Tuesday, 25 March 2025

வானரர்களின் அச்சம் | யுத்த காண்டம் சர்க்கம் - 066 (34)

The fear of Vanaras | Yuddha-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்; போர்க்களத்தில் இருந்து ஓடும் வானரர்களின் துணிவை மீட்ட அங்கதன்...

Kumbhkarna tormenting the vanaras

கிரிகூடத்திற்கு ஒப்பான மஹானும் {மலைச்சிகரத்திற்கு நிகராகப் பெருத்தவனும்}, மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், பிராகாரத்தை லங்கனம் செய்து {மதிற்சுவற்றைக் கடந்து} நகரத்திலிருந்து துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் சமுத்திரம் எதிரொலிக்கும் வகையிலும், இடிகளை வெல்வது {இடிப்பதைப்} போலும், பர்வதங்களை நடுங்கச் செய்யும்படியும் நாதம் செய்தான்.(2) மகவத்தாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, வருணனாலோ வதைக்கப்பட முடியாதவனும், பயங்கரக் கண்களைக் கொண்டவனுமான அவனைக் கண்டதும் வானரர்கள் ஓடிவிட்டனர்[1].(3)

[1] வால்மீகியில் பெருத்த வடிவத்துடன் மதிற்சுவற்றைத் தாண்டி வரும் கும்பகர்ணன், கம்பராமாயணத்தில், ரதத்தில் வந்து பேரழிவை ஏற்படுத்துகிறான்.

Angadha stopping the vanaras

இராஜபுத்திரன் அங்கதன், அவர்கள் ஓடுவதைக் கண்டு, நளன், நீலன், கவாக்ஷன், மஹாபலம் பொருந்திய குமுதன் ஆகியோரிடம் {பின்வருமாறு} கூறினான்:(4) “உங்களுக்குரிய மதிப்பையும், வீரியத்தையும் மறந்து, பிராகிருத ஹரயர்களை {சாதாரணக் குரங்குகளைப்} போல பயத்தில் நடுங்கியவாறே எங்கே செல்கிறீர்கள்?(5) சௌம்யர்களே {நல்ல இயல்புடையவர்களே}, சாது {நல்லது}; திரும்புவீராக. ஏன் உங்கள் பிராணன்களை ரக்ஷித்துக்கொள்கிறீர்கள்? மஹத்தான பீதியை உண்டாக்கும் பொம்மையான[2] இந்த ராக்ஷசன் யுத்தத்திற்குத் தகுந்தவனல்லன்.(6) பிலவங்கமர்களே {தாவிச் செல்பவர்களே}, ராக்ஷசர்களால் உண்டாக்கப்பட்டதும், மஹத்தான பீதியை உண்டாக்குவதுமான இந்த பொம்மையை விக்ரமத்தால் நாம் அழிப்போம். திரும்பி வருவீராக” {என்றான் அங்கதன்}.(7)

[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்தக் கொடூரம் ஒரு கற்பனையே என்றும், கும்பகர்ணனே கூட சூழ்ச்சியால் செய்யப்பட்ட ஒரு யந்திரம்தான் என்றும் இங்கே கூறப்படுகிறது” என்றிருக்கிறது.

Vanaras hurling rocks and trees on Kumbhakarna

பெரும் சிரமத்துடன் ஆசுவாசமடைந்த ஹரயர்கள் {குரங்குகள்}, எங்குமிருந்து ஒன்றுகூடி, விருக்ஷங்களை {மரங்களை} எடுத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் சென்றனர்.(8) மதங்கொண்ட குஞ்சரங்களைப் போன்ற அந்த வனௌகசர்கள் {மதங்கொண்ட யானைகளைப் போன்றவர்களும், வனத்தில் வசிப்பவர்களுமான அந்த வானரர்கள்}, பரம குரோதத்துடன் விரைந்து சென்று கும்பகர்ணனைத் தாக்கினர்.(9) அந்த மஹாபலவான் {கும்பகர்ணன்}, உயர்ந்த கிரி சிருங்கங்களாலும், பாறைகளாலும், புஷ்பித்த உச்சிகளைக் கொண்ட மரங்களாலும் தாக்கப்பட்டாலும் அசைந்தானில்லை.(10) ஏராளமான பாறைகள் அவனது காத்திரங்களில் விழுந்து நொறுங்கின. புஷ்பித்த உச்சிகளைக் கொண்ட மரங்களும் முறிந்து மஹீதலத்தில் விழுந்தன.(11) பெருங்குரோதமடைந்த அவனும் {கும்பகர்ணனும்}, பரம ஆயத்தத்துடன் உதிக்கும் அக்னி வனத்தை எப்படியோ அப்படியே மஹௌஜசர்களான {பேராற்றல்வாய்ந்த} வானரர்களின் சைனியத்தை நாசம் செய்தான்.(12) 

வானரரிஷபர்கள் {வானர்களில் காளைகளான} பலர், குருதியில் நனைந்தவர்களாக செம்மலர்களுடன் கூடிய மரங்களைப் போல பூமியில் விழுந்து கிடந்தனர்.(13) தாவி ஓடிய வானரர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. சிலர் சமுத்திரத்தில் விழுந்தனர். சிலர் ககனத்தில் {வானத்தில்} தஞ்சம் புகுந்தனர்.(14) லீலையாக {விளையாட்டாக} ராக்ஷசனால் வதைக்கப்பட்ட அந்த வீரர்கள், சாகரத்தை எதன் மூலம் கடந்து வந்தனரோ அதே பாதையில் ஓடிச் சென்றனர்.(15) பயத்தால் வர்ணமிழந்த வதனங்களுடன் கூடிய அவர்களில் சிலர், மேடுகளையும், பள்ளங்களையும் அடைந்தனர். சிலர் பர்வதங்களில் தஞ்சம்புகுந்தனர். இரிக்ஷங்கள் {கரடிகள்} மரத்தில் ஏறின.(16) சிலர் ஆர்ணவத்தில் {கடலில்} மூழ்கினர். சிலர் குகைகளில் தஞ்சம்புகுந்தனர். வேறு சிலர் நிலைகொள்ளாமல் ஓடினர்.{17} சிலர் தரையில் விழுந்தனர். சிலர் இறந்தது போல் உறங்கினர்[3].(17,18அ)

[3] வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடைத் தேய்க்கும் வாரி
நீரிடைக் குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும்
தேரிடை எற்றும் எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்று (7450)
பறைந்தனர் அமரர் அஞ்சி பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன பறவை எல்லாம் நெடுந்திசை நான்கும் நான்கும்
மறைந்தன பெரும் தீர்த்த மலைக்குலம் வற்றி வற்றிக்
குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச (7451)

- கம்பராமாயணம் 7450, 7451ம் பாடல்கள், யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்

பொருள்: கடலில் அமுக்குவான், கையால் எடுத்து நிலத்தில் தேய்ப்பான். நீரில் மூழ்கச் செய்வான். மேலும் நெருப்பில் நேராக வீசுவான். தேரில் அடித்து அழிப்பான். எட்டுத் திசைகளிலும் சிதறிக் கிடக்கும்படி இறைப்பான். மரத்தின் அடிப்பகுதியில் மோதி அழிப்பான். சுழற்றி மலைகளில் மோதி அழிப்பான்.(7450) தேவர்கள் அஞ்சிப் பறந்து ஓடினர். எங்கும் பிணக்கூட்டங்கள் தொகுதியாக நிறைந்தன.  திசைகள் எட்டிலும் பறவைகள் அனைத்தும் மறைந்தன. மலைக்கூட்டங்கள் பெருமையை இழந்தன. குரங்குக் கூட்டம் சிறிது சிறிதாக வற்றிக் குறைந்தது. {இவ்வாறு} யமனும் கூசும்படி கொன்றான் {கும்பகர்ணன்}.(7451)

பங்கமடைந்த {முறியடிக்கப்பட்ட} அந்த வானரர்களைக் கண்ட அங்கதன், இதைக் கூறினான், “பிலவங்கமர்களே {தாவிச் செல்பவர்களே}, நிற்பீராக. யுத்தத்தைத் தொடர்வோம். திரும்பி வருவீராக.(18ஆ,19அ) இந்த மஹீயைச் சுற்றி வந்தாலும் பங்கமடைந்தவர்களுக்கான ஸ்தானத்தை {முறியடிக்கப்பட்டவர்களுக்கான புகலிடத்தைக்} காணமுடியாது. அனைவரும் திரும்பி வருவீராக. ஏன் பிராணன்களை ரக்ஷித்துக் கொள்கிறீர்கள்?(19ஆ,20அ) அஸங்ககதி பௌருஷர்களே {கூட்டத்திற்குப் பொருந்தாத நிலை அடைந்த மனிதர்களே}, நிராயுதமாக ஓடிப் போகும் உங்களைக் கண்டு உங்களின் தாரங்கள் {ஆயுதமில்லாமல் ஓடிச்செல்லும் உங்களைக் கண்டு உங்கள் மனைவியர்} சிரிப்பார்கள். {இப்படி} ஜீவிப்பவர்களுக்கு மரணமே மேலாகும்.(20ஆ,21அ) நாம் அனைவரும் மஹத்தான, விஸ்தீரணமான குலங்களில் பிறந்தோம்.{21ஆ} பிராகிருத ஹரயர்களை {சாதாரணக் குரங்குகளைப்} போல பயத்தால் நடுங்கியவர்களாக எங்கே செல்லப் போகிறீர்கள்? வீரியத்தைக் கைவிட்டுப் பீதியால் ஓடிச் செல்பவர்களான நீங்கள் நிச்சயம் அநாரியர்களே {இழிவானவர்களே}.(21ஆ,22) அப்போது ஜனங்களின் சபையில் உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ளும் வகையில் வீண் தற்புகழ்ச்சிகள் செய்தீர்களே, அவை எங்கே சென்றன?(23) 

எவன் வீழ்த்தப்பட்டும் ஜீவிப்பானோ, அவன் பயங்கொள்ளி என்று தூற்றப்படுவதைக் கேட்பான். சத்புருஷர்களால் பின்பற்றப்படும் மார்க்கத்தை சேவிப்பீராக {நன்மக்களின் வழியைப் பின்பற்றுவீராக}. பயத்தை விட்டொழிப்பீராக.(24) அல்ப ஜீவிதமிருந்தால் கொல்லப்பட்டவர்களாக பிருத்வியில் கிடப்போம். யுத்தத்தில் வீழும் நாம் அடைதற்கரிய பிரம்மலோகத்தையே அடைவோம்.(25) வானரர்களே, ஆஹவத்தில் சத்ருக்களை {போரில் பகைவரைக்} கொன்று கீர்த்தியை அடைவோம். அல்லது கொல்லப்பட்டு வீரலோகத்தின் வசுவை {வீரர்களின் உலகத்திற்குரிய செல்வத்தை} நாம் அனுபவிப்போம்.(26) சுடர்மிகும் நெருப்பை அணுகும் பதங்கத்தை {விட்டிற்பூச்சியைப்} போலக் காகுத்ஸ்தரை {ராமரைக்} கண்டுவிட்டுக் கும்பகர்ணன் ஜீவனுடன் செல்லமாட்டான்.(27) ஏராளமானவர்களும், நற்பெயருடன் கூடியவர்களுமான நாம், ஏகனால் பங்கம் செய்யப்பட்டு {தனியொருவனால் முறியடிக்கப்பட்டு}, பிராணன்களை ரக்ஷித்துக் கொண்டு, தப்பி ஓடுவோமேயானால் நம் புகழ் நாசமடையும்” {என்றான் அங்கதன்}.(28) 

அப்போது ஓடிக் கொண்டிருந்தவர்கள், இவ்வாறு பேசியவனும், கனகாங்கதம் {பொன்வளை} பூண்டவனும், சூரனுமான அந்த அங்கதனிடம், சூரர்களால் பழிக்கத்தக்க {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னார்கள்:(29) “இராக்ஷசன் கும்பகர்ணன் எங்களுடன் கோரமான யுத்தத்தைச் செய்துவிட்டான். நமக்கு இது நிற்பதற்கான காலமல்ல. ஜீவிதமே விரும்பத்தக்கது” {என்றனர்}.(30)

பயங்கரக் கண்களைக் கொண்ட அந்தப் பயங்கரமானவன் {கும்பகர்ணன்} வருவதைக் கண்ட அந்த வானரயூதபர்கள் {வானரக்குழு தலைவர்கள்} அனைவரும் இவ்வாறான வசனத்தைச் சொல்லிவிட்டு, திசைகள் அனைத்திலும் சிதறி ஓடினர்.(31) ஓடிச்செல்லும் அந்த வலீமுக வீரர்கள் அனைவரும், அப்போது அங்கதன் சொன்ன அனுமானங்களால் சாந்தமடைந்து திரும்பி வந்தனர்.(32) மதிமிக்கவனான வாலிபுத்திரனால் மகிழ்ச்சியடைந்த அந்த வானரயூதபர்கள் அனைவரும், அவனது {அங்கதனின்} ஆணைக்காகக் காத்து நின்றனர்.(33) இரிஷபன், சரபன், மைந்தன், தூம்ரன், நீலன், குமுதன், சுஷேணன், கவாக்ஷன், ரம்பன், தாரன், துவிவிதன், பனசன், வாயுபுத்திரன் {ஹனுமான்}[4] உள்ளிட்ட முக்கியர்கள் மிகத் துரிதமாகப் போர்க்களத்திற்குச் சென்றனர்.(34)

[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கு ஹனுமான் ஓடிப் போய்த் திரும்பி வரவில்லை. ருஷபாதிகளுடன் கலந்து கும்பகர்ணனோடு யுத்தஞ்செய்ய மீளவும் வந்தானென்று தெரிகிறது” என்றிருக்கிறது. 

யுத்த காண்டம் சர்க்கம் – 066ல் உள்ள சுலோகங்கள்: 34

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை