Wednesday 9 November 2022

சித்திரகூடத்திற்குப் புறப்பட்ட பரதன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 092 (39)

Bharata set out to Chitrakuta | Ayodhya-Kanda-Sarga-092 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரத்வாஜரிடம் விடைபெற்றுக் கொண்ட பரதன்; சித்திரகூடத்திற்குப் புறப்பட்டது...

Bharata's army and the way they went

நல்ல விருந்தோம்பலுடன் கவனித்துக் கொள்ளப்பட்ட பரதன், தன் பரிவாரங்களுடன் அந்த இரவைக் கழித்துவிட்டு, தன்னிச்சையாக பரத்வாஜரிடம் சென்றான்.(1) ஹுதாக்னி ஹோத்ரம் செய்து முடித்த பரத்வாஜ ரிஷி, புருஷவியாகரனான {மனிதர்களில் புலியான} பரதன் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு வருவதைக் கண்டு {பின்வருமாறு} பேசினார்:(2) "அநகா {பாபமற்றவனே}, இங்கே ராத்திரியை நீ சுகமாகக் கழித்தாயா? உன் ஜனங்கள் என் ஆதித்யத்தில் {விருந்தோம்பலில்} முழுமையான திருப்தியடைந்தனரா? எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டார்}.(3)

கைக்கூப்பி வணங்கிக் கொண்டிருந்த பரதன், தன் ஆசிரமத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த அந்த ரிஷியிடம் {பரத்வாஜரிடம், பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(4) "பகவானே, நானும், என் அமாத்தியர்களும் {அமைச்சர்களும்}, மொத்த படையும், வாகனவிலங்குகளும் உம்மால் எல்லா ஆசைகளிலும் பெருந்திருப்தியடைந்து சுகமாக இருக்கிறோம்.(5) சேவகர்களுடன் கூடிய நாங்கள் அனைவரும், நல்ல பக்ஷணங்களும் {உணவும்}, இருப்பிடமும் கிடைக்கப்பெற்று, சோர்வில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் விடுபட்டு சுகமாக வசித்திருந்தோம்.(6) பகவானே, ரிஷிசத்தமரே {சிறந்த முனிவரே}, நான் உம்மிடம் விடைபெற்றுக் கொள்கிறேன். என்னுடன் பிறந்தவரின் {ராமரின்} சமீபத்திற் செல்லும் என்னை நட்பு பொருந்திய கண்களால் பார்ப்பீராக.(7) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, தார்மீகரான அந்த மஹாத்மாவின் ஆசிரமத்திற்கு எந்த மார்க்கத்தில் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? எனக்குச் சொல்வீராக" {என்று கேட்டான் பரதன்}.(8)

தன்னுடன் பிறந்தவனைக் காணும் ஆவலில் இவ்வாறு கேட்ட பரதனுக்கு, மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியுமான பரத்வாஜர் {இவ்வாறு} பதிலளித்தார்:(9) "பரதா, மூன்றரை யோஜனைகளுக்கப்பால்[1] ஜனங்களற்ற வனத்தில் ரம்மியமான குகைகளுடனுங் கானகங்களுங் கூடிய சித்திரகூட கிரி உள்ளது.(10) புஷ்பங்களில் முழுமையாக மறைந்திருக்கும் மரங்களுடனும், ரம்மியமாகப் புஷ்பித்திருக்கும் கானகங்களுடனுங் கூடிய அதன் உத்தர சாரலில் {அந்த மலையின் வடக்குப் பக்கத்தில்} மந்தாகினி நதி {மால்யவதி ஆறு}[2] இருக்கிறது.(11) ஐயா, அந்த ஆற்றுக்கு அப்பால் சித்திரகூட பர்வதம் இருக்கிறது. அங்கே அவ்விருவரும் தங்கள் பர்ணக்குடிலில் {ஓலைக்குடிசையில்} வசித்திருப்பார்கள். இது நிச்சயம்.(12) மஹாபாக்கியசாலியே, வாஹினிபதியே {படையின் தலைவனே}, கஜவாஜிரதங்கள் நிறைந்த வாஹினியை தக்ஷிணமார்க்கத்திலோ, {யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த படையைத் தென்புற வழியிலோ, இங்கிருந்து} இடது புறமாகச் சென்ற பின்னர் தக்ஷிணம் {தெற்கு} நோக்கியோ நடத்திச் சென்றால்[3] ராகவனை {ராமனைக்} காணலாம்" {என்றார் பரத்வாஜர்}.(13,14அ)

[1] ஒரு யோஜனை என்பது எட்டு மைல் தொலைவு எனக் கொண்டால். மூன்றரை யோஜனைகள் இருபத்தெட்டு மைல்களாகும்.

[2] அயோத்தியா காண்டம் 56ம் சர்க்கத்தில் சித்திரகூடத்தில் பாயும் இந்நதி மால்யவதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

 
[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "தெற்கு வழியே சென்று தென்மேற்கு நோக்கி நடத்து" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "இவ்விடத்திற்குத் தென்புறமாகப் போகும் மார்க்கத்தில் கொஞ்சதூரம் கொண்டு போய் அதற்குப் பின் தென்மேற்காகச் செல்லும் ஓர் கிளைவழியைப் பற்றி நடப்பாயாக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நம்முடைய ஆஸ்ரமத்திற்குத் தென்புறத்தில் ஒரு கொடிவழி செல்லுகின்றதே? இந்த வழியிலே சிறிது தூரம் சேனைகளுடன் செல்வாயாகில், நடுவில் தென்மேற்காகக் கிளைவழி பிரிகின்றது; அவ்வழியைச் சார்ந்து செல்வாயாகில்" என்றிருக்கிறது.

யானங்களில் செல்லத்தகுந்தவர்களான ராஜராஜனின் யோசிதைகள் {தசரதனின் மனைவியர்}, இவ்வாறு அந்தப் பிரயாணத்தைக் குறித்துக் கேள்விப்பட்டதும் தங்கள் யானங்களை விட்டு இறங்கி, அந்த பிராமணரை {பரத்வாஜரைச்} சூழ்ந்து நின்றனர்.(14ஆ,இ) தீனமாக {பரிதாபமாக} மெலிந்து, நடுங்கிக் கொண்டிருந்த கௌசல்யை, சுமித்ராதேவியுடன் சேர்ந்து, தன் கைகளால் அந்த முனிவரின் சரணங்களை {பாதங்களைப்} பற்றினாள்.(15) ஆசை நிறைவேறாதவளும், சர்வலோகத்தாலும் வெறுக்கப்பட்டவளுமான கைகேயி, நாணத்துடன் வந்து அவரது சரணங்களைப் பற்றினாள்.(16) பிறகு பகவானான அந்த மஹாமுனியை பிரதக்ஷிணஞ் செய்து {வலம் வந்து}, தீன மனத்துடன் {தளர்ந்த மனத்துடன்} பரதனின் அருகில் நின்றாள்.(17)

அப்போது, திடவிரதரான பரத்வாஜர், "இராகவா, உன் மாதாக்களின் விசேஷங்களை நான் அறிய விரும்புகிறேன்" என்று பரதனிடம் கேட்டார்.(18)

பரத்வாஜர் இவ்வாறு சொன்னதும், மதிமிக்கவனும், வசனகோவிதனுமான {பேச்சில் நிபுணத்துவம் வாய்ந்தவனுமான} பரதன், கைகளைக் கூப்பியபடியே {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(19) "பகவானே, சோகத்தினாலும், உண்ணாததினாலும் மெலிந்து தீனமாக இருக்கும் இந்த தேவியே பிதாவின் மஹிஷியாவாள் {பட்டத்து ராணியாவாள்}. தேவதைக்கு ஒப்பானவளாக நீர் காணும் இவளே, அதிதி தாதாவை {இந்திரனைப்} பெற்றதைப் போல, சிம்மத்திற்கு நிகரான நடை கொண்டவரும், புருஷவியாகரருமான {மனிதர்களில் புலியுமான} ராமரைப் பெற்ற கௌசல்யை ஆவாள்.(20,21) அவளது {கௌசல்யையின்} இடது புஜத்தைப் பற்றிக் கொண்டு, சோகத்தில் மூழ்கிய மனத்துடன், வனாந்தரத்தில் புஷ்பங்கள் உதிர்ந்த கர்ணிகார ஷாகாவை {கொன்றை மரக் கிளையைப்} போல நிற்பவள் எவளோ,{22} அந்த தேவியின் {சுமித்ரையின்} இரு மகன்களே, சத்தியபராக்கிரமர்களும், தேவ வர்ணம் {தெய்வீக நிறம்} கொண்டவர்களும், வீரக்குமாரர்களுமான லக்ஷ்மணசத்ருக்னர்கள்.(22,23)

எவளின் காரணமாக அந்த நரவியாகரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் இங்கிருந்து ஜீவநாசம் {வாழ முடியாத நிலையை} அடைந்தனரோ, {எவளால்} தசரத ராஜா புத்திரனை இழந்து ஸ்வர்க்கத்தை அடைந்தாரோ,{24} அப்படிப்பட்ட கோபமுடையவளும், விவேகமற்றவளும், அழகியாகத் தன்னைக் கருதும் செருக்குடையவளும், ஐச்வர்யத்தில் ஆசை கொண்டவளுமான இந்தக் கைகேயி, ஆரிய ரூபினியாக {நல்லவள் போலப்} புலப்படும் அநாரியையாவாள் {கொடியவளாவாள்}.{25} பாபத்தையே திடமாகக் கைப்பற்றுபவளும், என் மகத்தான விசனத்தின் மூலமென {எனக்கு ஏற்பட்டிருக்கும் பெருந்துன்பத்தின் வேரென} நான் காண்பவளுமான இவளே என் மாதா என்பதை அறிவீராக" {என்றான் பரதன்}.(24-26)

கண்ணீரால் திணறும் குரலுடன் இவ்வாறு பேசிவிட்டுக் கண்கள் சிவந்த அந்த நரசார்தூலன் {மனிதர்களில் புலியான பரதன்}, கோபத்துடன் சீறும் நாகத்தை {பாம்பைப்} போலப் பெருமூச்சுவிட்டான்.(27) பரதன் இவ்வாறு சொன்னதும், மஹாபுத்திமானான பரத்வாஜ மஹரிஷி, அர்த்தம் பொதிந்த இந்தச் சொற்களில் பதிலளித்தார்:(28) "பரதா, தோஷத்தால் கைகேயியை நீ புரிந்துகொள்வது தகாது {கைகேயியைத் தவறாக நீ புரிந்து கொள்ளக்கூடாது}. இராமனை நாடு கடத்தியது சுகத்தையே விளைவிக்கப் போகிறது.(29) இராமனை நாடு கடத்தியதால் இங்கே தேவர்களுக்கும், தானவர்களுக்கும், ஆத்மபக்தி கொண்ட ரிஷிகளுக்கும் ஹிதமே {நன்மையே} விளையப் போகிறது" {என்றார் பரத்வாஜர்}.(30)

இதனால் திருப்தியடைந்த பரதன், அவரை வணங்கி, பிரதக்ஷிணஞ் செய்து, விடைபெற்றுக் கொண்டு, தன் சைனியத்திடம், "புறப்பட ஆயத்தமாவீராக" என்று ஆணையிட்டான்.(31) அப்போது பலவித ஜனங்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட திவ்யமான ரதங்களில் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு, அவற்றில் ஏறி பிரயாணித்தனர்.(32) பொன்னாலான கச்சைகளுடனும், பதாகைகளுடனுங் கூடிய பெண்யானைகளும், ஆண் யானைகளும், கோடைகால முடிவில் எழும் {கார்கால} மேகங்களைப் போன்ற மணிகோஷத்துடன் அணிவகுத்துச் சென்றன.(33) பெரியவை, சிறியவை என விதவிதமான மதிப்புமிக்க யானங்களும் சென்றன. காலாட்கள் கால்நடையாகவே சென்றனர்.(34)

அப்போது, கௌசல்யையும், ஸ்திரீ பிரமுகர்கள் பிறரும், இராமனை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.(35) ஸ்ரீமான் பரதன் உதிக்கும் சந்திரனுக்கும், அர்க்கனுக்கும் {சூரியனுக்கும்} ஒப்பாகப் பிரகாசிப்பதும், ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்ததுமான சுபமான சிவிகை ஒன்றில் ஏறிப் பரிவாரங்களுடன் புறப்பட்டான்.(36) கஜவாஜிரதகுலங்களால் {யானை, குதிரை, தேர்க்கூட்டங்களால்} நிறைந்த அந்த பெரும்படையானது, ஆகாயத்தில் எழும் மஹாமேகத்தைப் போல தென்திசையை மறைத்தபடியே கங்கையின் மறுகரையில் உள்ள கிரிகளையும், நதிகளையும், மிருக பக்ஷிகள் வசிக்கும் வனங்களையும் கடந்து சென்றது.(37,38) மகிழ்ச்சிமிக்க யானைகள், குதிரைகள், படைவீரர்கள் ஆகியவற்றுடன் கூடிய பரதனின் சைனியமானது மிருக பக்ஷி கூட்டங்களை பயமுறுத்தியபடியே மஹாவனத்தில் பிரவேசித்துப் பிரகாசித்தது.(39)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 092ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை