Saturday 19 March 2022

பட்டாபிஷேக நாள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 004 (45)

Coronation day | Ayodhya-Kanda-Sarga-004 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை மீண்டும் அழைக்க தேரோட்டியை அனுப்பிய தசரதன்; தன் அவசரத்திற்கான காரணமாகப் பல்வேறு தீய சகுனங்களைக் குறிப்பிடுவது; கௌசல்யையிடம் சென்று பட்டாபிஷேகம் குறித்துச் சொன்ன ராமன்...

Rama went to see Kaushalya

தீர்மானம் செய்வதில் திறன்மிக்கவனான அந்த நிருபன் {தசரதன்}, நகரவாசிகள் சென்ற பிறகு, மீண்டும் மந்திரிகளுடன் கலந்தாலோசித்து, "நாளை புஷ்யம் {பூச நட்சத்திர நாள்}. செந்தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்ட என் சுதன் {மகன்} ராமனை நாளையே யுவராஜனாக அபிஷேகம் செய்யலாம்" என்று தீர்மானித்தான்.(1,2)

அதன்பிறகு தசரத ராஜன் மாளிகையினுள் சென்று, "ராமனை மீண்டும் இங்கே அழைத்து வருவீராக" என்று சூதனிடம் {தேரோட்டியிடம்}[1] ஆணையிட்டான்.(3) அந்த வாக்கியத்தை ஏற்றுக் கொண்ட சூதன், ராமனை சீக்கிரம் அழைத்து வர மீண்டும் ராமபவனத்திற்கு {ராமனின் வீட்டிற்கு} சென்றான்.(4)

[1] இங்கே சுமந்திரன் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. பல பதிப்புகளிலும் சூதன் என்ற சொல்லுக்கு சுமந்திரன் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. முந்தைய சர்க்கத்தில் சுமந்திரன் என்ற சொல் நேரடியாகவே இரண்டு மூன்று முறை சொல்லப்படுகிறது. இந்த சர்க்கத்தில் அவ்வாறு தெளிவாகச் சொல்லப்படவில்லை. இங்கே யார் செல்வது என்பது முக்கியமற்றது என்பதால் மூலத்தில் உள்ள சூதன் என்ற சொல்லே கையாளப்படுகிறது.

வாயில்காப்போர், அவனது {தேரோட்டியின்} மீள்வரவை ராமனிடம் தெரிவித்தனர். அவனது வரவைக் கேட்டதும் ராமன் ஐயங்கொண்டான்.(5) இராமன் அவனைத் துரிதமாக அழைத்து, இந்த வசனத்தைச் சொன்னான்: "ஏது காரணத்திற்காக வந்தீர் என்பதை முழுமையாகச் சொல்வீராக" {என்று கேட்டான் ராமன்}.(6)

அதைக் கேட்ட சூதன் {தேரோட்டி} அவனிடம் {இவ்வாறு} பேசினான்: "ராஜா உன்னைக் காண விரும்புகிறார். செல்வதா, வேண்டாமா என்பது உன் பிரமாணம் {என்பதை நீயே தீர்மானித்துக் கொள்வாயாக}" {என்றான்}.(7)

இராமன், சூதனின் இந்தச் சொற்களைக் கேட்ட உடனேயே அந்த நரேஷ்வரனை {மனிதர்களின் தலைவனான தசரதனை} மீண்டும் காண ராஜபவனத்திற்கு {அரச மாளிக்கைக்கு} விரைந்தான்.(8) இராமன் வந்ததைக் கேட்ட தசரத நிருபன் {மன்னன்}, பிரியமான, உத்தமமான வாக்கியங்களைச் சொல்ல கிருஹத்திற்குள் {அறைக்குள்} பிரவேசிக்க அனுமதித்தான்.(9) ஸ்ரீமானான அந்த ராகவன் {ராமன்}, பிதாவின் பவனத்திற்குள் பிரவேசித்ததும் தூரத்திலேயே அவனைக் கண்டு, கூப்பிய கைகளுடன் அவன் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.(10)

பூமிபதி {பூமியின் தலைவனான தசரதன்}, தன் முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பவனை உயர்த்தி ஆரத்தழுவிக் கொண்டு, அழகான ஆசனத்தைக் கொடுத்து மீண்டும் {இவ்வாறு} பேசினான்:(11) "இராமா, தீர்க்காயுள் கொண்ட விருத்தனான {நெடுங்காலம் வாழ்ந்த முதியவனான} நான், விரும்பிய போகங்களை அனுபவித்து, உணவுடனும், ஏராளமான தக்ஷிணைகளுடனும் கூடிய நூற்றுக் கணக்கான வேள்விகளையும், புண்ணிய விழாக்களையும் நடத்தியிருக்கிறேன்.(12) புருஷசத்தமா {மனிதர்களில் சிறந்த ராமா, வேத, சாத்திரங்கள் உள்ளிட்ட} கல்வி கற்றவன் நான். புவியில் ஒப்பற்றவனும், அன்புக்குரியவனுமான நீ எனக்குப் பிறந்தாய். நான் ஏராளமானவற்றை தத்தம் செய்தேன் {தானமளித்தேன்}.(13) வீரா, என்னால் விரும்பப்பட்ட ஏராளமான சுகங்களையும் அனுபவித்தேன். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், விப்ரர்கள் ஆகியோருக்கும், ஆத்மாவுக்கும் {என்னளவிலும்} நான் கடன்பட்டவனல்ல[2].(14) உனக்கு அபிஷேகம் செய்வதைத் தவிர வேறு கடமையேதும் எனக்கில்லை. எனவே, நான் உன்னிடம் சொல்வதைச் செய்வதே உனக்குத் தகும்.(15)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தேவருணம், ரிஷிருணம், பித்ருருணம், ப்ராஹ்மணருணம், ஆத்மருணம் என்று மனிதனுக்கு ருணங்கள் ஐந்து வகைப்பட்டிருக்கும். ருணம் - கடன் - இங்குக் கடனாவது - தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும், ப்ராஹ்மணர்களுக்கும், ஆத்மாவுக்கும் அவசியமாகச் செய்ய வேண்டிய வ்யாபாரம் இவ்வைவர்க்கும் ஒருவன் கடன்பட்டிருக்கையெப்படியென்னில் - தேவதைகள் இந்திரியங்களை அபிமானித்து நடத்துபவர்களாகையால் இந்திரிய ஜயத்தை உண்டாக்கிக் கொடுத்து உபகாரஞ்செய்வதனாலும், ரிஷிகள் வாக்கை அளித்து உபகாரஞ் செய்வதனாலும், ப்ராஹ்மணர்கள் கர்மாதீனங்களாகிய ஸம்ஸத் ஸம்ஸ்காரங்களையும் செய்வித்துப் பாபங்களைப் போக்கி உபகரிப்பதனாலும், ஆத்மா, சரீர இந்திரிய ஸங்காத ரூபமாகி ஜ்ஞானப்ரகாசத்தை உண்டாக்குவதற்குக் காரணமாயிருப்பதனாலும் இவ்வைவர்க்கும் செய்ய வேண்டிய ப்ரதியுபகாரமே புருஷனுக்குக் கடனாயிருக்குமென்று தெரிந்து கொள்வது" என்றிருக்கிறது.

இப்போது மக்கள் அனைவரும் உன்னையே நராதிபனாக {நீயே மனிதர்களின் தலைவனாக வேண்டுமென} விரும்புகின்றனர். புத்திரா, எனவே நான் உன்னை யுவராஜனாக நியமிக்கப் போகிறேன்.(16) இராமா, பயங்கரமானவையும், அசுபமானவையுமான ஸ்வப்னங்களை {கனவுகளை} நான் கண்டு வருகிறேன். பகல்வேளையில் இடிபோன்ற உல்கங்கள் {எரிகொள்ளிகள்} பேரொலியுடன் விழுகின்றன.(17) இராமா, சூரியன், அங்காரகன் {செவ்வாய்}, ராஹு போன்ற பயங்கரக் கிரகங்கள் என் நக்ஷத்திரத்தைப் பீடிப்பதாக தைவஜ்ஞர்கள் {சோதிடர்கள்} சொல்கிறார்கள்[3].(18) பொதுவாக இத்தகைய நிமித்தங்கள் {அறிகுறிகள்} உண்டாகும் போது ராஜா மரணத்தை அடைவான், அல்லது கோரமான விபத்தை {ஆபத்தைச்} சந்திப்பான்.(19)

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அங்காரகன் என்பது செவ்வாய் கிரகத்தின் மற்றொரு பெயராகும். உரையில் மறைமுகமாகச் சொல்லப்பட்டாலும், இங்கே குறிப்பிடப்படுவது தசரதனின் நட்சத்திரம் என்றே பொருள்படுகிறது" என்றிருக்கிறது.

