Thursday 27 June 2024

சந்தேகந்தீர்த்த ஹனுமான் | சுந்தர காண்டம் சர்க்கம் - 68 (29)

Doubt warded off by Hanuman | Sundara-Kanda-Sarga-68 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்கள் கடலைக் கடந்து, தன்னை மீட்பது குறித்த சீதையின் சந்தேகங்களை எப்படி தீர்த்துவைத்தான் என்பதை ராமனிடம் சொன்ன ஹனுமான்...

Hanuman narrating the situation of Seetha to Rama

{ஹனுமான் தொடர்ந்தான்}, "பிறகு, நரவியாகரரே {மனிதர்களில் புலியே, திரும்பி வருவதில்} பரபரப்பாக இருந்த என்னிடம், தான் கொண்டிருக்கும் மதிப்பினாலும், நான் உம்மிடம் கொண்டிருக்கும் சினேகத்தினாலும், நட்பினாலும், பின்நடக்க வேண்டியவை குறித்து மீண்டும் தேவி {பின்வருமாறு} பேசினாள்:(1) "போரில் ராவணனை சீக்கிரமே கொல்வதும், என்னை மீட்பதும் எப்படியோ, அப்படியே பல விதங்களில் தாசரதியான ராமரிடம் சொல்வாயாக.(2) அல்லது, வீரா, அரிந்தமா {பகைவரை வெல்பவனே}, நீ நினைத்தால் ஏதேனுமொரு தேசத்தில் {இடத்தில்} ஒரு நாள் வசித்து, ஓய்வெடுத்த பிறகு நாளை செல்வாயாக.(3) வீரியவானே, உன் இருப்பால், அல்ப பாக்யம் கொண்டவளான எனக்கு, ஒரு முஹூர்த்தமாவது சோகத்திலிருந்து விமோசனம் கிடைக்கும்.(4) விக்ராந்தனான நீ திரும்பிவரச் சென்றபிறகு, என் பிராணன்கள் நிலைப்பதும் சந்தேகமே. இதில் ஐயமில்லை.(5) துக்கத்தின் மேல் துக்கத்தையே பாகமாகக் கொண்டவளும், துக்கத்திலேயே மூழ்கிக் கிடப்பவளுமான எனக்கு, உன்னைக் காணாத சோகம், அதற்குமேலான துக்கத்தில் என்னைப் பரிதபிக்கவே செய்யும்.(6) 

ஹரீஷ்வரா {குரங்குகளின் தலைவா}, வீரா, உன் சகாயர்களான ஹரி ரிக்ஷங்களிடம் {குரங்குகள், கரடிகளின் காரியத்தில்} இந்த மஹத்தான ஐயம் முன்னிற்கிறது.(7) அந்த ஹரிரிக்ஷ {குரங்குகளாலும், கரடிகளாலுமான} சைனியத்தாலோ, அந்த நரவராத்மஜர்கள் இருவராலோ {மனிதர்களில் சிறந்தவர்களுடைய புதல்வர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவராலோ}, கடப்பதற்கரிய இந்த மஹோததியை {பெரும் நீர்க்கொள்ளிடமான கடலை} எப்படிக் கடக்க முடியும்?(8) வைனதேயனுக்கோ {கருடனுக்கோ}, மாருதனுக்கோ {வாயு தேவனுக்கோ}, உனக்கோவென பூதங்களில் {உயிரினங்களில்} இந்த மூவருக்கு மட்டுமே சாகரத்தை லங்கனம் செய்யும் {கடக்கும்} சக்தி இருக்கிறது.(9) எனவே, வீரா, காரிய விதங்களை அறிந்தவர்களில் சிறந்தவனான நீ, செய்வதற்கரிய இந்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு காணும் சமாதானம் {தீர்வு} என்ன?(10)

பகைவீரர்களை அழிப்பவனே, தனி ஒருவனாகவே விரும்பியதை அடைந்து, இந்த காரியத்தை நீ நிறைவேற்றக்கூடியவன். பலனை அடைவதில் நீ புகழ்பெற்றவன்.(11) இராமர், ஒட்டுமொத்த படையுடன் கூடிய ராவணனைக் கொன்று, வெற்றிபெற்றவராகத் தன் புரீக்கு {அயோத்திக்கு} என்னை அழைத்துச் செல்ல வேண்டும். அதுவே அவருக்கான புகழை விளைவிக்கும்.(12) இராக்ஷசன் {ராவணன்}, வீரரை வஞ்சித்து {ராமருக்குப் பயந்து} வனத்திலிருந்து என்னை அபகரித்தது எப்படியோ, அப்படியே பயத்தினால் செய்வது ராகவருக்குத் தகாது.(13) பகைவரின் படையை அழிப்பவரான காகுத்ஸ்தர், தன் சரங்களால் லங்கையை நிறைத்துவிட்டு, என்னை அழைத்துச் செல்ல வேண்டும். அதுவே அவருக்குத் தகும்.(14) எனவே, போரில் சூரரான அந்த மஹாத்மா {ராமன்}, தனக்குத் தகுந்த விக்ராந்தத்தை வெளிப்படுத்துவது எப்படியோ, அப்படியே நீ ஏற்பாடு செய்வாயாக" {என்றாள் சீதை}.(15)

நான், அர்த்தம் பொருந்தியதும், நயமானதும், ஏற்புடையதுமான அந்த வாக்கியத்தைக் கேட்ட பிறகு, எஞ்சிய மறுமொழியை {பின்வரும்} வாக்கியத்தில் சொன்னேன்:(16) "ஹரிரிக்ஷ சைனியத்தின் ஈஷ்வரரும், பிலவதர்களில் {தாவிச் செல்பவர்களில்} சிறந்தவரும், சத்வ சம்பன்னருமான {பலம் நிறைந்தவருமான} சுக்ரீவர், உன் அர்த்தத்தை நிறைவேற்றுவதில் நிச்சயத்தை அடைந்திருக்கிறார்.(17) அவரது {சுக்ரீவரின்} ஏவலில் உள்ள ஹரயர்கள் {குரங்குகள்}, விக்ரமசம்பன்னர்கள் {ஆற்றல் நிறைந்தவர்கள்}; சத்வவந்தர்கள் {வலிமைமிக்கவர்கள்}; மஹாபலவான்கள்; மன சங்கல்பத்தின்படி விரையவல்லவர்கள்.{18} அத்தகையோரின் கதிக்கு {அவர்கள் செல்வதற்கு} உபரியிலும் {வானத்திலும்} தடையில்லை, அதஸ்தானத்திலும் {பூமியிலும்} இல்லை; {இவற்றின் நடுவில்} குறுக்கிலும் {செல்லத் தடையேதும்} இல்லை. அமிததேஜஸ்விகள் {அளவற்ற திறனுடையவர்களான அவர்கள்} மஹத்தான கர்மங்களிலும் {மிகப் பெரிய காரியங்களைச் செய்வதிலும்} துன்புறுவதில்லை.(18,19) மஹாபாக்யவான்களும், பலத்தில் செருக்குடையவர்களுமான அந்த வானரர்கள், வாயுமார்க்கத்தைப் பின்பற்றி பூமியை பிரதக்ஷிணம் செய்தவர்களாவர் {வலம் வந்தவர்களாவர்}.(20)

அங்கே, என்னைவிடச் சிறந்தவர்களும், எனக்குத் துல்லியமானவர்களுமான வனௌகஸர்கள் {வனத்தில் வசிக்கும் வானரர்கள்} இருக்கிறார்கள். சிறப்பில் குறைந்தவர்கள் எவரும் சுக்ரீவரின் சந்நிதானத்தில் இல்லை.{21} இதர ஜனங்கள் {தூதுக்கு} அனுப்பப்படுவார்களேயன்றி மேன்மையானவர்கள் அனுப்பப்படுவதில்லை. எனவே, நான் இங்கே வந்திருக்கிறேன். மஹாபலவான்களான அவர்களைக் குறித்து என்ன சொல்வது? (21,22) எனவே தேவி, பரிதபித்தது போதும். உன் சோகம் விலகட்டும். அந்த ஹரியூதபர்கள் {குரங்குக்குழுத் தலைவர்கள்}, ஒரே தாவலில் லங்கையை அடைவார்கள்.(23) மஹாசத்வர்களான அந்த நரசிம்மர்கள் இருவரும் என் பிருஷ்டத்தில் {பின்னால்} அமர்ந்தபடியே, உதிக்கும் சந்திர சூரியர்களைப் போல உன்னிடம் வருவார்கள்.(24) அரிந்தமரும் {பகைவரை அழிப்பவரும்}, சிம்ஹத்திற்கு ஒப்பானவருமான ராகவரும் {ராமரும்}, லக்ஷ்மணரும் தனுஷ்பாணிகளாக {கையில் வில்லேந்தியவர்களாக} சீக்கிரமே லங்கா துவாரத்தில் {லங்கையின் வாயிலில்} நிற்பதை நீ தரிசிப்பாய்.(25)

நகங்களையும், பற்களையும் ஆயுதமாகக் கொண்டவர்களும், சிம்ஹசார்தூல விக்ரமர்களும் {சிங்கங்களையும், புலிகளையும் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களும்}, வாரணேந்திரர்களை {தலைமை யானைகளைப்} போலத் தெரிபவர்களுமான வீரமிக்க வானரர்கள் ஒன்று கூடி வருவதை சீக்கிரமே நீ தரிசிப்பாய்.(26) இலங்கையின் மலயத்தின் {மலயமலையின்} உச்சியில் உள்ள மேகம் போன்றவர்களும், சைலங்களுக்கு {மலைகளுக்கு} ஒப்பானவர்களுமான கபி முக்கியர்களின் ஸ்வனத்தை {முக்கிய குரங்குகளின் குரலொலியை} விரைவில் நீ கேட்பாய்.(27) இராகவர், வனவாசத்தை முடித்தவராக, பகைவரை வென்றவராக, சீக்கிரமே உன்னுடன் சேர்ந்து, அயோத்யையில் அபிஷேகம் {பட்டாபிஷேகம்} செய்து கொள்வதையும் நீ காண்பாய்" {என்றேன்}.(28)

அப்போது, மைதிலாத்மஜை {மிதலை மன்னரின் மகளான சீதை} உமது சோகத்தில் பீடிக்கப்பட்டிருந்தாலும், ஆறுதலாக என்னால் பேசப்பட்டவையும், மங்கலமானவையும், ஏற்புடையவையுமான என் சொற்களால் தேறி, சாந்தி அடைந்தாள் {தணிவடைந்தாள்}" {என்றான் ஹனுமான்}[1][2].(29)

[1] கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம் ஹனுமான் பேசுவதோடு முடிவடையவில்லை. அதன்பின்பும் பின்வருமாறு தொடர்கிறது, "அப்போது சூரியனின் மகன் சுக்ரீவன், "ஐயா, கேள், "பிராட்டியை நம்மிடம் அழைத்துக் கொள்ளும் வகையில் எளிய தன்மையில் உள்ளாள்" என்று சொல்லிவிட்டு, "வீணே காலம் தாழ்த்தி இங்கேயே இருக்க வேண்டாம்" என்றான். பிறகு தூண் போல் திரண்ட தோள்களைக் கொண்ட சுக்ரீவன், விரைவில் எழுந்து சொன்னான், "கொடிய படைகள் "ஏ" என்று உச்சரிக்கும் கால அளவுக்குள் புறப்படட்டும்" என்றான். 

வெற்றி முரசறைவோர், எல்லா இடத்திலும் முரசு அடித்து விரைவுபடுத்த, பின்னடையாத எழுபது வெள்ளம் கொண்ட சேனையானது, விரைந்து பாய்கிற அலைகளுடன் கூடிய கடல், தான் இருக்கும் நிலையை விட்டு வெளியே பரவியதைப் போல எழுந்து தென்திசையில் பரவிச் சென்றது. விரைவில் புறப்பட்ட வீரர்களுக்கு, நீண்ட வீரக்கழலை உடைய அனுமன், மலையிலுள்ள இலங்கையில் வெற்றியையும், கரிய நிறத்தையும் உடைய அரக்கர்கள் என்று சொல்லப்படும் கொடியவர்கள் செய்யும் பெயர்தல் இல்லாமல் காவல் செய்யும் திறமும், சிறப்பும், அரண்களும் முதலான அளவில்லாத பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டு வர, அவர்கள் நீண்ட வழியை எளிதாகக் கடந்து போனார்கள். அந்த வழி நீண்டு செல்வதால், குரங்குக் குலத்து அரசனான சுக்ரீவனுடன் நல்வழியைப் பின்பற்றுபவர்களான ராமலக்ஷ்மணர்கள் செல்ல விரும்பியதும், உடன் வந்த வானரச் சேனைகள் அனைத்தும், இனிய நீண்ட சோலைகளைக் கொண்ட மலைவழியில் பகல் பொழுது முழுவதையும் கழித்த பிறகு, பன்னிரெண்டாம் நாளில் போய் தென்திசையில் உள்ள கடலைக் கண்டனர்" என்று முடிகிறது கம்பனின் சுந்தரகாண்டம்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ்-கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "சுந்தர காண்ட பாராயணத்தை முடித்ததும் ஸ்ரீராம பட்டாபிஷேக சர்க்கத்தைப் படிப்பது மரபாகும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸ்ரீமத் ஸுந்தரகாண்டத்தைப் படிப்பதற்கும் கேட்பதற்கும் உள்ள பலன் ப்ரஹ்மாண்ட புராணத்தில் நூற்றுநாற்பத்தேழாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருக்கிறது:- "ஸுந்தரகாண்டத்தைக் கேட்கிலும் படிக்கிலும் ஜகத்காரணனான என்னைப் பெறலாம். இவ்விஷயத்தில் ஸந்தேஹம் இல்லை" என்று.

சுந்தர காண்டம் சர்க்கம் – 68ல் உள்ள சுலோகங்கள்: 29

*******சுந்தர காண்டம் முற்றும்*******

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை