Tuesday, 24 January 2023

மனுவம்சம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 110 (36)

The lineage of Manu | Ayodhya-Kanda-Sarga-110 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரம்மனைக் குறித்தும், இக்ஷ்வாகு குலத்தால் நிலைநிறுத்தப்பட்ட தர்மங்களைக் குறித்தும் விளக்கிச் சொன்ன வசிஷ்டர்; மூத்த மகனே அரியணையில் அமர வேண்டும் என ராமனிடம் அவர் வலியுறுத்தியது...

Vashishta, the Rishi of three lifetimes

வசிஷ்டர், ராமனின் கோபத்தை அறிந்து {பின்வருமாறு} மறுமொழி கூறினார், "ஜாபாலியும் இவ்வுலகின் போக்குவரத்தை {பிறப்பிறப்பை / இம்மையையும், மறுமையையும்} நன்கறிவார்.(1) நீ {அயோத்திக்குத்} திரும்பி வர வேண்டும் என்ற தம் ஆசையாலேயே இந்த வாக்கியங்களைச் சொன்னார். லோகநாதா, உலகின் தோற்றத்தைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(2) 

சர்வமும் நீர்மயமாயிருந்தது. அதில் பிருத்வி {பூமி} அமைக்கப்பட்டது. அதன்பிறகு, தைவதங்கள் அனைத்துடன் {தேவர்கள் அனைவருடன்} சேர்ந்து சுவயம்பூவான பிரம்மன் தோன்றினான்.(3) பின்னர் அவன் வராஹ வடிவை ஏற்று அந்த வசுந்தரையை {பூமியை நீரிலிருந்து} உயர்த்திவிட்டு, தூய ஆத்மாக்களைக் கொண்ட தன் புத்திரர்கள் சகிதராக மொத்த ஜகத்தையும் படைத்தான்.(4) ஆகாசத்தில் தோன்றியவனும், சாசுவதமானவனும் {எப்போதும் இருப்பவனும்}, மாற்றமற்றவனும், அழிவற்றவனுமான பிரம்மனுக்கு, மரீசி பிறந்தார், மரீசியின் மகன் கசியபர் ஆவார்.(5) 

கசியபருக்கு விவஸ்வான் {சூரியன்} பிறந்தான். மனு வைவஸ்வத சுதனாவார் {விவஸ்வானின் மகனாவார்}. பூர்வத்தில் அவரே பிரஜாபதியாக {படைப்பின் தலைவராக} இருந்தார். இக்ஷ்வாகு மனுவின் மகனாவான்.(6) மனு, இந்த வளமான மஹீயை {நிலத்தை} முதலில் எவனுக்கு தத்தம் செய்தாரோ, அந்த இக்ஷ்வாகுவே அயோத்தியின் முதல் ராஜா என்பதை அறிவாயாக.(7) 

இக்ஷ்வாகுவின் மகன், ஸ்ரீமான் குக்ஷி என்று அறியப்பட்டான். அதன்பிறகு, வீரன் விகுக்ஷி, குக்ஷியின் மகனாகப் பிறந்தான்.(8) விகுக்ஷிக்கு, மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான பாணன் புத்திரனானான். பாணனுக்கு மஹாபாஹுவும், சிறப்புமிக்கவனுமான அனரண்யன் பிறந்தான்.(9) நல்லோரில் சிறந்தவனான இந்த அனரண்யன் மஹாராஜாவாக இருந்தபோது, மழை பொய்ப்பதோ, பஞ்சம் நேர்வதோ இல்லை, எவனும் கள்வனாக இல்லை.(10) அனரண்யனுக்கு, மஹாபாஹுவான ராஜா பிருது பிறந்தான். பிருதுவுக்கு மஹாராஜா திரிசங்கு பிறந்தான். அந்த வீரனே {திரிசங்குவே}, தன் சத்திய வசனத்திற்காக சரீரத்துடன் திவத்திற்கு {ஸ்வர்க்கத்திற்குச்} சென்றான்.(11,12அ) திரிசங்குவுக்கு, சிறப்புமிக்க துந்துமாரன் மகனாகப் பிறந்தான். துந்துமாரனுக்கு மஹாதேஜஸ்வியான யுவனாஷ்வன் பிறந்தான்.(12ஆ,13அ) ஸ்ரீமான் மாந்தாதா, யுவனாஷ்வனின் மகனாகப் பிறந்தான். மாந்தாதாவுக்கு, மஹாதேஜஸ்வியான ஸுஸந்தி பிறந்தான். ஸுஸந்திக்கு, துருவசந்தி, பிரஸேனஜித் என்ற இரு புத்திரர்கள் இருந்தனர். துருவசந்திக்கு, சிறப்புமிக்கவனும், ரிபுசூதனனுமான {பகைவரை அழிப்பவனுமான} பரதன் பிறந்தான்.(13ஆ-15அ) 

மஹாபாஹுவான பரதனுக்கு, அசிதன் என்ற பெயரில் பிறந்தவனுக்கு, பிரதிராஜாக்களான {பகை மன்னர்களான} ஹேஹயர்கள், தாலஜங்கர்கள், சசபிந்துக்கள் சத்ருக்களானார்கள்.(15ஆ,16) அந்த ராஜா {அசிதன்}, அவர்கள் அனைவருக்கும் எதிராக வியூகம் வகுத்தாலும், யுத்தத்தில் {அவர்களால்} விரட்டப்பட்டான். அவன் சிறந்த ரம்மியமான ஒரு சைலத்தில் {மலையில்} அபிரத முனியானான் {அர்ப்பணிப்புள்ள முனிவனானான்}.(17) அவனது பாரியைகள் இருவரும் கர்ப்பிணிகளாக இருந்தனர் என்பது சுருதி {கேள்வி}. {அவர்களில்} ஒருத்தி, தன் சகபத்தினியின் கர்ப்பத்தை அழிக்க அவளுக்கு நஞ்சைக் கொடுத்தாள்.(18) 

சியவனர் என்ற பெயரைக் கொண்ட பார்க்கவர் {பிருகு குலத்தவர்}, ஹிமவந்தத்தில் {இமய மலையில்} வசித்து வந்தார். காளிந்தி {நஞ்சுண்டவள்} அந்த ரிஷியை அணுகி அவரை வணங்கினாள். புத்திரன் பிறக்க வரம் வேண்டி வந்தவளிடம் அவர் {பின்வருமாறு} பேசினார்: (19,20அ) "தேவி, மஹாத்மாவும், உலகப் புகழ்பெற்றவனும், தார்மிகனும், நல்லொழுக்கம் கொண்டவனும், வம்ச கர்த்தனும் {குலத்தைத் தழைக்கச் செய்பவனும்}, அரிசூதனனுமான {பகைவரை அழிப்பவனுமான} புத்திரன் உனக்குப் பிறப்பான்" {என்றார் சியவனர்}.(20ஆ,21அ)

மகிழ்ச்சியடைந்த அந்த தேவி {காளிந்தி}, அந்த முனியை பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து}, அனுமதி பெற்றுக் கொண்டு, வீட்டை அடைந்து, பத்மத்தின் இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், பத்மகர்ப்பனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பான ஒளியுடனும் கூடிய, ஒரு புத்திரனைப் பெற்றாள்.(21ஆ,22) கர்ப்பத்தை அழிக்கும் நோக்கில் சகபத்தினியால் நஞ்சு கொடுக்கப்பட்டு, அந்த நஞ்சுடனேயே பிறந்ததால் அவன் ஸகரன் ஆனான் {நஞ்சுடன் கூடியவன் என்ற பெயரைப் பெற்றான்}.(23) எவன் யாகம் செய்து, பருவ காலங்களில் {பௌர்ணமி, அமாவாசைகளில்} இந்தப் பிரஜைகளை அச்சுறுத்தும் சமுத்திரத்தைத் தோண்டச் செய்தானோ அந்த ராஜாவே ஸகரன் என்ற நாமம் கொண்டவன்.(24)

அஸமஞ்சன் சகரனின் புத்திரன் ஆவான். அவன் செய்த பாபகர்மங்களுக்காக அவனது பிதா உயிரோடு இருக்கும்போதே விரட்டப்பட்டான் என்று கேள்விப்படுகிறோம்.(25) அஸமஞ்சனுக்கு அம்சுமான் என்றழைக்கப்பட்ட வீரியவான் புத்திரனாக இருந்தான். திலீபன் அம்சுமானின் புத்திரன், பகீரதன் திலீபனின் மகன்.(26) பகீரதனக்கு ககுத்ஸ்தன் பிறந்தான். அவனது பெயராலேயே காகுத்ஸ்தர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். அந்த ககுத்ஸனுக்கு ரகு என்ற புத்திரன் பிறந்தான். அவனது பெயராலேயே இராகவர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.(27) தேஜஸ்வியான பிரவிருத்தன் இரகுவுக்குப் புத்திரனாகப் பிறந்தான். அவன் புருஷாதகன், கல்மாஷபாதன்[1], சௌதாசன் என்ற பெயர்களில் புவியில் அறியப்படுகிறான்.(28) கல்மாஷபாதனின் புத்திரன், புகழ் பெற்றவனான சங்கணன், அவனது {தன் தந்தை கல்மாஷபாதனின்} வீரியத்தைப் பெற்றிருந்தாலும், தன் சைனியத்துடன் சேர்ந்து அழிந்தான்.(29)

[1] கல்மாஷபாதன் வசிஷ்டரின் சாபத்தால் ராக்ஷசனானான். மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதிகள் 178, 179, 184, கர்ண பர்வம் பகுதி 45, அநுசாஸன பர்வம் பகுதிகள் 78, 79, 80, அஸ்வமேத பர்வம் பகுதி 57, 58 ஆகியவற்றில் கல்மாஷபாதனின் கதை வெவ்வேறு கோணங்களில் இருந்து அணுகப்படுகிறது.

ஸ்ரீமான் சுதர்சனன், சங்கணனின் புத்திரனாவான். சுதர்சனனுக்கு அக்னிவர்ணன், அக்னிவர்ணனுக்கு சீக்கிரகன்,{30} சீக்கிரகனின் புத்திரன் மரு, மருவின் புத்திரன் பிரசுஷ்ருகன், பிரசுஷ்ருகனுக்கு மஹாதேஜஸ்வியான அம்பரீசன் புத்திரனாகப் பிறந்தான்.{31} அம்பரீசனுக்கு சத்தியவிக்ரமனான நஹுஷன் புத்திரனாகப் பிறந்தான். நஹுஷனின் புத்திரன் பரம தார்மிகனான நாபாகன்.{32} அஜன், ஸுவிரதன் ஆகிய இருவரும் நாபாகனின் மகன்கள். அஜனின் மகன் தர்மாத்மாவான ராஜா தசரதன்.(30-33) அவனது வாரிசும், {அரசாளும் உரிமை பெற்ற} மூத்த மகனுமான நீ, ராமன் என்று நன்கறியப்படுகிறாய். நிருபா, அந்தக் காரணத்தாலேயே ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டு, ஜனங்களை கவனித்துக் கொள்வாயாக.(34) 

இக்ஷ்வாகு குலம் முழுவதிலும் பூர்வஜனே {மூத்தவனே} ராஜாவாகிறான்; மூத்தவன் இருக்கையில் இளையவன் {ராஜா} ஆக முடியாது. மூத்த புத்திரனே ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்யப்படுவான்.(35) பெரும்புகழ்மிக்கவனே, ராகவர்களின் {ரகு குலத்தின்} சநாதன குல தர்மத்தை இப்போது கைவிடுவது உனக்குத் தகாது. விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் நிறைந்ததும், மேதினியில் பரந்த ராஷ்டிரமுமான இதை உன் பிதாவைப் போல் ஆள்வாயாக" {என்றார் வசிஷ்டர்}.(36)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 110ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்