Vajradamshtra killed | Yuddha-Kanda-Sarga-054 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வஜ்ரதம்ஷ்டிரனுடன் போரிட்டு வாளால் அவனது தலையை வெட்டிக் கொன்ற அங்கதன்...
மஹாபலவானான ராக்ஷசன் வஜ்ரதம்ஷ்ட்ரன், தன் பலத்தின் {படையின்} அழிவாலும், அங்கதனின் வெற்றியாலும் குரோதம் அடைந்தான்.(1) அவன், சக்ரனின் அசனியை {இந்திரனின் இடியைப் போல} ஒலிக்கும் கோரமான தன் தனுவை {பயங்கரமான வில்லை} வளைத்து, வானரர்களின் அனீகத்தை {படையை} சரமாரியால் {கணைமழையால்} சிதறடித்தான்.(2) அப்போது, முக்கியர்களும், சூரர்களுமான அந்த ராக்ஷசர்கள், ரதங்களில் அமர்ந்து, நானாவித ஆயுதங்களை ஏந்தியபடியே ரணத்தில் {போர்க்களத்தில்} யுத்தம் புரிந்தனர்.(3) வானரர்களில் சூரர்களான அந்த சர்வ பிலவக உத்தமர்களும், அப்போது பாறைகளைக் கைகளில் ஏந்தியபடியே அனைத்துப் பக்கங்களிலும் ஒன்று கூடியவர்களாக யுத்தம் புரிந்தனர்.(4)
அப்போது அங்கே அந்த யுத்தத்தில், ராக்ஷசர்கள், ஆயிரக்கணக்கான ஆயுதங்களை கபிமுக்கியர்களின் {முக்கியமான குரங்குகளின்} மீது ஏவினர்.(5) மத்தமாதங்கங்களுக்கு {மதங்கொண்ட யானைகளுக்கு} ஒப்பான சிறந்த வீரர்களான வானரர்களும், ராக்ஷசர்கள் மீது கிரிகளையும், விருக்ஷங்களையும் {மலைகளையும், மரங்களையும்}, பெரும்பாறைகளையும் பொழிந்தனர்.(6) சமர்களில் புறமுதுகிடாமல் யுத்தம்புரியும் சூரர்களுக்கும் {வானரர்களுக்கு}, ராக்ஷச கணத்திற்கும் இடையில் அப்போது பெரும் யுத்தம் நடந்தது.(7)
சிரசுகள் பங்கமடைந்து {தலைகள் நொறுங்கி}, தேகங்கள் சிதைந்து, சஸ்திரங்களால் தாக்கப்பட்டுக் கால்களும், கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் சில{8} ஹரயர்களும் {குரங்குகளும்}, ராக்ஷசர்களும் பருந்துகள், கழுகுகள், காக்கைகள், நரிக்கூட்டங்களால் சூழப்பெற்றவர்களாகத் தரையில் விழுந்து கிடந்தனர்.(8,9) பயந்தவர்களை இன்னும் அச்சுறுத்தும் வகையில் கபந்தங்கள் {தலையில்லா முண்டங்கள்} எழுந்தன. புஜங்கள், கைகள், சிரசுகள் வெட்டப்பட்ட உடல்கள் சிதைந்து{10} வானரர்களும், ராக்ஷசர்களும் பூதலத்தில் விழுந்தனர்.(10,11அ)
அப்போது நிசாசரர்களின் சர்வ பலமும் {இரவுலாவிகளின் படைகள் அனைத்தும்} வானர சைனியத்தால் கொல்லப்பட்டு {தாக்கப்பட்டுச்} சிதறி ஓடுவதை வஜ்ரதம்ஷ்டிரன் பார்த்துக் கொண்டிருந்தான்.(11ஆ,12அ) பயத்தால் பீடிக்கப்பட்ட ராக்ஷசர்கள் பிலவங்கமர்களால் {தாவிச் செல்லும் குரங்குகளால்} கொல்லப்பட்டனர்.{12ஆ} பிரதாபவானான வஜ்ரதம்ஷ்டிரன் இதைக் கண்டு, கோபத்தால் கண்கள் சிவந்து, தனுஷ்பாணியாக {கையில் வில்லுடன்} அச்சுறுத்தியபடியே ஹரிவாஹினிக்குள் {குரங்குப் படைக்குள்} பிரவேசித்தான்.(12ஆ,13)
கழுகின் இறகுகள் கட்டப்பட்ட, குறி தவறாத சரங்களைக் கொண்டு, எழுவர், எண்மர், ஒன்பதின்மர், ஐவர் என வானரர்களைப் பிளந்து,{14} பிரதாபவானான வஜ்ரதம்ஷ்ட்ரன் பரமகுரோதத்துடன் தாக்கினான்.(14,15அ) சரங்களால் தேகங்கள் வெட்டப்பட்ட சர்வ ஹரிகணமும் {குரங்குக் கூட்டம் அனைத்தும்} அச்சத்தால், பிரஜைகள் பிரஜாபதியை {நாடுவது} எப்படியோ, அப்படியே அங்கதனை நாடி ஓடினர்.(15ஆ,16அ)
அப்போது, வாலிசுதன் {வாலியின் மைந்தன் அங்கதன்} ஹரிகணம் பங்கமடைவதைக் கண்டு, குரோதத்துடன் வஜ்ரதம்ஷ்ட்ரனை இமைகொட்டாமல் பார்த்தான்.(16ஆ,17அ) ஹரிராக்ஷசர்களான வஜ்ரதம்ஷ்ட்ர, அங்கதர்கள் இருவரும், ஹரிமத்தகஜம் {சிங்கமும், மதங்கொண்ட யானையும்} போல பரம குரோதத்துடன் திரிந்தனர்.(17ஆ,18அ) அப்போது மஹாபலவானான ஹரிபுத்ரன் {குரங்கான வாலியின் மகன் அங்கதன்}, தோமரத்தால் மாதங்கம் {யானை} எப்படியோ, அப்படியே ஆயிரம் சரங்களால் மர்மதேசங்களில் {முக்கிய இடங்களில்} துளைக்கப்பட்டான்.(18ஆ,19அ) உதிரத்தால் சர்வ அங்கங்களும் நனைந்திருந்தவனும், மஹாபலவானும், பீமபராக்கிரமனுமான வாலிசுதன் {வாலி மைந்தன் அங்கதன்}, ஒரு விருக்ஷத்தை {மரத்தை} வஜ்ரதம்ஷ்ட்ரன் மீது எறிந்தான்.(19ஆ,20அ) அந்த விருக்ஷம் ஏவப்பட்டதைக் கண்ட ராக்ஷசன், பதற்றமடையாமல் அதை பல துண்டுகளாகத் துண்டித்தான். அவ்வாறு துண்டிக்கப்பட்டது {துண்டிக்கப்பட்ட மரம்} புவியில் விழுந்தது.(20ஆ,21அ)
வஜ்ரதம்ஷ்ட்ரனின் அந்த விக்ரமத்தைக் கண்ட பிலவகரிஷபன் {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையான அங்கதன்}, ஒரு பெரிய சைலத்தை {மலையை} எடுத்து வீசிவிட்டு நாதம் செய்தான்.(21ஆ,22அ) அது {அந்த மலை} வீழ்வதைக் கண்ட வீரியவானானவன் {வஜ்ரதம்ஷ்ட்ரன்}, கலக்கமடையாமல் ரதத்தில் இருந்து குதித்து கதாபாணியாக {கையில் கதையுடன்} பிருத்வியில் நின்றான்.(22ஆ,23அ) அங்கதனால் ஏவப்பட்ட பாறை, ரணமூர்த்தத்தில் {போர்க்களத்தில்} சக்கரங்கள், கூபரம் {ஏர்க்கால்}, அஷ்வங்கள் {குதிரைகள்} ஆகியவற்றுடன் கூடிய ரதத்தை சிதறடித்தது.(23ஆ,24அ) அப்போது அந்த அங்கதன், மரங்களால் அலங்கரிக்கப்பட்ட மற்றொரு பெருஞ்சிகரத்தைப் பெயர்த்து வஜ்ரதம்ஷ்ட்ரனின் சிரசில் {தலையில்} எறிந்தான்.(24ஆ,25அ)
சோணிதம் {குருதி} கக்கிய மூர்ச்சையடைந்த {மயக்கமடைந்த} அந்த வஜ்ரதம்ஷ்டிரன், ஒரு முஹூர்த்தம் கதையைத் தழுவிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு கலக்கமடைந்தான்.(25ஆ,26அ) மூர்ச்சை தெளிந்த நிசாசரன் {இரவுலாவி வஜ்ரதம்ஷ்ட்ரன்}, பரம குரோதத்துடன் உறுதியாக நின்று, தன் கதையால் வாலிபுத்திரனின் {அங்கதனின்} மார்பில் அடித்தான்.(26ஆ,27அ) ஹரிராக்ஷசர்கள் {குரங்கான அங்கதன், ராக்ஷசனான வஜ்ரதம்ஷ்டிரன் ஆகிய} இருவரும் அங்கே அன்யோன்யம் போரிட்ட பிறகு, கதையை {கதாயுதத்தைக்} கைவிட்டு முஷ்டியுத்தத்தை தொடங்கினர். (27ஆ,28அ) விக்ராந்தர்களான அவர்கள் இருவரும், அடிகளால் களைத்துப் போய் ரத்தம் கக்கி, அங்காரகனையும் {செவ்வாயையும்}, புதனையும் போலத் தெரிந்தனர்.(28ஆ,29அ)
பிறகு, பரமதேஜஸ்வியும், பிலவகரிஷபனுமான {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையுமான} அங்கதன், ஏராளமான புஷ்பங்களுடனும், பழங்களுடனும் கூடிய விருக்ஷத்தை வேருடன் பிடுங்கி நின்றான்.(29ஆ,30அ) அவன் ஒரு ரிஷபத்தின் {வஜ்ரதம்ஷ்டிரன் காளையின்} தோலாலான கேடயத்தையும், கிங்கிணி ஜாலங்களால் {மணிவரிசைகளால்} அலங்கரிக்கப்பட்டதும், தோலாலான உறையைக் கொண்டதும், பெரியதும், சுபமானதுமான கட்கத்தை {வாளை} எடுத்துக் கொண்டான்.(30ஆ,31அ) பிறகு, ஜயம் அடைவதில் விருப்பம் கொண்ட கபிராக்ஷசர்கள் {அங்கத வஜ்ரதம்ஷ்ட்ரர்கள்} இருவரும், நாதம் செய்தபடியே, பல்வேறு மார்கங்களில் திரிந்து, அன்யோன்யம் தாக்கிக் கொண்டனர்.(31ஆ,32அ) காயங்களில் ரத்தம் பெருக புஷ்பித்த கிம்சுகங்களை {பலாச மரங்களைப்} போல அவர்கள் சோபித்தனர். யுத்தம்புரியும் அவ்விருவரும் களைத்துப் போய் மண்டியிட்டவாறு அவனியில் {பூமியில்} நின்றனர்.(32ஆ,33அ)
கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான} அங்கதன், தண்டத்தால் தாக்கப்பட்ட உரகத்தை {தடியால் அடிக்கப்பட்ட பாம்பைப்} போலக் கண்கள் ஒளிர நிமிஷாந்தர மாத்திரத்தில் {கண் இமைக்கும் நேரத்தில்} எழுந்தான்.(33ஆ,34அ) மஹாபலவானான வாலி மைந்தன் {அங்கதன்}, நன்கு கூராக்கப்பட்டதும், நிர்மலமானதுமான கட்கத்தை {வாளைக்} கொண்டு அந்த வஜ்ரதம்ஷ்ட்ரனின் மஹத்தான சிரசில் {தலையில்} தாக்குதல் தொடுத்தான்.(34ஆ,35அ) அங்கங்கள் முழுவதும் உதிரத்தால் நனைந்திருந்த அவனது அந்த சுபமான சிரம் கட்கத்தால் ஹதம் செய்யப்பட்டு {வஜ்ரதம்ஷ்டிரனின் அழகிய தலை வாளால் வெட்டப்பட்டுக்} கண்கள் சுழல இரு துண்டுகளாக விழுந்தது[1].(35ஆ,36அ)
[1] உளம்தான் நினையாதமுன் உற்று உதவாக்கிளர்ந்தானை இரண்டு கிழித் துணையாய்ப்பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்துஅளந்தான் வலி நன்று என அங்கதனே- கம்பராமாயணம் 8379ம் பாடல், யுத்த காண்டம், படைத்தலைவர் வதைப் படலம்பொருள்: உள்ளத்தால் நினைப்பதற்கு முன்பே, நெருங்கிப் போரிடக் கிளர்ந்து எழுந்தவனை {மாபக்கனை}, இரண்டாகக் கிழித்தெறிந்து, “பதினான்கு உலகங்களையும் பெயர்த்து வைத்து அளந்தவனின் {ராமனின்} வலிமை நன்று” என்று சொன்னான் அங்கதன்.
வஜ்ரதம்ஷ்டிரன் ஹதம் செய்யப்பட்டதைக் கண்டு ராக்ஷசர்கள் பயமோஹிதம் அடைந்தனர் {அச்சத்தால் மெய்மறந்தனர்}.{36ஆ} பிலவங்கமர்களால் {தாவிச் செல்லும் குரங்குகளால்} தாக்கப்பட்ட அவர்கள் {ராக்ஷசர்கள்}, விசன வதனங்களுடனும் வெட்கத்துடனும் தலைகளையும், முகத்தையும் தொங்கப் போட்டபடியே லங்கையை நோக்கி ஓடினர்.(36ஆ,37) வஜ்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான பிரதாபவானும், மஹாபலவானும், கபி சைனியத்தின் {குரங்குப் படையின்} மத்தியில் இருந்தவனுமான அந்த வாலிசுதன் {வாலி மைந்தன் அங்கதன், இவ்வாறு வஜ்ரதம்ஷ்ட்ரனை} ஹதம் செய்துவிட்டு, திரிதசர்களால் சூழப்பட்ட சகஸ்ரநேத்திரனை {தேவர்களால் சூழப்பட்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான இந்திரனைப்} போல மகிழ்ச்சியடைந்தான்.(38)
யுத்த காண்டம் சர்க்கம் – 054ல் உள்ள சுலோகங்கள்: 38
Previous | | Sanskrit | | English | | Next |