Resolution of Jambavan | Sundara-Kanda-Sarga-60 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் சொன்னதைப் பின்பற்றுவதே சிறந்தது என்று அறிவுறுத்திய ஜாம்பவான்...
அவனது {ஹனுமான் சொன்ன} அந்த வசனத்தைக் கேட்ட வாலிமகன் {அங்கதன், பின்வருமாறு} பேசினான், "வானரர்களே, தேவியைக் கண்டபிறகும் அவள் இல்லாமல் மஹாத்மாவான ராகவரின் சமீபத்திற்கு நாம் செல்வது முறையல்ல[1].(1,2அ)
[1] இந்த சர்க்கம் ஒவ்வொரு பதிப்பிலும் ஒவ்வொரு வகையில் இருக்கிறது. ஆங்கிலத்தில் தேசிராஜுஹனுமந்தராவ், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்புகளிலும், தமிழில் நரசிம்மாசாரியர் பதிப்பிலும் இங்கு காணும் வகையிலேயே 6 சுலோகங்களைக் கொண்ட சர்க்கமாகவே இருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில் 12 சுலோகங்கள் கொண்ட சர்க்கமாகவும், பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளில் இந்த அத்தியாயம் இன்னும் நெடியதாகவும் இருக்கிறது. முன் சென்ற சர்க்கத்தில் வானரர்களின் பெருமையை ஹனுமான் சொல்வதை அங்கதன் வழிமொழிவதாகவே அந்த அதிக சுலோகங்கள் நீள்கின்றன. எனவே அவை இங்கே சேர்க்கப்படவில்லை.
புகழ்பெற்ற விக்கிரமர்களான நீங்கள், "தேவி காணப்பட்டாலும், கொண்டுவரப்படவில்லை" என்று அங்கே அறிவிப்பது முறையல்லவென நான் பார்க்கிறேன்.(2ஆ,3அ) ஹரிசத்தமர்களே, அமரர்கள், தைத்தியர்கள் ஆகியோரின் உலகங்களிலும் பராக்கிரமத்திலும், தாவிச் செல்வதிலும் நமக்குத் துல்லியமானவர்கள் எவருமில்லை.(3ஆ,4அ) இவ்வாறு ஹனூமதரால் அந்த ராக்ஷசர்களிலுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜானகியை அழைத்துவந்த பிறகே செல்வோம். இதில் செய்யக்கூடியது வேறு என்ன?" {என்றான் அங்கதன்}.(4ஆ,5அ)
ஹரிசத்தமனான ஜாம்பவான், அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, பரமபிரீதியடைந்து, இவ்வாறான சங்கல்பத்துடன் கூடிய அவனிடம் {அங்கதனிடம், பின்வரும்} அர்த்தம் பொதிந்த வாக்கியத்தைச் சொன்னான்:(5ஆ,6அ) "இராஜபுத்திரா {அங்கதா}, நீ எப்படிப் பார்க்கிறாயோ, {அப்படிப்பட்ட} இந்த மதி {ஆலோசனையை நிறைவேற்றுவது} நம்மால் இயலாததல்ல. ஆனால், ராமனின் மதி எப்படி இருக்குமோ அப்படியே நீ காரிய சித்தியைப் பார்க்க வேண்டும்" {என்றான் ஜாம்பவான்}.(6ஆ,இ,ஈ,உ)
சுந்தர காண்டம் சர்க்கம் – 60ல் உள்ள சுலோகங்கள்: 6
Previous | | Sanskrit | | English | | Next |