The arrival of the mothers | Ayodhya-Kanda-Sarga-104 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கௌசல்யை அடைந்த வேதனை; ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர் ராஜமாதாக்களையும், வசிஷ்டரையும் வணங்கியது...
வசிஷ்டர், தசரதனின் மனைவியரைப் பாதுகாப்பாக முன்னிட்டுக் கொண்டு, ராமனை தரிசிக்கும் ஆவலுடன் அவ்விடத்தை நாடி நடந்தார்.(1) அந்த ராஜபத்தினிகள் மந்தாகினியை {மால்யவதி நதியை} நோக்கி மெதுவாக நடந்து சென்று, ராம லக்ஷ்மணர்கள் சேவித்தத் தீர்த்தத்தைக் கண்டனர்.(2)
கௌசல்யை, மெலிந்த முகத்தில் நிறைந்திருக்கும் கண்ணீருடன், சுமித்திரையிடமும், {அங்கிருந்த} பிற ராஜமகளிரிடமும் பரிதாபகரமாக {பின்வருமாறு} பேசினாள்:(3) "களைப்பின்றி செயல்புரிபவர்களான யாவர், அநாதைகளாக நாடு கடத்தப்பட்டனரோ அவர்கள் வனத்தின் கிழக்கு மூலையில் உள்ள இந்தத் தீர்த்தத்தை {இந்தப் புனிதத்தலத்தைத்} தான் பயன்படுத்துகிறார்கள்.(4) சுமித்ரே, உன் புத்திரனான சௌமித்ரி {லக்ஷ்மணன்}, இங்கிருந்துதான் என் புத்திரனின் {ராமனின்} காரணத்திற்காக எப்போதும் சோம்பலின்றி ஜலத்தைக் கொண்டு செல்கிறான்.(5) தாழ்ந்த இச்செயலைச் செய்தாலும், தன்னுடன் பிறந்தானுக்குப் பயன்படும் குணங்கள் நிறைந்த அனைத்தையும் செய்வதால் உன் புத்திரன் ஒருபோதும் பழிக்கப்படமாட்டான்.(6) துன்பத்திற்குப் பழகாதவனும், அதற்குத் தகாதவனுமான உன் புத்திரன், இழிவானதும், கஷ்டத்தைத் தரும் செய்தியுமான இக்கடுஞ்செயலில் இருந்து இனியாவது விடுபடட்டும்" என்றாள்.(7)
அப்போது அந்த நீள்விழியாள் {கௌசல்யை}, தரையில், தெற்கு நோக்கிய நுனிகளுடன் பரப்பப்பட்டிருந்த தர்ப்பையில், பிதாவுக்காக வைக்கப்பட்ட இங்குணப் பிண்ணாக்கை {பிண்டத்தைக்} கண்டாள்.(8) கௌசல்யா தேவி, துயருற்ற ராமனால் பிதாவுக்காக பூமியில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, தசரதன் ஸ்திரீகள் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னாள்:(9) "இராகவன் {ராமன்}, இக்ஷ்வாகுநாதரும், மஹாத்மாவும், ராகவருமான தன் பிதாவுக்காக விதிப்படி எதை தத்தம் செய்திருக்கிறான் பாரீர்.(10) தேவர்களுக்குச் சமமாக போகத்தின் மத்தியில் வாழ்ந்தவரும், மஹாத்மாவுமான அந்தப் பார்த்திபருக்கு {தசரத மன்னருக்குத்} தகுந்த போஜனமாக இதை நான் கருதவில்லை.(11) நான்கு எல்லைகளைக் கொண்ட பூமியை அனுபவித்தவரும், மஹேந்திரனுக்கு ஒப்பான வலிமைமிக்கவருமான அந்த வசுதாதிபர் {பூமியின் தலைவரான தசரதர்} இங்குணப் பிண்ணாக்கை எவ்வாறு புசிப்பார்?(12) செல்வந்தனான ராமன், தன் பிதாவுக்கு இங்குணப் பிண்ணாக்கை தத்தம் செய்திருப்பதைக் காட்டிலும் உலகத்தில் வேதனைமிக்கது வேறு எதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.(13) இராமன் தன் பிதாவுக்கு இங்குணப் பிண்ணாக்கை தத்தம் செய்திருப்பதைக் கண்டும், துக்கத்தால் ஏன் இன்னும் ஆயிரந்துண்டுகளாக என் ஹிருதயம் பிளவாமல் இருக்கிறது?(14) ஒரு மனிதன் உண்பதே அவனது தேவதைகளுக்கும் உணவாகிறது என்ற லௌகிக ஸ்ருதி {உலகத்தாரின் சொல் வழக்கு} உண்மை என்றே எனக்குத் தோன்றுகிறது" {என்றாள் கௌசல்யை}.(15)
சகபத்தினிமார், இவ்வாறு துன்பத்தால் பீடிக்கப்பட்டவளை {கௌசலையைத்} தேற்றிக் கொண்டே சென்று, ஸ்வர்க்கத்தில் இருந்து நழுவிய அமரனைப் போலிருந்த ராமனை ஆசிரமத்தில் கண்டனர்.(16) போகங்கள் அனைத்தையும் இழந்தவனாக ராமனைக் கண்ட அந்த மாதாக்கள், சோகத்தால் பீடிக்கப்பட்டுக் கண்ணீர் சிந்தி துக்கத்துடன் உரக்க அழுதனர்.(17) மனுஜவியாகரனும், சத்தியசங்கரனுமான {மனிதர்களில் புலியும், அனைவருக்கும் உண்மையுள்ளவனுமான} ராமன் எழுந்து தன் மாதாக்களான அவர்கள் அனைவரின் சுபச் சரணங்களை {அருள் பாதங்களைப்} பற்றிக் கொண்டான்.(18) அந்த நீள்விழியினர் {ராமனின் அன்னையர்}, சுக ஸ்பரிசத்தைத் தரும் மிருதுவான தங்கள் விரல்களாலும், உள்ளங்கைகளாலும், அழகிய கைகளாலும் ராமனின் முதுகில் உள்ள தூசியைத் துடைத்துவிட்டனர்.(19) சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, தன் மாதாக்கள் அனைவரையும் கண்டு துக்கமடைந்தவனாக, அர்ப்பணிப்புடன் ராமனுக்குப் பிறகு மெதுவாகத் தன் வணக்கத்தைச் செலுத்தினான்.(20) அந்த ஸ்திரீகள் அனைவரும், தசரதனுக்குப் பிறந்தவனும், சுபலக்ஷணங் கொண்டவனுமான லக்ஷ்மணனிடமும் ராமனிடம் போலவே நடந்து கொண்டனர்.(21)
துக்கத்தால் பீடிக்கப்பட்ட சீதையும், தங்கள் மாமிமாரின் சரணங்களைப் பற்றி, அவர்களின் முன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் நின்றாள்.(22) கௌசல்யை, துக்கத்தால் பீடிக்கப்பட்டும், வனவாசத்தால் மெலிந்தும், பரிதாபகரமாக நிற்கும் அவளை {சீதையை}, மகளை அணைக்கும் தாய்ப் போலத் தழுவிக் கொண்டு {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னாள்:(23) "விதேஹ ராஜரின் {ஜனகரின்} மகளும், தசரதரின் மருமகளுமான ராமனின் பத்தினி {சீதை}, ஜனங்களற்ற இந்த வனத்தில் எப்படித் துன்புறலாம்?(24) வெப்பத்தில் வதங்கிய பத்மத்தைப் போலும், வாடிய நீலோற்பலத்தைப் போலவும், தூசி படிந்த காஞ்சனத்தைப் போலவும், மேகங்களில் மறைந்த சந்திரனைப் போலவும் உன் முகத்தைக் காணும்போது, வைதேஹி, விசனமெனும் அரணியால் மனத்துக்குள் உண்டாகும் சோகாக்னி என்னைக் கடுமையாக எரிக்கிறது" {என்றாள் கௌசல்யை}.(25,26)
பரதாக்ரஜனான ராகவன் {பரதனின் அண்ணனான ராமன்}, தன்னைப் பெற்றவள் இவ்வாறு துன்புற்றுப் பேசிக் கொண்டிருக்கையில், வசிஷ்டரிடம் சென்று அவரது பாதங்களைப் பற்றிக் கொண்டான்.(27) உண்மையில் அக்னிக்கு ஒப்பானவரும், மஹாதேஜஸ்வியுமான தன் புரோஹிதரின் பாதங்களைப் பற்றிய ராகவன் {ராமன்}, அமராதிபதியான இந்திரன் பிருஹஸ்பதியுடன் {அமர்வதைப்} போல, அவரது அருகில் அமர்ந்தான்.(28)
அவர்கள் அமர்ந்த பிறகு, மந்திரிமார், நகரத்தலைவர்கள், சைனிகர்கள் ஆகியோருடனும், தர்மத்தை அறிந்த ஜனங்கள் சகிதனாக தர்மவானான பரதனும் தன் அண்ணனின் {ராமனின்} அருகில் அமர்ந்தான்.(29) வீரியவானான பரதன், கம்பீரத்துடன் ஜொலிக்கும் ராகவனை {ராமனை} தபஸ்வியின் வேஷத்தில் கண்டு, தன் கைகளைக் கூப்பி வணங்கி, பிரஜாபதியின் முன் மஹேந்திரனைப் போல அவனது முன்னிலையில் அமர்ந்தான்.(30) "இராகவனை {ராமனைப்} பணிந்து வணங்கிய இந்த பரதன், இப்போது என்னென்ன நல்ல வாக்கியங்களைச் சொல்லப் போகிறான்" என்ற உத்தமப் பேராவல் அந்த ஆரிய ஜனங்களின் மனங்களில் எழுந்தது.(31) சத்தியத்தில் திடமான ராகவனும் {ராமனும்}, மஹானுபாவனான லக்ஷ்மணனும், தார்மிகனான பரதனும், யாக சபையோரால் விளங்கும் மூன்று அக்னிகளை {கார்ஹபத்ய, ஆஹவனீய, தக்ஷிணமெனும் மூன்று வேள்வி நெருப்புகளைப்} போல நல்லிதயத்தார் {நண்பர்கள்} சூழ ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(32)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 104ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |