Sunday 23 June 2024

இராமனின் மகிழ்ச்சி | சுந்தர காண்டம் சர்க்கம் - 64 (41)

The joy of Rama | Sundara-Kanda-Sarga-63 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானும், அங்கதனும், பிற வானரர்களும் சுக்ரீவனை அடைந்தது. சீதை காணப்பட்டதைக் குறித்து ராமனிடம் சொன்ன ஹனுமான்...

Dadhimukha requesting Angada and Hanuman to see Sugreeva

சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், கபியான ததிமுகன், மகிழ்ச்சியடைந்தவனாக, ராகவனையும், லக்ஷ்மணனையும், சுக்ரீவனையும் வணங்கினான்.(1) அவன் {ததிமுகன்}, சுக்ரீவனையும், மஹாபலவான்களான ராகவர்களையும் வணங்கிய பிறகு, சூரர்களான வானரர்கள் சகிதனாக திவத்தில் எழுந்தான் {வானத்தில் உயர்ந்தான்}.(2) பூர்வத்தில் எப்படி வந்தானோ, அப்படியே துரிதமாகச் சென்ற அவன் {ததிமுகன்}, ககனத்திலிருந்து {வானத்தில் இருந்து}, பூமியில் இறங்கி அந்த வனத்தில் பிரவேசித்தான்.(3) மதுவனத்தில் பிரவேசித்த அவன் {ததிமுகன்}, ஹரியூதபர்கள் அனைவரையும் மதத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும், மதம் தெளிந்து, நீரைக் கழிப்பவர்களாகவும் கண்டான்.(4)

அந்த வீரன், வணக்கத்துடன் கைகளைக் கூப்பிக் கொண்டு, அவர்களை நெருங்கி, அங்கதனிடம் இந்த மென்மையான வசனத்தை மகிழ்ச்சியுடன் சொன்னான்:(5) "சௌம்யா, அஞ்ஞானத்தினாலும், குரோதத்தினாலுமே ரக்ஷகர்கள் உங்களைத் தடுத்தனர். இவ்வாறு தடுக்கப்பட்டது குறித்துக் கோபங்கொள்ள வேண்டாம்.(6) மஹாபலவானே, யுவராஜனான நீ, இந்த வனத்தின் ஈசனும் ஆவாய். மூர்க்கத்தினால் பூர்வத்தில் தோஷம் நடந்துவிட்டது. அதைப் பொறுத்துக் கொள்வதே உனக்குத் தகும்.(7) அனகா {களங்கமற்றவனே}, உன் பித்ருவ்யஸ்யனிடம் {சிற்றப்பனான சுக்ரீவனிடம்} சென்று, வனசாரிகளான இவர்கள் அனைவரும் இங்கே வந்ததைக் குறித்துச் சொன்னேன்.(8) இந்த ஹரியூதபர்களுடன் கூடிய உன் வரவைக் கேட்ட அவன் {சுக்ரீவன்}, பெரும் மகிழ்ச்சியடைந்தான். வனம் தாக்கப்பட்டதைக் கேட்டும் அவன் கோபமடைந்தானில்லை.(9) வானரேஷ்வரனும், உன் பித்ருவ்யனும் {சிற்றப்பனும்}, பார்த்திபனுமான சுக்ரீவன், மகிழ்ச்சியடைந்தவனாக, "அவர்கள் அனைவரையும் சீக்கிரமே அனுப்புவீராக" என்று என்னிடம் சொன்னான்" {என்றான் ததிமுகன்}.(10)

ஹரிசிரேஷ்டனும், வாக்கியவிசாரதனுமான அங்கதன், ததிமுகனின் இந்த மென்மையான வசனத்தைக் கேட்டு, {பின்வரும்} வாக்கியத்தை அவர்களிடம் {தன்னுடன் இருந்த வானரர்களிடம்} உரைத்தான்:(11) "ஹரியூதபர்களே, இந்த விருத்தாந்தத்தை ராமரும் கேட்டிருப்பார் என்று சந்தேகிக்கிறேன். எனவே, பரந்தபர்களே {பகைவீரர்களைக் கொல்பவர்களே}, காரியம் நிறைவேறிய பின்பும் இங்கே இருப்பது நம்மால் பொறுத்துக்கொள்ளக் கூடியதல்ல.(12) வனசாரிணர்களே, விரும்பியபடி மதுவைப் பருகி ஓய்வெடுத்தாகிவிட்டது. எங்கே என் குரு சுக்ரீவர் இருக்கிறாரோ, அங்கே செல்வதைத் தவிர எஞ்சியிருப்பது வேறு என்ன?(13) சர்வ ஹரியூதபர்களும் சேர்ந்து என்னிடம் எதைச் சொல்வீர்களோ அதை நான் செய்வேன். செய்ய வேண்டியனவற்றில் நான் உங்களுக்குக் கீழ்ப்படிந்தவனாக இருப்பேன்.(14) நான் யுவராஜனாக இருப்பினும், ஆணையிடும் ஈசனல்லன். கர்மங்களைச் செய்பவர்களான உங்களிடம் அதிகாரஞ்செலுத்துவது எனக்குப் பொருத்தமானதல்ல" {என்றான் அங்கதன்}.(15)

அங்கதன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த மறுக்கமுடியாத வசனத்தைக் கேட்ட வனௌகசர்கள், மகிழ்ச்சியடைந்த மனங்களுடன் இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(16) "இராஜனே, வானரரிஷபா, பிரபுவாக இருந்தும் எவன் இவ்வாறு பேசுவான்? ஐஷ்வர்யத்தால் மதமத்தமடைந்தவன் எவனும், "சர்வமும் எனதே" என்றே நினைப்பான்.(17) இந்த வாக்கியம் உனக்கே தகுந்தது. வேறு எவருக்குமல்ல. உன்னுடைய பணிவே உன் சுப யோக்யதையை {எதிர்காலத்தில் உனக்கு விளையப் போகும் பாக்கியங்களைச்} சொல்கிறது.(18) ஹரிவீரர்களின் அழிவில்லா பதியான அந்த சுக்ரீவன் எங்கிருக்கிறானோ, அங்கே செல்வதற்கான க்ஷணத்தை எதிர்பார்த்தே நாங்கள் அனைவரும் இதோ வந்திருக்கிறோம்.(19) ஹரிசிரேஷ்டா, உன்னால் விடையளிக்கப்படாத ஹரிக்களால், எங்கேயும் ஓரடி எடுத்து வைப்பதும் சாத்தியமில்லை. உனக்கு இதை சத்தியமாகவே சொல்கிறோம்" {என்றனர் வானரர்கள்}.(20)

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே, அங்கதன், "சரி {நல்லது}, செல்வோம்" என்று மறுமொழி கூறினான். இவ்வாறு சொன்னதும் அந்த மஹாபலவான்கள் வானத்தில் எழுந்தனர்.(21) அந்த ஹரியூதபர்கள் அனைவரும், ஆகாசத்தை நிராகாசமாகச் செய்து துள்ளிப் பாய்ந்தவனை {அங்கதனைப்} பின்தொடர்ந்து, யந்திரத்தில் இருந்து ஏவப்பட்ட அசலங்களை {மலைகளை / கற்பாறைகளைப்} போலப் பாய்ந்தனர்.(22) வேகத்துடன் கூடிய அந்தப் பிலவங்கமர்கள், வாதத்தால் {காற்றால்} இயக்கப்படும் மேகங்களைப் போல, மஹாநாதத்தை வெளியிட்டபடியே, திடீரென அம்பரத்தில் {வானத்தில்} எழுந்தனர்.(23)

அங்கதன் வருவதற்கு முன்பே, வானராதிபனான சுக்ரீவன், சோகத்தால் தவித்த கமலலோசனனான ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(24) "உமக்கு மங்கலம். ஆசுவாசம் அடைவீராக. தேவி காணப்பட்டாள் என்பதில் ஐயமில்லை. {அவள் காணப்படவில்லையெனில்} நாம் விதித்த சமயம் கடந்தும், அவர்களால் இங்கே வர இயலாது.(25) செய்யப்பட வேண்டியது வீணாகிப் போயிருந்தால், மஹாபாஹுவும், பிலவதர்களில் மிகச் சிறந்தவனுமான யுவராஜா அங்கதன் என்னிடம் திரும்பிவரமாட்டான்.(26) செய்ய வேண்டியதைச் செய்யாமல் அத்தகைய உபக்கிரமம் {செயல்பாடு} நிகழ்ந்திருந்தால், அவன் {அங்கதன்}, தீன வதனத்துடன் கூடியவனாக, கலங்கிக் குழம்பிய மனத்துடன் கூடியவனாக இருப்பான்.(27) பிலவகேஷ்வரன் {தாவிச் செல்பவர்களில் தலைவனான அங்கதன்} மகிழ்ச்சியற்றவனாக இருந்தால், பித்ருபைதாமஹர்களுக்கு உரியதும், பூர்வகர்களால் ரக்ஷிக்கப்பட்டதுமான என் மதுவனத்தை அழித்திருக்கமாட்டான்.{28} 

ஸுவ்ரத கௌஸல்யா ஸுப்ரஜா ராம {நல்விரதங்களுடன் கூடியவரே, கௌசல்யையின் நன்மகனே, ராமரே}, ஆசுவாசமடைவீராக.(28,29அ) ஹனூமதனால் தேவி காணப்பட்டாள்; வேறு எவனாலும் இல்லை; சந்தேகமில்லை. இந்தக் கர்மத்தின் சாதனைக்கு ஹேதுவானவன் ஹனூமதனன்றி வேறெவனுமில்லை.(29ஆ,30அ) மதிசத்தமரே {நுண்ணறிவுமிக்கவரே}, சூரியனில் தேஜஸ்ஸைப் போல, ஹனூமதனில் சித்தியும், மதியும், வியவசாயமும் {விடாமுயற்சியும்}, வீரியமும் மாற்றமில்லாதவையாக இருக்கின்றன.(30ஆ,31அ) எதில் ஜாம்பவான் நேதாவாகவும் {தலைவராகவும்}, மஹாபலவானான அங்கதன் பலத்தின் ஈஷ்வரனாகவும் {படைத்தலைவனாகவும்}, ஹனுமான் அதிஷ்டனாகவும் {நிர்வாகியாகவும்} இருப்பார்களோ, அதன் கதி வேறாகிப் போகாது.(31ஆ,32அ) அமிதவிக்கிரமரே {அளவில்லா ஆற்றல்வாய்ந்தவரே}, இப்போது சிந்தனையில் குழப்பம் வேண்டாம்" {என்றான் சுக்ரீவன்}.{32ஆ}

அதேவேளையில், அம்பரத்தின் அருகில், கில, கில சப்தம் {ஆரவாரவொலி} கேட்டது. ஹனூமதனின் கர்மத்தால் செருக்குற்ற கானனௌகசர்களின் {காட்டில் வசிப்பவர்களான வானரர்களின்} நாதம்,{33} சித்தியை {காரிய சாதனையைச்} சொல்வது போல, கிஷ்கிந்தையை அடைந்தது.(32ஆ-34அ) கபிக்களின் அந்த நாதத்தை, அந்தக் கபிசத்தமன் {சுக்ரீவன்} கேட்டபோது, மனத்தில் மகிழ்ச்சியை அடைந்தவனாகத் தன் லாங்கூலத்தை {வாலை} நீட்டிச் சுழற்றினான்.(34ஆ,35அ) அங்கதனையும், வானரனான ஹனூமதனையும் முன்னிட்டுக் கொண்ட அந்த ஹரயர்களும் {குரங்குகளும்}, ராமனை தரிசிக்கும் ஆவலுடன் வந்து சேர்ந்தனர்.(35ஆ,36அ)

அங்கதன் முதலிய அந்த வீரர்கள், பெரும் மகிழ்ச்சியுடனும், மயிர்க்கூச்சத்துடனும், ஹரிராஜன் {சுக்ரீவன்}, ராகவன் ஆகியோரின் சமீபத்தில் இறங்கினர்.(36ஆ,37அ) அப்போது, மஹாபாஹுவான ஹனூமான், சிரம் தாழ்த்தி வணங்கி, தேவியின் {பதிவிரதா} நியதத்தையும், அக்ஷதையையும் {கேடின்றி நலமாக இருப்பதையும்} ராகவனுக்கு அறிவித்தான்[1].(37ஆ,38அ)

[1] கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
அண்டர்நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

- கம்பராமாயணம் 6031ம் பாடல், சுந்தர காண்டம், திருவடி தொழுதபடலம்

பொருள்: "தெளிவாகச் சுருளும் இயல்புடைய அலைகளுடன் கூடிய கடல் சூழ்ந்த இலங்கையின் தெற்கில் உள்ள நகரத்தில், கற்பினுக்கு ஆபரணமானவளை {சீதையை} என் கண்களால் கண்டேன். தேவர்களுக்குந் தலைவா, இனி ஐயத்தையும், இதுகாறும் கொண்டுள்ள துயரத்தையும் நீக்குவீராக" என்று சொல்லி மேலும் விரிவாகக் கூறத் தலைப்பட்டான் ஹனுமான்.

ஹனுமதனின் வதனத்தில் இருந்து, "தேவியைக் கண்டேன்" என்ற அம்ருதத்திற்கு ஒப்பான வசனத்தைக் கேட்டு, ராமனும், லக்ஷ்மணனும் மகிழ்ச்சியை அடைந்தனர்.(38ஆ,39அ) அப்போது பிரீதிமானான லக்ஷ்மணன், அந்தப் பவனாத்மஜனை {வாயுமைந்தனான ஹனுமானைக்} குறித்த நிச்சயமான அர்த்தத்தைப் பிரீதியுடன் கூறிய சுக்ரீவனை பஹுமானத்துடன் {மதிப்புடன்} பார்த்தான்.(39ஆ,40அ) பகைவீரர்களை அழிப்பவனான ராகவன், பரமபிரீதியுடன் ஹனூமந்தனைப் பார்த்தான்.(40ஆ,41)

சுந்தர காண்டம் சர்க்கம் – 64ல் உள்ள சுலோகங்கள்: 41


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை