Saturday 8 June 2024

ஹனுமானின் கோரிக்கை | சுந்தர காண்டம் சர்க்கம் - 59 (37)

Appeal of Hanuman | Sundara-Kanda-Sarga-59 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையில் சீதையின் பரிதாப நிலையைக் குறித்துச் சொன்ன ஹனுமான்; சக வானரர்களின் வீரப் பிரதாபங்களை நினைவுகூர்ந்து அவர்களைத் தூண்டியது...

Hanuman inciting fellow vanaras

மாருதாத்மஜனான ஹனுமான், இவை யாவற்றையும் {ஜாம்பவானிடம்} சொல்லிவிட்டு, மேலும் {பிறரிடம்} பின்வரும் வசனத்தைச் சொல்லத் தொடங்கினான்:(1) "சீதையுடைய சீலத்தினால் {ஒழுக்கத்தினால்}, ராகவரின் உத்யோகமும், சுக்ரீவரின் பற்றார்வமும் பலனை அடைந்தன. என் மனம் சாய்கிறது {என் மனம் பக்தியுடன் சீதையிடம் செல்கிறது}.(2) இராக்ஷசாதிபனான இந்த ராவணன், அனைத்துவகையிலும் மேன்மைமிக்கவன்; தன் தபத்தால் உலகங்களை எரித்துவிடவல்லவன்; குரோதமடைந்தாலும் {தன் பகைவரை} எரித்துவிடுவான்.(3) அவளை {சீதையை} ஸ்பரிசித்த அவனது காத்ரம் {ராவணனின் உடல்}, அவனது தபஸ்ஸாலேயே நாசமடையவில்லை. ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, குரோதத்தால் தூண்டப்பட்டால் எதைச் செய்வாளோ, அதைக் கையால் முழுமையாக ஸ்பரிசிக்கப்பட்ட அக்னி சிகையாலும் செய்ய முடியாது.(4,5அ) இந்தக் காரியம், இந்த கதியிலேயே உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. ஜாம்பவான் முதலான சர்வ மஹா ஹரிக்களிடமும் {பெருங்குரங்கினர் அனைவரிடமும்} அனுமதி பெற்றுக் கொண்டு, வைதேஹியுடன் சேர்ந்து, அந்தப் பார்த்திவாத்மஜர்கள் {ராஜகுமாரர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் காண்பதே நியாயமாகும்[1].(5ஆ,6)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "உங்களெல்லோர்க்குஞ் சொன்ன இந்தக் காரியத்தின் ஸ்திதி இப்படிப்பட்டதாகையால் ஜாம்பவான் முதலிய வானரோத்தமர்களையும் உங்களையும் ஒப்பச் செய்து ப்ருத்யனுடைய (வேலைக்காரனுடைய) ஜயம் ஸ்வாமிஜயமேயாகையால் உங்களுடைய அனுமதியின்மேல் ஸீதாராமர்களின் ஸ்ரீபாதங்களை அவலம்பித்து அவ்விடஞ்சென்று ஸீதாதேவியை எடுத்துக் கொண்டு வந்து அவளோடு கூடவே ராஜபுத்ரர்களான ராமலக்ஷ்மணரகளைப் பார்ப்பது யுக்தமென்று என்னபிப்ராயம்" என்றிருக்கிறது.

இராக்ஷசகணங்களுடன் கூடிய அந்த லங்காபுரியையும், மஹாபலம் பொருந்திய ராவணனையும் உடனே அழிக்க, நான் ஒருவனே போதுமானவன்.(7) பலவான்களும், கிருதாத்மர்களும் {தன்னளவில் கட்டுப்பாடாகச் செயல்படக்கூடியவர்களும்}, அஸ்திரங்களின் பயன்பாட்டில் திறம்பெற்றவர்களும், வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருப்பவர்களும், பிலவங்கமர்களில் {தாவிச் செல்பவர்களில்} சூரர்களுமான உங்கள் சஹிதனாக இருக்கும்போது என்ன சொல்வது?(8) யுத்தத்தில் நானே, சைனியத்துடனும், முன்னோடிகளுடனும், புத்திரர்களுடனும், சஹோதரர்களுடனும் கூடிய ராவணனைக் கொல்வேன்.(9) போரில் பிராஹ்மம், ஐந்த்ரம், ரௌத்ரம், வாயவ்யம், அதே போல வாருணம் என மேலும் சக்ரஜித்தினால் {இந்திரஜித்தினால்} ஏவப்படக்கூடியவையும், புலப்படுவதற்கு அரியவையுமான அந்தந்த அஸ்திரங்களையும் தூளாக்கிவிட்டு, ராக்ஷசர்களை நான் கொல்வேன்.(10,11அ) உங்களால் அனுமதிக்கப்படுகையில், என் விக்கிரமம் அவர்களை அடக்கும். ஒப்பற்றதும், இடையறாமல் என்னால் ஏவப்படுவதுமான பாறைமழையானது, தேவர்களையே கொன்றுவிடும் எனும்போது, அந்த நிசாசரர்களை {இரவுலாவிகளான ராக்ஷசர்களைக்} குறித்து என்ன சொல்வது?(11ஆ,12)

சாகரம் அதன் கரையைக் கடக்கலாம், மந்தரம் {மந்தர மலை} நகரலாம், சமரில் அரிவாஹினியால் ஜாம்பவந்தரை {பகைவரின் படையால் ஜாம்பவானை} அசைக்கவும் முடியாது.(13) சர்வ ராக்ஷச சங்கத்தையும், அவர்களின் பூர்வகர்களையும் அழிப்பதற்கு வீரக்கபியான வாலிசுதன் {குரங்குகளில் வீரனும், வாலியின் மகனுமான அங்கதன்} ஒருவனே போதுமானவன்.(14) மஹாத்மாக்களான நீலன், பனஸன் ஆகியோரின் தொடை வேகத்தால் மந்தரமே {மந்தரமலையே} தகர்ந்துவிழும் எனும்போது, யுத்தத்தில் ராக்ஷசர்களைக் குறித்து என்ன சொல்வது?(15) 

மைந்தனையோ, துவிவிதனையோ எதிர்த்துப் போரிடவல்லவன் என தேவ, அசுர, யக்ஷர்களிலோ, கந்தர்வ, உரக, பக்ஷிகளிலோ ஒருவனைச் சொல்லுங்கள்.(16) அசுவினி புத்திரர்களான அந்த மஹாபாக்கியவான்கள் {மைந்தன், துவிவிதன் ஆகியோர்} இருவரும் பிலவகசத்தமர்களாவர் {தாவிச் செல்வோரில் முதன்மையானவர்கள் ஆவர்}. போர்க்களத்தின் முன்னணியில் இவ்விருவரையும் எதிர்த்துப் போரிடவல்லவனை நான் காணவில்லை.(17) இவர்கள், பிதாமஹன் {பிரம்மன்} தந்த வரத்தின் பெருமையால் பரம செருக்குடையவர்கள்; சர்வ வானரர்களிலும் முதன்மையானவர்கள்; அம்ருதத்தைப் பருகியவர்கள்.(18) அசுவினிகளின் மான அர்த்தத்திற்காக {கௌரவத்திற்காக}, சர்வலோக பிதாமஹன் {பிரம்மன்}, எவராலும் கொல்லப்பட முடியாத ஒப்பற்ற நிலையைப் பூர்வத்தில் இவர்களுக்கு {வரமாக} தத்தம் செய்தான்.(19) வீரப் பிலவங்கமர்களான இவ்விருவரும், வரத்தின் பெருமையால் அடைந்த மதத்துடன், ஸுரர்களின் மஹத்தான சம்முவை {பெரும்படையை} வென்று, அம்ருதத்தைப் பருகினர்.(20) சர்வ வானரர்கள் ஒருபுறம் இருக்கட்டும். வாஜி, ரத, குஞ்சரங்களுடன் {குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன்} கூடிய லங்கையை இவ்விருவரே {இந்த மைந்தனும், துவிவிதனும் மட்டுமே} நாசம் செய்துவிட வல்லவர்கள் ஆவர்.(21)

நான் ஒருவனாகவே லங்கையை அழித்து, மீண்டும் எரித்து பஸ்மமாக்கினேன். இராஜமார்க்கங்கள் அனைத்திலும் என் பெயரை நான் {பின்வருமாறு} கேட்கச் செய்தேன்:(22) "பலமிக்க ராமருக்கும், மஹாபலவானான லக்ஷ்மணருக்கும் ஜயம் உண்டாகட்டும். இராகவரால் பரிபாலிக்கப்படும் ராஜா சுக்ரீவருக்கும் ஜயம் உண்டாகட்டும்.{23} கோசலராஜரின் தாசனும் {கோசல அரசர் ராமரின் அடியவனும்}, பவனசம்பவனுமான {வாயுதேவனின் மகனுமான} நான், ஹனுமான் ஆவேன்" என்று என் நாமத்தை எங்கும் அறியச் செய்தேன்.(23,24)

துராத்மாவான ராவணனுக்குரிய அசோகவனிகையின் மத்தியில், சிம்சுபா விருக்ஷத்தின் அடியில், கருணைக்குரிய நிலையில் சாத்வி {கற்புடையவளான சீதை} இருக்கிறாள்.{25} இராக்ஷசிகளால் சூழப்பட்டு, சோகசந்தாபத்தால் பீடிக்கப்பட்டு, மேகலேகைகளால் சூழப்பட்ட சந்திரலேகையைப் போன்று ஒளியற்றவளாக{26} இருக்கும் வைதேஹி, பலத்தில் செருக்குற்றிருக்கும் ராவணனை சிந்தனையிலும் கொள்ளாதிருக்கிறாள்.(25-27அ) பதிவிரதையும், அழகிய இடையைக் கொண்டவளுமான ஜானகி,  சிறைவைக்கப்பட்டிருக்கிறாள்.{27ஆ} சுபமானவளான சீதை, முழு ஆத்மாவுடன் ராமரிடம் அர்ப்பணிப்பு கொண்டவளாக, புரந்தரனிடம் பௌலோமியைப் போல {பகை நகரங்களை அழிப்பவனான இந்திரனிடம் புலோமனின் மகளான இந்திராணியைப் போல}, ராமரிடம் சிதறாத சித்தத்துடன் இருக்கிறாள்[2].(27ஆ,28) 

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "நஹுஷன் எவ்வளவு நிர்ப்பந்திக்கிலும் சசீதேவி அவனிடத்தில் மனஞ்செல்லப்பெறாமல் இந்த்ரனிடத்திலேயே பற்றியிருந்தாற்போல், ராவணன் எவ்வளவு நிர்ப்பந்திக்கிலும் ஸீதை அவனிடத்தில் சிறிதும் மனம் செலுத்தாமல் ராமனிடத்திலேயே மனப்பற்றுடையவளாயிருக்கின்றனள்" என்றிருக்கிறது.

சீதை, புழுதி படிந்த அந்த ஒற்றை ஆடையையே உடுத்திக் கொண்டு, சோகசந்தாபத்துடனும், தீனமான அங்கத்துடனும், பர்த்தாவின் ஹிதத்தில் {கணவர் ராமரின் நலனில்} அர்ப்பணிப்பு உள்ளவளாக இருக்கிறாள்.(29) இராக்ஷசிகள் மத்தியில் என்னால் பார்க்கப்பட்டவளும், பிரமதா வனத்தில் விரூப ராக்ஷசிகளால் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டவளுமான அவள் {சீதை},{30} ஒற்றைப் பின்னல் தரித்து, தீனமாக, பர்த்தாவையே எப்போதும் சிந்தித்துக் கொண்டு, பனிக்காலம் வந்ததும் வர்ணமிழக்கும் பத்மினியை {தாமரையோடையைப்} போன்றவளாக தரையில் சயனித்து, ராவணனின் நோக்கத்தை வெறுத்து, மரணம் அடைய நிச்சயம் செய்து கொண்டாள்.(30,31) 

எப்படியோ அந்த மான்விழியாளிடம் விசுவாசத்தை {நம்பிக்கையை} விதைத்து, சர்வ அர்த்தத்தைப் பேசி விளக்கியதும், ராமசுக்ரீவரின் நட்பைக் கேட்டுப் பிரீதியடைந்தாள்.(32,33) மஹாத்மாவான அவள் {சீதை}, சர்வ ஆசாரங்களுடன் கூடிய நியதத்துடன் {கட்டுப்பாட்டுடன்} இருப்பதாலும், பர்த்தாவிடம் உத்தம பக்தி கொண்டவளாக இருப்பதாலும், குற்றமிழைத்திருக்கும் அந்த தசக்ரீவனைக் கொல்லாதிருக்கிறாள்.(34) அவனை {ராவணனைக்} கொல்வதற்கு ராமர் நிமித்தம் மாத்ரமாகவே {கருவியாக மட்டுமே} இருப்பார்[3]. இயல்பாகவே மென்மையான அங்கங்களைக் கொண்ட அவள் {சீதை}, அவரை விட்டுப் பிரிந்ததால் பெரிதும் மெலிந்து, பிரதமையன்று படிப்பவனின் வித்யையைப் போல மிகவும் இளைத்திருக்கிறாள்[4].(35,36அ) 

[3] விவேக் தேவ்ராய் {பிபேக் திப்ராய்} பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, சீதையே உண்மையான காரணம் என்பதாகும்" என்றிருக்கிறது.

[4] தர்மாலயப் பதிப்பில், "அவள் ஸ்வாபாவமாகவே மெலிந்த சரீரமுடையவள். அவரைவிட்டுப் பிரிந்ததால் பிரதமையில் படிக்கிறவனுடைய வித்தை எப்படியோ, அப்படி தேய்வை அடைந்தவளாய் இன்னும் இளைத்திருக்கிறாள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அந்த ஸீதை இயற்கையாகவே மெல்லிய மேனியுடையவள்; இப்பொழுது அந்த ராமனைப் பிரிந்திருக்கின்றமையால் மிகுதியும் இளைத்து ப்ரதமையினன்று வாசிக்குந்தன்மையனுடைய வித்யைபோல் மிகுதியும் இளைத்திருக்கின்றனள்" என்றிருக்கிறது. அதாவது, 'அமாவாசை, அல்லது பௌர்ணமிக்கு அடுத்த நாள் வரும் பிரதமை திதியில் படிப்பவனின் கல்வி எப்படி தேய்வுறுமோ, அப்படி சீதை மெலிந்திருக்கிறாள்' என்பது பொருள்.

இவ்வாறே மஹாபாக்கியவதியான சீதை, சோகத்தில் மூழ்கியிருக்கிறாள். இனி இதற்குப் பிரதியாக என்ன செய்யவேண்டுமோ, அதை முழுமையாகச் செய்வீராக" {என்றான் ஹனுமான்}.(36ஆ,37)

சுந்தர காண்டம் சர்க்கம் – 59ல் உள்ள சுலோகங்கள்: 37


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை