Friday 24 May 2024

மீண்டும் மஹேந்திர மலை | சுந்தர காண்டம் சர்க்கம் - 57 (51)

Mahendra mountain again | Sundara-Kanda-Sarga-57 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வடகரையை அடைந்து, சீதையைக் கண்டதாக அங்கதனிடமும், ஜாம்பவானிடமும் அறிவித்த ஹனுமான். சீதையைக் குறித்த செய்தியை அறிவதில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தது...

Hanuman alighting on Mahendra Mountain

இரம்மியமானதும், சந்திரன் என்ற குமுதத்தை உடையதும் {ஆம்பலுடையதும்}, சுபமானதும், அர்க்கன் {சூரியன்} என்ற நீர்க்கோழியை உடையதும், புஷ்யம், சிரவணம் {பூசம், திருவோணம்} என்ற கதம்பங்களைக் கொண்டதும்,  மேகங்கள் என்ற செழித்த பாசிகளுடன் கூடியதும்,{1} புனர்வசு என்ற மஹாமீனத்தை {புனர்பூசம் எனும் பெரும் மீனை} உடையதும், லோஹிதாங்கன் {சிவப்பு அங்கங்களைக் கொண்ட செவ்வாய் கிரகம்} என்ற பெரிய முதலையைக் கொண்டதும், ஐராவதம் என்ற பெரும் தீவுடன் கூடியதும், ஸ்வாதி என்ற அன்னம் உலாவப் பெற்றதும்,{2} வாதத்தால் {காற்றால்} உண்டான அலைத்திரள்களைக் கொண்டதும், சந்திரக் கதிர்கள் என்ற குளிர்ந்த நீரைக் கொண்டதும், புஜங்க, யக்ஷ, கந்தர்வர்கள் என்ற கமலங்களையும் {தாமரைகளையும்}, உத்பலங்களையும் {கருநெய்தல்களையும்} உடையதுமான{3} சாகரத்தை மஹாநவம் {பெருங்கடலைப் பெரிய மரக்கலம்} எப்படியோ, அப்படியே ஹனுமான் எல்லையற்ற ககணார்ணவத்தில், மாருத கதியில் {வானம் என்ற பெருங்கடலில், வாயு வேகத்தில்} தாவிச் சென்றான்.(1-4)

ஆகாசத்தை விழுங்கி விடுபவனைப் போலவும், தாராதிபனை {நக்ஷத்திரங்களின் தலைவனான சந்திரனை} உராய்ந்து செல்பவனைப் போலவும், நக்ஷத்திரங்களுடனும், அர்க்க மண்டலத்துடனும் கூடிய ககனத்தை {சூரிய மண்டலத்துடனும் கூடிய வானத்தைக்} கொள்ளை கொள்பவனைப் போலவும்,{5} வானத்தில் மேகஜாலங்களை {மேகக்கூட்டங்களை} இழுத்துச் செல்பவனை போலவும், ஸ்ரீமானும், மஹாகபியும், மாருதாத்மஜனுமான ஹனூமான் வானத்தில் தாவிச் சென்றான்.(5,6) அடர்ந்த மேகங்கள், வெள்ளை, சிவப்பு வர்ணங்களிலும், நீலம், மஞ்சள் நிறங்களிலும், பச்சை கலந்த சிவப்பு {பழுப்பு} வர்ணங்களிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(7) மறைபவனும், பிரகாசிப்பவனுமான சந்திரனைப் போல, மேகக்கூட்டங்களில் மீண்டும் மீண்டும் பிரவேசிப்பதும், வெளியேறுவதுமாக ஹனுமான் தெரிந்தான்.(8) வெள்ளாடை உடுத்தியவனும், பல்வேறு வகையான அடர்த்தியான மேகங்களுக்குள் சென்று வந்தவனுமான அந்த வீரன் {ஹனுமான்}, புலப்படுவதும், புலப்படாததுமான உடலுடன் அம்பரத்தில் சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(9) மேகக்கூட்டங்களை மீண்டும் மீண்டும் பிளந்து வெளிப்பட்டு, மஹத்தான நாதம் செய்த வாயுநந்தனன் {வாயு தேவனுக்கு மகிழ்ச்சி அளிப்பவனான ஹனுமான்}, மேகத்தில் பேரொலியை வெளியிட்டபடியும், தார்க்ஷியனை {கருடனைப்} போல் பறந்து கொண்டும், ககனத்தில் {வானத்தில்} ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(10,11அ)

மஹாதேஜஸ்வியானவன் {ஹனுமான்}, முதன்மையான ராக்ஷசர்களைக் கொன்று, தன் நாமத்தை {பெயரைப்} பிரபலமாக்கி,{11ஆ} {லங்கா} நகரத்தை வருத்தமடையச் செய்து, ராவணனுக்குக் கவலையை உண்டாக்கி, கோரமான {ராக்ஷசப்} படையைத் துன்புறுத்தி, வைதேஹியை வணங்கிவிட்டு,{12} மீண்டும் சாகரத்தின் மத்தியை அடைந்தான்.(11ஆ-13அ) வீரியவானானவன் {ஹனுமான்}, பர்வதேந்திரனான சுநாபனை {நல்ல நாபி கொண்டவனான [ஹிரண்யநாபனான / தொப்புளில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தவனான] மைனாக மலையானவனைத்} தீண்டிவிட்டு, {வில்லின்} நாண்கயிற்றிலிருந்து ஏவப்பட்ட நாராசத்தைப் போல, மஹாவேகத்துடன் வந்தான்.(13ஆ,14அ) அந்த ஹரிபுங்கவன் {குரங்குகளில் முதன்மையான ஹனுமான்}, அடர்ந்த மேகங்களுக்கு ஒப்பான மஹேந்திர மஹாகிரியைக் கண்டு, கொஞ்சம் அதன் அருகில் வந்ததும் நாதம் செய்தான்.(14ஆ,15அ) மேகத்திற்கு ஒப்பான பேரொலியை வெளியிட்ட அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, பத்து திசைகள் மொத்தத்தையும் தன் நாதத்தால் நிறைத்தான்.(15ஆ,16அ) அந்த ஹரிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்}, அந்த தேசத்தை {இடத்தை} அடைந்ததும், அன்புக்குரிய நண்பர்களைக் காணும் ஆவலில் நாதம் செய்தபடியே லாங்கூலத்தை {வாலை} அசைத்தான்.(16ஆ,17அ) சுபர்ணன் செல்லும் பாதையில் {வானத்தில் கருடன் பறக்கும் உயரத்தில்} அவன் நாதம் செய்தபோது, அர்க்க {சூரிய} மண்டலத்துடன் கூடிய ககனமே {வானமே} அந்த கோஷத்தால் பிளந்துவிடுவதைப் போலத் தெரிந்தது.(17ஆ,18அ) 

அங்கே சமுத்திரத்தின் உத்தர தீரத்தில் {பெருங்கடலின் வடகரையில்} இருப்பவர்களும், மஹாபலவான்களும்,{18ஆ} வாயுபுத்திரனை {ஹனுமானைக்} காணும் ஆவலுடன் ஏற்கனவே கூடியிருந்தவர்களுமான சூரர்கள் {வானரர்கள்}, வாதத்தால் {வாயுவால்} தூண்டப்பட்ட மஹத்தான மேகம் கர்ஜிப்பதைப் போல,{19} ஹனூமதனின் தொடை வேகத்தால் உண்டான கோஷத்தை அப்போது கேட்டனர்.(18ஆ-20அ) தீனமான மனத்துடன் கூடிய அந்த சர்வ கானனௌகசர்களும் {வனவாசிகளான வானரர்கள் அனைவரும்}, பர்ஜன்யனின் {மழைமேகத்திற்கு} நாதத்திற்கு ஒப்பான வானரேந்திரனின் {வானரர்களின் தலைவனான ஹனுமானின்} கோஷத்தைக் கேட்டனர்.(20ஆ,21அ) நாதம் செய்தவனின் நாதத்தைக் கேட்டு, எங்குமிருந்த அந்த சர்வ வானரர்களும், தங்கள் நண்பனைக் காணும் ஆவலால் உற்சாகம் அடைந்தனர்.(21ஆ,22அ)

ஹரிசிரேஷ்டனான {குரங்குகளில் [கரடிகளில்] சிறந்தவனான} ஜாம்பவான், பிரீதியுடன் கூடிய மனத்துடன் மகிழ்ச்சியடைந்து, சர்வ ஹரிக்களையும் அழைத்து, இந்த வசனத்தைச் சொன்னான்:(22ஆ,23அ) "இந்த ஹனுமான், அனைத்து வகையிலும் காரியத்தை நிறைவேற்றியிருப்பான். காரியம் நிறைவேறவில்லையெனில் அவனது நாதம் இவ்விதம் இருக்காது. இதில் ஐயமேதுமில்லை" {என்றான் ஜாம்பவான்}.(23ஆ,24அ)

அந்த மஹாத்மாவின் {ஹனுமானின்} கைகள், தொடைகள் ஆகியவற்றின் வேகத்தால் உண்டான நாதத்தைக் கேட்டு, மகிழ்ச்சியடைந்த ஹரயர்கள் {குரங்குகள்}, ஆங்காங்கே குதித்துக் கொண்டிருந்தனர்.(24ஆ,25அ) மகிழ்ச்சியுடன் கூடிய அவர்கள், ஹனூமந்தனைக் காணும் ஆவலில், ஒரு மரத்தின் உச்சியில் இருந்து மற்றொரு மரத்தின் உச்சிக்கும், ஒரு சிகரத்தில் இருந்து மற்றொரு சிகரத்திற்கும் விரைந்தனர்.(25ஆ,26அ) அந்த வானரர்கள், சாகைகளை {கிளைகளைப்} பற்றிக் கொண்டு, மரங்களின் உச்சிகளில் நன்றாக நின்று கொண்டு, ஆடைகளைப் போல அந்த சாகைகளை {கிளைகளைப்} பிரீதியுடன் ஆட்டினர்[[1].(26ஆ,27அ)

[1] மன்மதநாததத்தர் பதிப்பில், "வானரர்கள், ஹனுமான் அமர்வதற்காக, மரங்களின் கிளைகளை ஒடித்துக் கொண்டு வந்தனர்" என்றிருக்கிறது.

Hanuman landing on Mahendra Mountain

பலவானும், மாருதாத்மஜனுமான ஹனுமான், கிரிகளின் குகைகளில் நுழையும் மாருதன் {காற்றானவன்} கர்ஜிப்பது எப்படியோ, அப்படியே முழங்கினான்.(27ஆ,28அ) அடர்ந்த மேகத்தைப் போல அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} விரைவாக இறங்குவதைக் கண்டு அந்த சர்வ வானரர்களும் கைகளைக் கூப்பி நின்றனர்.(28ஆ,29அ) கிரிக்கு ஒப்பானவனும், வேகவானுமான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, மரங்கள் அடர்ந்த மஹேந்திரத்தின் சிகரத்தில் இறங்கினான்.(29ஆ,30அ) மகிழ்ச்சியால் நிறைந்தவனான அவன், சிறகிழந்த தரணீதரத்தை {மலையைப்} போல, ஆகாயத்தில் இருந்து ரம்மியமான பர்வத அருவியின் அருகில் இறங்கினான்.(30ஆ,31அ) அப்போது, அந்த சர்வ வானரபுங்கவர்களும் {வானரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும்},  பிரீதியடைந்த மனத்துடன், மஹாத்மாவான ஹனூமந்தனைச் சூழ்ந்து நின்றனர். சூழ்ந்திருந்த அவர்கள் அனைவரும் பரமபிரீதியை அடைந்தனர்.(31ஆ,32)

சர்வ ஹரயர்களும், மகிழ்ச்சியான வதனங்களுடன் கிழங்குகளையும், பழங்களையும் பரிசாகக் கொடுத்து வரவேற்று, ஆரோக்கியமாகத் திரும்பிவந்த ஹரிசிரேஷ்டனான மாருதாத்மஜனை {குரங்குகளில் சிறந்தவனும், வாயுவின் மைந்தனுமான ஹனுமானை} வணங்கினர்.(33,34அ) அப்போது, மஹாகபியான ஹனுமானும், ஜாம்பவான் முதலிய குருக்களையும் {பெரியோரையும்}, விருத்தர்களையும் {முதியோரையும்}, குமாரன் அங்கதனையும் வணங்கினான்.(34ஆ,35அ) பூஜிக்கத்தகுந்தவனும், அவ்விருவராலும் {ஜாம்பவானாலும், அங்கதனாலும்} பூஜிக்கப்பட்டவனுமான அந்த விக்ராந்தன் {ஹனுமான்}, கபிக்களுக்கு அருள்புரியும் வகையில், "சீதையைக் கண்டேன்" என்று சுருக்கமாகச் சொன்னான்.(35ஆ,36அ) பிறகு, வாலியின் மகனுடைய {அங்கதனின்} கைகளைப் பற்றிக் கொண்டு, மஹேந்திர கிரியின் ரம்மியமான வன தேசத்தில் {வனத்தில் அழகான ஓரிடத்தில்} அமர்ந்தான்[2].(36ஆ,37அ)

[2] வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தைக்
காலுறப் பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம்
ஞால நாயகன்தன் தேவி சொல்லினள் நன்மை என்றான்

- கம்பராமாயணம் 6013ம் பாடல், சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம்

பொருள்: முதலில் வாலியின் மகனை {அங்கதனை} வணங்கிவிட்டு, கரடிகளின் அரசனுடைய {ஜாம்பவானின்} கால்களில் விழுந்து, உரியவர்கள் அனைவரையும் முறைப்படி மதித்து, ஆங்கே ஒரு புறத்தில் அமர்ந்திருந்து, "இங்குள்ளவர்களான உங்கள் அனைவருக்கும் உலக நாயகனின் {ராமனின்} தேவி, நன்மையைச் சொல்லி அனுப்பினாள்" என்றான் {ஹனுமான்}.

அப்போது, மகிழ்ச்சியடைந்த ஹனுமான், அந்த வானரரிஷபர்களிடம் {பின்வருமாறு} கூறினான்:{37ஆ} "அசோக வனிகையில் இருந்த அந்த ஜனகாத்மஜையைக் கண்டேன். நிந்திக்கத்தகாதவளான அவள் கோரமான ராக்ஷசிகளால் காக்கப்படுகிறாள்.{38} ஒற்றைப் பின்னல் தரித்தவளான அந்த பாலை {சிறுமியான சீதை}, ராமரை தரிசிக்கும் ஏக்கத்துடன் இருக்கிறாள். உபவாசத்தால் மெலிந்திருக்கிறாள். சடை பிடித்தவளாகவும், புழுதிபடிந்தவளாகவும், மெலிந்தவளாகவும் இருக்கிறாள்" {என்றான் ஹனுமான்}.(37ஆ-39)

மஹா அர்த்தம் பொதிந்ததும், அம்ருதத்திற்கு ஒப்பானதுமான "கண்டேன்" என்ற மாருதியின் வசனத்தைக் கேட்டு சர்வ வானரர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.(40,41அ) மஹாபலவான்கள் சிலர்,  சிங்க முழக்கம் செய்தனர். வேறு சிலர், ஏற்பொலியைச் செய்தனர், இன்னும் சிலர், இடியாக முழங்கினர். வேறு சிலர், "கில, கில" என்று சத்தமிட்டனர். இன்னும் சிலர், எதிரொலி போல் கர்ஜித்தனர்.(41ஆ,இ) மகிழ்ச்சியுடன் கூடிய சில கபிகுஞ்சரர்கள் {குரங்குகளில் யானைகள்}, அழகாகப் பருத்து, நீண்ட தங்கள் லாங்கூலத்தை {வாலை} உயர்த்தியபடியே, அதை ஆட்டினர் {தரையில் அடித்தனர்}.(42) கிரி சிருங்கத்தில் இருந்து குதித்த வேறு சில வானரர்கள், வாரணத்திற்கு {யானைக்கு} ஒப்பான ஹனூமந்தனை மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டனர்.(43)

Angada and Jambavan enquiring Hanuman of his Lanka visit

அப்போது, ஹனூமந்தனின் வாக்கியத்தைக் கேட்ட அங்கதன், ஹரிவீரர்களுக்கு மத்தியில் {பின்வரும்} உத்தம வசனத்தைக் கூறினான்:(44) "வானரரே, விஸ்தீரணமான சாகரத்தைத் தாண்டி மீண்டு வந்ததால், வலிமையிலும், வீரத்திலும் உமக்குச் சமமானவர் எவருமில்லை.(45) அஹோ, ஸ்வாமியிடம் {என்ன} பக்தி உமக்கு! அஹோ, {என்ன} வீரியம்! அஹோ, {என்ன} துணிச்சல்! அதிஷ்டவசமாக ராமரின் பத்தினியான தேவியை {சீதையை} நீர் கண்டுவிட்டீர். நல்லவேளை, சீதையின் பிரிவால் உண்டான சோகத்தை {இனி} காகுத்ஸ்தர் கைவிடுவார்" {என்றான் அங்கதன்}.(46,47அ)

பெரிதும் மகிழ்ச்சியடைந்த வானரர்கள், அப்போது, பெரிய பாறைகளில், அங்கதனையும், ஹனூமந்தனையும், ஜாம்பவானையும் சூழ்ந்து அமர்ந்தனர்.(47ஆ,48அ) சர்வ வானரோத்தமர்களும், சமுத்திர லங்கனத்தையும் {கடலைத் தாண்டியதையும்}, லங்கையையும், சீதையையும், ராவணனையும் தரிசித்ததைக் குறித்தும் கேட்கும் விருப்பத்துடன், கைகளைக் கூப்பிக் கொண்டு, ஹனுமான் சொல்லப்போகும் சொற்களுக்காகக் காத்து நின்றனர்.(48ஆ,49) திவியில் விபுதர்களால் {சொர்க்கத்தில் தேவர்களால்} உபாசிக்கப்படும் தேவபதியை {இந்திரனைப்} போல, அங்கே ஸ்ரீமான் அங்கதன் ஏராளமான வானரர்களால் சூழப்பட்டிருந்தான்.(50) அப்போது, கீர்த்திமானான ஹனூமதன், அதேபோல, புகழ்மிக்கவனும், தோள்களில் அங்கதத்துடன் கூடியவனுமான அங்கதன் ஆகியோர் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்ததும், உன்னதமானதும், மஹத்தானதுமான மஹீதர {மலை} உச்சியானது, செழிப்புடன் ஜ்வலித்துக் கொண்டிருந்தது.(51)

சுந்தர காண்டம் சர்க்கம் – 57ல் உள்ள சுலோகங்கள்: 51


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை