Thursday 18 July 2024

கிஷ்கிந்தை முதல் தென்கடல் வரை | யுத்த காண்டம் சர்க்கம் - 004 (125)

Kishkindha to southern ocean | Yuddha-Kanda-Sarga-004 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரப் படை லங்கைக்குப் புறப்பட நல்ல நேரத்தைத் தீர்மானித்து, நற்சகுனங்களைக் கண்டது. கடற்கரையை அடைந்த படை...

Rama on Hanuman and Lakshmana on Angada

மஹாதேஜஸ்வியும், சத்திய பராக்கிரமனுமான ராமன், ஹனூமதனின் வாக்கியத்தை தொடக்கம் முதல் முறையாகக் கேட்ட பிறகு {பின்வருமாறு} பேசினான்:(1) "பயங்கர ராக்ஷசனின் {ராவணனின்} எந்த லங்காம்புரீயை நீ சொன்னாயோ, அதை நான் சீக்கிரமே அழிப்பேன். இதை உனக்கு சத்தியமாகச் சொல்கிறேன் {என்று ஹனுமானிடம் சொல்லிவிட்டு, சுக்ரீவனிடம்}.(2) சக்ரீவா, திவாகரன் மத்தியத்தை {சூரியன் நடுவானை} அடைந்திருக்கிறான். விஜயத்திற்குத் தகுந்த முஹூர்த்தமான இந்த {அபிஜித்} முஹூர்த்தத்திலேயே பிரயாணம் செய்ய விரும்புகிறேன்.(3) 

சீதையைக் கடத்திச் சென்றவன் {ராவணன்}, ஜீவிதத்துடன் எங்கே செல்லப் போகிறான்?{4அ} விஷம் பருகிய ஆதுரன் {நோயாளி}, ஜீவிதாந்தத்தில் {தன் வாழ்வின் இறுதியில்} அம்ருதத்தை ஸ்பரிசித்து, {ஜீவிதத்தில்} ஆசை கொள்வதைப் போல, என் பிரயாணத்தைக் கேட்கும் சீதையும், மீண்டும் ஜீவிதத்தில் ஆசை {வாழ்வில்} கொள்வாள்.(4,5அ) இன்று உத்தர பல்குனி {உத்தரம் நட்சத்திரம்}. நாளை {சந்திரனுடன்} ஹஸ்தம் சேரப் போகிறது. சுக்ரீவா, படைகள் அனைத்தும் சூழ நாம் பிரயாணிப்போம்[1].(5ஆ,6அ)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இன்று உத்தரபல்குனீ நக்ஷத்ரம் என்கையால் அன்றைத் தினம் பௌர்ணமாசி யென்று தெரிகிறது. ஆகையால் பங்குனி மாதத்துப் பௌர்ணமாஸியினன்று ப்ரயாணமென்று ஏற்படுகிறது. புநர்வஸுவில், ஸாதன தாரையாயிருக்கின்றது. இது தாரா பலன். அதாவது ஜன்மநக்ஷத்ரம் முதல், தினநக்ஷத்ரம் வரையில் எண்ணி ஒன்பதால் வகுத்து வந்த மிச்சம் 1 ஆனால் ஜன்மம், அதன் பலன் ரோகம்.  2 ஆனால் ஸம்பத்து. 3 ஆனால் விபத்து, கஷ்டம், 4 ஆனால் க்ஷேமம். 5 ஆனால் பரத்யக்-இதை ப்ரயாணம் தவிர மற்றை விஷயங்களின் சுபமன்றென்பர். 6 ஆனால் ஸாதனம், கார்யசித்தி. 7 ஆனால் நைதனம்-கெடுதி. 8 ஆனால் மைத்ரம், இதனால் ஸுகமும், லாபமும் கிடைக்கும். 9 ஆனால் பரமமைத்ரம், இதுவும் நல்லது. இங்கு {ராமன் பிறந்த} புனர்வஸுவினின்றி {புனர்பூசத்தில் இருந்து} எண்ணினால் உத்தர பல்குனி {உத்தரம்} 6ஆவது நக்ஷத்ரமாகையால் ஸாதனதாரையாகிறது. இதனால் கார்யஸித்தியென்பதைக் கொண்டு இன்றைத் தினமே ப்ரயாணஞ் செய்ய வேண்டுமென்கின்றனன்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸ்ரீராமருடைய ஜன்மநக்ஷத்திரமாகிய புனர்வசுவுக்கு {உத்தர பல்குனி} ஆறாவது நக்ஷத்திரமாகையால் இது ஸாதகத்தாரை. புனர்வசுவுக்கு {ஹஸ்தம்} 7வது நக்ஷத்திரமாகையால் வதத்தாரை" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "இராமனுக்கு உத்தர நக்ஷத்திரம் அனுகூலமானது. ஹஸ்தம் அனுகூலமானதல்ல" என்றிருக்கிறது.

{பயணம்} புறப்படுவதற்கு பாக்கியமான நிமித்தங்கள் {நற்சகுனங்கள்} எனக்குத் தோன்றுகின்றன. இராவணனைக் கொன்று ஜானகியான சீதையை நான் அழைத்து வருவேன்.(6ஆ,7அ) விஜயத்திற்கான மனோரதம் நெருங்குவதை {வெற்றியடையும் என் விருப்பம் ஈடேறப்போவதை} அறிவிக்கும் வகையில், என்னுடைய இந்த நயனத்தின் {கண்ணின்} மேற்பகுதி துடிக்கிறது[2]" {என்றான் ராமன்}.(7ஆ,8அ)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு "உபரிஷ்டாத்³த்³ ஹி நயநம் ஸ்பு²ரமாணம் இத³ம் மம || விஜயம் ஸமநுப்ராப்தம் ஷ²ம்ஸதி இவ மநோ ரத²ம் |" என்பது மூலம். இதில் (நயநம்) என்று ஸாமான்யமாகக் கண்ணைச் சொல்லினும், இடக்கண்ணையே கொள்ள வேண்டும். (உபரிஷ்டாத்³ ஸ்பு²ரமாணம்) என்று மேல்பகத்தில் துடிப்பதாகச் சொல்லுகையால் வலக்கண்ணைச் சொல்லலாகாது. வலக்கண் மேல்பாகத்தில் துடிக்குமாயின் கெடுதியே யென்று ஜ்யோதிஷ சாஸ்த்ரத்தில் சொல்லுகிறது. எப்படியெனில், "கண் கீழ்பாகத்தில் அடிக்கடி துடிக்குமாயின், யுத்தத்தில் தோல்விக்குக் காரணமாம். கண் நுனியில் துடிக்குமாயின் கண்ணைக் கெடுக்கும். கண் அடிபாகத்தில் துடிக்குமாயின் மரணத்தைக் காட்டும். கண் மேல் பாகத்தில் துடிக்குமாயின் மனோதுக்கங்களெல்லாம் தீரும். இதெல்லாம் இடக்கண்ணில் தப்பாது பலிக்கும். வலக்கண்ணில் சொன்னதற்கு விபரீதமாகக் காண்க". ஆகையால் வலக்கண்ணென்று கூறுவது சிந்திக்கத்தக்கதே. இங்ஙனம் ராஜர்" என்றிருக்கிறது. தர்மாலயப்பதிப்பில், "என் இந்த கண் மேலே துடித்துக் கொண்டிருக்கிறது என்கிற காரணத்தால் மனோரதமாயிருக்கிற வெற்றியை கிட்டிவிட்டதாகவே அறிவிக்கிறது" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "என் வெற்றியையும், மனோரத நிறைவையும் சூசிப்பது போல் என்னுடைய (வலது) கண்ணின் மேற்புருவம் துடிக்கிறது" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "என் கண்களின் மேலிமைகள் துடிக்கின்றன" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "என் கண்ணின் மேலிமைத் துடிக்கிறது" என்றிருக்கிறது. விவேக்தேவ்ராய் {பிபேக் திப்ராய்} பதிப்பில், "என்னுடைய இந்த மேலிமை துடிக்கிறது" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "என் வலக்கண் இமை துடிக்கிறது" என்றிருக்கிறது. இடக்கண் என்று நரசிம்மாசாரியர் பதிப்பு மட்டுமே சொல்கிறது. இது நடைமுறையில் இருக்கும் வழக்கத்திற்கு மாறாகவே தெரிகிறது. ஆண்களுக்கு வலக்கண் துடிப்பதே நற்சகுனம் என்று கொள்ளப்படுகிறது. இங்கோ கண்ணின் மேற்பகுதி துடிக்கிறது என்றுதான் இருக்கிறது. எந்தக் கண் என்பது குறிப்பிடப்படவில்லை.

வானரராஜனாலும் {சுக்ரீவனாலும்}, லக்ஷ்மணனாலும் நன்றாகப் பூஜிக்கப்பட்டவனும், அர்த்த கோவிதனும் {நோக்கங்களையும், பொருளையும் நன்கறிந்தவனும்}, தர்மாத்மாவுமான ராமன் மீண்டும் {பின்வருமாறு} சொன்னான்:(8ஆ,9அ) "நீலன், பலம்நிறைந்த நூறாயிரம் {ஒரு லட்சம்} வானரர்களால் சூழப்பட்டவனாக மார்க்கத்தைப் பார்த்துக் கொண்டே {சோதித்தபடியே}, இந்தப் படையின் முன்னே செல்வானாக. {என்று சுக்ரீவனிடம் சொல்லிவிட்டு, நீலனிடம்,}(9ஆ,10அ) நீலா, சேனாபதியே, பழங்களும், கிழங்குகளும் நிறைந்ததும், குளிர்ந்த கானகங்களையும், நீர்நிலைகளையும், ஏராளமான தேனையும் கொண்டதுமான பாதையில் சேனையை வரைவாக அழைத்துச் செல்வாயாக.(10ஆ,11அ) துராத்மாக்களான ராக்ஷசர்கள் பாதையிலுள்ள கிழங்குகளையும், பழங்களையும், நீரையும் மாசுப்படுத்துவார்கள். நீ நித்யம் விழிப்புள்ளவனாக அவர்களிடம் இருந்து {இந்தப் படையை} ரக்ஷிக்க வேண்டும்.(11ஆ,12அ) 

வனௌகஸர்கள் பள்ளங்களிலும் {பள்ளத்தாக்குகளிலும்}, வனதுர்க்கங்களிலும் {காட்டில் அடைதற்கரிய நீர்நிலைகளிலும்}, வனங்களிலும் தாவிச் சென்று, பிறரின் {பகைவரின்} படை, பார்வைக்கப்பால் {மறைத்து} நிறுத்தப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் {ஆய்வு செய்ய வேண்டும்}.(12ஆ,13அ) நம்முடைய இந்த கிருத்யம் {நடந்தே ஆக வேண்டிய நம்முடைய இந்தக் காரியம்} உண்மையில் கோரமானதாகையால், படையில் பலம்குறைந்த ஏதோ கொஞ்சம் பேரும் இங்கேயே {கிஷ்கிந்தையிலேயே} இருக்கட்டும். இதை {இந்தக் காரியத்தை} விக்ரமத்தால் நிறைவேற்றப் போகிறோம்.(13ஆ,14அ) மஹாபலவான்களும், பயங்கரமானவர்களுமான கபிசிம்ஹங்கள் {குரங்குகளில் சிங்கங்கள்}, சாகரத்திற்கு ஒப்பான இந்த படையின் முன்னே நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் செல்லட்டும்.(14ஆ,15அ) கிரிக்கு ஒப்பானவனான கஜனும், மஹாபலவான்களான கவ்யனும், கவாக்ஷனும் செருக்குமிக்க ரிஷபங்கள், கவாங்களுடன் போல {காளைகள், பசுக்களுடன் போல} முன்னே செல்லட்டும்.(15ஆ,16அ) 

பிலவதாம்பதியும், வானரரிஷபனுமான {தாவிச் செல்பவர்களின் தலைவனும், வானரர்களில் காளையுமான} வானரன் ரிஷபன், வானர வாஹினியின் தக்ஷிண பக்கத்தை {வானரப் படையின் வலது பக்கத்தைப்} பாதுகாத்தபடியே செல்லட்டும்.(16ஆ,17அ) வெல்வதற்கரிய வலிமைமிக்க கந்தஹஸ்தத்தை {மதங்கொண்ட யானையைப்} போன்ற கந்தமாதனன், வானர வாஹினியின் பார்ஷ்வ பக்கத்தை {இடது பக்கத்தைப்} பாதுகாத்தபடியே செல்லட்டும்.(17ஆ,18அ) நான், ஐராவதத்தில் ஈஷ்வரனை {இந்திரனைப்} போல, ஹனூமந்தனின் மேல் ஏறிக் கொண்டு, படையின் ஆரவாரத்தை அதிகரித்தபடியே படையின் மத்தியில் செல்வேன்.(18ஆ,19அ) அந்தகனுக்கு ஒப்பான இந்த லக்ஷ்மணன், சார்வபௌமனின் மீது பூதேசனனான திரவிணாதிபதியை {சார்வபௌமன் என்ற யானையின் மீது, பூதங்களின் தலைவனான குபேரனைப்} போல அங்கதன் மீது செல்லட்டும்.(19ஆ,20அ) மஹாசத்வனும், ரிக்ஷராஜனுமான ஜாம்பவான், சுஷேணன், வானரன் வேகதர்சி உள்ளிட்ட இந்த மூவரும் வயிற்றை {வானரப்படையின் நடுப்பகுதியை} ரக்ஷிக்கட்டும்" {என்றான் ராமன்}.(20ஆ,21அ)

வாஹினிபதியும், வானரரிஷபனுமான {படைத்தலைவனும், வானரர்களில் காளையுமான} சுக்ரீவன், ராகவனின் சொற்களைக் கேட்டு, மஹாவீரியர்களான வானரர்களுக்கு {முறைப்படி} கட்டளையிட்டான்.(21ஆ,22அ) அப்போது, யுத்தத்தில் ஆர்வமுடைய அந்த சர்வ வானரகணங்களும், குகைகளிலும், சிகரங்களிலும், மரங்களிலும் இருந்து எழுந்து, விரைவாகத் தாவினர்.(22ஆ,23அ) பிறகு, வானரராஜனாலும் {சுக்ரீவனாலும்}, லக்ஷ்மணனாலும் பூஜிக்கப்பட்ட தர்மாத்மாவான ராமன், சைனியத்துடன் சேர்ந்து தக்ஷிண திசையில் {தென்திசையை நோக்கிச்} சென்றான்.(23ஆ,24அ) அப்போது அவன், வாரணங்களை {ராமன், யானைகளைப்} போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான ஹரிக்கள் {குரங்குகள்} சூழச் சென்றான்.(24ஆ,25அ) அவன் {ராமன் முன்னே} செல்லும்போது, மஹத்தான ஹரிவாஹினியும் {குரங்கப் படையும்} பின்தொடர்ந்தது. சுக்ரீவனால் பாலிக்கப்படும் அவர்கள் அனைவரும், மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.(25ஆ,26அ)

பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்}, அதிகம் கர்ஜித்தபடியும், விளையாட்டாகச் சிரித்துக் கொண்டும், {இசைக்கருவிகளை} இசைத்துக் கொண்டும் தக்ஷிண {தென்} திசையை நோக்கித் தாவிச் சென்றனர்.(26ஆ,27அ) சுகந்தமான மதுவையும் {தேனையும்}, பழங்களையும் பக்ஷித்துக் கொண்டும், பூத்துக் குலுங்கும் மஞ்சரிகளுடன் {பூங்கொத்துகளுடன்} கூடிய மஹாவிருக்ஷங்களை {பெரும் மரங்களைச்} சுமந்து கொண்டும் சென்றனர்.(27ஆ,28அ) செருக்குற்ற சிலர், திடீரென அன்யோன்யம் {ஒருவரையொருவர்} தூக்கிச் சென்றனர். சிலர் கீழே தள்ளினர். வேறு சிலர், விழுந்தவர்களைத் தூக்கினர். இன்னும் சிலர், பிறரைத் தள்ளிக் கொண்டிருந்தனர்.(28ஆ,29அ) இராகவனின் சமீபத்தில் இருந்த ஹரயர்கள் {குரங்குகள்}, "நமக்கு, ராவணன் கொல்லத்தகுந்தவன். சர்வ ரஜனீசரர்களும் அப்படியே {இரவுலாவிகளான ராக்ஷசர்கள் அனைவரும் அவ்வாறே கொல்லத்தகுந்தவர்கள்}" என்று கர்ஜித்தனர்.(29ஆ,30அ)

ஏராளமான வானரர்களுடன் சேர்ந்து முன்னே சென்ற ரிஷபன், நீலன், வீரனான குமுதன் ஆகியோர் பாதையை சோதித்தனர்.(30ஆ,31அ) இராஜா சுக்ரீவன், ராமன், லக்ஷ்மணன் ஆகியோர், சத்ருக்களை அழிக்கவல்லவர்களும், பயங்கரமானவர்களும், பலமிக்கவர்களுமான ஏராளமானோரின் {ஏராளமான வானரர்களின்} மத்தியில் சென்று கொண்டிருந்தனர்.(31ஆ,32அ) பத்துக் கோடி பேர் சூழச் சென்ற வீரனான சதபலி, தனியாக, உறுதியாக நின்றபடி ஹரிவாஹினியை {குரங்குப் படையை} ரக்ஷித்துக் கொண்டிருந்தான்.(32ஆ,33அ) நூறு கோடி பரிவாரங்களுடன் கூடிய கேசரி, பனசன், கஜன், அர்க்கன் ஆகியோர் ஏராளமானோருடன் சேர்ந்து ஒரு பக்கத்தை ரக்ஷித்துக் கொண்டிருந்தனர்.(33ஆ,34அ) ஏராளமான ரிக்ஷங்களால் {கரடிகளால்} சூழப்பட்டவர்களான சுஷேணன், ஜாம்பவான் ஆகியோர், சுக்ரீவனை முன்னிட்டுக் கொண்டு,  பின்பக்கத்தை ரக்ஷித்துக் கொண்டிருந்தனர்.(34ஆ,35அ) அவர்களின் சேனாபதியும், வீரனும், பாய்ந்து செல்பவர்களில் சிறந்தவனும், வானரபுங்கவனுமான {வானரர்களின் முதன்மையானவனுமான} நீலன், தற்கட்டுப்பாட்டுடன் அந்தப் படையைப் பாதுகாத்தான்.(35ஆ,36அ) கபிக்களான {குரங்குகளான} தரீமுகன், பிரஜங்கன், ஜம்பன், ரபஸன் ஆகியோர் பிலவங்கமர்களைத் துரிதப்படுத்தியபடியே எங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(36ஆ,37அ)

பலத்தில் செருக்குடைய அந்த ஹரிசார்தூலர்கள் {குரங்குகளில் புலிகள்}, இவ்வாறே சென்று,{37ஆ} மரங்கள், லதைகளுடன் {கொடிகளுடன்} கூடிய சிறந்த கிரியும், பூத்துக் குலங்கும் சரஸ்களுடனும், வனங்களுடனும், தடாகங்களுடனும் கூடிய சஹ்யத்தை {சஹ்ய மலைத்தொடரை} கண்டனர். (37ஆ,38) இராமனின் சாசனத்தை அறிந்தவர்களும், பயங்கரக் கோபத்தால் பீடிக்கப்பட்டவர்களும், அருகிலுள்ள நகரங்களையும், அதேபோல ஜனபதங்களையும் கைவிட்டு வந்தவர்களையும் உள்ளடக்கியதும், சாகர வெள்ளத்திற்கு ஒப்பாக பயங்கரமானதுமான அந்த மஹத்தான வானரப்படை, மஹாகோஷத்துடன் கூடிய மஹாகோரமான அர்ணவத்தை {பெருங்கடலைப்} போல, வேகமாகச் சென்றது.(39,40) அடிக்கப்பட்ட நல்ல அஷ்வங்களை {குதிரைகளைப்} போல, சூரர்களான அந்த சர்வ கபிகுஞ்சரர்களும் {குரங்குகளில் யானைகளும்}, அந்த தாசரதியின் {தசரதனின் மகனான ராமனின்} பக்கத்தில்  குதித்துக் கொண்டிருந்தனர்.(41)

கபிக்கள் {ஹனுமான், அங்கதன் ஆகிய குரங்குகள்} இருவரால் சுமக்கப்பட்ட அந்த நரரிஷபர்கள் {மனிதர்களில் காளைகளான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், இருபெரும் கிரஹங்களுடன் {குருவுடனும், சுக்ரனுடனும்} சேர்ந்த சந்திரனையும், பாஸ்கரனையும் {சூரியனையும்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(42) வானரராஜனாலும் {சுக்ரீவனாலும்}, லக்ஷ்மணனாலும் பூஜிக்கப்பட்ட தர்மாத்மாவான ராமன், சைனியத்துடன் தக்ஷிண திசையில் {தென்திசையை நோக்கிச்} சென்றபோது,{43} அங்கதன் மீதிருந்தவனும், பூர்ண அர்த்தத்தையும், விழிப்புடைய மனத்தையும் கொண்டவனுமான லக்ஷ்மணன், அந்த ராமனிடம், பரிபூர்ண அர்த்தம் பொதிந்த {பின்வரும்} சுபச் சொற்களைச் சொன்னான்:(43,44) "இராவணனை சீக்கிரமே கொன்று, அபகரிக்கப்பட்ட வைதேஹியையும் {சீதையையும்} அடைந்து, நோக்கம் நிறைவேறியவராக, செல்வச்செழிப்புமிக்க அயோத்தியாவுக்குத் திரும்பப் போகிறீர்.(45) இராகவரே, திவியிலும் {வானத்திலும்}, பூமியிலும் தோன்றும் மஹத்தான நிமித்தங்களை, உமது அர்த்தங்கள் {நோக்கங்கள்} அனைத்தையும் சித்தியாக்குபவையாகவும், சுபமானவையாகவும் நான் பார்க்கிறேன். சேனையின் மீது, சுபமாகவும் {மங்கலமாகவும்}, மிருதுவாகவும், சுகமாகவும் வாயு வீசிக் கொண்டிருக்கிறான்.(46,47அ) இந்த மிருகத்விஜங்கள் {விலங்குகளும், பறவைகளும்}, இன்னொலியுடன் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன. சர்வ திசைகளும் பிரகாசமாக இருக்கின்றன. திவாகரனும் விமலனாக இருக்கிறான் {சூரியனும் தெளிவாகத் தெரிகிறான்}.(47ஆ,48அ) 

பார்க்கவரான உஷனாஸர் {பிருகுவின் வழிவந்தவரான சுக்கிரர்}, தம் ஒளிக்கதிர்களுடன் உமக்குப் பின்னே பிரகாசமாக உதிக்கிறார்.{48ஆ} சுத்தமான பிரஹ்மராசிகள் ஆனவர்களும் {ஞானம் அனைத்திலும் முழுமையான திறம்பெற்றவர்களும்}, சுத்தமானவர்களும், கதிர்களுடன் பிரகாசிப்பவர்களுமான சர்வபரமரிஷிகளும் {சப்தரிஷிகளும் / ஏழு முனிவர்களும்}[3] துருவனை {துருவ நட்சத்திரத்தை} பிரதக்ஷிணம் செய்தபடியே ஒளிர்கிறார்கள்.(48ஆ,49) நம் பிதாமஹரும் {பாட்டனும்}, இக்ஷ்வாகுக்களில் மஹாத்மாவுமான ராஜரிஷி திரிசங்கு[4], தமது புரோஹிதருடன் முன்னே விமலமாக {தெளிவாக} ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.(50) விசாகங்கள் {விசாக நட்சத்திரத்தின் இரண்டு நட்சத்திரங்களும்} விமலமாகப் பிரகாசிக்கின்றன[5]. இது {விசாக நட்சத்திரம்}, மஹாத்மாக்களான இக்ஷ்வாகுக்களுக்கும், நமக்கும் பரம நக்ஷத்திரமாகும்.(51) நைர்ருதர்களின் நைர்ருதிக்குரிய நக்ஷத்திரமான மூலம் {இரவுலாவிகளான ராக்ஷசர்களின் தேவதையான நிர்ருதிக்குரிய மூலம் நட்சத்திரம்}, மூலவதத்துடன் கூடிய {ஒளிவாலுடன் கூடிய} தூமகேதுவால் ஸ்பரிசிக்கப்பட்டு மறைக்கப்படுகிறது {பீடிக்கப்படுகிறது}[6].(52) காலனால் பற்றப்பட்டவர்களின் நக்ஷத்திரங்கள், உரிய காலத்தில் {தீய} கிரஹங்களால் பீடிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ராக்ஷசர்களின் அழிவுக்காகவே நேர்கின்றன.(53) ஆபங்கள் {நீர்நிலைகள்} தெளிவாகவும், சுவையுடனும் இருக்கின்றன. வனங்கள் பழங்களால் நிறைந்திருக்கின்றன. கந்தம் அதிகம் வீசவில்லை. மரங்கள் தங்களுக்குரிய மலர்களுடன் பூத்துக் குலுங்குகின்றன.(54) வியூடங்களாக்கப்பட்ட கபி சைனியம் {அணிவகுக்கபட்ட குரங்குப் படையானது}, பிரபோ {பிரபுவே}, தாரகன் கொல்லப்பட்ட போர்க்களத்தில் தேவர்களின் சைனியத்தைப் போல அதிகம் பிரகாசிக்கிறது[7].{55} ஆரியரே, இவை யாவற்றையுங் கண்டு பிரீதியடைவதே உமக்குத் தகும்" {என்றான் லக்ஷ்மணன்}.(55,56அ)

[3] விவேக்தேவ்ராய் {பிபேக்திப்ராய்} பதிப்பின் அடிக்குறிப்பில், "இவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் ஆகியோராவர். வானத்தில் இருக்கும் உர்சா மேஜர் {பெருங்கரடி வடிவிலான} நட்சத்திரக்கூட்டமே சப்தரிஷி மண்டலம் என்று அறியப்படுகிறது. சப்தரிஷிகள் பிரம்மனின் மானஸப் புத்திரர்களாவர். துருவன், துருவ நட்சத்திரமாவான்" என்றிருக்கிறது.

[4]  விவேக்தேவ்ராய் {பிபேக்திப்ராய்} பதிப்பின் அடிக்குறிப்பில், "திரிசங்கு சூரியகுலத்தில் பிறந்தவனாவான். அவனது புரோஹிதர் (விஷ்வாமித்ரர்), வானில் நிலைக்கும் வரத்தை அவனுக்குக் கொடுத்தான். அதன்பிறகு திரிசங்கு, சொர்க்கத்தில் இருந்து விழத்தொடங்கினான். வானவியல் அடிப்படையில், திரிசங்கு என்பது சதர்ன் கிராஸ் (Southern Cross) என்று அறியப்படுகிறது. இந்த நட்சத்திரக்கூட்டமானது, இந்தியாவில் இருந்து பார்த்தால், ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் தெற்கு அடிவானில் தென்படும்" என்றிருக்கிறது.

[5] விசாகம் நக்ஷத்திரம், அந்த வானரப்படை புறப்பட்ட உத்தர நட்சத்திர தினத்திலிருந்து 5ம் தினத்தில் வருவதாகும்.

[6] மூலம் நட்சத்திரம், அந்த வானரப்படை புறப்பட்ட உத்தர நட்சத்திர தினத்திலிருந்து 8ம் தினத்தில் வருவதாகும். சுந்தர காண்டம் 68 சர்க்கத்தில் வரும் முதல் அடிக்குறிப்பில், "கம்ப ராமாயணத்தில்.... .... .... பன்னிரெண்டாம் நாளில் போய் தென்திசையில் உள்ள கடலைக் கண்டனர்" என்றிருக்கிறது. யுத்தகாண்டத்தின் இந்த சர்க்கத்தில் உத்தரம், ஹஸ்தம், விசாகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களே குறிப்பிடப்படுகின்றன. அதிலும் அந்த வானரப்படை தென்திசைக் கடலை அடைந்த அன்றைய நாளின் நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை. குறிப்பு ஏதும் இருந்தால், கிஷ்கிந்தாவில் பயணம் தொடங்கிய உத்தரம் நட்சத்திரத்தில் இருந்து, அந்த வானரப்படை மஹேந்திர மலையை அடைந்த நாளின் நட்சத்திரம் வரை எண்ணி, அவர்கள் எத்தனை நாட்கள் பயணம் செய்தனர் என்பதைக் கணக்கிடலாம்.

[7]  விவேக்தேவ்ராய் {பிபேக்திப்ராய்} பதிப்பின் அடிக்குறிப்பில், "இது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த புகழ்பெற்ற போராகும். பிருஹஸ்பதியின் மனைவியான தாரையைச் சந்திரன் கடத்திய பிறகு இது {இந்தப் போர்} நடைபெற்றது" என்றிருக்கிறது. இந்த சுலோகம், அந்தப் போரில் தாரகாசுரன் கொல்லப்பட்டபோது, தேவர்களின் படை மகிழ்ச்சியடைந்ததைப் போல, வானரப்படை அதிகம் பிரகாசிப்பதைக் குறிப்பிடுகிறது.

மகிழ்ச்சியடைந்த சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்}, உடன்பிறந்தவனிடம் {ராமனிடம்} இவ்வாறு சொல்லி ஆசுவாசப்படுத்தினான்.{56ஆ} பிறகு, நகங்களையும், பற்களையும் ஆயுதங்களாகக் கொண்ட ரிக்ஷவானர சார்தூலர்களுடன் கூடிய ஹரிவாஹினி {கரடிகளிலும், வானரர்களிலும் புலிகளானவர்களுடன் கூடிய அந்தக் குரங்குப்படை}, மொத்த மஹீயையும் {பூமியையும்} மறைத்தபடியே சென்றது.(56ஆ,57) வானரர்களின் நகங்களாலும், கால்நுனிகளாலும் எழுப்பப்பட்ட பயங்கர புழுதியானது, சவிதனின் பிரபையை {சூரியனின் ஒளியைத்} தடுத்து பர்வதங்கள், வனங்களுடன் கூடிய உலகத்தை மறைத்தது.{58} பயங்கரமான ஹரிவாஹினி {குரங்குப்படையானது}, மேகக்கூட்டங்கள் வானத்தை {மறைப்பதைப்} போல, தக்ஷிணத்தை {தென்திசையை} மறைத்துச் சென்றது.(58,59) சேனை இடைவிடாமல் கடந்து சென்ற போது, நதிகளின் ஓட்டம் அனைத்தும் பல யோஜனைகளுக்கு எதிர்த்துப் பாய்ந்தன.(60) தெளிவான நீரைக் கொண்ட சரஸ்கள் {மடுக்கள்}, மரங்கள் நிறைந்த பர்வதங்கள், சம பூமி கொண்ட பிரதேசங்கள், பழங்கள் நிறைந்த வனங்கள் ஆகியவற்றைச் சுற்றியோ, குறுக்காகவோ, கீழாகவோ மஹத்தான சம்மு {பெரும்படை} புகுந்து சென்றது.(61,62அ) அந்த மஹத்தான சம்முவில் இருந்த அனைவரும், மஹீயை {பூமியை} முழுமையாக மறைத்தபடியும், மகிழ்ச்சியான வதனங்களுடனும் மாருதனுக்கு {வாயுவுக்கு} ஒப்பான வேகத்தில் சென்றனர்.(62ஆ,63அ) 

ஹரயர்கள் {குரங்குகள்} ராகவனின் அர்த்தத்திற்காக, விக்கிரமம் முழுமையாகத் தூண்டப்பட்டவர்களாக,{63ஆ} யௌவன உற்சாகத்தில் பிறந்த செருக்கினால் தங்கள் பலத்தையும், ஆற்றலையும், வீரியத்தையும் பரஸ்பரம் {ஒருவருக்கொருவர்} வெளிப்படுத்தியபடியே அவ்வழியில் சென்றனர்.(63ஆ,64) அவ்வாறே, சில வனகோசரர்கள் {வனத்தில் திரிபவர்களான வானரர்கள் சிலர்} வேகமாகச் சென்றனர். அதேபோல, சில வானரர்கள் குதித்தனர். வேறு சிலர், கில கில சப்தமிட்டபடியே உயரத் தாவினர்.(65) சிலர், வாலாலும், பாதத்தாலும் தரையில் தட்டினர். வேறுசிலர் புஜங்களை {கைகளை} வீசி பர்வதங்களையும், மரங்களையும் பிளந்தனர்.(66) கிரிகோசரர்கள் {மலைகளில் திரிபவர்களான வானரர்கள்}, கிரிகளின் சிகரங்களில் ஏறி மஹாநாதம் செய்தனர். சிலர் சிங்கமுழங்கம் செய்தனர்.(67) அநேக லதாஜாலங்களை {கொடிக்கூட்டங்களை} தங்கள் தொடைகளின் வேகத்தால் சிலர் முறித்தனர். விக்ராந்தர்களான சிலர், எங்கும் திரிந்தபடியே மலைப்பாறைகளையும், மரங்களையும் கொண்டு விளையாடினர்.(68) அந்த மஹீ {பூமி}, ஸ்ரீமான்களும், கோரர்களுமான, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான வானரர்களால் மறைக்கப்பட்டது.(69) மஹத்தான அந்த ஹரிவாஹினி {குரங்குப்படை}, பகலும், இரவும் அணிவகுத்துச் சென்றது. சுக்ரீவனால் பாலிக்கப்படும் சர்வ வானரர்களும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.{70} யுத்தத்தில் திளைப்பவர்கள் அனைவரும், ஒரு கணமும் நில்லாமல் சீதையை விடுவிக்கும் காரணத்திற்காகத் துரிதமாகச் சென்றனர்.(70,71)

அப்போது அந்த வானரர்கள், மரங்கள் அடர்ந்ததும், நானாவித மிருகங்கள் நிறைந்ததுமான சஹ்ய பர்வதத்தை அடைந்து, மலய மலையில் ஏறினர்.(72) இராமனும், சஹ்யம், மலயம் ஆகியவற்றில் இருந்த விசித்திரமான கானகங்களையும், நதிகளையும், பிரஸ்ரவணங்களையும் {மலையருவிகளையும்} பார்த்தபடியே சென்றான்.(73) பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்}, சம்பகம், திலகம் {மஞ்சாடி}, சூதம் {ஒட்டுமா}, அங்கோலம் {அழிஞ்சில்}, சிந்துவாரகம், தினிசம் {நொச்சி}, கரவீரம் {அரளி}, திமிசம் ஆகியவற்றை {ஆகிய மரங்களை} வழிபட்டனர்.(74) அங்கோலம் {அழிஞ்சில்}, கரஞ்ஜம், பிலக்ஷம் {புங்கம்}, நியக்ரோதம் {ஆலம்}, ஜம்பூகம் {நாவல்}, அமலகம் {நெல்லி}, நீப {கடம்பு} மரங்களையும் அந்தப் பிலவங்கமர்கள் வழிபட்டுச் சென்றனர்.(75) பிரஸ்தங்களில் {பீடபூமிகளில்} ரம்மியமாக நிற்கும் விதவிதமான காட்டு மரங்கள், வாயு வேகத்தால் அசைக்கப்பட்டு அவர்களின் {வானரர்களின்} மீது புஷ்பங்களைப் பொழிந்தன.(76) வண்டுகள் மொய்க்கும் மதுகந்தம் நிறைந்த வனங்களில் குளிர்ந்த சந்தனம்போல, சுகமாக ஸ்பரிசித்தபடியே மாருதன் {வாயு} வீசிக்கொண்டிருந்தான்.(77) அந்த சைலராஜன் {சஹ்ய / மலய மலையானவன்}, சிவந்த தாதுக்களால் அதிகம் அலங்கரிக்கப்பட்டிருந்தான். அனைத்துப் பக்கங்களிலும் எழுந்த வாயுவேகத்தில் தாதுக்களில் இருந்து பரவிய புழுதியால், அந்த மஹத்தான வானரப் படை தடுக்கப்பட்டது.(78,79அ)

இரம்மியமான கிரிபிரஸ்தங்களில் {அழகிய மலைத் தாழ்வரைகளில்} எங்கும் நன்றாகப் பூத்துக் குலுங்கும்{79ஆ} கேதகம் {தாழை}, சிந்துவாரம், மனோகரமான வாசந்தி {முல்லை}, கந்தம் நிறைந்த, புஷ்பித்த மாதவி, மல்லிகை பூத்த புதர்கள்,{80} சிரிபில்வம், மதுகம் {இலுப்பை}, வஞ்சுள {மகிழ} மரங்கள், அதேபோல, வகுலம், ரஞ்ஜகம், திலகம், நன்றாகப் புஷ்பித்த நாகவிருக்ஷம்,{81} சூதம் {மாமரம்}, பாடலிகம், அதேபோல புஷ்பித்த கோவிதாரம், முசுளிந்தம், அர்ஜுனம் {மருதம்}, சிம்சம்பம், அதேபோல் கூடஜம் {வெட்பாலை},{82} ஹிந்தாலம், தினிசம், சூர்ணகம் {இலவு}, அதேபோல, நீபகம் {கடம்பு},{83} நீல அசோகம், அதேபோல சரலம் {மாவலிங்கம்}, அங்கோலம் {அழிஞ்சில்}, பத்மகம் ஆகியவை அனைத்தையும் பிரிய மனங்களுடனும், மகிழ்ச்சியுடனும் பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான குரங்குகள்} கண்டனர்.(79ஆ-84) அந்த கிரியில் வாபிகளுடன் கூடிய ரம்மியமான மடுக்களை, சக்கரவாகங்களும், காரண்டவங்களும் சேவித்தன.{85} நீர்க்காக்கைகளும், கிரௌஞ்சங்களும் அங்கே நிறைந்திருந்தன. வராஹங்கள் {பன்றிகள்}, மான்கள், ரிக்ஷங்கள் {கரடிகள்}, சிறுத்தைகள், சிம்ஹங்கள், பயங்கரமான சார்தூலங்கள் {புலிகள்} ஆகியவை சேவித்தன.{86} நடைவாபிகளுடன் கூடிய ஜலசங்களும் {குட்டைகளும்} அங்கே இருந்தன. பத்மங்கள், சௌகந்திகங்கள், உத்பலங்கள், ஜலத்தில் உண்டாகும் விதவிதமான புஷ்பங்களும் நிறைந்த ஓடைகளும் அங்கே இருக்கின்றன.(85-88அ)

அதன் {சஹ்ய / மலய மலை} உச்சியில் நானாவித துவிஜகணங்கள் {பறவைக்கூட்டங்கள்} பாடிக் கொண்டிருந்தன. வானரர்கள் ஜலத்தில் ஸ்நானம் செய்து, நீரைப் பருகி, அதில் விளையாடினர். வேறு சிலர், அன்யோன்யம் {ஒருவரையொருவர் நீரால்} நனைத்தபடியே சைலத்தில் ஏறினர்.(88ஆ,89) மதங்கொண்ட வானரர்கள், அங்கே அம்ருதகந்தம் கொண்ட பழங்களையும், கிழங்குகளையும், மலர்களையும் பறித்துப் புசித்தனர்.(90) மதுபிங்களர்களான {தேனின் நிறத்தில் இருந்தவர்களான} அந்த வானரர்கள், துரோணமாத்ரம் பிரமாணத்தில் {ஒரு குடத்தின் அளவில்}  தொங்கும் கூடுகளில் {தேன்கூடுகளில்} இருந்து மதுவைப் பருகிக் கொண்டே மகிழ்ச்சியாகச் சென்றனர்.(91) அந்தப் பிலவகரிஷபர்கள் {தாவிச் செல்பவர்களில் காளைகள்}, மரங்களையும், லதைகளையும் {கொடிகளையும்} முறித்து, சிறந்த கிரிகளில் வீசிச் சென்றனர்.(92) வேறு சில கபிக்கள், மரங்களில் கிடைத்த மதுவால் வெறி கொண்டு நாதம் செய்தனர். வேறு சிலர் {மேலும் தேனை அடைவதற்காக} விருக்ஷங்களை அடைந்தனர். இன்னும் சிலர் அதிகமாகக் குடித்துக் கொண்டே இருந்தனர்.(93) விளைந்த நெற்பயிரால் நிறைந்த வசுந்தரையை {பூமியைப்} போல, அந்த ஹரிபுங்கவர்களால் {குரங்குகளில் முதன்மையானவர்களால்} வசுந்தரை நிறைந்ததாகத் திகழ்ந்தது.(94)

Rama seeing the ocean

அப்போது, மஹாபாஹுவும், ராஜீவலோசனனுமான {தாமரைக் கண்களைக் கொண்டவனுமான} ராமன், மஹேந்திரத்தை {மஹேந்திர மலையை} அடைந்து, மரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிகரத்தில் ஏறினான்.(95) தசரதாத்மஜனான ராமன், அந்த சிகரத்தில் ஏறியபிறகு, கூர்மங்கள், மீனங்கள் {ஆமைகளும், மீன்களும்} நிறைந்த நீர்க்கொள்ளிடத்தைக் கண்டான்[8].(96) மஹாகிரிகளான சஹ்யம், மலயம் ஆகியவற்றைக் கடந்த அவர்கள், பயங்கர ஸ்வனம் கொண்ட சமுத்திரத்தைப் படிப்படியாக அணுகினர்.(97) அனைவரின் மனங்களையும் கவரக்கூடியவர்களில் சிறந்தவனான ராமன், சுக்ரீவனுடனும், லக்ஷ்மணனுடனும் சேர்ந்து {மலையில் இருந்து} இறங்கி, உத்தமமான வேலாவனத்திற்குள் {கடற்கரையின் எல்லையோரக் காட்டிற்குள்} விரைவாகச் சென்றான்.(98)

[8] பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்கல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.

- கம்பராமாயணம் 6061ம் பாடல், யுத்த காண்டம், கடல் காண் படலம்

பொருள்: பொங்கிப் பரந்த பெருஞ்சேனை வெளியேயும், உள்ளேயும் சூழ, சங்கினாலான வளைகளை அணிந்த தகைமையுடையவளை {சீதையைப்} பிரிந்த பின்பு, தங்களுக்கு இனமாகிய தேன் மிகுந்த தாமரை மலர்த் தொகுதியும் உறங்கி இதழ்குவிக்கும் இரவு நேரத்திலும் {சீதையின் பிரிவால் வருந்தி} உறங்காத கண்களைக் கொண்டவன் {ராமன்}, கடலைக் கண்ணுற்றான்.

பிறகு, ராமன், அலைகளால் நன்கு கழுவப்பட்ட கற்பாறைகளுடன் கூடிய விசாலமான எல்லையை அடைந்ததும், {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(99) "சுக்ரீவா, இவ்வாறே, நாம் வருணாலயத்தை {பெருங்கடலை} அடைந்துவிட்டோம். பூர்வத்தில் எதைச் சிந்தித்தோமோ, அஃது இதோ நம் முன் வந்திருக்கிறது.(100) சரிதாம்பதியான இந்த சாகரம் தீரமற்றதாக {ஆறுகளின் தலைவனான இந்தக் கடல் மறுகரையில்லாததாக} இருக்கிறது. தகுந்த உபாயமில்லாமல் இந்த அர்ணவத்தை {கடலைக்} கடப்பது சாத்தியமில்லை.(101) எனவே, இந்த வானரப்படை இவ்வாறே இங்கேயே இருக்கட்டும். மறுபக்கத்தை {மறுகரையை} அடைவதற்கான ஆலோசனையை நாம் செய்ய வேண்டும்" {என்றான் ராமன்}.(102)

மஹாபாஹுவும், சீதை அபகரிக்கப்பட்டதால் மனம் நொந்தவனுமான ராமன், சாகரத்தை அடைந்தபிறகு, அவர்கள் அங்கேயே தங்குவதற்காக {பின்வருமாறு} ஆணையிட்டான்:(103) "ஹரிபுங்கவா {குரங்குகளில் முதன்மையானவனே}, சர்வ சேனையும் கடற்கரையில் முகாமிடட்டும். இங்கே நமக்கு சமுத்திர லங்கனம் {கடலைத் தாண்டுவது} குறித்த ஆலோசனை செய்வதற்கான காலம் வாய்த்திருக்கிறது.(104) எவரும், தங்கள் தங்கள் சேனையைவிட்டு எங்கும் செல்ல வேண்டாம். மறைந்திருக்கும் நமக்கான பயத்தை {ஆபத்தை} அறிவதற்காக, சூரர்களான வானரர்கள் {மட்டும்} செல்லட்டும்" {என்றான் ராமன்}.(105)

இராமனின் வசனத்தை லக்ஷ்மணனுடன் சேர்ந்து  கேட்ட சுக்ரீவனும், மரங்கள் நிறைந்த சாகர தீரத்தில் {கடற்கரையில்} சேனையை நிலைநிறுத்தினான்.(106) சாகரத்தின் சமீபத்தில் இருந்த அந்தப் படை, மதுபாண்டுஜல {வெண்ணிற நீரில் தேன் கலந்த} வண்ணத்தில் இரண்டாம் சாகரத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(107) அந்த ஹரிபுங்கவர்கள், எல்லையோர வனத்தை அடைந்து, மஹோததியின் {பெருங்கடலின்} மறுகரையை அடையும் விருப்பத்துடன் அங்கேயே தங்கினர்.(108) அவர்கள் அங்கே இருந்தபோது, சைனியம் உண்டாக்கிய ஸ்வனம், அர்ணவத்தின் மஹாநாதத்தை {கடலின் பேரிரைச்சலை} அடக்கியவாறு நன்றாகக் கேட்டது.(109) சுக்ரீவனால் பாலிக்கப்பட்ட வானரர்களின் அந்த துவஜினி {படை}, ராமனின் அர்த்தத்திற்கான அர்ப்பணிப்புடன் மூன்று வகுப்பாக நிறுத்தப்பட்டது[9].(110) மஹார்ணவத்தை அடைந்த அந்த ஹரிவாஹினி {பெருங்கடலை அடைந்த அந்தக் குரங்குப்படை}, வாயுவேகத்தால் அலைபுரளும் மஹார்ணவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தது.(111) ஹரியூதபர்கள் {குரங்குக்குழு தலைவர்கள்}, எல்லையற்றதும், வெகுதூரத்தில் கரையைக் கொண்டதும், ராக்ஷசகணங்களால் சேவிக்கப்படுவதுமான வருணனின் வசிப்பிடத்தைக் கண்டபடியே அமர்ந்தனர்.(112)

[9] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், "கரடிகள், நீண்ட வால் குரங்குகள், குரங்குகள் என மூன்று பிரிவுகளாக நிறுத்தப்பட்டது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸைன்யம் முழுவதும் மூன்று மண்டலமாகப் பிரிந்திருந்ததென்று கருத்து. அல்லது வானரர்கள் ஒரு பக்கத்திலும், கொண்டை முயல்கள் ஒரு பக்கத்திலும், கரடிகள் ஒருபக்கத்திலுமாக இங்ஙனம் மூன்று விதமாக வென்று கருத்து" என்றிருக்கிறது.

உக்கிரமான முதலைகளுடன் கூடிய அது {கடல்}, நாள் கழிந்து இரவின் தொடக்கத்தில் நுரைபொங்கி சிரிப்பது போலும், அலைகளுடன் ஆடுவதைப் போலும் இருந்தது.(113) அது சந்திரோதயத்தில் {சந்திரன் உதயமாகும் போது} பொங்கியது; அதன் அலைகளில் பல சந்திரபிம்பங்கள் பிரதிபலித்தன. அதில் உக்கிரமான அநிலனின் {வாயுவைப் போன்ற} வேகமுடைய முதலைகளும், திமிகளும், திமிங்கிலங்களும் இருந்தன.(114) வருணாலயம், ஒளிர்வதைப் போன்ற தலைகளுடன் கூடிய புஜங்கங்களால் {பாம்புகளால்} நிறைந்திருந்தது. மஹாசத்வங்களும் {பெரும் உயிரினங்களும்}, நானாவகை பர்வதங்களும் {மலைகளும்} ஆங்காங்கு அடர்ந்திருந்தன.{115} அது கடப்பதற்கரியதாகவும், மார்க்கமற்றதாகவும், அடியற்றதாகவும், அசுராலயமாகவும் திகழ்ந்தது.(115,116அ) மகரங்களும் {சுறாக்களும்}, பாம்புகளும் நிறைந்ததும், காற்றால் கலங்கி வளர்ந்ததுமான அலைகள் பொங்கின; {பிறகு}, அடங்கித் தணிந்தன.(116ஆ,117அ) அக்னி சூர்ணங்களைப் போல {நெருப்புப் பொரிகளைப் போல்} பிரகாசிக்கும் நீரையும், பெரும்பாம்புகளையும் அது கொண்டிருந்தது. எக்காலத்திலும் ஸுர அரி நிலயமாக {தேவர்களின் பகைவரான அசுரர்களின் வசிப்பிடமாகத்} திகழும் அது, சமமில்லாத பாதாளம் வரை ஆழ்ந்திருந்தது.(117ஆ,118அ) 

சாகரம் {கடலானது}, அம்பரத்தை {வானத்தைப்} போலத் தெரிந்தது. அம்பரமோ, சாகரத்திற்கு ஒப்பானதாக இருந்தது. சாகரமும், அம்பரத்தைப் போன்றே பிரித்தறிய முடியாத வகையில் தெரிந்தது.(118ஆ,119அ) நீர் நபத்துடன் {வானத்துடன்} பிணைந்திருந்தது. நபமும் நீருடன் பிணைந்திருந்தது. தாரைகளாலும் {வானத்து நட்சத்திரங்களாலும்}, ரத்தினங்களாலும் {கடலினடியில் உள்ள ரத்தினங்களாலும்} நிறைந்து {பிணைந்து} ஒரே ரூபமாகத் தெரிந்தது.(119ஆ,120அ) அலைகளின் வரிசைகளால் நிறைந்த சாகரம், மேகங்களின் வரிசைகளால் நிறைந்த அம்பரம் என இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாடுமின்றி இருந்தது.(120ஆ,121அ) சிந்துராஜனின் {கடலின்} அலைகள்[10], அன்யோன்யம் மோதிக்கொண்டு, அம்பரத்தில் மஹாபேரியைப் போன்ற பயங்கர ஸ்வனத்துடன் ஒலித்தது.(121ஆ,122அ)

[10]  இங்கே சிந்து நதி குறிப்பிடப்படுவதால், "அன்றைய லங்கை, சிந்து நதி கடலில் கடக்கும் இடத்திற்கு அப்பால் இருந்தது" என்று சில ஆய்வாளர்கள் இந்த சுலோகத்தைக் கொண்டு வாதிடுகின்றனர். இன்றைய ஹம்பி, கிஷ்கிந்தை இல்லையென்றே வைத்துக் கொண்டாலும், வடக்கில் கோதாவரி நதியைத் தாண்டி எந்த இடத்தையும் கிஷ்கிந்தை என்று ராமாயண சுலோகங்களின் அடிப்படையில் ஏற்க முடியாது. கோதாவரிக்குத் தெற்கே ஏதோ மற்றொரு இடத்தில் கிஷ்கிந்தை இருந்தது என்று கொண்டாலும், அந்தக் கிஷ்கிந்தையின் தெற்கில் சிந்து நதியின் முகத்துவாரம் அமைவதற்கான வாய்ப்பிருக்கிறதா என்பதையும், வானரப்படை கிஷ்கிந்தையில் இருந்து மஹேந்திர கிரி வரை தக்ஷிண திசையில் {தென்திசையில்} சென்றது என்று இதே சர்க்கத்தின் 16, 24, 26, 43, 59ம் சுலோகங்களில் குறிப்புகள் இருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஏராளமான ரத்தினங்களுடனும், ஜலநாதத்துடனும் கூடியதாகவும், வாயுவோடு கலந்துவிட்டதாகவும்,{122ஆ} குரோதத்துடன் பொங்குவது போலிருப்பதாகவும், நீர்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளதாகவும், வாதத்தால் {காற்றால்} கலங்கியதாகவும், மஹாத்மாக்களான அவர்கள் {வானரர்கள்} கண்ட ஜலமானது,{123} அநிலனால் {காற்றினால்} கலங்கி, ஆகாசத்தில் அலைகளுடன் நடப்பது போலிருந்தது.(122ஆ-124அ) அப்போது அலைகளின் ஜல நாதத்தைக் கேட்டுக் கலவரமடைந்த ஹரயர்கள் {குரங்குகள்}, சாகரம் அசைந்து கொண்டிருப்பதைப் போலக் கண்டு ஆச்சரியமடைந்து நின்றனர்.(124ஆ,125)

யுத்த காண்டம் சர்க்கம் – 004ல் உள்ள சுலோகங்கள்: 125

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை