Sandals were worn as headgear | Ayodhya-Kanda-Sarga-113 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனுக்கு மாற்றாக அவனது பாதுகைகளைப் பெற்று அயோத்திக்குத் திரும்பிச் சென்ற பரதனும், சத்ருக்னனும்...
அப்போது பரதன், சிரசில் பாதுகைகளை வைத்துக் கொண்டு, சத்ருக்னனுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ரதத்தில் ஏறினான்.(1) அவர்களின் முன்னால் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி ஆகியோரும், ஆலோசனைகளுக்காகப் பூஜிக்கப்படும் மந்திரிமார் அனைவரும் சென்றனர்.(2) பிறகு அவர்கள் சித்திரகூட மஹாகிரியை பிரதக்ஷிணம் செய்து, கிழக்கு முகமாகச் சென்று ரம்மியமான மந்தாகினியை அடைந்தனர்.(3) பரதன், தன் சைனியத்தாருடன் கூடியவனாக அருகில் விதவிதமான ஆயிரக்கணக்கான தாதுக்களைக் கண்டபடியே அந்தத் தாழ்வரையில் {சித்திரகூட மலையின் அடிவாரத்தில்} பயணித்தான்[1].(4)
[1] முன் சர்க்கத்தில் யானையின் தலையில் வைக்கப்பட்ட பாதுகைகளை பரதன் தன் தலையில் வைத்துக் கொண்டதாக இங்கே சொல்லப்படுகிறது.அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்முடித்தலம் இவையென முறையின் சூடிடான்படித்தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான்பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்- கம்பராமாயணம் 2510ம் பாடல்பொருள்: மண்ணில் புழுதி படிந்ததால் பொன்மயமான மேனியைக் கொண்ட பரதன், அழுத கண்ணுடன் ராமனின் திருவடிகள் இரண்டையும் "எனக்கு முடிகள் இவையே" என்ற முறையில் ஒழுகித் தன் தலையிற் சூடி, {ராமனின் முன்பு} மண்ணில் விழுந்து வேண்டி வணங்கிச் சென்றான்.
அப்போது பரதன், சித்திரகூடத்தின் அருகில் பரத்வாஜ முனிவர் வசிக்கும் ஆசிரமத்தை கண்டான்.(5) பிறகு, புத்திமானான அந்த பரதன், பரத்வாஜரின் வசிப்பிடமான அந்த ஆசிரமத்தை அடைந்து, ரதத்தில் இருந்து இறங்கி, அவரது பாதங்களில் பணிந்தான்.(6) அப்போது மகிழ்ச்சியடைந்த பரத்வாஜர், இந்த வாக்கியங்களைச் சொன்னார், "தாதா {ஐயா}, காரியம் நிறைவேறியதா? இராமனை நீ சந்தித்தாயா?" {என்று கேட்டார்}.(7)
மதிமிக்கவரான பரத்வாஜர் இவ்வாறு கேட்டதும், தர்மவத்சலனான பரதன், அந்த பரத்வாஜரிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8) "குருவும் {வசிஷ்டரும்}, நானும் வேண்டிக்கொண்டாலும், திடவிக்கிரமரான அந்த ராகவர் {ராமன்}, பரமப்ரீதியுடன் வசிஷ்டரிடம் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னார்:(9) "சதுர்தச வருஷங்கள் வனத்தில் {பதினான்காண்டுகள் காட்டில்} வசிப்பேன் என்று என் பிதாவிடம் பிரதிஜ்ஞை செய்திருக்கிறேன். என் பிதாவிடம் உறுதியளித்த அந்தப் பிரதிஜ்ஞையை நிச்சயம் நான் காப்பேன்" {என்றார்}.(10)
இவ்வாறு {ராமர்} சொன்னதும், மஹாபிராஜ்ஞரும், வாக்கியஜ்ஞருமான {வாக்கியங்களை அமைத்துப் பேசுவதில் வல்லவருமான} வசிஷ்டர், நல்வாக்கியங்களைச் சொல்பவரான அந்த ராகவரிடம் {ராமரிடம், பின்வரும்} மகத்தான சொற்களை மறுமொழியாகக் கூறினார்:(11) "மஹாபிராஜ்ஞனே {அனைத்தையும் அறிந்தவனே}, அயோத்தியில் அமைதியையும், வளர்ச்சியையும் விளைவிக்கக் கூடியதும், ஹேமத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டதுமான உன் பாதுகைகளை அளிப்பாயாக" {என்றார் வசிஷ்டர்}.(12)
வசிஷ்டர் இவ்வாறு சொன்னதும், அந்த ராகவர் {ராமன்} கிழக்கு முகமாக நின்று, அந்தப் பாதுகைகளில் தன் பாதங்களைப் பதித்து, ராஜ்ஜியத்தை எனக்கு தத்தம் செய்தார்.(13) மஹாத்மாவான அந்த ராமரிடம் இருந்து இந்த மங்கலப் பாதுகைகளை அடைந்து, {அவரிடம்} விடைபெற்றுக் கொண்டு, அயோத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்" {என்றான் பரதன்}.(14)
மஹாத்மாவான அந்த பரதனின் சுபவாக்கியங்களைக் கேட்ட பரத்வாஜ முனிவர், இன்னும் சுபமிக்க இந்த வாக்கியங்களை அவனிடம் சொன்னார்:(15) "நரவியாகரா {மனிதர்களில் புலியே}, உத்தம சீலனே {நடத்தையிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனே}, பள்ளத்தில் அதிக நீர் தங்குவதைப் போல, உன்னில் ஆரியம் {உன்னத நடை} நிலைத்திருப்பது வியப்பிற்குரியதல்ல.(16) தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, தர்மவத்ஸலனுமான {தர்மத்தை விரும்புகிறவனுமான} உன்னைப் பெற்ற மஹாபாஹு தசரதன் அமிர்தனாகிவிட்டான் {இறவாத அமரனாகிவிட்டான்}" {என்றார் பரத்வாஜர்}.(17)
அந்த ரிஷி {பரத்வாஜர்}, இந்த வாக்கியங்களைச் சொன்னதும், {பரதன்} தன் கைகளைக் குவித்து, அவரது பாதங்களைத் தீண்டி, விடைபெற்றுக் கொண்டான்.(18) ஸ்ரீமானான பரதன், மீண்டும் மீண்டும் பரத்வாஜரை பிரதக்ஷிணஞ் செய்துவிட்டு, மந்திரிகள் சகிதனாக அயோத்தியை நோக்கிச் சென்றான்.(19)
யானங்கள், வண்டிகள், குதிரைகள், யானைகள் உள்ளிட்ட பரதனுக்குரிய அந்த விஸ்தீரணமான சம்மு {படை} மீண்டும் தொடர்ந்து சென்றது.(20) பிறகு அவர்கள் அனைவரும், திவ்யமானதும், அலைகளையே மாலையாகக் கொண்டதுமான யமுனா நதியைக் கடந்து சென்று, சுபஜலம் கொண்ட அந்த கங்கா நதியைக் கண்டனர்.(21) சைனியத்துடனும், பந்துக்களுடனும் கூடியவன் {படைகளுடனும், சொந்தங்களுடனும் கூடியவனான அந்த பரதன்}, அந்த ரம்மியமான நீரை {யமுனை ஆற்றைக்} கடந்து, ரம்மியமான சிருங்கிபேரபுரத்திற்குள் பிரவேசித்தான். சிருங்கிபேரபுரத்தில் இருந்து புறப்பட்டவன், அதன்பிறகு அயோத்தியைக் கண்டான்.(22)
பிதாவும், உடன்பிறந்தவர்களும் இல்லாத அயோத்தியைக் கண்ட பரதன், துக்கத்தால் பீடிக்கப்பட்டவனாகத் தன் சாரதியிடம் இதைச் சொன்னான்:(23) "சாரதியே, வெறுமையானதும், ஆனந்தமற்றதும், தீனமானதுமான அயோத்தியைக் காண்பீராக" என்று தடைபட்டக் குரலுடன் {சொன்னான்}.(24)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 113ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |