Consecration of sacred sandals. | Ayodhya-Kanda-Sarga-115 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சத்ருக்னனுடன் சேர்ந்து நந்திக்கிராமத்திற்குச் சென்ற பரதன்; அமைச்சர்களும், புரோஹிதரும், படையும், அயோத்தியின் குடிமக்களும் பின்தொடர்ந்து சென்றது; ராமனின் பாதுகைகளுக்கு நடந்த பட்டாபிஷேகம்...
திடவிரதனான பரதன், தன் மாதாக்களை அயோத்திக்குத் திருப்பி அழைத்து வந்ததும், சோக சந்தாபத்துடன் கூடியவனாக தன் குருக்களிடம் {பெரியோரிடம் பின்வருமாறு} கூறினான்:(1) "இதோ நான் நந்திக்கிராமத்திற்குச் செல்கிறேன். உங்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொள்கிறேன். இராகவர் இல்லாத இந்த துக்கமனைத்தையும் அங்கே நான் சகித்துக் கொள்வேன்.(2) இராஜா திவத்தை {சொர்க்கத்தை} அடைந்தார். என் குரு {மூத்தவர் ராமன்} வனத்தில் இருக்கிறார். புகழ்மிக்க ராமரே ராஜா என்பதால், ராஜ்ஜியத்தை அளிக்க அவருக்காக நான் காத்திருப்பேன்" {என்றான் பரதன்}.(3)
மஹாத்மாவான பரதனின் இந்த சுப வாக்கியங்களைக் கேட்ட புரோஹிதர் வசிஷ்டரும், மந்திரிகள் அனைவரும் {பின்வருமாறு} சொன்னார்கள்:(4) "பரதா, உன்னுடன் பிறந்தானிடம் கொண்ட அன்பினால், நீ சொன்ன இந்தச் சொற்கள் சிலாகிக்கத்தகுந்தவை. இஃது உனக்குத் தகுந்ததே.(5) பந்துக்களிடம் ஆசையுடனும், உடன்பிறந்தாரிடத்தில் எப்போதும் திடமான நட்புடனும், ஆரிய மார்க்கத்தில் {உயர்ந்த வழியில்} அர்ப்பணிப்புடன் இருக்கும் உன்னுடன் {உன் சொற்களுடன்} எந்த மனிதன் உடன்படமாட்டான்?" {என்றனர்}.(6)
தன் அபிலாசையின்படியே மந்திரிகள் சொன்ன பிரிய வசனத்தைக் கேட்டவன் {பரதன்}, சாரதியிடம், "என் ரதம் ஆயத்தமாகட்டும்" என்ற வாக்கியத்தைச் சொன்னான்.(7) மகிழ்ச்சியான வதனத்துடன் கூடிய அந்த ஸ்ரீமான் {பரதன்}, தன் மாதாக்கள் அனைவரையும் சேவித்துவிட்டு, சத்ருக்னனுடன் சேர்ந்து ரதத்தில் ஏறினான்.(8) பரதசத்ருக்னர்கள் இருவரும் சீக்கிரமாக ரதத்தில் ஏறி, மந்திரிகள், புரோஹிதர்கள் சூழ பரம பிரீதியுடன் புறப்பட்டுச் சென்றனர்.(9) அவர்கள், வசிஷ்டர் தலைமையிலான குருக்கள் அனைவரையும், துவிஜர்கள் பிறரையும் முன்னிட்டுக் கொண்டு நந்திக்கிராமம் இருந்த திசையை நோக்கிக் கிழக்குமுகமாகச் சென்றனர்.(10) பரதன் சென்றதும், கஜ, அசுவ, ரதங்கள் {யானை, குதிரை, தேர்கள்} நிறைந்த பலமும் {படையும்}, நகரவாசிகள் அனைவரும் அழைக்கப்படாமலேயே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(11)
உடன்பிறந்தானிடம் அன்பு கொண்ட தர்மாத்மாவான அந்த பரதன், சிரசில் பாதுகைகளை வைத்துக் கொண்டே ரதத்தில் நந்திக்கிராமத்தைத் துரிதமாக அடைந்தான்.(12) அப்போது, நந்திக்கிராமத்திற்குள் சீக்கிரமாகப் பிரவேசித்த அந்த பரதன், ரதத்தில் இருந்து துரிதமாக இறங்கி, குருக்களிடம் {பெரியோரிடம்} இதைச் சொன்னான்:(13) "என்னுடன் பிறந்தவர் தானாக ஸந்நியாஸத் தன்மையுடன்[1] இந்த ராஜ்ஜியத்தை எனக்கு தத்தம் செய்தார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பாதுகைகள் யோகக்ஷேமத்தை {வளர்ச்சியையும், பாதுகாப்பையும்} அருளும்" {என்றான் பரதன்}.(14)
[1] நம்பிக்கைச் சின்னமாக என்பது இங்கே பொருள். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "எனக்குத் தமையனாரால் இந்த ராஜ்யமானது தானாக தர்மகர்த்தாவெனும் தன்மையுடையதாய் அளிக்கப்பட்டது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "எனதண்ணன் இந்த ராஜ்யத்தை என்னிடத்தில் நிக்ஷேபமாகவே வைத்திருக்கின்றனன். ஆகையால் இதை முழுவதும் அவனுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியதே. நிக்ஷேபமாக வைத்ததை ரக்ஷிக்கை முதலிய ஸ்வாதந்த்ர்யம் எனக்கில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "நிக்ஷேபம் - பாதுகாத்து வைக்கும்படி ஒருவன் மற்றொருவனிடம் கொடுத்த வஸ்து. இதையே நயாஸமென்றுஞ் சொல்லுவர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "எம்மையர் இந்த ராஜ்ஜியத்தை நியாஸம் போலளித்தருளினர்" என்றிருக்கிறது.
ஸந்நியாஸமான {நம்பிக்கைச் சின்னமான அந்தப்} பாதுகைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த பரதன், துக்க சந்தாபத்துடன் தன் அமைச்சுக் குழுக்கள் அனைத்திடமும் {அமைச்சர்கள் அனைவரிடமும் பின்வருமாறு} பேசினான்:(15) "ஆரியரின் {ராமரின்} பாதங்களாக ஏற்கப்படும் இவற்றுக்கு சீக்கிரம் {வெண்கொற்றக்} குடை பிடிப்பீராக. என் குருவின் {ராமரின்} இந்த மரப்பாதுகைகளால் ராஜ்ஜியத்தில் தர்மம் நிலைநாட்டப்படும்.(16) என்னுடன் பிறந்தவரின் அன்பால் இந்த ஸந்நியாஸம் {நம்பிக்கைச் சின்னம்} எனக்கு அளிக்கப்பட்டது. அத்தகைய இஃது அந்த ராகவரின் வரவு வரை பரிபாலிக்கப்படும்.(17) {அவர் திரும்பிய உடனேயே} இவற்றை நானாக ராகவரின் பாதங்களில் சீக்கிரம் சேர்த்து, இந்தப் பாதுகைகளுடன் கூடிய அவரது சரணங்களை {பாதங்களை} மீண்டும் காண்பேன்.(18) அப்போது, இந்த பாரத்துடன் கூடிய நான் ராகவரை {ராமரை} அடைந்து, என் குருவிடம் {ராமரிடம்} ராஜ்ஜியத்தை ஒப்படைத்து, குருவுக்கான தொண்டில் ஈடுபடுவேன்.(19) ஸந்நியாஸமான {நம்பிக்கைச் சின்னமான} இந்தச் சிறந்த பாதுகைகளின் மூலம், இந்த ராஜ்ஜியத்தையும், அயோத்தியையும் ராகவருக்கு தத்தம் செய்து, என் பாபங்களை நான் கழுவிக் கொள்வேன்.(20) காகுத்ஸ்தருக்கு அபிஷேகம் செய்யும்போது, ஜனங்கள் பரம மகிழ்ச்சியடைவார்கள். இராஜ்ஜியத்தைவிட நான்கு மடங்கு புகழையும், மகிழ்ச்சியையும் அஃது எனக்கு அளிக்கும்" {என்றான் பரதன்}.(21)
பெரும்புகழ்மிக்கவனான அந்த பரதன், இவ்வாறு அழுது துக்கித்துத் துயருடன் இருந்தாலும், நந்திக்கிராமத்தில் மந்திரிகள் சகிதனாக ராஜ்ஜியத்தை ஆண்டான்.(22) பிரபுவும், வீரனுமான அந்த பரதன், மரவுரிகளும், ஜடாமுடியும் தரித்து முனிவேஷம் பூண்டு, சைனியங்களுடன் அந்த நந்திக்கிராமத்திலேயே வசித்தான்.(23) உடன்பிறந்தானுக்குக் கீழ்ப்படிந்தவனும், உடன்பிறந்தவர்களிடம் அன்பு கொண்டவனும், பிரதிஜ்ஞைபாரகனுமான {உறுதிமொழி மாறாதவனுமான} அந்த பரதன், ராமனின் வரவை எதிர்பார்த்து, பாதுகைகளுக்கு அபிஷேகஞ் செய்து இவ்வாறே நந்திக்கிராமத்தில் வசித்திருந்தான்[2].(24,25அ)
[2] நந்தியம் பதியிடை நாதன் பாதுகம்செந்தனிக் கோல்முறை செலுத்த சிந்தையான்இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.- கம்பராமாயணம் 2514ம் பாடல்பொருள்: அந்தியும், பகலும் ஓயாமல் அழுத கண்ணுடன், நந்திக்கிராமத்தில் தலைவனின் திருவடி செங்கோல் முறை செய்ய, மனத்தினால் இந்திரியங்களை அடக்கி, அங்கேயே வசித்திருந்தான்.
பரதன், குடையையும், சாமரத்தையும் தரித்துக் கொண்டு, சாசனங்கள் அனைத்தையும் அந்த மரப்பாதுகைகளிடம் அறிவித்தான்.(25ஆ,26அ) ஸ்ரீமானான பரதன், ஆரியனின் {மூத்தவன் ராமனின்} பாதுகைகளுக்கு அபிஷேகம் செய்து வைத்து, {அவற்றுக்குக் கீழ்ப்படிந்து} எப்போதும் பணிவுடன் ராஜ்ஜிய காரியங்களைச் செயல்படுத்தினான்.(26ஆ,27அ) அந்த பரதன், ஏதோவொரு சிறிய காரியம் நேர்ந்தாலும், மதிப்புமிக்க காணிக்கை அளிக்கப்பட்டாலும், பிரதமம் {முதலில்} அந்த மரப்பாதுகைகளிடம் அறிவித்து, அதன்பிறகே முறைப்படி செயல்பட்டான்.(27ஆ-உ)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 115ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |