Monday, 23 January 2023

இராமனின் நாஸ்திக மறுப்பு | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 109 (39)

Rama rejects atheism | Ayodhya-Kanda-Sarga-109 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தர்மம், வாய்மை ஆகியவற்றின் மேன்மையைப் பின்பற்றுவதற்காக நாத்திகம் மறுத்து தர்மத்தை உரைத்த ராமன்...

Rama reproachin Jabali

சத்தியாத்மர்களில் {வாய்மையை ஆன்மாவாகக் கொண்டவர்களில்} சிறந்தவனான ராமன், ஜாபாலியின் சொற்களைக் கேட்டு, பக்தியுடனும், கலக்கமடையாத சுயபுத்தியுடனும் {பின்வருமாறு} சொன்னான்:(1) "என்னிடம் கொண்ட பிரியத்தினால் இப்போது நீர் சொன்ன சொற்கள், செய்யத்தக்க காரியங்கள் போன்று தோன்றினாலும் செய்யத்தகாதனவாகும். ஏற்புடையவை போன்று தோன்றினாலும் ஏற்கமுடியாதவையாகும்.(2) மரியாதையில்லாதவனும், பாபச் செயலுக்கு உடன்படுபவனும், கெட்ட பெயர் கொண்டவனும், தான் காணும் அனைத்திலும் பேதங்காண்பவனுமான புருஷன் {வேறுபாட்டைக் காண்பவனுமான மனிதன்}, நேர்மையானோரிடம் மதிப்பை ஈட்டமாட்டான்.(3) ஒருவன் நற்குலத்தில் பிறந்தவனா? கெட்ட குலத்தில் பிறந்தவனா? வீரனா? ஆண்மகன் என்ற வெற்றுச் செருக்குள்ளவனா? தூயவனா? தூய்மையற்றவனா? என்பதை அவனது நடத்தையே விளங்கச் செய்யும்.(4)

அனார்யனாக {இழிந்தவனாக} இருந்து, ஆரியனை {உன்னதமானவனைப்} போலும், நேர்மையற்றவனாகவும், தூய்மையற்றவனாகவும், நற்குணங்களற்றவனாகவும் இருந்து, நற்குணங்களைக் கொண்டவனைப் போலும், கெட்ட நடத்தையுள்ளவனாக இருந்து, நன்னடத்தையாளனைப் போலும், சுபமானவற்றை {நன்மையைக்} கைவிட்டு, தர்மவானைப் போலும், உலகத்தில் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டு, அதர்மத்தையே {அநீதியைப்} பின்பற்றி, கிரியா விதிகளை {ஒழுக்கவிதிகளை} நான் புறக்கணித்தால், காரியாகாரியங்களில் {தக்கன தகாதனவற்றில்} வேறுபாடு காணத் தெரிந்த {பகுத்தறிவுள்ள} எந்த மனிதன்தான் இவ்வுலகில் என்னை மதிப்பான்?(5-7) இவ்வாறு நான் செய்த பிரதிஜ்ஞையை முறித்தால், {சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும் நல்ல} நடத்தையை நான் எவனுக்குச் சொல்ல முடியும்? நான் எப்படி ஸ்வர்க்கத்தை அடைவேன்?(8) 

இராஜாக்கள் எந்நடத்தையில் நடந்து கொள்கிறார்களோ, அவ்வாறே பிரஜைகளும் நடப்பார்கள் என்பதால் இவ்வுலகத்தார் அனைவரும் தாங்கள் விரும்பியபடியே நடந்து கொள்வார்கள் {உலகத்தோர் யாவரும் விரும்பியவாறு நடக்கத் தொடங்குவார்கள்}.(9) கொடுமையின்மையும் {அஹிம்சையும்}, சத்தியமுங் கூடியதே சனாதன ராஜ நடை {தொன்மையான அரசவொழுக்கம்} என்பதால், ராஜ்ஜியமானது, சத்தியத்தையே தன் சாரமாகக் கொண்டிருக்க வேண்டும். சத்தியத்திலேயே உலகம் நிலைத்திருக்கிறது.(10) ரிஷிகளும், தேவர்களுங் கூட சத்தியத்தை மட்டுமே மதிக்கின்றனர். சத்தியவாதி {வாய்மை பேசுபவன்} இவ்வுலகில் பரம நிலையை {உயர்ந்த நிலையை} அடைகிறான்.(11) இவ்வுலகில் பொய் பேசும் நரனை ஸர்ப்பத்தைப் போலக் கண்டு {மக்கள்} நடுங்குகிறார்கள். சத்தியமே பரதர்மம் {வாய்மையே உயர்ந்த அறம்} என்றும், ஸ்வர்க்கத்தின் மூலம் {பிறப்பிடம்} என்றும் சொல்லப்படுகிறது.(12) உலகத்தில் சத்தியமே {வாய்மையே} ஈசுவரன். சத்தியத்தில்தான் பத்மை {அதிர்ஷ்டதேவி} எப்போதும் குடியிருக்கிறாள். அனைத்தும் சத்தியத்தையே தங்கள் மூலமாக {ஆதாரமாகக்} கொண்டிருக்கின்றன. சத்தியத்தைவிட பரமநிலை வேறெதும் இல்லை.(13)

கொடைகள், யாகங்கள், ஹோமங்கள், தபங்கள், வேதங்கள் ஆகியன சத்தியத்தையே தங்கள் பிரதிஷ்டானமாக {அடித்தளமாகக்} கொண்டிருப்பதால், ஒருவன் சத்தியத்திற்கே முற்றாக அடிபணிய வேண்டும் {வாய்மையை ஒருபோதும் கைவிடலாகாது}.(14) {பயிலப்படும் வாய்மையின்படியே} ஒருவன் உலகை பாலிக்கிறான் {ஆள்கிறான்}, ஒருவன் குலத்தை பாலிக்கிறான், மற்றொருவன் நரகில் மூழ்குகிறான், இன்னொருவன் ஸ்வர்க்கத்திற்கு உயர எழுகிறான்.(15) சத்தியத்திற்கு உண்மையாக இருப்பவனான நான், சத்தியத்தைப் பயின்றவரான என் பிதாவின் ஆணையை ஏன் நிறைவேற்றக் கூடாது?(16) சத்தியத்திற்கு உண்மையாக இருக்கும் என்னால், லோபத்தாலோ {பேராசையாலோ}, மோஹத்தாலோ {மயக்கத்தாலோ}, தமோ குணத்துடன் சேர்ந்த அஞ்ஞானத்தாலோ குருவின் சத்திய சேதுவைத் தகர்க்க முடியாது. {என் தந்தையிடம் செய்து கொடுத்த உறுதி மொழியை உடைக்க முடியாது}.(17) அசத்தியசந்தர்கள் {வாய்மையற்றவர்கள்}, நிலையற்றவர்கள், மனத்தில் உறுதியற்றவர்கள் ஆகியோரின் காணிக்கைகளை தேவர்களோ, பித்ருக்களோ ஏற்க மாட்டார்கள். இதுவே நமக்குக் கற்பிக்கப்பட்டது.(18)

சத்தியத்தின் வடிவிலான இந்த தர்மமே அந்தராத்மாவென நான் கருதுகிறேன். எனவேதான், அந்த பாரம் சத்புருஷர்களால் ஆதரிக்கப்படும் அபிமானத்தைப் பெற்றிருக்கிறது.(19) தர்மமென்ற போர்வையில் இழிந்தவர்களாலும், கொடூரர்களாலும், லுப்தர்களாலும் {பேராசைக்காரர்களாலும்}, பாபகர்மிகளாலும் {பாபச் செயல்புரியும் மனிதர்களாலும்} சேவிக்கப்படும் அதர்மமான க்ஷாத்ர தர்மத்தை {க்ஷத்திரியனின் கடமை எனச் சொல்லப்படுமறத்தை} நான் துறக்கிறேன்.(20) மனத்தால் உணர்ந்த பிறகே, காயத்தால் {உடலால்} பாபம் செய்யப்படுகிறது; நாவால் பொய்ம்மை பேசப்படுகிறது. இந்தப் பாதக கர்மம் {பாதகச் செயல் - உடல், மனம், நாவைச் சார்ந்து} மூன்று வகையானது.(21) பூமி {நிலம்}, கீர்த்தி {புகழ்}, வளம், லக்ஷ்மி {நற்பேறு} ஆகியவை உண்மையில் மனிதனைக் கவர்ந்திழுக்கின்றன. அவை எப்போதும் சத்தியத்திலேயே நிலைபெற்றிருக்கின்றன; எனவே, சத்தியத்தையே உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.(22) நீர் என்னிடம், "இந்த நல்லதைச் செய்" என்று சிறந்தவையாக சொன்னவை உண்மையில் அனாரியமானவை {தகுதியற்றவை}.(23)

இந்த வனவாசம் குறித்து என் குருவிடம் {தந்தை தசரதரிடம்} பிரதிஜ்ஞை செய்துவிட்டு {உறுதியளித்துவிட்டு}, அந்த குருவின் சொற்களை அலட்சியம் செய்து, பரதனுடைய சொற்களின்படி எப்படி நான் செயல்படுவேன்?(24) குருசந்நிதானத்தில் நான் ஸ்திரமான பிரதிஜ்ஞையை ஏற்ற போது {என் தந்தையின் முன்னிலையில் நான் திடமான உறுதிமொழியை ஏற்றபோது}, கைகேயி தேவி பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள்.(25) நான் இவ்வகையில் வனவாசத்தை ஏற்றுக் கொண்டு, உலக யாத்திரையை மேற்கொண்டு {என் உலகப் பயணத்தைத் தொடர்ந்து, மனத்தளவிலும், உடலளவிலும்} தூய்மையானவனாக, போஜன நியமத்துடன் {உணவுக் கட்டுப்பாட்டுடன்}, புண்ணியமான கிழங்குகள், புஷ்பங்கள், பழங்கள் ஆகியவற்றைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அளித்து, பஞ்சவர்க்கத்தை அடக்கி {ஐம்புலன் அடக்கத்துடன்}, வஞ்சனையில்லாமலும், முழுமையான அர்ப்பணிப்புடனும், காரியாகாரியங்களைப் பகுத்துணர்ந்து செயல்படுவேன் {எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற பகுத்தறிவுடனேயே என் காலத்தைக் கழிப்பேன்}.(26,27) இந்தக் கர்ம பூமியை {செயற்களத்தை} அடைந்தவன் சுப கர்மங்களையே செய்ய வேண்டும். அக்னியும் {நெருப்பானவனும்}, வாயுவும் {காற்றானவனும்}, சோமனும் {நிலவானவனும்} தங்கள் கர்மங்களுக்கான பலனையே தங்கள் பாகமாகப் பெறுகின்றனர்.(28) தேவராதன் {இந்திரன்} நூறு வேள்விகளைச் செய்துவிட்டுத் திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றான். மஹரிஷிகள் கடுந்தபங்களைச் செய்தே திவத்தை {சொர்க்கத்தை} அடைந்தனர்" {என்றான் ராமன்}.(29)

உக்கிர தேஜஸ்ஸுடன் கூடிய {பேரொளியுடன் கூடிய} அந்த நிருபதி தனயன் {இளவரசன் ராமன், ஜாபாலியால்} அங்கே சொல்லப்பட்ட நாஸ்திக வாக்கியங்களைக் கேட்ட பிறகு, அவர் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் மீண்டும் நிந்திக்கும் வகையில் அவரிடம்,(30) "சத்தியம், தர்மம், பராக்கிரமம், பூதங்களிடம் {உயிரினங்களிடம்} கருணை, பிரியவாதம் {இன்சொல்}, துவிஜர்களையும், தேவர்களையும், அதிதிகளையும் பூஜித்தல் {இருபிறப்பாளர்களையும், தேவர்களையும், எதிர்பாரா விருந்தினர்களையும் வழிபடுதல்} ஆகியவை திரிதிவத்திற்கான {சொர்க்கத்திற்கான} பாதைகளென நல்லோர் சொல்கின்றனர்.(31) எனவே, எதில் அர்த்தம் {பொருள் / பெரும்பயன்} உள்ளது என்பதை நன்கறிந்த விப்ரர்கள் {கல்விமான்கள் / பிராமணர்கள்}, தங்கள் நோக்கத்தைப் பின்பற்றித் தங்கள் தர்மம் சகலத்தையும் {கடமையை முழுமையும்}, முறையாகவும், கவனமாகவும் நிறைவேற்றி, லோகாகமங்களை {உயர்ந்த உலகங்களை} நாடுகின்றனர்.(32) 

இவ்வாறாக தர்மத்தின் பாதையில் இருந்து விலகிய புத்தியுடைய உறுதியான நாஸ்திகரும், விஷமத்தனமான {தவறான வழிவகுக்கும்} புத்தியைக் கொண்டவருமான உம்மைப் பணிக்கு ஏற்றுக் கொண்டதில் என் பிதாவின் கர்மத்தை {என் தந்தை செய்த செயலை} நான் நிந்திக்கிறேன்.(33) சோர புத்தனே {கள்ள புத்தியைக் கொண்ட போலி அறிவாளியே} நாஸ்திகனென அறிவதற்கு இஃது ஏற்றது. எனவே, ஒரு புத்தன்[1] {புத்திமான்} மக்கள் நலனில் ஐயங்கொண்ட நாஸ்திகனுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது.(34) உமக்கும் முன்பே வாழ்ந்த ஜனங்கள், இஹம், பரம் {இம்மை, மறுமை ஆகியவற்றில் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள்} அனைத்தையும் கைவிட்டு சுபகர்மங்கள் {மங்கலச் செயல்கள்} பலவற்றைச் செய்திருக்கின்றனர். எனவேதான், துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்} புனித நெருப்பில் ஹோமம் செய்து, உன்னத காரியங்களைச் செய்கிறார்கள்.(35) தர்மத்தில் அர்ப்பணிப்புள்ள முனிவர்கள், ஏராளமான தானங்களைச் செய்பவர்களும், அஹிம்சையைப் பின்பற்றுபவர்களும், தேஜஸ்விகளுமான சத்புருஷர்களுடன் {நல்ல மனிதர்களுடன்} சேர்ந்து, தங்கள் களங்கங்களில் இருந்து விடுபட்டு உலகத்தால் பூஜிக்கப்படுகிறார்கள்" {என்றான் ராமன்}.(36)

[1] கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "நாம் அறிவாற்றல் என்றழைக்கும் அறைகூவலுக்குப் பதிலளிக்கும் சொல் இது. சத்தியமும், தெய்வமும் மிக நுட்பமானவை. சொற்கள், அல்லது வாதங்களின் வலையில் சிக்கிய மனத்தால் சத்தியத்தையோ, தெய்வத்தையோ புரிந்து கொள்ள முடியாது" என்றிருக்கிறது. "யதா² ஹி சோர꞉ ஸ ததா² ஹி பு³த்³த⁴ | ஸ்ததா²க³தம் நாஸ்திகமத்ர வித்⁴ஹி | தஸ்மாத்³தி⁴ ய꞉ ஶங்க்யதம꞉ ப்ரஜாநாம் | ந நாஸ்தி கேநாபி⁴முகோ² பு³த⁴꞉ ஸ்யாத் 2-109-34" என்பது மூலம். முதல் பத்தியில் வரும் "பு³த்³த⁴" என்பதற்கு நல்லபுத்தி என்றும் "சோர" என்பதற்குக் களவு என்றும் பொருள் கொள்ள வேண்டும். "நல்லபுத்தி கொண்டவன் போன்ற கள்வன்" என்பது பொருள். அதுவே இங்கே கள்ள புத்தன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பொருளை மேலும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள இந்த அத்தியாயத்தில் ஏற்கனவே 5-7 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை மீண்டும் பார்க்கவும். இந்த சுலோகத்தின் இறுதி பத்தியில் வரும் "பு³த⁴꞉" புத்தன் என்பதற்கு "நல்லோன்" என்பது பொருள். இங்கே பௌத்தம் குறித்தோ, புத்தம் குறித்தோ, சார்வாகம் குறித்தோ ஏதும் சொல்லப்பட வில்லை. அறத்தில் நம்பிக்கையற்ற நாத்திகத்திற்கே பதில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இது போன்ற அச்சமில்லா புத்தியைக் கொண்டவனும், கோபம் நிறைந்த சொற்களைப் பேசியவனுமான அந்த மஹாத்மாவிடம் {ராமனிடம்} அந்த விப்ரர் {ஜாபாலி}, சத்தியத்துடன் கூடிய தகுந்த சொற்களில் ஆஸ்திகத்தைச் சொல்லும் வகையில், பணிவுடன்(37) "நான் நாஸ்திர்களின் சொற்களைப் பேசவில்லை. நான் நாஸ்திகனுமல்லேன். {பரலோகம்} ஏதுமில்லை என்று நான் சொல்லவில்லை. காலத்தை {ஆபத்து காலத்தை} உணர்ந்தே நான் ஆஸ்திகனாகவும், மீண்டும் நாஸ்திகனாகவும் இருப்பேன்.(38) இராமா, அந்தக் காலமும், இந்தக் காலமும் மெல்லத் தானாக வந்து சேர்கிறது. என் வாயிலிருந்து வெளிப்பட்டு, நான் சொன்ன நாஸ்திகச் சொற்கள், உன்னைத் தணிவடையச் செய்து, {அயோத்திக்குத்} திரும்ப வைக்க வேண்டும் என்ற நோக்கில் உன் நிமித்தமாகவே சொல்லப்பட்டன" {என்றார் ஜாபாலி}.(39)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 109ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்