Sunday 7 July 2024

ஸ்ரீராம பட்டாபிஷேகம் - திருமுடிச் சூட்டு | யுத்த காண்டம் சர்க்கம் - 128 (125)

Coronation of Sri Rama | Yuddha-Kanda-Sarga-128 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளும்படி ராமனை வேண்டிய பரதன்; ஸ்ரீராம பட்டாபிஷேகம்; விருந்தினர்களுக்குக் காணிக்கைகளை அளித்து, அவர்களுக்கு விடைகொடுத்தனுப்பிய ராமன்...

Sri Rama Pattabhishekam


கைகேயியாநந்தவர்தனனான {கைகேயியின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான} பரதன், சிரசில் அஞ்சலி செய்தபடியே {கைக்கூப்பியபடியே}, சத்திய பராக்கிரமனும், தனக்கு மூத்தவனுமான ராமனிடம் {பின்வருமாறு} பேசினான்:(1) "என் மாதாவை {கைகேயியைப்} பூஜித்து, இந்த ராஜ்ஜியம் எனக்கு தத்தம் செய்யப்பட்டது. நீர் எனக்கு கொடுத்தது எப்படியோ, அப்படியே அதை {ராஜ்ஜியத்தை} மீண்டும் நான் உம்மிடம் கொடுக்கிறேன்.(2) பலமுடைய பெரும் ரிஷபத்தால் {உதவியேதுமின்றி} தனியாகச் சுமக்கப்பட்ட பெரும்பாரம் கன்றுக் குட்டிக்கு {இயலாமல் போவது} எப்படியோ, அப்படியே இந்த {ராஜ்ஜிய} பாரத்தைச் சுமப்பது என்னால் இயலாது.(3) நீரின் மஹத்தான வேகத்தால் உண்டாகும் விரிசல்களின் மூலம் உடையும் சேதுவை {அணையை / பாலத்தை /கரையைப்} போல மறைக்கப்படாமல் இருக்கும் இந்த ராஜ்ஜியத்தின் ஓட்டைகளை அடைப்பது {குறைகளைச் சரி செய்வது} கடினமானது என நினைக்கிறேன்.(4) அரிந்தமரே, வீரரே, அஷ்வத்தின் {குதிரையின்} கதியைக் கழுதையோ, ஹம்சத்தினுடையதை வாயஸமோ {அன்னத்தின் கதியை காக்கையோ} அடைய முடியாததைப் போல, ராமரே, உமது மார்க்கத்தை என்னால் பின்பற்ற இயலாது.(5)

நிவேசனத்திற்குள் ஒரு விருக்ஷம் {வீட்டிற்குள் ஒரு மரம்} நடப்பட்டு, பெருந்தண்டுடனும், பெருங்கிளைகளுடனும் ஏற முடியாத அளவில் பெரிதாக வளர்ந்து,{6} புஷ்பித்தபிறகு, பழங்களைத் தராமல் செழிப்பை இழக்குமென்றால் {பட்டுப்போகுமென்றால்}, எந்த அர்த்தத்திற்காக, எதற்கு ஹேதுவாக அது நடப்பட்டதோ, அதன் பலனை ஒருவன் அனுபவிக்கமாட்டான்.{7} மஹாபாஹுவே,  இதுவே உபமானம் {இதுவே உமக்கான உவமை}. மனுஜேந்திரரே, பக்தியுள்ள அடியவர்களான எங்களைத் தலைவரான நீர் ஆளாமல் போனதன் அர்த்தத்தை நீரே புரிந்து கொள்வீராக[1].(6-8) இராகவரே, மத்தியானத்தில் சுடர்மிகும் தேஜஸ்ஸுடன் பிரகாசமாக ஒளிரும் ஆதித்யனை {சூரியனைப்} போல, அபிஷேகம் செய்து கொண்டவராக, இன்றே ஜகம் உம்மைக் காணட்டும்.(9) தூரியங்களுடன் கூடிய கோஷங்களுடனும், காஞ்சீநூபுரங்களின் {மேகலை, சிலம்பு ஆகியவற்றின்} சுவனங்களுடனும், மதுரமான கீத சப்தங்களுடனும் ஆசுவாசமாகக் கண்விழிப்பீராக.(10) எதுவரை சக்கரம் சுழலுமோ, எதுவரை வசுந்தரை {பூமி} நிலைக்குமோ[2], அதுவரை இங்கே நீர் உலகத்தின் ஸ்வாமித்வத்தை {தலைமைத்துவத்தை} கவனிப்பீராக" {என்றான் பரதன்}.(11)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "மஹாபாஹூ, வீட்டிற்குள் ஒரு வ்ருக்ஷத்தை நடுகையில், அது மிகுதியும் வளர்ந்து, சிறிதும் ஏறமுடியாதபடி பெரிய கிளைகள் அடர்ந்து புஷ்பங்களும் நிறைந்து, பலிக்காமலே பாழடையுமாயின் அதை எதற்காக நட்டுவளர்த்தானோ அந்தப் பயன் வளர்த்தவனுக்கு விளையாமற்போமல்லவா? தசரதர் புத்ரகாமேஷ்டி முதலியவற்றைச் செய்து உன்னைப் பெறுகையில், நீயும் வளர்ந்து மஹாபராக்ரமசாலியாகி பந்துக்களும், நண்பர்களும், பெரியோர்களும் சூழப்பெற்று மங்கள குணங்களெல்லாம் அமைந்து விளங்குகின்றனை. அப்படிப்பட்ட நீ உன்னைப் பெற்றதற்குப் பயனாக ராஜ்யத்தைப் பாதுகாத்து பக்தர்களும், ப்ருத்யர்களுமான எங்களை ஆளாது போவாயாயின், முன்பு உதஹரித்த வ்ருக்ஷம் உபமானமாகும். இந்த உவமை உனக்காகவே மொழிந்தேனாகையால் இதன் பொருளை நீயே அறிவாயாக" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "'விதை விதைத்தலுக்கும், புத்ரகாமேஷ்டி முதலியன செய்தமைக்கும், பெரிய அடிபாகத்திற்கும் உடன் தோன்றல்களோடு கூடியிருந்தமைக்கும், கிளைகளுக்கும், ஸ்க்ரீவாதி முத்ர கணங்களுக்கும், புஷ்பங்களுக்கும், கல்யாண குணங்களுக்கும், பலியாமைக்கும் ராஜ்யபரிபாலனஞ்செய்யாமைக்கும் ஸாம்யம்' என்று தெரிகிறது" என்றிருக்கிறது.

[2] தர்மாலயப் பதிப்பில், "சூரியசந்திரர்களடங்கிய ஜோதிமண்டலம் எவ்வளவு காலம் சுழலுகிறதோ, பூமி எவ்வளவு விஸ்தாரமோ அவ்வளவு காலம் அந்த எல்லாவற்றிற்கும் சக்கிரவர்த்தியாயிருத்தலை தேவரீர் இப்பொழுது வகித்தருள்விராக" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நக்ஷத்ரமண்டலம் எவ்வளவு காலம் உலாவுமோ, பூமி எவ்வளவு காலம் நிலைநின்றிருக்குமோ, அவ்வளவு காலம் நீ இங்கு ஸமஸ்த ராஜ்யத்திற்கும் ப்ரபுவாயிருப்பாயாக" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில்,"சூரிய-சந்திர-நட்சத்திர மண்டலம் எதுவரை சுழல்கிறதோ, இந்த பூமி எவ்வளவு காலம் நிலைத்து இருக்கிறதோ, அந்தக் காலம்வரை தாங்களே இவை எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

பரபுரஞ்சயனான {பகை நகரங்களை வெற்றி கொள்பவனான} ராமன், பரதனின் சொற்களைக் கேட்டு, அவற்றை ஏற்கும் வகையில், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, ஒரு சுபமான ஆசனத்தில் அமர்ந்தான்.(12) அப்போது, சுகமான கைகளுடன் சீக்கிரமாகச் செயல்படக்கூடிய நிபுணர்களான சிமஷ்ருவர்தகர்கள் {நாவிதர்கள் / அம்பட்டர்கள்}, சத்ருக்னனின் வசனத்தின் பேரில், ராகவனை {ராமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(13) பூர்வத்தில் {முதலில்} பரதனும், அதன்பிறகு, மஹாபலவானான லக்ஷ்மணனும், வானரேந்திரனான சுக்ரீவனும், ராக்ஷசேந்திரனான விபீஷணனும்,{14} ஜடையை நீக்கி, ஸ்நானம் செய்தபிறகு, சித்திர மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், விலைமதிப்புமிக்க வஸ்திரங்களை உடுத்திக் கொண்டும் அங்கே அவன் ஸ்ரீயுடன் {ராமன் செழிப்புடன்} ஜ்வலித்தபடி நின்று கொண்டிருந்தான்.(14,15) இலக்ஷ்மீவானும், இக்ஷ்வாகுகுலவர்தனனுமான வீரியவான் {சத்ருக்னன்}, ராமலக்ஷ்மணர்களுக்குரிய அலங்காரத்தை கவனித்துக் கொண்டான்.(16)

அப்போது, மனஸ்வினிகளான தசரதஸ்திரீகள் {உன்னத மனம் கொண்டவர்களான தசரதனின் மனைவியர்} அனைவரும், தாங்களே முன்னின்று சீதையின் அலங்காரத்தை மனோஹரமாக {மனது கொள்ளை போகும்படிச்} செய்தனர்.(17) பிறகு, புத்ரவத்ஸலையான {மகன்களின் அன்பு கொண்டவளான} கௌசல்யை, வானரபத்னிகள் அனைவரையும் யத்னத்துடன் சோபிக்கச் செய்தாள்.(18) அப்போது, சத்ருக்னன் வசனத்தின் பேரில், சுமந்திரன் என்ற பெயருடைய சாரதி, சர்வ அங்கங்களிலும் சோபிக்கும் வகையில் ரதத்தைப் பூட்டி அணுகினான்.(19) மஹாபாஹுவும், பரபுரஞ்சயனுமான ராமன், அர்க்க மண்டலத்திற்கு ஒப்பான திவ்ய ரதம் {சூரிய மண்டலத்திற்கு ஒப்பான பிரகாசம் கொண்ட தேர் தன் முன்} இருப்பதைக் கண்டு, அதில் ஆரோஹணம் செய்தான் {ஏறினான்}.(20)

மஹேந்திரனுக்கு ஒப்பான ஒளியுடன் கூடிய சுக்ரீவனும், ஹனுமானும், ஸ்நானம் செய்துவிட்டு, திவ்யமான தோற்றமுடைய வஸ்திரங்களையும், சுபமான குண்டலங்களையும் தரித்துக் கொண்டனர்.(21) சர்வ ஆபரணங்களையும் பூண்டவர்களான அந்த சுக்ரீவனின் பத்னிகளும் {மனைவியரும்}, சுபகுண்டலங்களுடன் கூடிய சீதையும், {அயோத்தி} நகரைக் காணும் உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.(22) 

அயோத்யையில், ராஜா தசரதனின் அமைச்சர்கள், புரோஹிதரை {வசிஷ்டரை} முன்னிட்டுக் கொண்டு, அனைத்து அர்த்தங்களையும் {நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் குறித்துத்} திட்டமிட்டனர்.(23) அசோகனும், விஜயனும், சித்தார்த்தனும், ராமனின் விருத்திக்கான அர்த்தத்திற்காகவும், நகரின் செழிப்புக்கான அர்த்தங்களையும் சமாஹிதத்துடன் ஆலோசித்தனர்.(24) "ஜயத்திற்குத் தகுந்த மஹாத்மா ராமரின் அபிஷேக அர்த்தத்திற்கான சர்வ தேவைகளையும் மங்கலப் பூர்வமாகச் செய்வதே உமக்குத் தகும்",(25) என்று புரோஹிதரிடம் {வசிஷ்டரிடம்} அறிவுறுத்திய அந்த சர்வ மந்திரிகளும், ராமனை தரிசிக்கும் நோக்கத்துடன் நகரத்தைவிட்டுத் துரிதமாகப் புறப்பட்டுச் சென்றனர்.(26)

அனகனான {களங்கமற்றவனான} ராமன், பச்சைக்குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சஹஸ்ராக்ஷனை {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனைப்} போல, உத்தம ரதத்தில் ஏறி நகரை நோக்கிப் பிரயாணம் செய்தான்.(27) பரதன், கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டான். சத்ருக்னன் அவனது {ராமனின்} தலைக்கு மேல் குடையைப் பிடித்தான். இலக்ஷ்மணன் சாமரம் வீசிக் கொண்டிருந்தான்.{28} இராக்ஷசேந்திரன் விபீஷணன், முன் நின்று கொண்டு சந்திரனுக்கு ஒப்பாகப் பிரகாசிக்கும் மற்றொரு வெண்சாமரத்தைப் பிடித்திருந்தான்.(28,29) அப்போது, ரிஷிசங்கத்தினரும், தேவர்களும், மருத்கணங்களும் ஆகாசத்தில் இருந்து ராமனைப் புகழ்வது மதுரத்வனியாக {இன்னொலியாகக்} கேட்டது.(30)

பிறகு, பிலவகரிஷபனும், மஹாதேஜஸ்வியுமான சுக்ரீவன், பர்வதத்திற்கு ஒப்பானதும், சத்ருஞ்ஜயம் என்ற பெயருடையதுமான குஞ்சரத்தின் {யானையின்} மீது ஆரோஹணஞ்செய்தான் {ஏறிக் கொண்டான்}.(31) வானரர்கள், மனுஷ வடிவம் தரித்துக் கொண்டு, சர்வ ஆபரணங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு, ஒன்பதாயிரம் நாகங்களின் {யானைகளின்} மீது ஏறிச் சென்றனர்.(32) அந்தப் புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்}, சங்குகளின் சப்தமும், துந்துபிகளின் சுவனமும் கொண்ட நாதத்துடன், அரண்மனைகளை மாலையாகக் கொண்ட அந்தப் புரீக்கு {அயோத்தி நகரத்திற்குப்} பிரயாணித்தான்.(33) 

அப்போது, எதிர்வந்து அழைக்க வந்தவர்கள் {அயோத்திவாசிகள்}, அழகிய வடிவத்துடன் கூடிய அதிரதன் ராகவன் {ராமன்}, ரதத்தில் வருவதைக் கண்டனர்.(34) காகுத்ஸ்தனை வாழ்த்தி, ராமனால் பதிலுக்கு வாழ்த்தப்பெற்ற அவர்கள், உடன்பிறந்தோர் சூழ வந்த மஹாத்மாவை {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(35) அமைச்சர்களாலும், பிராமணர்களாலும், பிரக்ருதிகளாலும் {சாதரணர்களாலும் / குடிமக்களாலும்} சூழப்பட்ட ராமன், நக்ஷத்திரங்களுடன் கூடிய சந்திரனைப் போல தன்னொளியால் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(36) கையில் தூரியங்கள், தாளங்கள், ஸ்வஸ்திகங்களுடன் {இசைக்கருவிகளுடன்} முன் சென்று, மங்கலச் சொற்களை ஆனந்தமாகக் கூறியவர்களால் சூழப்பட்டவனாக அவன் {ராமன்} சென்றான்.(37) ஜாதரூபமாகத் தெரியும் அக்ஷதையுடன் {தங்கம்போலத் தெரியும் மஞ்சள் கலந்த அரிசியுடன்} இருக்கும் நரர்கள் {மனிதர்கள்}, பசுக்கள், கன்னிகைகள், கையில் மோதகங்களுடன்[3] கூடிய துவிஜர்கள் ஆகியோரும் ராமனுக்கு முன்னே சென்றனர்.(38)

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மோதகம் = குழக்கட்டை, லட்டென்று சிலர் கூறுவர்" என்றிருக்கிறது.

அப்போது, சுக்ரீவனுடன் உண்டான நட்பையும், அநிலாத்மஜனின் {வாயு மைந்தனான ஹனுமானின்} பிரபாவத்தையும், அந்த வானரர்களின் கர்மத்தையும் குறித்து மந்திரிகளிடம் ராமன் சொன்னான்.(39) அயோத்யாபுரவாசிகள், அந்த வானரர்களின் கர்மத்தையும், அந்த ராக்ஷசர்களின் பலத்தையும் கேட்டதில் வியப்பை அடைந்தனர்.(40) பிறகு, விபீஷணனைச் சந்தித்தது குறித்தும், மந்திரிகளிடம் சொன்னான். ஒளிமிக்கவனான ராமன், வானரர்களுடன் சேர்ந்து அதை நினைவுகூர்ந்த பிறகு,{41} மகிழ்ச்சியில் திளைத்த ஜனங்கள் சூழ அயோத்யாவிற்குள் பிரவேசித்தான்.(41,42அ) அப்போது, பௌரர்கள் {புரவாசிகள் / நகரவாசிகள்}, கிருஹத்திற்கு கிருஹம் பதாகைகளை ஏற்றினர். ஐக்ஷ்வாகுக்கள் வசித்த தன் பிதாவின் ரம்மியமான கிருஹத்தை அவன் {ராமன்} அடைந்தான்.(42ஆ,43அ)

பிறகு, தர்மவான்களில் சிறந்தவனான பரதனிடம், ராஜபுத்திரன் ரகுநந்தனன் {ரகுக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான ராமன்}, அர்த்தம் பொதிந்த சொற்களை மதுரமாக {இனிமையாகப் பின்வருமாறு} பேசினான்.{43ஆ,44அ} பிதாவின் பவனத்தை அடைந்து, அதற்குள் பிரவேசித்த மஹாத்மா {ராமன்}, கௌசல்யாவையும், சுமித்ரையையும், கைகேயியையும் வணங்கினான்:(43ஆ-45அ) "அசோக வனிகையுடனும், முத்து, வைடூரியங்களுடனும் கூடிய, என்னுடைய இந்த மஹத்தான பவனத்தை சுக்ரீவனுக்குக் கொடுப்பாயாக" {என்று பரதனிடம் சொன்னான் ராமன்}.(45ஆ,46ஆ)

சத்திய விக்ரமனான பரதன், அவனுடைய {ராமனின்} அந்த வசனத்தைக் கேட்டவுடன், சுக்ரீவனின் கையைப் பற்றிக் கொண்டு, {ராமனின்} அந்த ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.(46ஆ,47அ) பிறகு, சத்ருக்னனால் ஆணையிடப்பட்ட சிலர், பிரகாசிக்கும் தைலதீபங்கள் {எண்ணெய் விளக்குகள்}, மஞ்சங்களுக்கான விரிப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சீக்கிரமே {அந்த மாளிகைக்குள்} நுழைந்தனர்.(47ஆ,48அ)

மஹாதேஜஸ்வியான ராகவானுஜன் {ராகவனின் தம்பி பரதன்}, சுக்ரீவனிடம், "பிரபோ, ராமரின் அபிஷேகத்தின் பொருட்டு {அபிஷேகத்திற்கான நீரைக் கொண்டு வர} தூதர்களுக்கு ஆணையிடுவாயாக" என்று சொன்னான்.(48ஆ,49அ) அந்த சுக்ரீவன், சர்வ ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட நான்கு சுவர்ண கடங்களை {பொற்குடங்களை} நான்கு வானரேந்திரர்களிடம் சீக்கிரமாகக் கொடுத்தான்.(49ஆ,50அ) "வானரர்களே, நான்கு சாகரங்களின் நீரால் பூர்ணமடைந்த கடங்களுடன், பிரதியுஷா சமயத்தில் {விடியற்காலையில் இங்கே} நீங்கள் காத்திருப்பது எப்படியோ, அப்படி செயல்படுவீராக" {என்றான் சுக்ரீவன்}.(50ஆ,51அ) வாரணங்களுக்கு {யானைகளுக்கு} ஒப்பானவர்களும், கருடனைப் போல சீக்கிரம் செல்லக்கூடியவர்களும், மஹாத்மாக்களுமான வானரர்கள், இவ்வாறு சொல்லப்பட்டதும், சீக்கிரமே ககனத்தில் {வானத்தில்} எழுந்தனர்.(51ஆ,52அ) 

பிறகு, ஜாம்பவானும், ஹனுமானும், வேகதர்சி என்றழைக்கப்பட்ட வானரனும்,{52ஆ} ரிஷபனும், பூர்ணஜலம் கொண்ட கலசங்களை {நீர் நிறைந்த குடங்களைக்} கொண்டு வந்தனர். அந்தக் கும்பங்களில் ஐநூறு நதிகளின் {நீர் கலந்த} ஜலத்தைக் கொண்டு வந்தனர்.(52ஆ,53) பிறகு, சத்வசம்பன்னனான {வலிமை நிறைந்தவனான} சுஷேணன், பூர்வ சமுத்திரத்திலிருந்து {கிழக்குப் பெருங்கடலில் இருந்து} பூர்ணஜலம் கொண்டதும், சர்வ ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான கலசத்தை கொண்டு வந்தான்.(54) ரிஷபன், தக்ஷிண சமுத்திர {தெற்குப் பெருங்கடலின்} ஜலத்தை, சிவந்த சந்தனக் கிளைகளால் மறைக்கப்பட்ட காஞ்சன கடத்தில் {பொற்குடத்தில்} கொண்டுவந்தான்.(55) மாருதவிக்ரமனான கவயன், பஷ்சிமா மஹார்ணவத்தின் {மேற்குப் பெருங்கடலின்} குளிர்ந்த நீரை, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மஹத்தான கும்பத்தில் கொண்டு வந்தான்.(56) கருடாநில விக்ரமங்கொண்டவனும் {கருடன், வாயு ஆகியோரின் ஆற்றலைக் கொண்டவனும்}, சர்வகுணங்களும் பொருந்தியவனும், தர்மாத்மாவுமான அந்த நளன், உத்தரத்தில் {வடக்கில்} இருந்து ஜலத்தை சீக்கிரமே கொண்டு வந்தான்.(57) பிறகு, அமைச்சர்கள் சஹிதனான சத்ருக்னன், ராமனின் அபிஷேகத்திற்காக அந்த வானரசிரேஷ்டர்களால் கொண்டுவரப்பட்ட அந்த ஜலத்தைக் குறித்து,{58} புரோஹிதர்களில் சிறந்தவரிடமும் {வசிஷ்டரிடமும்}, நண்பர்களிடமும் அறிவித்தான்.(58,59அ)

*******ஸ்ரீராம பட்டாபிஷேகம்*******

அப்போது, பெரியவரும், தளரா ஊக்கமுடையவரும், பிராமணர்களுடன் கூடியவருமான வசிஷ்டர், சீதையுடன் கூடிய ராமனை ரத்னமயமான பீடத்தில் அமரச் செய்தார்.(59ஆ,60அ) வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காசியபர்,{60ஆ} காத்யாயனர், சுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகியோர், வசுக்கள்[4] சஹஸ்ராக்ஷனான வாசவனுக்கு {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனுக்கு} எப்படியோ, அப்படி தெளிந்த, சுகந்த நீரைக் கொண்டு நரவியாகரனுக்கு {மனிதர்களில் புலியான ராமனுக்கு} அபிஷேகம் செய்து வைத்தனர்.(60ஆ-62அ) பெரும் மகிழ்ச்சியுடன் கூடிய அவர்கள், முதலில் ரித்விக்குகளான பிராமணர்களைக் கொண்டும், அதே போல கன்னிகைகள், மந்திரிகளைக் கொண்டும்,{62ஆ} போர்வீரர்கள், வணிகர்கள் ஆகியோரைக் கொண்டும் அபிஷேகம் செய்து வைத்தனர், சர்வ ஔஷதிகளின் ரசத்தைக் கொண்டு, நபத்தில் {ஆகாயத்தில்} கூடியிருந்த தைவதங்களும் {தேவர்களும்},{63} லோகபாலர்கள் நால்வரும், சர்வ தேவர்களும் {ராமனுக்கு அபிஷேகம் செய்து வைத்தனர்}[5].(62ஆ-64அ) 

[4] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "1. ஆபன் (நீர்), 2. துருவன் {துருவ நட்சத்திரம்}, 3. சோமன் {சந்திரன்}, 4. தரன், 5.அநிலன் {வாயு / காற்று}, 6. பாவகன் {அக்னி / நெருப்பு}, 7. பிரதியுஷன் {விடியற்காலை}, 8. பிரபாசன் {ஒளி} ஆகியோரே அஷ்ட வசுக்களாவர்" என்றிருக்கிறது.

[5] மாணிக்கப் பலகை தைத்து வயிரத் திண் கால்கள் சேர்த்தி
ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுறச் சமைத்த பீடம்
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர் அதனின்மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ {10321}
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய்ச் 
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை ஒலிப்ப தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பூ மழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து அபிடேகம் செய்தார்

- கம்பராமாயணம் 10321. 10322ம் பாடல்கள், யுத்த காண்டம், திருமுடி சூட்டு படலம்

பொருள்: மாணிக்கத்தால் செய்த பலகையைப் பொருத்தி, வைரத்தின் கால்களைச் சேர்த்து, உயர்ந்த பொன்னால் சுற்றும் முற்றும் முழுமையாக்கி அழகுடன் செய்யப்பட்ட பீடத்தை, பெருமையுடைய பளிங்கு மாடத்தில் இட்டனர். அதன் மீது அணிகலன்களை அணிந்த திரண்ட தோள்களைக் கொண்ட வீரன் {ராமன்}, திருவோடு {சீதையுடன்} அழகுற வீற்றிருந்தான்.{10321} மங்கலப் பாடல்கள் பாடப்பட, வேதவொலி முழங்க, பெரிய வாயைக் கொண்ட சங்குகள் குமுற, தாளமும், மத்தளமும் ஓசை எழுப்ப, குற்றமில்லா பல்வகை இசைக்கருவிகள் மேலெழுந்து ஆரவாரிக்க, பூ மழை பொழிய, விண்ணோர் {தேவர்கள்} எங்கள் நாயகனை {ராமனை} தனித்தனியாக எதிரில் சென்று நீராட்டிவிட்டனர்.{10322}

இரத்தினங்களால் சோபிக்கும் கிரீடம் ஒன்று பூர்வத்தில் பிரம்மனால் நிர்மிதம் செய்யப்பட்டது.{64ஆ} ஒளிரும் பிரகாசத்துடன் கூடிய எதைக்கொண்டு, பூர்வத்தில் மனு அபிஷேகிக்கப்பட்டானோ, அவனது {மனுவின்} வழிவந்த ராஜர்கள், எதைச் சூட்டி அபிஷேகிக்கப்பட்டனரோ,{65} அத்தகையது {அந்த கிரீடம்}, ஹேமத்தால் {பொன்னால்} இழைக்கப்பட்டதும், மஹாதனத்துடன் சோபிப்பதும், நானாவித ரத்தினங்களின் சித்திர அலங்காரத்துடன் சோபிப்பதுமான சபையில் இருந்தது.{66} நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் விதிப்படி வைக்கப்பட்ட அந்த கிரீடத்தைக் கண்ட மஹாத்மாவான வசிஷ்டர்,{67} ரித்விக்குகளுடன் சேர்ந்து, பூஷணங்களுடன் {ஆபரணங்களுடன்} சேர்த்து அதை {அந்தக் கிரீடத்தை} ராகவனிடம் சேர்ப்பித்தார் {ராமனுக்குச் சூட்டினார்}.(64ஆ-68அ)

சத்ருக்னன் அவனுக்கு சுபமான வெண்குடையைப் பிடித்தான்.{68ஆ} வானரேஷ்வரனான சுக்ரீவன், ஒரு வெண்சாமரத்தையும், ராக்ஷசேந்திரனான விபீஷணன் சந்திரனுக்கு ஒப்பான மற்றொன்றையும் {மற்றொரு வெண்சாமரத்தையும்} பிடித்தனர்.(68ஆ,69) வாசவனால் தூண்டப்பட்ட வாயு, ஒளிரும் வடிவுடன் கூடிய நூறு புஷ்கரங்களாலான {தாமரைகளாலான} காஞ்சன மாலையை ராகவனுக்குக் கொடுத்தான்.(70) சக்ரனால் {இந்திரனால்} தூண்டப்பட்டவன் {வாயு}, சர்வ ரத்தினங்களுடன் கூடியதும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு முத்தாரத்தையும் நரேந்திரனுக்குக் கொடுத்தான்.(71) மதிமிக்கவனும், தகுந்தவனுமான ராமனின் அபிஷேகத்தில், தேவர்களும், கந்தர்வர்களும் பாடினர்; அப்சரகணங்கள் நர்த்தனம் புரிந்தனர்.(72) இராகவ உத்சவத்தின் போது, பூமியில் பயிர்கள் செழித்தன; மரங்கள், கந்தம் நிறைந்த புஷ்பங்களும், கனிந்த பழங்களும் கொண்டவை ஆகின.(73)

மனுஜரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்}, முதலில் பிராமணர்களுக்கு நூறாயிரம் அஷ்வங்களையும் குதிரைகளையும்}, கன்றுகளுடன் கூடிய பசுக்களையும், நூறு விருஷபங்களையும் {காளைகளையும்} கொடுத்தான்.(74) இராகவன், முப்பது கோடி ஹிரண்யங்களையும் {பொன்நாணயங்களையும்}, விலைமதிப்புமிக்க நானாவித ஆபரண, வஸ்திரங்களையும் மீண்டும் பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(75) மனுஜாதிபன் {மனிதர்களின் தலைவனான ராமன்}, அர்க்கனின் {சூரியக்} கதிர்களுக்கு ஒப்பாகத் தெரிந்த மணிகள் பதிக்கப்பெற்றதும், திவ்யமானதுமான காஞ்சன ஹாரத்தை சுக்ரீவனுக்குக் கொடுத்தான்.(76) மகிழ்ச்சிமிக்கவனான அவன் {ராமன்}, மணிரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சித்திரமான வைடூரியங்கள் பதிக்கப்பெற்றதுமான அங்கதங்களை {தோள்வளைகள்} வாலிபுத்திரனான அங்கதனுக்குக் கொடுத்தான்.(77) 

இராமன், மேன்மையான மணிகள் இழைக்கப்பட்டதும், சந்திரக்கதிர்களைப் போல் ஒளிர்வதுமான மிகச்சிறந்த முத்தாரத்தை சீதைக்குக் கொடுத்துவிட்டு,{78} தூய்மையான, திவ்யமான வஸ்திரங்களையும், சுபமான ஆபரணங்களையும்,(78,79அ)  வைதேஹியைப் பார்த்துக் கொண்டே, வாயு மைந்தனுக்கு {ஹனுமானுக்குக்} கொடுத்தான்.{79ஆ} ஜனகநந்தினியும், தன் கண்டத்தில் {கழுத்தில்} இருந்த ஹாரத்தை எடுத்து, தன் பர்த்தாவையும் {தன் கணவன் ராமனையும்}, சர்வ ஹரிக்களையும் {குரங்கினர் அனைவரையும்} மீண்டும் மீண்டும் பார்த்தாள்[6].(79ஆ,80) இங்கிதஜ்ஞன் அவளைக் கண்டு {இங்கிதங்களை / உடல் மொழியால் மனவிருப்பத்தை அறியக்கூடியவனான ராமன், சீதையைக் கண்டு}, அந்த ஜனகாத்மஜையிடம் {ஜனகனின் மகளான சீதையிடம் பின்வருமாறு} பேசினான், "அன்புக்குரியவளே, பாமினி {அழகிய பெண்ணே, சீதே}, "எவரிடம் நிறைவடைந்திருக்கிறாயோ, எவரிடம் தேஜஸ், உறுதி, புகழ், தாக்ஷியம் {கைத்திறன்}, சாமர்த்தியம், விநயம் {பணிவு}, நயம் {உலகியலறிவு}, பௌருஷம் {ஆண்மை}, விக்ரமம், புத்தி ஆகியவை எப்போதும் இருக்குமோ,[7] அவருக்கே ஹாரத்தைக் கொடுப்பாயாக" {என்றான் ராமன்}.(81,82)

[6] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸீதை, ராமன் அந்த ஸதஸ்ஸில் தனக்கு முக்தாஹாரங்கொடுத்தது தன் கையால் எவர்க்கோ கொடுப்பிக்க நினைத்தே கொடுத்தானென்று அபிப்ராயத்தைக் கண்டு, பின்பு இதை எவர்க்குக் கொடுக்கத் தகுமோ என்று எல்லா வானரர்களையும், பர்த்தாவின் அபிப்ராயம் எவனிடத்திலோ என்று பர்த்தாவையம் அடிக்கடி பார்த்தாளென்று தெரிகிறது" என்றிருக்கிறது.

[7] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸமுத்திரந்தாண்டினமையால் பலமும், லங்கையைக் கொளுத்தினமையால் பராக்கிரமமும், அசோகவனிகையில் ப்ரவேசிக்கையால் புத்தியும் மிகுந்திருக்கப் பெற்றவன் ஹனுமானே யென்று ராமன் இங்கு ஸூசிப்பித்து, மீளவும் பிறரை அவமதித்தாற்போல் தோற்றுகையால், "உனக்கு எவனிடத்தில் ஸந்தோஷம் உளதோ அவனுக்குக் கொடுப்பாய்" என்றனன் - என்று தெரிகிறது" என்றிருக்கிறது.

அந்தக் கருவிழியாள் {சீதை}, வாயுபுத்திரனிடம் ஹனுமானிடம் அந்த ஹாரத்தைக் கொடுத்தாள். வானரரிஷபனான ஹனூமான், ஒரு மலை வெண்மேகத்தால் எப்படியோ, அப்படி சந்திரக் கதிர்களின் திரளைப் போன்றிருந்த அந்த ஹாரத்தால் ஒளிர்ந்தான்.(83,84அ) சர்வ வானரப் பெரியோரும், பிற வானரோத்தமர்களும் {முதன்மையான வானரர்களும்} தகுந்த வஸ்திரங்களாலும், பூஷணங்களாலும் {அலங்கார ஆபரணங்களாலும்} பூஜிக்கப்பட்டனர்.(84ஆ,85அ) பிறகு, பரந்தபனான வசுதாதிபன் {பகைவரை அழிப்பவனும், பூமியின் தலைவனுமான ராமன்},  மைந்தனுக்கும், துவிவிதனுக்கும், நீலனுக்கும் அவரவர் விருப்பத்திற்குரிய அனைத்தையும் பார்த்துக் கொடுத்தான்.(85ஆ,86அ) விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான் ஆகியோரும், சர்வ வானரப் பெரியோரும், களைப்பில்லாமல் கர்மங்களைச் செய்யக்கூடிய ராமனால்,  தகுந்த முறையில் பூஜிக்கப்பட்டனர். பிறகு, விருப்பத்திற்குரிய ஏராளமான ரத்தினங்களுடனும், மகிழ்ச்சியான மனத்துடனும் அவர்கள் அனைவரும், வந்தபடியே திரும்பிச் சென்றனர்.(86ஆ-88அ)

பிறகு, மஹாத்மாக்களான சர்வ வானரரிஷபர்களும் பார்த்திபேந்திரனை {பூமியின் தலைவர்களுக்குத் தலைவனான ராமனை} வணங்கி, விடைபெற்றுக் கொண்டு கிஷ்கிந்தையை அடைந்தனர்.(88ஆ,89அ) வானரசிரேஷ்டனான {வானரர்களில் சிறந்தவனான} சுக்ரீவன், ராமாபிஷேகத்தைக் கண்டுவிட்டு, ராமனால் பூஜிக்கப்பட்டவனாக, கிஷ்கிந்தாபுரீக்குள் பிரவேசித்தான்.(89ஆ,90அ) தர்மாத்மாவும், பெரும் புகழ்பெற்றவனுமான ராஜா விபீஷணனும்கூட, குல தனத்தை[8] அடைந்ததும், நைர்ருதரிஷபர்களுடன் {இரவுலாவிகளில் காளைகளான ராக்ஷசர்களுடன்} லங்கைக்குத் திரும்பிச் சென்றான்.(90ஆ,91அ)

[8] தர்மாலயப் பதிப்பில், "பெரும்புகழ்படைத்தவரும், தர்மாத்மாவுமான விபீஷண மன்னரும், குலபூஜையை பெற்றுக் கொண்டு அந்த அரக்கச்ரேஷ்டர்களுடன் இலங்கைக்குப் போய்ச்சேர்ந்தார்" என்றிருக்கிறது. 

நரசிம்மாசாரியர் பதிப்பில், "(ராமன் விரும்பினவற்றையெல்லாம் கொடுத்துப் பூஜிக்கையில்) ராக்ஷஸ ராஜனாகிய விபீஷணன், இக்ஷ்வாகு வம்சத்தரசர்களின் குலதனமாகிய ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்கைக்குப் போயினன்" என்றிருக்கிறது.  அதன் அடிக்குறிப்பில், "இக்ஷ்வாகு வம்சத்தரசர்களின் குலதனமாவது - அவரது குல தெய்வமான ஸ்ரீரங்கவிமானமென்று ஸம்ப்ரதாயம். இங்ஙனம் கோவிந்தராஜர். மஹேஸ்வர தீர்த்தர், "இங்கு குலதனமாவது - ராமன் முன்பு கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்திருந்த ராக்ஷஸ குலதனமான லங்கா ராஜ்யமேயன்றி ஸ்ரீரங்க விமானமன்று. ஏனெனில் - ராமன் தனது அவதாரம் முடியும் ஸமயத்தில் விபீஷணனுக்கு ஸ்ரீரங்க விமானத்தைக் கொடுத்ததாக உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்டதாகையால், பட்டாபிஷேக ஸமயத்திலேயே விபீஷணன் ரங்கவிமானத்தைப் பெற்றானென்பது பொருந்தாது. அங்ஙனம் உத்தர காண்டத்தில், "மஹாபலமுடைய ராக்ஷஸராஜனே, மற்றும் ஒன்று உன்னோடு சொல்ல நினைக்கிறேன். இக்ஷ்வாகுகுலதெய்வமான ஜகந்நாதனை ஆராதிப்பாயாக" என்று ராமன் அவதாரம் முடியும் பொழுது விபீஷணனோடு சொல்லினன். அங்ஙனமே பாத்மபுராணத்திலும்,  "சந்திரனும், ஸூர்யனும் உள்ளவரையிலும் பூமி உள்ளவரையிலும் நீ ராஜ்யத்தைப் பரிபாலனஞ்செய்து கொண்டு ஸுகமாகயிருப்பாயாக. அதன் பிறகு மஹா ப்ரளயத்தின் பொழுது என்னிடம் வந்து சேருவாய்" என்று ராமன் மொழிந்து தன் பிரிவைப் பொறுக்கமாட்டாத விபீஷணனுக்கு இக்ஷ்வாகு வம்சத்தரசர்களின் குலதெய்வமும், தன்னிடமிருப்பவருமான ஸ்ரீரங்கஸாயுமான பகவானைக் கொடுத்தனன். விபீஷணன் ரங்கவிமானத்தைப் பெற்று லங்காபுரிக்குப் போனான்" என்று ராமாவதாரஸமாப்தி ஸமயத்தில் வந்த விபீஷணனுக்கு ராமன் ரங்கவிமானங் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறது. ஆகையால் ராமன் முன்பு சொன்ன லங்கா ராஜ்யங் கொடுப்பதையே மீளவும் இங்குச் சொல்லுகிறதன்றி வேறன்று என்கிறார். இதற்கு ஸமாதானமெப்படி யென்னில் - மேற்கண்ட இத்யாதி சுலோகங்களிரண்டும் புதிதாகச் சேர்ந்தவையேயென்று சிலர் கூறுவதாக மஹேஸ்வர தீர்த்தரே மொழிந்திருக்கின்றனர். அவை சேர்க்கப்பட்டவையே யென்றும், பாத்ம புராண வசனங்கள் கல்பாந்தரத்தில் நடந்த வ்ருத்தாந்தத்தைக் குறித்தவையென்றும் கருத்துக் கொள்ளின் முன்னமே ப்ராப்தமான லங்காராஜ்யத்தை மீளவும் பெற்றானென்பது வீணென்பதை ஆராய்ந்தறிகையில் இந்த தோஷத்திற்குப் பரிஹாரம் ஏற்படும் ஆகையால் கோவிந்தராஜர் மதத்தின்படி குலதனமாவது ஸ்ரீரங்கவிமானமே யென்றுணர்க" என்றிருக்கிறது.

கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "அறத்தை உயிராகக் கொண்ட விபீஷணன், தன் பரம்பரைச் செல்வமான (குலதனமாகிய) இலங்கை அரசை அடைந்தவனாக, அரக்கப் பிரமுகர்களுடன் இலங்கைக்குப் போய்ச் சேர்ந்தான். (குறிப்பு:- ‘இக்ஷ்வாகு குலதனமான ரங்கவிமானத்தை இராமன் அளித்தார்’ என்ற விளக்கம் பொருத்தமாக இல்லை; வேறு புராணங்களில் காணப்படும் வரலாற்றுக்கு விரோதமாக இருக்கிறது. இக்ஷ்வாகு குலதனம் பற்றிய பேச்சு, முன்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் பேசப்படவில்லை; விபீஷணன் கேட்கவும் இல்லை)" என்றிருக்கிறது.

பகைவருக்கு முடிவு கட்டிவிட்டு, அகில ராஜ்ஜியத்தையும் ஆண்டவனும், பெரும்புகழ்பெற்றவனும், பரமோதாரனுமான அந்த ராகவன் {தாராள மனம் கொண்டவனுமான அந்த ராமன்}, பெரும் மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். தர்மவத்ஸலனான {தர்மத்தில் பற்றுடைய} ராமன், தர்மஜ்ஞனான {தர்மத்தை அறிந்தவனான} லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(91ஆ,92) "தர்மஜ்ஞா, படையுடன் பூர்வத்தில் ராஜாக்கள் ஆண்டதுபோல, என்னுடன் சேர்ந்து இந்தப் பூமியை ஆள்வாயாக. யௌவராஜ்ஜியத்தில் நிறுவப்பட்டு, பித்ருக்களால் சுமக்கப்பட்ட அந்த பாரத்தை எனக்குத் துல்லியமாக நீயும் சுமப்பாயாக" {என்றான் ராமன்}[9].(93)

[9] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமன் தன் தந்தை முன்பு தனக்குப் பட்டாபிஷேகஞ் செய்ய ப்ரயத்னிக்கும் பொழுது பரதன் அருகில் இல்லாமையால் லக்ஷ்மணனைப் பார்த்து, "லக்ஷ்மணா! நீ என்னோடு கூட இந்த பூமியைப் பாலனஞ் செய்து வருவாய்" என்றனன்" என்கிறபடியே ராமன் முதலில் ஒன்று சொல்லி மீளவும் மற்றொன்று சொல்லானாகையால் அந்த வார்த்தையின்படி, லக்ஷ்மணனைக் காட்டிலும் ஜ்யேஷ்ட்டனாகிய பரதன் இருப்பினும் லக்ஷ்மணனையே யௌவராஜ்யத்தில் பட்டங் கட்டிக் கொள்ளும்படி நியமித்தானென்று தெரிகிறது" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் ராமன் லக்ஷ்மணனிடம் பேசும் அந்தக் குறிப்பிட்ட வசனம் ஆயோத்தியா காண்டம் 4ம் சர்க்கம் 43ம் சுலோகத்தில் வருகிறது.  https://ramayanam.arasan.info/2022/03/Ramayanam-Ayodhyakandam-Sarkam-004.html

சர்வாத்மாவால் {அனைத்தின் ஆத்மாவான ராமனால்} எல்லா வகையிலும் வற்புறுத்தப்பட்டாலும், சௌமித்ரி, யோகத்தை {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன், அந்தப் பொறுப்பை} ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பேரில் அந்த மஹாத்மா {ராமன்}, பரதனை யௌவராஜ்ஜியத்தில் நிறுவினான்.(94) பார்த்திபாத்மஜன் {ராமன்}, பௌண்டரீகங்களையும், அஷ்வமேதங்களையும், வாஜபேயங்களையும் {ஆகிய வேள்விகளையும்}, விதவிதமான வேறு பல யஜ்ஞங்களையும் பலமுறை செய்தான்.(95) இராகவன், பத்தாயிரம் வருஷங்கள் ராஜ்ஜியத்தை அனுபவித்தபடியே, சிறந்த அஷ்வங்களுடனும், ஏராளமான தக்ஷிணைகளுடனும் கூடிய நூறு அஷ்வமேதங்களைச் செய்தான்.(96) முழங்கால் வரை தொங்கும் கைகளையும், அகன்ற மார்பையும் கொண்ட பிரதாபவானான அந்த ராமன், தன்னை லக்ஷ்மணன் பின்தொடர இந்தப் பிருத்வியை ஆண்டு வந்தான்.(97) தர்மாத்மாவான ராகவனும், சிறந்த ராஜ்ஜியத்தை அடைந்து, மகன்கள், உடன்பிறந்தவர்கள், பந்துக்கள் ஆகியோருடன் பலவிதமான வேள்விகளைச் செய்தான்.(98)

இராமன் ராஜ்ஜியத்தை ஆண்டுவந்தபோது, விதவைகளின் புலம்பலில்லை. கொடூர விலங்குகளின் பயமில்லை. வியாதிகளின் பயமில்லை.(99) உலகம் தஸ்யுக்களற்றதாக {திருடர்களற்றதாக} இருந்தது. யாரையும் அனர்த்தம் {வறுமை / அறியாமை} அணுகவில்லை. முதியவர்கள் பாலர்களின் பிரேதகாரியங்களைச் செய்யவில்லை.(100) அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அனைவரும் தர்மபரர்களாக {தர்ம நோக்கம் கொண்டவர்களாக} இருந்தனர். இராமனையே பார்த்துக் கொண்டு, பரஸ்பரம் {ஒருவருக்கொருவர்} தீங்கிழைக்காமல் இருந்தனர்.(101) இராமன் ராஜ்ஜியத்தை ஆண்டபோது, சோகத்தில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபட்டவர்களாக, ஆயிரக்கணக்கான புத்திரர்களுடன் கூடியவர்களாக, ஆயிரம் வருஷங்கள் இருந்தனர் {மக்கள் வாழ்ந்திருந்தனர்}.(102) 

இராமன், ராஜ்ஜியத்தை ஆண்டபோது, "ராம, ராம, ராம" என்றே பிரஜைகள் பேசிவந்தனர். ஜகத்தானது ராமபூதமானது {உலகம் ராமமயமானது}.(103)  அங்கே தாவரங்கள் நித்தியம் புஷ்பங்களுடனும், நித்யம் பழங்களுடனும் இருந்தன. பர்ஜன்யன் காலத்திற்கு வர்ஷித்தான் {உரிய காலத்தில் மழை பொழிந்தது}. மாருதன் சுக ஸ்பரிசங்கொண்டவனாக இருந்தான் {காற்று இனிய தென்றலாக வீசியது}.(104) பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் லோபத்தில் {பேராசையில்} இருந்து விடுபட்டவர்களாக, சொந்த கர்மங்களில் ஈடுபட்டு, சொந்த கர்மங்களில் நிறைவுடன் இருந்தனர்.{105} இராமன் ஆளும்போது, பொய் பேசாதவர்களாகவும், தர்மபரர்களாகவும் {தர்மநோக்கம் கொண்டவர்களாகவும்} இருந்தனர்.(105,106அ) அனைவரும் லக்ஷணசம்பன்னர்களாக {நல்ல குறியீடுகள் / பண்புகள் நிறைந்தவர்களாக} இருந்தனர். அனைவரும் தர்மபராயணர்களாக {தர்மப்படி நடப்பவர்களாக} இருந்தனர். ஸ்ரீமான் ராமன், உடன்பிறந்தோர் சஹிதனாக பத்தாயிரம் வருஷங்கள் ராஜ்ஜியத்தை ஆண்டான்.(106ஆ,107அ)

*******ஸ்ரீராம பட்டாபிஷேகம் முற்றும் *******

தர்மத்துடன் கூடியதும், புகழையும், ஆயுசையும், ராஜர்களுக்கான விஜயத்தையும் {மன்னர்களுக்கான வெற்றியையும்} பெற்றுத்தரக்கூடியதும்,{107ஆ} உன்னதமானதும், பூர்வத்தில் வால்மீகியால் இயற்றப்பட்டதுமான  இந்த ஆதிகாவியத்தை {ராமாயணத்தை} உலகில் எந்த நரன் படித்தாலும், கேட்டாலும் பாபத்திலிருந்து விடுபடுவான்.(107ஆ,108) உலகில் ராம அபிஷேகத்தைக் கேட்கும் மனுஜன், புத்திரர்களை விரும்பினால் புத்திரர்களையும், தனத்தை விரும்பினால் தனத்தையும் அடைவான்;{109} இராஜா {அவனே மன்னனாக இருந்தால்}, பகைவரை அடக்கி ஆண்டு, மஹீயை {பூமியை} வெல்வான்.(109,110அ) மாதா {கௌசல்யை} ராகவனையும், சுமித்ரை லக்ஷ்மணனையும், கைகேயி பரதனையும் எப்படியோ, அப்படியே {இதைப் படிக்கும்} ஸ்திரீகளும் ஜீவபுத்திரர்களை {நீண்ட ஆயுளுடைய பிள்ளைகளைக்} கொண்டவர்களாக, புத்திர, பௌத்திரர்களுடன் சதா ஆனந்தத்தில் திளைப்பார்கள்.(110ஆ,111) களைப்பில்லாமல் கர்மங்களைச் செய்த ராமனின் விஜயத்தையும் {வெற்றியையும்}, சர்வத்தையும் {மற்றும் அனைத்தையும்} சொல்லும் இந்த ராமாயணத்தைக் கேட்பவன் தீர்க்காயுசை அடைவான்.(112)

பூர்வத்தில் வால்மீகி இயற்றிய இந்தக் காவியத்தை, சிரத்தையுடன் {கவனமாகக்} கேட்பவன் எவனோ, அவன் கோபத்தை வென்று, கடப்பதற்கரியனவற்றை {கடப்பதற்கரிய ஆபத்துகளை / இடையூறுகளைக்} கடப்பான்.(113) பூர்வத்தில் வால்மீகி இயற்றிய இந்தக் காவியத்தைக் கேட்பவர்கள் எவரோ, அவர்கள் பரவாசத்தை {வீட்டில் இல்லாத நிலையை / பயணத்தை} முடித்து, பந்துக்கள் சகிதராக {உறவினர்களுடன்} ஒன்று கூடி மகிழ்ச்சியை அடைவார்கள்.(114) ராகவனிடம் {ராமனிடம்} பிரார்த்தித்த சர்வ வரங்களையும் அவர்கள் இங்கேயே பெறுவார்கள். நம்பிக்கையுடன் இதைக் கேட்பவர்களிடம் சர்வ ஸுரர்களும் {தேவர்களும்} பிரீதி அடைவார்கள்.(115)

{இராமாயணத்தைப் படிக்கும்} எவனுடைய கிருஹத்திலும் உள்ள விநாயகங்கள் {இடையூறு செய்யும் சக்திகள்} சாந்தமடையும். {இராமயணத்தைப் படிக்கும்} இராஜா, மஹீயை {பூமியை} வெல்வான். பயணம் போனவன், பாதுகாப்பை அடைவான்.(116) இரஜஸ்வலைகளான ஸ்திரீகள் {மாதவிடாய் முடித்த பெண்கள்} உத்தம புத்திரர்களைப் பெற்றெடுப்பார்கள். இந்தப் புராதன இதிஹாசத்தைப் படிப்பவனும், பூஜிப்பவனும், சர்வ பாபங்களில் இருந்து விடுபட்டு, தீர்க்காயுசைப் பெறுவான்.(117) க்ஷத்திரியர்கள், {ராமாயணத்தை} சிரத்தால் வணங்கி, நித்தியம் துவிஜர்கள் மூலம் கேட்க வேண்டும். இந்த மொத்த ராமாயணத்தைப் படிப்பவனும் {உரைக்கும் துவிஜனும்}, கேட்பவனும் {கேட்கும் க்ஷத்திரியனும்}, ஐஷ்வர்யத்தையும், புத்திர லாபத்தையும் ஐயத்திற்கிடமில்லாமல் அடைவார்கள்.(118,119) {படிக்கும் / கேட்கும்} அவனிடம், சநாதன விஷ்ணுவும், ஆதிதேவனும், மஹாபாஹுவும், ஹரியுமான ராமன், சதா பிரியத்துடன் இருக்கிறான். இரகுசிரேஷ்டனான ராமனே சாக்ஷாத் நாராயணப் பிரபுவும், லக்ஷ்மணனே சேஷனும் ஆவர் என்று சொல்லப்படுகிறது.(120,121அ)

இவ்வாறே பூர்வ விருத்தமான இந்த ஆக்யானத்தை {விவரிப்பைக் கேட்பவரிடம்} நம்பிக்கையுடன் சொல்வீராக. உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும், உங்களுக்குள் விஷ்ணு பலம் அதிகரிக்கட்டும்.(121ஆ,122அ) இதைக் கேட்டுப் புரிந்து கொள்வதால், சர்வ தேவர்களும் திருப்தியடைகிறார்கள். இராமாயணத்தைக் கேட்பதால், பித்ருக்கள் சதா மகிழ்ச்சியடைகிறார்கள்.(122ஆ,123அ) எந்த நரர்கள், ரிஷி {வால்மீகி} இயற்றிய, ராமனின் சம்ஹிதையை பக்தியுடன் எழுதுவார்களோ, அவர்கள் திரிவிஷ்டஸத்தில் {பரலோகத்தில் / சொர்க்கத்தில்} வாசம் செய்வார்கள்.(123ஆ,124அ) மஹா அர்த்தம் பொருந்திய இந்த சுப காவியத்தைக் கேட்பதன் மூலம், குடும்ப விருத்தியையும், தன, தானிய விருத்தியையும், முக்கிய ஸ்திரீகளையும், உத்தம சுகத்தையும், சர்வ அர்த்த சித்திகளையும் புவியிலேயே அடையலாம்.(124ஆ,இ) புத்தியை விரும்பும் நல்லோர்கள், ஆயுசு, ஆரோக்கியம், புகழ், ஸௌப்ராத்ருகம் {நல்ல நட்பு}, புத்தி, நலன், சுபம் ஓஜஸ் {வலிமை} ஆகியவற்றைத் தரவல்ல இந்த ஆக்யானத்தை {விவரிப்பை / ராமாயணத்தை} நியமத்துடன் கேட்க வேண்டும்.(125)

யுத்த காண்டம் சர்க்கம் – 128ல் உள்ள சுலோகங்கள்: 125

*******யுத்த காண்டம் முற்றும்*******

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை