Enter Garuda | Yuddha-Kanda-Sarga-050 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களுக்கு நம்பிக்கையளித்த ஜாம்பவான்; விபீஷணனின் அழுகை; சுக்ரீவன் சொன்ன ஆறுதல்; கருடன் வந்து, ராமலக்ஷ்மணர்களை நாகபாசத்தில் இருந்து விடுவித்தது...
அப்போது, மஹாதேஜஸ்வியும், மஹாபலவானுமான ஹரிராஜன் {சுக்ரீவன், பின்வருமாறு} சொன்னான் “ஏன் இந்த சேனை ஜலத்தில் காற்றால் நிலைதடுமாறும் நாவத்தை {ஓடத்தைப்} போலக் கலக்கமடைகிறது?” {என்றான் சுக்ரீவன்}.(1)
சுக்ரீவனின் சொற்களைக் கேட்ட வாலிபுத்ரன் அங்கதன், {பின்வருமாறு} கூறினான், “இராமரையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணரையும் நீர் பார்க்கவில்லையா?{2} மஹாத்மாக்களும், தசரதாத்மஜர்களுமான இந்த வீரர்கள் இருவரும், சரஜாலத்தால் {கணை வலையால்} மறைக்கப்பட்டு, உதிரத்தால் நனைந்து, சரதல்பத்தில் {கணைப்படுக்கையில்} சயனிக்கின்றனர்” {என்றான் அங்கதன்}.(2,3)
அப்போது வானரேந்திரனான சுக்ரீவன், தன் புத்திரன் அங்கதனிடம் {பின்வருமாறு} கூறினான், “இது நிமித்தமல்ல {காரணமல்ல} என்று நினைக்கிறேன். {எதையோ கண்ட} பயமாகவே இருக்க வேண்டும்.(4) இந்த ஹரயர்கள் {குரங்குகள்} அச்சத்தில் விரிந்த கண்களுடனும், சோகமான முகத்துடனும், {கற்கள் முதலிய} ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு, இங்கிருந்து திசையெங்கும் ஓடுகின்றனர்.(5) அன்யோன்யம் லஜ்ஜையில்லை {ஒருவருக்கொருவர் வெட்கப்படவில்லை}. பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. விழுந்தவனைத் தாண்டி குதித்து அன்யோன்யம் விலகி ஓடுகின்றனர்” {என்றான் சுக்ரீவன்}.(6)
அதே நேரத்தில் கதாபாணியாக வந்த வீரன் விபீஷணன், சுக்ரீவனை வாழ்த்திவிட்டு ராகவனைக் கண்டான்.(7) வானரர்களுக்கு பயத்தை விளைவிப்பவனாக விபீஷணனைக் கண்ட சுக்ரீவன், அருகில் நின்ற மஹாத்மா ரிக்ஷராஜனிடம் {ஜாம்பவானிடம், பின்வருமாறு} சொன்னான்:(8) “வானரரிஷபர்கள், இந்த விபீஷணன் இங்கே வருவதைக் கண்டு, அவனை ராவணாத்மஜன் {ராவணனின் மகன் இந்திரஜித்} என்று சந்தேகித்து, அஞ்சி ஓடுகிறார்கள்.(9) அச்சத்தில் எங்கும் சிதறி ஓடுபவர்களைத் தடுத்து நிறுத்தி, வந்திருப்பவன் விபீஷணன் என்பதை அவர்களிடம் சொல்வீராக” {என்றான் சுக்ரீவன்}.(10)
சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், ரிக்ஷப் பார்த்திபன் {கரடி மன்னன்} ஜாம்பவான், தப்பி ஓடும் வானரர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களைச் சாந்தப்படுத்தினான்.(11) இரிக்ஷராஜனின் சொற்களைக் கேட்ட அந்த வானரர்கள் அனைவரும், அந்த விபீஷணனைக் கண்டு, தங்கள் குழப்பத்தைக் கைவிட்டுத் திரும்பி வந்தனர்.(12)
அப்போது, தர்மாத்மாவான விபீஷணனும், சரங்களால் துளைக்கப்பட்ட ராமன், லக்ஷ்மணன் ஆகியோரின் காத்திரத்தை {உடலைக்} கண்டு கலக்கமடைந்தான்.(13) ஜலத்தில் நனைந்த கைகளால் அவர்களின் நேத்திரங்களை {கண்களைத்} துடைத்துவிட்டு, சோக சந்தாபத்தால் பீடிக்கப்பட்டு {பின்வருமாறு} அழுது புலம்பினான்:(14) “சத்வ சம்பன்னர்களும் {வலிமை நிறைந்தவர்களும்}, விக்கிராந்தர்களும், யுத்தத்தில் பிரியமுள்ளவர்களுமான இவ்விருவரும் கபட யுத்தம் புரியும் ராக்ஷசர்களால் இந்த அவஸ்தையை அடைந்திருக்கின்றனர்.(15) கபடமில்லா விக்ரமர்களான இவ்விருவரும், துஷ்புத்ரனும், துராத்மாவும், ராக்ஷசர்களின் கோணல் புத்தியுடன் கூடியவனுமான என்னுடன் பிறந்தானின் புத்திரனால் {இந்திரஜித்தால்} வஞ்சிக்கப்பட்டனர்.(16) சரங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, உதிரத்தில் நனைந்து வசுதையில் கிடக்கும் இவ்விருவரும், சல்லியகங்களை {முள்ளம்பன்றிகளைப்} போலத் தெரிகின்றனர்.(17) யாவரின் வீரியத்தை ஆசரித்து, நான் என்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பினேனோ, அந்தப் புருஷரிஷபர்கள் இருவரும் தேஹம் முழுவதும் காயமடைந்தவர்களாக உறங்கிக் கிடக்கின்றனர்.(18) இராஜ்ஜியத்தையும், மனோரதத்தையும் {ஆசையையும்} இழந்த நான், ஜீவனுடன் கூடிய நடைபிணம் போலாகிவிட்டேன். பகைவர் ராவணர் தன் பிரதிஜ்ஞையும், ஆசையும் நிறைவேறியவராகப் போகிறார்” {என்றான் விபீஷணன்}.(19)
சத்வ சம்பன்னனும் {வலிமை நிறைந்தவனும்}, ஹரிராஜனுமான சுக்ரீவன், இவ்வாறு அழுது புலம்பும் அந்த விபீஷணனைத் தழுவிக் கொண்டு, இதைக் கூறினான்:(20) “தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, நீ லங்கையின் ராஜ்ஜியத்தை அடைவாய். இதில் சந்தேகமில்லை. இராவணனும், அவனது புத்திரர்களும் எதை விரும்புகிறார்களோ, அதை அடைய மாட்டார்கள்.(21) இந்த ராகவ லக்ஷ்மணர்கள் இருவரும் வலியால் பீடிக்கப்படவில்லை. மோஹத்தை விட்டுவிட்டு {மயக்கம் தெளிந்து}, ரணத்தில் {போரில்} ராவணனையும், அவனது கூட்டத்தினரையும் அழிப்பார்கள்” {என்றான் சுக்ரீவன்}.(22)
இவ்வாறு அந்த ராக்ஷசனுக்கு {விபீஷணனுக்கு} சமாதானம் கூறி, சாந்தப்படுத்திய சுக்ரீவன், அருகில் நின்ற தன் மாமனார் சுஷேணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(23) “அரிந்தமர்களும், உடன்பிறந்த சூரர்களுமான இந்த ராமலக்ஷ்மணர்கள் நனவு மீண்டதும், அவர்களையும், ஹரிகணங்களையும் {குரங்குக் கூட்டத்தாரையும்} உம்முடன் கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்வீராக.(24) நானோ, ராவணனையும், புத்திரர்களுடன் கூடிய அவனது பந்துக்களையும் {உறவினர்களையும்} கொன்றுவிட்டு, சக்ரன் இழந்த செழிப்பை {மீட்டது} எப்படியோ, அப்படியே மைதிலியை {சீதையைக்} கொண்டு வருவேன்” {என்றான் சுக்ரீவன்}.(25)
வானரேந்திரனின் ஏக வாக்கியத்தைக் கேட்ட சுஷேணன், {பின்வருமாறு} கூறினான், “மிகக் கொடியதும், மஹத்தானதுமான தைவாசுர யுத்தத்தை நான் அனுபவித்திருக்கிறேன் {தேவாசுர யுத்தத்தில் நான் பங்கேற்றிருக்கிறேன்}.(26) அப்போது சரங்களைப் பயன்படுத்துவதில் திறன் பெற்றவர்களான தானவர்கள் தங்களைப் புலப்படாதவர்களாக்கிக் கொண்டு, சஸ்திரங்களில் நிபுணர்களான தேவர்களைக் கொன்றாலும், அவர்கள் மீண்டும் மீண்டும் எழுந்தனர்.(27) காயமடைந்தவர்களும், நனவிழந்தவர்களும், கிட்டத்தட்ட உயிரை இழந்தவர்களுமான அவர்களுக்கு, பிருஹஸ்பதி தன் வித்தையால் ஔஷதிகளுடன் மந்திரங்களைக் கலந்து சிகிச்சை அளித்தார்.(28) வானரர்களான சம்பாதி, பனசன் முதலியோர் சீக்கிரமே க்ஷீரோத சாகரத்திற்கு {பாற்கடலுக்குச்} சென்று வேகமாக அந்த ஔஷதிகளைக் கொண்டு வரட்டும்.(29) திவ்யமானவையும், தேவர்களின் நிமித்தம் உண்டாக்கப்பட்டவையுமான சஞ்சீவகர்ணி, விஷல்யம்[1] என்ற பர்வாதி மஹா ஔஷதிகளின் {மலைகளில் விளையும் இந்தப் பெரும் மூலிகைகளை} இந்த ஹரயர்கள் {குரங்குகள்} அறிவார்கள்.(30) எங்கே அமிர்தம் கடையப்பட்டதோ அந்த உத்தம க்ஷீரோத சாகரத்தில் {பாற்கடலில்}, சந்திரம் என்றும், துரோணம் என்றும் அழைக்கப்படுவனவற்றில் {அழைக்கப்படும் மலைகளில்} இந்தச் சிறந்த ஔஷதிகள் {மூலிகைகள்} இருக்கின்றன.(31) அந்த மஹோததியில் {பெரும் நீர்க்கொள்ளிடமான அந்தப் பாற்கடலில் சந்திரம், துரோணம் என்ற} இவ்விரண்டு பர்வதங்களும் தேவர்களால் அமைக்கப்பட்டன. இராஜனே, வாயுசுதனான {வாயு மைந்தனான} இந்த ஹனுமான் அங்கே செல்லட்டும்” {என்றான் சுஷேணன்}.(32)
[1] விவேக் தேவ்ராய் {பிபேக் தேப்ராய்} பதிப்பில், “சஞ்சீவ கரணி என்பது உயிரூட்டும் ஏதோவொன்றைக் குறிக்கும், விஷல்யம் என்பது பணயத்தை விலக்கும் ஏதோ ஒன்றைக் குறிக்கும்” என்றிருக்கிறது.
அதேவேளையில் மின்னல், மேகங்களுடன் கூடிய வாயு {காற்றின் தேவன்}, சாகரத்தின் நீரைக் கொந்தளிக்கச் செய்து, பர்வதங்களை நடுங்கச் செய்தான்.(33) தீவெங்கும் இருந்த பெரும் மரங்களில், வாதத்தின் {வாயுவின்} மஹத்தான சிறகுகளால் முறிந்த கிளைகள் அம்பசத்தின் {கடலின்} உப்பு நீரில் விழுந்தன.(34) அங்கே வசித்து வந்த பன்னகங்களும், போகிகளும் {பாம்புகளும், பெரும்பாம்புகளும்}, நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்து சீக்கிரமே லவணார்ணவத்திற்குள் {உப்பு நீர் கடலுக்குள்} சென்றன.(35) அப்போது, ஒரே முஹுர்தத்தில் சர்வ வானரர்களும், மஹாபலவானான வைனதேயன் {வினதையின் மகன்} கருடனை, ஜுவலிக்கும் பாவகனை {எரியும் அக்னியைப்} போல கண்டனர்.(36) எந்த சரபூதங்கள் {சரங்களாக மாறியிருந்த எவை} அவ்விரு புருஷர்களையும் {ராமலக்ஷ்மணர்களைக்} கட்டிப் போட்டிருந்தனவோ, அந்த மஹாபலம்வாய்ந்த நாகங்கள், அவன் {கருடன்} வருவதைக் கண்டதும் அஞ்சி ஓடின.(37)
அப்போது சுபர்ணன் {அழகிய இறகுகளைக் கொண்ட கருடன்}, காகுத்ஸ்தர்கள் இருவரையும் கண்டு, வாழ்த்தி, சந்திரனுக்கு சமமான பிரபையுடன் கூடிய அவர்களின் முகங்களை, தன் இரு கைகளால் வருடினான்.(38) வைனதேயனால் தீண்டப்பட்ட அவ்விருவரின் ரணங்கள் {காயங்கள்} உடனே ஆறின. அவர்களின் உடல்கள் ஸ்வர்ணம் போன்ற வழுவழுப்புடன் பிரகாசமடைந்தன.(39) அவர்களின் தேஜஸ், வீரியம், உற்சாகம், மஹாகுணங்கள் பொருந்திய நடைமுறை அறிவு, புத்தி, நினைவு ஆகியவை {முன்பிருந்ததைவிட} இருமடங்கு அதிகமாகின.(40)
மஹாதேஜஸ்வியான கருடன், வாசவனுக்கு ஒப்பான அவ்விருவரையும் உயர்த்தி {தூக்கி எழுப்பித்} தழுவிக் கொண்டான். மகிழ்ச்சியடைந்த ராமனும், அவனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(41) “இதோ ராவணியால் {இந்திரஜித்தால்} உண்டான மஹத்தான விசனத்தை உம்மருளால் கடந்த நாங்கள் இருவரும், முன்பைப் போன்ற பலம் கொண்டவர்களாகி விட்டோம்.(42) தாதையான {தந்தையான} தசரதர், பிதாமஹரான {பாட்டனான} அஜர் ஆகியோரை {சந்தித்தால்} எப்படியோ, அப்படியே உம்மைச் சந்தித்தது என் ஹிருதயத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.(43) உரூபசம்பன்னரும் {அழகான வடிவம் கொண்டவரும்}, திவ்ய மாலைகளை அணிந்து, நறுமணப் பொருட்களை பூசியிருப்பவரும், களங்கமற்ற வஸ்திரங்களை உடுத்தியிருப்பவரும், திவ்யாபரண பூஷிதருமான {தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவருமான} நீர் யார்?” {என்று கேட்டான் ராமன்}.(44)
மஹாதேஜஸ்வியும், மஹாபலவானுமான பதத்ரிராஜன் வைனதேயன் {பறவைகள் மன்னனும், வினதையின் மகனுமான கருடன்}, பிரீதியடைந்தவனாக, மகிழ்ச்சி நிறைந்த கண்களுடன் அவனிடம் {ராமனிடம், பின்வருமாறு} சொன்னான்:(45) “காகுத்ஸ்தா, கருத்மானான {கருடனான} நான், பிரியத்திற்குரிய உன் சகாவும் {தோழனும்}, வெளியே திரியும் உன் பிராணனும் ஆவேன். உங்கள் இருவருக்கும் சஹாயம் செய்யும் காரணத்திற்காக இங்கே வந்தேன்.(46), மஹாவீரியர்களான அசுரர்களாலோ, மஹாபலவான்களான தானவர்களாலோ, கந்தர்வர்களுடன் கூடியவர்களும், சதக்ரதுவை {இந்திரனை} முன்னிட்டவர்களுமான ஸுரர்களாலோ {தேவர்களாலோ},{47} குரூர கர்மங்களைச் செய்பவனான இந்திரஜித்தின் மாயாபலத்தில் நிர்மிதம் செய்யப்பட்ட இந்த மிகப் பயங்கர சர பந்தனத்திலிருந்து விடுவிக்க இயலாது.(47,48)
விஷம் மிக்க கூரிய பற்களைக் கொண்டவர்களும், காத்ரவேயர்களுமான {கத்ருவின் மகன்களுமான} இவர்கள் சரங்களாக மாறி, மாயப் பிரபாவத்தால் ரக்ஷிக்கப்பட்டு, உங்களிடம் நிலை கொண்டிருந்தனர்.(49) தர்மஜ்ஞா {தர்மங்களை அறிந்தவனே}, சத்திய பராக்கிரமா, ராமா, போரில் சத்ருக்களை அழிக்கும் உன்னுடன் பிறந்தான் லக்ஷ்மணனுடன் கூடிய நீ பாக்கியவான்.(50) இந்த விருத்தாந்தத்தை {நடந்த செய்தியைக்} கேட்டவுடனே, நம் சினேகத்தையும், தோழமையையும் கருதி துரிதமாக இங்கே வந்தேன்.(51) மஹாகோரமான இந்த சாயக பந்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டாலும் நீங்கள் இருவரும் நித்யம் கவனமாகவே இருக்க வேண்டும்.(52) சாதாரணமாகவே, சர்வ ராக்ஷசர்களும் போரில் கபட யுத்தம் புரிபவர்களே. சுத்த பாவனம் {தூயமனம்} கொண்ட சூரர்களுக்கு {கபட யுத்தம் புரியாத} நேர்மையே பலம்.(53) இராக்ஷசர்கள் நித்யம் கபடமனம் படைத்தவர்கள் என்பதற்கு இதுவே {இந்திரஜித்தின் மாயமே} உபமானம் {உதாரணம்}. எனவே, போர்க்களத்தில் இவர்களை நீ நம்பலாகாது” {என்றான் கருடன்}.(54)
மஹாபலவானான அந்த சுபர்ணன், ராமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, நட்புடன் அவனைத் தழுவிக் கொண்டு, விடைபெற்றுச் செல்ல {பின்வருமாறு} வேண்டினான்:(55) “தர்மஜ்ஞா, பகைவனுக்கும் அன்பானவனே, சகாவே, ராமா, வந்தபடியே விடைபெற்றுச் செல்கிறேன் என்பதை உன்னிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.(56) வீரா, சகித்வம் {தோழமை} குறித்து அறியும் விருப்பத்தால் கௌதூஹலமடைவதில் காரியமேதுமில்லை. கர்மம் நிறைவேறியதும் சகித்வத்தைக் குறித்துத் தெரிந்து கொள்வாய்[2].(57) இலங்கையில் பாலர்களையும், விருத்தர்களையும் {சிறுவர்களையும், முதியவர்களையும்} விட்டுவிட்டு, சர அலைகளால் பகைவனான ராவணனைக் கொன்றுவிட்டு, சீதையை நீ அடைவாய்” {என்றான் கருடன்}.(58)
[2] பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் பழைய நின்னொடுஉறவு உள தன்மை எலாம் உணர்துதவேன் அரக்கனோடு அம்மறவினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாயப்பிறவியின் பகைஞ நல்கு விடை எனப் பெயர்ந்து போனான்.- கம்பராமாயணம் 8271ம் பாடல், யுத்த காண்டம், நாகபாசப் படலம்பொருள்: பறவைக் கூட்டங்களைப் பாதுகாக்கும் தூயவன் {கருடன்}, “உன்னோடு எனக்கு உள்ள பழைய உறவின் தன்மைகள் அனைத்தையும், அரக்கனோடு {ராவணனோடு} கூடிய அந்தப் போர்த்தொழிலை {நீ} முடித்த பின்பு வந்து சொல்வேன்” என்று உணர்த்தி, “மாயப்பிறப்பறுக்கும் பிறவியின் பகைஞனே, எனக்கு விடைகொடுப்பாயாக” என்றும் சொல்லித் திரும்பிப் போனான்.
சீக்கிரவிக்கிரமனான சுபர்ணன் {விரைவாகச் செல்பவனும், அழகிய இறகுகளைக் கொண்டவனுமான கருடன்}, இந்த வசனத்தைச் சொல்லிவிட்டு, அந்த வனௌகசர்களின் {வானரர்களின்} மத்தியில் ராமனை வலியற்றவனாகச் செய்தான்.{59} அந்த வீரியவான் {கருடன்}, அவனை {ராமனைப்} பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து}, தழுவிக் கொண்டு, பவனன் {வாயு} எப்படியோ, அப்படியே ஆகாயத்தில் சென்றான்.(59,60)
அப்போது வானர யூதபர்கள், வலியில் இருந்து விடுபட்ட ராகவர்களைக் கண்டனர். பிறகு, அவர்கள் சிம்மநாதம் செய்தபடியே தங்கள் லாங்கூலத்தையும் {வாலையும்} அசைத்தனர்.(61) பிறகு அவர்கள், பேரிகளையும், மிருதங்க வாத்தியங்களையும் அடித்து, சங்குகளை முழக்கி, முன்பைப் போலவே மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.(62) மரங்களைக் கொண்டு யுத்தம் புரியும் விக்ராந்தர்களான வானரர்கள் சிலர், தங்கள் தோள்களைத் தட்டிக் கொண்டும், நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான விதவிதமான மரங்களை வேருடன் பிடுங்கியபடியும் அங்கே நின்றனர்.(63) யுத்தத்தை விரும்பும் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்}, நிசாசரர்களை {இரவுலாவிகளான ராக்ஷசர்களை} அச்சுறுத்தும் வகையில் மஹாநாதத்தை எழுப்பியபடியே, லங்கையின் துவாரங்களை {வாயில்களை} அடைந்தனர்.(64) கோடை கால முடிவின் நள்ளிரவில், மேகங்களின் நாதம் எப்படி பயங்கர நாதமாக இருக்குமோ, அப்படிப்பட்ட ஆரவாரமிக்க பயங்கர நாதம் சாகை மிருக யூதபர்களுக்கு {மரக்கிளைகளில் வாழும் குரங்குகளின் தலைவர்களுக்கு} மத்தியில் எழுந்தது.(65)
யுத்த காண்டம் சர்க்கம் – 050ல் உள்ள சுலோகங்கள்: 65
Previous | | Sanskrit | | English | | Next |