ்சியும், ராஜ்ஜியத்தில் ராமனை நிறுவாமல், தன் மனோரதம் நிறைவேறாமலேயே என் பிதா அழியப் போகிறார்.(17) பூமிபதியான எங்கள் பிதா {தந்தை தசரதர்} இறக்கும்போது, சர்வ பிரேத காரியங்களையும் {ஈமச் சடங்குகள் அனைத்தையும்} அந்தந்த காலத்தில் சரியாகச் செய்பவர்களே சித்தார்த்தர்கள் {பரதனும், சத்ருக்னனுமே கொடுத்துவைத்தவர்கள்}.(18) 

ரம்மியமான நாற்சந்திகளுடன் கூடியதும், நன்கு பிரிக்கப்பட்ட மஹாபாதைகளை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதும், சர்வ ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மாடமாளிகைகள் நிறைந்ததும்,{19} கஜங்களும், அஷ்வங்களும், ரதங்களும் {யானைகளும், குதிரைகளும், தேர்களும் நெருக்கமாக} அடர்ந்திருப்பதும், இசைக் கருவிகளின் முழக்கங்களை எதிரொலிப்பதும், மங்கலங்கள் அனைத்தும் சம்பூர்ணமாக நிறைந்திருப்பதும், மகிழ்ச்சியான புஷ்டியான ஜன குலங்களை {மக்கள் கூட்டத்தைக்} கொண்டதும்,{20} உத்யானவனங்களாலும், தோட்டங்களாலும் சூழப்பட்டதும், சமூக உற்சவங்களால் {விழாக்களால்} பிரகாசிப்பதுமான என் பிதாவின் ராஜதானியில் {தலைநகரான அயோத்தியில்} அவர்கள் {பரதனும், சத்ருக்னனும்} மகிழ்ச்சியாக வசிக்கட்டும்.(19-21) வனவாசம் நிறைவடைந்ததும், சத்தியப்ரதிஜ்ஞையில் உறுதியாக இருக்கும் இவருடன் {ராமருடன்} நாங்கள் நலமாக அயோத்திக்குள் பிரவேசிப்போமா?" {என்றான் லக்ஷ்மணன்}[2].(22)

[2] இந்த சர்க்கத்தின் 3ம் சுலோகம் முதல் இந்த 22ம் சுலோகம் வரை தானும், லக்ஷ்மணன் பேசியதாக குஹன் சொல்லும் செய்திகள், அயோத்தியா காண்டம் 51ம் சர்க்கம் 2 முதல் 25ம் சுலோகம் வரையுள்ள பகுதியில் ஏற்கனவே நேரடியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே சொன்னவற்றில் சில இங்கே விடுபட்டிருக்கின்றன. 

மஹாத்மாவான அந்த ராஜபுத்திரன் {இளவரசனான லக்ஷ்மணன்}, இவ்வாறு புலம்பித் தவித்து நின்றபோதே அந்த இரவும் கழிந்தது.(23) விமலனான {மாசற்றவனான} சூரியன் உதித்ததும், அங்கே {கங்கைக்கரையில்} தங்கள் தலைமுடியை ஜடைகளாக்கிய அவர்கள் இருவரையும் {ராமனையும், லக்ஷ்மணனையும்}  நான் சுகமாக கரையைக் கடக்கச் செய்தேன்.(24) மஹாபலம் கொண்டவர்களும், ஜடாதாரிகளும், மரவுரி உடுத்தியவர்களும், வில்லும், கணைகளும், வாளும் ஏந்தியவர்களுமான அந்தப் பரந்தபர்கள் {பகைவரை அழிப்பவர்களான அவர்கள்} இருவரும், யானைக்கூட்டத்தின் தலைவர்களைப் போல் என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சீதையுடன் சென்றனர்" {என்றான் குஹன்}.(25)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 086ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Friday, 21 October 2022

ஏழை எயினன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 085 (22)

Poor hunter | Ayodhya-Kanda-Sarga-085 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரத்வாஜர் ஆசிரமத்திற்குச் செல்லும் வழியை விசாரித்த பரதன்; பரதனின் நோக்கம் குறித்து விசாரித்த குகன்; இராமனைத் திருப்பி அழைத்து வரும் தன் விருப்பத்தை வெளியிட்ட பரதன்; அழுது கொண்டிருந்த பரதனைத் தேற்றிய குகன்...

Sathrugna Sumantra Bharata and Guha

பெரும் நுண்ணறிவுமிக்கவனான பரதன், இவ்வாறு சொல்லப்பட்டதைக் கேட்டு, காரண, காரியங்கள் அடங்கிய வாக்கியத்தில் இவ்வாறு நிஷாதாதிபதியான குஹனிடம் மறுமொழி கூறினான்:(1) "என் குருவின் சகாவே {அண்ணனின் தோழனே}, தனியொருவனாக இத்தனை பெரிய சேனைக்கு விருந்தோம்பல் செய்ய விரும்பும் உன் ஆசை உண்மையில்  பெரியது" {என்றான்}.(2)

ஸ்ரீமானும், மஹாதேஜஸ்வியுமான பரதன், குஹனிடம் இந்த உத்தம சொற்களைச் சொல்லிவிட்டு, மீண்டும் அந்த நிஷாதாதிபதியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(3) "குஹனே, பரத்வாஜர் ஆசிரமத்திற்கு எவ்வழியாகச் செல்ல வேண்டும்? தனித்துவமான இவ்விடம் கங்கையின் ஆழத்தால் கடக்க முடியாததாக இருக்கிறது" {என்றான் பரதன்}.(4)

கஹனகோசரனான {காட்டில் திரிபவனான} குஹன், மதிமிக்கவனான ராஜபுத்திரனின் இந்தச் சொற்களைக் கேட்டுக் கூப்பிய கைகளுடன் {இந்த} வாக்கியங்களைச் சொன்னான்:(5) "புகழ்மிக்க ராஜபுத்திரா, தன்விகளான செம்படவர்கள் மிக கவனமாக உன்னைப் பின்தொடர்வார்கள். நானும் உன்னைப் பின்தொடர்ந்து வருவேன்.(6) ஆனாயாசமாகச் செயல்புரியும் ராமனிடம் உனக்கு துஷ்டமில்லை {பொல்லாமை / தீய எண்ணம் ஏதுமில்லை} என நம்புகிறேன். உன்னுடைய இந்த மகத்தான சேனை என்னுள் சந்தேகத்தை எழுப்புகிறது" {என்று கேட்டான் குஹன்}.(7)

ஆகாசத்தைப் போன்று நிர்மலனான {மாசற்றவனான} பரதன், இவ்வாறு பேசிய குஹனுக்கு மெல்லிய குரலில் {பின்வருமாறு} பதிலளித்தான்:(8) "இத்தகைய கஷ்ட காலம் நேரக்கூடாது. நீ என்னை சந்தேகிப்பது ஒருபோதும் தகாது. என் அண்ணனான அந்த ராகவர், என் பிதாவுக்கு சமமாக என்னால் மதிக்கப்படுபவர்.(9) வனவாசம் செய்யும் அந்தக் காகுத்ஸ்தரை திருப்பி அழைத்து வரவே செல்கிறேன். குஹனே, உனக்கு வேறு எண்ணம் வேண்டாம். உன்னிடம் சத்தியத்தை {உண்மையைச்} சொல்கிறேன்" {என்றான் பரதன்}.(10)

பரதனின் சொற்களைக் கேட்டவன் {குஹன்}, மகிழ்ச்சி மிக்க வதனத்துடன் கூடியவனாக மீண்டும் {பின்வருமாறு} பரதனிடம் பேசினான்:(11) "நீ தன்யன் {பாக்கியம் செய்தவன்}. முயற்சியின்றி கிடைத்த ராஜ்ஜியத்தைத் துறக்க விரும்பும் உனக்கு நிகரான எவரையும் பூமியில் நான் கண்டதில்லை.(12) சிரமத்துடன் சென்ற ராமனைத் திருப்பியழைத்து வர நீ விரும்புவதால், உன் கீர்த்தி என்றென்றும் உலகில் சாஸ்வதமாக {நிலைத்து} இருக்கும்" {என்றான் குஹன்}[1].(13)

[1] என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்
மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்களெல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்

- கம்பராமாயணம் 2338ம் பாடல்

பொருள்: உயர்ந்த குணங்களைக் கொண்டவனே, வலிமையான தோள்களைக் கொண்டவனே, அறிவில்லாத வேடனான நான் உன்னை எவ்வாறு புகழ்வேன்? சூரியன் என்று சொல்லப்படும் புகழெனும் ஒளித்தொகுதி, மற்ற கோள்களின் ஒளிகளை அடக்கி ஒளிர்வதைப் போல, பிற மன்னர்களாலும் புகழப்படும் பெருமையுடைய உங்கள் வம்சத்து மன்னர்களின் புகழ் அனைத்தையும் நீ உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்.

இவ்வாறு பரதனிடம் குஹன் பேசிக் கொண்டிருந்தபோது சூரியனின் ஒளி மங்கிப் பொலிவிழந்து, இரவும் வந்தது.(14) அந்த ஸ்ரீமான் {பரதன்}, தன் சேனையை முகாமிடச் செய்து, குஹனால் மகிழ்ச்சியடைந்தவனாக முகாமுக்குத் திரும்பி சத்ருக்னனுடன் சயனத்தை அடைந்தான்.(15) தர்மத்தைச் செய்வதையே நோக்கமாகக் கொண்டவனும், துயரடையத் தகாதவனும், மஹாத்மாவுமான அந்த பரதன், ராமனை சிந்தித்தபடியே சோகமடைந்தான்.(16) 

வனமே எரிந்து கொண்டிருக்கும்போது பொந்தில் மறைந்திருந்து மரத்தை தகிக்கச் செய்யும் அக்னியைப் போல அந்த ராகவனின் {பரதனின்} சந்தாப நெருப்பும் {அவனது இதயத்திற்கு} உள்ளே எரிந்து கொண்டிருந்தது.(17) ஹிமவானில் {இமய மலையில்} இருந்து சூரிய வெப்பத்தால் உருகி வழியும் பனியைப் போல, அந்த சோகாக்னியில் உண்டான வியர்வை, அவனது அங்கங்கள் அனைத்திலிருந்தும் வழிந்தது.(18) 

{இராமனையே நினைக்கும்} தியானமெனும் குகைகளையும், கல்தரைகளையும், பெருமூச்செனும் தாதுக்களையும், மனத்தளர்ச்சியெனும் மரக்கூட்டங்களையும், சோகத்தால் உண்டாகும் உடற்தளர்ச்சியெனும் சிகரங்களையும்,(19) கலக்கமெனும் எண்ணற்ற பிராணிகளையும், சந்தாபமெனும் {துன்பமெனும்} செடிகொடிகளையும், மூங்கில்களையும் கொண்ட மஹத்தான துக்க சைலத்தால் {துயர மலையால்} அந்தக் கைகேயிசுதன் {பரதன்} அழுத்தப்பட்டான்.(20) 

அப்போது அந்த நரரிஷபன் {மனிதர்களிற் காளையான பரதன்}, பரமதுக்கத்தை அடைந்ததன் விளைவால் முற்றிலும் மனங்குழம்பியும், ஹிருதய ஜ்வரத்தால் {இதயப் பிணியால்} பீடிக்கப்பட்டும், அதிக கவலையினால் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மந்தையில் இருந்து தவறிய ரிஷபத்தை {காளையைப்} போல அமைதியற்றிருந்தான்.(21) அதன்பிறகு, மஹானுபவனான பரதன், தன் ஜனங்களுடன் கூடியவனாக, அதே மனநிலையில் இருந்த குஹனை அடைந்தான். அப்போது குஹன், மீண்டும் பரதனிடம் அவனது அண்ணனைக் குறித்துச் சொல்லி ஆறுதல் கூறினான்.(22)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 085ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Thursday, 20 October 2022

தோழமை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 084 (18)

Companionship | Ayodhya-Kanda-Sarga-084 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரதனின் படை வருவதைக் கண்ட குஹன்; பரதனின் நோக்கத்தை அறிய விரும்பியது; விருந்தோம்பல் செய்த குஹன்...

Guha offering fish meat and honey to Bharata

கங்கா நதியின் ஓரம் முகாமிட்டிருக்கும் கொடிபடைகளைக் கண்ட நிஷாதராஜன் {குஹன்}, விரைவாகத் தன் ஞாதிகளிடம் {உறவினர்களிடம், பின்வருமாறு} பேசினான்:(1) "இதோ சாகரத்தைப் போன்ற இந்தப் பெருஞ்சேனையின் எல்லையை மனத்தில் எண்ணிப் பார்த்தாலும் காண முடியவில்லை.(2) அதோ அந்த ரதத்தில் கோவிதாரத்வஜம் {சீமை அத்தி / மாதுளை மரச் சின்னம் பொறித்த கொடி} நெடிதுயர்ந்திருக்கிறது. துர்ப்புத்தியுடன் கூடிய பரதனே வந்திருப்பது போலத் தெரிகிறது.(3) கைகேயி புத்திரனான பரதன், செம்படவர்களான நம்மை சிறைப்பிடிப்பானோ? கொல்வானோ? அல்லது அடைவதற்கரிய வசதிகளையும், செழிப்பையும் நாடும் அவன் {பரதன்}, தன் பிதாவால் ராஜ்ஜியத்தில் இருந்து விரட்டப்பட்ட தாசரதி {தசரதன் மகன்} ராமனைக் கொல்லத்தான் வந்திருக்கிறானோ?(4,5) 

தாசரதி ராமன் என் தலைவனும், சகாவுமாவான். அவனது நன்மையில் விருப்பத்துடன் சன்னதர்களாக {ஆயுதம் ஏந்தியவர்களாக} இந்த கங்கையின் ஓரத்தில் நிலைத்திருப்பீராக.(6) நதிரக்ஷர்களான {ஆற்றைக் காப்பவர்களான} செம்படவர்கள் அனைவரும், துருப்புகளுடன் சேர்ந்து, மாமிசங்கள், கிழங்குகள், பழங்களை உண்டவாறே கங்கா நதியின் அருகில் நிலைத்திருக்கட்டும்.(7) பஞ்சசத நாவங்கள் {ஐநூறு படகுகள்} ஒவ்வொன்றிலும் நூறு கைவர்த்தன {செம்படவ} இளைஞர்கள் சன்னதர்களாக {ஆயுதம் ஏந்தியவர்களாக} நிலைத்திருக்கட்டும்" {என்று சொன்ன குஹன், பின்வரும்} இதையும் அறிவித்தான்:(8) "இங்கே பரதன் ராமனிடம் துஷ்டம் இல்லாதிருக்கிறான் {கெட்ட எண்ணம் இல்லாதிருக்கிறான்} என்று தெரிந்தால் மட்டுமே இந்த சேனை இன்று பாதுகாப்பாக கங்கையைக் கடக்க வேண்டும்" {என்றான் குஹன்}[1].(9)

[1] ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ

- கம்பராமாயணம் 2317ம் பாடல்

பொருள்: ஆழமானதும், நீண்ட பெரிய அலைகளைக் கொண்டதுமான இந்த ஆற்றை இவர்கள் கடந்து போய்விடுவார்களா? யானைகளுடன் கூடிய நீண்ட படையைக் கண்டு நானும் விலகிச் செல்லும் வில்லாளோ? தோழமை என்று அவர் {ராமன்} சொல்லிய சொல் ஒப்பற்ற சொல் அல்லவா? {இவர்களைப் போகவிட்டால்} "அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே" என்று என்னை யாவரும் ஏச மாட்டார்களா?

நிஷாதிபதியான குஹன், இவ்வாறு சொல்லிவிட்டு, மத்ஸ்ய மாமிசத்தையும் {மீன் இறைச்சியையும்}, தேனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு பரதனை அணுகினான்.(10) அப்போது, பிரதாபவானும், வினயமறிந்தவனுமான சூதபுத்திரன் {சுமந்திரன்} அவன் வருவதைக் கண்டு, பரதனிடம் பணிவுடன் {பின்வருமாறு} சொன்னான்:(11) "ஆயிரம் ஞாதிபரிவாரத்தால் {உறவினர்களால்} சூழப்பட்ட இந்த ஸ்தபதி {தலைவன் குஹன்}, தண்டகாரண்யத்தை நன்கறிந்தவனாவான். இந்த விருத்தன் {முதியவன் / பெரியவன்}, உன்னுடன் பிறந்தானின் {ராமனின்} சகாவுமாவான்.(12) எனவே, காகுத்ஸ்தா {பரதா}, நிஷாதிபனான குஹன் உன்னைக் காணட்டும். இராமலக்ஷ்மணர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதை இவன் சந்தேகமின்றி அறிவான்" {என்றான் சுமந்திரன்}.(13)

சுமந்திரனின் இந்த சுபச் சொற்களைக் கேட்ட பரதன், "சீக்கிரமாகக் குஹன் என்னைப் பார்க்கட்டும்" என்ற சொற்களைச் சொன்னான்.(14)

அனுமதி கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த குஹன், தன் ஞாதிகளால் சூழப்பட்டவனாகப் பணிவுடன் பரதனை அணுகி, இந்தச் சொற்களைச் சொன்னான்:(15) "இந்த தேசம் {இடம்}, உன் மாளிகையின் புறக்கடைத் தோட்டமாகும். நாங்கள் அனைவரும் உன் தொண்டர்களாவோம். நீ இந்த தாசனின் வீட்டில் வசிக்க வேண்டுமென வேண்டுகிறோம்.(16) நிஷாதர்களால் திரட்டப்பட்ட கிழங்குகளும், பழங்களும், காய்ந்தவையும், பச்சையாக இருப்பவையுமான தரமான மாமிசங்களும், வனத்தில் விளைபவை பிறவும் இங்கே இருக்கின்றன.(17) இந்த சேனை இவற்றை உண்டு இவ்விரவில் இங்கே வசிக்கலாமென நான் நம்புகிறேன். விருப்பத்திற்குரிய விதவிதமானவற்றால் அர்ச்சிக்கப்படும் நீ, உன் சேனையுடன் நாளை செல்லலாம்" {என்றான் குஹன்}.(18)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 084ல் உள்ள சுலோகங்கள்: 18

Previous | Sanskrit | English | Next

Wednesday, 3 August 2022

இரதம் வந்து உற்றது | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 057 (34)

The chariot returned | Ayodhya-Kanda-Sarga-057 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குகனிடம் விடைபெற்று, அயோத்திக்குத் திரும்பி தசரதனிடம் செய்தியைச் சொன்ன சுமந்திரன்; தசரதனும், கௌசல்யையும் மயங்கி விழுந்தது...

Kaushalya Dasharatha Sumitra Sumantra

இராமன் தென்கரையில் இறங்கியபோது, குஹன் சுமந்திரனிடம் நெடுநேரம் பேசிவிட்டு, பெருந்துக்கத்துடன் தன் கிருஹத்திற்கு {வீட்டிற்குச்} சென்றான்.(1) {இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர்} பரத்வாஜரைச் சந்தித்தது, பிரயாகையில் அவருடன் தங்கியது, கிரிக்கு {சித்திரகூட மலைக்குச்} சென்றது ஆகியவற்றை அங்கே இருந்தவர்கள் குறிப்பிட்டனர்[1].(2) 

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அவர்களுடைய பரத்வாஜ முனிவரின் தரிசனமும், பிரயாகையில் கூடி வசித்ததும், சித்திரகூட மலைக்கு எழுந்தருளியதும் அங்கு வாஸம் செய்பவர்களால் அறிந்து கொள்ளப்பட்டது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அந்த ஷ்ருங்கிபேரபுரத்திலுள்ள சாரர்கள், ராமதிகள் பரத்வாஜமுனிவரிடம் போவது, ப்ரயாகக்ஷேத்ரத்தில் அம்முனிவருடன் கூடியிருப்பது முதலாக சித்ரகூடபர்வதத்திற்குப் போகும் வரையிலும் நடந்த வ்ருத்தாந்தங்களெல்லாவற்றையும் ஸுமந்திரனுக்குத் தெரிவித்தனர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "காட்டிலடிக்கடி ஸஞ்சரிக்கின்றவர்கள் முகமாய்ப் பெருமாள் பரத்துவாஜாச்ரமத்துக் கெழுந்தருளியதையும், அங்கிருந்து பிரயாகக்ஷேத்திரஞ் சேர்ந்ததையும், அங்கிருந்து திருச்சித்திர கூடம் வரையி லெழுந்தருளி யதையுங் கேட்டுணர்ந்து, அல்லும் பகலும் ஸ்ரீராமச்சந்திரரையே நினைத்துக் கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது.

அதன் பிறகு {செல்வதற்கு} அனுமதிக்கப்பட்ட சுமந்திரன், உத்தம ஹயங்களை {சிறந்த குதிரைகளைத் தேரில்} பூட்டி, மனவேதனையுடன் அயோத்தி நகரை நோக்கிப் பிரயாணம் செய்தான்.(3) அவன் {சுமந்திரன்}, சுகந்தமான வனங்களையும் {நறுமணம் கமழும் காடுகளையும்}, சரிதங்களையும் {ஆறுகளையும்}, சரஸ்களையும் {தடாகங்களையும்}, கிராமங்களையும், நகரங்களையும்  கண்டு சீக்கிரமாக {அவற்றைக்} கடந்து சென்றான்.(4) அதன் பிறகு மூன்றாம் நாள் சாயுங்காலத்தில் {மாலை நேரத்தில்} அயோத்தியை அடைந்த அந்த சாரதி {சுமந்திரன்}, அஃது ஆனந்தமற்றிருப்பதைக் கண்டான்.(5)

அது சூனியமாகவும், நிசப்தமாகவும் இருப்பதைக் கண்ட சுமந்திரன், பரம துக்கத்தில் மூழ்கி, பெருஞ்சோகத்தால் பீடிக்கப்பட்டு {பின்வருமாறு} சிந்தித்தான்:(6) "கஜங்களுடனும், அச்வங்களுடனும், ஜனங்களுடனும், ஜனாதிபனுடனும் {யானைகளுடனும், குதிரைகளுடனும், மக்களுடனும், மக்கள் தலைவனுடனும்} இருந்த நகரம், ராமனை நினைத்து உண்டான துக்கத்தால் சோகாக்னியில் எரிந்து விட்டதோ?" {என்று நினைத்தான்}.(7)

இவ்வாறான சிந்தனையில் தொலைந்த அந்த சூதன், வேகமாகச் செல்லும் வாஜிகளில் {குதிரைகளில்} நகரதுவாரத்தை {நகரவாயிலை} அடைந்து, துரிதமாக அதற்குள் பிரவேசித்தான்.(8) சூதனான அந்த சுமந்திரன், அதன்பிறகு, "இராமன் எங்கே?" என்று கேட்டவாறே தன்னை நோக்கி ஓடிவந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நரர்களை {மனிதர்களை} நெருங்கினான்.(9) அவன் அவர்களிடம், "மஹாத்மாவும், தார்மீகனுமான ராகவனால் {ராமனால்} கங்கையில் அனுமதி கொடுக்கப்பட்டபிறகு, அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக் கொண்டு நான் திரும்பி வந்தேன்" என்று மறுமொழி கூறினான்.(10)

அவர்கள் {ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் கங்கையைக்} கடந்து விட்டனர் என்பதை அறிந்த அந்த ஜனங்களின் முகங்கள் கண்ணீரால் நிறைந்தன. அவர்கள், பெருமூச்சுவிட்டபடியே, "அஹோ"  என்றும், "சீ, சீ" என்றும், "ஹா, ராமா" என்றும் சொல்லி உரக்க அழுதனர்.(11) 

அவன் {சுமந்திரன்}, கூட்டங்கூட்டமாக நின்றிருந்த அவர்களின் {இவ்வாறான} சொற்களையும் கேட்டான், "இங்கே ராகவனைக் காணாத நாம் நிச்சயம் கெட்டொழிந்தோம்.(12) தானம், யாகம், விவாஹம், மஹத்தான சமாஜ {பெருங்கூட்டமாகக் கூடும்} நிகழ்ச்சிகளிலும் இனி ஒருபோதும் தார்மீகனான ராமனை நாம் காணமாட்டோம்.(13) சுகத்தை அளிக்கும் வகையில், இந்த ஜனங்களுக்குப் பிரியமானவற்றைத் தகுந்த முறையில் செய்து, பிதாவை {ஒரு தந்தையைப்} போல இந்நகரத்தை ராமன் பரிபாலித்தான்" {என்று சொல்லி அந்த மக்கள் அழுதனர்}.(14)

கடைகளின் வழியாகச் செல்லும்போது, ராமனை நினைத்து சோகமாக வருந்திக் கொண்டிருக்கும் ஸ்திரீகளின் புலம்பல்களை சாளரங்களின் {ஜன்னல்களின்} வழியாக இவ்வாறே அவன் {சுமந்திரன்} கேட்டுச் சென்றான்.(15) அந்த சுமந்திரன், தன் முகத்தை மறைத்துக் கொண்டு {முக்காடிட்டுக் கொண்டு} ராஜமார்க்கத்தின் மத்தியில் தசரத ராஜன் இருந்த கிருஹத்திற்குச் சென்றான்.(16) அவன் ரதத்தில் இருந்து இறங்கி, ராஜவேஷ்மத்திற்குள் {அரண்மனைக்குள்} சீக்கிரமாகப் பிரவேசித்து, மஹாஜனகுலங்களால் {பெரும் மக்கள் கூட்டத்தால்} நிறைந்திருந்த ஏழு உள்கட்டுகளையும் கடந்து சென்றான்.(17) 

அவன் {சுமந்திரன்} வருவதைக் கண்டு, மாளிகைகளிலும், விமானங்களிலும், பிராசாதங்களிலும் {அரண்மனைகளிலும்} இருந்த நாரியைகள் {பெண்கள்}, ராமனைக் காணாமல் சோர்ந்து, "ஹா", "ஹா" என்று அலறினர்.(18) கண்ணீரால் நிறைந்த பிரகாசமான கண்களுடன் கூடிய ஸ்திரீகள் வேதனையை வெளிக்காட்டாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(19) 

ராமனை நினைத்து சோகத்தில் தவித்த தசரதனின் ஸ்திரீகளுக்குரிய அந்தந்த பிராசாதங்களில் {அரண்மனைகளில்} இருந்து வெளிப்படும் மெல்லிய கிசுகிசுப்புகளையும் அவன் {சுமந்திரன்} கேட்டான்.(20) "இராமனுடன் சென்று, இங்கே அவனில்லாமல் திரும்பியிருக்கும் இந்த சூதன் {சுமந்திரன்}, அழுது கொண்டிருக்கும் கௌசல்யையிடம் என்ன சொல்லப் போகிறான்?(21) புத்திரன் வெளியே சென்றுவிட்ட பிறகும் தொடர்ந்து ஜீவித்திருக்கும் கௌசல்யையின் இந்த துர்ஜீவிதம் நிச்சயம் எளிதானதல்ல {வாழ்வது கடினம்}[2] என்றே நான் நினைக்கிறேன்" {என்று மக்கள் பேசுவதை சுமந்திரன் கேட்டான்}.(22) ராஜனின் ஸ்திரீகள் சொன்ன சத்திய ரூபமான அந்த வாக்கியங்களைக் கேட்டவாறு, சோகத்தில் எரிந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றிய அந்த கிருஹத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(23)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "கௌசல்யை பலவந்தமாகப் பிழைத்திருக்கிறாளென்பது மிகவும் கஷ்டமாயிருப்பது. இப்படி துக்கப் பிழைப்பாகப் பிழைத்திருப்பது மற்றொருவருக்கும் தரமன்றென்று நிஜமாக எனக்குத் தோன்றுகின்றது என்பது மஹேஸ்வரதீர்த்தர் உரை" என்றிருக்கிறது.

எட்டாவது கட்டுக்குள் நுழைந்த அவன் {சுமந்திரன்}, அந்த வெண்கிருஹத்திற்குள் தீனனாகவும், புத்திரசோகத்தில் வருந்தி முகம் வாடியவனாகவும் இருக்கும் {தசரத} ராஜனைக் கண்டான்.(24) சுமந்திரன், அங்கே அமர்ந்திருந்த அந்த நரேந்திரனை நெருங்கி வணங்கி, ராமன் சொல்லி அனுப்பியவற்றை உள்ளபடியே சொன்னான்.(25) அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த ராஜன், ராமன் இல்லாத துயரத்தில் மூழ்கி மனம் குழம்பியவனாக பூமியில் மூர்ச்சித்து விழுந்தான்.(26) அந்தப் பிருத்வீபதி மூர்ச்சித்ததும் அந்தப்புரவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அந்த நிருபதி தரையில் விழும்போதே தங்கள் கைகளை உயர்த்திக் கதறி அழுதனர்.(27)

சுமித்ரை சகிதம் வந்த கௌசல்யை, விழுந்து கிடக்கும் தன் பதியைத் தூக்கிவிட்டு, இந்த சொற்களையும் சொன்னாள்:(28) "மஹாபாக்யவானே, கடினமான காரியங்களைச் செய்து வனவாசமிருப்பவனிடமிருந்து {ராமனிடமிருந்து} வந்த தூதரிடம் ஏன் ஏதும் பேசாமலிருக்கிறீர்?[3](29) இராகவரே, நயமற்றதைச் செய்துவிட்டு இப்போது வெட்கப்படுகிறீர். எழுவீராக. அஃது உமக்கு நற்செயலாகவே ஆகட்டும். சோகத்தால் சஹாயம் கிட்டாது {துன்புறுவதால் எந்தப் பயனும் இல்லை}.(30) தேவா, யாருக்குப் பயந்து ராமனைக் குறித்து இந்த சாரதியிடம் நீர் விசாரிக்காமலிருக்கிறீரோ, அந்தக் கைகேயி இங்கே இல்லை. அச்சமின்றி பேசுவீராக" {என்றாள் கௌசல்யை}.(31)

[3] இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும்
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரைதபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி
விரமமாதவனைக் கண்டான் வீரன் வந்தனனோ என்றான்.

- கம்பராமாயணம் 1896ம் பாடல்

பொருள்:  {காடு சென்ற} தேர் வந்து சேர்ந்தது என்று அங்குள்ள அனைவரும் சொன்னதும், "வரதன் {ராமன்} வந்து விட்டான்" என்று கருதிய {தசரத} மன்னனும் மயக்கம் தீர்ந்தான். குற்றமற்ற தாமரை மலர் போன்ற கண்கள் பொருக்கென விழித்து நோக்கி, விரதம் நோற்ற சிறந்தவனிடம் "வீரன் {ராமன்} வந்தனனோ?" என்று கேட்டான்.

சோகத்தாலும், ஏக்கத்தாலும் கண்ணீர் பெருக மஹாராஜனிடம் இவ்வாறு பேசிய அந்தக் கௌசல்யை வேகமாகத் தரையில் விழுந்தாள்.(32) இவ்வாறு அழுது கொண்டே புவியில் விழும் கௌசலையையும், அவளது பதியையும் கண்டு சர்வ ஸ்திரீகளும் உரக்கக் கதறி அழுதனர்.(33) அந்தப்புரத்தில் எழும் ஒலியைக் கேட்டு முதியவர்களும், இளைஞர்களும், ஸ்திரீகளும் என மனிதர்கள் அனைவரும் சுற்றிலும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அந்த நகரம் மீண்டும் கலக்கமடைந்தது.(34)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 057ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

Monday, 18 July 2022

கங்கையைக் கடந்தது | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 052 (102)

Crossing Ganga | Ayodhya-Kanda-Sarga-052 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கங்கையைக் கடக்க ஓடத்தைக் கொண்டு வந்த குஹன்; அயோத்திக்குத் திரும்புமாறு சுமந்திரனைக் கேட்டுக் கொண்ட ராமன்; கங்கையை வழிபட்ட சீதை...

Guha in Ganga river bank Rama Sita and Lakshmana in boat

இரவு விடியலுக்கு வழிவிட்டதும், அகன்ற மார்புடையவனும், பெரும்புகழ்வாய்ந்தவனுமான ராமன், சுபலக்ஷணங்களைக் கொண்டவனும், சௌமித்ரியுமான {சுமித்திரையின் மகனுமான} லக்ஷ்மணனிடம்:(1) "ஐயா, இது பாஸ்கரோதய காலம் {சூரியன் உதிப்பதற்கான நேரம்}. பகவதியான {மங்கலமான} இரவு கழிந்தது. கருஞ்சிறகைக் கொண்ட கோகிலப் பறவை {குயில்} கூவுகிறது.(2) வனத்தில் மயில்களின் அகவல்கள் கேட்கின்றன. சௌம்யா {மென்மையானவனே}, சாகரத்திற்கு சீக்கிரமாக விரைந்து செல்பவளான இந்த ஜாஹ்னவியை {கங்கையை}[1] நாம் கடப்போமாக" {என்றான் ராமன்}.(3)

[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "பேரரசன் பகீரதனின் தவத்தால் சொர்க்கத்திலிருந்து பாய்ந்து வந்த கங்கையாறு, இறந்து போன அவனது முப்பாட்டன்களைத் தூய்மைப்படுத்துவதற்காக பாதாள உலகத்திற்கும் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவ்வாறு அவள் செல்லும் போது மன்னன் ஜஹ்னுவின் வேள்விக் களத்தை மூழ்கடித்தாள். இதனால் கோபமடைந்த ஜஹ்னு அவளது நீர் முழுவதையும் பருகிவிட்டான். ஆனால் தேவர்களும், முனிவர்களும், குறிப்பாக பகீரதனும் அவனது கோபத்தைத் தணித்தனர். அவன் அந்த நீரைத் தன் காதுகளின் வழியே வெளியேற்ற சம்மதித்தான். அதுமுதல் அந்த ஆறு அவனது {மன்னன் ஜஹ்னுவின்} மகளாகக் கருதப்பட்டாள்" என்றிருக்கிறது. கங்கை {கங்கா}, ஜஹ்னுவின் மகள் என்பதால் ஜாஹ்னவி {ஜானவி} ஆனாள், பகீரதனின் மகள் என்ற பொருளில் பாகீரதியும் ஆனாள்.

மித்ரானந்தனனான அந்த சௌமித்ரி {நண்பர்களை மகிழ்விப்பவனான லக்ஷ்மணன்}, ராமனின் சொற்களைப் புரிந்து கொண்டு, குஹனையும், சூதனையும் {சுமந்திரனையும்} அழைத்து வந்து, தன் சகோதரன் {ராமன்} முன் நின்றான்.(4) இராமனின் வசனத்தைக் கேட்ட ஸ்தபதி {குஹன்}, அதை ஏற்றுக் கொண்டு தன் பணியாட்களைத் துரிதமாக அழைத்து இதைச் சொன்னான்:(5) "திடமாகக் கட்டப்பட்டதும், நன்கு பாயக்கூடியதும், நாவிகனுடன் {மீகாமனுடன் / படகோட்டியுடன்} கூடியதுமான ஓர் அழகிய நாவத்தை {ஓடத்தைக்} கரையில் இவருக்காக {ராமருக்காக} சீக்கிரம் கொண்டு வருவீராக" {என்றான் குஹன்}.(6)

அந்த ஆணையைக் கேட்ட குஹனின் அமைச்சர்களில் பெரியவர், ஓர் அழகிய நாவத்தைக் கொண்டு வந்து, அந்தத் தகவலை குஹனிடம் தெரிவித்தார்.(7) அப்போது குஹன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு ராகவனிடம் {இவ்வாறு} பேசினான், "தேவா, இதோ நாவம் {ஓடம்} வந்திருக்கிறது. இன்னும் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?(8) புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, அமரசுதனை {தேவர்களின் மகனைப்} போன்றவனே, சாகரத்திற்குப் பாயும் இந்நதியை நீ கடப்பதற்குரிய நாவம் இது. நல்விரதம் கொண்டவனே, இதில் நீ ஆரோஹணம் செய்வாயாக {ஏறுவாயாக}" {என்றான் குஹன்}.(9)

அப்போது மஹாதேஜஸ்வியான ராமன், குஹனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "என் விருப்பம் உன்னால் நிறைவேறியது. சீக்கிரம் இதில் ஆரோஹணம் செய்வோம் {ஏறுவோம்}" {என்றான்}.(10)

பின்னர் அந்த ராகவர்கள் {ராமனும், லக்ஷ்மணனும் தங்கள்}, அம்பறாத்தூணிகளைத் தரித்துக் கொண்டும், கட்கங்களை {வாள்களைப்} பூட்டிக் கொண்டும், தனுவை {வில்லை} ஏந்திக் கொண்டும் சீதையுடன் சேர்ந்து கங்கையை நோக்கிச் சென்றனர்.(11) சூதன் {சுமந்திரன்}, பணிவுடன் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, தர்மத்தை அறிந்தவனான ராமனை அணுகி, "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(12)

அப்போது அந்த தாசரதி {தசரதனின் மகனான ராமன்}, உத்தமமான தன் வலது கையால் சுமந்திரனைத் தீண்டி, "சுமந்திரரே, நீர் சீக்கிரமாக ராஜாவிடம் திரும்பிச் சென்று, கவனமாக இருப்பீராக.(13) எனக்கு இவ்வளவு செய்துவிட்டீர் {என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்துவிட்டீர்}. இனி திரும்புவீராக. நான் ரதத்தைக் கைவிட்டு பாதநடையாகவே மஹாவனத்திற்குச் செல்வேன்" {என்றான் ராமன்}.(14)

சாரதியான சுமந்திரன், தான் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவதைக் கண்டு வருந்தி, புருஷவியாகரனான அந்த ஐக்ஷ்வாகனிடம் {மனிதர்களில் புலியும், இக்ஷ்வாகு குலத்தவனுமான ராமனிடம்} இதைச் சொன்னான்:(15) "தம்பியோடும், பாரியையோடும் ஒரு சாதாரண மனிதனைப் போல வனத்தில் வாசம் செய்யப் போகிறாய். இவ்வுலகில் எந்த மனிதனும் இதை {இந்நிலையைக்} அடைந்திருக்கமாட்டான்.(16) உனக்குத் துன்பம் வருமானால், பிரம்மசரியத்தாலோ, கற்ற கல்வியாலோ, மென்மையையும், நேர்மையையும் வளர்த்துக் கொள்வதாலோ எந்தப் பலனும் இருப்பதாக நான் நினைக்கமாட்டேன்.(17) வீரா, ராகவா, வைதேஹியுடனும், தம்பியுடனும் நீ வனத்தில் வசித்தாலும், திரிலோகத்தையும் {மூன்று உலகங்களையும்} வெல்லும் கதியை அடைவாய்.(18) இராமா, உன்னாலும் வஞ்சிக்கப்பட்ட நாங்கள் உண்மையில் அழிந்தே விட்டோம். இனி பாப இயல்பைக் கொண்ட கைகேயியின் வசத்தில் விழுந்து, துக்கத்தை அடையப்போகிறோம்" {என்றான் சுமந்திரன்}.(19)

Sumantra Rama Sita Guha boat

சாரதியான சுமந்திரன் இதைச் சொல்லிவிட்டு, தன் ஆத்மாவுக்கு நிகரான ராமன் தூரமாகச் செல்வதைக் கண்டு, துக்கத்தால் பீடிக்கப்பட்டு நீண்ட நேரம் அழுதான்.(20) பிறகு, கண்ணீர் மறைந்து, நீரைத் தீண்டிப் பருகித் தூய்மையடைந்த அந்த சூதனிடம் மீண்டும் மீண்டும் ராமன் இந்த மதுர வாக்கியத்தைச் சொன்னான்:(21) "இக்ஷ்வாகுக்களின் நண்பர்களில் உம்மைப் போன்ற ஒருவரை நான் கண்டதில்லை. தசரத ராஜா எனக்காக வருந்தாமல் இருக்கும் வகையில் நீர் நடந்து கொள்வீராக.(22) விருத்தரான ஜகத்பதி {முதியவரான உலகின் தலைவர் தசரதர்} சோகத்தால் மனம் பீடிக்கப்பட்டவராகவும், காமபாரத்தை {ஆசை என்ற சுமையைச்} சுமந்து மனம் சோர்ந்தவராகவும் இருப்பதால் இதை உமக்குச் சொல்கிறேன்.(23) 

மஹாத்மாவான அந்த மஹீபதி {தசரதர்}, கைகேயிக்குப் பிரியமான ஆசையை நிறைவேற்ற எந்தக் காரியத்தை ஆணையிட்டாலும், அதை தயக்கமேதும் இல்லாமல் செய்வீராக.(24) தங்கள் விருப்பத்திற்குரிய காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேற வேண்டும் என்ற நோக்கிலேயே நரேஷ்வரர்கள் ராஜ்ஜியங்களை ஆள்கின்றனர்.(25) சுமந்திரரே, எதை எப்படிச் செய்தால் அந்த மஹாராஜா வருந்தமாட்டாரோ, துக்கத்தால் துன்புற மாட்டாரோ அப்படியே செயல்படுவீராக.(26)

விருத்தரும் {முதிர்ந்தவரும்}, ஆரியரும் {உன்னதமானவரும்}, துக்கத்தை அறியாதவரும், ஜிதேந்திரியருமான {புலன்களை  வென்றவருமான} ராஜாவை மதிப்புடன் வணங்கிய பிறகு என் பொருட்டு இந்த சொற்களை நீர் சொல்வீராக.(27) "நானோ, லக்ஷ்மணனோ, மைதிலியோ அயோத்தியிலிருந்து அப்புறப்பட்டதற்கும், வனத்தில் வசிக்கப் போவதற்கும் வருந்தவில்லை.(28)  சதுர்தச வருஷங்கள் {பதினான்காண்டுகள்} நிறைவடைந்ததும் சீக்கிரமாகத் திரும்பி வரும் லக்ஷ்மணனையும், என்னையும், சீதையையும் மீண்டும் காண்பீர்கள்" {என்று என் சார்பாக சொல்வீராக}.(29) 

சுமந்திரரே, ராஜரிடமும், என் மாதாவிடமும், வேறு தேவியர் அனைவரிடமும், கைகேயியிடமும் இதையே மீண்டும் மீண்டும் நீர் சொல்வீராக.(30) சீதையும், நானும், ஆரியனான லக்ஷ்மணனும் ஆரோக்கியமாக இருப்பதையும், நாங்கள் சொல்லும் பாதாபிவந்தனத்தையும் {பாதவணக்கத்தையும்} கௌசல்யையிடம் மீண்டும் மீண்டும் சொல்வீராக.(31) 

மஹாராஜரிடமும் இதைச் சொல்வீராக. "பரதனை சீக்கிரம் அழைப்பீராக. பரதன் வந்ததும், நிருபதியான உமது விருப்பப்படியே பதத்தில் அவனை ஸ்தாபிப்பீராக.(32) பரதனைத் தழுவிக் கொண்டு யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்ததும் எங்கள் நிமித்தம் உண்டான துக்கம் உம்மை பீடிக்காது" {என்று தசரதரிடம் சொல்வீராக}.(33) 

பரதனிடம் இதைச் சொல்வீராக, "மாதாக்கள் அனைவரிடமும் எந்த வேற்றுமையும் பாராமல், ராஜருக்குக் கொடுக்கும் அதே மதிப்பை {அவர்களுக்கும்} கொடுப்பாயாக. உனக்குக் கைகேயி எவ்வாறோ, அவ்வாறே சுமித்திரையும், குறிப்பாக என் மாதாவான கௌசல்யா தேவியும் இருப்பார்களாக.(35) நம் தாதையின் {தந்தையின்} விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் யௌவராஜ்ஜியத்தை நீ ஏற்றுக் கொண்டால், இரு உலகங்களிலும் {இம்மையிலும், மறுமையிலும்} உன் சுகத்தை பெருக்கிக் கொள்ளலாம்" {என்று பரதனிடம் சொல்வீராக", என்றான் ராமன்}.(36)

இராமனால் திருப்பி அனுப்பப்பட்ட சுமந்திரன், சோகத்தால் நேர்ந்த சோர்வுடன் அந்த வசனங்கள் அனைத்தையும் கேட்டு, சினேகத்துடன் அந்தக் காகுத்ஸ்தனிடம் {ராமனிடம்} இதைச் சொன்னான்:(37) "சினேகத்துடனும், விகல்பமில்லாமலும், அபசாரமில்லாமலும் {நட்புடனும், மனமாறுபாடு இல்லாமலும், நிந்தனை செய்யாமலும்} நான் எந்த வாக்கியத்தைச் சொன்னாலும், அதை பக்திமான் சொன்னதாகக் கருதி பொறுப்பதே உனக்குத் தகும்.(38) உன் பிரிவால் புத்திர சோகத்துடன் இருப்பவளைப் போலிருக்கும் அந்த நகரத்திற்கு {அயோத்திக்கு} நீ இல்லாமல் என்னால் எவ்வாறு திரும்ப முடியும்?(39) 

அப்போது என் ரதத்தில் ராமன் இருப்பதைக் கண்ட ஜனங்கள், இப்போது ராமனில்லாத ரதத்தைக் கண்டால் அந்நகரமே பிளந்து சிதறும்.(40) கொல்லப்பட்ட வீரர்களைக் கொண்ட சைன்யத்தைக் காண்பதைப் போல, சூன்யமான இந்த ரதத்தில் சூதன் {தேரோட்டியான நான்} மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டால் அந்த நகரமே துயரை அடையும்.(41) நீ தூரத்தில் வாழ்ந்தாலும், தங்கள் மனங்களில் உன்னையே திடமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரஜைகள் இன்று நிச்சயம் ஆகாரமின்றி வாடிக் கொண்டிருப்பார்கள்.(42) இராமா, உன்னை நாடு கடத்தியபோது, உனக்காக மனம் சோர்ந்த பிரஜைகளுக்கு மத்தியில் எழுந்த கலக்கமான நடத்தை எவ்வகையானது என்பதை நீ கண்டாய்.(43) நீ நாடுகடத்தப்பட்ட போது நகரவாசிகளிடம் எழுந்த துயரக் கூக்குரலானது, ரதத்துடன் என்னைக் காணும்போது நூறு மடங்காக எழும்.(44) 

தேவியிடம் {கௌசல்யையிடம்} நான் என்ன சொல்வேன்? "உன் சுதனை நான் மாதுல குலத்திடம் {உன் மகனை தாய்மாமன் வீட்டிற்கு} அழைத்துச் சென்றேன். வருந்தவேண்டாம்" என்று சொல்ல முடியுமா?(45) சத்தியமற்ற இத்தகைய சொற்களை என்னால் சொல்ல இயலாது. பிரியமற்ற சத்திய சொற்களைத்தான் என்னால் எவ்வாறு சொல்ல முடியும்?(46) உன்னையும் உன் பந்து ஜனங்களையும் சுமந்தவையும், எனக்குக் கீழ்ப்படிபவையுமான உத்தம ஹயங்கள் {சிறந்த குதிரைகள்} நீ இல்லாத ரதத்தை எவ்வாறு இழுத்துச் செல்லும்?(47) எனவே என்னால் அயோத்திக்குத் திரும்பிச் செல்ல முடியாது. பாவமற்றவனே, வனவாசத்தில் உன்னைப் பின் தொடர்ந்து வர என்னை அனுமதிப்பதே உனக்குத் தகும்.(48) யாசித்தும் நீ என்னைக் கைவிட்டால், அவ்வாறு கைவிடப்பட்ட மாத்திரத்திலேயே இங்கேயே ரதத்துடன் அக்னிக்குள் பிரவேசிப்பேன்.(49) 

இராகவா, வனத்தில் உன் தவத்திற்கு எந்த விலங்குகள் விக்னம் விளைவிக்குமோ அந்தந்த விலங்குகளை ரதத்தில் இருந்த வண்ணம் விரட்டுவேன்.(50) {நாட்டில்} உன் ரதத்தைச் செலுத்தும் சுகம் எனக்குக் கிடைத்தது. {காட்டில்} உன் மூலம் கிட்டப் போகும் வனவாச சுகத்தையும் நான் நாடுகிறேன்.(51) கருணை புரிவாயாக. அரண்யத்தில் உன் அருகில் அணுக்கனாக வசிக்க விரும்புகிறேன். "என் அணுக்கராக இருப்பீராக" என்ற பிரீதியுடன் கூடிய உன் சம்மதத்தையே நான் விரும்புகிறேன்.(52) வீரா, வனத்தில் வசிக்கும் உனக்கான தொண்டை இந்த ஹயங்களால் {குதிரைகளால்}  செய்ய முடியுமென்றால் இவை பரம கதியையே {இறுதி இலக்கான முக்தியை} அடையும்.(53) வனவாசத்தில் தலைவணங்கி உனக்கான தொண்டைச் செய்வதற்காக அயோத்தியையோ, தேவலோகத்தையோ, ஏன் அனைத்தையுங்கூட நான் கைவிடுவேன்.(54) 

துஷ்ட கர்மங்களைச் செய்வோரால் மஹேந்திரனின் ராஜதானிக்குள் {இந்திரனின் தலைநகரான அமராவதிக்குள்} நுழைய முடியாததைப் போலவே, நீ இல்லாமல் என்னால் அந்த அயோத்திக்குள் பிரவேசிக்க முடியாது.(55) வனவாசம் நிறைவடைந்ததும், இதே ரதத்தில் நகருக்குள் உன்னை மீண்டும் அழைத்துச் செல்வதே என் மனோரதம் {விருப்பம்}.(56) வனத்தில் உன்னுடன் வசிக்கையில், சதுர்தச வருஷங்களும் {பதினான்கு ஆண்டுகளும்} எனக்கு ஒரு கணம் போல் கழிந்துவிடும், மாறாக நடந்தால் அதுவே நூறு மடங்காகப் பெருகிவிடும்.(57) சார்ந்தவர்களிடம் அன்பு கொண்டவனே {ராமா, தசரதன் என்ற} தலைவனின் மகன் நடக்கும் பாதையில் செல்பவனும், வரம்புக்குள் நிலைத்திருப்பவனும், பக்தனும், உன் அடியவனுமான என்னைக் கைவிடுவது உனக்குத் தகாது" {என்றான் சுமந்திரன்}.(58)

அடியாரிடம் இரக்கம் கொண்ட ராமன், பல்வேறு வகைகளில் மீண்டும் மீண்டும் இவ்வாறு தீனமாக இரந்து கொண்டிருந்த சுமந்திரனிடம், இதைச் சொன்னான்:(59) "தலைவரிடம் பற்று கொண்டவரே, என்னிடம் நீர் கொண்ட பரமபக்தியை நான் அறிவேன். இங்கிருந்து நகரத்திற்கு எதற்காக உம்மை அனுப்புகிறேன் என்பதைக் கேட்பீராக.(60) நீர் நகருக்குத் திரும்பியதைக் கண்டு, என் இளைய மாதாவான கைகேயி, "ராமன் வனத்திற்குச் சென்றுவிட்டான்" என்று சமாதானமடைவாள்.(61) நான் வனவாசம் சென்றுவிட்டேன் என்பதில் பெரும் திருப்தி அடையும் அந்த தேவி,  தார்மீகரான ராஜாவைப் பொய்யரென சந்தேகிக்கமாட்டாள்.(62) என் இளைய அம்பா {கைகேயி}, பரதனால் ரக்ஷிக்கப்படும் பரந்த புத்திரராஜ்ஜியத்தை அடைய வேண்டும் என்பதே என் பிரதம கல்பமாகும் {முதன்மையான விதியாகும்}.(63) எனக்கும், ராஜருக்கும் பிரியம் உண்டாவதற்காக நீர் ரதத்துடன் நகருக்குச் சென்று, உமக்குச் சொல்லப்படும் இவற்றை அந்தந்த வகையிலேயே {தசரதரிடம்} அறிவிப்பீராக" {என்றான் ராமன்}.(64)

தீரனான ராமன், அந்த சூதனிடம் {சுமந்திரனிடம்} இவ்வாறான சொற்களை சொல்லி மீண்டும் மீண்டும் அவனை சாந்தப்படுத்திவிட்டு, காரணங்களுடன் கூடிய இந்த சொற்களை குஹனிடம் சொன்னான்:(65) "குஹனே, ஜனங்களுடன் கூடிய வனத்தில் இவ்வாறு வசிப்பது எனக்குத் தகாது. அவசியம் ஆசிரமத்திலேயே வசிக்க வேண்டும். {காட்டில் ஆசிரமத்தில் வசிக்க வேண்டும் என்ற அந்த} விதிக்குத் தகுந்தவாறே செயல்பட வேண்டும்.(66) என் பிதாவின் ஹிதத்தை விரும்புகிறவனான நானும், சீதையும், லக்ஷ்மணனும் தபஸ்விஜனபூஷணத்தையே {தபஸ்விகளுக்குரிய ஆடை அலங்காரங்களையே} நியமப்படி ஏற்க வேண்டும் என்பதால் ஜடை தரித்துச் செல்ல விரும்புகிறோம். எனவே ஆலமரத்தின் பாலைக் கொண்டு வருவாயாக" {என்றான் ராமன்}.(67,68அ)

Rama and Lakshmana matted their hair with the latex of a banyan tree

குஹன் சீக்கிரமாக அந்தப் பாலை ராஜபுத்திரனிடம் கொண்டு வந்தான். இராமன், அதைக் கொண்டு லக்ஷ்மணனுக்கும், தனக்கும் ஜடை தரித்தான்.(68ஆ,69அ) தீர்க்கபாஹுவான அந்த நரவியாகரன் {நீண்ட கைகளைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான ராமன்} இவ்வாறே சடை தரித்துக் கொண்டான். உடன்பிறந்தவர்களான ராமனும், லக்ஷ்மணனும் அப்போது மரவுரியும், ஜடா மண்டலமும் தரித்து ரிஷிகளைப் போலப் பிரகாசித்தனர்.(69ஆ,70) இராமன், லக்ஷ்மணன் சகிதனாக வைகானச மார்க்கத்தைப்[2] பின்பற்றி, விரதம் ஏற்று, தன் சகாவான குஹனிடம் {இதைச்} சொன்னான்:(71) "குஹனே, பலம் {படை}, கருவூலம், கோட்டை, ஜானபதம் {ஆட்சிப்பகுதி} ஆகியவற்றில் கவனத்துடன் இருப்பாயாக. இராஜ்ஜியத்தை ரக்ஷிப்பதே மிகக் கடினமானதாகக் கருதப்படுகிறது" {என்றான்}.(72)

[2] வைகானசமும், பாஞ்சராத்திரமும் வைஷ்ணவ சம்பிரதாயத்தின் இரண்டு ஆகமப் பிரிவுகளாகும். விகநச முனிவரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் வைகானச ஆகம நெறியினைப் பின்பற்றுபவர்கள் வைகானசர் என்றழைக்கப்படுகின்றனர்.  வைணவனாக எண்ணப்படுவதற்குத் தேவைப்படும் ஐவகைத் தூய்மைகளை உள்ளடக்கிய பஞ்ச சம்ஸ்கார தீட்சையை இவர்கள் ஏற்பதில்லை. தாயின் கருவிலேயே இம்முத்திரை தங்களுக்கு இடப்பட்டுவிட்டது என்பது இவர்களின் நம்பிக்கையாகும். இவர்களின் நெறி வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தில் இவர்கள் இராமாநுசரையோ, நம்மாழ்வாரையோ தம் குருவாக ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் திவ்வியப் பிரபந்தங்களை இவர்கள் ஓதுவதில்லை. இவர்கள் வடகலை வைணவ சமயப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

அதன்பிறகு அந்த இக்ஷ்வாகுநந்தனன் {ராமன்}, குஹனுக்கு விடை கொடுத்துவிட்டு, கவனம் சிதறாமல் தன் பாரியையுடனும், லக்ஷ்மணனுடனும் துரிதமாகச் சென்றான்.(73) நதிதீரத்தில் நாவத்தை {ஆற்றங்கரையில் ஓடத்தைக்} கண்ட ராமன், வேகமாகப் பாயும் கங்கையைக் கடக்க விரும்பி, லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னான்:(74) "நரவியாகரா {மனிதர்களில் புலியே}, இதோ நிற்கும் நாவத்தைப் பிடித்துக் கொண்டு, உன்னதமானவளான சீதையை மெதுவாக அதில் ஏற்றிவிட்டு, நீயும் அதில் ஏறுவாயாக" {என்றான்}.(75)

அண்ணனின் சர்வசாசனத்தையும் {ஆணை முழுவதையும்} கேட்ட அந்த ஆத்மவான் {தற்கட்டுப்பாடுடைய லக்ஷ்மணன்}, மாறாகச் செயல்படாமல் முதலில் மைதிலியைப் படகில் ஏறச் செய்துவிட்டு, அதன்பிறகே தானும் ஏறினான்.(76) பிறகு தேஜஸ்வியான லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்} தானாக ஏறினான். அதன்பிறகு, நிஷாதிபதியான குஹன், {ஆற்றைக் கடக்குமாறு தன் உறவினர்களுக்கு} தன் ஞாதிகளுக்கு ஆணையிட்டான்.(77) 

மஹாதேஜஸ்வியான அந்த ராகவன் {ராமன்}, அந்த நாவத்திற்குள் ஏறிய பிறகு, பிரம்மவாதிகளுக்கும், க்ஷத்ரியர்களுக்கும் தகுந்ததும், தனக்கு நலன் விளைவிப்பதுமான ஜபத்தை செய்தான்.(78) சாஸ்திரப்படியும், பெரும் மகிழ்ச்சியுடனும் ஆசமனஞ்செய்து {நீரைப் பருகி}, சீதை சகிதனாக அந்த நதிக்கு அவன் {ராமன்} வணக்கஞ்செலுத்தினான். அளவற்ற பிரகாசம் கொண்ட லக்ஷ்மணனும் அதையே செய்தான்.(79) இராமன், நல்ல படையுடன் கூடிய குஹனுக்கும், சுமந்திரனுக்கும் விடைகொடுத்துவிட்டு, நாவத்தில் அமர்ந்து, நாவிகர்களுக்கு {மீகாமர்களுக்கு / படகோட்டிகளுக்கு படகைச் செலுத்துமாறு} ஆணையிட்டுக் கொண்டிருந்தான்.(80) சிறப்புமிக்கவர்களும், வீரியமிக்கவர்களுமான ஓடக்காரர்களால் உந்தப்பட்ட அந்த நாவம் {படகு} சீக்கிரமாக நீரின் குறுக்கில் பாய்ந்தது.(81)

அந்த பாகீரதியின் மத்தியை {கங்கையாற்றின் நடுப்பகுதியை} அடைந்ததும், களங்கமற்றவளான வைதேஹி, தன் கைகளைக் கூப்பியவாறே அந்த நதியிடம் இதைச் சொன்னாள்:(82) "கங்கையே, தசரத மஹாராஜாவின் புத்திரரான இவர் {ராமன்}, உன்னால் பாதுகாக்கப்பட்டவராக இந்தக் கட்டளையை {பதினான்கு ஆண்டுகள் வனவாசம் என்ற இந்த ஆணையை} நிறைவேற்றுவாராக.{83} சதுர்தச வருஷங்களும் கானகத்தில் முழுமையாக வசித்த பிறகு, உடன்பிறந்தவருடனும் {லக்ஷ்மணனுடனும்}, என்னுடனும் இவர் திரும்புவாராக.{84} அருள்நிறைந்த கங்காதேவியே, {அவ்வாறு} க்ஷேமத்துடன் திரும்பியதும், மகிழ்ச்சியால் நிறையும் நான், என் விருப்பங்கள் அனைத்தும் ஈடேறியவளாக உன்னைத் துதிப்பேனாக.{85}(83-85) தேவியே, திரிபாதகையான {மூவழிகளில் செல்பவளான} நீ, பிரம்மலோகத்தையும் பார்க்கிறாய், உததி ராஜனின் பாரியையாக {சமுத்திர ராஜனின் மனைவியாக} தெளிவாகக் காணப்படும் இந்த உலகத்தையும் பார்க்கிறாய்.(86) தேவியே, நான் உன்னை போற்றுகிறேன், உன்னை வணங்குகிறேன். 

இந்த நரவியாகரர் {மனிதர்களில் புலியான ராமர்}, நல்ல முறையில் திரும்பி ராஜ்ஜியத்தை மீண்டும் அடையும்போது, உனக்கு நிறைவேற்படும் வகையில் சதசஹஸ்ர {நூறாயிரம் / ஒரு லக்ஷம்} பசுக்களையும், மென்மையான வஸ்திரங்களையும், அன்னத்தையும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க நான் விரும்புகிறேன்.(87,88) தேவி, நாங்கள் மீண்டும் நகரை {அயோத்தியை} அடைந்ததும், சஹஸ்ர குடங்கள் சுராபானத்தையும் {ஆயிரங்குடங்கள் மதுபானத்தையும்}, மாமிச உணவையும் நான் உனக்குக் கொடையளிப்பேன்.(89) உன் தீரத்திலும் {கரையிலும்}, தீர்த்தங்களிலும் {புண்ணியத் தலங்களிலும்}, ஆலயங்களிலும் உள்ள தைவதங்கள் அனைவரையும் நான் வழிபடுவேன்.(90) அநகையே {பாபமற்றவளே}, இந்த மஹாபாஹு {பெரும் தோள்களைக் கொண்ட ராமர்}, உடன் பிறந்தவருடனும் {லக்ஷ்மணனுடனும்}, என்னுடனும் நலத்துடன் வனவாசத்திலிருந்து மீண்டும் அயோத்தியில் பிரவேசிப்பாராக" {என்றாள் சீதை}.(91)

திறன்மிக்கவளும், நிந்தனைக்கு அப்பாற்பட்டவளுமான சீதை இவ்வாறு சொல்லிவிட்டு, விரைந்து பாயும் தென் தீரத்தை {கங்கையின் தென் கரையை} அடைந்தாள்.(92) அந்த தீரத்தை அடைந்ததும், பரந்தபனான அந்த நரரிஷபன் {பகைவரை அடக்குபவனும், மனிதர்களில் காளையுமான ராமன்}, அந்த நாவத்தை {ஓடத்தைக்} கைவிட்டுத் தன் தம்பியுடனும், வைதேஹியுடனும் {அங்கிருந்து} புறப்பட்டான்.(93) 

அப்போது அந்த மஹாபாஹு {பெருந்தோள்களைக் கொண்ட ராமன்}, சுமித்ராநந்தனனிடம் {சுமித்திரையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான லக்ஷ்மணனிடம்}, "ஜனங்களுள்ள இடங்களிலும், ஜனங்களற்ற இடங்களிலும் பாதுகாப்பை அளிக்க நீ தயாராக இருப்பாயாக.(94) ஜனங்களற்ற வனத்தில், எதிர்பாராத வகையில் ரக்ஷணத்திற்குரிய அவசிய காரியங்களைச் செய்ய வேண்டும். சௌமித்ரியே {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணா}, நீ முன்னே செல்வாயாக. சீதை உன்னைப் பின்தொடர்வாள்.(95) உன்னையும், சீதையையும் பாதுகாத்தவாறே நான் பின்தொடர்ந்து வருவேன். புருஷரிஷபா {மனிதர்களில் காளையே, லக்ஷ்மணா}, இங்கே நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(96) நம்மை மீறி நடைபெறும் காரியம் எதுவானாலும், அதை மீண்டும் சீராக்க இயலாது. நம்மால், வனவாசத்தின் துக்கத்தை வைதேஹி அனுபவிக்கப் போகிறாள்.(97) அடர்த்தியான ஜனங்களும், க்ஷேத்திரங்களும் {கழனிகளும்}, அராமங்களும் {தோட்டங்களும்} காணப்படாததும், சீரற்ற தன்மைகளைக் கொண்டதுமான {மேடு பள்ளங்களுடன் கூடியதுமான} வனத்திற்குள் இவள் {சீதை} பிரவேசிக்கப்போகிறாள்" {என்றான் ராமன்}.(98)

இராமனின் சொற்களைக் கேட்ட லக்ஷ்மணன் {அனைவருக்கும்} முன்னே சென்றான். உடனே சீதையும், ரகுநந்தனனான அந்த ராகவனைப் பின்தொடர்ந்தாள்.(99) தபஸ்வியான சுமந்திரன், கங்கையின் மறுகரையை விரைவாக அடைந்த ராமனை இடையறாமல் கண்டு, அவன் நெடுந்தூரத்தை அடைந்ததால் அவனைக் காண முடியாமல் கலக்கமடைந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான்.(100) லோகபாலர்களுக்கு நிகரான செல்வாக்குடையவனும், வரதனுமான {வரங்களை அளிப்பவனுமான} அந்த மஹாத்மா {ராமன்}, அந்த மஹாநதியை {கங்கையைக்} கடந்ததும், அழகிய பயிர்க்கழனிகளையே மாலையாகக் கொண்டதும், மனக்களிப்பைத் தருவதுமான வத்ஸத்தை {வத்ஸ தேசத்தை} மெல்ல மெல்ல நெருங்கினான்.(101) பசித்திருந்த இருவரும் {ராமனும், லக்ஷ்மணனும்}, வராஹம் {பன்றி}, ருஷ்யம் {கலைமான்}, பிருஷதம் {புள்ளிமான்}, மஹாருரு { கருப்பு சாரல்களுடைய பெரிய மான்} என்கிற நான்கு வகை மிருகங்களைக் கொன்று[3], அவற்றில் தூய்மையான பகுதிகளைத் துரிதமாக உண்டு, மாலை வேளையில் வசிப்பதற்காக ஒரு வனஸ்பதியை {மரத்தை} அடைந்தனர்.(102)

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே ராமனும், லக்ஷ்மணனும் கொன்ற வராஹம் என்பது பன்றியாகவும் இருக்கலாம், மானாகவும் இருக்கலாம், ருஷ்யம் என்பது மானையும், பிருஷதம் என்பது புள்ளிமானையும், மஹாருரு என்பது பெரியவகை மானையும் குறிக்கும். மிருகம் என்ற சொல்லுக்கு மான் என்ற பொருளும், விலங்கு என்ற பொருளும் பொருந்தும். ஒருவேளை அவர்கள் நான்கு வகை மான்களைக் கொன்றிருக்கலாம். அல்லது மூன்று வகை மான்களையும், ஒரு பன்றியையும் கொன்றிருக்கலாம்" என்றிருக்கிறது.

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 052ல் உள்ள சுலோகங்கள் : 102

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை