Assurance of Rakshasas | Yuddha-Kanda-Sarga-008 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தன், துர்முகன், வஜ்ரதம்ஷ்டிரன், நிகும்பன், வஜ்ரஹனு ஆகியோர் ராமனையும், பிறரையும் கொல்வதாக ராவணனிடம் உறுதியளித்தது...
பிறகு, அப்போது, சூரனும், சேனாபதியும், நீலமேகம் போல் தெரிந்தவனும், பிரஹஸ்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், கூப்பிய கைகளுடன் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "சர்வ தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், பதகர்கள், உரகர்கள் {பறவைகள், பாம்புகள்} ஆகியோரும் போரில் உம்மைத் தாக்கவல்லவர்களல்லர். வானரர்களை {குரங்குகளைக்} குறித்து என்ன சொல்வது?(2) அனைவரும் கவனக்குறைவாக விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} இருந்தபோது, ஹனூமதனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். நான் ஜீவித்திருக்கையில் அந்த வனகோசரன் ஜீவனுடன் {திரும்பிச்} செல்லமாட்டான்.(3) சாகரம் வரை பரந்ததும், சைலங்கள், வனங்கள், கானனங்களுடன் {சோலைகளுடன்} கூடியதுமான சர்வ பூமியையும் வானரரற்றதாகச் செய்வேன். நீர் எனக்கு ஆணையிடுவீராக.(4) இரஜனீசரரே {இரவுலாவியான ராவணரே}, வானரங்களிடம் இருந்து {லங்கையை} ரக்ஷிக்கும் ஏற்பாட்டைச் செய்கிறேன். நீர் செய்த அபராதத்தால்[1] உண்டான துக்கம் உம்மைக் கொஞ்சமும் அண்டாது" {என்றான் பிரஹஸ்தன்}.(5)
[1] வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல்பஞ்சு அன மெல் அடி மயிலைப் பற்றுதல்அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அதுதஞ்சு என உணர்ந்திநிலை உணரும் தன்மையோய் (6086)கரன் முதல் வீரரைக் கொன்ற கள்வரைவரி குழல் உங்கை மூக்கு அரிந்த வீரரைபரிபவம் செய்ஞ்ஞரை படுக்கலாத நீஅரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் (6087)- கம்பராமாயணம் 6086, 6087ம் பாடல்கள், யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம்பொருள்: "மானிடர்களை {மனிதர்களான ராமலக்ஷ்மணர்களை} வஞ்சித்து, ஒளிரும் நெற்றியையும், பஞ்சு போல் மெல்லிய பாதங்களையும் உடைய மயில் போன்றவளைக் கவர்வது {அந்த மானிடர்களுக்கு} அஞ்சியவர்கள் செய்யும் செயல் என்று அறிவித்தேன். உணரும் தன்மையைக் கொண்டவனான நீ, அஃது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை உணரவில்லை.(6086) கரன் முதலான வீரர்களைக் கொன்ற {தவ வேடத்திற்கு சற்றும் பொருந்தாத செயல் செய்த} கள்வரை, {கணவனை இழந்தவளாதலால்} விரிந்த கூந்தலைக் கொண்ட உன் தங்கையின் மூக்கை அரிந்த வீரரை, உன்னை அவமதித்தவர்களை இதுவரையும் கொன்றொழிக்காத நீ, அரசியல் அழிந்து போனதென்று அயர்ச்சி அடைகிறாய் போலும்"(6087) {என்றான் சேனைக்காவலன் பிரஹஸ்தன்}.
துர்முகன் என்ற பெயருடைய ராக்ஷசன், கடுங்கோபத்துடன் அவனிடம் {பின்வருமாறு} கூறினான், "நம் அனைவருக்கும் நேர்ந்த இந்தக் குற்றத்தைப் பொறுத்தல் தகாது.(6) நகரத்திற்கும், அந்தப்புரத்திற்கும் நேர்ந்த இந்த அவமதிப்பும், ஸ்ரீமான் ராக்ஷேந்திரருக்கு வானரேந்திரன் {ராவணருக்கு சுக்ரீவன்} இழைத்த குற்றமும் அளப்பரியனவாகும்.(7) இந்த முஹூர்த்தமே, சாகரத்திலோ, பயங்கர ரசாதலத்திலோ, அம்பரத்திலோ பிரவேசித்திருக்கும் வானரர்களை ஏகனாகவே {ஒருவனாகவே} கொன்றுவிட்டுத் திரும்புவேன்" {என்றான் துர்முகன்}.(8)
பிறகு, மஹாபலவானான வஜ்ரதம்ஷ்டிரன், கடுங்கோபத்துடன் மாமிசமும், சோணிதமும் {ரத்தமும்} படிந்திருக்கும் கோரமான பரிகத்தை எடுத்துக் கொண்டு {பின்வருமாறு} பேசினான்:(9) "வெல்வதற்கரியவனான ராமன், லக்ஷ்மணனுடனும், சுக்ரீவனுடனும் இருக்கும்போது, கிருபைக்கும், பரிதாபத்திற்குமுரியவனான ஹனுமதனோடு நமக்கென்ன காரியம்?(10) இப்போது நான் ஏகனாகவே சென்று, சுக்ரீவனுடனும், லக்ஷ்மணனுடனும் கூடிய ராமனைப் பரிகத்தால் கொன்று, ஹரிவாஹினியை கலங்கடித்துவிட்டுத் திரும்பி வருவேன்.(11) இராஜரே, மேலும் நீர் விரும்பினால், என்னுடைய இந்த வாக்கியத்தையும் கேட்பீராக. நல்லுபாய குசலனே {நல்ல உபாயங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவனே}, சோம்பலின்றி சத்ருக்களை வெல்வான்.(12)
இராக்ஷசாதிபரே, ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களில் நிச்சயிக்கப்பட்டுள்ள காமரூபதரர்களும் {விரும்பிய வடிவைத் தரிக்கவல்லவர்களும்}, சூரர்களும், அச்சுறுத்தக்கூடியவர்களும், காண்பதற்குப் பயங்கரர்களும்.{13} மானுஷ உடல்களைத் தரித்துக் கொண்டு, காகுத்ஸ்தனை அடைந்து, பதற்றமற்றவர்களாக அந்த ரகுசத்தமனிடம் {ரகுக்களில் வலிமைமிக்கவனான ராமனிடம் பின்வருமாறு} தெரிவிக்கட்டும்:(13,14) "உடன்பிறந்தவர்களில் உமக்கு இளையவரான பரதரால் அனுப்பப்பட்டிருக்கிறோம். அவர் சேனையைத் திரட்டிக் கொண்டு சீக்கிரமே {இங்கே} வரப்போகிறார்" {என்று ராமனிடம் அவர்கள் சொல்லட்டும்}.(15) பிறகு, கையில் விற்களுடனும், பாணங்களுடனும், கத்திகளுடனும், சூலங்கள், சக்திகள், கதைகள் ஆகியவற்றையும் விரைவாகத் தரித்துக் கொண்டு, இங்கிருந்து நாம் அங்கே துரிதமாகச் செல்வோம்.(16) ஆகாசத்தில் கணங்களாக {கூட்டங்கூட்டமாக} நின்று கொண்டு, அஸ்திர சஸ்திரங்களைப் பெருமளவில் பொழிந்து, அந்த ஹரிவாஹினியைக் கொன்று, யமக்ஷயத்திற்கு {யமனின் வசிப்பிடத்திற்கு} அனுப்பிவைப்போம்.(17) இவ்வாறே வளையை அணுகும் ராமலக்ஷ்மணர்கள் இருவரும், மீளமுடியாத கவலையில் அவசியம் தங்கள் ஜீவிதத்தை விட்டுவிடுவார்கள்" {என்றான் வஜ்ரதம்ஷ்டிரன்}.(18)
அதன்பிறகு, கௌம்பகர்ணியும் {கும்பகர்ணனின் மகனும்}, வீரியவானும், நிகும்பன் என்ற பெயரைக் கொண்டவனுமான வீரன், பரமகுரோதமடைந்து, உலகத்தாரை ராவணஞ்செய்ய {கதற} வைத்த ராவணனிடம் {பின்வருமாறு} கூறினான்:(19) "நீங்கள் அனைவரும் மஹாராஜருடன் இருப்பீராக. நான் ஏகனாகவே லக்ஷ்மணனுடன் கூடிய ராகவனையும் {ராமனையும்}, ஹனூமந்தனுடன் கூடிய சுக்ரீவனையும், சர்வ வானரர்களையும் கொல்வேன்" {என்றான் நிகும்பன்}.(20,21அ)
பிறகு, பர்வதத்திற்கு ஒப்பானவனும், வஜ்ரஹனு என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், குரோதமடைந்து, தன் நாவால் கடைவாயை நக்கியபடியே, {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(21ஆ,22அ) நீங்கள் மனக்கவலையில் இருந்து விடுபட்டு, கட்டற்றவர்களாகக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பீராக.{22ஆ} நான் ஏகனாகவே சர்வ ஹரியூதபத்தையும் {குரங்குக்கூட்டத்தையும்} பக்ஷிக்கப்போகிறேன். வருத்தமேதும் இல்லாமல் வாருணி மதுவைப் பருகி, மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருப்பீராக.(22ஆ,23) இப்போது நான் ஏகனாகவே, லக்ஷ்மணன், சுக்ரீவன், அங்கதன், ஹனூமந்தனுடன் கூடிய ராமனையும், படையையும் வதைக்கப்போகிறேன்" {என்றான் வஜ்ரஹனு}.(24)
யுத்த காண்டம் சர்க்கம் – 008ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |