Saturday 3 August 2024

விபீஷண சரணாகதி | யுத்த காண்டம் சர்க்கம் - 017 (68)

Vibheeshana seeks refuge | Yuddha-Kanda-Sarga-017 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை நாடிச் சென்ற விபீஷணன்; அமைச்சர்களுடன் ஆலோசித்த ராமன்...

Sugreeva seeing Vibheeshana coming over the sea

இவ்வாறான கடும் வாக்கியத்தை ராவணனிடம் சொன்ன ராவணானுஜன் {ராவணனின் தம்பியான விபீஷணன்}, ஒரு முஹூர்த்தத்தில் ராமனும், லக்ஷ்மணனும் இருந்த இடத்தை அடைந்தான்.(1) மஹீயில் நின்று கொண்டிருந்த அந்த வானராதிபர்கள், மேருவின் சிகரத்திற்கு ஒப்பானவனும், வானத்தில் ஒளிமிக்க மின்னலைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தவனுமான அவனை {விபீஷணனைக்} கண்டனர்.(2) அவனை அனுசரித்து வந்த நால்வரும் பயங்கர விக்கிரமர்களாக இருந்தனர். அவர்களும் சர்வ ஆயுதங்களையும் தரித்திருந்தனர், பூஷணங்களால் அலங்கரிக்கப்பட்டுமிருந்தனர்.(3) அந்த வீரன் {விபீஷணன்}, மேகங்களின் திரளைப் போன்றவனாகவும், வஜ்ராயுதத்திற்கு சமமான பிரபையைக் கொண்டவனாகவும், சிறந்த ஆயுதங்களைத் தரித்தவனாகவும், திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும் இருந்தான்[1].(4)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அங்ஙனம் அக்னியினின்று குளிர்ந்த ஜலமுடைய தாமரைத் தடாகத்தில் விழ விரைவுடன் வருவது போல் மிகுந்த வேகத்துடன் வருகின்றவனும், உயர்வினாலும், வலிமையினாலும், ரத்னங்கள் இழைக்கப்பெற்ற ஸ்வர்ணாபரணங்களாலும், மேரு சிகரம் போன்ற உருவமுடையவனும், ப்ரதிபக்ஷிகளைத் துறந்து தன் பக்ஷத்தைக் குறித்து வருகையால் மேருசிகரம் போல் சிறந்த நிலைமையுடையவனும், மிகுந்த ஒளியுடன் ஆகாயத்தில் ஸஞ்சரித்து வருகின்றமையாலும் "ராம பக்தர்களான வானரர்கள் என்னை ராமனிடம் போக விடுவார்களோ விடமாட்டார்களோ" என்னும் பயத்தினால் நடுக்கமுற்றிருக்கின்றமையாலும் மின்னல் போல் புலப்படுகின்றவனும், ஆகாயத்தை அடைந்திருப்பவனுமாகிய விபீஷணனை அவன் லங்கையினின்று ஆகாயத்திற் கிளம்பும்பொழுதே பூமியிலிருந்த வானர முதலிகள் எல்லோரும் கண்டனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அவன் மேகம்போலும், பர்வதம் போலுந் தோற்றித் தேவேந்த்ரனைப் போல் மிகுந்த பராக்ரமம் அமைந்து ஸமஸ்த ஆயுதங்களையுந் தரித்து, திவ்ய பூஷணங்களால அலங்கரிக்கப்பட்டிருந்தனன். பயங்கர பராக்ரமர்களான அவனது அனுசரர்கள் நால்வரும் அப்படியே ஸமஸ்த ஆயுதங்களையும் தரித்து நானாவித ஆபரணங்களையும் அணிந்து விளக்கமுற்றிருந்தனர்" என்னும் பொருளடங்கிய இரண்டு சுலோகங்கள் குண்டலிதங்களாயிருக்கின்றன; வ்யாக்யானங்களிலும் எடுக்கவில்லை" என்றிருக்கிறது.

Sugreeva seeing Vibheeshana coming

வெல்வதற்கரியவனும், வீரியவானும், வானராதிபனுமான சுக்ரீவன், ஐவரில் ஒருவனான அவனை {விபீஷணனைக்} கண்டு, வானரர்கள் சகிதனாக சிந்தனையில் ஆழ்ந்தான்.(5) ஒரு முஹூர்த்தம் சிந்தித்தபிறகு, ஹனுமதன் முதலிய அந்த வானரர்கள் அனைவரிடமும் இந்த உத்தம வசனத்தைச் சொன்னான்:(6) "சர்வ ஆயுதங்களையும் பூண்ட நான்கு ராக்ஷசர்களுடன் சேர்ந்து  நம்மைக் கொல்ல வருகிறான் என்பதில் ஐயமில்லை. இந்த ராக்ஷசனைப் பார்ப்பீராக" {என்றான் சுக்ரீவன்}.(7)

சுக்ரீவனின் சொற்களைக் கேட்ட அந்த வானரோத்தமர்கள் அனைவரும் சாலங்களையும் {சாலமரங்களையும்}, சைலங்களையும் உயர்த்தியபடியே இந்த வசனத்தைச் சொன்னார்கள்:(8) "இராஜரே, இந்த துராத்மாக்களை வதைக்க சீக்கிரம் ஆணையிடுவீராக. அல்ப ஜீவிதம் கொண்ட இவர்களை ஹதம் செய்து தரணியில் வீழ்த்துவோம்" {என்றனர் மற்ற வானரர்கள்}.(9)

Vibheeshana speaking to Sugreeva from the sky

அவர்கள் அன்யோன்யம் {தங்களுக்குள்} பேசிக்கொண்டிருக்கையில், அந்த விபீஷணன், உத்தர தீரத்தை {பெருங்கடலின் வடகரையை} அடைந்து வானில் நின்று கொண்டிருந்தான்.(10) மஹாபிராஜ்ஞனும், மஹானுமான அந்த விபீஷணன், சுக்ரீவனையும், அவர்களையும் {அந்த வானரர்களையும்} கண்டு வானத்தில் இருந்தபடியே மஹத்தான ஸ்வரத்தில் {பின்வருமாறு} சொன்னான்:(11) "இராவணன் என்ற பெயரைக் கொண்ட ராக்ஷசர், துர்விருத்தம் {கொடும் நடத்தையைக்} கொண்ட ராக்ஷசேஷ்வரர் ஆவர். நான் அவருடன் பிறந்த தம்பி. விபீஷணன் என்று அழைப்பார்கள்.(12) ஜடாயுவைக் கொன்று, சீதையை ஜனஸ்தானத்தில் இருந்து கொண்டு சென்று, தீனமான அவளது விருப்பத்திற்கு எதிராக, ராக்ஷசிகளால் ரக்ஷிக்கப்படுபவளாக அடைத்து வைத்திருப்பவர் அவரே {அந்த ராவணரே}.(13) "இராமரிடம் நல்ல முறையில் சீதையைத் திருப்பிக் கொடுப்பீராக" என்று ஹேதுவான விதவிதமான வாக்கியங்களில் மீண்டும் மீண்டும் நான் அவரைத் தடுத்தேன்.(14) காலனால் தூண்டப்பட்டதால் அந்த ராவணர், ஔஷதத்தை {மருந்தை ஏற்க மறுக்கும்} விபரீதனைப் போல, {என்னால்} சொல்லப்பட்ட ஹிதமான வாக்கியத்தை ஏற்கவில்லை.(15) அவரால் {ராவணரால்} கடுமையாகப் பேசப்பட்டு, தாசனாக {அடிமையாக} நடத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட நான், புத்திரர்களையும், தாரங்களையும் கைவிட்டு ராகவரிடம் சரணாகதியடைகிறேன்.(16) மஹாத்மாவும், சர்வலோக சரண்யருமான ராகவரிடம், விபீஷணனான நான் வந்து சேர்ந்திருப்பதாக சீக்கிரம் நீங்கள் அறிவிப்பீராக" {என்றான் விபீஷணன்}.(17)

