The vow of siege | Ayodhya-Kanda-Sarga-111 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஆசிரியரின் சொல்லை மீறலாகாதென்ற வசிஷ்டர்; தந்தையின் சொல் மேலானது என்று மறுத்த ராமன்; தரையில் படுத்து விரதமிருப்பேன் என்ற பரதன்; மறுத்து சமாதானம் கூறிய ராமன்...
இராஜபுரோஹிதரான வசிஷ்டர், ராமனிடம் பேசிவிட்டு, தர்மம் நிறைந்த சொற்களை மீண்டும் {பின்வருமாறு} சொன்னார்:(1) "காகுத்ஸ்தா, ராகவா, இங்கு பிறந்த ஒவ்வொரு புருஷனுக்கும், ஆசாரியர், பிதா, மாதா என்ற மூன்று குருக்கள் உள்ளனர்.(2) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, பிதாவானவன் இந்தப் புருஷனைப் பெறுகிறான். ஆசார்யர் {அவனுக்கு விழிப்புணர்வை} பிரஜ்ஞையை அளிக்கிறார். எனவேதான், குரு என்று அவர் {மேன்மையான பெரியவர் என்று அந்த ஆசாரியர்/ ஆசிரியர்} அழைக்கப்படுகிறார்.(3) பரந்தபா {பகைவரை தபிக்கச் செய்பவனே}, உன் பிதாவுக்கும், உனக்கும் ஆசாரியன் நானே. என் சொற்களுக்குக் கீழ்ப்படிவதால் சத்கதியை {நல்வழியை} நீ மீறியவனாக மாட்டாய்[1].(4) தாதா {ஐயா}, இந்த பரிஷதர்களும் {சபையோரும்}, பிறரும், வணிகக்கூட்டத்தினரும், துவிஜர்களும் உன்னுடையவர்களே. இவர்களுக்காக தர்மத்தைப் பின்பற்றுகையில் சத்கதியை நீ மீறியவனாக மாட்டாய்.(5) தர்மசீலையும் {அறம் ஒழுகுபவளும்}, முதிர்ந்தவளுமான உன் மாதாவை {கௌசல்லையை} விட்டு விலகுவது உனக்குத் தகாது. இவளது சொற்களின்படி செயல்படுவதால் சத்கதியை நீ மீறியவனாக மாட்டாய்.(6) இராகவா, சத்தியதர்ம பராக்கிரமா {ராமா}, உன்னிடம் மன்றாடும் பரதனுடைய சொற்களின்படி செயல்படுவதால் உன் ஆத்மாவின் அழைப்பை நீ மீறியவனாக மாட்டாய்" {என்றார் வசிஷ்டர்}.(7)
[1] இத இயல் இயற்றிய குரவர் யாரினும்மத இயல் களிற்றினாய் மறுஇல் விஞ்சைகள்பதவிய இருமையும் பயக்க பண்பினால்உதவிய ஒருவனே உயரும் என்பரால்என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள்ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையானால்அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீநன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான்- கம்பராமாயணம் 2497, 2498 பாடல்கள்பொருள்: மதம்பெருக்கும் யானையைக் கொண்டவனே, இம்மையிலும், மறுமையிலும் பயன் தருமாறு குற்றமற்ற கல்வியைப் பண்போடு கற்பித்த ஒருவனே {ஆசிரியனே} நன்மை தரும் இயல்பினைச் செய்த குரவர்கள் {ஆசிரியர்கள்} எல்லோரினும் மேம்பட்டவன் {குரு} என்று சொல்வார்கள். எனவே, ஐயா, நான் உன்னை வளர்த்து கல்வி ஒன்றல்லாமல் பலவற்றைக் கற்பித்தேன் என்ற உண்மையால், இன்று எனது ஆணையை இல்லை என்று சொல்லாமல், உனக்குரிய நாடு சென்று, நன்றாகக் காப்பாயாக என்றான் {வசிட்டன்}.
இவ்வாறாக, குருவே நேரடியாக மதுரமான சொற்களைச் சொன்ன போது, புருஷரிஷபனான ராமன், அங்கே அமர்ந்திருந்த வசிஷ்டரிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8) "மாதாவும், பிதாவும் தங்கள் தனயனை உறங்கச் செய்தும், உடுத்தியும், வளர்த்தும், பிரியமுடன் பேசியும் நித்தியம் அவனுக்குத் தங்கள் சக்திக்கேற்ற நல்லதைச் செய்கிறார்கள். எனினும், மாதாவும் பிதாவும் செய்யும் எதற்கும் கைம்மாறு செய்ய இயலாது {அவர்கள் நமக்குச் செய்யும் எதையும் நம்மால் அவர்களுக்குத் திரும்பவும் செய்ய முடியாது}.(9,10) என்னைப் பெற்றவரும், என் பிதாவுமான அந்த தசரத ராஜா, எனக்கு எதை ஆணையிட்டாரோ அதை என்னால் பொய்யாக்க முடியாது" {என்றான் ராமன்}.(11)
இராமன் இவ்வாறு உரைத்ததும், தாராள மனப்பான்மை கொண்ட பரதன், மனத்தில் பெரும் வருத்தமடைந்து, அருகில் நின்று கொண்டிருந்த சூதனிடம் {சுமந்திரனிடம், பின்வருமாறு} சொன்னான்:(12) "சாரதியே, எனக்காக இங்கே தரையில் குசப்புற்களை சீக்கிரம் பரப்புவீராக. எனக்கு நிறைவேற்படும் வரை இந்த ஆரியரை முற்றுகையிட {அவரது வழியில் படுத்துக்கிடக்கப்} போகிறேன்.(13) இவர் திரும்பாத வரையிலும், தனமில்லாத ஒரு துவிஜனைப் போல, வெளிச்சமின்றி {கண்களை மூடிக் கொண்டு}, ஆஹாரமின்றி {உணவைத் துறந்து பட்டினியாக} இந்த சாலையின் {பர்ணசாலையின்} முன்பே கிடந்திருப்பேன்" {என்றான் பரதன்}[2].(14)
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸாரதியே, இப்பொழுதே தரையில் எனக்காக தருப்பைகளை உடனே பரப்பும். எனக்கு அனுக்கிரகம் புரியாதிருக்கிறது எதுவரைக்குமோ அதுவரைக்கும் ஸ்ரீராமரை நான் தகைவேன். இவர் திரும்பியெழுந்தருளாதிருக்கிறது எதுவரையிலுமோ இப்பொழுது முதலதுவரை காரியம் கைகூடப்பெறாத க்ஷத்திரியனாகும் நான் பர்ணசாலையினது வாயிலில் பட்டினிகிடப்பவனாய் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கிடப்பேன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸாரதீ, எனக்கு இங்குத் தரையின் மேல் தர்ப்பங்களைச் சீக்ரம் பரப்புவாயாக. எனதையனாகிய ராமன் என்மீது அருள்புரியாதிருக்கும் வரையிலும் அவர்க்குக் குறுக்கே படுத்திருக்கப் போகிறேன். வட்டிக்காகத் தனது பணங்களையெல்லாம் கடன் கொடுத்த ப்ராஹ்மணன், கடன் வாங்கிக் கொண்டவன் வாசலில் குறுக்காக ஆஹாரமின்றி முகத்தை மூடிக் கொண்டு படுத்திருக்கும் விதமாக நானும் ராமன் அயோத்யைக்குத் திரும்பி வராதிருக்குமளவும் ஆஹாரத்தைவிட்டு முகத்தில் துணியைப் போட்டு மூடிக்கொண்டு பர்ணசாலையின் வாசலில் படுத்துக் கொள்கிறேன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "சூதரே, நீர் விரைவாக இவ்விடத்திலேயே தூப்புற்களைக் கொணர்ந்து பரப்புக; யானிங்கே பிராயோபவேசஞ்செய்து எம்மையர் அருள் செய்யுமளவும் படுத்திருப்பேன்; இந்தச் சாலையின் வாயிலில் கடன் கொடுத்தவன் போலப் படுத்து உணவு நீங்கிக் கிடப்பேனல்லாது, என்னையனருள்செய்யுமளவு மெழேன்" என்றிருக்கிறது.
சுமந்திரன், {அனுமதி எதிர்பார்த்து} ராமனைப் பார்த்துக் கொண்டே இருப்பதைக் கண்டு மனம் நொந்தவன் {பரதன்}, தானே குசப்புற் குவியலைக் கொண்டு வந்து, பூமியில் பரப்பினான்.(15) மஹாதேஜஸ்வியும், ராஜரிஷிகளில் சிறந்தவனுமன ராமன், அவனிடம் {பின்வருமாறு} பேசினான், "தாதா {ஐயா}, பரதா, என்னை முற்றுகையிட்டுக் கிடக்கும் அளவுக்கு நான் என்ன {குற்றம்} செய்தேன்?(16) இவ்வுலகில் ஒரு பிராமணர் நரர்களைத் தடுக்கும் வகையில் ஒரே பக்கமாகக் கிடக்கலாம். மூர்த்தாபிஷேகத்திற்குரியவர்கள் {முடிசூட்டுக்குரியவர்கள் / க்ஷத்திரியர்கள்} இவ்வாறு முற்றுகையிட்டுக் கிடக்க எந்த விதியும் இல்லை.(17) இராகவா, நரசார்தூலா {மனிதர்களில் புலியே}, இந்தப் பயங்கர விரதத்தைக் கைவிட்டு எழுவாயாக. இங்கிருந்து நகரங்களில் சிறந்த அயோத்திக்கு சீக்கிரம் செல்வாயாக" {என்றான் ராமன்}.(18)
இன்னும் அவ்வாறே கிடந்த பரதன், சுற்றிலும் இருந்த நகர, ஜானபத ஜனங்களைப் பார்த்து, "ஆரியரை நெறிப்படுத்த மாட்டீரா?" என்று கேட்டான்.(19)
நகர, ஜானபதவாசிகளான அந்த ஜனங்கள், அந்த மஹாத்மாவிடம் {பரதனிடம்} {பின்வருமாறு} மறுமொழி கூறினர், "காகுத்ஸ்தனை நன்கறிவோம். இராகவன், சரியாகத்தான் பேசுகிறான்.(20) இந்த மஹாபாகன் {பெருந்தகையாளன்}, பிதாவின் சொற்களில் திடமாக இருக்கிறான். உண்மையில் அதனாலேயே அவனைத் திருப்பும் சக்தியற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம்" {என்று கூறினர்}.(21)
அவர்களின் சொற்களை அறிந்த ராமன், {பரதனிடம் பின்வருமாறு} பேசினான், "தர்மத்தில் கண்கொண்ட {தர்மத்தை சரியாகக் காணும்} உன் நண்பர்களின் சொற்களைக் கேட்பாயாக.(22) மஹாபாஹுவே, இராகவா, {நான் சொன்னது, அவர்கள் சொன்னது என்ற} இரண்டையும் கேட்டு, நன்றாகச் சிந்திப்பாயாக. எழுந்து {இனி இதுபோல் செய்யேனெனும் உறுதியுடன்} என்னையும், நீரையும் தீண்டுவாயாக" {என்றான்}.(23)
பிறகு, பரதன் எழுந்து, ஜலத்தைத் தீண்டி, {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான், "பரிஷதர்களும் {சபையோரும்}, மந்திரிகளும், வணிகக் கூட்டத்தாரும் நான் சொல்வதைக் கேட்பாராக.(24) நான் என் பிதாவிடம் ராஜ்ஜியத்தை யாசிக்கவில்லை. {இவ்வாறு செய்யென} என் மாதாவைத் தூண்டவுமில்லை; பரமதர்மஜ்ஞரும் {தர்மங்களை அறிந்தவர்களில் உயர்ந்தவரும்}, ஆரியருமான ராமரை {அரண்யம் செல்ல} அனுமதிக்கவுமில்லை.(25) பிதாவின் சொற்களுக்காக {ஆணைக்காக} இங்கே வாழ வேண்டுமென்பது அவசியமெனில், நானே பதினான்கு ஆண்டுகள் வனத்தில் வாழ்வேன்" {என்றான்}.(26)
தர்மாத்மாவான ராமன், தன்னுடன் பிறந்தானின் இயல்பான வாக்கியங்களில் வியப்படைந்து, நகர ஜானபதத்தாரைப் பார்த்து {பின்வருமாறு} பேசினான்:(27) "ஜீவித்திருந்த என் பிதாவால் முடிவாக விற்கப்பட்டதையும், வாங்கப்பட்டதையும் என்னாலோ, பரதனாலோ மாற்ற முடியாது.(28) எனக்கு மாற்றாக வனவாசஞ் செய்வது என்னால் ஏற்கமுடியாத வெறுக்கத்தக்க காரியம். கைகேயி உரைத்தது சரியே. என் பிதா செய்ததும் நற்செயலே.(29) பரதன், சாந்தன். பெரியோரிடம் அர்ப்பணிப்புள்ளவன் என்பதை நான் அறிவேன். சத்தியசந்தனான இந்த மஹாத்மாவுக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.(30) வனத்தில் இருந்து திரும்பியதும் என்னுடன் பிறந்தானான இந்த தர்மசீலனின் துணையுடன் நான் பிருத்வியின் உத்தம பதியாக {பூமியின் நல்ல தலைவனாகத்} திகழ்வேன்.(31) இராஜா {தசரதர்}, கைகேயியால் கட்டுப்படுத்தப்பட்டார். நான் அந்தச் சொற்களின்படியே செயல்படுகிறேன். அதனால், நீயும் மஹீபதியான நம் பிதாவைப் பழியில் இருந்து விடுவிப்பாயாக" {என்றான் ராமன்}.(32)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 111ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |