Speech of the noble | Ayodhya-Kanda-Sarga-082 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் அரியணையை அபகரிக்க மறுத்த பரதன்; கானகம் செல்ல ஆயத்தமானது...
புத்திமானான பரதன், நன்கறியப்பட்ட கிரஹங்களுடனும், பூர்ணச்சந்திரனுடனும் கூடிய இரவைப் போல ஆரிய கணங்கள் {மதிப்புமிக்க மனிதர்கள்} நிறைந்த அந்த சபையைக் கண்டான்.(1) அந்த உத்தம சபையானது, தத்தமக்குரிய ஆசனங்களில் அமர்ந்த ஆரியர்களின் நறுமணமிக்க வஸ்திரங்களால் உண்டான ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது.(2) வித்வஜனங்களால் சம்பூர்ணமடைந்த {கற்றோரால் நிறைந்த} அந்த அழகிய சபையானது, கூதிர் காலத்தில் பூர்ணச்சந்திரனுடன் கூடிய இரவைப் போலத் தெரிந்தது.(3)
தர்மத்தின் வித்தாகத் திகழ்பவரான புரோஹிதர் {வசிஷ்டர்}, இராஜனின் மொத்த பிரகிருதியர்கள் {இராஜ இயல்புடன் கூடிய / அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்} அனைவரையும் கண்டு, பரதனிடம் இந்த மிருதுவான வாக்கியங்களைச் சொன்னார்:(4) "தாதா {குழந்தாய்}, தர்மம் பயின்றவனான தசரத ராஜா, தன, தானியங்களுடன் கூடிய இந்தப் பரந்த பிருத்வியை உனக்கு அளித்துவிட்டு ஸ்வர்க்கத்திற்குச் சென்றார்.(5) சத்தியத்தில் திடமாக இருந்த ராமனும், நல்லோரின் தர்மத்தை நினைவுகூர்ந்து, ஜோதியைக் கைவிடாமல் உதிக்கும் சந்திரனைப் போல, தன் பிதாவின் ஆணையைப் புறக்கணிக்காமல் சென்றான்.(6) உன் தந்தையும் {தசரதனும்}, உன்னுடன் பிறந்தவனும் {ராமனும்}, முள்ளகன்ற {பகைவரற்ற} ராஜ்ஜியத்தை உனக்கு அளித்திருக்கின்றனர். மகிழ்ச்சியுடன் கூடிய அமாத்தியர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்ந்து அதை அனுபவிப்பாயாக. சீக்கிரமே அபிஷேகம் செய்து கொள்வாயாக.(7) வடக்கத்தியர்களும், மேற்கத்தியர்களும், தெற்கத்தியர்களும், அபராந்தகர்களும் {எல்லையோர / கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களும்}, சாமுத்திரர்களும் {கடல் வாணிபர்களும் / தீவுகளில் வசிப்பவர்களும்} கோடிக்கணக்கான ரத்தினங்களை உனக்குச் செலுத்தட்டும்" {என்றார் வசிஷ்டர்}.(8)
தர்மத்தை அறிந்தவனான பரதன், இந்த வாக்கியங்களைக் கேட்டு, சோகத்தில் மூழ்கி, தர்மத்தை விரும்பும் மனத்துடன் ராமனிடம் தன் மனத்தைச் செலுத்தினான்.(9) அந்த யுவன் {இளைஞனான பரதன்}, ஹம்சம் போன்ற ஸ்வரத்தில் {அன்னப்பறவை போன்ற குரலில்}, கண்ணீர் நிறைந்த வேண்டுகோளுடன் சபை மத்தியில் புலம்பியபடியே, அந்தப் புரோஹிதரை {வசிஷ்டரைப் பின்வருமாறு} கண்டித்தான்:(10) "பிரம்மசரியம் {கண்டிப்புடன் கூடிய தூய்மையைப்} பயில்பவரும், வித்யைகளை அறிந்தவரும், மதிமிக்கவரும், தர்மத்தில் அர்ப்பணிப்புமிக்கவருமான ஒருவரின் ராஜ்ஜியத்தை என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு அபகரிப்பான்?(11) தசரதருக்குப் பிறந்தவன் எவ்வாறு ராஜ்ஜியத்தை அபகரிப்பவனாவான்? இந்த ராஜ்ஜியமும், நானும் ராமருக்கே சொந்தம். இங்கே தர்மத்தைச் சொல்வதே {உமக்குத்} தகும்.(12) ஜேஷ்டரும் {மூத்தவரும்}, சிரேஷ்டரும் {சிறந்தவரும்}, தர்மாத்மாவும், திலீபன், நஹுஷன் ஆகியோருக்கு ஒப்பானவருமான அந்த காகுத்ஸ்தரே {ராமரே}, தசரதரைப் போல ராஜ்ஜியத்தை அடையத் தகுந்தவர்.(13)
உலகத்தில் இக்ஷ்வாகு குலத்தின் புகழை நான் கெடுத்தால், ஸ்வர்க்கத்திற்கு இட்டுச் செல்லாத அநாரியம் {ஆரியமற்ற செயலைப்} பயின்ற பாபம் இழைத்தவனாவேன்.(14) என் மாதா செய்த பாபம் எனக்கு விருப்பமானதல்ல[1]. கடப்பதற்கரிய வனத்தில் இருப்பவரை {ராமரை} இங்கிருந்தே கூப்பிய கைகளுடன் நான் வணங்குகிறேன்.(15) நான் ராமரையே பின்பற்றுவேன். இரு பாதங்களைக் கொண்டவர்களில் {மனிதர்களில்} சிறந்தவரான அவரே {ராமரே} ராஜா. இராகவரே, மூவுலகங்களின் ராஜ்ஜியத்திற்கும் தகுந்தவர்" {என்றான் பரதன்}.(16)
[1] மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வனாய் முதல்தோன்றினன் இருக்க யான் மகுடஞ் சூடுதல்சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ- கம்பராமாயணம் 2257ம் பாடல்பொருள்: மூன்று உலகினுக்கும் ஒரே முதல்வனாக முதல் தோன்றியவன் இருக்க நான் மகுடம் சூடுதல், சான்றோர் தாமே உரைக்க தர்மம் என்றாகிவிட்டால், என்னை ஈன்றவள் செய்கையில் இழுக்கேதும் இல்லையென்றாகாதா?
ராமனையே தங்கள் மனங்களில் நிலைநிறுத்தியவர்களான சபை உறுப்பினர்கள் அனைவரும், தர்மம் நிறைந்த அந்த வாக்கியங்களைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.(17)
{மீண்டும் பரதன்}, "வனத்திலிருந்து அந்த ஆரியரை {என் அண்ணன் ராமரை} என்னால் அழைத்தவர முடியவில்லை என்றால், ஆரியனான லக்ஷ்மணனைப் போல நானும் அந்த வனத்திலேயே வாழ்வேன்.(18) குணவர்தனர்கள் {நற்குணங்களை வளர்த்துக் கொள்பவர்கள்}, சாதுக்கள் {நல்லவர்கள்}, ஆரியர்கள் {உன்னதர்கள்}, மஹான்கள் ஆகியோரின் முன்னிலையில் அவரை திருப்பி அழைத்து வருவதற்கான சர்வ உபாயங்களையும் கட்டாயம் நான் பயன்படுத்துவேன்.(19) எனக்கு விருப்பமான இந்த யாத்திரைக்காக, மார்க்க சோதனை ரக்ஷகர்கள் {சாலைகளை சோதித்துச் செப்பனிடுபவர்கள்}, கூலி வேலையாட்கள் ஆகியோர் அனைவரையும் ஏற்கனவே நான் அனுப்பிவிட்டேன்" {என்றான் பரதன்}.(20)
தர்மாத்மாவும், உடன் பிறந்தவனிடம் பாசம் கொண்டவனுமான பரதன், இவ்வாறு சொல்லிவிட்டு, தன்னருகே இருந்தவனும், ஆலோசனை வழங்குவதில் சமர்த்தனுமான சுமந்திரனிடம் இதைச் சொன்னான்:(21) "சுமந்திரரே, எழுந்து துரிதமாகச் செல்வீராக. என் சாசனப்படி யாத்திரைக்கு ஆணையிட்டு, பலத்தை {படைகளை} சீக்கிரம் அழைத்து வருவீராக" {என்றான் பரதன்}.(22)
மஹாத்மாவான பரதன் இவ்வாறு சொன்னதும் மகிழ்ச்சியடைந்த சுமந்திரன், விருப்பத்திற்குரிய அவ்வாணையை ஏற்று, அனைத்தையும் ஏற்பாடு செய்தான்.(23) இராகவனைத் திருப்பி அழைத்து வருவதற்கான படையின் யாத்திரையைக் கேட்ட அந்தப் பிரகிருதியர்களும் {அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும்}, படை அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.(24) ஒவ்வொரு கிருஹத்திலும் {வீட்டிலும்} உள்ள யுத்தவீரர்களின் மனைவியர் அனைவரும், அந்த யாத்திரையைக் குறித்து அறிந்ததும், மகிழ்ச்சி அடைந்தவர்களாகத் தங்கள் பர்த்தாக்களை {கணவர்களைத்} துரிதப்படுத்தினார்கள்.(25) படையதிகாரிகள், சீக்கிரமாகச் செல்லும் ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, கோரதங்களிலும் {காளைகளால் இழுக்கப்படும் தேர்களிலும்}, பெரும் வேகங்கொண்ட தேர்களிலும் படைவீரர்களுடன் செல்லுமாறு மொத்த படையையும் தூண்டினர்.(26)
அந்தப் படை தயாராக இருப்பதைக் கண்ட பரதன், தன் குருவின் {வசிஷ்டரின்} முன்னிலையில், தன் அருகே இருந்த சுமந்திரனிடம், "என் ரதத்தைத் துரிதப்படுத்துவீராக" என்றான்.(27)
பரதனின் ஆணையை ஏற்றவன் {சுமந்திரன்}, பரமவாஜிகள் {சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்ட ரதத்தை எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் அவனை அணுகினான்.(28) சத்தியத்தில் திடமாக இருந்தவனும், திடமான சத்திய விக்கிரமனும் {பொறுமையும், வல்லமையுங் கொண்டவனும்}, பிரதாபவானும், எப்போதும் யுக்தியுடன் பேசுபவனும், ராகவனுமான அந்த பரதன், அப்போது மஹாரண்யத்தில் வசித்திருக்கும் புகழ்மிக்க குருவின் {ராமரின்} அருளை அடையும் நோக்கில் {பின்வருமாறு} பேசினான்:(29) "சுமந்திரரே, எழுவீராக, படையை ஆயத்தம் செய்யப் படை அதிகாரிகளிடம் துரிதமாகச் செல்வீராக. வனஸ்தராக இருக்கும் ராமரின் அருளைப் பெற்று, ஜகத்தின் இதத்திற்காக அவரைத் திருப்பி அழைத்து வர நான் விரும்புகிறேன்" {என்றான் பரதன்}.(30)
இவ்வாறு பரதனால் ஆணையிடப்பட்டவனான அந்த சுமந்திரன், தன் ஆசை முழுவதும் நிறைவேறியவனாக, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், படை முக்கியஸ்தர்கள், நட்பு ஜனங்கள் ஆகியோர் அனைவருக்கும் {பரதன் சொன்னவாறே} ஆணையிட்டான்.(31) அதன்பேரில், ராஜ, வைசிய, விருஷல {சூத்திர}, விப்ர {பிராமண} குலாகுலங்களைச் சேரந்தவர்கள் எழுந்திருந்து, தங்கள் ரதங்களில் நல்ல குலத்தில் பிறந்த ஒட்டகங்களையும், கோவேறு கழுதைகளையும், நாகங்களையும் {யானைகளையும்}, ஹயங்களையும் {குதிரைகளையும்} பூட்டினர்.(32)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 082ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |