Friday 13 January 2023

முக்கையின் நீர் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 103 (49)

Libation offered | Ayodhya-Kanda-Sarga-103 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் தசரதன் மரணத்தால் அடைந்த துக்கம்; மந்தாகினி ஆற்றில் நீர்க்காணிக்கை அளித்த ராமலக்ஷ்மணர்கள்...

Rama and Lakshmana offering libation

பிதாவின் மரணம் தொடர்பாக பரதன் சொன்ன பரிதாபகரமான அந்தச் சொற்களைக் கேட்டதும் ராகவன் நினைவிழந்தான் {ராமன் மயக்கமடைந்தான்}.(1) போரில் தானவர்களை அழிப்பவனான இந்திரனால் ஏவப்பட்ட வஜ்ரத்தைப் போல, பரதன் சொன்ன இனிமையற்ற வஜ்ரவாக்கியத்தைக் கேட்ட பரந்தபனான {பகைவரை தபிக்கச் செய்பவனான} ராமன், வனத்தில் புஷ்பங்களால் மறைக்கப்பட்ட ஒரு மரம் கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்டதைப் போல தன் கைகளை விரித்தபடியே புவியில் விழுந்தான்[1].(2,3) இவ்வாறு சோகத்தில் மெய்மறந்து தரையில் விழுந்து, கரையை இடித்துக் களைத்து உறங்கும் குஞ்சரத்தை {யானையைப்} போலக் காட்சியளிக்கும் பெரும் வில்லாளியும், ஜகத்பதியுமான ராமன் மீது, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து வந்த உடன்பிறந்தாரும், வைதேஹியும் {விதேஹ இளவரசியான சீதையும்} அழுது கொண்டே நீரைத் தெளித்தனர்.(4,5)  

[1] விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல்
புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம்
கண்ணொடு மனம் கழல் கறங்கு போல ஆய்
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான்

- கம்பராமாயணம் 2432ம் பாடல்

பொருள்: வானுக்கும் மேல் உள்ள வீட்டுக்கு உரியவன் {ராமன்}, "{தசரதன்} விண்ணுலகு அடைந்தான்" என்ற கொடிய சொல், புண்ணில் வேல் பாய்ந்தாற் போலத் தன் செவியில் புகுவதற்கு முன்பே கண்ணும் மனமும் கழலும் காற்றாடிப் போல ஆகி மண்ணில் விழுந்தான்.

மீண்டும் நினைவு திரும்பிய அந்த காகுத்ஸன் {ராமன்}, கண்களில் கண்ணீர் வழிய, மிக்க பரிதாபகரமாக பேசத் தொடங்கினான்.(6) தர்மாத்மாவான அந்த ராமன், பிருத்விபதியான தன் பிதா ஸ்வர்க்கமடைந்ததைக் கேட்டு, தர்மத்திற்கு இணக்கமான {பின்வரும்} வாக்கியங்களை பரதனிடம் சொன்னான்:(7) "பிதா காலகதியை அடைந்த பின், அயோத்தியில் நான் என்ன செய்யப் போகிறேன்? அந்தச் சிறந்த ராஜா இல்லாத அயோத்தியை யார் ஆள்வார்?(8) என்னைக் குறித்த சோகத்தால் மரித்த அந்த மஹாத்மாவுக்கு இறுதிச் சடங்குகளைக் கூடச் செய்ய முடியாத துர்ப்பிறவியான என்னால் ஆகப்போகும் பயனென்ன?(9) அஹோ, பரதா, களங்கமற்றவனே, பிரேத காரியங்கள் அனைத்தையும் செய்து ராஜாவை கௌரவித்த நீயும், சத்ருக்னனும் சித்தார்த்தர்கள் {பாக்கியசாலிகள்}.(10) தலைவனற்றும், நரேந்திரர் இல்லாமலும் திக்கற்றிருக்கும் அயோத்திக்கு, வனவாசம் முடிந்த பிறகும் நான் திரும்ப விரும்பவில்லை.(11) பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, தாதை லோகாந்தரம் {மறுமைக்குச்} சென்றுவிட்டார். வனவாசம் முடிந்ததும் மீண்டும் எனக்கு உபதேசிக்கப் போவது யார்? (12) பூர்வத்தில் என் நன்னடத்தையைக் கண்டு பிதா ஆறுதலான வாக்கியங்களைச் சொல்வார். காதுகளுக்கு சுகமான அவற்றை இனி நான் யாரிடம் கேட்பேன்?" {என்றான் ராமன்}.(13)

பரதனிடம் இவ்வாறு சொன்ன அந்த ராமன், பூர்ண சந்திரனைப் போன்ற முகத்தைக் கொண்ட தன் பாரியாளை {மனைவியை} அணுகி, சோக சந்தாபத்துடன் {பின்வருமாறு} பேசினான்:(14) "சீதே, உன் மாமனார் மாண்டார். இலக்ஷ்மணா, நீ பிதாவை இழந்துவிட்டாய். பிருத்வீபதி {தசரதர்} ஸ்வர்க்கமடைந்த துக்கத்தை பரதன் சொல்கிறான்" {என்றான் ராமன்}.(15)

அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்} இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்தக் குமாரர்களின் {தசரதபுத்திரர்களின்} கண்களில் இருந்து கண்ணீர் அளவில்லாமல் பெருக்கெடுத்தது.(16) உடன் பிறந்தோர் அனைவரும் ராகவனைப் பெரிதும் அசுவாசப்படுத்தி, "ஜகத்தின் தலைவரான பிதாவுக்கு நீர்க்காணிக்கை அளிக்க வேண்டும்" என்று சொன்னார்கள்.(17) சீதை, தன் மாமனாரான நிருபர் {மன்னர் தசரதர்} ஸ்வர்க்கம் அடைந்ததைக் கேட்டுக் கண்ணீர் நிறைந்த கண்களால் தன் பதியை {ராமனைப்} பார்க்க முடியாதவளாக இருந்தாள்.(18) 

துக்கித்துக் கொண்டிருந்த ராமன், அழுது கொண்டிருந்த ஜானகிக்கு ஆறுதல் கூறிவிட்டு, அங்கே துக்கித்துக் கொண்டிருந்த லக்ஷ்மணனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(19) "இங்குணப் பிண்ணாக்கையும், அரைத்துணியையும், மேல் உத்தரீயத்தையும் கொண்டு வருவாயாக. மஹாத்மாவான நம் தாதைக்கு நீர்க்காணிக்கை செலுத்த வேண்டும்.(20) சீதை முன்னே செல்லட்டும், அவளுக்குப் பின்னால் நீ நடப்பாயாக. நான் உன்னைப் பின்தொடர்ந்து வருவேன். இது பொறுத்துக் கொள்ள முடியாத துக்க கதியாகும்[2]" {என்றான் ராமன்}.(21)

[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "இதுதான் அபரக்ரியா விதி" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "மிகவும் ஸஹிக்க முடியாத துக்கத்தின் நிமித்தமாகப் போகும்போது ஸ்த்ரீகளையும், பாலர்களையும் இவ்வண்ணம் முன்னிட்டுக் கொண்டு போக வேண்டுமல்லவா?" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இந்த வழி மிக்க கொடியதன்றோ?" என்றிருக்கிறது.

அப்போது அவர்களின் நித்திய அணுக்கனும், ஆன்ம அறிவியலை அறிந்தவனும், மதிமிக்கவனும், மிருதுவான இயல்புடையவனும், புலனடக்கம் கொண்டவனும், மகிமைமிக்கவனும், ராமனிடம் திட பக்தி கொண்டவனுமான சுமந்திரன், அந்த இளவரசர்களுடன் சேர்ந்து ராகவனை {ராமனை} ஆசுவாசப்படுத்தி, கைகளைப் பற்றிக் கொண்டு மங்கலமான மந்தாகினி {மால்யவதி} நதிக்குள் இறங்கச் செய்தான்.(22,23) புகழ்பெற்றவர்களான அவர்கள் ரம்மியமான தீர்த்தத்தை உடையதும், எப்போதும் பூத்துக் குலுங்கும் கானகங்களைக் கொண்டதும், புழுதியற்றுப் பாயும் மங்கல நீரோட்டத்துடன் கூடியதுமான மந்தாகினி நதியை வேதனையுடன் அடைந்து, "தாதையே இஃது உமக்கானதாகட்டும்" என்று சொல்லி அந்த {தசரத} ராஜனுக்கு நீர்க்காணிக்கை செலுத்தினர்[3].(24,25) 

[3] புக்கனன் புனலிடை முழுகிப் போந்தனன்
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான்
முக்கையின் நீர் விதிமுறையின் ஈந்தனன்
ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான்

- கம்பராமாயணம் 2455ம் பாடல்

பொருள்: உயிர்கள் அனைத்திடமும் ஒருமைத் தன்மையுடன் உள்ளிருந்து உணரும் இயல்பை அருள்பவன் {ராமன்}, நீரில் புகுந்து, முழுகி, எழுந்து, நல்வேதங்களை உணர்ந்தவர் சடங்குகளில் வழிகாட்ட, தன் கையினால் மூன்று முறை முகந்து எடுத்து விடும் நீரை விதிமுறைப்படி கொடுத்தான். 

அந்த மஹீபாலன் {பூமியின் ஆட்சியாளனான ராமன்} குவிந்த உள்ளங்கைகள் நிறைந்த ஜலத்தை உயர்த்தி யம திசையை {தென்திசையை} நோக்கி அழுது கொண்டே இதைச் சொன்னான்:(26) "இராஜசார்தூலரே {மனிதர்களில் புலியே, தசரதரே}, களங்கமற்றதும், இப்போது பித்ரு லோகத்தில் இருக்கும் உமக்கு அளிக்கப்படுவதுமான இந்நீர், எடுக்க எடுக்கக் குறையாமலிருக்கட்டும் {அக்ஷயமாகக் கடவது}" {என்றான் ராமன்}.(27)

பிறகு, தேஜஸ்வியான ராகவன் {ராமன்}, தன்னுடன் பிறந்தாருடன் மந்தாகினி தீரத்தில் ஏறி {மந்தாகினியின் கரையேறி}, தன் பிதாவுக்குப் பிண்டங்களைக் காணிக்கையளித்தான்.(28) இலந்தைகள் கலந்த இங்குண பிண்ணாக்கை {பிண்டங்களை} தர்ப்பைப் பரப்பில் வைத்த ராமன், துக்கத்தில் மூழ்கி, அழுது கொண்டே இந்தச் சொற்களைச் சொன்னான்:(29) "மஹாராஜரே, மனிதர்கள் உண்பதையே, அவர்களின் தேவதைகளும் {தெய்வங்களும்} உண்கின்றனர். நாங்கள் புசிக்கும் இதை நீரும் பிரீதியுடன் புசிப்பீராக" {என்றான் ராமன்}.(30)

பிறகு, அந்த நரவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்}, அதே மார்க்கத்தில் நதிக்கரையைக் கடந்து, ரம்மியமான {சித்திரகூட} மலைச்சாரலில் ஏறினான்.(31) அந்த ஜகத்பதி {ராமன்}, தன் பர்ணக்குடிலின் வாயிலை அடைந்து, தன் கைகளால் பரதனையும், லக்ஷ்மணனையும் அணைத்துக் கொண்டான்.(32) உடன் பிறந்தாரும், வைதேஹியும் {விதேஹ இளவரசியான சீதையும்} அழுத சப்தம், சிங்கங்கள் முழங்கும் சப்தத்தைப் போல அந்த கிரியில் எதிரொலித்தது.(33) 

பிதாவுக்கான நீர்க்காணிக்கையை செலுத்தி முடித்த போது அந்த மஹாபலவான்கள் அழுத உரத்த சப்தத்தை பரதனின் சைனியத்தார் கேட்டு அச்சமடைந்தனர்.(34) அவர்கள் {பரதனின் படையிடனர்}, "நிச்சயம் பரதர், ராமரை அடைந்துவிட்டார். மாண்டு போன தங்கள் பிதாவுக்காக அவர்கள் அழுவதே மஹத்தான சப்தமாகக் கேட்கிறது" என்றனர்.(35) 

பிறகு அவர்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, சப்தம் வந்த திக்கை நோக்கி ஒரே மனத்துடன் விரைந்து சென்றனர்.(36) சிலர் ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, சிலர் கஜங்களிலும் {யானைகளிலும்}, சிலர் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களிலும், இளைஞர்கள் சிலர் பாத நடையாகவும் சென்றனர்.(37) இராமன் நாடு கடத்தப்பட்டது சமீபத்திலென்றாலும், அவன் சென்று நெடுங்காலமாகிவிட்டதைப் போல அவனைப் பார்க்கும் ஏக்கத்துடன் சர்வஜனங்களும் ஆசிரமத்தை நோக்கி விரைந்து சென்றனர்.(38) உடன் பிறந்தவர்கள் அங்கே மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பதைக் காணும் ஆவலுடன் குளம்புகள் கொண்ட விலங்குகள், சக்கரம் பொருத்தப்பட்ட வண்டிகள் போன்ற பலவிதமான யானங்களில் {வாகனங்களில்} அவர்கள் துரிதமாகச் சென்றனர்.(39) 

பலவிதமான யானங்களின் குளம்புத்தடங்களுடனும், சக்கரத் தடங்களுடனும் கூடிய அந்த பூமி, மேகங்கள் மோதும் வானத்தைப் போல ஆரவாரமான சப்தத்தை வெளியிட்டது.(40) கரேணு {பெண்யானைப்} பரிவாரங்களுடன் கூடிய நாகங்கள் {ஆண் யானைகள்}, இதனால் பீதியடைந்து, தங்கள் கந்தத்தால் {மதநீர் நாற்றத்தால்} திக்குகளை மணமடையச் செய்தபடியே அங்கிருந்து வேறு வனத்திற்குச் சென்றன.(41) வராஹங்கள் {பன்றிகள்}, விருகங்கள் {ஓநாய்கள்}, சிங்கங்கள், மஹிஷங்கள் {எருமைகள்}, சர்ப்பங்கள், வானரங்கள் {குரங்குகள்}, வியாகரங்கள் {புலிகள்}, கோகர்ணங்கள் {ஒரு வகை மான்கள்}, கவ்யங்கள் {மற்றொரு வகை மான்கள்}, புள்ளி மான்கள் ஆகியனவும் அச்சத்தால் பீடிக்கப்பட்டன.(42) சக்கரவாகங்கள், நீர்க்கோழிகள், ஹம்சங்கள் {அன்னங்கள்}, நீர்க்காகங்கள், பெருங்கொக்குகள், ஆண் குயில்கள், கிரௌஞ்சங்கள் ஆகியனவும் கலக்கமடைந்து திசைகள் அனைத்திலும் பறந்தோடின.(43) அந்த சப்தத்தில் பீதியடைந்த பக்ஷிகளால் நிறைந்த ஆகாயம், மனிதர்களால் மறைக்கப்பட்ட பூமி ஆகிய இரண்டும் அப்போது நன்கு பிரகாசித்தன {அழகாக இருந்தன}.(44)

அப்போது ஜனங்கள், புருஷவியாகரனும் {மனிதர்களில் புலியும்}, புகழ்பெற்றவனும், அரிந்தமனுமான {பகைவரை அழிப்பவனுமான} ராமன் வெறுந்தரையில் அமர்ந்திருப்பதைத் திடீரெனக் கண்டனர்.(45) கைகேயியையும், மந்தரையையும் நிந்தித்தபடியே அந்த ஜனங்கள், கண்ணீர் நிறைந்த முகத்துடன் ராமனை அணுகினார்கள்.(46) தர்மஜ்ஞனான {தர்மத்தை அறிந்தவனான} ராமன், துக்கத்தால் பீடிக்கப்பட்டுக் கண்ணீர் நிறைந்த கண்களுடன் இருக்கும் அம்மக்களைக் கண்டு, பிதாவைப் போலவும், மாதாவைப் போலவும் அவர்களை அரவணைத்தான்.(47) அங்கிருந்த சில மனிதர்களை அவன் அரவணைத்த அதே வேளையில் சில நரர்கள் அவனை வணங்கினர். பிறகு அவன், தன் நண்பர்களையும், பந்துக்கள் {உறவினர்கள்} அனைவரையும் அணுகி, அவரவருக்குத் தகுந்த மதிப்பை அளித்தான்.(48) அங்கே அழுது புலம்பிய மஹாத்மாக்களின் ஆரவாரம் புவனத்திலும், சுவனத்திலும், கிரிகளின் குகைகளிலும் எதிரொலித்து மிருதங்க கோஷம் போலத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.(49)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 103ல் உள்ள சுலோகங்கள்: 49

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை