Pairs of Kinnaras and Vidhyadharas | Ayodhya-Kanda-Sarga-094 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையிடம் சித்திரகூட மலையின் அழகை வர்ணித்த ராமன்...
அப்போது அந்த கிரியில் நீண்ட காலம் வசித்திருந்தவனும், அமரனைப் போன்றவனும், கிரிவனப் பிரியனும் {தேவனைப் போன்றவனும், மலைகளையும், காடுகளையும் விரும்புகிறவனும்}, வைதேஹியின் பிரியத்தை விரும்புகிறவனும், தன் சித்தத்திலேயே மகிழ்ந்திருப்பவனுமான தாசரதி {தசரத மகன் ராமன்}, புரந்தரன் சசியிடம் {இந்திரன், இந்திராணியிடம் காட்டுவதைப்} போலத் தன் பாரியையிடம் அழகிய சித்திரகூடத்தைக் காட்டி {பின்வருமாறு} வர்ணித்தான்:(1,2) "பத்ரையே {மென்மையானவளே}, ரமணீகரமான இந்த கிரியைக் காணும்போது, ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறியதோ, அன்பர்கள் {நண்பர்கள்} இல்லாமல் வாழ்வதோ மனத்தில் கலக்கத்தை ஏற்படுத்தவில்லை.(3) பத்ரையே, நானாவித பறவைகள் நிறைந்ததும், தாதுக்கள் மண்டிக்கிடப்பதும், சிகரங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்த அசலம் {மலை} வானை நோக்கி உயர்வதைப் பார்.(4)
தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த அசலேந்திரத்தில் சில தேசங்கள் {இந்த மலையரசன் மீதிருக்கும் சில இடங்கள்}, வெள்ளியைப் போன்றும், சில {இடங்கள்} ரத்தம் நிறத்திலும், மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திலும், சில மணிகளிற் சிறந்தவற்றைப் போல மின்னிக் கொண்டும், தாழம்பூவின் வண்ணத்திலும், புஷ்பராகம், ஸ்படிகத்தைப் போன்றும் மின்னிக் கொண்டும், சில ஜோதிரசத்தின் {நட்சத்திரங்களின் / பாதரசத்தின்} பிரகாசத்துடனும் மின்னிக் கொண்டுமிருக்கின்றன.(5,6) இந்த சைலம் {மலை}, சாந்தமான நானாவித மிருக கணங்களாலும் {மான் கூட்டங்களுடனும்}, புலிகள், சிறுத்தைகள், கரடிகள் ஆகியவற்றாலும், பக்ஷிகள் {பறவைகள்} பலவற்றாலும் நிறைந்திருக்கிறது.(7)
நிழல் தரும் ஆம் {மா}, ஜம்பு {நாவல்}, அசனம் {வேங்கை}, லோத்ரம் {வெள்ளலத்தி}, பிரியாளம் {முள்ளம்}, பனசை {பலா}, தவம் {கொன்றை}, அங்கோலம் {அழிஞ்சில்}, அழகிய தினிசம், பில்வம், திந்துகம் {தும்பை}, வேணு {மூங்கில்},{8} காஷ்மரி {குமிழம்}, அரிஷ்டம் {வேம்பு}, வருணம் {மாவலிங்கம்}, மதூகம் {இலுப்பை}, திலகம் {மஞ்சாடி}, பதரி {இலந்தை}, ஆமலகை {நெல்லி}, நீபம் {கடம்பு}, வேத்ரம் {பிரம்பு}, தன்வனம் {இந்திரம்}, பீஜகம் {எலுமிச்சை / மாதுளை} முதலிய மரங்களில்{9} நிறைந்திருக்கும் மனோகரமான புஷ்பங்களும், பழங்களும் இந்த கிரியின் அழகை அதிகரிக்கின்றன.(8-10)
பத்ரையே, ரம்மியமான இந்த சைல பிரஸ்தங்களில் {மலையின் சமதளங்களில்}, ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தும் வகையில் இணைகளுடன் உற்சாகமாக விளையாடித் திரியும் இந்தக் கின்னரர்களைப் பார்[1].(11) மனோகரமாக விளையாடித் திரியும் வித்யாதரர்களின் கட்கங்களும், சிறந்த ஆடைகளும் {வித்யாதரர்களின் வாள்களும், வித்யாதரிகளின் ஆடைகளும்} அதோ அந்த ஷாகாக்களில் {கிளைகளில்} தொங்குவதைப் பார்[2].(12) ஆங்காங்கே பெருகியோடும் ஜலப்ரபாதைகளாலும் {அருவிகளாலும்}, உத்பேதைகளாலும் {சுனைகளாலும்}, நிஷ்யந்தங்களாலும் {மலையூற்றுகளாலும்} மதம்பெருக்கும் ஒரு துவிபத்தை {யானைப்} போல இந்த சைலம் {மலை} ஒளிர்கிறது.(13) குரோணதர்பணஞ் செய்யும் {நுகரும் புலனை [மூக்கை] நிறைவடையச் செய்யும்} பல்வேறு புஷ்ப கந்தங்களை {பல்வேறு மலர்களின் நறுமணங்களை} சுமந்து வரும் இந்தக் குகைக் காற்றினால் எந்த நரன்தான் {மனிதன்தான்} மகிழ்ச்சியடைய மாட்டான்?(14)
[1] ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலேகூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்பஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்கப்பாடுகின்ற கின்னர மிதுனங்கள் பாராய்.- கம்பராமாயணம் 2057ம் பாடல், சித்திரகூடப்படலம்பொருள்: தோகை விரித்து ஆடுகின்ற மயிலைவிட அழகானவளே, குயிலைப் போன்ற குரல் படைத்தவளே, கணவர்களின் மீது ஊடல் கொண்டு, தங்கள் மனங் கொதிக்க அவர்களுடன் கூடாமல் இருக்கும் குறத்திகளை அன்பினால் உருக்கும் வகையில் அவர்கள் பார்க்கும்படி இணைந்திருக்கும் இந்த கின்னர இணையைப் பார்ப்பாயாக.
[2] மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவசெஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவவிஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமலப்பஞ்சு அளாவிய சீறடிச் சுவடுகள் பாராய்- கம்பராமாயணம் 2065ம் பாடல், சித்திரகூடப்படலம்பொருள்: மேகங்கள் நெருங்கிய மலையின் மாணிக்கப் பாறையில் மறைந்து, செம்பச்சையாக நீண்டிருக்கும் மரகதப் பாறைகளில் தோன்றும் விஞ்சை நாடியர் {கல்வி நாடிய வித்யாதரிகள்} தங்கள் கணவரோடு ஊடல் கொண்டதால் கோபத்தில் நடந்த அவர்களின் குற்றமற்ற பஞ்சு போன்ற சிறிய பாதங்களின் சுவடுகளைப் பாராய்.
அநிந்தையே {குற்றமற்றவளே}, உன்னுடனும், லக்ஷ்மணனுடனும் இங்கே அநேக சரத்காலங்கள் வாழ்ந்தாலும் ஒருபோதும் சோகம் என்னை எரிக்காது.(15) பாமினி {அன்புக்குரியவளே}, ஏராளமான புஷ்பங்களும், பழங்களும், நானாவித பறவைகளும், விசித்திர சிகரங்களும் இருக்கும் இந்த ரம்மியமான இடம் என்னை மகிழ்ச்சியில் மயங்கச் செய்கிறது.(16) பிதாவின் தர்மக்கடனில் இருந்து விடுபடுதல், பரதனுக்குப் பிரியமானதைச் செய்தல் என்ற இரண்டு பலன்கள் இந்த வனவாசத்தினால் கிடைக்கின்றன.(17) ஹே! வைதேஹி, இந்தச் சித்திரகூடத்தில் என்னுடன் சேர்ந்து மனம், வாக்கு, காயம் {உடல்} ஆகியவற்றுக்கு சம்மதமுள்ள {ஏற்புடைய} விதவிதமான பொருள்களைக் கண்டு நீ மகிழ்ச்சியடைகிறாயா?(18) புராதன ராஜரிஷிகளும், என்னுடைய பரமபிதாமஹர்களும் {பழங்கால அரசமுனிகளும், என்னுடைய முப்பாட்டன்களும்}, "ஒரு ராஜன், பிரேதமான பிறகு நற்கதியை {முக்தியை} அடைவதற்கான அமிர்தமே இந்த வனவாசம்" என்கின்றனர்.(19)
இந்த விசாலமான சைலத்தில் நூற்றுக்கணக்கில் ஏராளமாகவுள்ள பாறைகள், நீலம் {கறுப்பு}, மஞ்சள், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட பல வர்ணங்களில் சுற்றிலும் ஒளிர்கின்றன.(20) இந்த அசலேந்திரத்தில் {மலைகளின் தலைவனான சித்திரகூடத்தில்} ஆயிரக்கணக்கான ஔஷதங்கள் {மூலிகைகள்}, தன்னொளியின் பிரகாசத்தில் ஹுதாசன சிகையைப் போல நிசியில் {நெருப்புச்சுடர்களைப் போல இரவில்} ஒளிர்கின்றன.(21) பாமினி {அன்புக்குரியவளே}, இந்தப் பர்வதத்தின் சில தேசங்கள் {இடங்கள்} மாளிகைகள் போலவும், சில உத்யானவனங்களைப் போலவும், சில ஒரே பாறையாகவும் தோன்றுகின்றன.(22) வஸுதையை {பூமியைப்} பிளந்து உயர்ந்தது போல இந்த சித்திரகூடம் துலங்குகிறது. சித்திரகூடத்தின் இந்தக் கூடம் {மேடு / சிகரம்} அனைத்துப் பக்கங்களிலும் இருந்தும் சுபமாக {நன்றாக / அழகாகத்} தெரிகிறது.(23)
குஷ்டம் {கீழாநெல்லி}, புன்னகம் {புன்னை மலர்}, தகர மலர், மாவிலைகள் ஆகியவற்றின் மேல் தாமரை மலரிதழ்கள் பரவியிருக்கும் இந்த மெத்தைகள் காமுகர்களுக்கு {காதலர்களுக்கு} நிறைவளிப்பவையாக விளங்குவதைப் பார்.(24) வனிதையே {பெண்ணே}, காமுகர்களால் நசுக்கி வீசப்பட்டனவாகப் புலப்படும் இந்தக் கமல {தாமரை} மலர் மாலைகளையும், விதவிதமான பழங்களையும் பார்.(25) ஏராளமான கிழங்குகள், பழங்களுடன் கூடிய இந்தச் சித்திரகூடப் பர்வதம், வஸ்வௌகஸாரம் {குபேரனின் தலைநகரான அளகாபுரி}, நளினி {இந்திரனின் தலைநகரான அமராவதி}, உத்தரகுரு {வடகுருதேசம்} ஆகியவற்றையும் விஞ்சியதாகத் திகழ்கிறது.(26) வனிதையே, சீதையே, உன்னுடனும், லக்ஷ்மணனுடனும் நான் இன்புற்றிருக்கும் இந்தக் காலத்தில், பரம நியமங்களைப் பின்பற்றி, குலதர்மத்தை வளர்த்து, நல்லோரால் நிறுவப்பட்ட பாதையில் இன்பத்தை அடைவேன்" {என்றான் ராமன்}.(27)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 094ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |