Monday 20 November 2023

ஹனுமான் மகிமை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 66 (38)

Hanuman’s glory | Kishkindha-Kanda-Sarga-66 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: காலத்தைச் சொல்லி, ஹனுமானின் மஹிமையை நினைவூட்டிய ஜாம்பவான்...

Lord Hanuman and Jambavan
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு

ஜாம்பவான், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமென அநேகருடன் கூடிய ஹரிவாஹினி மனச்சோர்வடைந்திருப்பதைக் கண்டுவிட்டு ஹனுமந்தனிடம் இதைச் சொன்னான்:(1) “வானரலோகத்தின் வீரா, சர்வசாஸ்திரவிதாம்வரா {அனைத்து சாஸ்திர வித்தகர்களில் சிறந்தவனே}, ஹனுமனே, மௌனமாகத் தனிமையை ஆசரித்தவனாக ஏன் பேசாதிருக்கிறாய்?(2) ஹனுமனே, தேஜஸ்ஸிலும், பலத்திலும் ஹரிராஜா சுக்ரீவனுக்கும், ராமலக்ஷ்மணர்களுக்கும் சமமானவனாக நீ இருக்கிறாய்.(3) 

அரிஷ்டநேமியின் {கசியபரின்} புத்திரனும், சர்வ பக்ஷிகளிலும் உத்தமனும், வைனதேயனும் {வினதையின் மகனும்}, மஹாபலவானும், புகழ்பெற்றவனுமான கருத்மானை {கருடனைப்} போன்றவன் நீ.(4) மஹாபலவானும், மஹாவேகம் கொண்டவனும், பெரும்புகழ்பெற்றவனுமான அந்த பக்ஷி {கருடன்}, சாகரத்தில் இருந்து புஜகங்களை {பாம்புகளைத்} தூக்கிச் செல்வதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.(5) அவனது சிறகுகளுக்கு என்ன பலமோ, அவ்வளவு பலம் உன் புஜங்களுக்கு {தோள்களுக்கு} இருக்கிறது. உன் விக்கிரமமும், வேகமும் அவனைக் காட்டிலும் குறைந்தவையல்ல.(6) ஹரிசத்தமா {குரங்குகளில் முதன்மையானவனே}, பலம், புத்தி, தேஜஸ், நல்லியல்பு ஆகியவற்றில் சர்வபூதங்களிலும் {உயிரினங்கள் அனைத்திலும்} நீ விசிஷ்டனாவாய் {மேன்மையான குணம் படைத்தவனாவாய்}.(7) 

அப்சரஸ்களில் சிறந்தவளும், புகழ்பெற்றவளுமான புஞ்சிகஸ்தலை என்ற அந்த அப்சரஸே, ஹரியான {அந்தப் புஞ்சிகஸ்தலையே, குரங்கான} கேசரியின் பத்தினி அஞ்சனை என்று அறியப்படுகிறாள்.(8) தாதா {ஐயா}, ரூபத்தில் ஒப்பற்றவளென மூவுலகங்களிலும் புகழ்பெற்றவள், ஒரு சாபத்தால் புவியில் காமரூபிணியாக கபித்வத்தை {விரும்பிய வடிவை ஏற்பவளாகக் குரங்குத் தன்மையை} அடைந்தாள்.(9) 

வானரேந்திரனும், மஹாத்மாவுமான குஞ்சரனின் பெண்ணானவள் {அஞ்சனை}, ரூப யௌவனசாலினியாக {வடிவில் இளமையில் மிளிர்ந்த} ஒரு காலத்தில், மானுஷ வடிவை ஏற்று, விசித்திர மாலைகளையும், ஆபரணங்களையும், பட்டாடைகளையும் தரித்துக் கொண்டு, மழைக்கால மேகத்தின் ஒளியுடன், பர்வத உச்சியில் உலவிக் கொண்டிருந்தாள்.(10,11) பர்வதத்தின் உச்சியில் இருந்தபோது, விசாலாக்ஷியான {நீள்விழியாளான} அவளது சிவப்பு தலைப்புடைய சுபமான மஞ்சள் வஸ்திரத்தை மாருதன் {வாயு தேவன்} மெல்ல அபகரித்தான்.(12) அப்போது அவன் {வாயு தேவன்}, அவளுடைய உருண்டு திரண்ட தொடைகளையும், நல்ல விகிதங்களில் கட்டமைந்து ஒன்றோடொன்று சேர்ந்த பருத்த ஸ்தனங்களையும், அழகிய முகத்தையும் கண்டான்.(13) அகன்று நீண்ட நிதம்பங்களையும், மெல்லிடையையும் கொண்டவளும், புகழ்பெற்றவளும், சர்வ அங்கங்களும் சுபமாக அமையப்பெற்றவளுமான அவளை {அஞ்சனையைக்} கண்ட பவனன் {வாயு தேவன்}, காமத்தில் மோஹித்தான் {ஆசையில் மதிமயங்கிப் போனான்}.(14) அநிந்தையான {நிந்திக்கத்தகாதவளான} அவளிடம் ஆத்மாவைத் தொலைத்த அந்த மாருதன், அனைத்து அங்கங்களிலும் நேர்ந்த மன்மத அவஸ்தையால், தன் நீண்ட கரங்கள் இரண்டைக் கொண்டும் அவளைத் தழுவினான்.(15)

நன்னடையுடையவளான அவள், இதனால் கலக்கமடைந்து, “இந்த ஏகபத்னி விரதையை நாசம் செய்ய விரும்புகிறவன் எவன்?” என்ற வாக்கியத்தைச் சொன்னாள்.(16)

அஞ்சனையின் சொற்களைக் கேட்ட மாருதன், மறுமொழியாக, “ஸுஷ்ரோணியே {நல்லிடையாளே}, நான் ஹிம்சிக்கமாட்டேன். உன் மனத்தில் பயம் வேண்டியதில்லை.(17) உன்னதமானவளே, எதன் மூலம் உன்னைத் தழுவி மனத்தால் நுழைந்தேனோ, அதனால் உனக்கு வீரியவானும், புத்திசம்பன்னனுமான புத்திரன் {வீரம் மிக்கவனும், புத்தி நிறைந்தவனுமான மகன்} உண்டாவான்.(18) மஹாசத்வனும் {நற்குணமிக்கவனும்}, மஹாதேஜஸ்வியுமான அந்த மஹாபலவான், பராக்கிரமத்திலும், தாவிக் குதிப்பதிலும் எனக்குச் சமமானவனாக இருப்பான்” என்றான் {வாயு தேவன்}.(19)

மஹாபாஹுவே, மஹாகபியே, இவ்வாறு சொல்லப்பட்டதும், உன் ஜனனி {உன்னைப் பெற்றவள்} மகிழ்ச்சியடைந்தாள். பிலவகரிஷபா {தாவிச் செல்பவர்களில் காளையே}, பிறகு, உன்னை ஒரு குகையில் நல்ல முறையில் பெறாமல் பெற்றாள்[1].(20) அதன் பிறகு, பாலனான நீ, மஹாவனத்தில் அப்போது உதித்த சூரியனைக் கண்டு, பழம் என்று நினைத்து, குதித்து திவத்தில் {வானத்தில்} எழுந்தாய்.(21) மஹாகபியே, முன்னூறு யோஜனைகள் சென்றபிறகு, அவன் {சூரியன்} தனது தேஜஸ்ஸால் {உன்னைத்} தள்ளினாலும் நீ மனச்சோர்வு அடைந்தாயில்லை.(22) மஹாகபியே, துரிதமாக அந்தரீக்ஷத்தை {வானத்தை / சொர்க்கத்தை} நெருங்கியதும், உன்னிடம் கோபமடைந்த இந்திரன், தன் தேஜஸ்ஸால் வஜ்ரத்தை உன் மீது ஏவினான்.(23) அப்போது, சைல உச்சியில் உள்ள சிகரத்தில் விழுந்து, இடது பக்க கன்னத்தின் எலும்பு உடைந்தது. அதன் பிறகே {இடது கன்னம் உடைந்தவன் என்ற பொருளில்} ஹனுமான் என்ற பெயரில் நீ அழைக்கப்படுகிறாய்.(24) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், “ப்ரஜஜ்ஞே” என்ற இந்த சொல்லுக்கு “கருவழி பெறாமல் மாயம்போலப் பெற்றாள்” என்ற பொருள் அடைப்புக்குறிக்குள் தரப்படுகிறது.

பிறகு, கந்தவாஹனும் {மணத்தைச் சுமந்து செல்பவனும்}, பிரபஞ்சனனுமான {மரங்களை முறிப்பவனுமான} வாயு, உன்னை சிதைந்தவனாக தானே கண்டு, பெரும் குரோதமடைந்து மூவுலகங்களிலும் வீசாதிருந்தான்.(25) மூவுலகங்களும் அதிர்ச்சியடைந்தது; புவனேஷ்வரர்களான சர்வ ஸுரர்களும் கலக்கமடைந்தனர். மாருதனின் கோபத்தை  தணிக்கத் தொடங்கினர்.(26) சமரில் சித்திய விக்கிரமா {போரில் உண்மையான வீரம் கொண்டவனே}, தாதா {ஐயா}, பவனன் {வாயு} அமைதியடைந்ததும், எந்த சஸ்திரத்தாலும் {ஆயுதங்களால்} அழியாத வரத்தை பிரம்மன் உனக்கு தத்தம் செய்தான்.(27) பிரபுவே, சஹஸ்ரநேத்திரன் {ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரன்} வஜ்ரத்தை ஏவியும், நீ காயமடையாததைக் கண்டு, உனக்கான ஆத்ம பிரீதியுடன், “இஷ்டமரணம் {தன் விருப்பப்படி மரணம் நேரட்டும்}” என்ற உத்தம வரத்தை உனக்கு தத்தம் செய்தான்.(28,29அ) பீமவிக்கிரமா, கேசரியின் க்ஷேத்திரஜபுத்திரனும், மாருதனின் ஔரஸபுத்திரனுமான நீ[2], தேஜஸ்ஸில் அவனுக்கு சமமானவனாக இருக்கிறாய். வத்ஸா {குழந்தாய்}, வாயுவின் மகனான நீ, தாண்டுவதிலும் அவனுக்கு சமமானவனே.(29ஆ,30)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் வரும் அடிக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு, “க்ஷேத்ரஜன், தன் சொந்த மகன். ஔரஸன், தன் மனைவியிடம் வேறு அமானுஷ்ய சக்திகளால் பெறப்பட்ட மகன்.  நியோகம் என்பது தன் மனைவியிடம், வேறு மேன்மையான மனிதர்கள் மூலம் மகனைப் பெற்றுக் கொள்ளுதல். கிருத்ரிமம் என்பது தற்காலத்து குளோனின், டெஸ்ட்யூப் போன்ற முறைகளில் செயற்கை முறையில் பெற்றுக் கொள்ளுதல்”.

இப்போது நாம் {நான்} பிராணன்கள் போனவராக இருக்கிறோம். இப்போது எங்களில் திறமையும், விக்கிரமம் நிறைந்த மற்றொரு கபிராஜாவாக {குரங்குகளின் மன்னனாக} நீயே இருக்கிறாய்.(31) தாதா, திருவிக்கிரமரின் {மூன்றடியில் உலகளந்த வாமனரின்} காலத்தில், சைலங்கள், வனங்கள், கானகங்களுடன் கூடிய பிருத்வியை நான் மூவேழு முறை பிரதக்ஷிணை {இருபத்தோரு முறை வலம் வந்திருக்கிறேன்} செய்திருக்கிறேன்.(32) அப்போது அவ்வாறான தேவசாசனத்தின்படி, அம்ருதம் கடைவதற்கான ஔஷதங்களை நாம் திரட்டினோம். அப்போது எமக்கு மஹத்தான பலம் இருந்தது.(33) இப்போது விருத்தனான {கிழவனாக இருக்கும்} எனக்குப் பராக்கிரமம் முற்றிலும் குறைந்துவிட்டது. தற்போதைய காலத்தில் நீயே எங்களில் சர்வகுணங்களுடன் கூடியவனாக இருக்கிறாய்.(34) 

எனவே, விக்கிராந்தா, வளர்ந்து நிற்பாயாக. பிலவதர்களில் {தாவிச் செல்பவர்களில்} உத்தமன் நீயே. இந்த சர்வவானரவாஹினியும் {வானரப்படை மொத்தமும்} உன் வீரியத்தைக் காண விரும்புகிறது.(35) ஹரிசார்தூலா {குரங்குகளில் சிங்கம் போன்றவனே}, ஹனுமானே, எழுவாயாக. மஹார்ணவத்தை {பெருங்கடலைத்} தாண்டுவாயாக. உன் கதி எதுவோ, அதுவே சர்வபூதங்களுக்கும் மேன்மையானதாகும் {மேன்மையான கதியாகும்}.(36) ஹனுமானே, ஹரயர்கள் அனைவரும் மனம் தளர்ந்திருக்கின்றனர். ஏன் அசட்டையாக இருக்கிறாய்? மஹாவேகம் கொண்ட திரிவிக்கிரம விஷ்ணுவைப் போல நீ தாண்டுவாயாக[3]” {என்றான் ஜாம்பவான்}.(37)

[3] ஏகுமின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர்
ஓகை கொணர்ந்து நம் மன்னையும் இன்னல் குறைவு இல்லாச்
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இக்கடல் தாவும்
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான்.

- கம்பராமாயணம் 4729ம் பாடல், மயேந்திரப்படலம்

பொருள்: “நீர் இக்கடலைத் தாண்டிச் சென்று மீள்வதற்குரிய வேகத்தைப் பெற்றிருக்கிறீர். விரைந்து செல்வீராக. அவ்வாறு சென்று எங்களுக்கு உயிரைக் கொடுத்துப் பெரும் புகழை அடைவீராக. உமது தலைவனாக ராமனையும், {சீதை குறித்த} செய்தி கொண்டு வந்து, இன்னல் குறையாத துன்ப சாகரத்திலிருந்து முற்றும் கடந்து கரையேறச் செய்வீராக” என்று கூறி பிரம்மனின் மகனான ஜாம்பவான் {அனுமனைத்} தூண்டிவிட்டான்.

பிறகு, கபிக்களில் ரிஷபனால் {ஜாம்பவானால்} தூண்டப்பட்டவனும், புகழ்பெற்றவனும், வேகம் நிறைந்தவனும், பவனாத்மஜனுமான கபி {வாயுவின் மகனுமான ஹனுமான்}, அந்த ஹரிவீரவாஹினி பெரிதும் மகிழ்ச்சியடையும் வகையில் தன் ரூபத்தை மஹத்தானதாக்கினான்.(38)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 66ல் உள்ள சுலோகங்கள்: 38

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை