Enter royal court | Ayodhya-Kanda-Sarga-081 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சங்கு, பேரிகைகளின் ஒலியைக் கேட்டுத் துயருற்ற பரதன்; சபைக்குள் நுழைந்த பரதனும், சத்ருக்னனும்...
அப்போது வாக்கு விசேஷங்களை அறிந்தவர்களான சூதர்களும், மாகதர்களும் நாந்தீமுகத்திற்கு[1] முன்பான ராத்திரியில் {விடிவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னால்} மங்கல ஸ்துதிகளால் பரதனைத் துதித்தனர்.(1) சுவர்ண கோணத்தால் {தங்கக் கோல்களால்} அடிக்கப்படும் யாம துந்துபிகள் {இரவு நேர ஜாம வேளை அறிவிக்கும் வகையில்} ஒலியை எழுப்பின. சங்குகளும், பல்வேறு வகையில் ஒலியெழுப்பும் நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளும் முழக்கப்பட்டன.(2) வானத்தை நிறைக்கும் அந்த தூரிய கோஷத்தின் மகத்தான ஒலியானது, சோக சந்தாபத்தில் இருந்த பரதனின் சோகத்தை மேலும் அதிகரித்தது.(3)
[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "இறந்து போன உறவினர்களின் அருளைப் பெறுவதற்காகவும், அவர்களை கௌரவிப்பதற்காகவும், அவர்களுக்கான நன்மையைச் செய்வதற்காகவும் ஒரு நல்ல தருணத்தில் நடைபெறும் விழாவின் பெயரே நாந்தீமுகம்" என்றிருக்கிறது.
அப்போது விழித்தெழுந்த பரதன், "நான் ராஜாவல்ல" என்று சொல்லி அந்த கோஷத்தை நிறுத்திவிட்டு, சத்ருக்னனிடம் இதைச் சொன்னான்:(4) "சத்ருக்னா, கைகேயி உலகத்திற்கு இழைத்த மகத்தான தீங்கைப் பார். துக்கங்களை என்னிடம் விட்டுவிட்டு தசரத ராஜா சென்றுவிட்டார்.(5) மஹாத்மாவான அந்த தர்மராஜருடைய தர்மத்தின் மூலமான இந்த ராஜஸ்ரீ {ராஜ்ஜிய லட்சுமி}, ஜலத்தில் மீகாமனில்லாத {செலுத்துபவன் இல்லாத} ஓடத்தைப் போல இங்கேயும் அங்கேயும் தடுமாறுகிறது.(6) இதன் காரணமாகவே என் மாதா, தன் தர்மத்தைக் கைவிட்டு, நமக்கு மஹாநாதரான ராகவரை {ராமரைத்} தானே வனத்திற்கு விரட்டிவிட்டாள்" {என்றான் பரதன்}.(7)
இதைப் போலவே, சித்தங்கலங்கி, அழுது புலம்பும் பரதனைக் கண்ட பெண்கள் அனைவரும், ஒரே ஸ்வரத்தில் பரிதாபமாகக் கதறி அழுதனர்.(8) அவன் {பரதன்}, இவ்வாறு அழுது கொண்டிருந்த போது, ராஜ தர்மங்களை அறிந்தவரும், பெரும்புகழ்மிக்கவருமான வசிஷ்டர், இக்ஷ்வாகு நாதனின் {தசரதனின்} சபைக்குள் பிரவேசித்தார்.(9) தன் கணங்களுடன் கூடிய அந்த தர்மாத்மா {சீடர்களுடன் கூடிய வசிஷ்டர்}, தங்கத்தாலானதும், ரம்மியமானதும், மணி ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், {தேவ சபையான} சுதர்மத்திற்கு ஒப்பானதுமான அந்த சபைக்குள் நுழைந்தார்.(10)
சர்வ வேதங்களையும் அறிந்தவர் {வசிஷ்டர்}, சுகமான மெத்தை விரிக்கப்பட்ட காஞ்சனப்பீடத்தில் {பொற்பீடத்தில்} அமர்ந்து, தூதர்களிடம் {பின்வருமாறு} ஆணையிட்டார்:(11) "நமக்கு அவசர காரியம் இருப்பதால், ஊக்கத்துடன் சென்று, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், அமாத்யர்கள் {அமைச்சர்கள்}, கணவல்லபர்கள் {படைத்தலைவர்கள்}, இராஜசேவகர்களுடன் கூடிய சத்ருக்னன், புகழ்மிக்க பரதன், யுதாஜித்[2], சுமந்திரன் ஆகியோரையும், இதத்தை விரும்பும் ஜனங்களையும் சீக்கிரமாக இங்கே அழைத்து வாருங்கள்" {என்றார் வசிஷ்டர்}.(12,13)
[2] கேகயத்தில் பரதனை வழியனுப்பிய யுதாஜித்தும் அயோத்திக்கு வந்துவிட்டான் என்பது இந்த சுலோகத்தில் தெரிகிறது. ஒருவேளை தகனத்திற்குப் பின்பும் வந்திருக்கலாம். ஜனகன் வரவில்லை என்பதும் இதில் புலனாகிறது.
இரதங்கள், அச்வங்கள் {குதிரைகள்}, கஜங்கள் {யானைகள்} ஆகியவற்றில் நெருங்கி வந்தவர்களால் {மக்களால்} அப்போது மஹத்தான ஹலஹலாவெனும் சப்தம் உண்டானது {பெரும்பரபரப்பு ஏற்பட்டது}.(14) அதன்பிறகு, அமரர்கள் சதக்ரதுவை {நூறு வேள்விகளைச் செய்த இந்திரனை வரவேற்பதைப்} போலும், தசரதனை {வரவேற்பதைப்} போலும், அமைச்சர்கள் அங்கே வந்து கொண்டிருந்த பரதனை வரவேற்றனர்.(15) அந்த தசரத சுதனால் {பரதனால்} சோபித்த சபையானது, பூர்வத்தில் தசரதன் {இருந்த போது} இருந்ததைப் போலவும், அசையாத ஜலத்துடனும், மணி, சங்கு, மணல் ஆகியவற்றுடனும், திமிங்கலங்களும், நாகங்களும் நிறைந்த ஹிரதத்தை {பெரும் நீர்ப்பரப்பை / கடலைப்} போலவும் பிரகாசித்தது.(16)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 081ல் உள்ள சுலோகங்கள்: 16
Previous | | Sanskrit | | English | | Next |