Wednesday 9 November 2022

சித்திரகூடத்தை அடைந்த பரதன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 093 (27)

Bharata reached Chitrakuta | Ayodhya-Kanda-Sarga-093 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சித்திரகூடத்திற்குப் பயணித்த பரதன்; புகை வரும் இடத்தைக் கண்டு, அதுவே ராமனின் ஆசிரமம் எனத் தீர்மானித்து அதை நோக்கி நடந்தது...

Soldiers observed at distance a plume of smoke rising

அந்த மகத்தான கொடிபடை அணிவகுத்துச் சென்றபோது, வனவாசிகளான மதங்கொண்ட மந்தைத் தலைவர்கள் {காட்டு யானைகள்} பீதியடைந்து கூட்டமாக ஓடின.(1) வன வழிகளிலும், கிரிகளிலும், நதிகளிலும் என எங்கும் கரடிகளும், புள்ளிமான்களும், கலைமான்களும் காணப்பட்டன.(2) தர்மாத்மாவான அந்த தசரதாத்மஜன் {தசரதன் மகனான பரதன்}, சதுராங்கங்களைக் கொண்ட மகத்தான சேனையின் நாதம் சூழ பிரீதியுடன் அணிவகுத்துச் சென்றான்.(3) சாகர வெள்ளம் போன்ற மஹாத்மா பரதனின் சேனையானது, மழைக்கால வானத்தில் மேகங்களைப் போல மஹீயை {பூமியை} மறைத்தது.(4) அந்தக் காலத்தில் மஹாவேகத்துடன் கூடிய வாரணதுரங்கங்களின் {யானை, குதிரைகளின்} வெள்ளத்தில் மூழ்கிய பூமியானது, நீண்டகாலம் புலப்படாமல் இருந்தது.(5) 

வாஹனங்கள் {இழுவை விலங்குகள்} களைத்துப் போகுமளவுக்கு நீண்ட தூரம் யாத்திரை செய்த அந்த ஸ்ரீமான் பரதன், வசிஷ்டரையும், சிறந்தவர்களான தன் மந்திரிமாரையும் நோக்கி {பின்வருமாறு} சொன்னான்:(6) "நான் காணும் எந்த ரூபமும், கேட்கும் எதுவும் பரத்வாஜர் சொன்ன தேசத்தை {இடத்தை} நாம் அடைந்துவிட்டோம் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றன.(7) இந்த கிரியே சித்திரகூடம்; இந்த நதியே மந்தாகினி; தூரத்தில் நீல மேகம் போலப் பிரகாசித்தது இந்த வனமே.(8) இரம்மியமான சித்திரகூட கிரியின் முகடுகள், பர்வதங்களுக்கு ஒப்பான என்னுடைய வாரணங்களால் {யானைகளால்} நசுக்கப்படுகின்றன.(9) பர்வத முகடுகளில் உள்ள இந்த மரங்கள், மழைக்காலத்தில் நீரைப் பொழியும் கனத்த நீல மேகங்களைப் போல  மலர்களைப் பொழிகின்றன[1].(10) 

[1] பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு காதலின்
உருகிய தளிர்த்தன உலகை ஈட்டமே

- கம்பராமாயணம் 2397ம் பாடல்

பொருள்: பெருகிய செல்வத்தை நீ ஏற்றுக் கொள் என்று சொன்ன கைகேயியிடம் எழுந்த சீற்றத்தால் முகம் சிவந்தவனும், கரிய நிறம் கொண்டவனுமான அண்ணல் பரதனைக் கண்டு அவன் மீது கொண்ட அன்பினால் பட்டுக் கிடந்த மரக்கூட்டமும் மனம் இரங்கி தளிர்த்தன.

சத்ருக்னா, கின்னரர்கள் சஞ்சரிக்கும் இந்த பர்வதம், மகரங்கள் நிறைந்த சாகரத்தைப் போலச் சுற்றிலும் ஹயங்களால் {குதிரைகளால்} நிரம்பி வழிவதைப் பார்.(11) {நமது துருப்புகளால்} விரட்டப்பட்டு அதிவேகமாக ஓடும் இந்த மிருக கணங்கள் {மான் கூட்டங்கள்}, சரத்கால அம்பரத்தில் {கூதிர் கால வானில்} வாயுவால் விரட்டப்படும் மேகக்கூட்டங்களைப் போலத் தெரிகின்றன.(12) மேகங்களைப் போலப் பிரகாசிக்கும் கிளைகளுடன் கூடிய இந்த மரங்கள், தாக்ஷிணாத்திய நரர்களை {தென்பகுதி மக்களைப்} போல நறுமணமிக்க மலராபரணங்களால் தங்கள் சிரஸை அலங்கரித்திருக்கின்றன[2].(13) நிசப்தமாகவும், காண்பதற்கு கோரமாகவும் இருந்த இந்த வனமே, இப்போது ஜனங்கள் நிறைந்த அயோத்தியைப் போல எனக்குத் தெரிகிறது.(14) {குதிரைகளின்} குளம்புகள் கிளப்பும் புழுதியானது திவத்தை {சொர்க்கத்தை / வானத்தை} மறைத்து நிற்கும்போது, எனக்குப் பிரியமானதைச் செய்வது போல அநிலன் {காற்றானவன்} அவற்றை சீக்கிரமாகக் கொண்டு செல்கிறான்.(15)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "தென்னாட்டு மனிதர்கள் மேகம் போல் கறுத்து விளங்குகின்ற தலைமயிர்களை ஒருவிதமாக உயர எடுத்துக் கட்டி அவற்றில் பூமாலைகளைச் சூடுவது போல், இந்த வ்ருக்ஷங்களும் மேகம் போல் கறுத்திருக்குந் தமது சிரஸுக்களில் நிரம்பப் பூத்திருக்கிற புஷ்பங்களைச் சிரோபூஷணமாகத் தரித்திருக்கின்றன" என்றிருக்கிறது.

சத்ருக்னா,  துரகங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டும், முக்கிய சூதர்களால் {சாரதிகளால்} இயக்கப்பட்டும் கானகத்தில் சீக்கிரமாக விரைந்து செல்லும் சியந்தனங்களை {தேர்களை} இதோ பார்.(16) பிரிய தரிசனந்தரும் {காண்பதற்கினியவையான} இந்த மயில்களும், பறவைகளும், {தேர்களின் ஒலியைக் கேட்டு} அச்சமடைந்து தங்கள் வசிப்பிடங்களுக்குள் சீக்கிரமாக நுழைவதை இதோ பார்.(17) ஸ்வர்க்கத்திற்கான பாதை போலிருக்கும் இந்த தேசம் {இடம்}, எனக்கு அதிமனோகரமானதாகத் தெரிகிறது. இது தபஸ்விகளின் வசப்பிடமாக வெளிப்படுகிறது.(18) வனத்தில் பெண்மான்களுடன் கூடிய புள்ளிமான்கள் பலவும், {மேனியில்} மலர்களால் சித்திரஞ்செய்யப்பட்டதை {வரையப்பட்டதைப்} போன்ற மனோகரமான ரூபங்களில் புலப்படுகின்றன.(19) சைனியத்தினரே, புருஷ வியாகரர்களான {மனிதர்களில் புலிகளான} ராமலக்ஷ்மணர்கள் இருவரும் புலனாகும் வரை இந்தக் கானகத்தில் முந்திச் சென்று தேடுவீராக" {என்றான் பரதன்}.{20)  

சஸ்திரபாணிகளான சூரபுருஷர்கள் {ஆயுதந்தரித்த வீர மனிதர்கள்}, பரதனின் சொற்களைக் கேட்டு, அந்த வனத்திற்குள் புகுந்தனர்; பிறகு தூமத்தையும் {புகையையும்} கண்டனர்.(21) தூமாக்ரத்தை {புகைச் சுழலைக்} கண்ட அவர்கள், பரதனிடம் திரும்பிச் சென்று, {இவ்வாறு} சொன்னார்கள், "அமனுஷ்யத்தில் {மனிதர்கள் இல்லாத இடத்தில்} அக்னி இராது. இராகவர்கள் அங்கே இருக்கின்றனர் என்பதே {இதன்மூலம்} வெளிப்படுகிறது.(22) நரவியாகரர்களும், பரந்தபர்களுமான {மனிதர்களில் புலிகளும், பகைவரை அழிப்பவர்களுமான} அந்த ராஜபுத்திரர்கள் அங்கே இல்லையெனில், ராமரைப் போன்ற வேறு தபஸ்விகள் அங்கே இருப்பது வெளிப்படும்" {என்றனர்}.(23)

அமித்ரபலமர்தனனான {பகைவரின் படையை அழிப்பவனான} பரதன், சாதுக்களும் சம்மதிக்கும் {நல்லவர்களும் உடன்படும்} அந்த சொற்களைக் கேட்டு, சைனியத்தினர் அனைவரையும் நோக்கி {பின்வருமாறு} சொன்னான்:(24) "இதற்கு மேலும் முன்னேறாமல் இங்கேயே தயாராகக் காத்திருப்பீராக. நானும், சுமந்திரரும், குருவும் {வசிஷ்டரும்}[3] தனியாக அங்கே செல்வோம்" {என்றான்}.(25)

[3] சில பதிப்புகளில் இங்கே வசிஷ்டருக்குப் பதில், திருதி எனும் மந்திரி குறிப்படப்படுகிறான்.

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவர்கள் அனைவரும் அங்கேயே {நாற்புறத்திலும் காத்து} நின்றனர். புகைச்சுழல் தோன்றும் இடத்திலேயே பரதனின் பார்வை நிலைத்திருந்தது.(26) அங்கேயே நிற்குமாறு ஆணையிடப்பட்ட அந்த சம்முவினர் {படையினர்}, தங்கள் முன் தூமத்தை {புகையை} கவனித்தாலும், தங்கள் பிரியத்திற்குரிய ராமனை சீக்கிரமே காணப்போகிறோமென உணர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.(27)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 093ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை