Rama's hug | Yuddha-Kanda-Sarga-001 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமான் அறிவித்ததைக் கேட்டுவிட்டு, அவனை ஆரத் தழுவிப் பாராட்டிய ராமன்; சமுத்திரத்தை எப்படிக் கடப்பது என்பது குறித்துச் சிந்தித்தது...
இராமன், உள்ளபடியே ஹனுமதன் சொன்ன வாக்கியத்தைக் கேட்டுப் பிரீதியடைந்து, {பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(1) "புவியில் துர்லபமானதும் {செய்வதற்கரியதும்}, தரணீதலத்திலுள்ள மற்ற எவருக்கும் மனத்தினாலும் சாத்தியமற்றதுமான மஹத்தான காரியம் ஹனுமதனால் செய்யப்பட்டிருக்கிறது.(2) கருடனையும், வாயுவையும், ஹனூமதனையும் தவிர, மஹோததியை {பெருங்கடலைக்} கடக்கக்கூடிய வேறு எவரையும் நான் காணவில்லை.(3) தேவர்கள், தானவர்கள், யக்ஷர்களாலும், கந்தர்வர்கள், உரகர்கள், ராக்ஷசர்களாலும் அணுகமுடியாததும், ராவணனால் நன்கு ரக்ஷிக்கப்படுவதுமான லங்காம்புரீக்குள்,{4} சத்வத்தை ஆசரித்து {மனோவலிமையைக் கொண்டு}, பிரவேசித்து எவனால் ஜீவனுடன் திரும்பி வரமுடியும்?(4,5அ)
இராக்ஷசர்களால் நன்றாக ரக்ஷிக்கப்படுவதும், மீறுதற்கரியதுமான அதற்குள் {லங்காபுரீக்குள்} எவன் புகுவான்? ஹனூமதனுக்கு சமமான வீரிய, பலசம்பன்னன் {வீரியமும், பலமும் நிறைந்தவன்} வேறு எவனும் இல்லை.(5ஆ,6அ) ஹனூமதன், சுக்ரீவனுக்குப் பணி செய்யும் வகையில், தன் விக்ரமத்திற்குத் தகுந்த பலத்தை வெளிப்படுத்தி, மஹத்தான காரியத்தைச் செய்திருக்கிறான்.(6ஆ,7அ) எந்தப் பிருத்யன் {பணியாள்}, செய்வதற்கரிய கர்மத்தில் தலைவனால் நியமிக்கப்பட்டு, அதில் ஆர்வத்துடன் செயல்படுகிறானோ {தலைவன் சொன்னதையும் செய்து, துணையான வேறு காரியங்களையும் செய்வானோ}, அவன் புருஷோத்தமன் {மனிதர்களில் சிறந்தவன்} என்று அழைக்கப்படுகிறான்.(7ஆ,8அ) நிருபதிக்கு {மன்னனுக்குப்} பிரியமான காரியத்தில் நியமிக்கப்பட்டு, அதை சமர்த்தனாகச் செய்தும், பிறவற்றை {துணையான வேறு காரியங்களைச்} செய்யாத பிருத்யன் {பணியாள்} எவனோ, அவன் மத்யம நரன் {மனிதர்களில் நடுத்தரமானவன்} என்று அழைக்கப்படுகிறான்.(8ஆ,9அ) நிருபதியின் காரியத்தில் நியமிக்கப்பட்டு, அதைச் செய்வதற்கு சமர்த்தனாகவும், தகுந்தவனாகவும் இருந்தும், அதைச் செய்யாத பிருத்யன் {பணியாள்} எவனோ, அவன் புருஷாதமன் {மனிதர்களில் இழிந்தவன்} என்று அழைக்கப்படுகிறான்.(9ஆ,10அ)
எனவே, நியோகத்தில் {கடமையில்} நியமிக்கப்பட்ட ஹனூமதன், செய்ய வேண்டியதைச் செய்து முடித்துவிட்டான். செய்வதற்கரிய இன்னும் பிறவற்றையும் எளிதில் தானே செய்து, சுக்ரீவனையும் நிறைவடையச் செய்திருக்கிறான்.(10ஆ,11அ) வைதேஹி காணப்பட்டதால், நானும், ரகுவம்சமும், மஹாபலவானான லக்ஷ்மணனும் இன்று தர்மப்படி ரக்ஷிக்கப்பட்டிருக்கிறோம்.(11ஆ,12அ) இருப்பினும், பிரியத்திற்குரியவற்றை சொன்ன இவனுக்குத் தகுந்த பிரயத்தைச் செய்ய முடியாத நிலையில் நான் இருப்பதால், என் மனம் மேலும் தீனமடைகிறது.(12ஆ,13அ) இந்தக் காலத்தில், எனக்கு எல்லாமுமாக இருக்கும் மஹாத்மாவான இந்த ஹனூமதனுக்கு, நான் இந்த பரிஷ்வங்கத்தை {அங்கத்தழுவலை / அரவணைப்பை} தருகிறேன்" {என்றான் ராமன்}.(13ஆ,14அ)
பிரீதியில் திளைத்த அங்கங்களுடன் கூடிய ராமன், இதைச் சொல்லிவிட்டு, வாக்கை நிறைவேற்றிய நிறைவுடன் வந்த அந்த ஹனூமந்தனை ஆரத் தழுவிக்கொண்டான்.(14ஆ,15அ) இரகுசத்தமன் {ராமன், சற்றே} ஆலோசித்துவிட்டு, ஹரீக்களின் ஈஷ்வரன் {சுக்ரீவன்}, கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, மீண்டும் இந்த வசனத்தைச் சொன்னான்:(15ஆ,16அ) "சீதையைத் தேடுவது அனைத்து வகையிலும் நன்றாகவே செய்யப்பட்டது. ஆனால், சாகரத்தை நினைத்ததும் மீண்டும் என் மனம் தொலைகிறது {கலங்குகிறது}.(16ஆ,17அ) கடப்பதற்கரியதும், பெரும் நீர்க்கொள்ளிடமுமான சமுத்திரத்தின் தென்கரையை ஹரயர்கள் {குரங்குகள்} ஒன்று சேர்ந்து எப்படி அடையப் போகிறார்கள்?(17ஆ,18அ) இது வைதேஹி எனக்குச் சொல்லி அனுப்பிய விருத்தாந்தம். என்றாலும், ஹரீக்கள் {குரங்குகள்} சமுத்திரத்தை எப்படிக் கடக்கப்போகிறார்கள்?"(18ஆ,19அ) என்று ஹனூமந்தனிடம் சொல்லிவிட்டு, பகைவரை அழிப்பவனும், மஹாபாஹுவுமான ராமன், சோகத்தால் கலக்கமடைந்து, தியானத்தில் ஆழ்ந்தான்.(19ஆ,20)
யுத்த காண்டம் சர்க்கம் – 001ல் உள்ள சுலோகங்கள்: 20
Previous | | Sanskrit | | English | | Next |