Tuesday 14 November 2023

சுபார்ஷ்வன் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 59 (29)

Suparshva | Kishkindha-Kanda-Sarga-59 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சம்பாதி தன் கதையை விரிவாகச் சொன்னது; சுபார்ஷ்வனிடம் வழிவிடுமாறு கெஞ்சிய ராவணன்; சீதையின் கடத்தலுக்கு சாட்சியான சுபார்ஷ்வன்...

Ravana obstructed by Suparshva, while abducting Sita
This picture was created using Artificial Intelligence in Bing website and edited elsewhere | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கி திருத்தப்பட்ட படம்

அப்போது,[1] அம்ருதச் சுவையில் அந்த கிருத்ரராஜனால் {கழுகரசன் சம்பாதியால்} பேசப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்ட பிலவகரிஷபர்கள் {தாவிச் செல்லும் குரங்குகளில் காளைகள்} பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(1) வானரசிரேஷ்டனான {வானரர்களில் சிறந்தவனான} ஜாம்பவான், சர்வ பிலவங்கமர்கள் சகிதனாக, பூதலத்தில் இருந்து உடனே எழுந்து, அந்த கிருத்ர ராஜனிடம் {சம்பாதியிடம், பின்வருமாறு} பேசினான்:(2) “சீதை எங்கே இருக்கிறாள்? யார் அவளைக் கண்டவர்? மைதிலியை எவன் அபகரித்தான்? அனைத்தையும் சொல்வீராக. நீரே வன ஓகஸர்களின் {வனத்தில் வசிப்பவர்களின்} கதியாக இருக்கிறீர்.(3) ஸ்வயமாக லக்ஷ்மணரால் ஏவப்படுவனவற்றின் {வல்லமையையும்}, வஜ்ர வேகத்தில் பாயும் தாசரதியுடைய {தசரதரின் மகனான ராமனுடைய} பாணங்களின் விக்கிரமத்தையும் {வல்லமையையும்} எவனாலும் சிந்திக்கவாவது முடியுமா?” {என்றான் சம்பாதி}.(4)

[1] இந்த சர்க்கம் தொடங்கும் முன் தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் உள்ள அறிமுகக்குறிப்பு பின்வருமாறு, “இனி வரப்போகும் 59 முதல் 63 வரையுள்ள சர்க்கங்களில் உள்ள முரண்பட்ட செய்திகளினால் அவை பல்வேறு பதிப்புகளில் இடம்பெறவில்லை. எனவே, அவை இடைச்செருகல்களாக இருக்கலாமெனச் சொல்லப்படுகின்றன. ஆனால் பண்டைய உரையாசிரியர்கள் பலரும் இவற்றுக்கும் உரைசெய்திருப்பதால் இங்கே சேர்க்கப்படுகின்றன” என்றிருக்கிறது. இங்கே சொல்லப்படும் முரண்பட்ட செய்திகளில், இந்த சர்க்கத்தின் 2ம் சுலோகத்தில் ஜாம்பவானை வானரன் என்று குறிப்பிடுவதும் ஒன்றாகும். 4:41:2ல் பிரம்மனின் மகன் என்று குறிப்பிடப்படும் இந்த ஜாம்பவான், 1:17:7ல் ரிக்ஷபுங்கவன் என்றும், 4:39:27ல் ரிக்ஷராஜா என்றும் கரடிகளைச் சார்ந்தவன் என்றே அடையாளப்படுத்தப்படுகிறான். மேலும் 4:58:15ல் சம்பாதி தானே சீதை கடத்திச் செல்லப்படுவதை நேரடியாகக் கண்டதாகச் சொல்கிறான். ஆனால் இந்த சர்க்கத்தின் 6ம் சுலோகத்தில், தான் அதைக் காணவில்லை, தன் மகன் சுபார்ஷ்வனே அதைக் கண்டான் என்ற முரண்பட்ட செய்தியைச் சொல்கிறான். மேலே சுட்டப்பட்ட சர்க்கங்களில் இவ்வாறான முரண்பாடுகள் ஆங்காங்கே இருப்பினும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் உட்பட நாம் ஒப்புநோக்கும் அனைத்துப் பதிப்புகளிலும் இந்த சர்க்கங்கள் தவிர்க்கப்படவில்லை. கம்பராமாயணத்தில் சம்பாதியின் மகன் சுபார்ஷ்வன் குறித்த செய்திகள் இல்லை.

இதில் மகிழ்ச்சியடைந்தவன் {சம்பாதி}, மனவூக்கத்துடன் சீதையைக் குறித்துக் கேட்டு சமாஹிதமடைந்த ஹரிக்களை {குரங்குகளை} ஆசுவாசப்படுத்தும் வகையில் மீண்டும் இந்த வசனத்தைச் சொன்னான்:(5) “வைதேஹி ஹரணம் {சீதை கடத்தப்பட்ட நிகழ்வு} என்னால் எப்படி கேட்கப்பட்டதோ, அப்படியே என்னால் சொல்லப்பட்டது. அந்த நீள்விழியாள் எங்கிருக்கிறாள் என்பது இப்போது கேட்கப்படட்டும்.(6) பல யோஜனைகள் அகலம் கொண்ட இந்த கிரி துர்க்கத்தில் {அடைவதற்கரிய மலையில்} நீண்ட காலத்திற்கு முன் விழுந்த நான், {இப்போது} பிராணனும், பராக்கிரமமும் குன்றியவனாக மூப்படைந்திருக்கிறேன்.(7) இந்நிலை அடைந்த என்னை, பறவைகளில் சிறந்தவனும், சுபார்ஷ்வன் என்ற பெயர் சூட்டப்பட்டவனுமான {என்} புத்திரன், உரிய காலத்தில் ஆஹாரம் கொடுத்து ஆதரித்து வருகிறான்.(8) கந்தர்வர்கள் தீக்ஷ்ணகாமர்கள் {கடுங்காமம் கொண்டவர்கள்}, புஜங்கமர்கள் தீக்ஷ்ணகோபர்கள் {பாம்புகள் கடுங்கோபம் கொண்டவர்கள்}, மிருகங்களுக்கு பயம் தீக்ஷ்ணம் {மான்கள் பேரச்சம் கொண்டவை} என்பதைப் போல நாங்கள் தீக்ஷ்ணக்ஷுதர்களாவோம் {கடும்பசி கொண்டவர்கள் ஆவோம்}.(9) 

என்றோ ஒரு சூரிய அஸ்தமன வேளையில் நான் பசியால் துன்புற்று ஆஹாரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, என் புத்திரனானவன் {சுபார்ஷ்வன்} மாமிசமில்லாமல் வந்தான்.(10) ஆஹாரம் இல்லாமல் நான் பீடிக்கப்பட்டிருப்பதாக அனுமானித்த அந்த பிரீதிவர்தனன் {மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அந்த சுபார்ஷ்வன்}, எது தத்துவமோ அதை {உள்ளதை உள்ளபடியே} இந்த வசனத்தில் சொன்னான்:(11) “தாதா {ஐயா}, மாமிசம் விரும்பி, தகுந்த காலத்தில் வானத்தில் உயர்ந்து, மஹேந்திர கிரியின் துவாரத்தை மறைத்தபடியே பறந்து கொண்டிருந்தேன்.(12) அங்கே சாகரத்தின் அந்தரத்தில் திரியும் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் பாதையை முழுமையாகத் தடுத்தபடி கீழ்நோக்கிய முகத்துடன் நான் பறந்து கொண்டிருந்தேன்.(13) பிளந்த அஞ்சன மலைக்கு ஒப்பான எவனோ ஒருவன், சூரிய உதயத்திற்கு சமமான பிரபையுடைய ஸ்திரீயை எடுத்துக் கொண்டு செல்வதை நான் அங்கே கண்டேன்.(14) 

Suparshva obstructing Ravana

அவ்வாறு அவ்விருவரையும் கண்டதும், ஆஹாரத்திற்குப் பயன்படுவார்கள் என்று நிச்சயம் செய்து கொண்டேன். அப்போது, பணிவுடனும், அடக்கத்துடனும் வழிவிடுமாறு என்னிடம் அவன் யாசித்தான்.(15) நல்வார்த்தைகளால் வேண்டுவோரைத் தாக்கும் ஜனங்கள், புவியில் நீசர்களிலும் எவருமில்லையே. ஐயோ, என்விதமானவர்களைக் குறித்து என்ன சொல்வது?(16) அவன் தேஜஸ்ஸால் வானத்தை மறைத்தபடியே வேகமாக சென்று விட்டான். அப்போது வானத்தில் திரியும் பூதங்கள் என்னை அணுகி மெச்சினார்கள்.(17) “நல்லவேளை சீதை ஜீவித்திருக்கிறாள் {பிழைத்திருக்கிறாள்}. காக்கத்தகுந்தவளுடன் கூடிய அவன் எப்படியோ சென்றுவிட்டான். சந்தேகமில்லாமல் உனக்கு ஸ்வஸ்தி {மங்கலமே}” இவ்வாறே மஹரிஷிகள் என்னிடம் சொன்னார்கள்.(18) 

பிறகு, பரம சோபனமுடைய அந்த சித்தர்கள் என்னிடம் இவ்வாறு சொன்னார்கள், “அந்த ராக்ஷச ராஜா, ராவணன் என்று அழைக்கப்படுகிறான்.{19} கலைந்த ஆபரணங்களுடனும், கௌஷேயத்துடனும் {பட்டுடனும்} கூடியவளும், சோக வேகத்தால் வீழ்த்தப்பட்டவளும், தாசரதியான ராமனின் பாரியையுமான {மனைவியுமான} ஜனகாத்மஜையே {ஜனகனின் மகளான ஜானகியே},{20} அவிழ்ந்த தலைமயிருடன், ராமலக்ஷ்மணர்களின் பெயர்களைச் சொல்லிக் கதறிக் கொண்டிருக்கிறாள்” {என்றனர்}.(19-21அ) தாதா {ஐயா}, எனவேதான் காலதாமதமாகிவிட்டது” என்று வாக்கியவிதாம்வரனான {வாக்கியங்களை அமைப்பதில் சிறந்தவனான} சுபார்ஷ்வன், இந்த அர்த்தத்திலான அனைத்தையும் முழுமையாக என்னிடம் சொன்னான்.(21ஆ,22அ)

அதைக் கேட்டும், என் புத்தியில் பராக்கிரமம் கொஞ்சமும் உண்டாகவில்லை. சிறகுகளற்ற பக்ஷியால் எந்த கர்மத்தையும் எவ்வாறு ஆரம்பிக்க முடியும்?(22ஆ,23அ) வாக்கு, புத்தி, குணம் ஆகியவற்றில் பற்றுடைய என்னால் எதைச் செய்ய இயலுமோ, அது உங்கள் பௌருஷத்தை {ஆண்மையைப்} பொருத்தது. நான் சொல்வதைக் கேட்பீராக.(23ஆ,24அ) உங்கள் அனைவருக்கும் வாக்காலும், மதியாலும் பிரியத்தையே செய்ய விரும்புகிறேன். தாசரதியின் காரியம் எதுவோ, அதுவே எனக்கும் {காரியமாகும்}. இதில் சந்தேகமில்லை.(24ஆ,25அ) மதிசிரேஷ்டர்களும், மனஸ்வினர்களும் {அறிவிற்சிறந்தவர்களும், நல்ல மனநிலை அமைந்தவர்களும்}, பலவந்தர்களும், தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களுமான உங்களை கபிராஜன் {சுக்ரீவன்} அனுப்பியிருக்கிறான்.(25ஆ,26அ) கங்க இறகுகளைக் கொண்டவையும், கூர்மையானவையுமான ராமலக்ஷ்மணர்களின் பாணங்கள், மூன்று உலகங்களையும் காக்கவும், தாக்கவும் போதுமாவை.(26ஆ,27அ) தசக்ரீவன், தேஜஸ்ஸுடனும், பலத்துடனும் கூடியவன்தான் என்றாலும், சமர்த்தர்களான உங்களால் செய்யமுடியாதது எதுவுமில்லை.(27ஆ,இ) எனவே, காலங்கடத்தியது போதும். புத்தியில் நிச்சயம் செய்து கொள்ளுங்கள். உங்களைப் போன்ற புத்திமான்கள், கர்மங்களைச் செய்வதில் தயக்கம் காட்டமாட்டார்கள்” {என்றான் சம்பாதி}.(28)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 59ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை