Ayodhya lusterless | Ayodhya-Kanda-Sarga-114 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஒளியிழந்து தெரிந்த அயோத்திக்குள் நுழைந்த பரதன்; வெறுமையாகத் தெரியும் தந்தையின் வீட்டிற்குள் நுழைந்து, மனத்துயரடைவது...
பெரும் புகழ்பெற்றவனும், பிரபுவுமான பரதன், மெல்லிய கம்பீர கோஷமெழுப்பும் சயந்தனத்தை {பெருந்தேரைச்} செலுத்திக் கொண்டு சீக்கிரமாக அயோத்திக்குள் பிரவேசித்தான்.(1)
இரவைப் போன்று இருள் சூழ்ந்து பிரகாசமற்றிருந்த அதனில் {அயோத்தி மாநகரில்} நரர்களும், வாரணங்களும் {யானைகளும்} காணப்படாமல், பூனைகளும் கோட்டான்களும் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.(2) அஃது {அந்த அயோத்தி மாநகரம்}, முன்பு அழகுடன் பிரகாசித்தும், உச்ச கிரஹத்தால் பீடிக்கப்பட்டுத் தனித்திருக்கும் ராஹுசத்ருவின் {சந்திரனின்} பிரிய பத்தினியான ரோஹிணியைப் போலிருந்தது.(3) அது, வெப்பத்தால் எரிக்கப்பட்டுக் கலங்கும் நீர்ப்பறவைகளுடனும், சிறுமீன், பெருமீன், முதலையென ஏதுமில்லாமல் வெதுவெதுப்பாகக் கொந்தளிக்கும் நீருடன் மெலிந்த கிரி நதியை {மலையாற்றைப்} போலிருந்தது.(4) அது, ஹவிஸ்ஸுகள் இடுகையில் புகையில்லாமல் பொன்கூம்பைப் போல எழுந்த பின்பு மழுங்கிப் போன வேள்வி நெருப்பின் தழலைப் போலிருந்தது.(5)
அது {அயோத்தி மாநகரம்}, கஜங்களிலும் {யானைகளிலும்}, வாஜிகளிலும் {குதிரைகளிலும்}, ரதங்களிலும் ஏந்திய கொடிகள் கிழிந்தும், கவசங்கள் பிளந்து போர்வீரர்கள் கொல்லப்பட்டும் பெரும்போரில் பீடிக்கப்பட்ட ஒரு சம்முவை {படையைப்} போலிருந்தது.(6) அது, நுரைகளோடும், பெரும் முழக்கத்தோடும் உயர எழுந்தாலும், மெல்லிய காற்றினால் ஒலியடங்கிய கடல் அலைகளைப் போலிருந்தது.(7) அஃது, ஆகுதி இடும் காலம் கழிந்து, கல்விமான்களும், புரோஹிதர்களும் ஓதுவதைக் கைவிட்டு, யஜ்ஞத்திற்குரிய செயற்பாடுகள் முழுமையாக நின்ற வேதியை {வேள்விப் பீடத்தைப்} போலிருந்தது.(8) அது, காளையால் கைவிடப்பட்ட பசுக்களின் ஏக்கத்துடன், பசும்புல்லை மேயாமல் மந்தையின் மத்தியில் உற்சாகமற்று நின்று கொண்டிருக்கும் பத்தினியை {பசுவைப்} போலிருந்தது.(9)
அது {அயோத்தி மாநகரம்}, நன்கு மெருகூட்டப்பட்டு மினுமினுக்கும் உத்தம ஜாதியைச் சேர்ந்த பத்மராகம் முதலிய ரத்தினங்களும், மணிகளும் இல்லாத புத்தம்புது முத்தாரத்தைப் போலிருந்தது.(10) அது, புண்ணியம் தீர்ந்தவுடன் இடம்பெயர்ந்து, ஒளியிழந்து, ஆகாயத்திலிருந்து வேகமாக நழுவி பூமியில் விழுந்த தாரையை {நட்சத்திரத்தைப்} போலிருந்தது.(11) அது, வசந்தத்தின் அந்தத்தில் {வசந்த காலத்தின் முடிவில்} நன்கு புஷ்பித்தும், மதங்கொண்ட வண்டுகளால் எதிரொலிக்கப்பட்டும் இருந்தாலும், வேகமாகப் பரவும் அக்னியினால் அழிந்து கருகிய வனலதையை {காட்டுக் கொடியைப்} போலிருந்தது.(12) பொருளில்லாமல் போக்குவரத்து முடங்கி, மூடப்பட்ட சந்தைகளுடனும், கடைகளுடனும் கூடிய அது {அயோத்தி மாநகரம்}, மேகங்களில் மறைந்த சசியையும் {சந்திரனையும்}, நக்ஷத்திரங்களையும் கொண்ட வானத்தைப் போலிருந்தது.(13)
அது {அயோத்தி மாநகரம்}, குடிகாரர்கள் கொல்லப்பட்டு, உத்தம பானங்கள் தீர்ந்து, திறந்த நிலையில், உடைந்த குடங்கள் சிதறி, சீர்குலைந்து, தூய்மையற்றிருக்கும் பானபூமியை {மதுவிடுதியைப்} போலிருந்தது.(14) அது, பூமி பிளந்து பள்ளமாகி, மண் பாத்திரங்களும் உடைந்து, நீரும் தீர்ந்து, முறிந்து விழுந்த தண்ணீர்ப்பந்தலைப் போலிருந்தது.(15) அஃது, அகல விரித்து, முனைகளில் இறுகக் கட்டப்பட்டாலும், வீரர்களின் பாணங்களால் அறுக்கப்பட்டு, வில்லிலிருந்து பூமியில் அறுந்து விழுந்த நாண்கயிற்றைப் போலிருந்தது.(16) அது, யுத்தத்தில் தேர்ந்த குதிரை வீரனால் நடத்தப்பட்டு, எதிர் சைனியத்தால் கொல்லப்பட்டுத் திடீரென விழுந்த வடவத்தை {பெண்குதிரையைப்} போலிருந்தது.(17)
அது, பெருமீன்கள் பலவற்றாலும், ஆமைகளாலும் விளங்கப்பெற்றாலும், நீர் வற்றி, கருநெய்தல்களற்று, இடிந்த கரைகளையுடைய ஒரு வாவியைப் போலிருந்தது.{18} அது, சந்தனப்பூச்சால் அலங்கரிக்கப்படாமல், சோகத்தால் வாட்டமுற்று, துக்கித்தவனின் உடலைப் போலிருந்தது.{19} அது, கடுங்கார் காலத்தில் மேகங்களில் நுழைந்து, கறுத்தமேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனின் காந்தியைப் போலிருந்தது[1].{20}
[1] கேஎம்கே மூர்த்தி பதிப்பில், மேற்கண்ட 18, 19, 20ம் சுலோகங்களில் உள்ள செய்தி இல்லை. எனவே அப்பதிப்பில் இந்த சர்க்கம் 29 சுலோகங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்த மூன்று சுலோகங்களும், அவற்றிலுள்ள செய்தியும் வி.வி.சுப்பாராவ் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர், நரசிம்மாசாரியர், தாதாசாரியர் ஆகியோரின் தமிழ் பதிப்புகளிலும் இந்த செய்திகள் இருக்கின்றன.
தசரதாத்மஜனும் {தசரதனின் மகனும்}, ஸ்ரீமானுமான பரதன், சிறந்த ரதத்தைச் செலுத்திக் கொண்டிருந்த சாரதியிடம் {பின்வரும்} வாக்கியங்களைப் பேசினான்:{21} "அயோத்தி மாநகரில் எங்கும் கம்பீரச் செறிவுடன் கேட்கும், கீத, வாத்திய ஒலிகள் முன்பைப் போல ஏன் இன்று கேட்கவில்லை?{22} எங்கும் பரவியிருக்கும் வாருணியின் மத கந்தமோ {மயக்கந்தரும் வாருணி மதுவின் மணமோ}, மலர் மாலைகளின் கந்தமோ, தூபமிடப்பட்ட அகிலின் கந்தமோ ஏன் வீசவில்லை?{23}
இராமர் நாடுகடத்தப்பட்டதால், சிறந்த யானங்களின் {வண்டிகளின்} கோஷமும், ஹயங்களின் {குதிரைகளின்} மெல்லிய கனைப்பொலியும், மதங்கொண்ட கஜநாதமும் {யானைகளின் பிளிறலும்}, மஹாரதங்களின் சடசடப்பொலியும் இப்போது இந்நகரில் கேட்கவில்லை.{24,25} இராமர் சென்றுவிட்டதால் வருத்தமடையும் இளைஞர்கள், சிறந்த சந்தன, அகில் கந்தங்களையும், மணம்வீசுபவையும், விலை உயர்ந்தவையுமான புத்தம்புது மலர் மாலைகளையும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.{26,27அ} நகரில், ராமர் குறித்த சோகத்தால் பீடிக்கப்பட்ட நரர்கள், சித்திர மாலைகளைத் தரித்துக் கொண்டு யாத்திரைகளுக்கும், உத்சவங்களுக்கும் செல்லாமல் இருக்கின்றனர்.{27ஆ,28அ}
என்னுடன் பிறந்தவருடன் சேர்ந்து நிச்சயம் இந்நகரின் பிரகாசமும் போய்விட்டது. உண்மையில் இந்த அயோத்தி, தேய்பிறையின் மழை இரவைப் போலவே ஒளிராமல் இருக்கிறது.{28ஆ,29அ} என்னுடன் பிறந்தவர், கோடைகால மேகத்தைப் போலத் திரும்பி, மஹோத்சவத்தை {திருவிழாவைப்} போன்ற மகிழ்ச்சியை எப்போது அயோத்தியில் உண்டாக்கப் போகிறார்?{29ஆ,30அ} அயோத்தியின் மஹாபாதைகள், உன்னத கம்பீரத்துடன் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டு கூட்டம் கூட்டமாகத் திரியும் இளம்நரர்கள் இல்லாமல் ஒளிரவில்லை" {என்றான் பரதன்}.{30ஆ,இ}
இவ்வாறும், பலவாறும் பேசிக் கொண்டே, நரேந்திரன் இல்லாமல், சிங்கம் இல்லாத குகையைப் போலத் தெரியும் தன் பிதாவின் வசிப்பிடத்திற்குள் அவன் {பரதன்} நுழைந்தான்.{31} ஆத்மவானான பரதன், பாஸ்கரன் இல்லாத நாளைப் போலப் பிரகாசம் இழந்து வெறுமையாக இருக்கும் அந்த அந்தப்புரம் முழுவதையும் கண்டு கண்ணீர் சிந்தினான்.{32}
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 114ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |