Friday, 9 August 2024

ஒற்றன் சார்தூலன், தூதன் சுகன் | யுத்த காண்டம் சர்க்கம் - 020 (37)

The envoy, Suka | Yuddha-Kanda-Sarga-020 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுகனை சுக்ரீவனிடம் தூதனுப்பிய ராவணன்; சுகனைக் கைப்பற்றிய வானரர்கள்; கொல்லப்படுவதைத் தடுத்து அவனை விடுவித்த ராமன்...

Suka speaking to Sugreeva

பிறகு, வீரியவானும், சார்தூலன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், முகாமிட்டு, சுக்ரீவனால் பாலிக்கப்பட்ட துவஜனீயை {கொடிகளுடன் கூடிய படையை} நெருங்கி வந்து பார்த்தான்[1].(1) துராத்மாவான ராக்ஷசராஜன் ராவணனின் சாரனான {ஒற்றனான} அந்த ராக்ஷசன், பதற்றமின்றி அனைத்துப் பக்கங்களில் இருந்து அதை {படையைக்} கண்டு, வேகமாகத் திரும்பி,{2} லங்கையை அடைந்து, ராஜனிடம் இதைச் சொன்னான்:(2,3அ) "இரண்டாம் சாகரத்தைப் போல, ஆழம் மிகுந்ததும், அளவிடமுடியாததுமான இந்த வானர, ரிக்ஷௌகம் {வானரர்களும், கரடிகளும் அடங்கிய கூட்டம்} லங்கையை நெருங்குகிறது.(3ஆ,4அ) உத்தமர் தசரதரின் புத்திரர்களும், ரூபசம்பன்னர்களும் {அழகு நிறைந்தவர்களும்}, மனவலிமைமிக்கவர்களும், உடன்பிறந்தவர்களுமான இந்த ராமலக்ஷ்மணர்கள், சீதையின் பதம் வர, சாகரத்தை அடைந்து முகாமிட்டிருக்கின்றனர்.(4ஆ,5) மஹாராஜாவே, ஆகாசத்தில் வலம்வந்தால், பலம் {படை}, பத்து யோஜனைகள் எங்கும் பரவியிருப்பதாகத் தெரிகிறது. சீக்கிரம் தத்துவபூதத்தை {உண்மையை} அறிந்து கொள்வதே உமக்குத் தகும்.(6) மஹாராஜாவே, உம்முடைய தூதர்களை சீக்கிரமே அனுப்பி கவனித்து அறிந்து கொள்வதே தகும். இதில் தானத்தையாவது, சாமத்தையாவது, பேதத்தையாவது பயன்படுத்த வேண்டும்" {என்றான் சார்தூலன்}.(7)

[1] இந்த சர்க்கம் முழுவதும் செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இல்லை. கம்பராமாயணத்திலும் சுகன் தூது குறித்துச் சொல்லப்படவில்லை.

இராக்ஷசேஷ்வரன் ராவணன், சார்தூலனின் சொற்களைக் கேட்ட உடனேயே கலக்கமடைந்து, சம்பிரதாயப்படி {என்ன செய்ய வேண்டும் என்ற} அர்த்தத்தைத் தனக்குள் தீர்மானித்துக் கொண்ட பிறகு, அர்த்தவிதங்களை அறிந்தவர்களில் சிறந்தவனும், சுகன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(8,9அ) "சுக்ரீவ ராஜனிடம் விரைந்து சென்று, அச்சமில்லாமலும், கலக்கமில்லாமலும் இந்தச் செய்தியை என் வசனமாகவே மிகச் சிறந்த மென்மையான குரலில் {பின்வருமாறு} சொல்வாயாக,(9ஆ,10அ) "மஹாராஜா, ரிக்ஷராஜாவின் மகனான நீ நற்குலத்தில் பிறந்தவன்; மஹாபலவான். உனக்கு {இந்தப் போரால்} சிறிய அர்த்தமும் இல்லை, அனர்த்தமும் இல்லை. மேலும், ஹரீசா {குரங்குகளின் தலைவா}, நீ எனக்கு உடன்பிறந்தவனைப் போன்றவன்.(10ஆ,இ) சுக்ரீவா, ராஜபுத்திரனின் பாரியையை நான் அபகரித்து வந்தேன். அதில் உனக்கு என்ன? மதிமிக்கவனே, கிஷ்கிந்தைக்குத் திரும்பிச் செல்வாயாக.(11) இந்த லங்கையை ஹரிக்கள் {குரங்குகள்} அடைவது எவ்வகையிலும் சாத்தியமில்லை. தேவர்களும், கந்தர்வர்களும் கூட {லங்கையை அடைவது சாத்தியமில்லை}. நர வானரர்களைக் குறித்து {மனிதர்களையும், குரங்குகளையும் குறித்து} என்ன சொல்வது?" {என்று சொல்வாயாக என்றான் ராவணன்}.(12)

அப்போது, இராக்ஷசேந்திரனால் ஆணையிடப்பட்டவனும், ரஜனீசரனுமான அந்த சுகன், விஹங்கமமாக மாறி, அம்பரத்தில் துரிதமாகப் பறந்து சென்றான்.(13) அவன் {சுகன்}, சாகர தூரத்திற்கு உள்ள வெளியில் தொடர்ந்து சென்று, அம்பரத்தில் {வானத்தில்} நின்றபடி சுக்ரீவனிடம் {ராவணன் சொல்லி அனுப்பிய} அந்த வாக்கியத்தைக் கூறினான்.(14) துராத்மாவான ராவணன் ஆணையிட்டபடியே அனைத்தையும் சொன்னவன் வசனத்தை உரைக்கும்போதே வானரர்கள் துரிதமாக எழுந்து அவனை அடைந்தனர்.{15} அவர்கள் சீக்கிரமே தங்கள் முஷ்டிகளால் தாக்கத் தொடங்கினர்.(15,16அ) பிலவங்கமர்கள் அந்த நிசாசரனை {இரவுலாவியை} வலுக்கட்டாயமாகப் பிடித்த உடனேயே ககனத்திலிருந்து பூதலத்தில் {வானத்தில் இருந்து பூமியில்} வீசி எறிந்தனர்.(16ஆ,17அ) 

வானரர்களால் பீடிக்கப்பட்ட சுகன், இந்த வசனத்தைக் கூறினான், "தூதர்கள் கொல்லப்படுவதில்லை. காகுத்ஸ்தரே, வானரர்களைத் தடுப்பது நல்லது.(17ஆ,18அ) தலைவனின் மதத்தை {கருத்தை} விட்டுவிட்டு, தன் மதத்தைப் பேசி, தூதில் சொல்லப்படாததைச் சொல்பவன் எவனோ, அந்தத் தூதனே வதைக்கப்படத் தகுந்தவன்" {என்றான் சுகன்}.(18ஆ,19அ)

புலம்பலுடன் கூடிய {முறையிடும் வகையிலான} சுகனின் வசனத்தைக் கேட்ட ராமன், தாக்கிக் கொண்டிருந்த சாகை மிருகரிஷபர்களிடம் {கிளைகளில் வாழும் விலங்குகளில் சிறந்தவர்களிடம்}, "வதைக்காதீர்" என்றான்.(19ஆ,20அ)

ஹரிக்களின் அபயத்தை {இனி குரங்குகளிடம் இருந்து பயமில்லை என்று} உணர்ந்த அவன் லகுவான சிறகுகள் படைத்தவனாக மாறி, அந்தரிக்ஷத்தில் நின்று, மீண்டும் {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(20ஆ,21அ) "சுக்ரீவரே, சத்வசம்பன்னரே {வலிமை நிறைந்தவரே}, மஹாபலவானே, பராக்கிரமரே, லோகராவணரான {உலகத்தைக் கதறச் செய்பவரான} ராவணரிடம் நான் சொல்ல வேண்டியதென்ன?" {என்று கேட்டான் சுகன்}.(21ஆ,22அ)

இவ்வாறு சொல்லப்பட்ட போது, மஹாபலவானும், பிலவங்கமர்களில் ரிஷபனுமான அந்த பிலவகாதிபன் {தாவிச் செல்வபர்களில் சிறந்தவனும், தாவிச் செல்பவர்களின் தலைவனுமான சுக்ரீவன்}, ரஜனீசரனின் சாரனும், சுத்தனுமான {இரவுலாவியான ராவணனின் ஒற்றனும், களங்கமற்றவனுமான} சுகனிடம், மனவலிமையுடன் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்.(22ஆ,இ) "கொல்லப்படத்தகுந்தவனே {ராவணா}, நீ என் மித்ரன் {நண்பன்} அல்லன்; கருணைக்குத் தகுந்தவனல்லன்; எனக்கு உபகாரம் செய்தவனல்லன்; இராமரின் பகைவனாக இருப்பதால் எனக்குப் பிரியனும் அல்லன். எனவே, பந்துக்கள் சகிதனான நீ, வாலியைப் போல வதைக்கப்படத்தகுந்தவனே[2].(23) ரஜனீசரா {இரவுலாவியே, ராவணா}, சுதன்களுடனும், பந்துக்களுடனும், ஞாதிகளுடனும் சேர்த்து உன்னை நான் கொல்லப் போகிறேன். மஹத்தான பலத்தால் {பெரும்படையால்} உங்கள் அனைவருடனும் கூடிய மொத்த லங்கையையும் பஸ்மமாக்குவேன் {சாம்பலாக்குவேன்}.(24) 

[2] இதை அங்கதன் கேட்டிருந்தால், சுக்ரீவனைக் குறித்து என்ன நினைப்பான்? அடுத்து அங்கதன் பேசும்போது, இதைக் கேட்டதற்கான சுவடே அவன் பேச்சில் தெரியவில்லை. எனவே, சுக்ரீவன் சுகனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கதன் அருகில் இருந்திருக்க மாட்டான் என்று தெரிகிறது. ஒருவேளை இந்த சர்க்கம் முழுவதும் இடைச்செருகலாகவும் இருக்கலாம்.

இராவணா, ராகவரிடம் {ராமரிடம்} இருந்து நீ தப்பமாட்டாய். மூடா, இந்திரன் உள்ளிட்ட அனைவராலும் காக்கப்பட்டாலும், அந்தர்ஹிதமானாலும் {மாயையால் புலப்படாமல் மறைந்து போனாலும்}, சூரியபதம் அடைந்தாலும், அதேபோல பாதாளத்தில் பிரவேசித்தாலும்,{25} கிரீசனின் அம்புஜ பாதங்களை {சிவனின் தாமரைப் பாதங்களை} நாடினாலும் அனுஜனுடன் {உன் தம்பி கும்பகர்ணனுடன்} சேர்த்து ராமரால் நீ கொல்லப்படுவாய்.(25,26) மூவுலகங்களிலும் உள்ள பிசாசர்களிலோ, ராக்ஷசர்களிலோ, கந்தர்வர்களிலோ, அசுரர்களிலோ இத்தகையவனான உன்னைப் பாதுகாக்கக்கூடியவன் எவனையும் நான் காணவில்லை.(27) முதுமையால் தளர்ந்த கிருத்ரராஜா {கழுகரசர்} ஜடாயுவை நீ இழிவாகக் கொன்றாய். ராமரின் சன்னிதானத்திலோ {முன்னிலையிலோ}, லக்ஷ்மணர் அருகில் இருக்கும்போதோ,{28} விசாலாக்ஷியான சீதையை நீ கொண்டு சென்றாயா என்ன? எவளைக் கைப்பற்றியிருக்கிறாய் என்பதை நீ புரிந்துகொள்ளவேயில்லை.(28,29அ)  மஹாபலம் பொருந்தியவரும், மஹாத்மாவும், ஸுரர்களாலும் வெல்லப்பட முடியாதவரும் எவரோ, அத்தகைய ரகுசிரேஷ்டரே {ரகுகுலத்தில் சிறந்த ராமரே} உன் பிராணனைப் பறிக்கப் போகிறார் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை" {என்றான் சுக்ரீவன்}.(29ஆ,30அ)

பிறகு, ஹரிசத்தமனும், வாலியின் மகனுமான அங்கதன், {பின்வருமாறு} பேசினான், "மஹாபிராஜ்ஞரே {அனைத்தையும் அறிந்தவரே, சுக்ரீவரே}, இவன் தூதனல்லன். சாரகனாகவே {ஒற்றனாகவே} எனக்குத் தெரிகிறான்.(30ஆ,31அ) இவன், இங்கே நின்று கொண்டு, நமது சர்வ பலத்தையும் மதிப்பீடு செய்கிறான் {படைகள் அனைத்தையும் கணக்கிடுகிறான்}[3]. இவனைக் கைப்பற்றுவோம். இவன் லங்கைக்குத் திரும்ப வேண்டாம். இதுவே எனக்கு ஏற்புடையதாகத் தெரிகிறது" {என்றான் அங்கதன்}.(31ஆ,32அ)

[3] அங்கதன், சுகனும், சுக்ரீவனும் பேசிக் கொண்டிருக்கையில் தொலைவில் இருந்து கவனித்து, சுக்ரீவனின் அருகில் வந்து சொல்வது போலவே அவனது பேச்சு அமைந்திருக்கிறது.

இராஜனால் {சுக்ரீவனால்} ஆணையிடப்பட்டதும் குதித்தெழுந்த வலீமுகர்கள் {வானரர்கள்}, அனாதரவாக அழுது புலம்பியவனை {சுகனைப்} பிடித்துக் கட்டிப் போட்டனர்.(32ஆ,33அ) சண்டர்களான அந்த வானரர்களால் துன்புறுத்தப்பட்ட சுகன், தசரதாத்மஜனும் மஹாத்மாவுமான ராமனை நோக்கி {பின்வருமாறு} அலறினான்:(33ஆ,34அ) "என் சிறகுகள் பலவந்தமாக இழுக்கப்படுகின்றன. அதே போல, என் கண்கள் தோண்டப்படுகின்றன.{34ஆ} நான் எந்த ராத்திரியில் மரிக்கிறேனோ {இறக்கிறேனோ}, எந்த ராத்திரியில் ஜனித்தேனோ {பிறந்தேனோ}, அதற்கிடைப்பட்ட காலத்தில் எந்தெந்த அசுபங்கள் என்னால் செய்யப்பட்டனவோ,{35} அவை அனைத்தும் ஜீவிதத்தைத் துறந்து நான் அழியும்பட்சத்தில் உம்மையே வந்தடையும்" {என்றான் சுகன்}.(34ஆ-36அ)

அவனுடைய அந்தப் புலம்பலைக் கேட்ட ராமன், அவனைக் கொல்லவிடவில்லை. வானரர்களிடம் ராமன், "தூதனாக வந்தவனை {கட்டில் இருந்து} விடுவிப்பீராக" என்று கூறினான்.(36ஆ,37)

யுத்த காண்டம் சர்க்கம் – 020ல் உள்ள சுலோகங்கள்: 37

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை