Counsel of Angadha | Kishkindha-Kanda-Sarga-64 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சமுத்திரத்தைக் கடப்பதற்கான உத்திகளைக் குறித்து சக வானரர்களுடன் விவாதித்த அங்கதன்...
கிருத்ரராஜனால் {கழுகரசனான சம்பாதியால் செய்தி} அறிவிக்கப்பட்டவர்களும், சிம்ஹவிக்ரமர்களுமான பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள் அனைவரும் ஒன்று} கூடி பிரீதியுடன் குதித்து ஆரவாரம் செய்தனர்.(1) சம்பாதியின் வசனத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ஹரயர்கள் {குரங்குகள்}, சீதையைத் தரிசிக்கும் ஆவலில் ராவணனின் வசிப்பிடத்தை அடைய சாகரத்திற்கு வந்து சேர்ந்தனர்.(2) அந்த தேசத்தை அடைந்த பீமவிக்கிரமர்கள் {பயங்கர வீரமிக்க வானரர்கள்}, மஹத்தான உலகம் முழுவதின் பிரதிபிம்பம் போன்ற தோற்றத்தை {தோன்றும் அந்த சாகரத்தை} அங்கே கண்டனர்.(3) அந்த வானரோத்தமர்கள் அனைவரும், தக்ஷிணசமுத்திரத்தின் உத்தர திசையை {தென்கடலின் வடகரையை} அடைந்ததும், ஒன்றுகூடி முகாமிட்டனர்.(4அ,ஆ)
வடிவம் குலைந்த மஹத்தான உயிரினங்கள் பலவும், பேருடல்களுடனும், அகன்று விரிந்த வாய்களுடனும், அலைகளுக்கு ஒப்பாக ஆர்ப்பரித்தபடியே ஜலத்தில் விளையாடிக் கொண்டிருந்தன[1].{4இ,ஈ} சில இடங்களில் நன்கு தூங்குவதைப் போலவும், சில இடங்களில் விளையாடுவதைப் போலவும், சில இடங்களில் பர்வதங்கள் அளவுக்கு ஜலத்திரள்களைப் பரப்பும்{5} பாதாளதலவாசிகளான தானவேந்திரர்களால் கலக்கப்படுவதைப் போலவும், அது {தென்பட்ட கடல்} மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதைக் கண்டு கபிகுஞ்சரர்கள் {குரங்குகளில் யானைகள் } வருத்தமடைந்தனர்.(5,6)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்த சுலோகம் கோரக்பூர் பதிப்பைத் தவிர மற்ற பதிப்புகளில் இடம்பெற்றிருக்கிறது. அடுத்தடுத்த சுலோகங்களைப் புரிந்து கொள்வதற்காகவே இந்த சுலோகம் இங்கே கொடுக்கப்படுகிறது” என்றிருக்கிறது.
வானரர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, ஆகாசத்தைப் போல கடப்பதற்கரிய சாகரத்தைக் கண்டு, “காரியம் என்னாகும்?” என்று சொல்லி விசனமடைந்தனர்.(7) சாகரத்தைக் கண்டு விசனமடையும் வாஹினியை {படையைக்} கண்ட ஹரிசத்தமன் {குரங்குகளில் உயர்ந்தவனான அங்கதன்}, பயத்தால் பீடிக்கப்பட்ட ஹரிக்களை {குரங்குகளைப் பின்வருமாறு} ஆசுவாசப்படுத்தத் தொடங்கினான்:(8) “மனவருத்தமடைவது, காரியத்திற்கு ஆகாது. விசனம் தோஷமாகும். குரோதங்கொண்ட உரகம் பாலனை {கோபம் கொண்ட பாம்பு குழந்தையைக் கொல்வதைப்} போல, இந்த விசனம் புருஷத்தை {ஆண்மையை} அழித்துவிடும்.(9) விக்கிரமம் வேண்டியபோது, விசனப்படும் {மனத்தளர்ச்சியடையும்} எவனும், தேஜஸ் இழந்தவனாக புருஷார்த்தத்தையும் {தன் தனிப்பட்ட நோக்கத்தையும்} அடையமாட்டான்” {என்றான் அங்கதன்}.(10)
அந்த ராத்திரி கடந்ததும், அங்கதன், ஹரிக்களில் முதிர்ந்த வானரர்களைச் சந்தித்து, மீண்டும் ஆகவேண்டிய காரியத்தைக் குறித்து ஆலோசித்தான்.(11) வாசவனைச் சூழ்ந்திருக்கும் மருத்தர்களின் வாஹினியை {வாயுப் படையைப்} போல, துவஜினீகள் {படைக்கொடிகளை ஏற்றுபவர்களான வானரர்கள்} அங்கதனைச் சூழ்ந்து நின்றனர்.(12) வாலிதனயனை {வாலியின் மகனான அங்கதனைக்} காட்டிலும், ஹனூமதனைக் காட்டிலும் அந்த வானரசேனையை அடக்கியாளும் சக்தன் வேறு எவன்?[2](13)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “அங்கதன் பட்டத்து இளவரசனாவான். ஹனுமானோ வானரப்படையின் தளபதியாவான். இது படையமைப்பின் ஒழுங்கில், உயர் பதவியில் இருப்பவர்களை முதல் நிகழ்விலேயே பயன்படுத்தக்கூடாது என்ற வழக்கமேயாகும். இங்கேயும் அதே நெறிமுறைதான் பின்பற்றப்படுகிறது. இவ்வாறே {மஹாபாரதத்தில்} துரியோதனனும், பீஷ்மரைப் படைத்தளபதி ஆக்குகிறான்” என்றிருக்கிறது.
பிறகு, அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} ஸ்ரீமான் அங்கதன், அந்த ஹரிவிருத்தர்களுக்கும் {முதிர்ந்த குரங்குகளுக்கும்}, அந்த சைனியத்திற்கும் மரியாதை செலுத்திவிட்டு, அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(14) “இப்போது, இந்த சாகரத்தைத் தாண்டப் போகும் மஹாதேஜஸ்வி யார்? அரிந்தமரான {பகைவரை அழிப்பவரான} சுக்ரீவரை சத்தியசந்தராக்க {வாய்மையைக் கடைப்பிடிப்பவராக்கப்} போகிறவர் யார்?(15) பிலவங்கமர்களே, நூறு யோஜனைகளைத் தாண்டப் போகும் வீரர் யார்? இந்த யூதபர்கள் {குழுத்தலைவர்கள்} அனைவரையும் மஹாபயத்தில் இருந்து விடுவிக்கப் போகிறவர் யார்?(16) நாம் எவருடைய அருளின் மூலம், சுகமாக இங்கிருந்து திரும்பிச் சென்று, தாரங்களையும் {மனைவிமாரையும்}, புத்திரர்களையும், கிருஹங்களையும் {வீடுகளையும்} பார்க்கப் போகிறோம்?(17) எவருடைய அருளால், ராமரையும், மஹாபலம்வாய்ந்த லக்ஷ்மணரையும், மஹாபலம்வாய்ந்த சுக்ரீவரையும் மகிழ்ச்சியுடன் அணுகப் போகிறோம்?(18) நம்மில் எந்த ஹரியும் {குரங்கும்}, சாகரத்தைத் தாண்டும் சமர்த்தராக இருந்தால், அவர் நமக்கு சீக்கிரமே புண்ணியமான அபய தக்ஷிணையை தத்தம் செய்வாராக {பயத்தில் இருந்து விடுவிக்கும் புண்ணியக் கொடையை நமக்கு அளிப்பாராக}” {என்றான் அங்கதன்}.(19)
அங்கதனின் சொற்களைக் கேட்ட எவரும், எதுவும் சொல்லவில்லை. அங்கிருந்த சர்வ ஹரிவாஹினியும் {குரங்களின் படை முழுவதும்} அசைவற்றிருந்தது.(20)
ஹரிசத்தமனான அங்கதன், அந்த ஹரிக்களிடம் மீண்டும் {பின்வருமாறு} பேசினான், “திடவிக்கிரமர்களும், தேச, குல களங்கமின்றி ஜனித்தவர்களும், பலம்வாய்ந்தவர்களில் சிறந்தவர்களுமான உங்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் பூஜிக்கிறேன்.(21) நம்மில் எவருக்கும், தாண்டிச் செல்வதில் எப்போதும் தடையிருந்ததில்லை. பிலவகரிஷபர்களே {தாவிச் செல்பவர்களில் சிறந்தவர்களே}, தாண்டிச் செல்வதில் யாருக்கு, என்ன சக்தி இருக்கிறது என்பதைச் சொல்வீராக” {என்றான் அங்கதன்}.(22)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 64ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |