Wednesday, 23 October 2024

துவந்தங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் - 043 (46)

Duels | Yuddha-Kanda-Sarga-043 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் இடையில் நடந்த தனிப்போர்கள்...

Fight between Vanaras and Rakshasas

பிறகு, மஹாத்மாக்களான அந்த வானரர்கள் செய்த யுத்தத்தின் பயங்கரத்தைப் பொறுக்க முடியாத ராக்ஷசர்கள் பெரும் கோபம் அடைந்தனர்.(1) காஞ்சன பீடங்கள் {பொற்தவிசுகள்} பூண்ட ஹயங்களுடனும் {குதிரைகளுடனும்}, கொழுந்து விட்டு எரியும் அக்னிக்கு ஒப்பான துவஜங்களுடனும் ஆதித்யனைப் போலப் பிரகாசிக்கும் ரதங்களில், மனத்தை மயக்கும் கவசங்கள் பூண்டு,{2} பத்துத் திசைகளிலும் நாதம் செய்தபடியே ராக்ஷசப் புலிகள் சென்றனர். இராவணனின் ஜயத்தை விரும்பிய ராக்ஷசர்கள் பீம கர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்தனர்.(2,3) ஜயத்தை விரும்பும் வானரர்களின் பலமிக்க சம்முவும் {படையும்}, கோர கர்மங்களைச் செய்யும் ராக்ஷசர்களின் சேனையை எதிர்த்துச் சென்றது.(4) அதே நேரத்தில் அன்யோன்யம் தாக்கிக் கொண்ட அந்த ராக்ஷசர்களுக்கும் வானரர்களுக்கும் இடையில் துவந்த யுத்தம் {மற்போர்}[1] உண்டானது.(5)

[1] கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில் அடைப்புக்குறிக்குள், "ஒரு படையோடு எதிரிப் படை என்றில்லாமல் ஒரு தனி வீரரோடு எதிரியான தனி வீரர் போர் செய்வது" என்றிருக்கிறது.


அந்தகன் திரயம்பகனுடன் {யமன், முக்கண்ணனான சிவனுடன்} எப்படியோ, அப்படியே மஹாதேஜஸ்வியான ராக்ஷசன் இந்திரஜித், வாலிபுத்ரனான அங்கதனுடன் போரிட்டான்.(6) போரில் நித்யம் வெல்வதற்கரியவனான சம்பாதி[2] பிரஜங்கனுடனும், வானரன் ஹனுமான் ஜம்புமாலியுடனும் மோதத் தொடங்கினர்.(7) மஹாக்ரோதனும், ராவணானுஜனும் {ராவணனின் தம்பியுமான} ராக்ஷசன் விபீஷணன் போரில் பெரும் வேகத்துடன் மித்ரக்னனுடன் மோதினான்.(8) மஹாபலவானான கஜன்,  ராக்ஷசன் தபனனுடனும், மஹாதேஜஸ்வியான நீலன் நிகும்பனுடனும் போரிட்டனர்.(9) வானரேந்திரனான சுக்ரீவன், பிரகசனுடன் மோதினான். ஸ்ரீமான் லக்ஷ்மணன், விரூபாக்ஷனுடன் போரில் மோதினான்.(10)

[2] தர்மாலயப் பதிப்பில் அடைப்புக்குறிக்குள், "விபீஷணரின் மந்திரிகளிலொருவன்" என்றிருக்கிறது. யுத்தகாண்டம் 37ம் சர்க்கம் 7ம் சுலோகத்தில் விபீஷணனின் அமைச்சர்கள் நால்வரின் பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனலன், சரபன், சம்பாதி மற்றும் பிரகசன் ஆவர்.


வெல்வதற்கரியவனான அக்னிகேது, ராக்ஷசன் ரஷ்மிகேது, சுப்தக்னன், யஜ்ஞகோபன் ஆகியோர் ராமனுடன் மோதினர்.(11) வஜ்ரமுஷ்டியுடன் மைந்தனும், அஷனிபிரபனுடன் துவிவிதனும் என வானரமுக்கியர்கள் இருவரும், கோரர்களான ராக்ஷசர்கள் இருவருடன் மோதினர்.(12) வீரனும், கோரனும், போரில் வெல்வதற்கரியவனுமான பிரதபனன், போரில் கடும் வேகம் காட்டும் நளனுடன் மோதினான்.(13) தர்மனின் புத்திரனும், பலவானும் மஹாகபியுமான சுஷேணன், வித்யுன்மாலியுடன் போரிட்டான்.(14) வானரர்கள் பலர் பலருடன் யுத்தம் செய்தனர். சிலர், பயங்கரமான ராக்ஷசர்களுடன் துவந்தத்தில் ஈடுபட்டனர்.(15)

அங்கே ஜயம் பெற விரும்பிய வீரர்களான ராக்ஷசர்களுக்கும் வானரர்களுக்கும் இடையில் ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தும், அதி உக்கிரமான, மஹத்தான யுத்தம் நடந்தது.(16) ஹரிராக்ஷசர்களின் தேகங்களில் இருந்து வெளிப்படும் சோணித ஓடையானது, கேசங்களைப் புற்களாகவும், சரீரங்களைக் கட்டைகளாகவும்  கொண்டு பாய்ந்தது.(17) குரோதமடைந்த இந்திரஜித், சத்ரு சைனியங்களை அழிக்கும் வீரனான அங்கதனை, சதக்ரதுவின் {இந்திரனின்} வஜ்ரத்தைப் போன்ற கதையை {கதாயுதத்தைக்} கொண்டு தாக்கினான்.(18) கபியான அங்கதன், வேகமாகப் போரிட்டு, காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட அங்கங்களைக் கொண்ட அவனது {இந்திரஜித்தின்} ரதத்தை, அஷ்வங்களுடனும் {குதிரைகளுடனும்}, சாரதியுடனும் சேர்த்து அழித்தான்.(19) பிரஜங்கன் மூன்று பாணங்களால் சம்பாதியைத் தாக்கினான். அவன் {சம்பாதி} போரின் மத்தியில் அஷ்வகர்ண மரத்தைக் கொண்டு பிரஜங்கனைப் புடைத்தான்.(20)

மஹாபலவானான ஜம்புமாலி, ரதத்தில் இருந்தபடியே குரோதத்துடன் போரிட்டு, ஹனூமந்தனுடைய மார்பின் மத்தியில் ரதசக்தியால் துளைத்தான்.(21) மாருதாத்மஜனான ஹனுமான் அவனுடைய அந்த ரதத்தில் விரைவாக ஏறி அந்த ராக்ஷசனை உள்ளங்கையால் அறைந்தான்.(22) கோரனான அந்த பிரதபனன் நாதம் செய்தபடியே நளன் மீது குதித்தான். அவன் {நளன்} பிரதபனனின் கண்களைப் பிடுங்கினான்.(23) விரைவான கைகளைக் கொண்ட ராக்ஷசனின் கூரிய கணைகளால் காத்திரங்களில் துளைக்கப்பட்ட வானராதிபன் சுக்ரீவன், சைனியத்தை விழுங்கிவிடுபவனைப் போலத் தெரிந்த பிரகசனை சப்தபர்ணத்தால் {ஏழிலைப்பாலை மரத்தால்} கொன்றான்.(24) பீமதரிசனம் கொண்ட லக்ஷ்மணன், சர மழையால் ராக்ஷசன் விரூபாக்ஷனைப் பீடித்து, மற்றொரு சரத்தால் அவனைக் கொன்றான்.(25)

வெல்வதற்கரியவனான அக்னிகேது, ராக்ஷசன் ரஷ்மிகேது, மித்ரக்னன், யஜ்ஞகோபன் ஆகியோர் தங்கள் சரங்களால் ராமனைத் துளைத்தனர்.(26) குரோதமடைந்த ராமனும், அக்னிசிகைக்கு ஒப்பானவையும், கூர்மையானவையும், கோரமானவையுமான நான்கு சரங்களால் அந்த நான்கு பேரின் சிரங்களையும் {தலைகளையும்} வெட்டினான்.(27)  போரில் மைந்தனின் முஷ்டியால் தாக்கப்பட்ட வஜ்ரமுஷ்டி, சாரதியுடனும், அஷ்வங்களுடனும் சேர்த்து கொல்லப்பட்டு, காவல்கோபுரம் {இடிந்து விழுவது} போல பூதலத்தில் விழுந்தான்.(28) நிகும்பன், அம்சுமான் {சூரியன் கதிர்களால் துளைக்கும்} கரிய மேகங்களைப் போல, போரில் நீல அஞ்சன {கரிய மை} குன்றுக்கு ஒப்பான நீலனை, கூரிய சரங்களால் துளைத்தான்.(29) வேகமான கைகளைக் கொண்ட நிசாசரன் {இரவுலாவி} நிகும்பன் அங்கே போரில் நூற்றுக்கணக்கான சரங்களைக் கொண்டு நீலனை மீண்டும் மீண்டும் துளைத்து சிரித்தான்.(30) நீலன் போரில் விஷ்ணுவைப் போல ரதச் சக்கரத்தைக் கொண்டே நிகும்பனுடைய சாரதியின் சிரத்தை சிதைத்தான்.(31)

வஜ்ர அசனியை {இந்திரனின் வஜ்ராயுதத்தையும், இடியையும்} போன்ற ஸ்பரிசம் கொண்டவனான துவிவிதன், சர்வ ராக்ஷசர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிரி சிருங்கத்தைக் கொண்டு அசனிபிரபனைத் தாக்கினான்.(32) அந்த அசனிபிரபன், மரங்களைக் கொண்டு போரிடும் வானரேந்திரனான துவிவிதனை அசனிக்கு ஒப்பான சரங்களால் தாக்கினான்.(33) சரங்களால் தாக்கப்பட்ட அங்கங்களுடன் கூடிய அந்த துவிவிதன், குரோதத்தால் மூர்ச்சித்தவனாக சாலத்தால் {சால மரத்தைக் கொண்டு} ரதத்துடனும், குதிரைகளுடனும் கூடிய அசனிபிரபனைக் கொன்றான்.(34)

வித்யுன்மாலி ரதத்தில் ஏறி காஞ்சன பூஷண {பொன்னால் அலங்கரிக்கப்பட்ட} சரங்களால் மீண்டும் மீண்டும் சுஷேணனைத் தாக்கிவிட்டு நாதம் செய்தான்.(35) அப்போது வானரோத்தமனான சுஷேணன், ரதத்தின் மீதிருக்கும் அவனைக் கண்டு மஹத்தான கிரிசிருங்கத்தைக் கொண்டு அங்கே அந்த ரதத்தை நொறுக்கினான்.(36) அந்த ரதத்தில் இருந்து துரிதமாகவும், லாகவமாகவும் பின்வாங்கிய நிசாசரன் வித்யுன்மாலி, கதாபாணியாகத் தரையில் நின்றான்.(37) அந்த ஹரிபுங்கவன் சுஷேணன் குரோதம் மேலிட்டவனாக மஹத்தான பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த நிசாசரனை விரட்டினான்.(38) நிசாசரன் வித்யுன்மாலி, {தன்னை நோக்கி} வந்து கொண்டிருக்கும் ஹரிபுங்கவனான அந்த சுஷேணனின் மார்பில் தன் கதையால் {கதாயுதத்தால்} விரைவாகத் தாக்கினான்.(39) அந்தப் பிலவகோத்தமன் {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனான சுஷேணன்}, அந்தப் பெரும்போரில் கோரமான கதை {கதாயுதத்} தாக்குதலைக் குறித்து சிந்திக்காமல் மெதுவாக அந்தப் பாறையை அவனது மார்பில் வீசினான்.(40) நிசாசரன் வித்யுன்மாலி அந்தப் பாறையின் தாக்குதலால் ஆயுசு தீர்ந்தவனாக ஹிருதயம் நொறுங்கி பூமியில் விழுந்தான்.(41)

அங்கே நடந்த துவந்தங்களில் திவௌகசர்களால் {தேவர்களால்} தைத்தியர்களைப் போல, சூரர்களான அந்த ரஜனீசரர்கள் {இரவுலாவிகள்} சூரர்களான அந்த வானரர்களால் இவ்வாறே அழிக்கப்பட்டனர்.(42) பல்லங்கள், கட்கங்கள் {கத்திகள்}, கதைகள், சக்திகள், தோமரங்கள், பட்டிசங்கள், நொறுங்கிய ரதங்கள், அப்படியே கொல்லப்பட்ட ஹயங்கள் {குதிரைகள்},{43} மத்த குஞ்சரங்கள் {மதயானைகள்}, வானரர்களாலும், ராக்ஷசர்களாலும் அழிக்கப்பட்டு தரணியில் சிதறிக் கிடக்கும் சக்கரங்கள், அச்சுக்கள், நுகத்தடிகள், ஏர்க்கால்கள் ஆகியவற்றால் கோரமாகக் காட்சியளித்த போர்க்களம், நரிக்கூட்டத்தால் நிறைந்து இருந்தது.(43,44) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போருக்கு ஒப்பான அந்தக் கடும்போரில் வானரராக்ஷசர்களின் கபந்தங்கள் {வானரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோரின் தலையில்லா உடல்கள்} திக்குகள் அனைத்திலும் சிதறிக் கிடந்தன.(45) அப்போது அந்த ஹரிபுங்கவர்களால் தாக்கப்பட்டு சோணிதத்தால் {ரத்தத்தால்} நனைந்த காத்திரங்களைக் கொண்ட நிசாசரர்கள் {இரவுலாவிகள்} திவாகரனின் {சூரியனின்} அஸ்தமனத்தை எதிர்பார்த்து மீண்டும் வலிமையைத் திரட்டிக் கொண்டு நல்ல யுத்தத்திற்காகக் காத்திருந்தனர்.(46)

யுத்த காண்டம் சர்க்கம் – 043ல் உள்ள சுலோகங்கள்: 46

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை