Showing posts with label அயோத்தியா காண்டம். Show all posts
Showing posts with label அயோத்தியா காண்டம். Show all posts

Tuesday, 7 February 2023

தண்டகாரண்யப் புறப்பாடு | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 119 (22)

Set out for Dandaka forest | Ayodhya-Kanda-Sarga-119 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அத்ரியிடமும், அனசூயையிடமும் விடைபெற்றுச் சென்று தண்டகவனத்திற்குள் நுழைந்த ராமனும், சீதையும், லக்ஷ்மணனும்...

Rama Sita and Lakshmana goes into Dandaka forest

தர்மஜ்ஞையான {தர்மத்தை அறிந்தவளான} அனஸூயை, அந்த மஹத்தான கதையைக் கேட்டு, மைதிலியின் உச்சி முகர்ந்து, தன் கைகளில் அவளை வாரியணைத்துக் கொண்டு,(1) "அக்ஷரங்களும், பதங்களும் {எழுத்துகளும், சொற்களும்} தெளிவாக, வியப்பை ஏற்படுத்தும் வகையில் மதுரமாக மொழிந்தாய். ஸ்வயம்வரம் எவ்வாறு நடந்தது என்பதை உள்ளபடியே முழுமையாகக் நான் கேட்டேன். மதுரபாஷினியே {இனிமையாக மொழிபவளே}, உன் கதையை நான் பெரிதும் ரசித்தேன்.(2,3அ) 

ஸ்ரீமான் ரவி {சூரியன்}, மங்கல இரவை நெருங்கி அஸ்தகதி அடைகிறான். பகலில் ஆஹாரத்திற்காகப் பரந்து, விரிந்து பறந்து சென்று, சந்தியா காலத்தில் நித்திரைக்காக  உறைவிடம் நாடும் பறவைகளின் துவனி இதோ கேட்கிறது.(3ஆ,4) இதோ முனிவர்களும், அபிஷேகத்தால் நனைந்து {நீராடி}, ஈர மரவுரிகளுடன் கையில் கலசமேந்தியபடியே ஒன்றுகூடி வருகிறார்கள்.(5) விதிப்பூர்வமாக ரிஷிகள் மூட்டும் அக்னிஹோத்திரத்தில் இருந்து, புறாவின் கழுத்தைப் போன்ற நிறத்தில் எழும் தூமம், பவனனால் {புகையானது காற்றால்} கலைவது அதோ தெரிகிறது.(6) 


Sita and Anasuya
அற்ப இலைகளைக் கொண்ட தாவரங்களும் சுற்றிலும் அடர்த்தியாகத் தெரிகின்றன. இந்திரியங்களை ஈர்க்கும் திசைகள் இவ்விடத்தில் பிரகாசிக்கவில்லை.(7) இரவுலாவும் விலங்குகள் எங்கும் திரிந்து கொண்டிருக்கின்றன. தபோவனத்தின் மான்கள் வேதியை {வேள்விப்பீடத்தைச்} சுற்றிலும் உறங்குகின்றன.(8) சீதே, நக்ஷத்திரங்களால் நன்கலங்கரிக்கப்பட்ட நிசியும் {இரவும்} தொடங்கிவிட்டது. ஜோதியால் சூழப்பட்ட சந்திரனும் அம்பரத்தில் {வானத்தில்} எழுவது தெரிகிறது.(9) உன் மதுரமான கதையில் நான் மகிழ்ந்தேன். இனி இராமனை அனுசரித்திருக்க உனக்கு விடை கொடுக்கிறேன், செல்வாயாக.(10) மைதிலி, குழந்தாய், என் கண்களுக்கு முன்னால் அலங்கரித்துக் கொண்டு, திவ்யாலங்கார சோபிதையாக {நான் கொடுத்த தெய்வீக ஆபரணங்களைப் பூண்டு பிரகாசிப்பவளாக} எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவாயாக" {என்றாள் அனசூயை}.(11)

ஸுரர்களின் மகளுக்கு ஒப்பானவளான அந்த சீதை, அவ்வாறே தன்னை அலங்கரித்துக் கொண்டு, {அனசூயையைத்} தலைவணங்கி, ராமனை நோக்கிச் சென்றாள்.(12) வாதிப்பவர்களில் சிறந்தவனான ராகவன், அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட சீதையைக் கண்டு, அந்த தபஸ்வினியின் பிரீதிதானத்தால் {அன்புப் பரிசால்} பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(13) மைதிலியான சீதை, அப்போது அந்த தபஸ்வினி பிரியதானமாகக் கொடுத்த வஸ்திரங்கள், ஆபரணங்கள், மாலைகள் ஆகிய அனைத்தையும் குறித்து ராமனிடம் சொன்னாள்.(14) மானுஷர்கள் {மானிடர்கள்} மத்தியில் மிக அரிதான நன்மதிப்பு, மைதிலிக்குக் கிட்டியதைக் கண்டு மஹாரதர்களான ராமலக்ஷ்மணர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(15) சசிக்கு ஒப்பான வதனம் {சந்திரனுக்கு நிகரான முகம்} கொண்டவனான அந்த ரகுனந்தனன், சித்தர்களாலும், தபஸ்விகளாலும் அர்ச்சிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்து, அந்தப் புண்ணிய இரவை அங்கேயே கழித்தான்.(16)

அந்த ராத்திரி கடந்ததும், அந்த நரவியாகரர்கள் {மனிதர்களில் புலிகளான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் தங்கள் {காலைச்} சடங்குகளை முடித்துக் கொண்டு, அக்னிஹோமம் செய்யும் வனகோசரர்களிடம் {வனத்தில் வசிக்கும் தபசிகளிடம்} விடைபெற்றுக் கொண்டனர்.(17) வனசரர்களும் {வனத்தில் திரிபவர்களும்}, தர்ம வழியில் நடப்பவர்களுமான அந்த தபஸ்விகள், அந்த வனத்தில் ராக்ஷசர்கள் சஞ்சாரம் நிறைந்த பகுதி குறித்து அவ்விருவரிடமும் {பின்வருமாறு} சொன்னார்கள்:(18) இராகவா, இந்த மஹாரண்யத்தில் {பெருங்காட்டில்} நானாவித ரூபங்களில் புருஷாதக {மனிதர்களை உண்பவர்களான} ராக்ஷசர்களும், உதிரம் பருகும் கொடூர விலங்குகளும் இருக்கின்றன.(19) இராகவா, இந்த மஹாரண்யத்தில் தூய்மையற்றோ, விழிப்பில்லாமலோ இருக்கும் தர்மசாரியான தபஸ்வியை விழுங்கிவிடுவார்கள். அவர்களை விரட்டுவாயாக.(20) இராகவா, இது வனத்தில் பழங்களைக் கொணர்ந்து வரும் மஹரிஷிகளின் பாதையாகும். அடைவதற்கரிதான இந்த வனத்தில் இந்தப் பாதையின் வழியே செல்வாயாக" {என்றனர்}.(21)

தபஸ்விகளான அந்த துவிஜர்கள், தங்கள் கைகளைக் கூப்பி வணங்கி, அவனது பயணத்திற்கான ஆசியுடன் இவ்வாறு சொன்ன பிறகு, பரந்தபனான அந்த ராகவன் {ராமன்}, தன் பாரியையோடும், லக்ஷ்மணனோடும் சேர்ந்து மேகமண்டலத்திற்குள் சூரியனைப் போல அந்த வனத்திற்குள் பிரவேசித்தான்[1].(22) 

[1] அன்னமா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன்
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும்

- கம்பராமாயணம் 2520ம் பாடல் (விராதன் வதைப்படலம்)

பொருள்: அந்த மாமுனிவருடன் அன்று அந்த உறைவிடத்தில் தங்கி, அம்முனிவரின் அரிய சிறப்புகளுடைய மனைவியான கற்பின் அனசூயையின் கட்டளையால் அணிகலன்களும், உடுத்தும் உடைகளும், சந்தனமும் இவையனைத்தும் சுமந்த சனகன் மகளான சீதையுடன் அவ்விடம் விட்டுச் சென்று உயர் தண்டக வனம் புகுந்தான் ராமன்.

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 119ல் உள்ள சுலோகங்கள்: 22

*******அயோத்தியா காண்டம் முற்றும் *******

Previous | Sanskrit | English | Next

Monday, 6 February 2023

திவ்ய வரங்கள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 118 (54)

Divine boons | Ayodhya-Kanda-Sarga-118 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அனசூயையிடம் தன் திருமணம் குறித்த செய்தியைச் சொன்ன சீதை; தெய்வீகப் பரிசுப் பொருள்களை சீதைக்குக் கொடுத்த அனசூயை...

Sita and Anasuya

அனஸூயை இவ்வாறு சொன்னதும், அனஸூயையான அந்த வைதேஹி {பொறாமையற்றவளான அந்த சீதை}, அந்தச் சொற்களுக்கான முழு மதிப்புடன் மெதுவாகப் {பின்வருமாறு} பேசத் தொடங்கினாள்:(1) "ஆரியையான நீர் என்னிடம் இவ்வாறு பேசியதில் ஆச்சரியமில்லை. நாரியைகளுக்கு பதி {பெண்களுக்குக் கணவன்} குருவாவது எப்படி என்பதை நான் அறிவேன்.(2) ஆர்யே {உன்னதமானவரே}, என்னுடைய பர்த்தாவான இவர், ஒருவேளை நல்லொழுக்கமற்றவராக இருந்தாலும் அத்வைதம் {எந்த வேறுபாடுமின்றி} நான் இவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.(3) சிறந்த குணங்கள் நிறைந்தவரும், கருணையுடையவரும், ஜிதேந்திரியரும் {புலன்களை வென்றவரும்}, மாறாத அன்புடையவரும், தர்மாத்மாவும், மாதாவையும், பிதாவையும் போல பிரியத்திற்குரியவராகவும் இருப்பவரைக் குறித்து என்ன சொல்வது?(4) 

மஹாபலசாலியான ராமர், கௌசல்யையிடம் நடந்து கொள்வதைப் போலவே ராஜமகளிர் அனைவரிடமும் நடந்து கொள்கிறார்.(5) நிருபவத்சலரும் {ராஜா தசரதரிடம் அன்புள்ளவரும்}, தர்மவித்துமான {தர்மத்தை அறிந்தவருமான} இந்த வீரர், ஒருமுறையாவது தசரதரால் பார்க்கப்பட்ட ஸ்திரீகளிடமும், மானத்தைவிட்டு {கர்வத்தைவிட்டு} மாதாவிடம் {நடந்து கொள்வதைப்} போலவே நடந்து கொள்கிறார்.(6) பயம் நிறைந்த, ஜனங்களற்ற வனத்திற்கு {நாங்கள்} புறப்பட்டபோது, என் மாமியார் என்னிடம் சொன்ன மகத்தானவற்றை என் ஹிருதயத்தில் வைத்திருக்கிறேன்.(7) முன்பு திருமண காலத்தில், அக்னியின் முன்னிலையில் என்னைப் பெற்றவள் எனக்குக் கற்பித்த சொற்களையும் {இதயத்தில்} வைத்திருக்கிறேன்.(8) 

தர்மசாரிணியே, உமது வாக்கியங்களால் அவை அனைத்தும் புத்துயிர் பெற்றன. பதிக்குத் தொண்டாற்றுவதைவிட நாரியைகளுக்கு {பெண்களுக்கு} வேறு எந்த தர்மமும் விதிக்கப்படவில்லை.(9) பதிக்குத் தொண்டாற்றியமைக்காக ஸ்வர்க்கத்தில் ஸாவித்ரி பெரிதும் மதிக்கப்படுகிறாள். நீரும் பதிக்குத் தொண்டாற்றும் அத்தகைய ஒழுக்கத்தையே பின்பற்றி ஸ்வர்க்கத்தை அடைவீர்.(10) சர்வநாரீகளிலும் {பெண்கள் அனைவரிலும்} சிறந்தவளான இந்த ரோஹிணி தேவி, வானில் ஒரு முஹூர்த்தமேனும் சந்திரனில்லாதவளாகக் காணப்படமாட்டாள்.(11) பர்த்தாவிடம் திடவிரதம் கொண்ட இத்தகைய சிறந்த ஸ்தீரிகள், தாங்கள் செய்யும் புண்ணிய கர்மங்களால் தேவலோகத்தில் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்" {என்றாள் சீதை}.(12)

சீதை சொன்ன சொற்களைக் கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்த அனஸூயை, அப்போது மைதிலியின் சிரஸை முகர்ந்து, பெரும் மகிழ்ச்சியுடன் {பின்வருமாறு} பேசினாள்:(13) "சீதே, கபடமற்ற புன்னகையை உடையவளே, பல்வேறு நியமங்களுடன் கூடிய என் மஹத்தான தபத்தால் இங்கே {இம்மையில்} ஈட்டப்பட்ட பலத்தைக் கொண்டு உன்னை மகிழ்விப்பேன்.(14) மைதிலி, பொருத்தமானவையும், மனோகரமானவையுமான உன் சொற்களில் நான் நிறைவடைந்தேன். உசிதமானதைச் சொல், அதை நான் உனக்குச் செய்வேன்" {என்றாள் அனசூயை}.(15)

அவள் சொன்ன சொற்களைக் கேட்ட சீதை, வியப்படைந்தவளாக மந்தப் புன்னகையுடன் அந்த தபோபலம் கொண்டவளிடம், "{உமதருளால் அனைத்தும்} நிறைவேறியது" என்றாள்.(16) 

அவள் {சீதை} இவ்வாறு சொன்னதும், அந்த தர்மஜ்ஞை {தர்மத்தை அறிந்தவளான அனஸூயை}, பெரிதும் மகிழ்ச்சியடைந்து, "ஐயோ சீதே, உனக்குப் பலனைத் தரும் பெரும் மகிழ்ச்சியை நான் உண்டாக்குவேன்.(17) வைதேஹி {விதேஹ இளவரசி}, திவ்ய வரங்களான மாலைகளும், வஸ்திரங்களும், ஆபரணங்களும், அங்கராகங்களும் {மேனிக்கு நறுமணமளிக்கும் பொருள்களும்} இதோ இருக்கின்றன.{18} சீதே, உன் அங்கங்களின் சோபைக்காக {ஒளிக்காக} நான் இவற்றை தத்தம் செய்கிறேன். உனக்கு எப்போதும் தகுந்தவையும், ஒருபோதும் மங்காதவையுமான இவை உனக்குப் பொருத்தமானவையாகத் திகழும்.(18,19) ஜனகனின் மகளே, திவ்யமான இந்தப் பொருள்களால் அலங்கரிக்கப்பட்ட உனதங்கங்கள், அழிவில்லா விஷ்ணுவுக்கு ஸ்ரீயைப் போல உன் பர்த்தாவுக்கும் அழகூட்டும்" {என்றாள் அனசூயை}.(20)

மைதிலி, ஒப்பற்ற பிரீதிதானமான {ஈடில்லா அன்பால் கொடை அளிக்கப்பட்ட} அந்த வஸ்திரங்களையும், அங்கராகங்களையும், பூஷணங்களையும் {ஆடைகள், வாசனைப் பொருள்கள், ஆபரணங்களையும்}, மலர்மாலைகளையும் ஏற்றுக் கொண்டாள்.(21) புகழ்மிக்கவளான சீதை, அந்த பிரீதிதானத்தை அங்கீகரித்து, கூப்பிய கைகளுடன் அந்த தபோதனையின் {தபஸ்வியான அனசூயையின்} அருகில் அமர்ந்தாள்.(22) 

திட விரதையான அனஸூயை, இவ்வாறு தன்னருகே அமர்ந்திருந்த சீதையிடம், பிரிய கதைகளை, சிலவற்றைக் கேட்பதற்கான {பின்வரும்} சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்:(23) "சீதே, புகழ்மிக்கவனான ராகவன் {ராமன்}, ஸ்வயம்வரத்தின் மூலம் உன்னை அடைந்தான் என்ற கதை என் செவிகளை எட்டியது.(24) மைதிலி, அதை விஸ்தாரமாகக் கேட்க விரும்புகிறேன். எனவே, நீ அனுபவித்த வகையில் முழுவதையும் சொல்வதே உனக்குத் தகும்" {என்று கேட்டு முடித்தாள்}.(25)

இவ்வாறு கேட்கப்பட்ட சீதை, "கேட்பீராக" என்று சொல்லி, அந்த தர்மசாரிணியிடம் {அனசூயையிடம், பின்வருமாறு} அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினாள்:(26) "தர்மவித்தும், க்ஷத்ரதர்மத்தில் அர்ப்பணிப்புமிக்கவரும், வீரரும், ஜனகர் என்ற பெயரைக் கொண்டவருமான மிதிலாதிபதி, மேதினியை நியாயமாக ஆண்டு வந்தார்.(27) அவர் {ஜனகர்}, கையில் கலப்பையுடன் க்ஷேத்ர மண்டலத்தை {வேள்விக்கான வட்ட வடிவிலான நிலத்தை} உழுதபோது, அந்த நிருபதியின் மகளாக ஜகத்தைப் பிளந்து கொண்டு நான் எழுந்தேன் என்று சொல்லப்படுகிறது.(28) நரபதியும், {யாக மந்திரங்களைச் சொல்லி} கைநிறைந்த விதைகளைத் தூவும் ஆவலில் இருந்தவருமான அந்த ஜனகர், {அவற்றைத் தூவும் முன்} மேனியில் புழுதி படிந்தவளாக {பூமியில் கிடக்கும்} என்னைக் கண்டு வியப்படைந்தார்.(29) 

குழந்தையற்றவரான அவர், சினேகத்தால் என்னைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, "இவள் என் தனயை {மகள்}" என்று சொல்லி சினேகத்தைப் பொழிந்தார்.(30) {அப்போது வானத்தில் இருந்து}, "நரபதியே, அவ்வாறே ஆகட்டும், ஒப்பற்றவளான இந்த அமானுஷீ {தெய்வப்பிறவி}, தர்மப்படி உன் தனயையே {மகளே} ஆவாள்" என்ற அந்தரிக்ஷ வாக்கு  {ஆகாயமொழி} எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.(31) அதன்பிறகு, தர்மாத்மாவும், நராதிபரும், மிதிலாதிபருமான என் பிதா, என்னை அடைந்ததில் பெருஞ்செழிப்பை அடைந்தவரைப் போல மகிழ்ச்சியடைந்தார்.(32) புண்ணிய கர்மங்களைச் செய்பவரான அவர், தனக்கு விருப்பமுள்ள மூத்த தேவியிடம் என்னை தத்தம் செய்தார். அவளும், என்னை மாதாவின் அன்புடன் சீராட்டி வளர்த்தாள்.(33)

நான், பதி சம்யோகத்திற்குத் தகுந்த வயதடைந்ததைக் கண்ட என் பிதா, இழப்பால் தீனமான தனமற்றவரை {துயருற்ற வறியவரைப்} போலச் சிந்தனையில் ஆழ்ந்தார் {கவலை அடைந்தார்}.(34) கன்னிகையின் தந்தை பூமியில் சக்ரனாகவே {இந்திரனாகவே} இருப்பினும், உலகத்தில் இணையான, அல்லது தாழ்ந்த ஜனங்களால் அவமதிக்கப்படுவான்.(35) தனக்கும் அந்த அவமதிப்பு தூரத்தில் இல்லை என்பதைக் கண்ட அந்தப் பார்த்திபர் {ஜனகர்}, சிந்தனைக் கடலில் மூழ்கி, தெப்பமில்லாதவனைப் போல அதன் எல்லையை எட்டாமல் இருந்தார்.(36) யோனியில் பிறக்காதவளாக என்னை அறிந்த அந்த மஹாபாலர் {ஜனகர்}, பெருஞ் சிந்தனைக்குப் பிறகும் எனக்குத் தகுந்த பொருத்தமான பதியைக் காண இயலாதவராக இருந்தார்.(37) அந்த மதிமிக்கவர், தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, "என் தனயைக்கு ஸ்வயம்வரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற புத்தி எழுந்தது.(38)

ஒருகாலத்தில், மஹாயஜ்ஞத்தில், மஹாத்மாவான வருணன் பிரீதியுடன் ஒரு சிறந்த தனுவையும் {வில்லையும்}, வற்றாதவையான தூணிகள் இரண்டையும் அவருக்கு[1] தத்தம் செய்தான்.(39) அது {அந்த வில்} தன் பெரும் பாரத்தால் முயற்சியுள்ள மனுஷர்களாலும் அசைக்க முடியாததாக இருந்ததால், நராதிபர்கள் {மன்னர்கள்} தங்கள் ஸ்வப்னத்திலும் அதை வளைக்கும் சக்தியற்றவர்களாக இருந்தனர்.(40) சத்தியவாதியான என் பிதா, முதலில் பார்த்திபர்களை அழைத்து, அவர்களின் கூட்டத்தில் அந்த தனுவை உயர்த்துமாறு {இவ்வாறு} அறிவித்தார்:(41) "எந்த நரன் இந்த தனுவை எடுத்து, நாண் பூட்டுகிறானோ அவனுக்கே என் மகள் பாரியையாவாள். இதில் சந்தேகம் வேண்டாம்" {என்று அறிவித்தார்}.(42)

[1] பாலகாண்டம் 66ம் சர்க்கத்தில் இந்த சிவதனுசை சிவன் தேவர்களிடம் கொடுத்ததாகவும், தேவர்கள் நிமி வம்சத்து தேவராதனிடம் {ஜனகனின் மூதாதையிடம்} கொடுத்ததாகவும் ஜனகன் சொல்லும் குறிப்பிருக்கிறது.

அதை உயர்த்தும் சக்தி இல்லாத நிருபர்கள், எடையால் கிரிக்கு ஒப்பான அந்தச் சிறந்த வில்லைக் கண்டு, வணக்கம் செலுத்திவிட்டுத் திரும்பிச் சென்றனர்.(43) நீண்ட காலத்திற்குப் பிறகு, ராகவரும், பேரொளிமிக்கவரும், சத்திய பராக்கிரமருமான இந்த ராமர், லக்ஷ்மணன் சகிராகவும், விசுவாமித்ரர் சகிதராகவும் யஜ்ஞத்தைக் காண வந்தார்.(44,45அ) தர்மாத்மாவான விசுவாமித்ரர், என் பிதாவால் பூஜிக்கப்பட்டதும், உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் குறித்து என் பிதாவிடம் {பின்வருமாறு} சொன்னார்:(45ஆ,46அ) "தசரதனின் மகன்களான இவர்கள் இருவரும், தனுவைக் காண விரும்புகின்றனர். இராஜபுத்திரன் ராமனிடம் அந்த தைவிக தனுவைக் காண்பிப்பாயாக" {என்றார்}.(46ஆ,47அ)

Sita retells the story of her marriage to Anasuya

அந்த விப்ரர் {விசுவாமித்ரர்} இவ்வாறு சொன்னதும், அந்த தனு அங்கே கொண்டு வரப்பட்டது. மஹாபலவானும், வீரியவானுமான இவர் அதை வளைத்த உடனே நாணும் பூட்டி நிமிஷமாத்திரத்தில் அதை இழுத்து முழுமையாக வளைத்தார்.(47ஆ,48) இவர் தனுவை முழுமையாக வளைத்த வேகத்தில், அது நடுவில் முறிந்து இரண்டானது. அதன் பயங்கர சப்தம், இடி இறங்குவதைப் போலக் கேட்டது.(49) சத்தியவாதியான என் பிதா, அங்கேயே அப்போதே, ஜலபாஜனத்தை {நீர் நிறைந்த குடுவையை} அளித்து, என்னை ராமருக்கு தத்தம் செய்ய நிச்சயித்தார்.(50) அப்போது ராகவர் {ராமர்}, தன் பிதாவும், பிரபுவுமான அயோத்தியாதிபதியின் சம்மதத்தை அறியாததால், அவ்வாறு கொடுக்கப்படும் என்னை ஏற்கவில்லை[2].(51) 

[2] பாலகாண்டம் 67ம் சர்க்கத்தில் தனுர்பங்க நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. இராமன் வில்லை முறித்தபின், ஜனகனாகவே தசரதனை அழைக்க அயோத்திக்கு ஆள் அனுப்புவதாகவே அங்கே இருக்கிறது. ராமன் சீதையை ஏற்கவில்லை என்ற குறிப்பு அங்கே இல்லை. சீதையின் வழியாகவே இது வெளிப்பட வேண்டும் என்ற கதையமைப்பு உத்தியும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பிறகு, என் பிதா, முதியவரும், என் மாமனாருமான தசரத நிருபரை அழைத்து, ஆத்மவிதி அறிந்த ராமருக்கு என்னை தத்தம் செய்தார்.(52) மேலும் என் பிதா {ஜனகர்}, சாத்வியும் {புண்ணியவதியும்}, பிரியதர்சினியுமான {அழகிய தோற்றம் கொண்டவளுமான} என் தங்கை ஊர்மிளையை, லக்ஷ்மணருக்குப் பாரியையாக தானே {முன்வந்து} தத்தம் செய்தார்.(53) இவ்வாறே, அந்த ஸ்வயம்வரத்தில் நான் ராமருக்கு தத்தம் செய்யப்பட்டேன். {அதுமுதல்} வீரியவான்களில் சிறந்தவரான என் பதியிடம் தர்மத்திற்கு இணக்கமாக இன்புற்றிருக்கிறேன்" {என்றாள் சீதை}.(54) 

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 118ல் உள்ள சுலோகங்கள்: 54

Previous | Sanskrit | English | Next

Sunday, 5 February 2023

அத்ரி, அனசூயை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 117 (28)

Atri and Anasuya | Ayodhya-Kanda-Sarga-117 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சித்திரகூடத்தில் இருந்து புறப்பட்ட ராமனும், சீதையும்; அத்ரிமுனிவரையும், அனஸூயையும் சந்தித்தது...

Anasuya Atri Lakshmana Rama and Sita

அந்த தபஸ்விகள் புறப்பட்டுச் சென்ற பிறகு, மீண்டும் மீண்டும் சிந்தித்த ராகவனுக்கு {ராமனுக்கு}, பல காரணங்களால் அங்கே வசிப்பதில் பிடித்தம் ஏற்படவில்லை.(1) "இங்கேதான் பரதனும், மாதாக்களும், நகரத்தாரும் என்னைச் சந்தித்தனர். வருந்துகின்ற அவர்களைக் குறித்த நினைவுகளே நித்தியம் என்னைப் பீடிக்கின்றன.(2) அந்த மஹாத்மாவின் சைனியம் {பரதனின் படை} இறங்கியதால், ஹய, ஹஸ்திகளின் சாணங்களால் {குதிரை, யானைகளின் சாணங்களால் இவ்விடத்தில்} கடுமையான தாக்கம் ஏற்பட்டிருக்கிறது {அசுத்தமாகியிருக்கிறது}.(3) எனவே, வேறெங்காவது செல்வோம்" என்று சிந்தித்த ராகவன், வைதேஹி, லக்ஷ்மணன் சகிதனாக {அவ்விடத்தைவிட்டுப்} புறப்பட்டான்.(4)

பெரும்புகழ்பெற்றவனான அந்த ராமன், அத்ரியின் ஆசிரமத்தை அடைந்து, அவரை வணங்கினான். அத்ரிபகவானும், தன் புத்திரனை {வரவேற்பது} போல அவனை வரவேற்றார்.(5) பெரும் மதிப்புடன் சர்வ ஆதித்யங்களையும் {விருந்தோம்பலையும்} தானே செய்து, சௌமித்ரியையும் {லக்ஷ்மணனையும்}, மஹாபாக்கியவதியான சீதையையும் அதே போல உபசரித்தார்.(6) உயிரினங்கள் அனைத்தின் நன்மையிலும் விருப்பமுள்ள அந்த தர்மஜ்ஞர் {அத்ரி}, அப்போது அங்கே வந்தவளும், அனைவராலும் மதிக்கப்படுபவளும், முதியவளுமான தன் பத்தினியை அழைத்து, சாந்தமாகப் பேசினார்.(7)

அந்த ரிஷிசத்தமர் {சிறந்த முனிவர் அத்ரி}, தபஸ்வினியும், தர்மசாரிணியும் {தர்ம வழியில் நடப்பவளுமான} அனஸூயையிடம், "மஹாபாக்யவதியான வைதேஹியை வரவேற்று உபசரிப்பாயாக" என்று சொல்லிவிட்டு, தர்மசாரிணியான அந்த தபஸ்வினியை {அனசூயையைக்} குறித்து ராமனிடம் {பின்வருமாறு} கூறினார்:(8,9அ) அனகா {குற்றமற்ற ராமா}, பத்து வருஷ காலம் {மழையின்றி நேர்ந்த} நிரந்தர வறட்சியால் உலகம் தஹித்தபோது,{9ஆ} கிழங்குகளையும், பழங்களையும் உண்டாக்கியவளும், ஜாஹ்னவியை {கங்கையாற்றைப்} பெருகச் செய்தவளும், உக்கிர தபத்தில் ஈடுபடுபவளும், நியமங்களால் அலங்கரிக்கப்பட்டவளும்,{10} பத்தாயிரம் வருஷங்கள் மஹத்தான தபம் புரிந்தவளும், விரதஸ்நானம் செய்தவளும், தன் விரதத்தால் இடையூறுகளைப் போக்கியவளுமான இந்த அனசூயை,{11} தேவ காரியத்தின் நிமித்தம், அவசரமாகப் பத்து இரவுகளை ஓரிரவாகச் செய்தவள் ஆவாள்[1]. இவள் உனக்கு மாதாவைப் போன்றவள்.(9ஆ-12) சர்வ பூதங்களாலும் நமஸ்கரிக்கப்படுபவளும் {அனைத்து உயிரினங்களாலும் வணங்கப்படுபவளும்}, புகழ்பெற்றவளும், ஒருபோதும் கோபமடையாதவளுமான இந்த மூதாட்டியை வைதேஹி {விதேஹ இளவரசியான சீதை} அணுகட்டும்" {என்றார் அத்ரி}.(13)

[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு முறை மாண்டவ்ய முனிவர், அனஸூயையின் தோழியான சாண்டிலி என்ற தபஸ்வினியை, "பத்து நாட்களுக்குள் ஒரு காலைப்பொழுதில் இவள் விதவையாவாள்" என்று சபித்தார். அப்போது சாண்டிலியும், "இனி ஒரு போதும் விடியாமல் போகட்டும்" என்று பதிலுக்கு சபித்தாள். இதனால் அச்சமடைந்த தேவர்கள், அனஸூயையை அணுக, அவள் பத்து இரவு காலத்தை ஒரிரவாக மாற்றி, அந்த தபஸ்வினியின் {சாண்டிலியின்} கணவருடைய மரணத்தைத் தடுத்து, தேவர்களின் காரியத்தையும் நிறைவேற்றினாள் என்று புராணங்களில் படிக்கிறோம்" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் சுட்டப்படும் பெண்துறவி சாண்டிலியைக் குறித்து மஹாபாரதத்தில் உத்யோக பர்வம் பகுதி 113லும், அநுசாஸன பர்வம் பகுதி 123லும் சில குறிப்புகள் இருக்கின்றன.

இவ்வாறு சொன்ன அந்த ரிஷியிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்ற ராகவன், தர்மத்தை அறிந்தவளான சீதையிடம் இந்த உத்தமச் சொற்களைக் கூறினான்:(14) "இராஜபுத்ரியே, இந்த முனிவர் சொன்னவற்றைக் கேட்டாய். உன் நோக்கம் சிறப்படைய சீக்கிரம் தபஸ்வினியை அணுகுவாயாக" {என்றான்}.(15)

மைதிலியான {மிதிலையின் இளவரசியான} சீதை, தனது நன்மையில் விருப்பமுள்ள ராகவனின் சொற்களைக் கேட்டதும், தர்மத்தை அறிந்தவளான அத்ரிபத்னியை {அத்ரியின் மனைவியான அனசூயையை} வலம் வந்தாள்.(16) உடல் தளர்ந்தவளும், தோல் சுருங்கியவளும், நரைத்த தலைமயிரைக் கொண்ட மூதாட்டியும், பெருங்காற்றில் வாழைமரத்தைப் போல எப்போதும் நடுக்கத்துடன் கூடியவளும்,{17} மஹாபாக்கியவதியும், பதிவிரதையுமான அந்த அனஸூயையைப் பணிவுடன் வணங்கித் தன் பெயரைச் சொன்னாள் சீதை.(17,18) அந்த வைதேஹி, நிந்தனைக்குத் தகாதவளான அந்த தபஸ்வினியைக் கூப்பிய கைகளுடன் வணங்கி, மகிழ்ச்சியுடன் அவளது நலம் குறித்து வினவினாள்.(19)
 
அப்போது, அந்த மகிமைமிக்கவள் {அனசூயை}, தர்மவழியில் நடக்கும் சீதைக்கு ஆறுதல் கூறும் வகையில் {பின்வருமாறு} சொன்னாள், "நல்வினையால் நீ தர்ம வழியில் நடக்கிறாய்.(20) சீதே, பாமினி {அழகிய பெண்ணே}, ஞாதிஜனங்களையும், மானத்தையும் {மதிப்பையும்}, செழிப்பையும் கைவிட்டு, வனத்திற்கு அனுப்பப்பட்ட ராமனை நீ பின்தொடர்வதும் அந்த நல்வினையாலேயே[2].(21) பர்த்தா {கணவன்} நகரத்திலிருந்தாலும், வனத்திலிருந்தாலும், பாபியாக இருந்தாலும், சுபனாக இருந்தாலும் அவனுக்குப் பிரியமாக இருக்கும் ஸ்திரீகளுக்கு மஹோதய {பெண்களுக்கு, மேலான உயர்ந்த} உலகங்கள் கிட்டும்.(22) ஆரிய சுபாவத்துடன் கூடிய ஸ்திரீகளுக்கு, கெட்ட நடத்தையுள்ளவனாக இருந்தாலும், காமாந்தகனாக இருந்தாலும், தனமில்லாதவனாக இருந்தாலும் பதியே பரம தைவதமாவான் {கண்கண்ட தெய்வமாவான்}.(23)

[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "சுற்றத்தாரையும், பெருமையையும், சம்பத்தையும் துறந்து வனத்தில் வஸிக்கச் செய்யப்பட்ட ராமனை நீ பின்பற்றி வந்திருக்கிறாயென்பதும் தெய்வசங்கல்பமே" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பந்து ஜனங்களையும், அஹங்காரத்தையும், ஐஷ்வரியத்தையும்விட்டு, பதினான்கு ஸம்வத்ஸரங்கள் அரண்யத்தில் வஸிக்கும்படி நியமிக்கப்பட்ட ராமனைப் பின்றொடர்ந்து வந்திருக்கின்றனையே. இது உன் பாக்யமே" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நீ நல்வினையினால் கற்பழிந்திலை; பதிவிரதா தருமத்தையும் நன்குணர்ந்தனை, பந்துஜனங்களையும், மிகுந்த செல்வத்தையும் துறந்து, துன்புறுங்காலையில் கணவனைத் துறவாமல் கொடிய காட்டிலும் உடன் வந்தனையல்லையோ" என்றிருக்கிறது.

வைதேஹி, ஆலோசித்துப் பார்த்தால், அடையப்பட்டதும் ஒருபோதும் அழியாத யோக்கியமான {தகுந்த} தபத்தைப் போல, இவரைவிட {கணவரைவிடச்} சிறந்த பந்து எவரையும் நான் காணவில்லை.(24) காமத்தால் {ஆசையால்} பீடிக்கப்பட்ட ஹிருதயங்களுடன், பர்த்தாவிடம் {கணவனிடம்} ஆதிக்கம் செலுத்தும் நடத்தை கொண்ட அஸத் ஸ்திரீகள், முன் சொன்ன குணதோஷங்களை {நன்மை, தீமைகளை} அறியமாட்டார்கள்.(25) மைதிலி, அத்தகைய ஸ்திரீகள், அகாரிய வசப்பட்டு அபகீர்த்தியை ஈட்டி {செய்யத்தகாத செயல்களைச் செய்து அவமானமடைந்து} உண்மையில் தர்மத்தின் பாதையில் இருந்து நழுவுகிறார்கள்.(26) உலகில் நன்மை, தீமைகளை அறியும் குணவதிகளான உன்னைப் போன்ற ஸ்திரீகள், தர்மச் செயல்களைச் செய்தவர்களைப் போல ஸ்வர்க்கத்தில் சஞ்சரிப்பார்கள்.(27) எனவே, பதிவிரதைகளின் சம்பிரதாயங்களைப் பின்பற்றி இவனை {ராமனை} அனுசரிக்கும் சதியான {மனைவியான} நீ, உன் பர்த்தாவின் {கணவனின்} சஹதர்மசாரிணியாவதால் தர்மத்தையும், புகழையும் ஈட்டுவாய்" {என்றாள் அனசூயை}.(28) 

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 117ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Friday, 3 February 2023

இராக்ஷசன் கரன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 116 (26)

Khara, the demon | Ayodhya-Kanda-Sarga-116 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சித்திரகூடத்தில் வசிக்கும் துறவிகளின் அச்சம்; ராவணனின் தம்பி கரனிடம் கொண்ட அச்சம்; ராட்சசர்களின் அட்டூழியங்கள்; ராமனிடம் விடைபெற்றுச் சென்ற துறவிகள்...

Rama and sages in Chitrakuta

பரதன் {அயோத்திக்குத்} திரும்பிச் சென்றதும், தபோவனத்தில் இருந்த ராமன், தபஸ்விகளிடம் கவலையையும், கலக்கத்தையும் கண்டான்.(1) முன்பு சித்திரகூடத்தின் தாபஸாசிரமங்களில் {தபம் மேற்கொள்ளும் தங்கள் ஆசிரமங்களில்} தன்னை அண்டி நிறைவுடன் இருந்த அவர்கள், இப்போது கவலையுடன் இருப்பதை ராமன் உணர்ந்தான்.(2) அவர்கள் சந்தேக நயனங்களினால் {கண்களினால்} ராமனைக் கண்டும், புருவங்களை நெறித்தும், அன்யோன்யம் {ஒருவருக்கொருவர்} கதைகளை அமைத்து ரகசியமாகவும், மெதுவாகவும் கிசுகிசுத்தனர்[1].(3)

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸ்ரீராமரை நினைத்து கவலை கொண்டவர்களாய் கண்களாலும், புருவங்களாலும், ஒருவருக்கொருவர் ரகஸியமாய் பேசுகின்றவர்களாய் மெதுவாக சமாசாரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவர்கள் சங்கைப்பட்டுக் கண்களாலும், புருவநெறிப்புகளாலும் ராமனை நிர்த்தேசித்து ஒருவர்க்கொருவர் மெதுவாகக் காசகொசவென்று சொல்லி ராமனைக் குறித்து ரஹஸ்யமாக என்னென்னவோ கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அவர்களும் பெருமாளை யுற்றுப் பார்த்துப் பார்த்து ஒருவர்க் கொருவர் ஏகாந்தமாக வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தமையின், பெருமாள் மிகவும் ஐயமுற்று" என்றிருக்கிறது.

அவர்களின் கவலையை உணர்ந்த ராமனுக்குத் தன்னைக் குறித்த சந்தேகம் எழுந்ததும், கைகளைக் கூப்பிக் கொண்டு, குலபதியான ரிஷியிடம் இதைக் கூறினான்:(4) "பகவானே, என் பூர்வ நடத்தையில் எந்த மாற்றமும் நேரவில்லை என நம்புகிறேன். எதைக் கண்டு தபஸ்விகள் கலக்கமடைந்திருக்கின்றனர்?(5) என் தம்பி லக்ஷ்மணன், அலட்சியத்தால் தகாததேதும் செய்யவில்லை என்றும், ரிஷிகளும் அவ்வாறேதும் காணவில்லை என்றும் நம்புகிறேன்.(6) எனக்குத் தொண்டாற்றுவதிலேயே முனைப்பாக இருப்பவளும், உங்களுக்குத் தொண்டாற்றுபவளுமான சீதை, பெண்களுக்குத் தகாத முறையில் நடந்து கொள்ளவில்லை என நம்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(7)

அப்போது, மூப்பிலும், தபத்திலும் முதியவரான அந்த ரிஷி {குலபதி}, நடுக்கத்தில் இருப்பவரைப் போல, பூத தயாபரனான {அனைத்து உயிரினிங்களிடமும் கருணை கொண்டவனான} ராமனிடம் {பின்வருவனவற்றைப்} பேசினார்:(8) "தாதா {ஐயா}, தபஸ்விகள் சலனமடைவதற்கு {நடுங்குவதற்கு}, அதிலும் விசேஷமாக நல்லியல்பையே தன்னியல்பாய்க் கொண்டவளும், நற்காரியங்களையே செய்பவளுமான வைதேஹியிடம் {அச்சமடைய}  என்ன இருக்கிறது?(9) உன் நிமித்தம் ராக்ஷசர்களால் அச்சம் ஏற்படும் என்ற கலக்கத்துடனே இவர்கள் பரஸ்பரம் கதைகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.(10) தாதா, இங்கே ராவணனின் தம்பியும், கரன் என்ற நாமத்தைக் கொண்டவனுமான ராக்ஷசன், ஜனஸ்தானத்தில்[2] வசிக்கும் தபஸ்விகள் அனைவரையும் நிர்மூலமாக்குகிறான் {கொல்கிறான் / விரட்டுகிறான்}.{11} திமிர்ப்பிடித்தவனும், போரில் வல்லவனும், கொடூரனும், புருஷாதகனும் {மனிதர்களை உண்பவனும்}, கர்வங்கொண்டவனும், பாபியுமான அவன் உன்னையும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.(11,12) 

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜனஸ்தானம் என்பது தண்டகாரண்யப் பகுதியின் மற்றொரு பெயராகும். சில வேளைகளில் தண்டகாரண்யத்தின் தலைநகர் என்றும் ஜனஸ்தானம் குறிப்பிடப்படுகிறது" என்றிருக்கிறது. ஆரண்ய காண்டம் 2ம் சர்க்கத்தில் 1ம் அடிக்குறிப்பில், தண்டகவனம், ஜனஸ்தானம் குறித்த தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், தண்டகாரண்யத்தில் இருந்து தெற்கு நோக்கி தப்பிச் சென்ற மக்கள் வசித்த இடம் ஜனஸ்தானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாதா, இந்த ஆசிரமத்தில் நீ வசிக்கத் தொடங்கியதில் இருந்தே ராக்ஷசர்கள் தபஸ்விகளைப் பீடித்து வருகின்றனர்.(13) இயற்கைக்கு மாறான நடத்தையுடன் கூடிய அவர்கள், தீங்கு விளைவிக்கும் கோரமான, விரும்பத்தகாத வடிவங்களில் தோன்றி அச்சுறுத்துகிறார்கள்.(14) அந்த அநாரியர்கள், தபஸ்விகளின் முன் நின்று, தூய்மையற்றவற்றையும், மங்கலமற்றவற்றையும் அவர்களின் மீது வீசியும், சிலரைத் துன்புறுத்தியும் {விரட்டியும்} வருகின்றனர்.(15) அற்ப புத்தியைக் கொண்ட அவர்கள், அந்தந்த ஆசிரமஸ்தானங்களில் புலப்படாதவாறு மறைந்திருந்து, அங்கேயே தபஸ்விகளை துன்புறுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.(16) {வேள்வியில்} ஆகுதிகள் இடும்போது, {வேள்விக்} கரண்டிகளைத் தூக்கிவீசி, {வேள்வி} அக்னியில் நீரைத் தெளித்து, {வேள்விக்} கலசங்களை நொறுக்குகின்றனர்.(17) இப்போது ரிஷிகள், அந்த துராத்மாக்களால் பீடிக்கப்பட்ட ஆசிரமங்களைக் கைவிடத் தீர்மானித்து, வேறு தேசம் {வேறு இடம்} செல்வதற்கு என்னை வற்புறுத்துகிறார்கள்.(18) 

இராமா, அந்த துஷ்டர்கள், தபஸ்விகளுக்கு எதிரான சரீர ஹிம்சையை உண்மையில் செய்து காட்டுவார்கள். எனவே, இந்த ஆசிரமத்தை நாங்கள் கைவிடுகிறோம்.(19) ஏராளமான கிழங்குகளையும், பழங்களையும் கொண்ட ஒரு சித்திர வனம் அருகில் இருக்கிறது. முன்பு நாங்கள் அங்கே வசித்திருந்த ஆசிரமத்திற்கே நானும், என் கூட்டத்தாரும் மீண்டும் செல்லப் போகிறோம்.(20) தாதா {ஐயா}, உன்னிடமும் கரன் தகாதவகையிலேயே நடந்து கொள்வான். உன் புத்திக்கு ஏற்புடையதாக இருந்தால், இங்கிருந்து எங்களுடன் வருவாயாக.(21) இராகவா, சதா சமர்த்தனாகவும், நித்தியம் விழிப்புள்ளவனாகவும் இருந்தாலும் சந்தேகமே. மனைவியுடன் வாழும் உனக்கு இங்கே வசிப்பது துக்கத்தையே தரும்" {என்றார் அந்தக் குலபதி}.(22)

இராஜபுத்திரனான ராமனால், இவ்வாறான ஆவலுடன் {கவலையுடன்} பேசும் அந்த தபஸ்வியை, வாக்கியங்களில் அமைந்த மறுமொழியால் தடுக்க இயலவில்லை.(23) அந்தக் குலபதி, ராகவனை வாழ்த்தி, சமாதானங்கூறி, தன் குலத்தினருடன் சேர்ந்து ஆசிரமத்தைக் கைவிட்டு, விடைபெற்றுக் கொண்டார்.(24) அந்த இடத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் ரிஷிகணங்களைச் சிறிது தூரம் பின்தொடர்ந்து சென்ற ராமன், குலபதியான அந்த ரிஷியை வணங்கி, அவர்களின் ஆலோசனையை ஏற்று, நிறைவுடன் இருந்த அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, புண்ணிய வசிப்பிடமான தன் நிலையத்தை அடைந்தான்.(25) பிரபுவான அந்த ராகவன், ரிஷிகளால் கைவிடப்பட்ட அந்த ஆசிரமத்தைவிட்டு ஒரு க்ஷணமும் அகலாமல் இருந்தான். மரபுகளைப் பின்பற்றும் திடகுணம் படைத்த தபஸ்விகள் {சிலர்} ராமனைப் பின்பற்றினர்.(26) 

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 116ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

ஸ்ரீபாதுகா பட்டாபிஷேகம் - திருவடிச்சூட்டல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 115 (27)

Consecration of sacred sandals. | Ayodhya-Kanda-Sarga-115 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சத்ருக்னனுடன் சேர்ந்து நந்திக்கிராமத்திற்குச் சென்ற பரதன்; அமைச்சர்களும், புரோஹிதரும், படையும், அயோத்தியின் குடிமக்களும் பின்தொடர்ந்து சென்றது; ராமனின் பாதுகைகளுக்கு நடந்த பட்டாபிஷேகம்...

Paduka Pattabhishekam

திடவிரதனான பரதன், தன் மாதாக்களை அயோத்திக்குத் திருப்பி அழைத்து வந்ததும், சோக சந்தாபத்துடன் கூடியவனாக தன் குருக்களிடம் {பெரியோரிடம் பின்வருமாறு} கூறினான்:(1) "இதோ நான் நந்திக்கிராமத்திற்குச் செல்கிறேன். உங்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொள்கிறேன். இராகவர் இல்லாத இந்த துக்கமனைத்தையும் அங்கே நான் சகித்துக் கொள்வேன்.(2) இராஜா திவத்தை {சொர்க்கத்தை} அடைந்தார். என் குரு {மூத்தவர் ராமன்} வனத்தில் இருக்கிறார். புகழ்மிக்க ராமரே ராஜா என்பதால், ராஜ்ஜியத்தை அளிக்க அவருக்காக நான் காத்திருப்பேன்" {என்றான் பரதன்}.(3)

மஹாத்மாவான பரதனின் இந்த சுப வாக்கியங்களைக் கேட்ட புரோஹிதர் வசிஷ்டரும், மந்திரிகள் அனைவரும் {பின்வருமாறு} சொன்னார்கள்:(4) "பரதா, உன்னுடன் பிறந்தானிடம் கொண்ட அன்பினால், நீ சொன்ன இந்தச் சொற்கள் சிலாகிக்கத்தகுந்தவை. இஃது உனக்குத் தகுந்ததே.(5) பந்துக்களிடம் ஆசையுடனும், உடன்பிறந்தாரிடத்தில் எப்போதும் திடமான நட்புடனும், ஆரிய மார்க்கத்தில் {உயர்ந்த வழியில்} அர்ப்பணிப்புடன் இருக்கும் உன்னுடன் {உன் சொற்களுடன்} எந்த மனிதன் உடன்படமாட்டான்?" {என்றனர்}.(6)

தன் அபிலாசையின்படியே மந்திரிகள் சொன்ன பிரிய வசனத்தைக் கேட்டவன் {பரதன்}, சாரதியிடம், "என் ரதம் ஆயத்தமாகட்டும்" என்ற வாக்கியத்தைச் சொன்னான்.(7) மகிழ்ச்சியான வதனத்துடன் கூடிய அந்த ஸ்ரீமான் {பரதன்}, தன் மாதாக்கள் அனைவரையும் சேவித்துவிட்டு, சத்ருக்னனுடன் சேர்ந்து ரதத்தில் ஏறினான்.(8) பரதசத்ருக்னர்கள் இருவரும் சீக்கிரமாக ரதத்தில் ஏறி, மந்திரிகள், புரோஹிதர்கள் சூழ பரம பிரீதியுடன் புறப்பட்டுச் சென்றனர்.(9) அவர்கள், வசிஷ்டர் தலைமையிலான குருக்கள் அனைவரையும், துவிஜர்கள் பிறரையும் முன்னிட்டுக் கொண்டு நந்திக்கிராமம் இருந்த திசையை நோக்கிக் கிழக்குமுகமாகச் சென்றனர்.(10) பரதன் சென்றதும், கஜ, அசுவ, ரதங்கள் {யானை, குதிரை, தேர்கள்} நிறைந்த பலமும் {படையும்}, நகரவாசிகள் அனைவரும் அழைக்கப்படாமலேயே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(11) 

உடன்பிறந்தானிடம் அன்பு கொண்ட தர்மாத்மாவான அந்த பரதன், சிரசில் பாதுகைகளை வைத்துக் கொண்டே ரதத்தில் நந்திக்கிராமத்தைத் துரிதமாக அடைந்தான்.(12) அப்போது, நந்திக்கிராமத்திற்குள் சீக்கிரமாகப் பிரவேசித்த அந்த பரதன், ரதத்தில் இருந்து துரிதமாக இறங்கி, குருக்களிடம் {பெரியோரிடம்} இதைச் சொன்னான்:(13) "என்னுடன் பிறந்தவர் தானாக ஸந்நியாஸத் தன்மையுடன்[1] இந்த ராஜ்ஜியத்தை எனக்கு தத்தம் செய்தார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பாதுகைகள் யோகக்ஷேமத்தை {வளர்ச்சியையும், பாதுகாப்பையும்} அருளும்" {என்றான் பரதன்}.(14)

[1] நம்பிக்கைச் சின்னமாக என்பது இங்கே பொருள். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "எனக்குத் தமையனாரால் இந்த ராஜ்யமானது தானாக தர்மகர்த்தாவெனும் தன்மையுடையதாய் அளிக்கப்பட்டது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "எனதண்ணன் இந்த ராஜ்யத்தை என்னிடத்தில் நிக்ஷேபமாகவே வைத்திருக்கின்றனன். ஆகையால் இதை முழுவதும் அவனுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியதே. நிக்ஷேபமாக வைத்ததை ரக்ஷிக்கை முதலிய ஸ்வாதந்த்ர்யம் எனக்கில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "நிக்ஷேபம் - பாதுகாத்து வைக்கும்படி ஒருவன் மற்றொருவனிடம் கொடுத்த வஸ்து. இதையே நயாஸமென்றுஞ் சொல்லுவர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "எம்மையர் இந்த ராஜ்ஜியத்தை நியாஸம் போலளித்தருளினர்" என்றிருக்கிறது.

ஸந்நியாஸமான {நம்பிக்கைச் சின்னமான அந்தப்} பாதுகைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த பரதன், துக்க சந்தாபத்துடன் தன் அமைச்சுக் குழுக்கள் அனைத்திடமும் {அமைச்சர்கள் அனைவரிடமும் பின்வருமாறு} பேசினான்:(15) "ஆரியரின் {ராமரின்} பாதங்களாக ஏற்கப்படும் இவற்றுக்கு சீக்கிரம் {வெண்கொற்றக்} குடை பிடிப்பீராக. என் குருவின் {ராமரின்} இந்த மரப்பாதுகைகளால் ராஜ்ஜியத்தில் தர்மம் நிலைநாட்டப்படும்.(16) என்னுடன் பிறந்தவரின் அன்பால் இந்த ஸந்நியாஸம் {நம்பிக்கைச் சின்னம்} எனக்கு அளிக்கப்பட்டது. அத்தகைய இஃது அந்த ராகவரின் வரவு வரை பரிபாலிக்கப்படும்.(17) {அவர் திரும்பிய உடனேயே} இவற்றை நானாக  ராகவரின் பாதங்களில் சீக்கிரம் சேர்த்து, இந்தப் பாதுகைகளுடன் கூடிய அவரது சரணங்களை {பாதங்களை} மீண்டும் காண்பேன்.(18) அப்போது, இந்த பாரத்துடன் கூடிய நான் ராகவரை {ராமரை} அடைந்து, என் குருவிடம் {ராமரிடம்} ராஜ்ஜியத்தை ஒப்படைத்து, குருவுக்கான தொண்டில் ஈடுபடுவேன்.(19) ஸந்நியாஸமான {நம்பிக்கைச் சின்னமான} இந்தச் சிறந்த பாதுகைகளின் மூலம், இந்த ராஜ்ஜியத்தையும், அயோத்தியையும் ராகவருக்கு தத்தம் செய்து, என் பாபங்களை நான் கழுவிக் கொள்வேன்.(20) காகுத்ஸ்தருக்கு அபிஷேகம் செய்யும்போது, ஜனங்கள் பரம மகிழ்ச்சியடைவார்கள். இராஜ்ஜியத்தைவிட நான்கு மடங்கு புகழையும், மகிழ்ச்சியையும் அஃது எனக்கு அளிக்கும்" {என்றான் பரதன்}.(21)

பெரும்புகழ்மிக்கவனான அந்த பரதன், இவ்வாறு அழுது துக்கித்துத் துயருடன் இருந்தாலும், நந்திக்கிராமத்தில் மந்திரிகள் சகிதனாக ராஜ்ஜியத்தை ஆண்டான்.(22) பிரபுவும், வீரனுமான அந்த பரதன், மரவுரிகளும், ஜடாமுடியும் தரித்து முனிவேஷம் பூண்டு, சைனியங்களுடன் அந்த நந்திக்கிராமத்திலேயே வசித்தான்.(23) உடன்பிறந்தானுக்குக் கீழ்ப்படிந்தவனும், உடன்பிறந்தவர்களிடம் அன்பு கொண்டவனும், பிரதிஜ்ஞைபாரகனுமான {உறுதிமொழி மாறாதவனுமான} அந்த பரதன், ராமனின் வரவை எதிர்பார்த்து, பாதுகைகளுக்கு அபிஷேகஞ் செய்து இவ்வாறே நந்திக்கிராமத்தில் வசித்திருந்தான்[2].(24,25அ) 

[2] நந்தியம் பதியிடை நாதன் பாதுகம்
செந்தனிக் கோல்முறை செலுத்த சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.

- கம்பராமாயணம் 2514ம் பாடல்

பொருள்: அந்தியும், பகலும் ஓயாமல் அழுத கண்ணுடன், நந்திக்கிராமத்தில் தலைவனின் திருவடி செங்கோல் முறை செய்ய, மனத்தினால் இந்திரியங்களை அடக்கி, அங்கேயே வசித்திருந்தான்.

பரதன், குடையையும், சாமரத்தையும் தரித்துக் கொண்டு, சாசனங்கள் அனைத்தையும் அந்த மரப்பாதுகைகளிடம் அறிவித்தான்.(25ஆ,26அ) ஸ்ரீமானான பரதன், ஆரியனின் {மூத்தவன் ராமனின்} பாதுகைகளுக்கு அபிஷேகம் செய்து வைத்து, {அவற்றுக்குக் கீழ்ப்படிந்து} எப்போதும் பணிவுடன் ராஜ்ஜிய காரியங்களைச் செயல்படுத்தினான்.(26ஆ,27அ) அந்த பரதன், ஏதோவொரு சிறிய காரியம் நேர்ந்தாலும், மதிப்புமிக்க காணிக்கை அளிக்கப்பட்டாலும், பிரதமம் {முதலில்} அந்த மரப்பாதுகைகளிடம் அறிவித்து, அதன்பிறகே முறைப்படி செயல்பட்டான்.(27ஆ-உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 115ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Thursday, 2 February 2023

ஒளியிழந்த அயோத்தி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 114 (32)

Ayodhya lusterless | Ayodhya-Kanda-Sarga-114 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஒளியிழந்து தெரிந்த அயோத்திக்குள் நுழைந்த பரதன்; வெறுமையாகத் தெரியும் தந்தையின் வீட்டிற்குள் நுழைந்து, மனத்துயரடைவது...

Ayodhya Today

பெரும் புகழ்பெற்றவனும், பிரபுவுமான பரதன், மெல்லிய கம்பீர கோஷமெழுப்பும் சயந்தனத்தை {பெருந்தேரைச்} செலுத்திக் கொண்டு சீக்கிரமாக அயோத்திக்குள் பிரவேசித்தான்.(1)

இரவைப் போன்று இருள் சூழ்ந்து பிரகாசமற்றிருந்த அதனில் {அயோத்தி மாநகரில்} நரர்களும், வாரணங்களும் {யானைகளும்} காணப்படாமல், பூனைகளும் கோட்டான்களும் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.(2) அஃது {அந்த அயோத்தி மாநகரம்}, முன்பு அழகுடன் பிரகாசித்தும், உச்ச கிரஹத்தால் பீடிக்கப்பட்டுத் தனித்திருக்கும் ராஹுசத்ருவின் {சந்திரனின்} பிரிய பத்தினியான ரோஹிணியைப் போலிருந்தது.(3) அது, வெப்பத்தால் எரிக்கப்பட்டுக் கலங்கும் நீர்ப்பறவைகளுடனும், சிறுமீன், பெருமீன், முதலையென ஏதுமில்லாமல் வெதுவெதுப்பாகக் கொந்தளிக்கும் நீருடன் மெலிந்த கிரி நதியை {மலையாற்றைப்} போலிருந்தது.(4) அது, ஹவிஸ்ஸுகள் இடுகையில் புகையில்லாமல் பொன்கூம்பைப் போல எழுந்த பின்பு மழுங்கிப் போன வேள்வி நெருப்பின் தழலைப் போலிருந்தது.(5) 

அது {அயோத்தி மாநகரம்}, கஜங்களிலும் {யானைகளிலும்}, வாஜிகளிலும் {குதிரைகளிலும்}, ரதங்களிலும் ஏந்திய கொடிகள் கிழிந்தும், கவசங்கள் பிளந்து போர்வீரர்கள் கொல்லப்பட்டும் பெரும்போரில் பீடிக்கப்பட்ட ஒரு சம்முவை {படையைப்} போலிருந்தது.(6) அது, நுரைகளோடும், பெரும் முழக்கத்தோடும் உயர எழுந்தாலும், மெல்லிய காற்றினால் ஒலியடங்கிய கடல் அலைகளைப் போலிருந்தது.(7) அஃது, ஆகுதி இடும் காலம் கழிந்து, கல்விமான்களும், புரோஹிதர்களும் ஓதுவதைக் கைவிட்டு, யஜ்ஞத்திற்குரிய செயற்பாடுகள் முழுமையாக நின்ற வேதியை {வேள்விப் பீடத்தைப்} போலிருந்தது.(8) அது, காளையால் கைவிடப்பட்ட பசுக்களின் ஏக்கத்துடன், பசும்புல்லை மேயாமல் மந்தையின் மத்தியில் உற்சாகமற்று நின்று கொண்டிருக்கும் பத்தினியை {பசுவைப்} போலிருந்தது.(9)

அது {அயோத்தி மாநகரம்}, நன்கு மெருகூட்டப்பட்டு மினுமினுக்கும் உத்தம ஜாதியைச் சேர்ந்த பத்மராகம் முதலிய ரத்தினங்களும், மணிகளும் இல்லாத புத்தம்புது முத்தாரத்தைப் போலிருந்தது.(10) அது, புண்ணியம் தீர்ந்தவுடன் இடம்பெயர்ந்து, ஒளியிழந்து, ஆகாயத்திலிருந்து வேகமாக நழுவி பூமியில் விழுந்த தாரையை {நட்சத்திரத்தைப்} போலிருந்தது.(11) அது, வசந்தத்தின் அந்தத்தில் {வசந்த காலத்தின் முடிவில்} நன்கு புஷ்பித்தும், மதங்கொண்ட வண்டுகளால் எதிரொலிக்கப்பட்டும் இருந்தாலும், வேகமாகப் பரவும் அக்னியினால் அழிந்து கருகிய வனலதையை {காட்டுக் கொடியைப்} போலிருந்தது.(12) பொருளில்லாமல் போக்குவரத்து முடங்கி, மூடப்பட்ட சந்தைகளுடனும், கடைகளுடனும் கூடிய அது {அயோத்தி மாநகரம்}, மேகங்களில் மறைந்த சசியையும் {சந்திரனையும்}, நக்ஷத்திரங்களையும் கொண்ட வானத்தைப் போலிருந்தது.(13) 

அது {அயோத்தி மாநகரம்}, குடிகாரர்கள் கொல்லப்பட்டு, உத்தம பானங்கள் தீர்ந்து, திறந்த நிலையில், உடைந்த குடங்கள் சிதறி, சீர்குலைந்து, தூய்மையற்றிருக்கும்  பானபூமியை {மதுவிடுதியைப்} போலிருந்தது.(14) அது, பூமி பிளந்து பள்ளமாகி, மண் பாத்திரங்களும் உடைந்து, நீரும் தீர்ந்து, முறிந்து விழுந்த தண்ணீர்ப்பந்தலைப் போலிருந்தது.(15) அஃது, அகல விரித்து, முனைகளில் இறுகக் கட்டப்பட்டாலும், வீரர்களின் பாணங்களால் அறுக்கப்பட்டு, வில்லிலிருந்து பூமியில் அறுந்து விழுந்த நாண்கயிற்றைப் போலிருந்தது.(16) அது, யுத்தத்தில் தேர்ந்த குதிரை வீரனால் நடத்தப்பட்டு, எதிர் சைனியத்தால் கொல்லப்பட்டுத் திடீரென விழுந்த வடவத்தை {பெண்குதிரையைப்} போலிருந்தது.(17) 

அது, பெருமீன்கள் பலவற்றாலும், ஆமைகளாலும் விளங்கப்பெற்றாலும், நீர் வற்றி, கருநெய்தல்களற்று, இடிந்த கரைகளையுடைய ஒரு வாவியைப் போலிருந்தது.{18} அது, சந்தனப்பூச்சால் அலங்கரிக்கப்படாமல், சோகத்தால் வாட்டமுற்று, துக்கித்தவனின் உடலைப் போலிருந்தது.{19} அது, கடுங்கார் காலத்தில் மேகங்களில் நுழைந்து, கறுத்தமேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனின் காந்தியைப் போலிருந்தது[1].{20}

[1] கேஎம்கே மூர்த்தி பதிப்பில், மேற்கண்ட 18, 19, 20ம் சுலோகங்களில் உள்ள செய்தி இல்லை. எனவே அப்பதிப்பில் இந்த சர்க்கம் 29 சுலோகங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்த மூன்று சுலோகங்களும், அவற்றிலுள்ள செய்தியும் வி.வி.சுப்பாராவ் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர், நரசிம்மாசாரியர், தாதாசாரியர் ஆகியோரின் தமிழ் பதிப்புகளிலும் இந்த செய்திகள் இருக்கின்றன.

தசரதாத்மஜனும் {தசரதனின் மகனும்}, ஸ்ரீமானுமான பரதன், சிறந்த ரதத்தைச் செலுத்திக் கொண்டிருந்த சாரதியிடம் {பின்வரும்} வாக்கியங்களைப் பேசினான்:{21} "அயோத்தி மாநகரில் எங்கும் கம்பீரச் செறிவுடன் கேட்கும், கீத, வாத்திய ஒலிகள் முன்பைப் போல ஏன் இன்று கேட்கவில்லை?{22} எங்கும் பரவியிருக்கும் வாருணியின் மத கந்தமோ {மயக்கந்தரும் வாருணி மதுவின் மணமோ}, மலர் மாலைகளின் கந்தமோ, தூபமிடப்பட்ட அகிலின் கந்தமோ ஏன் வீசவில்லை?{23} 

இராமர் நாடுகடத்தப்பட்டதால், சிறந்த யானங்களின் {வண்டிகளின்} கோஷமும், ஹயங்களின் {குதிரைகளின்} மெல்லிய கனைப்பொலியும், மதங்கொண்ட கஜநாதமும் {யானைகளின் பிளிறலும்}, மஹாரதங்களின் சடசடப்பொலியும் இப்போது இந்நகரில் கேட்கவில்லை.{24,25} இராமர் சென்றுவிட்டதால் வருத்தமடையும் இளைஞர்கள், சிறந்த சந்தன, அகில் கந்தங்களையும், மணம்வீசுபவையும், விலை உயர்ந்தவையுமான புத்தம்புது மலர் மாலைகளையும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.{26,27அ} நகரில், ராமர் குறித்த சோகத்தால் பீடிக்கப்பட்ட நரர்கள், சித்திர மாலைகளைத் தரித்துக் கொண்டு யாத்திரைகளுக்கும், உத்சவங்களுக்கும் செல்லாமல் இருக்கின்றனர்.{27ஆ,28அ} 

என்னுடன் பிறந்தவருடன் சேர்ந்து நிச்சயம் இந்நகரின் பிரகாசமும் போய்விட்டது. உண்மையில் இந்த அயோத்தி, தேய்பிறையின்   மழை இரவைப் போலவே ஒளிராமல் இருக்கிறது.{28ஆ,29அ} என்னுடன் பிறந்தவர், கோடைகால மேகத்தைப் போலத் திரும்பி, மஹோத்சவத்தை {திருவிழாவைப்} போன்ற மகிழ்ச்சியை எப்போது அயோத்தியில் உண்டாக்கப் போகிறார்?{29ஆ,30அ} அயோத்தியின் மஹாபாதைகள், உன்னத கம்பீரத்துடன் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டு கூட்டம் கூட்டமாகத் திரியும் இளம்நரர்கள் இல்லாமல் ஒளிரவில்லை" {என்றான் பரதன்}.{30ஆ,இ}

இவ்வாறும், பலவாறும் பேசிக் கொண்டே, நரேந்திரன் இல்லாமல், சிங்கம் இல்லாத குகையைப் போலத் தெரியும் தன் பிதாவின் வசிப்பிடத்திற்குள் அவன் {பரதன்} நுழைந்தான்.{31} ஆத்மவானான பரதன், பாஸ்கரன் இல்லாத நாளைப் போலப் பிரகாசம் இழந்து வெறுமையாக இருக்கும் அந்த அந்தப்புரம் முழுவதையும் கண்டு கண்ணீர் சிந்தினான்.{32}

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 114ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Tuesday, 31 January 2023

அடித்தலம் சூடிய முடி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 113 (24)

Sandals were worn as headgear | Ayodhya-Kanda-Sarga-113 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்கு மாற்றாக அவனது பாதுகைகளைப் பெற்று அயோத்திக்குத் திரும்பிச் சென்ற பரதனும், சத்ருக்னனும்...

Bharata wore Ramas sandals as crown

அப்போது பரதன், சிரசில் பாதுகைகளை வைத்துக் கொண்டு, சத்ருக்னனுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ரதத்தில் ஏறினான்.(1) அவர்களின் முன்னால் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி ஆகியோரும், ஆலோசனைகளுக்காகப் பூஜிக்கப்படும் மந்திரிமார் அனைவரும் சென்றனர்.(2) பிறகு அவர்கள் சித்திரகூட மஹாகிரியை பிரதக்ஷிணம் செய்து, கிழக்கு முகமாகச் சென்று ரம்மியமான மந்தாகினியை அடைந்தனர்.(3) பரதன், தன் சைனியத்தாருடன் கூடியவனாக அருகில் விதவிதமான ஆயிரக்கணக்கான தாதுக்களைக் கண்டபடியே அந்தத் தாழ்வரையில் {சித்திரகூட மலையின் அடிவாரத்தில்} பயணித்தான்[1].(4) 

[1] முன் சர்க்கத்தில் யானையின் தலையில் வைக்கப்பட்ட பாதுகைகளை பரதன் தன் தலையில் வைத்துக் கொண்டதாக இங்கே சொல்லப்படுகிறது.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவையென முறையின் சூடிடான்
படித்தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்

- கம்பராமாயணம் 2510ம் பாடல்

பொருள்: மண்ணில் புழுதி படிந்ததால் பொன்மயமான மேனியைக் கொண்ட பரதன், அழுத கண்ணுடன் ராமனின் திருவடிகள் இரண்டையும் "எனக்கு முடிகள் இவையே" என்ற முறையில் ஒழுகித் தன் தலையிற் சூடி, {ராமனின் முன்பு} மண்ணில் விழுந்து வேண்டி வணங்கிச் சென்றான்.

அப்போது பரதன், சித்திரகூடத்தின் அருகில் பரத்வாஜ முனிவர் வசிக்கும் ஆசிரமத்தை கண்டான்.(5)  பிறகு, புத்திமானான அந்த பரதன், பரத்வாஜரின் வசிப்பிடமான அந்த ஆசிரமத்தை அடைந்து, ரதத்தில் இருந்து இறங்கி, அவரது பாதங்களில் பணிந்தான்.(6) அப்போது மகிழ்ச்சியடைந்த பரத்வாஜர், இந்த வாக்கியங்களைச் சொன்னார், "தாதா {ஐயா}, காரியம் நிறைவேறியதா? இராமனை நீ சந்தித்தாயா?" {என்று கேட்டார்}.(7)

மதிமிக்கவரான பரத்வாஜர் இவ்வாறு கேட்டதும், தர்மவத்சலனான பரதன், அந்த பரத்வாஜரிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8) "குருவும் {வசிஷ்டரும்}, நானும் வேண்டிக்கொண்டாலும், திடவிக்கிரமரான அந்த ராகவர் {ராமன்}, பரமப்ரீதியுடன் வசிஷ்டரிடம் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னார்:(9) "சதுர்தச வருஷங்கள் வனத்தில் {பதினான்காண்டுகள் காட்டில்} வசிப்பேன் என்று என் பிதாவிடம் பிரதிஜ்ஞை செய்திருக்கிறேன். என் பிதாவிடம் உறுதியளித்த அந்தப் பிரதிஜ்ஞையை நிச்சயம் நான் காப்பேன்" {என்றார்}.(10) 

இவ்வாறு {ராமர்} சொன்னதும், மஹாபிராஜ்ஞரும், வாக்கியஜ்ஞருமான {வாக்கியங்களை அமைத்துப் பேசுவதில் வல்லவருமான} வசிஷ்டர், நல்வாக்கியங்களைச் சொல்பவரான அந்த ராகவரிடம் {ராமரிடம், பின்வரும்} மகத்தான சொற்களை மறுமொழியாகக் கூறினார்:(11) "மஹாபிராஜ்ஞனே {அனைத்தையும் அறிந்தவனே}, அயோத்தியில் அமைதியையும், வளர்ச்சியையும் விளைவிக்கக் கூடியதும், ஹேமத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டதுமான உன் பாதுகைகளை அளிப்பாயாக" {என்றார் வசிஷ்டர்}.(12)

வசிஷ்டர் இவ்வாறு சொன்னதும், அந்த ராகவர் {ராமன்} கிழக்கு முகமாக நின்று, அந்தப் பாதுகைகளில் தன் பாதங்களைப் பதித்து, ராஜ்ஜியத்தை எனக்கு தத்தம் செய்தார்.(13) மஹாத்மாவான அந்த ராமரிடம் இருந்து இந்த மங்கலப் பாதுகைகளை அடைந்து, {அவரிடம்} விடைபெற்றுக் கொண்டு, அயோத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்" {என்றான் பரதன்}.(14)

மஹாத்மாவான அந்த பரதனின் சுபவாக்கியங்களைக் கேட்ட பரத்வாஜ முனிவர், இன்னும் சுபமிக்க இந்த வாக்கியங்களை அவனிடம் சொன்னார்:(15) "நரவியாகரா {மனிதர்களில் புலியே}, உத்தம சீலனே {நடத்தையிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனே}, பள்ளத்தில் அதிக நீர் தங்குவதைப் போல, உன்னில் ஆரியம் {உன்னத நடை} நிலைத்திருப்பது வியப்பிற்குரியதல்ல.(16) தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, தர்மவத்ஸலனுமான {தர்மத்தை விரும்புகிறவனுமான} உன்னைப் பெற்ற மஹாபாஹு தசரதன் அமிர்தனாகிவிட்டான் {இறவாத அமரனாகிவிட்டான்}" {என்றார் பரத்வாஜர்}.(17) 

அந்த ரிஷி {பரத்வாஜர்}, இந்த வாக்கியங்களைச் சொன்னதும், {பரதன்} தன் கைகளைக் குவித்து, அவரது பாதங்களைத் தீண்டி, விடைபெற்றுக் கொண்டான்.(18) ஸ்ரீமானான பரதன், மீண்டும் மீண்டும் பரத்வாஜரை பிரதக்ஷிணஞ் செய்துவிட்டு, மந்திரிகள் சகிதனாக அயோத்தியை நோக்கிச் சென்றான்.(19) 

யானங்கள், வண்டிகள், குதிரைகள், யானைகள் உள்ளிட்ட பரதனுக்குரிய அந்த விஸ்தீரணமான சம்மு {படை} மீண்டும் தொடர்ந்து சென்றது.(20) பிறகு அவர்கள் அனைவரும், திவ்யமானதும், அலைகளையே மாலையாகக் கொண்டதுமான யமுனா நதியைக் கடந்து சென்று, சுபஜலம் கொண்ட அந்த கங்கா நதியைக் கண்டனர்.(21) சைனியத்துடனும், பந்துக்களுடனும் கூடியவன் {படைகளுடனும், சொந்தங்களுடனும் கூடியவனான அந்த பரதன்}, அந்த ரம்மியமான நீரை {யமுனை ஆற்றைக்} கடந்து, ரம்மியமான சிருங்கிபேரபுரத்திற்குள் பிரவேசித்தான். சிருங்கிபேரபுரத்தில் இருந்து புறப்பட்டவன், அதன்பிறகு அயோத்தியைக் கண்டான்.(22)

பிதாவும், உடன்பிறந்தவர்களும் இல்லாத அயோத்தியைக் கண்ட பரதன், துக்கத்தால் பீடிக்கப்பட்டவனாகத் தன் சாரதியிடம் இதைச் சொன்னான்:(23) "சாரதியே, வெறுமையானதும், ஆனந்தமற்றதும், தீனமானதுமான அயோத்தியைக் காண்பீராக" என்று தடைபட்டக் குரலுடன் {சொன்னான்}.(24)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 113ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

பரதனின் பிரகடனம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 112 (31)

Proclamation of Bharata | Ayodhya-Kanda-Sarga-112 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், பரதன் ஆகியோரின் நற்குணங்களைப் புகழ்ந்த முனிவர்கள்; அயோத்திக்கு வெளியில் தங்கி ராமனுடைய பாதுகையின் பாதுகாப்பின் கீழ் ஆளப் போவதாக பிகடனம் செய்த பரதன்...

Bharata receives Rama's Sandals from him

அங்கே கூடியிருந்த மஹரிஷிகள், ஒப்பிலா தேஜஸ்ஸுடன் கூடிய அந்த உடன் பிறந்தார் இருவரும் மயிர்க்கூச்செரியும் வகையில் விவாதித்ததைக் கண்டு வியப்படைந்தனர்.(1) அங்கே அந்தர்ஹிதமாக {புலப்படாமல்} நின்ற முனிகணங்களும், சித்தர்களும், பரமரிஷிகளும் {தேவரிஷிகளும்} உடன்பிறந்த மஹாத்மாக்களான அந்தக் காகுத்ஸ்தர்கள் {ராமன், பரதன்} இருவரையும் {பின்வருமாறு} பாராட்டினர்:(2)  "தர்மஜ்ஞர்களும் {தர்மத்தை அறிந்தவர்களும்}, தர்மவிக்கிரமர்களுமான {தர்மத்திற்கு இணக்கமாகச் செயல்படுபவர்களுமான} இவ்விரு புத்திரர்களைப் பெற்றவன் எவனோ அவன் தன்யனாவான் {அந்த தசரதன் பாக்கியவானாவான்}. இவர்களிருவருக்கும் இடையில் நடந்த சம்பாஷனையை {உரையாடலைக்} கேட்டு நாங்கள் பூரிப்படைகிறோம்" {என்றனர்}.(3)

அப்போது, தசக்ரீவ {ராவண} வதத்தைக் காண விரும்பிய ரிஷிகணங்கள், சீக்கிரமாகக் கூடி, ராஜசார்தூலனான பரதனிடம் இந்த சொற்களைப் பேசினார்கள்:(4) "உத்தம குலத்தில் பிறந்தவனே, மஹாபிராஜ்ஞனே {பெரும் ஞானியே}, சிறந்த நடத்தை கொண்டவனே, பெரும் புகழ்பெற்றவனே {பரதா}, உன் பிதாவை மதிக்க விரும்பினால், ராமனின் வாக்கியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக.(5) இந்த ராமன், பிதாவின் கடனிலிருந்து எப்போதும் விடுபட்டிருக்க நாங்கள்  விரும்புகிறோம். கைகேயியின் கடனிலிருந்து விடுபட்ட தசரதன் ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டான்" {என்றனர்}.(6)

மஹரிஷிகளும், கந்தர்வர்களும், ராஜரிஷிகள் அனைவரும் இவ்வாறான சொற்களைச் சொல்லிவிட்டுத் தங்கள் தங்கள் கதியை அடைந்தனர் {தாங்கள் செல்லுமிடம் சென்றனர்}.(7) சுபதர்சனனான ராமன்,  அந்த சுபவாக்கியங்களைக் கேட்டுப் புத்துணர்ச்சி அடைந்து, மகிழ்ச்சியான வதனத்துடன் அந்த ரிஷிகளைப் பூஜித்தான்.(8) 

பரதன், அங்கங்கள் நடுங்கத் தன் கைகளைக் கூப்பி, தழுதழுத்த குரலில் ராகவனிடம் {ராமனிடம்} இந்த வாக்கியங்களை மீண்டும் சொன்னான்:(9) "காகுத்ஸ்தரே, ராஜதர்மத்தையும், குலதர்மத்தையும் கருத்தில் கொண்டு நம் மாதாக்களின்  வேண்டுகோளை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்.(10) தனியாக மஹத்தான ராஜ்ஜியத்தை ரக்ஷிக்கவும், நம்மிடம் அன்புள்ள நகர ஜானபதவாசிகளை நிறைவடையச் செய்யவும் என்னால் முடியாது.(11) நம் ஞாதிகளும் {சுற்றத்தாரும்}, போர்வீரர்களும், மித்ரர்களும் {நண்பர்களும்}, நலம்விரும்பிகளும் {அன்பர்களும்} பர்ஜன்யனுக்காக {மேகங்களின் தேவனுக்காக / மழைக்காகக்} ஏங்கும் உழவர்களைப் போல உம்மை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.(12) மஹாபிராஜ்ஞரே, திரும்பி வந்து இந்த ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பீராக. உலகைப் பரிபாலிக்கும் சக்திமிக்கவர் நீரே" {என்றான் பரதன்}.(13)

பிரியவாதியான {இன்சொல் பேசுபவனான} பரதன் இவ்வாறு பேசிவிட்டு, தன்னுடன் பிறந்தானின் பாதங்களில் விழுந்து,  இன்னும் பலவாறாக ராமனை வேண்டினான்.(14) இராமன், கரிய நிறத்தையும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும், மயக்கும் ஹம்சத்தின் {அன்னப்பறவையின்} குரலையும் கொண்ட பரதனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு {பின்வருமாறு} சொன்னான்:(15) "தாதா {ஐயா}, சுயமாகவும், பயிற்சியினாலும் அடைந்த புத்தி உன்னிடம் இருக்கிறது. பிருத்வியை ரக்ஷிக்க நீ திறன்மிக்கவனாகவே இருக்கிறாய்.(16) அமைச்சர்கள், நண்பர்கள், புத்திசாலித்தனமுள்ள மந்திரிகள் ஆகியோருடன் ஆலோசித்து மஹத்தான காரியங்கள் அனைத்தையும் செய்வாயாக.(17) சந்திரனில் ஒளி மறையலாம், இமயத்தில் பனியும் விலகலாம், சாகர வெள்ளம் கரையைக் கடக்கலாம், நான் பிதாவுக்குச் செய்த பிரதிஜ்ஞையை மீற மாட்டேன்.(18) தாதா, ஆசையாலோ, லோபத்தாலோ பேராசையாலோ மாதாவால் உனக்காகச் செய்யப்பட்டது இஃது என்பதை மனத்தில் வைத்துக் கொள்ளாமல் மாதாவிடம் மதிப்புடன் நடந்து கொள்வாயாக" {என்றான் ராமன்}.(19)

ஆதித்யனுக்கு ஒப்பான தேஜஸ்ஸையோ, பிரதமைச் சந்திரனின் தோற்றத்தையோ  கொண்ட அந்த கௌசல்யாசுதன் {கௌசலையில் மகன் ராமன்} இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது, பரதன் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(20) "ஆரியரே, ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட இந்த {மரப்} பாதுகைகளில் உமது பாதம் பதிப்பீராக. இவை சர்வலோகத்திற்கும் யோக்ஷேமத்தை {வளர்ச்சியையும், பாதுகாப்பையும்} நிச்சயம் அருளும்" {என்றான்}.(21)

மஹாதேஜஸ்வியான அந்த நரவியாகரன் {மனிதர்களில் புலி / ராமன்}, பாதுகைகளில் பாதங்கள் பதித்து, இறங்கி, மஹாத்மாவான பரதனிடம் அவற்றைக் கொடுத்தான்.(22) அந்தப் பாதுகைகளின் முன் பணிந்து வணங்கிய அவன் {பரதன்}, ராமனிடம் {இதைச்} சொன்னான், "பரந்தபரே {பகைவரை தபிக்கச் செய்பவரே}, வீரரே, இரகுநந்தனரே, சதுர்தச வருஷங்களும் {இந்தப் பதினான்காண்டுகளும்} நான் ஜடையும், மரவுரியும் தரித்து, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, ராஜ்ஜிய பாரத்தை இந்தப் பாதுகைகளின் மேலிட்டு, உமது வரவை எதிர்பார்த்து {அயோத்தி} நகரத்திற்கு வெளியே வாழ்வேன். இரகோத்தமரே {ரகு குலத்தவரில் உத்தமரே}, சதுர்தச வருஷங்கள் நிறைவடையும் நாளில் உம்மை நான் காணாவிட்டால் நெருப்புக்குள் பிரவேசிப்பேன்" {என்றான் பரதன்}[1].(23-26அ)

[1] ஆம் எனில் ஏழிரண்டு ஆண்டில் ஐய நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன்

- கம்பராமாயணம் 2507ம் பாடல்

பொருள்: அப்படியானால் ஐயா, பதினான்கு ஆண்டுகள் கழிந்ததும் {பகைவருக்கு} அச்சந்தரும் அகழி நீர் சூழ்ந்த பெரும் நகரை {அயோத்தியை} அடைந்து நானிலம் ஆளவில்லையெனில் கொடும் நெருப்பில் இறந்து படுவேன். இஃது உண்மை. உன் மேல் ஆணையிடுகிறேன்.

"அவ்வாறே ஆகட்டும்" என்று பிரதிஜ்ஞை செய்து, {ராமன் பரதனை} ஆரத்தழுவி, சத்ருக்னனின் கரங்களைப் பற்றிக் கொண்டு பரதனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(26ஆ,27அ) "இரகுசத்தமா {ரகு குலத்தவரில் மேன்மையானவனே}, மாதா கைகேயியை ரக்ஷிப்பாயாக. அவளிடம் கோபங்கொள்ளாதே. என் பேரிலும், சீதையின் பேரிலும் சபதமேற்பாயாக" {என்று சொல்லி} கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன்னுடன் பிறந்தானுக்கு விடைகொடுத்தான்.(27ஆ,28) பிரதாபவானும், தர்மவித்துமான அந்த பரதன், நன்கலங்கரிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளைப் பூஜித்து, ராகவனை {ராமனை} பிரதக்ஷிணம் செய்து, உத்தம நாகத்தின் {சிறந்த யானையின்} தலையில் அவற்றை {அந்தப் பாதுகைகளை} வைத்தான்[2].(29)

[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில்,"நன்கலங்கரிக்கப்பட்ட பாதுகைகளை கையேந்தி வாங்கிக் கொண்டு உத்தமருக்கெல்லாம் உத்தமரின் சிரஸில் வைத்துக் கொண்டார். அப்படியே ராகவரையும் வலம் வந்தார்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நன்கலங்கரிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளை விசேஷமாகப் பூஜித்து ராமனை ப்ரதக்ஷிணஞ் செய்து அவைகளை ராஜர்களுக்குரிய உத்தமகஜமான சத்ருஞ்ஜயத்தின் சிரஸில் வைத்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ஸ்ரீபரதாழ்வானும் விடைபெற்றுக் கொண்டு பெருமாளைத் தண்டம் ஸமர்ப்பித்து வலம் வந்து அந்த ஸ்ரீபாதுகைகளைப் பட்டத்து யானையின் மேலெழுந்தருளப்பண்ணி மகிழ்ந்தனர்" என்றிருக்கிறது. 

அப்போது, ஸ்வதர்மத்தில் {தன் கடமையைச் செய்வதில்} இமய மலை போல் உறுதிமிக்கவனான அந்த ராகவ வம்சவர்தனன் {ராமன்}, குருக்களையும், மந்திரிமார்களையும், பிறரையும், தன் தம்பிகள் இருவரையும் முறைப்படி வரிசையாக மதித்து அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினான்.(30) துக்கக் கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் கூடிய மாதாக்கள், அவனிடம் விடைபெற்றுக் கொள்ள இயலாதவர்களாக இருந்தனர். எனினும், ராமன் தன் மாதாக்கள் அனைவரையும் சேவித்து, அழுது கொண்டே தன் குடிலுக்குள் பிரவேசித்தான்.(31)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 112ல் உள்ள சுலோகங்கள்: 31

Previous | Sanskrit | English | Next

Tuesday, 24 January 2023

முற்றுகை விரதம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 111 (32)

The vow of siege | Ayodhya-Kanda-Sarga-111 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஆசிரியரின் சொல்லை மீறலாகாதென்ற வசிஷ்டர்; தந்தையின் சொல் மேலானது என்று மறுத்த ராமன்; தரையில் படுத்து விரதமிருப்பேன் என்ற பரதன்; மறுத்து சமாதானம் கூறிய ராமன்...

Bharata besieges Rama

இராஜபுரோஹிதரான வசிஷ்டர், ராமனிடம் பேசிவிட்டு, தர்மம் நிறைந்த சொற்களை மீண்டும் {பின்வருமாறு} சொன்னார்:(1) "காகுத்ஸ்தா, ராகவா, இங்கு பிறந்த ஒவ்வொரு  புருஷனுக்கும், ஆசாரியர், பிதா, மாதா என்ற மூன்று குருக்கள் உள்ளனர்.(2) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, பிதாவானவன் இந்தப் புருஷனைப் பெறுகிறான். ஆசார்யர் {அவனுக்கு விழிப்புணர்வை} பிரஜ்ஞையை அளிக்கிறார். எனவேதான், குரு என்று அவர் {மேன்மையான பெரியவர் என்று அந்த ஆசாரியர்/ ஆசிரியர்} அழைக்கப்படுகிறார்.(3) பரந்தபா {பகைவரை தபிக்கச் செய்பவனே}, உன் பிதாவுக்கும், உனக்கும் ஆசாரியன் நானே. என் சொற்களுக்குக் கீழ்ப்படிவதால் சத்கதியை {நல்வழியை} நீ மீறியவனாக மாட்டாய்[1].(4) தாதா {ஐயா}, இந்த பரிஷதர்களும் {சபையோரும்}, பிறரும், வணிகக்கூட்டத்தினரும், துவிஜர்களும் உன்னுடையவர்களே. இவர்களுக்காக தர்மத்தைப் பின்பற்றுகையில் சத்கதியை நீ மீறியவனாக மாட்டாய்.(5) தர்மசீலையும் {அறம் ஒழுகுபவளும்}, முதிர்ந்தவளுமான உன் மாதாவை {கௌசல்லையை} விட்டு விலகுவது உனக்குத் தகாது. இவளது சொற்களின்படி செயல்படுவதால் சத்கதியை நீ மீறியவனாக மாட்டாய்.(6) இராகவா, சத்தியதர்ம பராக்கிரமா {ராமா}, உன்னிடம் மன்றாடும் பரதனுடைய சொற்களின்படி செயல்படுவதால் உன் ஆத்மாவின் அழைப்பை நீ மீறியவனாக மாட்டாய்" {என்றார் வசிஷ்டர்}.(7)

[1] இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் மறுஇல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்க பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் என்பரால்
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையானால்
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான்

- கம்பராமாயணம் 2497, 2498 பாடல்கள்

பொருள்: மதம்பெருக்கும் யானையைக் கொண்டவனே, இம்மையிலும், மறுமையிலும் பயன் தருமாறு குற்றமற்ற கல்வியைப் பண்போடு கற்பித்த ஒருவனே {ஆசிரியனே} நன்மை தரும் இயல்பினைச் செய்த குரவர்கள் {ஆசிரியர்கள்} எல்லோரினும் மேம்பட்டவன் {குரு} என்று சொல்வார்கள். எனவே, ஐயா, நான் உன்னை வளர்த்து கல்வி ஒன்றல்லாமல் பலவற்றைக் கற்பித்தேன் என்ற உண்மையால், இன்று எனது ஆணையை இல்லை என்று சொல்லாமல், உனக்குரிய நாடு சென்று, நன்றாகக் காப்பாயாக என்றான் {வசிட்டன்}.

இவ்வாறாக, குருவே நேரடியாக மதுரமான சொற்களைச் சொன்ன போது, புருஷரிஷபனான ராமன், அங்கே அமர்ந்திருந்த வசிஷ்டரிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8) "மாதாவும், பிதாவும் தங்கள் தனயனை உறங்கச் செய்தும், உடுத்தியும், வளர்த்தும், பிரியமுடன் பேசியும் நித்தியம் அவனுக்குத் தங்கள் சக்திக்கேற்ற நல்லதைச் செய்கிறார்கள். எனினும், மாதாவும் பிதாவும் செய்யும் எதற்கும் கைம்மாறு செய்ய இயலாது {அவர்கள் நமக்குச் செய்யும் எதையும் நம்மால் அவர்களுக்குத் திரும்பவும் செய்ய முடியாது}.(9,10) என்னைப் பெற்றவரும், என் பிதாவுமான அந்த தசரத ராஜா, எனக்கு எதை ஆணையிட்டாரோ அதை என்னால் பொய்யாக்க முடியாது" {என்றான் ராமன்}.(11)

இராமன் இவ்வாறு உரைத்ததும், தாராள மனப்பான்மை கொண்ட பரதன், மனத்தில் பெரும் வருத்தமடைந்து, அருகில் நின்று கொண்டிருந்த சூதனிடம் {சுமந்திரனிடம், பின்வருமாறு} சொன்னான்:(12) "சாரதியே, எனக்காக இங்கே தரையில் குசப்புற்களை சீக்கிரம் பரப்புவீராக. எனக்கு நிறைவேற்படும் வரை இந்த ஆரியரை முற்றுகையிட {அவரது வழியில் படுத்துக்கிடக்கப்} போகிறேன்.(13) இவர் திரும்பாத வரையிலும், தனமில்லாத ஒரு துவிஜனைப் போல, வெளிச்சமின்றி {கண்களை மூடிக் கொண்டு}, ஆஹாரமின்றி {உணவைத் துறந்து பட்டினியாக} இந்த சாலையின் {பர்ணசாலையின்} முன்பே கிடந்திருப்பேன்" {என்றான் பரதன்}[2].(14)

[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸாரதியே, இப்பொழுதே தரையில் எனக்காக தருப்பைகளை உடனே பரப்பும். எனக்கு அனுக்கிரகம் புரியாதிருக்கிறது எதுவரைக்குமோ அதுவரைக்கும் ஸ்ரீராமரை நான் தகைவேன். இவர் திரும்பியெழுந்தருளாதிருக்கிறது எதுவரையிலுமோ இப்பொழுது முதலதுவரை காரியம் கைகூடப்பெறாத க்ஷத்திரியனாகும் நான் பர்ணசாலையினது வாயிலில் பட்டினிகிடப்பவனாய் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கிடப்பேன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸாரதீ, எனக்கு இங்குத் தரையின் மேல் தர்ப்பங்களைச் சீக்ரம் பரப்புவாயாக. எனதையனாகிய ராமன் என்மீது அருள்புரியாதிருக்கும் வரையிலும் அவர்க்குக் குறுக்கே படுத்திருக்கப் போகிறேன். வட்டிக்காகத் தனது பணங்களையெல்லாம் கடன் கொடுத்த ப்ராஹ்மணன், கடன் வாங்கிக் கொண்டவன் வாசலில் குறுக்காக ஆஹாரமின்றி முகத்தை மூடிக் கொண்டு படுத்திருக்கும் விதமாக நானும் ராமன் அயோத்யைக்குத் திரும்பி வராதிருக்குமளவும் ஆஹாரத்தைவிட்டு முகத்தில் துணியைப் போட்டு மூடிக்கொண்டு பர்ணசாலையின் வாசலில் படுத்துக் கொள்கிறேன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "சூதரே, நீர் விரைவாக இவ்விடத்திலேயே தூப்புற்களைக் கொணர்ந்து பரப்புக; யானிங்கே பிராயோபவேசஞ்செய்து எம்மையர் அருள் செய்யுமளவும் படுத்திருப்பேன்; இந்தச் சாலையின் வாயிலில் கடன் கொடுத்தவன் போலப் படுத்து உணவு நீங்கிக் கிடப்பேனல்லாது, என்னையனருள்செய்யுமளவு மெழேன்" என்றிருக்கிறது.

சுமந்திரன், {அனுமதி எதிர்பார்த்து} ராமனைப் பார்த்துக் கொண்டே இருப்பதைக் கண்டு மனம் நொந்தவன் {பரதன்}, தானே குசப்புற் குவியலைக் கொண்டு வந்து, பூமியில் பரப்பினான்.(15) மஹாதேஜஸ்வியும், ராஜரிஷிகளில் சிறந்தவனுமன ராமன், அவனிடம் {பின்வருமாறு} பேசினான், "தாதா {ஐயா}, பரதா, என்னை முற்றுகையிட்டுக் கிடக்கும் அளவுக்கு நான் என்ன {குற்றம்} செய்தேன்?(16) இவ்வுலகில் ஒரு பிராமணர் நரர்களைத் தடுக்கும் வகையில் ஒரே பக்கமாகக் கிடக்கலாம். மூர்த்தாபிஷேகத்திற்குரியவர்கள் {முடிசூட்டுக்குரியவர்கள் / க்ஷத்திரியர்கள்} இவ்வாறு முற்றுகையிட்டுக் கிடக்க எந்த விதியும் இல்லை.(17) இராகவா, நரசார்தூலா {மனிதர்களில் புலியே}, இந்தப் பயங்கர விரதத்தைக் கைவிட்டு எழுவாயாக. இங்கிருந்து நகரங்களில் சிறந்த அயோத்திக்கு சீக்கிரம் செல்வாயாக" {என்றான் ராமன்}.(18)

இன்னும் அவ்வாறே கிடந்த பரதன், சுற்றிலும் இருந்த நகர, ஜானபத ஜனங்களைப் பார்த்து, "ஆரியரை நெறிப்படுத்த மாட்டீரா?" என்று கேட்டான்.(19)

நகர, ஜானபதவாசிகளான அந்த ஜனங்கள், அந்த மஹாத்மாவிடம் {பரதனிடம்} {பின்வருமாறு} மறுமொழி கூறினர், "காகுத்ஸ்தனை நன்கறிவோம். இராகவன், சரியாகத்தான் பேசுகிறான்.(20) இந்த மஹாபாகன் {பெருந்தகையாளன்}, பிதாவின் சொற்களில் திடமாக இருக்கிறான். உண்மையில் அதனாலேயே அவனைத் திருப்பும் சக்தியற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம்" {என்று கூறினர்}.(21)

அவர்களின் சொற்களை அறிந்த ராமன், {பரதனிடம் பின்வருமாறு} பேசினான், "தர்மத்தில் கண்கொண்ட {தர்மத்தை சரியாகக் காணும்} உன் நண்பர்களின் சொற்களைக் கேட்பாயாக.(22) மஹாபாஹுவே, இராகவா, {நான் சொன்னது, அவர்கள் சொன்னது என்ற} இரண்டையும் கேட்டு, நன்றாகச் சிந்திப்பாயாக. எழுந்து {இனி இதுபோல் செய்யேனெனும் உறுதியுடன்} என்னையும், நீரையும் தீண்டுவாயாக" {என்றான்}.(23)

பிறகு, பரதன் எழுந்து, ஜலத்தைத் தீண்டி, {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான், "பரிஷதர்களும் {சபையோரும்}, மந்திரிகளும், வணிகக் கூட்டத்தாரும் நான் சொல்வதைக் கேட்பாராக.(24) நான் என் பிதாவிடம் ராஜ்ஜியத்தை யாசிக்கவில்லை. {இவ்வாறு செய்யென} என் மாதாவைத் தூண்டவுமில்லை; பரமதர்மஜ்ஞரும் {தர்மங்களை அறிந்தவர்களில் உயர்ந்தவரும்}, ஆரியருமான ராமரை {அரண்யம் செல்ல} அனுமதிக்கவுமில்லை.(25) பிதாவின் சொற்களுக்காக {ஆணைக்காக} இங்கே வாழ வேண்டுமென்பது அவசியமெனில், நானே பதினான்கு ஆண்டுகள் வனத்தில் வாழ்வேன்" {என்றான்}.(26)

தர்மாத்மாவான ராமன், தன்னுடன் பிறந்தானின் இயல்பான வாக்கியங்களில் வியப்படைந்து, நகர ஜானபதத்தாரைப் பார்த்து {பின்வருமாறு} பேசினான்:(27) "ஜீவித்திருந்த என் பிதாவால் முடிவாக விற்கப்பட்டதையும், வாங்கப்பட்டதையும் என்னாலோ, பரதனாலோ மாற்ற முடியாது.(28) எனக்கு மாற்றாக வனவாசஞ் செய்வது என்னால் ஏற்கமுடியாத வெறுக்கத்தக்க காரியம். கைகேயி உரைத்தது சரியே. என் பிதா செய்ததும் நற்செயலே.(29) பரதன், சாந்தன். பெரியோரிடம் அர்ப்பணிப்புள்ளவன் என்பதை நான் அறிவேன். சத்தியசந்தனான இந்த மஹாத்மாவுக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.(30) வனத்தில் இருந்து திரும்பியதும் என்னுடன் பிறந்தானான இந்த தர்மசீலனின் துணையுடன் நான் பிருத்வியின் உத்தம பதியாக {பூமியின் நல்ல தலைவனாகத்} திகழ்வேன்.(31) இராஜா {தசரதர்}, கைகேயியால் கட்டுப்படுத்தப்பட்டார். நான் அந்தச் சொற்களின்படியே செயல்படுகிறேன். அதனால், நீயும் மஹீபதியான நம் பிதாவைப் பழியில் இருந்து விடுவிப்பாயாக" {என்றான் ராமன்}.(32)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 111ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

மனுவம்சம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 110 (36)

The lineage of Manu | Ayodhya-Kanda-Sarga-110 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரம்மனைக் குறித்தும், இக்ஷ்வாகு குலத்தால் நிலைநிறுத்தப்பட்ட தர்மங்களைக் குறித்தும் விளக்கிச் சொன்ன வசிஷ்டர்; மூத்த மகனே அரியணையில் அமர வேண்டும் என ராமனிடம் அவர் வலியுறுத்தியது...

Vashishta, the Rishi of three lifetimes

வசிஷ்டர், ராமனின் கோபத்தை அறிந்து {பின்வருமாறு} மறுமொழி கூறினார், "ஜாபாலியும் இவ்வுலகின் போக்குவரத்தை {பிறப்பிறப்பை / இம்மையையும், மறுமையையும்} நன்கறிவார்.(1) நீ {அயோத்திக்குத்} திரும்பி வர வேண்டும் என்ற தம் ஆசையாலேயே இந்த வாக்கியங்களைச் சொன்னார். லோகநாதா, உலகின் தோற்றத்தைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(2) 

சர்வமும் நீர்மயமாயிருந்தது. அதில் பிருத்வி {பூமி} அமைக்கப்பட்டது. அதன்பிறகு, தைவதங்கள் அனைத்துடன் {தேவர்கள் அனைவருடன்} சேர்ந்து சுவயம்பூவான பிரம்மன் தோன்றினான்.(3) பின்னர் அவன் வராஹ வடிவை ஏற்று அந்த வசுந்தரையை {பூமியை நீரிலிருந்து} உயர்த்திவிட்டு, தூய ஆத்மாக்களைக் கொண்ட தன் புத்திரர்கள் சகிதராக மொத்த ஜகத்தையும் படைத்தான்.(4) ஆகாசத்தில் தோன்றியவனும், சாசுவதமானவனும் {எப்போதும் இருப்பவனும்}, மாற்றமற்றவனும், அழிவற்றவனுமான பிரம்மனுக்கு, மரீசி பிறந்தார், மரீசியின் மகன் கசியபர் ஆவார்.(5) 

கசியபருக்கு விவஸ்வான் {சூரியன்} பிறந்தான். மனு வைவஸ்வத சுதனாவார் {விவஸ்வானின் மகனாவார்}. பூர்வத்தில் அவரே பிரஜாபதியாக {படைப்பின் தலைவராக} இருந்தார். இக்ஷ்வாகு மனுவின் மகனாவான்.(6) மனு, இந்த வளமான மஹீயை {நிலத்தை} முதலில் எவனுக்கு தத்தம் செய்தாரோ, அந்த இக்ஷ்வாகுவே அயோத்தியின் முதல் ராஜா என்பதை அறிவாயாக.(7) 

இக்ஷ்வாகுவின் மகன், ஸ்ரீமான் குக்ஷி என்று அறியப்பட்டான். அதன்பிறகு, வீரன் விகுக்ஷி, குக்ஷியின் மகனாகப் பிறந்தான்.(8) விகுக்ஷிக்கு, மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான பாணன் புத்திரனானான். பாணனுக்கு மஹாபாஹுவும், சிறப்புமிக்கவனுமான அனரண்யன் பிறந்தான்.(9) நல்லோரில் சிறந்தவனான இந்த அனரண்யன் மஹாராஜாவாக இருந்தபோது, மழை பொய்ப்பதோ, பஞ்சம் நேர்வதோ இல்லை, எவனும் கள்வனாக இல்லை.(10) அனரண்யனுக்கு, மஹாபாஹுவான ராஜா பிருது பிறந்தான். பிருதுவுக்கு மஹாராஜா திரிசங்கு பிறந்தான். அந்த வீரனே {திரிசங்குவே}, தன் சத்திய வசனத்திற்காக சரீரத்துடன் திவத்திற்கு {ஸ்வர்க்கத்திற்குச்} சென்றான்.(11,12அ) திரிசங்குவுக்கு, சிறப்புமிக்க துந்துமாரன் மகனாகப் பிறந்தான். துந்துமாரனுக்கு மஹாதேஜஸ்வியான யுவனாஷ்வன் பிறந்தான்.(12ஆ,13அ) ஸ்ரீமான் மாந்தாதா, யுவனாஷ்வனின் மகனாகப் பிறந்தான். மாந்தாதாவுக்கு, மஹாதேஜஸ்வியான ஸுஸந்தி பிறந்தான். ஸுஸந்திக்கு, துருவசந்தி, பிரஸேனஜித் என்ற இரு புத்திரர்கள் இருந்தனர். துருவசந்திக்கு, சிறப்புமிக்கவனும், ரிபுசூதனனுமான {பகைவரை அழிப்பவனுமான} பரதன் பிறந்தான்.(13ஆ-15அ) 

மஹாபாஹுவான பரதனுக்கு, அசிதன் என்ற பெயரில் பிறந்தவனுக்கு, பிரதிராஜாக்களான {பகை மன்னர்களான} ஹேஹயர்கள், தாலஜங்கர்கள், சசபிந்துக்கள் சத்ருக்களானார்கள்.(15ஆ,16) அந்த ராஜா {அசிதன்}, அவர்கள் அனைவருக்கும் எதிராக வியூகம் வகுத்தாலும், யுத்தத்தில் {அவர்களால்} விரட்டப்பட்டான். அவன் சிறந்த ரம்மியமான ஒரு சைலத்தில் {மலையில்} அபிரத முனியானான் {அர்ப்பணிப்புள்ள முனிவனானான்}.(17) அவனது பாரியைகள் இருவரும் கர்ப்பிணிகளாக இருந்தனர் என்பது சுருதி {கேள்வி}. {அவர்களில்} ஒருத்தி, தன் சகபத்தினியின் கர்ப்பத்தை அழிக்க அவளுக்கு நஞ்சைக் கொடுத்தாள்.(18) 

சியவனர் என்ற பெயரைக் கொண்ட பார்க்கவர் {பிருகு குலத்தவர்}, ஹிமவந்தத்தில் {இமய மலையில்} வசித்து வந்தார். காளிந்தி {நஞ்சுண்டவள்} அந்த ரிஷியை அணுகி அவரை வணங்கினாள். புத்திரன் பிறக்க வரம் வேண்டி வந்தவளிடம் அவர் {பின்வருமாறு} பேசினார்: (19,20அ) "தேவி, மஹாத்மாவும், உலகப் புகழ்பெற்றவனும், தார்மிகனும், நல்லொழுக்கம் கொண்டவனும், வம்ச கர்த்தனும் {குலத்தைத் தழைக்கச் செய்பவனும்}, அரிசூதனனுமான {பகைவரை அழிப்பவனுமான} புத்திரன் உனக்குப் பிறப்பான்" {என்றார் சியவனர்}.(20ஆ,21அ)

மகிழ்ச்சியடைந்த அந்த தேவி {காளிந்தி}, அந்த முனியை பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து}, அனுமதி பெற்றுக் கொண்டு, வீட்டை அடைந்து, பத்மத்தின் இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், பத்மகர்ப்பனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பான ஒளியுடனும் கூடிய, ஒரு புத்திரனைப் பெற்றாள்.(21ஆ,22) கர்ப்பத்தை அழிக்கும் நோக்கில் சகபத்தினியால் நஞ்சு கொடுக்கப்பட்டு, அந்த நஞ்சுடனேயே பிறந்ததால் அவன் ஸகரன் ஆனான் {நஞ்சுடன் கூடியவன் என்ற பெயரைப் பெற்றான்}.(23) எவன் யாகம் செய்து, பருவ காலங்களில் {பௌர்ணமி, அமாவாசைகளில்} இந்தப் பிரஜைகளை அச்சுறுத்தும் சமுத்திரத்தைத் தோண்டச் செய்தானோ அந்த ராஜாவே ஸகரன் என்ற நாமம் கொண்டவன்.(24)

அஸமஞ்சன் சகரனின் புத்திரன் ஆவான். அவன் செய்த பாபகர்மங்களுக்காக அவனது பிதா உயிரோடு இருக்கும்போதே விரட்டப்பட்டான் என்று கேள்விப்படுகிறோம்.(25) அஸமஞ்சனுக்கு அம்சுமான் என்றழைக்கப்பட்ட வீரியவான் புத்திரனாக இருந்தான். திலீபன் அம்சுமானின் புத்திரன், பகீரதன் திலீபனின் மகன்.(26) பகீரதனக்கு ககுத்ஸ்தன் பிறந்தான். அவனது பெயராலேயே காகுத்ஸ்தர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். அந்த ககுத்ஸனுக்கு ரகு என்ற புத்திரன் பிறந்தான். அவனது பெயராலேயே இராகவர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.(27) தேஜஸ்வியான பிரவிருத்தன் இரகுவுக்குப் புத்திரனாகப் பிறந்தான். அவன் புருஷாதகன், கல்மாஷபாதன்[1], சௌதாசன் என்ற பெயர்களில் புவியில் அறியப்படுகிறான்.(28) கல்மாஷபாதனின் புத்திரன், புகழ் பெற்றவனான சங்கணன், அவனது {தன் தந்தை கல்மாஷபாதனின்} வீரியத்தைப் பெற்றிருந்தாலும், தன் சைனியத்துடன் சேர்ந்து அழிந்தான்.(29)

[1] கல்மாஷபாதன் வசிஷ்டரின் சாபத்தால் ராக்ஷசனானான். மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதிகள் 178, 179, 184, கர்ண பர்வம் பகுதி 45, அநுசாஸன பர்வம் பகுதிகள் 78, 79, 80, அஸ்வமேத பர்வம் பகுதி 57, 58 ஆகியவற்றில் கல்மாஷபாதனின் கதை வெவ்வேறு கோணங்களில் இருந்து அணுகப்படுகிறது.

ஸ்ரீமான் சுதர்சனன், சங்கணனின் புத்திரனாவான். சுதர்சனனுக்கு அக்னிவர்ணன், அக்னிவர்ணனுக்கு சீக்கிரகன்,{30} சீக்கிரகனின் புத்திரன் மரு, மருவின் புத்திரன் பிரசுஷ்ருகன், பிரசுஷ்ருகனுக்கு மஹாதேஜஸ்வியான அம்பரீசன் புத்திரனாகப் பிறந்தான்.{31} அம்பரீசனுக்கு சத்தியவிக்ரமனான நஹுஷன் புத்திரனாகப் பிறந்தான். நஹுஷனின் புத்திரன் பரம தார்மிகனான நாபாகன்.{32} அஜன், ஸுவிரதன் ஆகிய இருவரும் நாபாகனின் மகன்கள். அஜனின் மகன் தர்மாத்மாவான ராஜா தசரதன்.(30-33) அவனது வாரிசும், {அரசாளும் உரிமை பெற்ற} மூத்த மகனுமான நீ, ராமன் என்று நன்கறியப்படுகிறாய். நிருபா, அந்தக் காரணத்தாலேயே ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டு, ஜனங்களை கவனித்துக் கொள்வாயாக.(34) 

இக்ஷ்வாகு குலம் முழுவதிலும் பூர்வஜனே {மூத்தவனே} ராஜாவாகிறான்; மூத்தவன் இருக்கையில் இளையவன் {ராஜா} ஆக முடியாது. மூத்த புத்திரனே ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்யப்படுவான்.(35) பெரும்புகழ்மிக்கவனே, ராகவர்களின் {ரகு குலத்தின்} சநாதன குல தர்மத்தை இப்போது கைவிடுவது உனக்குத் தகாது. விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் நிறைந்ததும், மேதினியில் பரந்த ராஷ்டிரமுமான இதை உன் பிதாவைப் போல் ஆள்வாயாக" {என்றார் வசிஷ்டர்}.(36)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 110ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை