Nocturnal war | Yuddha-Kanda-Sarga-044 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இரவிலும் தொடர்ந்த போர்; இந்திரஜித்தை வென்ற அங்கதன்; ராமலக்ஷ்மணர்களை சர்ப்பபாசத்தில் கட்டிய இந்திரஜித்...
வானர ராக்ஷசர்களான அவர்கள் இப்படி யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே ரவி அஸ்தமடைந்து {சூரியன் மறைந்து}, பிராணஹாரிணியான {உயிரைப் பறிக்கும்} ராத்திரி தொடங்கியது.(1) பிறகு அன்யோன்யம் கடும் வைரம் கொண்டவர்களும், கோரர்களும், ஜயத்தை இச்சிப்பவர்களுமான வானர ராக்ஷசர்களுக்கிடையில் நிசாயுத்தம் {இரவுப் போர்} தொடங்கியது.(2) அந்தக் காரிருளில், "நீ ராக்ஷசன்" என்று ஹரயர்களும் {குரங்குகளும்}, "நீ ஹரி" என்று ராக்ஷசர்களும் சொல்லிக் கொண்டே அன்யோன்யம் தாக்கிக் கொண்டு போரிட்டனர்.(3) அந்த சைனியத்தில், "தாக்கு", "வெட்டு", "வா" என்றும், "ஏன் ஓடுகிறாய்" என்றும் ஆரவார சப்தம் கேட்டது.(4) அந்த இருளில், காஞ்சனப் போரணிகள் பூண்ட கரிய ராக்ஷசர்கள், ஒளிரும் ஔஷதிகளை {மூலிகைகளைக்} கொண்ட வனங்களுடன் கூடிய சைலேந்திரங்களை {பெரும் மலைகளைப்} போலத் தெரிந்தனர்.(5)
கடப்பதற்கரிய அந்த இருளில் குரோதத்தால் மூர்ச்சித்த ராக்ஷசர்கள், பிலவங்கமர்களை பக்ஷித்தபடியே மஹாவேகமாகத் திரிந்தனர்.(6) பலவான்களான அந்த வானரர்கள், பயங்கரக் கோபத்துடன் குதித்தெழுந்து, காஞ்சனப் பீடங்களுடனும், அக்னிசிகைக்கு ஒப்பான துவஜங்களுடனும் கூடிய ஹயங்களை {குதிரைகளைத்} தங்கள் கூரிய பற்களால் கிழித்தெறிந்து, ராக்ஷச சம்முவை {படையை} அச்சுறுத்தினர்.(7,8அ) கோபத்தால் உணர்விழந்து குஞ்சரங்களையும் {யானைகளையும்}, குஞ்சரங்களில் ஏறியிருந்தவர்களையும், பதாகை, துவஜங்களுடன் கூடிய ரதங்களையும் இழுத்துத் தங்கள் பற்களால் கடித்தனர்.(8ஆ,9அ)
இராமனும், லக்ஷ்மணனும், விஷமிக்க பாம்புகளைப் போன்ற தங்கள் சரங்களைக் கொண்டு புலப்பட்டும், புலப்படாமலும் இருந்த முக்கிய ராக்ஷசர்களைக் கொன்றனர்.(9ஆ,10அ) துரகங்களின் {குதிரைகளின்} குளம்புகளால் தூளாக்கப்பட்டு, ரதநேமிகளால் {தேர்ச்சக்கரங்களால்} கிளப்பப்பட்ட தரணியின் புழுதி உதித்தெழுந்து காதுகளையும், நேத்திரங்களையும் {கண்களையும்} நிறைத்தது.(10ஆ,11அ) கோரமான ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்தும் மிகப் பயங்கரமான போரில் உதிர நீரைக் கொண்ட மஹாகோரமான நதிகள் பெருகி ஓடின.(11ஆ,12அ) அங்கே, பேரிகைகள், மிருதங்கங்கள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலி சங்கு, வேணு {புல்லாங்குழல்} ஆகியவற்றின் ஸ்வனம் கலந்து அற்புதமாக ஒலித்தது.(12ஆ,13அ) அங்கே போர்க்களத்தில் காயமடைந்த ராக்ஷசர்களின் கதறல்களும், வானரர்களின் கூக்குரல்களும் பெரிதும் உரக்க எழுந்தன.(13ஆ,14அ)
அப்போது, சக்திகள், சூலங்கள், பரசுகள் ஆகியவற்றால் கொல்லப்பட்ட வானர முக்கியர்களாலும், பர்வத சிகரங்களால் கொல்லப்பட்ட காமரூபிகளான ராக்ஷசர்களாலும் நிறைந்து,{14ஆ,15அ} சஸ்திரங்களிலான புஷ்ப காணிக்கைகளுடன் கூடிய யுத்தமேதினியானது {போர்க்களமானது}, சோணிதம் {ரத்தம்} பாய்ந்து நனைந்து, புழுதிபடிந்து அடைதற்கரிதானதாக இருந்தது.(14ஆ-16அ) அனைத்து பூதங்களாலும் அடைதற்கரிய காலராத்திரியை {பிரளயகால இரவைப்} போல, அந்த நிசி கோரமானதாகவும், ஹரிராக்ஷசர்களுக்கு {குரங்குகளுக்கும், ராக்ஷசர்களுக்கும்} நாசத்தை விளைவிப்பதாகவும் இருந்தது.(16ஆ,17அ)
அங்கே அப்போது, பரம பயங்கரமான அந்த இருளில் அந்த ராக்ஷசர்கள் மகிழ்ச்சியுடன் சர மழையைப் பொழிந்தபடி ராமனையே தாக்கிக் கொண்டிருந்தனர்.(17ஆ,18அ) குரோதத்தில் கர்ஜித்தபடியே விரைந்தோடி வந்த அவர்களின் சப்தம், பிரளயகாலத்தில் உயிரினங்களுடன் கூடிய ஏழு சமுத்திரங்களுடையது {சப்தம்} போன்று கேட்கப்பட்டது.(18ஆ,19அ) அக்னிசிகைக்கு ஒப்பான, கூர்மையான ஆறு சரங்களால் அவர்களில் ஆறு நிசாசரர்களை {இரவுலாவிகளான ராக்ஷசர்களை} நிமிஷாந்தரமாத்திரத்தில் அவன் {கண்ணிமைக்கும் நேரத்தில் ராமன்} தாக்கினான்.(19ஆ,20அ) வெல்லப்பட முடியாதவர்களான யஜ்ஞசத்ரு, மஹாபார்ஷ்வன், மஹோதரன், மஹாகாயனான {பேருடல் படைத்த} வஜ்ரதம்ஷ்டிரன் ஆகியோரும், சுகசாரணர்கள் இருவரும்{20ஆ,21அ} ராமனின் பாண வெள்ளத்தால் மர்மங்கள் {மார்பு} பிளக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் அனைவரும் யுத்தத்தில் இருந்து ஓடிச்சென்று உயிர் தப்பினார்கள்.(20ஆ-22அ) அந்த மஹாரதன் {ராமன்}, காஞ்சனத்தால் சித்திரமாக அலங்கரிக்கப்பட்டவையும், அக்னி சிகைகளுக்கு ஒப்பானவையுமான சரங்களால் திசைகள் அனைத்தையும் பிரகாசமடையச் செய்தான்.(22ஆ,23அ) இராமனின் முன்பு நின்ற பயங்கர ராக்ஷசர்கள் வேறு எவரும், பாவகனில் பதங்கங்களை {நெருப்பில் விழும் விட்டிற்பூச்சிகளைப்} போல விழுந்து மடிந்தனர்.(23ஆ,24அ)
ஆயிரக்கணக்கில் பொழியப்பட்ட ஸுவர்ணபுங்கங்களுடன் கூடிய கணைகளால் ரஜனி {இரவு}, விட்டிற்பூச்சிகளால் ஒளியூட்டப்பட்ட சரத் காலம் போல அழகாகத் தெரிந்தது.(24ஆ,25அ) கோரமான அந்த நிசி, ராக்ஷசர்களின் ஒலியாலும், ஹரிக்கள் எழுப்பிய உரத்த ஒலியாலும் இன்னும் கோரமாகத் தெரிந்தது.(25ஆ,26அ) எங்கும் எழுந்த அந்த மஹத்தான சப்தத்தால், குகைகள் நிறைந்த திரிகூட அசலமே {மலையே} எதிரொலிப்பது {மறுமொழி கூறுவதைப்} போலத் தெரிந்தது.(26ஆ,27அ) பேருடல் படைத்தவர்களும், கரிய நிறம் கொண்டவர்களும், சுறுசுறுப்பானவர்களுமான கோலாங்கூலர்கள் {கரிய முகமும், நீண்ட வாலும் கொண்ட குரங்குகள்}, தங்கள் கைகளால் ரஜனீசரர்களை {இரவுலாவிகளைப்} பிடித்து விழுங்கினர்.(27ஆ,28அ)
போர்க்களத்தில் சத்ருக்களை அழிக்க வந்த அங்கதன், ராவணியின் {இந்திரஜித்தின்} சாரதியையும், ஹயங்களையும் {குதிரைகளையும்} ஒரே நேரத்தில் கொன்றான்.(28ஆ,29அ) கோரமாகவும், மிகக் கடுமையாகவும் நடைபெற்ற போரில் அங்கதனால் அஷ்வங்களும், சாரதியும் கொல்லப்பட்டபோது, மஹாமாயனான இந்திரஜித், ரதத்தைக் கைவிட்டு அங்கேயே புலப்படாமல் மறைந்தான்.(29ஆ,30) சர்வ தேவர்களும், ரிஷிகளுடன் கூடிய ராமலக்ஷ்மணர்கள் இருவரும், வாலிபுத்ரன் {அங்கதன்} செய்த பூஜைக்குரிய அந்தக் கர்மத்தால் {செயலால்} மகிழ்ச்சியடைந்தனர்.(31) யுத்தத்தில் இந்திரஜித்தின் பிரபாவத்தை சர்வபூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} அறியும். எனவே அவனால் அந்த மஹாத்மா வீழ்த்தப்பட்டதைக் கண்டு நிறைவடைந்தனர்.(32) சத்ரு வீழ்த்தப்பட்டதைக் கண்ட கபிக்களும் {குரங்குகளும்}, சுக்ரீவனும், விபீஷணனும் பெரும் மகிழ்ச்சியடைந்து "சாது, சாது {நன்று, நல்லது}" என்று புகழ்ந்தனர்.(33) பிறகு, பீம கர்மங்களைச் செய்பவனான அந்த வாலி புத்ரனால் போரில் வீழ்த்தப்பட்ட இந்திரஜித் பயங்கரக் குரோதம் அடைந்தான்[1].(34)
[1] தமிழில் தர்மாலய பதிப்பிலும், நரசிம்மாசாரியர் பதிப்பிலும் இங்கே இன்னும் ஐந்து சுலோகங்கள் வருகின்றன. ஆங்கிலத்தில் எந்தப் பதிப்பிலும் இவை இல்லை. தமிழில் கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பிலும் இவை இல்லை. அந்த ஐந்து சுலோகங்களின் பொருளும் தர்மாலயப் பதிப்பில் உள்ளவாறே இங்கே தரப்படுகிறது. "இந்த சமயத்தில் ஸ்ரீராமர் வானரர்களைப் பார்த்து ஒரு சொல்லைப் பின்வருமாறு அருளிச் செய்தார்:{1} "நீங்கள் எல்லோரும் வானரமன்னனோடு சேர்ந்து இருக்கின்றவர்களாய் ஓரிடத்தில் நில்லுங்கள்.{2} பிரம்மதேவரால் வரம் பெற்றிருக்கிற அவன் மூவுலகையும் மிகவும் ஹிம்சிக்கிறான்.{3} உங்களது மனோரதம் கைகூடுமாறு அவன் யமனால் இங்கு வந்து சேர்ந்திருக்கிறான்.{4} இப்பொழுதுதான் எனக்கு எதிர்க்கும் நேரம். நீங்கள் கவலையற்றிருங்கள்"{5}" என்றிருக்கிறது.
பாபியும், போரிடவல்லவனுமான அந்த ராவணி {இந்திரஜித்}, புலப்படாமல் மறைந்த நிலையிலேயே கூரிய பாணங்களை ஏவினான்.(35) குரோதமடைந்த ராக்ஷசன் {இந்திரஜித்}, போரில் கோரமான நாகமயமான {பாம்புமயமான} சரங்களைக் கொண்டு ராமன், லக்ஷ்மணன் ஆகியோரின் உடல்முழுவதும் துளைத்தான்.(36) மறைந்திருந்து போர்புரிந்த நிசாசரன் {இரவுலாவி}, அங்கே யுத்தத்தில் மாயையைப் பயன்படுத்தி ராகவர்கள் இருவரையும் மோஹமடையச் செய்தான். உடன்பிறந்தோரான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் சர்வபூதங்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சரபந்தத்தால் கட்டினான்.(37,38அ) அப்போது வானரர்கள், குரோதமடைந்தவனால் விஷமிக்க பாம்புகளைப் போன்ற சரங்களைக் கொண்டு வீரர்களும், புருஷவியாகரர்களுமான {மனிதர்களில் புலிகளான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் திடீரென கட்டப்பட்டதைக் கண்டனர்.(38ஆ,39அ) பிறகு, துராத்மாவான ராக்ஷசராஜபுத்ரன் {இந்திரஜித்}, பிரகாசரூபத்தில் {வெளிப்படையான வடிவத்துடன்} அவ்விருவரையும் பீடிக்க முடியாதபோது, மாயையைப் பிரயோகித்து {தன் வடிவத்தை மறைத்துக் கொண்டு} ராஜபுத்திரர்கள் இருவரையும் கட்டிவிட்டான்.(39ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 044ல் உள்ள சுலோகங்கள்: 39
Previous | | Sanskrit | | English | | Next |