Rama and Lakshmana discussing with Sugreeva Jambhavan Angada and Hanuman

இலகுவிக்ரமனான சுக்ரீவன், இந்த வசனத்தைக் கேட்டதும், லக்ஷ்மணனின் முன் இருந்த ராமனிடம் பரபரப்புடன் இதைக் கூறினான்:(18) "சத்ரு சைனியத்தைச் சேர்ந்த சத்ரு எதிர்பாராத வகையில், உலூகங்களால் வாயஸங்களை {ஆந்தைகளால் கொல்லப்படும் காக்கைகளைப்} போல, வாய்ப்பு கிடைத்ததும் நம்மைக் கொல்ல வந்திருக்கிறான்[2].(19) பரந்தபரே, வானரர்களுடைய, எதிரிகளுடைய மந்திரம் {ஆலோசனை}, வியூஹம் {திட்டம்}, நயம் {வழிமுறை}, சாரம் {ஒற்று} ஆகியவற்றில் பொருத்தமான விழிப்புடன் இருப்பதே உமக்குத் தகும். உமக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}.(20) இந்த ராக்ஷசர்கள் காமரூபிகளாகவும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களாகவும்}, அந்தர்தனகதி அடைபவர்களாகவும் {புலப்படாமல் மறைந்து செயல்படக்கூடியவர்களாகவும்}, சூரர்களாகவும், வஞ்சனை அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஒருபோதும் இவர்களை நம்ப முடியாது.(21) இவன், ராக்ஷசேந்திரன் ராவணனின் பிரணிதியாகவும் {ஒற்றனாகவும்} இருக்கலாம். இவன் உள்ளே நுழைந்தால் நமக்குகள் பேதத்தை {பிரிவினையை} உண்டாக்குவான். இதில் ஐயமில்லை.(22) அல்லது புத்திமானான இவன், உள்ளே புகுந்து வாய்ப்புகளை {பலவீனங்களைத்} தானே கண்டடைந்து, விசுவாசத்துடன் இருக்கும் {நம்பிக்கை வைத்த} நம்மை எந்நேரத்திலும் தாக்கலாம்.(23)

[2] மேற்கண்டது தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில் இருக்கும் "ப்ரவிஷ்ட꞉ ஷ²த்ரு ஸைந்யம் ஹி ப்ராப்த꞉ ஷ²த்ருரதர்கித꞉ | நிஹந்யாத³ந்ந்தரம் லப்³த்⁴வா உலூகோ வாயஸாநிவ ||" என்ற 19ம் சுலோகத்திற்கான பொருளாகும். மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் ஆங்கிலப் பதிப்புகளிலும் இந்த சுலோகத்தின் பொருளுடனேயே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி ஆங்கிலப் பதிப்பில், இந்த 19ம் சுலோகமே மாறுபடுகிறது. அது பின்வருமாறு. ராவணஸ் யாநுஜோ ப்⁴ராதா விபீ⁴ஷணஇதி ஷ்²ருத꞉ | சதுர் பி⁴ஸ்ஸஹரக்ஷோ பி⁴ர்ப⁴வந்தம் ஷ²ரணங்க³த꞉  ||. இந்த சுலோகத்தைப் பின்பற்றியே ஆங்கிலத்தில் விவேக் தேவ் ராயின் செம்பதிப்பிலும், தமிழில் தர்மாலயம், நரசிம்மாசாரியர், கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்புகளிலும் உள்ள இந்தப் பகுதி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் பொருள்: "விபீஷணன் என்று அழைக்கப்படும், ராவணனுடன் பிறந்த தம்பி, நான்கு ராக்ஷசர்கள் சகிதனாக உம்மிடம் சரணாகதி அடைகிறான்" என்பதாகும். 

மித்ரர்களாலான பலம் {படை}, அடவியில் {காட்டில்} உள்ள பலம், அதே போல, மூல பலம் {தலைமுறை தலைமுறையாக மன்னர்களால் திரட்டப்பட்ட படை}, பொருள் கொடுத்து அடையப்பட்ட பலம் என, பகைவரின் பலத்தை {படையைத்} தவிர, சர்வ பலங்களையும் {படைகளையும்} ஏற்றுக் கொள்ளலாம்.(24) பிரபோ, இயல்பிலேயே ராக்ஷசனும், அமித்ரனுடன் பிறந்தவனுமான இவன், பகைவனிடம் இருந்து நேரடியாக வந்திருக்கிறான். இவனிடம் எப்படி விசுவாசம் {நம்பிக்கை} வைப்பது?(25) இராவணனுடன் பிறந்த தம்பியாக அறியப்படும் விபீஷணன், ராக்ஷசர்களுடன் உம்மை சரணடைய வருகிறான்.(26) பொறுமையுள்ளவர்களில் சிறந்தவரே {ராமரே}, இந்த விபீஷணனை ராவணனால் அனுப்பப்பட்டவனாகக் கருதுவீராக. இவனுக்கு நிக்ரஹமே {தண்டனை வழங்குவதே} தகுந்ததென நான் நினைக்கிறேன்.(27) ராகவரே, இந்த ராக்ஷசன், கோணல் புத்தியுடன் அனுப்பப்பட்டு, மாயையில் மறைந்து {மாயையால் தீய நோக்கத்தை மறைத்துக் கொண்டு}, விசுவாசத்தை உண்டாக்கி {நம்பிக்கையை விளைவித்து, சமயம் பார்த்து} உமக்குத் தீங்கைச் செய்வதற்காகவே இங்கே வந்திருக்கிறான்.(28) இந்த விபீஷணன், கொடூரனான ராவணனுடன் பிறந்தவனாவான். எனவே, அவனும், அவனது அமைச்சர்களும் தீவிர தண்டத்தால் வதைக்கப்பட வேண்டும்" {என்றான் சுக்ரீவன்}.(29)

வாக்யஜ்ஞனும், வாக்கிய குசலனுமான வாஹினிபதி {வாக்கியத்தை அமைக்கத் தெரிந்தவனும், நல்ல வாக்கியத்தைச் சொல்பவனுமான படைத்தலைவன் சுக்ரீவன்}, ராமனிடம் இவ்வாறு சொன்ன பிறகு மௌனமாக இருந்தான்.(30) மஹாபலவானான ராமன், சுக்ரீவனின் அந்த வாக்கியத்தைக் கேட்டு, சமீபத்திலிருந்த ஹனூமதன் முதலிய கபிக்களிடம் {குரங்குகளிடம்} இதைச் சொன்னான்:(31) "இராவணாவரஜனை {ராவணனின் கடைசித் தம்பியான விபீஷணனைக்} குறித்து, அர்த்தம் நிறைந்ததும், நன்மை விளைவிப்பதுமாக கபிராஜன் {குரங்குகளின் தலைவன் சுக்ரீவன்} சொன்ன அந்த வாக்கியத்தை நீங்களும் கேட்டீர்கள்.(32) அர்த்தத்தை நிர்ணயிக்கக் கடினமான காலங்களில், நண்பர்களின் சாஸ்வத செழிப்பில் {என்றும் நிலைத்து நீடிக்கும் நன்மையில்} சதா விருப்பத்துடன் கூடியவர்களும், சமர்த்தர்களும், புத்திமான்களும் நல்ல ஆலோசனைகளை வழங்குவதே தகுந்தது" {என்றான் ராமன்} .(33)

அப்போது இவ்வாறு கேட்கப்பட்டதும், தளர்ச்சியில் இருந்து விடுபட்ட அவர்கள் {வானரர்கள்}, பிரியத்தைச் செய்ய விரும்பியும், உபசாரம் செய்யும் வகையிலும் தங்கள் மதத்தை {கருத்தை} ராமனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள்:(34) "இராகவரே, மூவுலகங்களிலும் நீர் அறியாதது ஏதுமில்லை. நட்பின் அடிப்படையிலேயே நீர் எங்களின் கருத்துகளைக் கேட்கிறீர்.(35) சத்யவிரதரும், சூரரும், தார்மிகரும், திட விக்கிரமரும், நன்கு தீர்மானிக்க வல்லவரும், ஸ்மிருதிமானுமான {சட்டங்களை மனத்தில் கொண்டவருமான} நீர், ஆத்ம அர்ப்பணிப்புடன் கூடிய நட்பில் உறுதியாக இருக்கிறீர்.(36) எனவே, மேலும் மேலும் சமர்த்தர்களும், மதிசம்பன்னர்களுமான {அறிவில் நிறைந்தவர்களுமான} உமது ஆலோசகர்கள் ஒவ்வொருவராக காரணங்களுடன் ஆலோசனை சொல்வார்கள்" {என்றனர் வானரர்கள்}.(37)

இவ்வாறு சொல்லப்பட்ட பிறகு, கபிக்களில் மதிமானான அங்கதன், முதலில் விபீஷணனைப் பரீக்ஷிக்கும் அர்த்தத்தில் ராகவனிடம் {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(38) "சத்ருவின் முகாமில் இருந்து வந்திருப்பதால் விபீஷணன் எல்லா வகையிலும் சந்தேகிக்கப்பட வேண்டியவனே. உடனே விசுவாசியாக {நம்பிக்கைக்குரியவனாகக்} கொள்ளத்தக்கவனல்லன்.(39) சட புத்தியுடன் கூடியவன் ஆத்மபாவத்தை மறைத்தபடியே திரிந்து ரந்திரத்தை {வஞ்சக புத்தியுடைவன், தன் உணர்வை மறைத்தபடியே திரிந்து, துளையை [வாய்ப்பை]} அடைந்ததும் தாக்குவான். அது மகத்தான அனர்த்தத்தை விளைவிக்கும்.(40) அர்த்தானர்த்தங்களை நிச்சயித்துக் கொண்டு, வியவசாயத்தை {முயற்சியைச்} செய்பவன், குணத்தை ஏற்று, தோஷத்தைக் கைவிட வேண்டும்.(41) நிருபரே {மன்னரே}, மஹாதோஷங்கள் இருந்தால் இவனை முற்றிலும் புறக்கணிப்போம். இதில் ஐயமில்லை. ஏராளமான குணங்கள் அறியப்பட்டால் நாம் ஏற்றுக் கொள்வோம்" {என்றான் அங்கதன்}. (42) 

சரபனும், அர்த்தத்தை நிச்சயித்துக் கொண்டு, {பின்வருமாறு} பேசினான், "நரவியாக்ரரே {மனிதர்களில் புலியே}, இவன் விஷயத்தில் சீக்கிரமே சாரன் {ஒற்றன்} ஒருவன் அனுப்பப்பட வேண்டும்.(43) அப்படி அனுப்பி, சூக்ஷ்ம புத்தி கொண்ட சாரனால், தகுந்த முறையில் பரீக்ஷிக்கப்பட்டு, அதன்பிறகு, நியாயத்திற்குத் தக்க முறையில் ஏற்றுக் கொள்ளும் காரியத்தைச் செய்வோம்" {என்றான் சரபன்}.(44)

பிறகு விசக்ஷணனான {பகுத்தறிவுள்ளவனான} ஜாம்பவான், சாஸ்திர புத்தியால் உணர்ந்து, குணங்கள் நிறைந்ததும், தோஷங்களில் இருந்து விடுபட்டதுமான வாக்கியத்தை விஜ்ஞாபனம் செய்தான் {பின்வருமாறு அறிவித்தான்}:(45) "உம்மிடம் வைரங்கொண்டவனும், பாபியுமான ராக்ஷசேந்திரனிடம் இருந்து விபீஷணன் வந்திருக்கிறான். அதேசகாலத்தில் {தகாத இடத்திலும், காலத்திலும்} வந்திருக்கும் இவன் அனைத்து வகையிலும் சந்தேகத்திற்குரியவனே" {என்றான் ஜாம்பவான்}.(46)

பிறகு, நய அபநய கோவிதனும் {நயமானதையும், நயமற்றதையும் பகுக்கவல்லவனும்}, வசன சம்பன்னனுமான மைந்தன், நன்றாக கவனித்துவிட்டு, காரணத்துடன் கூடிய வாக்கியத்தைப் {பின்வருமாறு} பேசினான்:(47) "நரபதீஷ்வரரே {மனிதர்களின் தலைவர்களுக்குத் தலைவரே}, இந்த விபீஷணன், அந்த ராவணனின் தம்பியாக இருக்கிறான். மெதுவாகவும், மதுரமாகவும் இவன் வினவப்பட {இவனிடம் கேள்விகள் கேட்கப்பட} வேண்டும்.(48) நரரிஷபரே {மனிதர்களில் காளையே}, இவன் பாவம் {உணர்வு} துஷ்டமாக இருக்கிறதா, துஷ்டமாக இல்லையா என்ற தத்வத்தை {உண்மையை} அறிந்து கொண்டு, புத்திப்பூர்வமாக நீர் செயல்பட வேண்டும்" {என்றான் மைந்தன்}.(49)

Vibheeshana comes seeking refuge to Rama

பிறகு, சம்ஸ்கார சம்பன்னனும் {பண்பாடு நிறைந்தவனும்}, ஆலோசகர்களில் உத்தமனுமான ஹனுமான், மென்மையானதும், அர்த்தம் நிறைந்ததும், மதுரமானதும், சுருக்கமானதுமான {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(50) "மதிசிரேஷ்டராகக் கருதப்படும் பிருஹஸ்பதியே கூட, வாதிடுவதில் சாமர்த்தியரான உம்மைவிடச் சிறந்தவராக சாத்தியமில்லை.(51) இராஜரே, ராமரே, இது வாதத்திற்கான வசனமல்ல; {ஆலோசகர்களுடன்} போட்டிக்கானதும் அல்ல; ஆதிக்கத்திற்கானதும் அல்ல; விருப்பத்திற்கானதும் அல்ல; கௌரவரத்திற்கானதும் அல்ல {கௌரவத்திற்கான வசனமுமல்ல}. யதார்த்தமாக உமக்குச் சொல்கிறேன்.(52) அர்த்தம், அநர்த்தம் நிமித்தமாக உமது ஆலோசகர்களால் என்ன சொல்லப்படுகிறதோ அதில் தோஷத்தைப் பார்க்கிறேன். கிரியையும் சாத்தியப்படவில்லை.(53) நியோகத்தில் {கடமையில் / பணியில்} ஈடுபடுத்தாமல் சாமர்த்தியத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. உடனே நியோகத்தில் ஈடுபடுத்துவதும் தோஷமாகவே எனக்குத் தோன்றுகிறது.(54) 

உமது ஆலோசகர்கள், சாரர்களை அனுப்புவது பொருத்தமானது என்று சொல்கிறார்கள். அதைச் செய்ய முடியாது என்பதால் அதில் அர்த்தம் இல்லை.(55) இந்த விபீஷணர், அதேசகாலத்தில் {தகாத இடத்திலும், காலத்திலும்} வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதில் நான் என் மதிப்படி சொல்வதற்கு விரும்புகிறேன். அதைக் கேட்பீராக.(56) {உமக்கும் ராவணனுக்கும் இடையிலான} புருஷாத்புருஷங்களையும், குணதோஷங்களையும் {மனத்தில்} அடைந்ததும் இவ்வாறு, உள்ளபடியே இந்த தேசத்திலும், காலத்திலும் வந்திருக்கிறார் என்று தெரிகிறது.(57) இராவணனின் தௌராத்ம்யத்தையும் {துராத்ம தன்மையான தீமையையும்}, உமது விக்ரமத்தையும் கண்டே தகுந்த முறையில் {தகுந்த தேசத்திலும், காலத்திலும்} இங்கே வந்திருக்கிறார். அவரது புத்திக்கு இது தகுந்ததே.(58) இராஜரே, எவை சொல்லப்பட்டனவோ, அவை அஜ்ஞாதரூபங்கொண்ட புருஷர்களால் {அறியப்படாத வடிவங்கொண்ட ஒற்றர்களால்} கேட்கப்படட்டும். கவனித்ததில் எனக்கு மற்றொரு கருத்தும் இருக்கிறது(59) உடனே கேட்கப்படும் புத்திமான் அந்தச் சொற்களில் சந்தேகமடைவான். இதில் சுகமாக அடையப்பட்ட மித்ரன் {நண்பன்}, கபடமான கேள்விகளால் நம்பிக்கையிழப்பான்.(60)

இராஜரே, அதிக நிபுணத்துவம் இல்லாமல் பார்த்தால் வெவ்வேறு ஸ்வரங்களுக்கு இடையில் பிறரின் பாவத்தை {உணர்வை} உடனே புரிந்து கொள்வது சாத்தியமில்லை.(61) இவரது பேச்சில் துஷ்ட பாவம் {தீய உணர்வு} தென்படவில்லை. இவரது வதனமும் தெளிவாக இருக்கிறது. எனவே, எனக்கு சந்தேகம் இல்லை.(62) சடன் {வஞ்சகன்} சந்தேகமில்லாமல், நம்பிக்கையுடன் அணுகமாட்டான். அவரது வாக்கும் துஷ்டமாக இல்லை. எனவே, எனக்கு சந்தேகமேதும் இல்லை.(63) முகத்தின் உணர்வுகளை மறைப்பது சாத்தியமில்லை. பலவந்தமாக மறைத்துக் கொண்டாலும், நரர்களின் உள்ளார்ந்த பாவம் {உணர்வு} வெளிப்பட்டுவிடும்.(64) காரிய விதங்களை அறிந்தவர்களில் சிறந்தவரே, தேச காலங்களுக்கு இணக்கமான, பிரயோகிப்பதற்கு {நடைமுறைக்கு} உகந்த காரியம் சீக்கிரமே பலனை விளைவிக்கும்.(65) உமது உத்யோகத்தையும், ராவணனின் முறையற்ற நடத்தையையும் கண்டும், வாலி கொல்லப்பட்டதையும், சுக்ரீவர் அபிஷேகம் செய்யப்பட்டதையும் கேட்டும்,{66} ராஜ்ஜியத்தைப் பிரார்த்திக்கும் வகையில், புத்திப்பூர்வமாக ஆலோசித்தே இங்கே வந்திருக்கிறார். இவரை மதிப்புடன் நம்மவராக ஏற்றுக் கொள்வதே தகுந்தது[3].(66,67) 

[3] வாலி விண் பெற அரசு இளையவன் பெற
கோலி வரி சிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்து நிற் சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்

- கம்பராமாயணம் 6453ம் பாடல், யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப்படலம்

பொருள்: "வாலி விண்ணுலகை அடையவும், அவன் தம்பி {சுக்ரீவன்} அரசைப் பெறவும், உன் வளைந்த வில்லாற்றல் குறித்தும், அதன் வெற்றியையும், சீலத்தையும் குறித்தும் உணர்ந்தும், உன்னைச் சேர்ந்து, தெளிந்த ஞானத்தால் மேலான அரசை {மோக்ஷத்தை} பெறும்பொருட்டும் விரும்பி வந்திருக்கிறான் {விபீஷணன்" என்றான் ஹனுமான்}.

புத்திமான்களில் சிறந்தவரே, ராக்ஷசரின் நேர்மை, சக்தி ஆகியவற்றைக் குறித்து நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, மீதியை உமது பிரமாணப்படி {நீரே} முடிவு செய்து கொள்வீராக" {என்றான் ஹனுமான்}.(68)

யுத்த காண்டம் சர்க்கம் – 017ல் உள்ள சுலோகங்கள்: 68

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை