Thursday, 15 May 2025

நராந்தக வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 069 (96)

Narantaka killed | Yuddha-Kanda-Sarga-069 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் மகன்களான திரிசிரன், தேவாந்தகன், நராந்தகன், அதிகாயன் செய்த போர். பாதுகாக்க அனுப்பப்பட்ட மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்; நராந்தகனைக் கொன்ற அங்கதன்...

Trishira, Devantaka, Narantaka Atikaya join the fight

இவ்வாறு சோகத்தில் மூழ்கிப் புலம்பும் துராத்மாவான ராவணனின் வாக்கியங்களைக் கேட்ட திரிசிரன் {திரிசிரஸ்[1], பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "மஹாவீரியரான எங்கள் மத்தியம தாதா {நடுத்தந்தை / சிறிய தந்தையான கும்பகர்ணர்} இவ்வாறே கொல்லப்பட்டார். ஆனால், ராஜரே, சத்புருஷர்கள் {நன்மக்கள்}, உம்மைப் போல் புலம்புவதில்லை.(2) பிரபோ, நீர் திரிபுவனங்களையும் வெல்லத்தகுந்தவர். அத்தகைய நீர் பிராகிருதர்களை {சாதாரணர்களைப்} போல ஏன் புலம்புகிறீர்?(3) பிரம்மாவால் தத்தம் செய்யப்பட்ட சக்தி {வேலாயுதம்} உம்மிடம் இருக்கிறது. கவசமும், சாயகமும் {கணையும்}, தனுவும் {வில்லும்}, மேகத்திற்கு சமமான ஸ்வனத்தை எழுப்பக்கூடியதும், ஆயிரம் கழுதைகள் பூட்டப்பட்டதுமான ரதமும் இருக்கின்றன.(4) ஒருகாலத்தில் சஸ்திரங்களேதுமில்லாமலேயே தேவதானவர்களை நீர் அழித்திருக்கிறீர். அத்தகைய நீர், சர்வாயுத சம்பன்னராக, ராமனைக் அடக்கத்தகுந்தவராகவே இருக்கிறீர்.(5) மஹாராஜாவே, விருப்பம்போல் இருப்பீராக. நான் புறப்படுகிறேன். பன்னகங்களை {பாம்புகளை அழிக்கும்} கருடன் போல, ரணத்தில் உமது சத்ருக்களைக் களையப் போகிறேன்.(6) தேவராஜனால் சம்பரனும், விஷ்ணுவால் நரகனும்[2] எப்படியோ, அப்படியே இன்று யுத்தத்தில் ராமன் என்னால் தாக்கப்பட்டு வீழ்வான்" {என்றான் திரிசிரன்}.(7)

[1] இவன் ஆரண்ய காண்டம் சர்க்கம் 27ல் கொல்லப்பட்ட திரிசிரஸ் அல்ல.  அந்த திரிசிரஸ், ராவணனின் தம்பியாவான். இங்கே குறிப்பிடப்படும் திரிசிரஸ், இதே சர்க்கத்தின் 22ம் சுலோகத்தில் ராவணனின் மகனாகச் சொல்லப்படுகிறான்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த நரகன், கிருஷ்ணனின் கைகளால் கொல்லப்பட்டவனும், பூமித்தாயின் மகனுமான அந்த நரகனல்ல. இவன் சிம்ஹிகைக்கும், விப்ரசித்திக்கும் பிறந்தவன். வாதாபி, நமுசி, இல்வலன், ஸ்ரீமரன், அந்தகன், காலநாபன் ஆகிய அறுவரும் இவனது சகோதரர்களாவர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்குச் சொல்லப்பட்ட நரகாஸுரன் பூதேவியின் குமாரனான நரகாஸுரனன்று. அவன், வால்மீகி ப்ரபந்தம் நிர்மிக்கிறபோது பிறக்கவே இல்லை. விப்ரசித்திக்கு ஸிம்ஹிகையிடத்தில், 'வாதாபிர் நமுசிசைவ இல்வலஸ் ஸ்ரீமரஸ்ததா | அந்தகோ நரகசி சைவ கால நாபஸ்ததைவா' என்று பிறந்த வாதாபி முதலியவர்களில் அடங்கின நரகாஸுரனென்று தெரிகிறது. கோவிந்தராஜர்" என்றிருக்கிறது.

திரிசிரசின் வாக்கியத்தைக் கேட்ட ராக்ஷசாதிபன் ராவணன், காலனால் அழைக்கப்பட்டு {மரணமடைந்து} மீண்டும் பிறந்தவனைப் போலத் தன்னைக் கருதினான்.(8) திரிசிரசின் வாக்கியத்தைக் கேட்ட தேவாந்தக, நராந்தகர்களும், தேஜஸ்வியான அதிகாயனும் யுத்தத்தில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(9) அப்போது, சக்ரனுக்குத் துல்லியமான பராக்கிரமம் கொண்டவர்களும், நைர்ருதரிஷபர்களும் {ராக்ஷசர்களில் காளைகளும்}, ராவணனின் மகன்களுமான அந்த வீரர்கள், "நானும் {புறப்படுகிறேன்}, நானும் {புறப்படுகிறேன்}" என்று கர்ஜனை செய்தனர்.(10) அவர்கள் யாவரும் அந்தரிக்ஷத்தில் செல்லக்கூடியவர்கள் {வானத்தில் பறந்து செல்லவல்லவர்கள்}; யாவரும் மாயா விசாரதர்கள் {மாயைகளில் கைதேர்ந்தவர்கள்}; யாவரும் திரிதசர்களின் {தேவர்களின்} செருக்கை அடக்குபவர்கள்; யாவரும் போர் மதங்கொண்டவர்கள் {போர்வெறி மிக்கவர்கள்};(11) யாவரும் நல்ல பலம் நிறைந்தவர்கள்; யாவரும் விஸ்தீரண கீர்த்தியுடையவர்கள்; யாவரும் போருக்குச் சென்று தைவங்களாலோ, கந்தவர்களாலோ, கின்னரர்களாலோ, மஹா உரகர்களாலோ வீழ்த்தப்பட்டதாக அறியப்படாதவர்கள்;(12) யாவரும் அஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற வீரர்கள்; யாவரும் யுத்தவிசாரதர்கள்; யாவரும் பெரும் ஞானம் கொண்டவர்கள். மேலும், அவர்கள் யாவரும் வரங்களைப் பெற்றவர்கள்.(13)

இராஜா {ராவணன்}, பாஸ்கரனுக்கு {சூரியனுக்குத்} துல்லியமாக ஒளிர்பவர்களும், சத்ருக்களின் படைகளை நசுக்கவல்லவர்களுமான தன் மகன்கள் சூழ, மஹாதானவர்களின் செருக்கை அழிக்கவல்லனும், அமரர்களால் சூழப்பட்டவனுமான மகவானை {இந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14) அவன் {ராவணன்}, தன் புத்திரர்களைத் தழுவி, அவர்களை பூஷணங்களால் {ஆபரணங்களால்} அலங்கரித்து}, அவர்களைப் புகழ்ந்து ஆசி கூறி ரணத்திற்கு {போர்க்களத்திற்கு} அனுப்பிவைத்தான்.(15) இராவணன்,  தன் பிராதாக்களான {தன்னுடன் பிறந்தோரான} யுத்தோன்மத்தனையும், மத்தனையும் {போரில் வெறி கொண்ட மஹோதரனையும், வெறிமிக்க மஹாபார்ஷ்வனையும்}, தன் குமாரர்களின் ரக்ஷண அர்த்தத்திற்காக {பாதுகாவலுக்காகப்} போருக்கு அனுப்பி வைத்தான்.(16) பேருடல் கொண்டவர்களான அவர்கள், லோகராவணனான {உலகத்தாரைக் கதறவைப்பவனான} ராவணனை பிரதக்ஷிணஞ்செய்து {வலம் வந்து} வணங்கிவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.(17) மஹாபலவான்களான அந்த ஆறு நைர்ருதரிஷபர்களும், சர்வ ஔஷதிகளையும், கந்தங்களையும் {மூலிகைகளையும், நறுமணப் பொருட்களையும்} தங்கள் மேனியில் பூசிக் கொண்டு, யுத்தம் செய்யும் விருப்பத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.(18) திரிசிரஸ், அதிகாயன், தேவாந்தகன், நராந்தகன் ஆகியோரும், மஹோதரன், மஹாபார்ஷ்வன் ஆகியோரும் காலனால் இயக்கப்பட்டவர்களாகப் புறப்பட்டுச் சென்றனர்.(19)

அப்போது, மஹோதரன், ஐராவத குலத்தில் பிறந்ததும், நீல மேகத்திற்கு ஒப்பானதும், சுதர்சனம் என்று அழைக்கப்பட்டதுமான நாகத்தின் {யானையின்} மேல் ஏறிச் சென்றான்.(20)  தூணிகளால் அலங்கரிக்கப்பட்டு, சர்வ ஆயுதங்களையும் பூட்டிக் கொண்டு, கஜத்தின் மீது ஏறிச் சென்றவன் {மஹோதரன்}, அஸ்த மலைச் சிகரத்தில் சவிதனை {சூரியனைப்} போல்[3] ஒளிர்ந்தான்.(21) 

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஸ்தமய பர்வதத்தில் ஸூர்யன்போல் உடனே நாசமடையப் போகிறானென்றமை அறிவிக்கப்பட்டது" என்றிருக்கிறது.

இராவணாத்மஜனான {ராவணனின் மகனான} திரிசிரன், உத்தம ஹயங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், சர்வ ஆயுதங்கள் நிறைந்ததுமான சிறந்த ரதத்தில் ஏறிச் சென்றான்.(22) தனு {வில்} தரித்துக் கொண்டு, ரதத்தில் ஏறிச் சென்ற திரிசிரன், மின்னல்களுடனும், உல்கங்களுடனும் {எரிகொள்ளிகளுடனும்}, ஜுவலிக்கும் இந்திரசாபத்துடனும் {இந்திரவில்லுடனும் / வானவில்லுடனும்} கூடிய மேகத்தைப் போல ஒளிர்ந்தான்.(23) மூன்று கிரீடங்களுடன் உத்தம ரதத்தில் இருந்த அந்தத் திரிசிரன், மூன்று காஞ்சன பர்வதங்களுடன் கூடிய சைலேந்திரன் ஹிமவானை {மலைகளின் மன்னன் இமயத்தைப்} போல ஒளிர்ந்தான்.(24) 

பிறகு, அதிதேஜஸ்வியும், ராக்ஷசேந்திரனின் மகனும், தனு ஏந்தியவர்களில் சிறந்தவனுமான அதிகாயன் , சிறந்த ரதமொன்றில் ஏறினான்.(25) நல்ல சக்கரங்கடனும், அச்சுடனும் கூடியதும், நல்ல நுகத்தடியும், கூபரமும் {ஏற்காலும்} பொருத்தப்பட்டதும், தூணிகளும், பாணங்களும் நிறைந்ததும், பராசங்கள், கத்திகள், பரிகங்கள் ஆகியவற்றுடனும் அஃது ஒளிர்ந்து கொண்டிருந்தது.(26) விசித்திர காஞ்சன பூஷணங்களுடனும் {அழகிய பொன்னாபரணங்களுடனும்}, கிரீடத்துடனும் கூடிய அவன் {அதிகாயன்}, பிரபையுடன் ஒளிரும் மேருவைப் போல ஒளிர்ந்தான்.(27) நைர்ருத சார்தூலர்கள் {ராக்ஷசர்களில் புலிகள்} சூழ இருந்தவனும், மஹாபலவானுமான அந்த ராஜபுத்திரன் {இளவரசன்}, அமரர்களுடன் கூடிய வஜ்ரபாணியை {இந்திரனைப்} போல அந்த ரதத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(28) 

நராந்தகன், உச்சைஷ்ரவத்திற்கு ஒப்பானதும், வெண்ணிறம் கொண்டதும், கனக பூஷணங்களுடன் {பொன்னாபரணங்களுடன்} கூடியதும், மனோ வேகம் கொண்டதும், பேருடல் படைத்ததுமான ஒரு ஹயத்தில் {குதிரையில்} ஏறினான்.(29) உல்கத்திற்கு {எரிகொள்ளிக்கு} ஒப்பான பராசத்தை {ஈட்டியை} ஏந்தியிருந்த நராந்தகன், சக்தியை {வேலாயுதத்தை} ஏந்தியபடி அழகிய மயிலில் செல்லும் குஹனை {முருகனைப்} போல ஒளிர்ந்தான்.(30) ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட பரிகத்தைக் கொண்டிருந்த தேவாந்தகன், கைகளில் கிரியுடன் {மந்தர மலையுடன்} கூடிய விஷ்ணுவுக்கு ஒப்பான தோற்றத்தில் தெரிந்தான்.(31) மஹாதேஜஸ்வியும், வீரியவானும், கதாபாணியுமான {கைகளில் கதாயுதத்தைக் கொண்டவனுமான} மஹாபார்ஷ்வன், போரில் குபேரனைப் போல ஒளிர்ந்தான்.(32)

அந்த மஹாத்மாக்கள் {மேற்கண்ட அறுவரும்}, அமராவதியில் இருந்து {புறப்பட்டுச் செல்லும்} ஸுரர்களைப் போல {தேவர்களைப் போல லங்கையில் இருந்து} புறப்பட்டனர். மஹாத்மாக்களான ராக்ஷசர்கள், சிறந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, கஜங்களிலும் {யானைகளிலும்}, துரங்கங்களிலும் {குதிரைகளிலும்}, ரதங்களிலும் {தேர்களிலும்} மேகங்களின் ஸ்வனத்தை எழுப்பியபடியே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(33,34அ) சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட கிரீடங்களை அணிந்தவர்களும், செழிப்புடன் கூடிய மஹாத்மாக்களுமான அந்தக் குமாரர்கள், அம்பரத்தில் {வானத்தில்} ஒளிரும் கிரகங்களைப் போல ஒளிர்ந்தனர்.(34ஆ,35அ) அவர்கள் அணிந்திருந்த வஸ்திரங்களின் {ஆடைகளின்} வரிசை, சரத்கால மேகங்களைப் போலவோ, அம்பரத்தில் ஹம்சங்களை {வானத்தில் அன்னப்பறவைகளைப்} போலவோ விளங்கின.(35ஆ,36அ) மரணம் அடைவது, அல்லது சத்ருக்களை வெற்றிகொள்வது என்று நிச்சயித்துக் கொண்ட அந்த வீரர்கள், இவ்வாறாக மதியை அமைத்துக் கொண்டு போரிடும் விருப்பத்துடன் சென்றனர்.(36ஆ,37அ) யுத்தத்தில் துர்மதத்துடன் புறப்பட்டுச் சென்ற அந்த மஹாத்மாக்கள், தங்கள் கர்ஜனையை எதிரொலிக்கச் செய்தபடியும், ஏசியபடியும், சாயகங்களை {கணைகளைக்} கையில் எடுத்தனர்.(37ஆ,38அ) ராக்ஷசர்களின் இறைச்சலாலும், தோள் தட்டும் ஒலிகளாலும் மேதினி நடுங்கினாள் {பூமி நடுங்கியது}. அவர்களின் சிம்ஹநாதங்களால் அம்பரம் {வானம்} வெடிப்பது போலிருந்தது.(38ஆ,39அ) {இவ்வாறு} புறப்பட்டுச் சென்ற மஹாபலவான்களான அந்த ராக்ஷசேந்திரர்கள், பாறைகளை ஆயுதங்களாக ஏந்திய வானர அனீகத்தை {வானரப் படையைக்} கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.(39ஆ,40அ)

மஹாத்மாக்களான ஹரயர்களும், அந்த ராக்ஷசசர்களின் பகடையைக் கண்டனர்.{40ஆ} ஹஸ்திகள் {யானை}, அஷ்வங்கள் {குதிரைகள்}, ரதங்கள் நிறைந்ததும், {அவற்றின்} கிங்கிணி மணிகளின் ஒலிகளுடன் கூடியதும், நீல மேகத்திற்கு {கரிய மேகத்திற்கு} ஒப்பானதும் மஹா ஆயுதங்களுடன் கூடியதுமான அது {அந்த ராக்ஷசப் படை},{41} பிரகாசிக்கும் அனலனையும், ரவியையும் {அக்னியையும், சூரியனையும்} போல எங்கும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(40ஆ-42அ) இலக்ஷியத்தை {இலக்கை} அடைந்த அந்தப் படையைக் கண்ட பிலவங்கமர்கள்,{42ஆ} மஹா அசலங்களை {பெரும் மலைகளை} ஏந்தியபடி மீண்டும் மீண்டும் முழங்கினர். இராக்ஷசர்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத வானரர்கள் அவர்களை எதிர்த்து நாதம் செய்தனர்.(42ஆ,43) அதிகரிக்கும் வானரயூதபர்களின் கூச்சலைக் கேட்டவர்களும், உக்கிரர்களும், மஹாபலவான்களும் ரக்ஷோகணத்தினர் {ராக்ஷசக் கூட்டத்தார்}, பகைவரின் மகிழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பயங்கரக் கூச்சலிட்டனர்.(44) கோரமான ராக்ஷசப் படைக்குள் பிரவேசித்த அந்த  ஹரியூதபர்கள், சைலங்களை ஏந்தியபடி, சிகரங்களுடன் கூடிய மலைகளைப் போலத் திரிந்து கொண்டிருந்தன்.(45) பிலவங்கமர்கள் சிலர் ஆகாசத்தில் எழுந்தனர். கோபத்துடன் கூடிய சிலர், உர்வியில் {பூமியில்} நிலைத்து, மரங்களையும், பாறைகளையும் எடுத்துக் கொண்டு ராக்ஷச சைனியத்தின் மத்தியில் திரிந்தனர்.(46) வானரபுங்கவர்கள், பெரும் கிளைகளுடன் கூடிய மரங்களை ஏந்தியபடி  திரிந்தனர். இராக்ஷசர்களுக்கும், வானரர்களுக்கும் இடையிலான அந்த யுத்தம் கோரமானதாக இருந்தது.(47) பீம விக்கிரமர்களான அந்த ஹரயர்கள் {குரங்குகள்}, பாண ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} தடுக்கப்பட்டாலும், மரங்களாலும், சைலங்களாலுமான ஒப்பற்ற மழையைப் பொழிந்தனர்.(48) 

இரணத்தில், ராக்ஷசர்களும், வானரர்களும் சிங்க நாதம் செய்தனர். பிலவங்கமர்கள், பாறைகளைக் கொண்டு யாதுதானர்களை {ராக்ஷசர்களைப்} புடைத்தனர்.(49) குரோதமடைந்த அவர்கள், கவசங்கள், ஆபரணங்களுடன் கூடியவர்களைக் கொன்றனர். சிலர், ரதத்தில் செல்லும் வீரர்களையும், கஜவாஜிகளில் {யானைகள், குதிரைகளில்} ஏறிச் செல்பவர்களையும் கொன்றனர்.(50) வீரர்களான பிலவங்கமர்கள், யாதுதானர்களை {ராக்ஷசர்களைக்} கடுமையாகத் தாக்கினர். சைல சிருங்கங்களாலும், முஷ்டிகளாலும் அங்கங்களில் தாக்கப்பட்ட அந்த ராக்ஷசபுங்கவர்கள் நடுங்கியபடியே கண்கள் சுழல கீழே விழுந்தனர்.(51,52அ) இராக்ஷசர்கள், தங்கள் கூரிய சரங்களால் கபிகுஞ்சரர்களை {குரங்குகளில் யானைகளைத்} துளைத்தனர். மேலும் சூலங்கள், முத்கரங்கள், கட்கங்கள், சக்திகள், பராசங்களைக் கொண்டும் தாக்கினர்.(52ஆ,53அ) அங்கே தங்கள் பகைவரின் சோணிதத்தால் பூசப்பட்ட வானர, ராக்ஷசர்கள் பரஸ்பரம் ஜயங்கொள்ளும் விருப்பத்தில் அன்யோன்யம் தாக்கிக் கொண்டனர்.(53ஆ,54அ) பிறகு ஒரு முஹூர்த்தத்தில் ஹரிராக்ஷசர்களின் {குரங்குகள், ராக்ஷசர்கள் ஏவிய} சைலங்களினாலும் {மலைகளினாலும்}, கட்கங்களினாலும் {வாள்களினாலும்} பூமி சோணிதத்தால் {குருதியால்} நனைந்தது.(54ஆ,55அ) 

அப்போது, யுத்த மதம் கொண்டவர்களும், பேருடல் படைத்தவர்களும், அழிந்து சிதறிக் கிடந்தவர்களுமான ராக்ஷசர்களால் வசுமதி நிறைந்திருந்தாள் {பூமி நிறைந்திருந்தது}.(55ஆ,56அ) வீசப்பட்டவர்களும், வீசப்பட்டுக் கொண்டிருந்தவர்களும், வானரர்களால் தங்கள் சூலங்கள் நொறுங்கப்பெற்றவர்களும் நெருங்கி வந்து அங்கங்களாலான அற்புத யுத்தத்தைச் செய்தனர்.(56ஆ,57அ) அந்த நைர்ருதசிரேஷ்டர்கள் வானரர்களை {அந்த ராக்ஷசர்களில் சிறந்தவர்கள் வானரர்களின் சடலங்களைக்} கொண்டே வானரர்களைத் தாக்கினர். வானரர்களும், ராக்ஷசர்களைக் கொண்டே ராக்ஷசர்களைத் தாக்கினர்.(57ஆ,58அ) பிறகு, அந்த ராக்ஷசர்கள், சைலங்களையும், பாறைகளையும் எடுத்துக் கொண்டு வானரர்களையும்,  அவர்களின் {அந்த ராக்ஷசர்களின்} சஸ்திரங்களை எடுத்துக் கொண்டு வானரர்கள் ராக்ஷசர்களையும் தாக்கினர்.(58ஆ,59அ) இரணத்தில், வானர ராக்ஷசர்கள், சைலசிருங்கங்களைக் கொண்டு பரஸ்பரம் தலைகளில் தாக்கிக் கொண்டும், சிம்மநாதம் செய்து கொண்டுமிருந்தனர்.(59ஆ,60அ) 

வானரர்களால் தாக்கப்பட்டு கவசங்கள் நொறுங்கிய ராக்ஷசர்கள், பாலை வெளியிடும் மரங்களைப் போல உதிரம் கக்கினர்.(60ஆ,61அ) இரணத்தில் சில வானரர்கள், ரதங்களைக் கொண்டு ரதங்களையும், வாரணங்களை {யானைகளைக்} கொண்டு வாரணங்களையும் {யானைகளையும்}, ஹயங்களை {குதிரைகளைக்} கொண்டு ஹயங்களையும் {குதிரைகளையும்} தாக்கினர்.(61ஆ,62அ) வானரர்களின் மரங்களையும், பாறைகளையும் ராக்ஷசர்கள் தங்கள் கூரிய சரங்களாலும், க்ஷுரப்ரங்களாலும், அர்த்தசந்திரங்களாலும், பல்லங்களாலும் நொறுக்கி முறித்தனர்.(62ஆ,63அ) அந்த மலைகள், நொறுங்கிய மரங்கள் ஆகியவற்றாலும், போரில் கொல்லப்பட்ட கபிராக்ஷசர்கள் ஆகியோராலும் வசுதை கடப்பதற்கரியவளானாள்.(63ஆ,64அ) சலியாத ஆற்றல் கொண்டவர்களான அந்த வானரர்கள், நானாவித ஆயுதங்களுடன் கூடியவர்களாக, பயத்தைக் கைவிட்டு, போர்க்களத்தை அடைந்து, தங்கள் போர்த்திறனில் கர்வம் கொண்டவர்களாக அந்த ராக்ஷசர்களுடன் யுத்தம் செய்தனர்.(64ஆ,இ) அதைத் தொடர்ந்து நடந்த அந்த பரபரப்பான மோதலில், மகிழ்ச்சியுடன் கூடிய வலீமுகர்களால் {குரங்குகளால்} ராக்ஷசர்கள் வீழ்த்தப்படும் போது மஹரிஷிகளும், தேவகணங்களும் {மகிழ்ச்சி} நாதம் செய்தனர்.(65)

அப்போது நராந்தகன், மாருதத்திற்குத் துல்லியமான {காற்றுக்கு நிகரான} வேகம் கொண்ட ஹயத்தின் {குதிரையின்} மீது ஏறிக் கொண்டு, கூர்மையுள்ள சக்தியை {வேல் ஆயுதத்தை} எடுத்துக் கொண்டு, மீனம் மஹார்ணவத்தில் {ஒரு மீன் பெருங்கடலுக்குள்} எப்படியோ, அப்படியே வானரராஜனின் சைனியத்திற்குள் நுழைந்தான்.(66) வீரனும், மஹாத்மாவுமான அந்த இந்திரரிபு {இந்திரனின் பகைவன் நராந்தகன்}, ஏகனாக {தனியொருவனாக}, ஒளிரும் தன் பராசத்தைக் கொண்டு, எழுநூறு வானரர்களைத் துளைத்தான். ஹரிபுங்கவர்களின் சைனியத்தை ஒரு க்ஷணத்திலேயே கலங்கடித்தான்.(67) அந்த மஹாத்மா {நராந்தகன்}, ஹயத்தின் பிருஷ்டத்தில் {குதிரையின் பின்} இருந்து கொண்டு, ஹரிசைனியத்திற்குள் திரிவதை வித்யாதரர்களும், மஹரிஷிகளும் கண்டனர்.(68) அவனுடைய அந்த மார்க்கம் {அவன் சென்ற வழியானது}, பர்வதங்களுக்கு நிகரான தோற்றங்களுடன் வீழ்ந்து கிடக்கும் வானரர்களின் மாமிசங்களாலும், சோணிதத்தாலுமான சேறாகக் காணப்பட்டது.(69) 

எப்போதெல்லாம் பிலவகபுங்கவர்கள் தங்கள் விக்ரமத்தைக் காட்டுவதை புத்தியில் கொண்டார்களோ, அப்போதெல்லாம் நராந்தகன் முன்னேறிச் சென்று அவர்களை முறியடித்தான்.(70) ஜுவலிக்கும் பராசத்தை ஏந்திய நராந்தகன், விபாவசு வனங்களை {அக்னி காடுகளை} எப்படியோ, அப்படியே போர்முனையில் ஹரிசைனியத்தை எரித்தான். வனௌகசர்கள், விருக்ஷங்களையும், சைலங்களையும் எடுப்பதற்கு முன்பே{71} வஜ்ரத்தால் பிளக்கப்படும் அசலங்களைப் போல அவனது பராசத்தால் தாக்கப்பட்டு விழுந்தனர்.(71,72அ) போர்முனையில் ஜுவலிக்கும் பராசத்தை ஏந்தியனும், நரர்களுக்கு அந்தகனும் {மனிதர்களை அழிப்பவனும்},{72ஆ} பலவானுமான நராந்தகன், மழைக்காலத்தில் அநிலன் {காற்று} எங்கும் வீசுவது எப்படியோ, அப்படியே யுத்தத்தில் சர்வ திக்குகளிலும் திரிந்தபடியே, அவர்களை அழித்துக்கொண்டிருந்தான்.(72ஆ,73) திகிலடைந்த {வானர} வீரர்கள், பயத்தால் ஓடவோ, நிற்கவோ, அசையவோ முடியாதவர்களாக இருந்தனர். அந்த வீரியவான் {நராந்தகன்}, குதித்தும், நின்றும், நடந்தும் கொண்டிருந்த அனைவரையும் துளைத்தான்.(74) அந்தகனுக்கு ஒப்பான அந்த ஏகன் {தனியொருவனான நராந்தகன்}, ஆதித்ய தேஜஸ்ஸுடன் கூடிய {சூரிய ஒளியுடன் கூடிய} தன் பராசத்தால் ஹரிசைனியத்தை பங்கமடையச் செய்து தரணீதலத்தில் விழச்செய்தான் {குரங்குப் படையை முறியடித்து பூமியில் விழச்செய்தான்}.(75) வஜ்ரத்தின் தாக்குதலுக்கு ஒப்பான பராசத்தின் வீச்சைப் பொறுத்துக் கொள்ள இயலாத அந்த வானரர்கள் மஹா ஸ்வனத்துடன் கதறினர்.(76) கீழே விழுந்து கொண்டிருந்த ஹரிவீரர்களின் ரூபங்கள், கூடங்களுடன் {சிகரங்களுடன்} கூடிய சைலங்கள் வஜ்ரத்தால் பிளக்கப்பட்டு விழுவதைப் போலப் பிரகாசித்தன.(77)

எந்த மஹாத்மாக்கள் பூர்வத்தில் கும்பகர்ணனால் வீழ்த்தப்பட்டனரோ, அந்த வானரசிரேஷ்டர்கள் உணர்வுகள் மீண்டவர்களாக சுக்ரீவனை அணுகினர்.(78) நராந்தகனிடம் கொண்ட பயத்தினால் பீடிக்கப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்த ஹரிவாஹினியை அந்த சுக்ரீவன் கண்டான்.(79) ஓடிக் கொண்டிருக்கும் தன் வாஹினியைக் கண்டவன் {சுக்ரீவன்}, கையில் பராசத்துடன், ஹயத்தின் பிருஷ்டத்தில் {குதிரையின் பின்} அமர்ந்து வரும் நராந்தகனையும் கண்டான்.(80) அவ்வாறு கண்டவனும், மஹாதேஜஸ்வியுமான வானராதிபன் சுக்ரீவன், சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான பராக்ரமத்துடன் கூடிய வீரக் குமாரன் அங்கதனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(81) "செல்வாயாக. துரகத்தில் {குதிரையில்} ஏறிக் கொண்டு, பகைவரின் படையை பக்ஷித்து வரும் இந்த வீர ராக்ஷசனின் பிராணன்களை சீக்கிரமே எடுப்பாயாக" {என்றான்}.(82)

வீரியவானான அந்த அங்கதன், தன் தலைவனின் வசனத்தைக் கேட்டதும், மேகத்திலிருந்து அம்சுமானை {சூரியனைப்} போல, தன் ஆனீகத்தில் {படையில்} இருந்து வெளியே குதித்தான்.(83) ஹரிக்களில் உத்தமனும், பாறைக் குவியலுக்கு ஒப்பானவனும், அங்கதங்கள் அணிந்தவனுமான அங்கதன், தாதுக்களுடன் கூடிய பர்வதத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(84) மஹாதேஜஸ்வியும், கேவலம் நகங்களையும், பற்களையும் {மட்டுமே ஆயுதமாகக்} கொண்ட நிராயுதபாணியுமான வாலிபுத்திரன் {அங்கதன்}, நராந்தகனை அணுகி {பின்வரும்} சொற்களைக் கூறினான்:(85) "பொறுப்பாயாக {நிற்பாயாக}. இந்தப் பிராகிருத ஹரிக்களிடம் {சாதாரணக் குரங்குகளிடம்} நீ என்ன செய்யப் போகிறாய்? வஜ்ரத்திற்கு சமமான ஸ்பரிசத்தைக் கொண்ட உன் பராசத்தை, இதோ என் மார்பில் எறிவாயாக" {என்றான்}.(86)

நரர்களின் அந்தகனும் {மனிதர்களை அழிப்பவனும்}, அங்கதனின் சொற்களைக் கேட்டுக் குரோதமடைந்தவனும், பற்களால் தன் உதட்டைக் கடித்தவனும், புஜங்கத்தை {பாம்பைப்} போல பெருமூச்சுவிட்டவனும்,{87} குரோதத்துடன் வாலிபுத்திரனை {அங்கதனை} அணுகியவனுமான நராந்தகன், நன்றாக ஜுவலிக்கும் பராசத்தைச் சுழற்றி, அங்கதனின் மீது விரைவாக எறிந்தான். அந்தப் பராசம், வஜரத்திற்கு ஒப்பான வாலிபுத்திரனின் மார்பில் பட்டு பங்கமடைந்து {முறிந்து} பூமியில் விழுந்தது.(87,88) அப்போது, சுபர்ணனால் {கருடனால்} துண்டிக்கப்பட்ட உரகத்தை {பாம்பைப்} போன்று அந்தப் பராசம் பங்கமடைந்ததைக் கண்ட அந்த வாலிபுத்திரன் {அங்கதன்}, தன் உள்ளங்கையை ஓங்கி அவனது துரங்கத்தின் {நராந்தகனுடைய குதிரையின்} தலையில் அடித்தான்.(89) அசலத்திற்கு {மலைக்கு} ஒப்பானதும், {அங்கதனின்} உள்ளங்கையால் தாக்கப்பட்டதுமான அவனுடைய அந்த வாஜி {நராந்தகனின் குதிரை}, தலை சிதறி, பாதங்கள் பங்கமடைந்து {கால்கள் முறிந்து}, கண்களின் கருவிழிகள் தெறித்து, நாவு வெளியே பிதுங்கிய நிலையில் பூமியில் விழுந்தது.(90) 

நராந்தகன், துரகம் ஹதம் செய்யப்பட்டு {தன் குதிரை கொல்லப்பட்டு} விழுந்ததைக் கண்டு குரோதவசமடைந்தான். அந்த மஹாபிரபாவவான், யுத்தத்தில் தன் முஷ்டியை உயர்த்தி, வாலிபுத்திரனின் சிரசைத் தாக்கினான்.(91) முஷ்டியால் தாக்கப்பட்டபோது, அங்கதனின் தலையில் இருந்து உஷ்ணமான உதிரம் தீவிரமாக ஒழுகியது. அவன் மீண்டும் மீண்டும் தவித்தது மயக்கி விழுந்தான். பிறகு நனவு மீண்டு ஆச்சரியமடைந்தான்.(92) அதன்பிறகு, மஹாத்மாவான வாலிபுத்திரன் அங்கதன், கிரி சிருங்கத்திற்கு {மலைச்சிகரத்திற்கு} ஒப்பான தன் முஷ்டியை வஜ்ரத்திற்குச் சமமான வேகத்தில் சுழற்றி, நராந்தகனின் மார்பைத் தாக்கினான்.(93) முஷ்டியால் நசுக்கப்பட்டு மார்பு பிளக்கப்பட்டவனும், ஜுவாலைகளுடன் பொங்கும் சோணிதத்தால் {ரத்தத்தால்} நனைந்தவனுமான அந்த நராந்தகன், வஜ்ரத்தால் பங்கமடைந்த அசலம் {இடியால் பிளந்த மலை} எப்படியோ, அப்படியே பூமிதலத்தில் விழுந்தான்.(94) வீரியம் மிக்கவனான அந்த நராந்தகன், யுத்தத்தில் வாலிமைந்தனால் {அங்கதனால்} கொல்லப்பட்ட போது, திரிதச உத்தமர்கள், வனௌகசர்கள் {உத்தம சொர்க்கவாசிகள், வனத்தில் வசிப்பவர்களான வானரர்கள்} ஆகியோரின் மஹாநாதம் அந்தரிக்ஷத்தில் {வானத்தில்} எதிரொலித்தது.(95) அந்த அங்கதன், செயற்கரிய அந்த விக்ரமத்தை வெளிப்படுத்தியபோது, ராமனின் மனம் மகிழ்ச்சியடைந்தது. யுத்தத்தில் பயங்கர கர்மத்தைச் செய்தவனும் {அங்கதனும்} ஆச்சரியத்துடன் கூடிய பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(96)

யுத்த காண்டம் சர்க்கம் – 069ல் உள்ள சுலோகங்கள்: 96

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை