Wednesday 19 October 2022

அழிந்தது கேகயன் மடந்தை ஆசை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 083 (26)

Kekaya daughter's desire perished | Ayodhya-Kanda-Sarga-083 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராணிகள், அமைச்சர்கள் மற்றும் பிறருடன் புறப்பட்ட பரதன்; குஹன் ஆளும் சிருங்கிபேரபுரத்தை அடைந்தது...


Bharata's journey start to the forest

பிறகு காலையில் எழுந்த பரதன், தன் உத்தம சியந்தனத்தில் {தேரில்} ஏறி, ராமனை தரிசிக்கும் ஆசையில் சீக்கிரமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) மந்திரிகள், புரோஹிதர்கள் அனைவரும் சூரிய ரதங்களுக்கு ஒப்பான குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்களில் அவனுக்கு {பரதனுக்கு} முன்னால் சென்றனர்.(2) விதிப்படி ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பதாயிரம் நாகங்களும் {யானைகளும், இவ்வாறு} புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இக்ஷ்வாகு குலநந்தனனான பரதனைப் பின்தொடர்ந்து சென்றன.(3) தன்விகளுடனும் {வில்லாளிகளுடனும்}, விதவிதமான ஆயுதங்களுடனும் கூடிய அறுபதாயிரம் ரதங்களும், புகழ்மிக்க ராஜபுத்திரனான பரதன் செல்லும் வழியில் அவனைப் பின்தொடர்ந்து சென்றன.(4) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான {அல்லது லட்சக்கணக்கான} குதிரைப்படையினரும் சத்தியசந்தனும், ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, ராகவனுமான பரதன் செல்லும் வழியில் அவனைப் பின்தொடர்ந்து சென்றன.(5)

கைகேயியும், சுமித்திரையும், புகழ்மிக்கவளான கௌசல்யையும் ராமன் திரும்பி வரப்போகும் எண்ணத்தில் மகிழ்ச்சியடைந்தவர்களாக ஒளிமிக்க யானத்தில் {தேரில்} பயணித்தனர்[1].(6) மகிழ்ச்சிமிக்க மனங்களுடன் கூடிய {மொத்த} ஆரியர்களும், அவனது {ராமனின்} சித்திரக் கதைகளைச் சொல்லிக் கொண்டே ராமனையும், லக்ஷ்மணனையும் காணச் சென்றனர்.(7)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே கைகேயி வருத்தம் தீர்ந்தவளாகிவிட்டாள் என்று தெரிகிறது" என்றிருக்கிறது.

எழுந்தது பெரும்படை ஏழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய்க்
கழிந்தது துயர் நெடுங்காதல் தூண்டவே

- கம்பராமாயணம் 2268ம் பாடல்

பொருள்: சொல்லப்படும் பேர் ஊழிக் காலத்தில் ஏழு கடல்களும் பொங்கி எழுந்ததுபோல முழக்கம் செய்தவாறே அந்தப் பெரும்படை முந்தி எழுந்து புறப்படும்போது, கேகயயனுடைய மகளின் {கைகேயியின்} ஆசை அழிந்தது; பேரன்பின் தூண்டுதலால் அவளது துயரம் போய்க்கழிந்தது.

"மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, கருமேக நிறத்தோனும், திடமான துணிவு கொண்டவனும், ஜகத்திலிருந்து சோகத்தை நாசஞ் செய்த திட விரதனுமான ராமனை நாம் எப்போது காணப் போகிறோம்?(8) அந்த ராகவனைக் கண்டதும் நம் சோகமும், உதிக்கும் பாஸ்கரனை {சூரியனைக்} கண்ட சர்வலோக இருளைப் போல விலகும்" {என்றனர் மக்கள்}.(9) இவ்வாறே அந்த நகரில் வசிக்குஞ் ஜனங்கள், முன் சொன்னதைப் போன்ற சுபக்கதைகளை நினைவுகூர்ந்து, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியாகக் கலைந்து சென்றனர்.(10) 

சமர்த்தர்களான பிறரும், நைகாமர்களும் {வர்த்தகர்களும்}, பிரகிருதியர்கள் {அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட} அனைவரும் ராமனுடன் சேர்வதற்காக மகிழ்ச்சியாகச் சென்றனர்.(11) மணிக்காரர்கள் {ரத்தினங்களுக்கு சாணை பிடித்து இழைப்பவர்கள்}, சோபனக் கும்பக்காரர்கள் {நல்ல மண் பாண்டங்களைச் செய்யும் குயவர்கள்}, சூத்திரக் கர்மம் செய்பவர்கள் {நூல் பிடிக்கும் பணியாட்கள் / தச்சர்கள்}, சஸ்திரோபஜீவிகள் {ஆயுதங்களை நம்பி வாழும் போர் வீரர்கள்},{12} மாயூரகர்கள் {மயில் தோகைகளை விற்பவர்கள்}, கிராகசிகர்கள் {மரம் அறுப்பவர்கள்}, ரோசகர்கள் {கண்ணாடி செய்பவர்கள்}, வேதகர்கள் {பூமி, ரத்தினங்கள், முத்துக்கள் முதலியவற்றை வெட்டுபவர்கள்}, தந்தக்காரர்கள் {தந்த வேலை செய்பவர்கள்}, ஸுதாகாரர்கள் {சுண்ணாம்படிப்பவர்கள்}, கந்தோபஜீவிகள் {நறுமணப் பொருள்களை விற்பனை செய்பவர்கள்},{13} பிரக்யாத ஸுவர்ணக்காரர்கள் {மதிப்புமிக்க தட்டான்கள் / பொற்கொல்லர்கள்}, கம்பளதாவகர்கள் {கம்பளங்களை நெய்பவர்கள்}, ஸ்நாபகாச்சாதகர்கள் {நீராடலுக்கு முன் எண்ணை தேய்த்து உடம்பு பிடிப்பவர்கள்}, வைத்தியர்கள் {மருத்துவர்கள்}, தூபகர்கள் {நறுமணங்கமழச் செய்பவர்கள்}, சௌண்டிகர்கள் {மதுவை விற்பனை செய்பவர்கள்},{14} ரஜகர்கள் {வண்ணார்கள்}, துன்னவாயர்கள் {தயிர்க்காரர்கள்}, மஹத்தான கிராமகோஷர்கள் {கிராமங்களைச் சேர்ந்த மகத்தான பாடகர்கள்}, சைலூஷர்கள் {நடனமாடுபவர்கள்}, கைவர்த்தகர்கள் {செம்படவர்கள்} என ஸ்திரீகளுடன் கூடிய இவர்கள் யாவரும் இவ்வாறே சென்று கொண்டிருந்தனர்.(12-15) 

சமஹிதர்களும் {நலம் விரும்பும் பக்திமான்களும்}, நன்னடத்தைக்குப் புகழ் பெற்றவர்களும், வேத வித்துகளுமான ஆயிரக்கணக்கான பிராமணர்கள், கோரதங்களை {மாட்டு வண்டிகளைச்} செலுத்திக் கொண்டு பரதனுடன் சென்றனர்.(16) சுத்தமான வஸ்திரங்களை அணிந்தவர்களும், தூய்மையான சந்தனத்தைப் பூசிக் கொண்டவர்களுமான அவர்கள் அனைவரும், விதவிமான யானங்களில் மெதுவாகப் பரதனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17)

மகிழ்ச்சியில் திளைத்திருந்த அந்த சேனையானது, உடன்பிறந்தானிடம் அன்பு கொண்டவனும், உடன் பிறந்தானை அழைத்து வருவதற்காகக் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றவனுமான கைகேயி சுதனுடன் {பரதனுடன்} புறப்பட்டுச் சென்றது.(18) இரதங்கள் {தேர்கள்}, யானங்கள் {வண்டிகள்}, அச்வங்கள் {குதிரைகள்}, குஞ்சரங்கள் {யானைகள்} ஆகியவற்றில் இவ்வாறு வெகுதூரம் சென்றவர்கள், ஞாதி கணங்களுடன் அந்த தேசத்தை {உறவினர்களுடன் சேர்ந்து அவ்விடத்தைக்} கவனமாக ஆண்டு வந்தவனும், வீரனும், ராமனின் சகாவுமான குஹன் இருந்த சிருங்கிபேரபுரத்தை நோக்கிச் சென்று கங்கையை அடைந்தனர்.(19,20) இவ்வாறு சென்று, சக்கரவாகங்களால் அழகூட்டப்பட்ட கங்கை தீரத்தை அடைந்த அந்த சேனை, அங்கேயே அப்படியே நின்றது.(21)

வாக்கிய கோவிதனான {வாக்கியங்களை அமைப்பதில் நிபுணனான} பரதன், தன்னைப் பின்தொடர்ந்து வந்த சேனையையும், மங்கல நீரைக் கொண்ட கங்கையையும் கண்டு, தன் அதிகாரிகள் அனைவரிடமும் {பின்வருமாறு} பேசினான்:(22) "என் சேனை அனைத்து வகையிலும் ஓய்வெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். இங்கே முகாமிட்டுவிட்டு நாளை நாம் இந்நதியைக் கடப்போம்.(23) அதே வேளையில், ஸ்வர்க்கத்திற்குச் சென்ற மஹீபதியின் {தசரதரின்} மறுமை வாழ்வுக்காக, இந்த நதியில் இறங்கிப் புனித நீர்க்காணிக்கை அளிக்க நான் விரும்புகிறேன்" {என்றான் பரதன்}.(24)

இவ்வாறு அவன் சொன்னதைக் கவனித்த அமாத்தியர்கள் {அமைச்சர்கள்} ஒவ்வொருவரும், "அவ்வாறே ஆகட்டும்" என்று மறுமொழி கூறி, தத்தமக்குரிய ஒவ்வொருவரும் விரும்பியவாறு தனித்தனியாக முகாமிட்டனர்.(25) பரதன், படைக்குரிய அனைத்தையும் தரித்த அழகிய பரிவாரங்களுடன் கூடிய தன் சம்முவை {படையை} மஹாநதியான கங்கையின் அருகில் குடியமர்த்திவிட்டு, மஹாத்மாவான ராமனைத் திருப்பி அழைத்து வருவது குறித்துச் சிந்தித்தான்.(26)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 083ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை