Rama consoles Bharata | Ayodhya-Kanda-Sarga-105 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அழுது புலம்பிய பரதனைத் தேற்றிய ராமன்...
நட்பு கணங்களால் {நண்பர்கள் கூட்டத்தால்} சூழப்பட்ட அந்தப் புருஷசிம்மங்கள் அழுதுகொண்டிருந்த அந்த துக்கத்துடனேயே அவ்விரவும் கழிந்தது.(1) இரவு அழகாக விடிந்தபோது {விடியற்காலையில்}, உடன்பிறந்தோரான அவர்கள், மந்தாகினியில் {மால்யவதி நதியில்} ஹோமமுஞ் ஜபமும் செய்து, நண்பர்கள் சகிதராக ராமனிடம் சென்றனர்.(2)
அவர்களில் எவரும் எதுவும் பேசாமல் அமர்ந்தாலும், பரதன், நண்பர்கள் மத்தியில் ராமனிடம் {பின்வரும்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(3) "இந்த ராஜ்ஜியத்தை எனக்கு தத்தம் செய்ததில் என் மாதா {கைகேயி} ஆறுதலடைந்தாள். உண்மையில் நான் அதை உமக்கு தத்தம் செய்கிறேன். அகண்டகமான {முட்களற்ற / இடையூறுகளற்ற} ராஜ்ஜியத்தை நீர் அனுபவிப்பீராக.(4) கார்காலத்தின் மஹத்தான ஜலப்ரவாக வேகத்தில் உடைந்த சேதுவை {அணையை / பாலத்தைப்} போன்ற இந்த மஹத்தான ராஜ்ஜியகண்டத்தை உம்மாலன்றி வேறு எவராலும் {மீண்டும்} கட்ட இயலாது.(5) அச்வத்தின் கதியைக் கழுதையும், தார்க்ஷ்யனின் {கருடனின்} கதியை மற்ற பறவை இனங்களும் {பின்பற்ற முடியாததைப்} போல, மஹீபதியே {பூமியின் தலைவரே}, உமது கதியை {வழியைப்} பின்பற்றும் சக்தி எனக்கில்லை.(6) இராமரே, எப்போதும் பிறர் ஜீவிக்க ஏதுவாயிருப்பவன் நல்ல ஜீவன், பிறரைச் சார்ந்து ஜீவிப்பவன் துர்ஜீவன் {பிறர் வாழ ஆதரிப்பவன் நல்லவன். பிறர் ஆதரவில் வாழ்பவன் இழிந்தவன்}.(7)
ஒரு புருஷன் நட்ட விருக்ஷம், உயரம் குறைந்தவர்களால் ஏற முடியாத பெரும் தண்டுகளுடன் கூடிய பெரும் மரமானாலும்,{8} ஒரு காலத்தில் புஷ்பித்தும், அந்த விருக்ஷம் பழங்களை விளைவிக்காமல் போனால், நட்ட நோக்கம் நிறைவேறாதவன் பிரீதியடையமாட்டான்.{9} மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவரே}, இந்த உபமானத்தின் {உவமையின்} அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, தலைவர்களில் சிறந்தவரான நீர், அடியவர்களான எங்களை ஆள்வீராக.(8-10) மஹாராஜரே, ராஜ்ஜியத்தில் நிலைத்திருக்கும் அரிந்தமரான {பகைவரை வெல்வபரான} உம்மை எங்கும் ஒளிவீசும் ஆதித்யனை {சூரியனைப்} போல முதன்மையானவர்கள் அனைவரும் காணட்டும்.(11) காகுத்ஸ்தரே, நீர் திரும்பி வரும்போது மதங்கொண்ட குஞ்சரங்கள் {யானைகள்} பிளிறட்டும், அந்தப்புரத்துப் பெண்கள் மனம் நிறைந்தவர்களாக மகிழ்ச்சியடையட்டும்" {என்றான் பரதன்}.(12)
நகரத்தின் பல்வேறு ஜனங்களும், அந்த பரதன் இவ்வாறு ராமனிடம் வேண்டியபடியே சொன்ன சொற்களைக் கேட்டு, "இது நன்று" என்று சொல்லி மகிழ்ந்தனர்.(13) ஆத்மவானும், உறுதிமிக்கவனுமான ராமன், துக்கத்துடன் இவ்வாறு புலம்பும் சிறப்புமிக்க பரதனைக் கண்டு {பின்வருமாறு} ஆறுதல் கூறினான்:(14) "இந்தப் புருஷன் {மனிதன்}, தான் விரும்பியதைத் தானே செய்ய இயலாதவன். இவன் ஈசுவரனல்லன். விதியே {தெய்வமே} இவனை அங்கேயும் இங்கேயும் செலுத்துகிறது.(15) சேர்க்கப்பட்டவை அனைத்தும் இறுதியில் அழிவடைகின்றன. எழுவன இறுதியில் விழுகின்றன. இணைவன இறுதியில் பிரிகின்றன. ஜீவிதத்திற்கு {வாழ்விற்கு / உயிருக்கு} மரணமே அந்தம்.(16) பழுத்த பழங்களுக்கு, விழுவதைத் தவிர வேறு பயமில்லாததைப் போலவே, பிறவியடைந்த நரருக்கும் மரணத்தைத் தவிர வேறு எந்த பயமுமில்லை.(17) திடமான தூண்களுடன் கூடிய வீடும், சிதைவடைந்து வீழ்வதைப் போலவே, நரர்களும், முதுமை, மரணம் ஆகியவற்றின் வசப்பட்டு அழிவடைகிறார்கள்.(18)
கடந்த இரவு திரும்புவதில்லை, பூர்ண {நிரம்பி வழியும்} யமுனையும், நீர் நிறைந்த சமுத்திரத்தை நோக்கியே எப்போதும் பாய்கிறாள்.(19) கோடைகால வெப்பக்கதிர்கள் ஜலத்தை வற்றச் செய்வதைப் போல, இங்கே {இம்மையில்} கடந்து போகும் பகலிரவுகள் பிராணிகள் அனைத்தின் ஆயுளையும் வேகமாகக் குறைக்கின்றன.(20) நீ உனக்காக வருந்துவாயாக. மற்றொருவனுக்காக ஏன் வருந்துகிறாய்? நீ நின்றாலும், நடந்தாலும் உன் ஆயுள் குறையவே செய்கிறது.(21) மிருத்யு {மரணம் / யமன்} நம்மோடு நடக்கிறான், நாம் மிருத்யுவோடு அமர்கிறோம். நெடுந்தொலைவு பயணிக்கும் நாம் மிருத்யுவுடனே திரும்புகிறோம்.(22)
அவயங்கங்களில் மடிப்புகள் தோன்றி, மயிர்கள் நரைக்கும்போது முதுமையால் சோர்வடைந்து சிதையும் புருஷன் {மனிதன்} என்ன செய்வான்?(23) மனுஷ்யர்கள் ஆதித்தன் உதிக்கும்போதும் மகிழ்கிறார்கள்; அந்த ரவி அஸ்தமிக்கும்போதும் மகிழ்கிறார்கள், தங்கள் ஜீவிதம் அழிவதை உணர இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(24) புத்தம்புதிதாகத் தோன்றுவதைப் போல ருதுக்களின் {பருவ காலங்களின்} தொடக்கத்தைக் கண்டு மகிழும் பிராணிகளின் பிராணன் {உயிரினங்களின் ஆயுளை} அடுத்தடுத்து மாறும் ருதுக்களில் அழிவையடைகிறது.(25) பெருங்கடலில் கட்டையும், மற்றொரு கட்டையும் குறிப்பிட்ட காலம் வரை சேர்ந்திருந்து பிரிவதைப் போலவே, பாரியைகளும், புத்திரர்களும், ஞாதிகளும் {மனைவியரும், மகன்களும், உறவினர்களும்}, தனங்களும் சேர்ந்து பிரிகின்றன. இந்தப் பிரிவை நிச்சயம் தவிர்க்க முடியாது.(26,27)
இங்கே {இம்மையில்} எந்தப் பிராணியாலும் அதனதன் பாவத்தில் {பிறப்பிறப்பில்} இருந்து தப்ப முடியாத அதே காரணத்தாலேயே பிரேதத்திற்காக துக்கமடைபவன் எவனிடமும் அழிவைத் தடுக்கும் சாமர்த்தியம் உண்டாவதில்லை. {எந்த உயிரினமும் இவ்வுலகில் தான் விரும்பியபடி செயல்பட முடியாது. எனவே, இறந்தவருக்காக எவரும் வருந்துவதில் பொருளில்லை}.(28) பாதையில் சென்று கொண்டிருக்கும் கூட்டத்திடம், ஓரத்தில் நின்று கொண்டிருப்பவன், "நானும் உங்களைப் பின்தொடர்ந்து வருவேன்" என்று சொல்வதைப் போலவே, நாமும் நம் பூர்வர்களான பித்ருபைதாமஹர்கள் {மூதாதையரான தந்தையும், பாட்டன்மாரும்} சென்ற தவிர்க்க இயலாத மார்க்கத்தில் செல்லவே வேண்டும். திரும்பாத பாதையை அடைந்ததற்காக ஏன் வருந்த வேண்டும்?(29,30) திரும்பாத ஓடையைப் போலவே, வயதும் கடந்து போகும். பிரஜைகள் சுகத்தையே நாடுபவர்களாகக் கருதப்படுவதால், ஒருவன் தன் ஆன்மசுகத்திலேயே ஈடுபட வேண்டும்.(31)
தர்மாத்மாவான நம் பிதாவும், பிருத்வீபதியுமான அந்த தசரதர், ஏராளமான தக்ஷிணைகளுடன் கூடிய மங்கல யாகங்கள் அனைத்தையும் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தார்.(32) நம் பிதா, பணியாட்களைப் பராமரித்து, பிரஜைகளை அருமையாகப் பரிபாலித்து, தர்மப்படி பொருளை ஈட்டி திரிதிவத்தை {சொர்க்கத்தை} அடைந்தார்.(33) நம் பிதாவான பிருத்வீபதி தசரதர், ஏராளமான தக்ஷிணைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்த சுபகர்மங்களால் {மங்கலச் செயல்களால்} ஸ்வர்க்க பிராப்தி அடைந்தார்.(34) அந்தப் பிருத்வீபதி, பலவிதமான யஜ்ஞங்களைச் செய்து, அளவில்லாத போகத்தை அனுபவித்து, உத்தமமான ஆயுளையும் பெற்று ஸ்வர்க்கத்திற்குச் சென்றார்.(35)
தாதா {ஐயா}, நல்லோரால் மதிக்கப்பட்டவரும், உத்தம ஆயுளையும், போகங்களையும் அடைந்தவருமான நம் பிதா தசரதருக்காக வருந்துவது தகாது.(36) நம் பிதாவான அவர், சிதைந்து போன தன் மனுஷ தேஹத்தைக் கைவிட்டு, பிரம்மலோகத்தில் செழிப்பாகக் காலங்கழிக்கும் தெய்வ நிலையை அடைந்திருக்கிறார்.(37) நானோ, நீயோ அவருக்காக வருந்தியதைப் போல எந்த விவேகியும், கல்விமானும், புத்திமானும் அழுது புலம்ப மாட்டான்.(38) தீரமும், மதியும் மிக்கவன், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இந்த சோகங்களையும், அழுகையையும், புலம்பல்களையும் தவிர்க்க வேண்டும்.(39)
வாதிப்பவர்களில் சிறந்தவனே, சோகம் வேண்டாம். அமைதியடைவாயாக. புலன்களை அடக்கிய நம் பிதா உன்னை நியமித்திருக்கும் நகரத்திற்குச் சென்று வாழ்வாயாக.(40) புண்ணிய கர்மங்களைச் செய்தவரும், ஆரியருமான நம் பிதா என்னை எங்கே நியமித்தாரோ அங்கேயே நானும் அவரது சாசனத்தை நிறைவேற்றுவேன்.(41) அரிந்தமா {பகைவரை வெல்பவனே}, அவர் நமது பந்து. அவர் நமது பிதா. நான் அவரது சாசனத்தைக் கைவிடுவது நியாயமல்ல. அதை நீயும் எப்போதும் மதிக்க வேண்டும்.(42)
இராகவா {பரதா}, தர்மசாரியான {தர்ம வழியில் நடந்த} நம் பிதாவின் சொற்களை மதிக்கவே வனவாசம் செய்யும் கர்மத்திற்கு {செயலுக்கு} நான் உடன்படுகிறேன்.(43) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, பரலோகத்தை வெல்ல விரும்பும் நரன் {மனிதன்}, தார்மிகனாகவும், இரக்கமுள்ளவனாகவும், குருவுக்கு {பெரியோருக்குக்} கீழ்ப்படிபவனாகவும் இருக்க வேண்டும்.(44) நரரிஷபா {மனிதர்களில் காளையே}, நம் பிதாவான தசரதரின் சுபவிருத்தத்தை {நன்னடத்தையைக்} கண்டு, உன் சுபாவத்தை அமைத்துக் கொள்வாயாக" {என்றான் ராமன்}.(45)
மஹாத்மாவும், பிரபுவுமான ராமன், இவ்வாறே 'பிதாவின் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டும்' என்ற அர்த்தம் பொதிந்த இந்தச் சொற்களை தன் தம்பியிடம் சொல்லிவிட்டு ஒரு முஹூர்த்தம் அமைதியாக இருந்தான்.(46)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 105ல் உள்ள சுலோகங்கள்: 46
Previous | | Sanskrit | | English | | Next |