இராகவா {ராமா}, பிராணிகளின் மதி சலனங்கொண்டது {உயிரினங்களின் புத்தி நிலையற்றது}. எனவே என் மனம் மாறுவதற்கு முன் அபிஷேகம் செய்து கொள்வாயாக[4].(20) இன்று, புஷ்யத்திற்கு {பூச நட்சத்திரற்கு} முந்தைய புனர்வசுவுக்குள் {புனர்பூச நட்சத்திரத்திற்குள்} சந்திரன் நுழைகிறான். புஷ்ய யோகம் {பூச நட்சத்திரத்துடன் சந்திரன் இணையும் நாள்} பொருந்தி வருவதாக தைவசிந்தகர்கள் {சோதிடர்கள்} சொல்கிறார்கள்.(21) எனவே புஷ்யத்தில் {பூச நக்ஷத்திரத்தில்} அபிஷேகம் ஏற்பாயாக. என் மனம் அவசரப்படுத்துகிறது. பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, நாளை நான் உனக்கு யுவராஜ்ய அபிஷேகம் செய்து வைப்பேன்.(22) எனவே, இவ்விரவு முதல் வாத்வையுடன் {என் மருமகள் சீதையுடன்} உபவாசமிருந்து, தற்கட்டுப்பாட்டுடன் தர்ப்பைப் பாயில் சயனிப்பாயாக {புல்லணையில் துயில்வாயாக}.(23)

[4] தசரதனின் இந்த சலனத்திற்கான பொருளை அயோத்தியா காண்டம் 107ம் சர்க்கத்தில் 3 முதல் 6 வரையுள்ள சுலோகங்களின்  பொருளை உணரும்போது புரிந்து கொள்ள முடியும்.

இன்று {பொதுவாக} இத்தகைய காரியங்களுக்குப் பல தடைகள் நேரும். எனவே, உன் ஸுஹ்ருதசர்களும் {நண்பர்களும்} விழிப்புடன் இருந்து அனைத்துத் திசைகளிலும் உன்னைப் பாதுகாக்கட்டும்[5].(24) இந்த நகரத்திலிருந்து பரதன் தொலைவில் இருக்கும் காலத்திற்குள் உன் அபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது என் கருத்து[6].(25) உன்னுடன்பிறந்தவனும், மூத்தவனுக்கு ஏற்றபடி {உன்னை அனுசரித்துச்} செயல்படுபவனும், தர்மாத்மாவும், கருணையுள்ளவனும், ஜிதேந்திரியனுமான {புலன்களை வென்றவனுமான} பரதன், நன்மக்களின் வழியில் நிலையாகச் செல்பவன்.(26) இராகவா {ராமா}, மனிதர்களின் சித்தம் அநித்யமானது {நிலையற்றது} என்பது என் கருத்து. எப்போதும் தர்மவானாகவும், நல்லியல்புடனும் இருப்பவர்களும் தூண்டுதலின் பேரில் எதிர்பாராத வகையில் செயல்படக்கூடும்" {என்றான் தசரதன்}.(27)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பில், "பெருங்காரியங்களுக்கு இடையூறுகள் பல உண்டாகும். ஆகையால் உனது நண்பர்கள் ஏமாறுதலின்றி மன ஊக்கத்துடன் உன்னை இன்றைய தினம் சூழ்ந்திருந்து ஸாவப்ரகாரத்தாலும் பாதுகாத்திருப்பார்களாக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "உன்னுடைய நேசத்தார்களும் இன்றிரவு முழுவதிலும் உனக்குத் தீங்கு வராவண்ணம் ஊக்கத்துடன் காக்கக் கடவர்கள். இவ்வகையான நற்செயல்களுக்குப் பலவகையாக இடையூறுகள் வருகின்றனவன்றோ?" என்றிருக்கிறது.

[6] நரசிம்மாசாரியர் பதிப்பில், "தசரத மன்னவன் கேகயராஜனிடத்தில் உன் பெண்ணுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு ராஜ்யங் கொடுக்கின்றேனென்று சொல்லிக் கைகேயியை மணம்புரிந்தனன். இந்தக் கதை இக்காண்டத்திலேயே நூற்றேழாவது ஸர்க்கத்தில் வெளியாகும். இந்த விருத்தாந்தத்தை மனத்தில் வைத்துக் கொண்டே பரதன் வந்தால் ராஜ்யத்தை அவனுக்கே கொடுக்க வேண்டியிருக்குமோ என்று சங்கித்து மன்னவன் இங்ஙனம் மொழிந்தனன்" என்றிருக்கிறது.

இவ்வாறு {தசரதன்} நாளை நடைபெறப்போகும் அபிஷேகம் குறித்துச் சொல்லி, விடை கொடுத்ததும், ராமன் தன் பிதாவை வணங்கிவிட்டு கிருஹத்திற்கு {வீட்டிற்குச்} சென்றான்.(28) {ராமன்}, அபிஷேகம் குறித்து {தசரத} ராஜன் தீர்மானித்ததும் உடனே புறப்பட்டுச் சென்று, வீட்டிற்குள் பிரவேசித்து, மாதாவின் {தன் தாயின்} அந்தப்புரத்திற்குச் சென்றான்.(29) அங்கே தேவதாகாரத்தில் {வழிபாட்டிடத்தில்} தியானிப்பவளும், பட்டுடை தரித்தவளும், அமைதியாக ஸ்ரீயிடம் {லட்சுமி தேவியிடம்} வேண்டிக் கொண்டிருந்தவளுமான தன் மாதாவை {கௌசல்யையைக்} கண்டான்.(30) இராமாபிஷேகமெனும் நற்செய்தியைக் கேட்ட சுமித்ரையும், லக்ஷ்மணனும், சீதை அழைத்து வரப்படுவதற்கு முன்பே அங்கு வந்திருந்தனர்.(31) அந்நேரத்தில் சுமித்ரையும், சீதையும், லக்ஷ்மணனும் அருகில் கவனித்துக் கொள்ளக் கௌசல்யை கண்களை மூடியிருந்தாள்.(32) புஷ்யத்தில் {பூச நட்சத்திர நாளில்} புத்திரனுக்கு நடைபெறப்போகும் யௌவராஜ்யாபிஷேகத்தைக் கேட்டு, பிராணாயாமத்துடன் ஜனார்த்தனப்புருஷனை {விஷ்ணுவை} தியானித்துக் கொண்டிருந்தாள்[7].(33)

[7] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "யோகத்திற்கு எட்டு அங்கங்கள் உண்டு.  யமம் (தற்கட்டுப்பாடு), நியமம் (சடங்குகள்), ஆசனம் (உடல் அமைவு நிலை), பிராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு), பிரத்யாஹாரம் (பின்வாங்கல் {/ உள்நோக்கித் திரும்புதல்}), தாரணை (தக்க வைத்தல் {/ கவனம் செலுத்தல்}), தியானம் (ஆழ்நிலை ஆய்வு {/ ஓர்மை அடைதல்}), சமாதி (விடுதலை {/ சமநிலை புத்தியை அடைதல்}) ஆகியவையே அந்த எட்டு அங்கங்கள். அதனாலேயே அஷ்டாங்க யோகம் என்று இஃது அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. யோகத்தின் நான்காம் அங்கமான மூச்சுக் கட்டுப்பாடே இங்கே குறிப்பிடப்படும் பிராணாயாமமாகும்.

இராமன் அவ்வாறே நல்ல நியமத்துடன் இருப்பவளை {கௌசல்யையை} அணுகி வணங்கி, அவளுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய இந்த வசனத்தைச் சொன்னான்:(34) "அம்ப {அம்மா}, பிரஜாபாலன கர்மத்தில் பிதா {மக்களை ஆளும் செயல்பாட்டில் தந்தை} என்னை நியமித்திருக்கிறார். பிதாவின் சாசனப்படி நாளை என் அபிஷேகம் நடைபெறப் போகிறது.(35) சீதையும் என்னுடன் சேர்ந்து இந்த ராத்திரி உபவாசம் இருக்க வேண்டுமெனப் பிதாவும் {தந்தையும்}, ரித்விக்குகளும், உபாத்யாயர்களும் {ஆசிரியர்களும்} என்னிடம் சொன்னார்கள்.(36) நாளை நடைபெறப்போகும் அந்த அபிஷேகத்துக்குத் தகுந்த மங்கலச் சடங்குகள் அனைத்தையும் இன்று எனக்கும், வைதேஹிக்கும் {விதேஹ இளவரசியான சீதைக்கும்} செய்விப்பாயாக" {என்றான் ராமன்}.(37)

நீண்டகாலமாகத் தான் விரும்பியதை {பட்டாபிஷேக செய்தியைக்} கேட்ட கௌசல்யை, இனிமையாக ஒலிக்கும் இந்த வாக்கியத்தை ராமனிடம் ஆனந்தக் கண்ணீருடன் சொன்னாள்:(38) "வத்சா {குழந்தாய்}, ராமா, சிரஞ்சீவியாக இருப்பாயாக. உன் பகைவர் அழியட்டும். உன் மகிமையால் என் ஞாதிகளும், சுமித்திரையின் ஞாதிகளும் {உன் தாயாதிகள்} மகிழட்டும்.(39) புத்திரகா, மிக்க மகிழ்ச்சி. ஒரு கல்யாண நக்ஷத்திரத்தில் என்னில் நீ பிறந்தாய். உன் குணங்களால் உன் பிதா தசரதர் மகிழ்ச்சியடைந்தார்.(40) புத்திரா, என்னுடைய புஷ்கரேக்ஷண புருஷனிடம் {தாமரைக் கண்ணனான விஷ்ணுவிடம்} நான் கொண்ட க்ஷாந்தம் {விரத உபவாசங்கள் வீணாகாமல்} அமோகமாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இக்ஷ்வாகுக்களின் இந்த ராஜ்யஸ்ரீ {இக்ஷ்வாகு குலத்தின் ராஜ்ஜியமெனும் இந்த லட்சுமி} உன்னை அடைவாள்" {என்றாள் கௌசல்யை}.(41)

மாதா இவ்வாறு சொன்னதும், கைகளைக் கூப்பியபடி பணிவுடன் அமர்ந்திருந்த தன்னுடன்பிறந்தானை {லக்ஷ்மணனைக்} கண்டு புன்னகையுடன் இதைச் சொன்னான் {ராமன்}:(42) "இலக்ஷ்மணா, இந்த வஸுந்தரையை {பூமியை} என்னுடன் சேர்ந்து நீ ஆள்வாயாக. இந்த ஸ்ரீ {ராஜ்ஜியமெனும் லட்சுமி} என்னுடைய இரண்டாம் அந்தராத்மாவான {ஆத்மாவான} உன்னை அடைந்திருக்கிறாள்.(43) சௌமித்ரியே {சுமத்திரையின் மகனான லக்ஷ்மணா}, நீ விரும்பும் ராஜ்ஜிய பலன்களையும், நன்மைகளையும் அனுபவிப்பாயாக. நான் ஜீவிதத்தையும் {இந்த வாழ்வையும்}, ராஜ்ஜியத்தையும் உனக்காகவே விரும்புகிறேன்" என்றான் {ராமன்}.(44) இலக்ஷ்மணனிடம் இவ்வாறு பேசிய ராமன், மாதாக்கள் இருவரையும் வணங்கிவிட்டு, சீதையையும் அவர்களிடம் அனுமதி பெறச் செய்து, தன் நிவேசனத்திற்கு {வீட்டிற்குச்} சென்றான்.(45)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 004ல் உள்ள சுலோகங்கள் : 45

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் வினதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹிமவான் ஹேமை