Thursday 10 October 2024

அங்கதன் தூது | யுத்த காண்டம் சர்க்கம் - 041 (100)

Angada sent as a messenger | Yuddha-Kanda-Sarga-041 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் செயலைக் கண்டித்த ராமன்; தூதனுப்பப்பட்ட அங்கதன்; அவனைக் கைப்பற்ற ஆணையிட்ட ராவணன்; கோபுரத்தைச் சிதைத்து ராமனிடம் திரும்பிய அங்கதன்...

Angada and Ravana

அப்போது லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, சுக்ரீவனிடம் நிமித்தங்களை {போரில் ஏற்பட்ட அடையாளங்களைக்} கண்டு, அவனைத் தழுவிக் கொண்டு இந்த வசனத்தைச் சொன்னான்:(1) "என்னுடன் ஆலோசிக்காமல் இத்தகைய அந்த சாகசத்தைச் செய்திருக்கிறாய். ஜனேஷ்வரர்கள் {மக்கள் தலைவர்கள்} இவ்வாறான சாகசங்களைச் செய்ய மாட்டார்கள்.(2) சாகசப்பிரியா, வீரா, என்னையும், இந்தப் படையையும், விபீஷணனையும் சந்தேகத்தில் நிறுத்திவிட்டு, கஷ்டமான இந்த சாகசத்தைச் செய்திருக்கிறாய்.(3) அரிந்தமா {பகைவரைக் கொல்பவனே}, வீரா, இனிமேல் இவ்விதமாகச் செயல்படாதே. மஹாபாஹுவே, சத்ருக்னா {பகைவரை அழிப்பவனே}, உனக்குக் கொஞ்சம் கெடுதி விளைந்தாலும்,[1] எனக்கு, சீதையாலோ, பரதனாலோ, லக்ஷ்மணனாலோ, சத்ருக்னனாலோ, ஏன் என் சரீரத்தினாலோகூட ஆகப் போகும் காரியம் என்ன?(4,5) மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் சமமானவனே, உன் வீரியத்தை நான் அறிந்தவனாக இருந்தும், பூர்வத்தில் நீ வராதபோது என் மதியில் நான் ஒன்றை நிச்சயித்துக் கொண்டேன்.{6} யுத்தத்தில் புத்திரர்கள், படை, வாஹனங்களுடன் கூடிய ராவணனைக் கொன்று, லங்கையில் விபீஷணனை அபிஷேகித்து,{7} பரதனிடம் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டு என் தேஹத்தைக் கைவிடுவேன் {என்று என் மனத்தில் நிச்சயம் செய்து கொண்டேன்" என்றான் ராமன்}.(6-8அ)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு, "த்வயி கிஞ்சித்ஸமாபன்னே கிம் கார்யம் ஸீதயா மம || ப⁴ரதேன மஹாபா³ஹோ லக்ஷ்மணேன யவீயஸா | ஷ²த்ருக்⁴னேன ச ஷ²த்ருக்⁴ன ஸ்வஷ²ரீரேண வா புன꞉ ||" என்பது மூலம். (த்வயி கிஞ்சித்ஸமாபன்னே). நீ ஏதேனும் ஒரு கெடுதியைப் பெறுகையில், அதாவது உன்னை எவனேனும் இகழ்ச்சியாக "வானர" என்றழைக்கையில் என்கை. (மம ஸீதயா கிம் கார்யம்) எனக்கு சீதையால் என்ன ப்ரயோஜனம். இதனால் அன்றீன்ற கன்றினிடமுள்ள ப்ரீதியால் முன்னணைக் கன்றையும் கொம்பிலுங் குளம்பிலுங் கொள்ளும் பசுவைப் போல் நித்யானபாயினியான (என்றும் பிரியாத) சீதையையுங்கூட ஆதரிக்காமல் அன்றாசிரயித்த ஒரு வானரனிடத்தில் மிகுந்த அபிநிவேசத்தையுடைய ராமனுடைய வாத்ஸல்யத்தின் மிகுதி ஏற்பட்டது. பாதி சரீரமாகச் சொல்லப்பட்ட சீதையாலும் எனக்குக் காரியமில்லை. தன் சரீரமாகவே சொல்லப்பட்ட பரதாதிகளாலும் எனக்குப் பிரயோஜனமில்லை. (ஸ்வஷ²ரீரேண) எல்லாவற்றிலும் மேலாக ரக்ஷிக்க வேண்டிய சரீரத்தினாலும் பிரயோஜனமில்லை.


Rama warns sugreeva not to do the same in future

இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த ராமனிடம், சுக்ரீவன் மறுமொழியாக,{8ஆ} "வீரரே, ராகவரே, உமது பாரியையை அபகரித்த ராவணனைக் கண்டு, என் விக்ரமத்தை அறிந்தும் நான் எவ்வாறு பொறுத்துக் கொள்வேன்? {எப்படி அவனை மன்னிப்பேன்?}" {என்றான் சுக்ரீவன்}.(8ஆ,9)

இராகவன், இவ்வாறு பேசிய வீரனை {சுக்ரீவனை} வாழ்த்திவிட்டு, லக்ஷ்மீசம்பன்னனான லக்ஷ்மணனிடம் இந்த வசனத்தைச் சொன்னான்:(10) "இலக்ஷ்மணா, குளிர்ந்த நீரையும், பழங்களையும் கொண்ட வனத்தை அடைந்து, இந்தப் படையை வியூகமாக வகுத்து ஆயத்தமாக இருக்க வேண்டும்.(11) உலகத்திற்கு அழிவை ஏற்படுத்துவதும், திறன்மிக்க வீரர்களான ரிக்ஷவானரராக்ஷசர்களுக்கு {கரடிகள், வானரர்கள், ராக்ஷசர்களுக்கு} அழிவை விளைவிப்பதுமான பயங்கர பயம் {ஆபத்து} நெருங்குவதைப் பார்க்கிறேன்.(12) வாதங்கள் {காற்றுகள்} கடுமையாக வீசுகின்றன. வசுந்தரை {பூமி} நடுங்குகிறது. பர்வத உச்சிகள் குலுங்குகின்றன. தரணீதரங்கள் {உலகைத் தாங்கும் மலைகள் / மரங்கள்} விழுகின்றன[2].(13) குரூர மேகங்கள், கொடூரப் பறவைகளுக்கு ஒப்பாக மிகக் கடும் ஸ்வனத்தை உண்டாக்கியபடியே குரூரமான சோணிதபிந்துக்கள் {ரத்தத்துளிகள்} கலந்த மழையைப் பொழிகின்றன.(14)

[2] தர்மாலயப் பதிப்பில், "மலைகளும் அசைந்தாடுகின்றன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "வ்ருக்ஷங்கள் நிமித்தமில்லாமலே முறிந்து விழுகின்றன" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "மரங்கள் வீழ்கின்றன" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில், தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், "உலகைத் தாங்கும் யானைகள் பிளிறுகின்றன" என்றும், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "உலகைத் தாங்கும் யானைகள் விழுகின்றன" என்றும், மன்மதநாததத்தர், விவேக் தேவ்ராய் பதிப்புகளில், "மலைகள் விழுகின்றன" என்றும், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "மரங்கள் முறிந்து பூமியில் விழுகின்றன" என்றும் இருக்கிறது.


சந்தியாவேளை, செஞ்சந்தனத்திற்கு ஒப்பான பேரச்சத்தைத் தருகிறது. ஆதித்யனிலிருந்து ஜுவலிக்கும் இந்த அக்னி மண்டலங்கள் விழுகின்றன.(15) தீனமாக தீன ஸ்வரத்தில் கோரமான, மங்கலமற்ற மிருகத்விஜங்கள் {விலங்குகளும், பறவைகளும்} மஹத்தான பயத்தை ஏற்படுத்தும் வகையில் ஆதித்யனை நோக்கி ஊளையிடுகின்றன.(16) பிரகாசமற்ற சந்திரன், கரிய, சிவந்த கதிர்கள் சூழ, உலகத்திற்கு அழிவை அறிவிப்பதுபோல எரிந்து ராத்திரியில் சந்தாபத்தை ஏற்படுத்துகிறான்.(17) இலக்ஷ்மணா, பிரகாசமற்றுத் தெரியும் ஆதித்ய மண்டலத்தில், ஒரு சிறிய கரிய, சிவந்த பரிவேஷம் {வளையம்} பயங்கரமாகத் தென்படுகிறது.(18) இலக்ஷ்மணா, சந்திரக்களங்கம் போல நக்ஷத்திரங்களும் புழுதிபடிந்தவையாகப் புலப்படவில்லை. இதில் உலகத்தின் யுகாந்தம் தெரிகிறது.(19) காகங்களும், பருந்துகளும், கழுகுகளும் கீழே பறக்கின்றன. நரிகளும் சுபமற்ற ஒலியுடன் ஊளையிடுகின்றன.(20) பூமியானது, கபி ராக்ஷசர்கள் {குரங்குகளும், ராக்ஷசர்களும்} ஏவும் பாறைகளாலும், சூலங்களாலும், வாள்களாலும் நிறைந்து, மாமிசத்தாலும், சோணிதத்தாலும் {ரத்தத்தாலும்} சேறாகப்போகிறது.(21) எங்கும் வானரர்களால் சூழப்பட்டவர்களாக வெல்வதற்கரியதும், ராவணனால் பாலிதம் செய்யப்படுவதுமான புரீக்கு சீக்கிரமே செல்வோம்" {என்றான் ராமன்}.(22)

வீரனும், மஹாபலவானுமான லக்ஷ்மணாக்ரஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்} இவ்வாறே லக்ஷ்மணனிடம் சொல்லிவிட்டு, அந்தப் பர்வத உச்சியில் {சுவேல மலைச் சிகரத்தில்} இருந்து சீக்கிரமே இறங்கினான்.(23) தர்மாத்மாவான அந்த ராகவன், தாக்குவதற்கரிய பரம பகைவர்களின் பலத்தை மனத்தால் கண்டவாறே அந்த சைலத்திலிருந்து இறங்கினான்.(24) காலஜ்ஞனான {காலத்தை அறிந்தவனான} ராகவன், சுக்ரீவனுடன் சேர்ந்து மஹத்தான கபிராஜபலத்தை {குரங்கு மன்னனின் படையினரைக்} காலத்தில் தூண்டி, ஆயத்தமாக இருக்குமாறு ஆணையிட்டான்.(25) பிறகு, அந்த மஹாபாஹு, மஹத்தான படை சூழ அதிகாலையிலேயே லங்காம்புரீயை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(26)

அப்போது விபீஷணசுக்ரீவர்கள் இருவரும், ஹனுமான், ரிக்ஷராஜன் ஜாம்பவான், நளன், நீலன் ஆகியோரும் லக்ஷ்மணனைப் போலவே அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(27) அப்போது ரிக்ஷவனௌகசர்கள் அடங்கிய {கரடிகள், குரங்குகள் உள்ளிட்ட} மஹத்தான படை பூமியை எங்கும் மறைத்தபடியே ராகவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(28) குஞ்சரங்களுக்கு {யானைகளுக்கு} ஒப்பானவர்களும், பகைவரைத் தடுக்கவல்லவர்களுமான வானரர்கள், சைலசிருங்கங்களையும் {மலைச் சிகரங்களையும்}, முழுதாக வளர்ந்த நூற்றுக்கணக்கான பெரும் மரங்களையும் கைகளில் எடுத்துக் கொண்டனர்.(29) அரிந்தமர்களும் {பகைவரைக் கொல்பவர்களும்}, உடன்பிறந்தவர்களுமான ராமலக்ஷ்மணர்கள், குறுகிய காலத்தில் ராவணனின் லங்காம்புரீயை அடைந்தனர்.(30)

பதாகை மாலைகளைக் கொண்டதும் {கொடி வரிசைகளைக் கொண்டதும்}, அழகானதும், ரம்மியமான உத்யானவனங்களால் சோபிப்பதும், அழகிய கதவுகளைக் கொண்டதும், அடைதற்கரிய உயர்ந்த பிராகாரங்களையும், தோரணங்களையும் கொண்டதும்,{31} ஸுரர்களாலும் {தேவர்களாலும்} வெல்வதற்கரியதுமான அதை {லங்காபுரியை} ராமனின் வாக்கியங்களை ஆணையாகக் கொண்ட வனௌகசர்கள் {வானரர்கள்} முற்றுகையிட்டு, விதிக்கப்பட்ட இடத்தில் நின்றனர்.(31,32)

வீரனும், தன்வியுமான {வில்வீரனான} ராமன், அனுஜனுடன் {தம்பியுடன்} சேர்ந்து சைலசிருங்கத்திற்கு {மலையின்சிகரத்திற்கு} ஒப்பாக உயர்ந்து நிற்கும் லங்கையின் உத்தர துவாரத்தை {வடக்கு வாயிலை} அடைந்து காத்தான்.{33} வீரனும், தசரதாத்மஜனும் {தசரதனின் மகனும்}, லக்ஷ்மணனைத் துணையாகக் கொண்டவனுமான ராமன், ராவணனால் பாலிக்கப்படும் லங்காபுரீயை அடைந்து, ராவணன் எங்கு இருந்தானோ, அந்த உத்தர துவாரத்தில் {வடக்கு வாயிலில்} ஊக்கத்துடன் நின்றான்.{34} சாகரத்தை வருணன் எப்படியோ, அப்படியே ராவணனால் பாதுகாக்கப்பட்டதும், பயங்கரமானதும், அற்ப திடன் உள்ளவர்களுக்கு நடுக்கத்தைக் கொடுப்பதும், பாதாளத்தை தானவர்கள் எப்படியோ, அப்படியே ஆயுதந்தரித்த கொடிய ராக்ஷசர்களால் எங்கும் பாதுகாக்கப்பட்டதுமான அந்த துவாரத்தை {வாயிலைப்} பாதுகாக்க ராமனைத் தவிர வேறு ஒருவனும் சக்தனல்ல. (33-37அ) அங்கே நிறுத்தப்பட்ட போர்வீரர்களின் அனைத்து  வகையான ஏராளமான ஆயுதஜாலங்களையும் {ஆயுத வரிசைகளையும்}, அப்படியே கவசங்களையும் அவன் பார்த்தான்.(37ஆ,இ)

ஹரிசமூபதியும், வீரியவானுமான நீலன், மைந்தன், துவிவிதனுடன் சகிதனாகப் பூர்வதுவாரத்தை {கிழக்கு வாயிலை} அடைந்து அங்கேயே நின்றான்.(38) மஹாபலவானான அங்கதன், ரிஷபன், கவாக்ஷன், கஜன், கவயன் ஆகியோருடன் தக்ஷிண துவாரத்தை {தெற்கு வாயிலை} அடைந்தான்.(39) பலவானும், கபியுமான {குரங்குமான} ஹனுமான், பிரமாதி, பிரகசன் ஆகியோருடனும், பிற வீரர்களுடனும் சேர்ந்து பஷ்சிம துவாரத்தை {மேற்கு வாயிலை} ரக்ஷித்தான்.(40) சுக்ரீவன், சுபர்ணனுக்கும் {கருடனுக்கும்} வாயுவுக்கும் ஒப்பான சர்வ ஹரிசிரேஷ்டர்களுடன் {குரங்குகளில் சிறந்த அனைவருடன்} தானே மத்தியம குல்மத்தில்[3] {படையின் மத்தியப் பகுதியில்} இருந்தான்.(41) புகழ்பெற்ற யூதபர்களான வானரர்களும், முப்பத்தாறு கோடி வானரர்களும், சுக்ரீவனுடன் அங்கே முற்றுகையிட்டு நின்றனர்.(42,43அ) இராமசாசனத்தின் பேரில், லக்ஷ்மணனும், விபீஷணனும், கோடி, கோடியான ஹரீக்களை {குரங்குகளை} அந்தந்த துவாரங்களில் {வாயில்களில்} நிறுத்தினர்.(43ஆ,44அ) சுஷேணன், பெரும்படையுடன் கூடிய ஜாம்பவனுடன் ராமனால் பஷ்சிமத்தில் {மேற்கில்} அருகில் மத்யம குல்மத்தைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டான்.(44ஆ,45அ)

[3] தர்மாலயப் பதிப்பில், "சுக்ரீவன், தானே நடு சைன்யத்தில் கருட பகவானையும், வாயு பகவானையும் நிகர்த்த வானரோத்தமர்கள் எல்லோரோடும் கூட நின்றான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸுக்ரீவன், கருடனையும், வாயுதேவனையும் நிகர்த்த ஸகல வானரசிரேஷ்டர்களோடுங்கூடி, பலிஷ்டர்களான ராவண இந்திரஜித்துக்களோடு யுத்தஞ் செய்கிற ராமன் ஹனுமான் ஆகிய இருவரில் எவர்க்கு வேண்டிலும் அவர்க்கு ஸஹாயஞ் செய்யும்பொருட்டு உத்தர பஷ்சிம த்வாரங்களின் இடையில் நின்றிருக்கிற ஸேனையில் இருந்தனன்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில், "வானரர்கள் தங்கியிருந்த வடக்கு-மேற்கு திசைகளின் இடைப்பட்ட (வாயுகோணப்) பகுதியில் கருடனுக்கும், வாயுவுக்கும் நிகரான வேகங்கொண்ட சுக்ரீவன், உத்தம வானரர்களோடுகூட முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தான்" என்றிருக்கிறது.


சார்தூலங்களை {புலிகளைப்} போன்ற கூரிய பற்களுடைய வானரசார்தூலர்கள் {வானரர்களில் புலிகள்}, மகிழ்ச்சியுடன் கூடியவர்களாக மரங்களையும், சைலங்களின் உச்சிகளையும் {சிகரங்களையும்} கையிலேந்திக் கொண்டு தயாராக இருந்தனர்.(45ஆ,46அ) அவர்கள் அனைவரும் மேலே தூக்கப்பட்ட லாங்கூலங்களுடன் {வால்களுடன்} இருந்தனர். அனைவரும், தங்கள் கூரிய பற்களையும், நகங்களையும் ஆயுதமாகக் கொண்டிருந்தனர். அனைவரும் இயல்பற்ற சித்திர அங்கங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அனைவரும் இயல்பற்ற முகங்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(46ஆ,47அ) சிலர் பத்து நாகங்களின் {யானைகளின்} பலமுடையவர்களாகவும், சிலர் அதிலும் பத்து மடங்கு அதிக பலமுள்ளவர்களாகவும், சிலர் ஆயிரம் நாகங்களுக்கு {யானைகளுக்குத்} துல்லியமான விக்கிரமம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(47ஆ,48அ) சிலர் ஓக பலத்தை {பல கோடி பேரின் பலத்தைக்}[4] கொண்டவர்களாக இருந்தனர். சிலர் அதிலும் நூறு மடங்கு மேம்பட்டவர்களாகவும் இருந்தனர். மற்றுமுள்ள ஹரியூதபர்களில் சிலர், அளவிடற்கரிய பலமுங்கொண்டவர்களாக இருந்தனர்.(48ஆ,49அ) அங்கே அவ்விடத்தில் வெட்டுக்கிளிகளைப் போலிருந்த அந்த வானர சைனியங்களின் கூட்டம், அற்புதமானதாகவும், விசித்திரமானதாகவும் தெரிந்தது.(49ஆ,50அ) இலங்கையை அடைந்து அங்கேயே இருந்த வானரர்களால் ஆகாசம், பூர்ணமாக நிறைந்தது போலும், மேதினியும் {பூமியும்} சம்பூர்ணமாக நிறைந்தது போலும் இருந்தது.(50ஆ,51அ) கோடிக்கணக்கான ரிக்ஷர்களும், வனௌகசர்களும் {வானரர்களும்}, தனித்தனியே போர்புரிய லங்காதுவாரங்கள் {லங்கையின் வாயில்கள்} எங்கும் சுற்றிச் சுற்றித் திரிந்தனர்.(51ஆ,52அ) அந்த கிரி எங்கும், அந்த பிலவங்கமர்கள் {குரங்குகள்} அனைவராலும் மறைக்கப்பட்டிருந்தது. கோடிக்கணக்கானவர்கள் அந்தப் புரீயைச் சுற்றி நின்றனர்.(52ஆ,53அ)

[4] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "ஓகம் என்பதற்கான எண்ணிக்கையை 28ம் சர்க்கம், 37ம் சுலோகத்தில் காணவும்" என்றிருக்கிறது. இந்த எண்ணிக்கையின் விபரங்கள் யுத்த காண்டம், 28ம் சர்க்கம், 33 முதல் 42ம் சுலோகம் வரை விவரிக்கப்படுகிறது.


மரங்களைக் கைகளில் கொண்ட பலசாலிகளான வானரர்களால் எங்கும் பீடிக்கப்பட்டு இருந்த லங்கை, வாயுவாலும் புகுவதற்கரியதாக இருந்தது.(53ஆ,54அ) இராக்ஷசர்கள், மேகத்திற்கு ஒப்பானவர்களும், சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான ஆற்றல் வாய்ந்தவர்களுமான வானரர்களால் திடீரெனத் தடுக்கப்பட்டு {முற்றுகையிடப்பட்டு} மலைத்து நின்றனர்.(54ஆ,55அ) கொந்தளிக்கும் சாகரத்தின் {கடலின்} நீரோசை எப்படி இருக்குமோ, அப்படி அங்கே எதிர்த்து நிற்கும் படை வெள்ளத்தில் மஹத்தான சப்தம் உண்டாயிற்று.(55ஆ,56அ) அந்த மஹத்தான சப்தத்தால் பிராகாரங்கள் {மதில்கள்}, தோரணங்கள் {வாயில்கள்}, சைலங்கள் {மலைகள்}, வனங்கள், சோலைகள் ஆகியவற்றுடன் கூடிய லங்கை முழுவதும் அதிர்ந்தது.(56ஆ,57அ) சுக்ரீவன், ராமன், லக்ஷ்மணன் ஆகியோரால் பாதுகாக்கப்பட்ட அந்த ஹரிவாஹினி {குரங்குப்படை}, சர்வ ஸுராஸுரர்களாலும் {தேவாசுரர்கள் அனைவராலும்} அணுகற்கரியதாக இருந்தது.(57ஆ,58அ)

முறைதவறாது செய்யும் கர்ம யோக அர்த்தத்தை {காரியங்களால் விளையும் பலனை} உள்ளபடியே உணர்ந்த ராகவன், தன் சைனியத்தைத் தக்க இடத்தில் நிற்கச் செய்த பின்னர், ராக்ஷசர்களை அழிக்க மேற்கொள்ள வேண்டியவற்றை நடத்த எண்ணங்கொண்டு மந்திரிகளுடன் பலவாறு ஆலோசித்தான். பின்னர், ராஜதர்மத்தை அறிவுறுத்த நிச்சயித்துக் கொண்டு விபீஷணனின் அனுமதியுடன், வாலியின் மகனான அங்கதனை அழைத்துப் பின்வருமாறு ஆணையிட்டான்:(58ஆ-60) "சௌம்யா, கபியே, பயத்தைக் கைவிட்டு லங்கைக்குள் தாவிக் குதித்து, மனச்சஞ்சலம் ஏதுமின்றி செல்வத்தை தொலைத்தவனும், ஐஷ்வர்யம் இழந்தவனும், அறிவு மழுங்கியவனுமான தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனை} நெருங்கி நான் சொன்னதாகப் பின்வருமாறு சொல்வாயாக.(61,62அ) இரஜனீசரா {இரவுலாவியே}, ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், நாகர்கள், யக்ஷர்கள், ராஜாக்கள் ஆகியோருக்கு உன் மோஹத்தால் {அறியாமையால் / மூடத்தனத்தால்} எந்தப் பாபம் செய்யப்பட்டதோ, அந்தப் பாபத்தின் பலனும் எவராலும் தடுக்க முடியாததாக நெருங்கி வந்திருக்கிறது. ஸ்வயம்புவிடம் வரதானம் பெற்ற உன் செருக்கும் ஒழியப் போகிறது.(62ஆ-64) என் தாரத்தை {மனைவியை} அபகரித்த உன்னைத் தண்டிப்பதற்காக, தண்டம் தரித்து வந்து லங்கா துவாரத்தில் {லங்கையின் வாயிலில்} நின்று கொண்டிருக்கிறேன்.(65) இராக்ஷசா, என்னால் கொல்லப்படும் நீ, தேவர்களும், அனைத்து மஹரிஷிகளும், தேவரிஷிகளும் அடைந்த பதவியை அடைவாய்[5].(66) இராக்ஷச அதமா, உன்னுடைய எந்த பலத்தால், மாயையால் என்னை வஞ்சித்து சீதையை அபகரித்துச் சென்றாயோ அதை இப்போது காட்டுவாயாக.(67)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மனிதர்கள் பாபஞ் செய்வார்களாயின், ராஜனால் தண்டனை விதிக்கப்பெற்றுப் பாபந் தொலைந்து, புண்யசாலிகளான ஸத்புருஷர்களைப் போல் ஸ்வர்க்கலோகம் பெறுவார்கள். அரசன் பாபஞ் செய்தவனைத் தண்டியாது விடுவானாயின் அவன் அந்தப் பாபத்தைப் பெறுவான் என்று ராஜதண்டனத்தினால் பாபஞ்செய்தவனும், அரசனும் பாபந்தீரப் பெறுவார்களென்று தெரிகிறது" என்றிருக்கிறது.


அந்த மைதிலியைக் கொடுத்துவிட்டு, என்னிடம் நீ சரண்புகவில்லையெனில், கூரிய சரங்களால் இந்த உலகை ராக்ஷசர்களற்றதாக்கி விடுவேன்.(68) தர்மாத்மாவும், ராக்ஷச சிரேஷ்டனுமான இந்த விபீஷணன் என்னிடம் வந்திருக்கிறான். நிச்சயம் இந்த ஸ்ரீமான், அகண்டகமான {முட்கள் / இடையூறுகள் அற்ற} இந்த லங்கையின் ஐஷ்வர்யத்தை அடைவான்.(69) மூர்க்கர்களை சகாயர்களாகக் கொண்ட பாபியான நீ, ஒரு க்ஷணமும், ராஜ்ஜியத்தை அதர்மமாக அனுபவிப்பது சாத்தியமில்லை.(70) அல்லது, ராக்ஷசா, தைரியத்தையும், சௌரியத்தையும் {வீரத்தையும்} நாடி திடம் அடைந்து, யுத்தத்தில் என் கணைகளால் சாந்தமடைந்து, தூய்மையடைவாயாக {மாண்டு பாபம் ஒழிக்கப்பட்டவனாவாயாக}.(71) நிசாசரா {இரவுலாவியே}, என் பார்வையில் பட்ட பிறகு, பறவை உருவங்கொண்டு மனோவேகத்துடன் மூன்று உலகங்களுக்குள் புகுந்து கொண்டாலும், ஜீவனுடன் நீ திரும்ப மாட்டாய்.(72) உனக்கு ஹிதமான வாக்கியத்தைச் சொல்கிறேன். உன் ஜிவிதம் என் கைகளில் இருப்பதால், இப்போது இலங்கை முழுவதையும் நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. {உனக்கான} ஈமக் கிரியைகளையும் செய்து கொள்வாயாக" {என்று ராவணனிடம் தான் சொன்னதாகச் சொல்லும்படி அங்கதனிடம் கூறினான் ராமன்}.(73)

களைப்பில்லாமல் கர்மங்களை ஆற்றக்கூடிய ராமன் இவ்வாறு சொன்னதும், ஹவ்யவானுக்கு {அக்னிக்கு} ஒப்பான தாரையின் மகன் {அங்கதன்} ஆகாசத்தில் பறப்பவனைப் போலச் சென்றான்.(74) ஸ்ரீமானான அவன் {அங்கதன்}, ஒரு முஹூர்த்தத்தில் ராவண மந்திரத்தில் {மாளிகையில்} இறங்கி, அமைச்சர்கள் சகிதனாக விழிப்புடன் அமர்ந்திருந்த ராவணனைக் கண்டான்.(75) பிறகு, கனக அங்கதங்களை அணிந்திருந்த ஹரிபுங்கவனும், கொழுந்து விட்டெரியும் அக்னிக்கு ஒப்பானவனுமான அங்கதன், அவனது {ராவணனின்} அருகில் இறங்கி நின்றான்.(76)

அமைச்சர்களுடன் இருந்த அவனிடம் தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டு அந்த உத்தம ராமவசனம் அனைத்தையும் அதிகம் சேர்க்காமலும், குறைக்காமலும் முழுமையாக {பின்வருமாறு} அறிவித்தான்:(77) "களைப்பின்றி கர்மங்களாற்றுபவரும், கோசலேந்திரருமான ராமரின் தூதனாக வந்திருக்கும் நான், அங்கதன் என்றழைக்கப்படும் வாலி புத்திரனாவேன். நீர் கேள்விப்பட்டிருக்கலாம்.(78) கௌஸல்யானந்தவர்தனரும் {கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவரும்}, ராகவருமான ராமர், உம்மிடம் {பின்வருமாறு} கூறுகிறார்: "புருஷாதமா, கொடூரா, வெளியே வந்து யுத்தம் செய்வாயாக.(79) அமைச்சர்களுடனும், புத்திரர்களுடனும், ஜ்ஞாதிகளுடனும், பந்துக்களுடனும் கூடிய உன்னை நான் கொல்லப் போகிறேன். {அதன்பிறகு}, மூவுலகங்களும் பயம் ஒழிந்து பாதுகாப்பாக இருக்கும்.(80) இரிஷிகளுக்கு கண்டகனாகவும் {முள்ளாகவும்}, தேவ, தானவ, யக்ஷர்களுக்கும், கந்தர்வ, உரக, ராக்ஷசர்களுக்கும் சத்ருவாகவும் இருக்கும் உன்னை இதோ வேருடன் களையப்போகிறேன்.(81) பணிந்து, வைதேஹியை மதிப்புடன் திருப்பிக் கொடுக்கவில்லையெனில் நீ கொல்லப்படுவாய். ஐஷ்வர்யத்தை விபீஷணன் அடைவான்" {என்று ராமர் உம்மிடம் கூறுகிறார் என ராவணனிடம் அங்கதன் சொன்னான்}[6].(82)
 
[6] பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் அப்பூமேல்
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும்
வேதநாயகன் மேல்நின்ற விதிக்கு நாயகன் தான்விட்ட
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான்

- கம்பராமாயணம் 6994ம் பாடல், யுத்த காண்டம், அங்கதன் தூதுப் படலம்

பொருள்:  (அங்கதன் இராவணனை நோக்கி என் தலைவனான ராமன்) ஐம்பூதங்களுக்கும் தலைவன், {ஐம்பூதங்களில் ஒன்றான} நீர் சூழ்ந்த இந்தப் புவிக்குத் தலைவன், அழகிய தாமரை மலர்மேல் வாழும் சீதைக்கும் அவன் தலைவன். வேறே உள்ள தெய்வங்களுக்கும் தலைவன், நீ ஓதும் வேதங்களுக்கும் தலைவன், இனிமேல் நீ பட உள்ள விதிக்கும் தலைவன், அத்தகையவன் விட்ட தூதன் நான். அந்தத் தலைவன் சொன்ன சொற்களைச் சொல்லிவிட வந்திருக்கிறேன் (என்றான் அங்கதன்).


ஹரிபுங்கவன் {குரங்குகளில் முதன்மையான அங்கதன்} இவ்வாறான கடும்  வாக்கியத்தைச் சொன்னதும் நிசாசர கணேஷ்வரன் {இரவுலாவிகள் கூட்டத்தின் தலைவன் ராவணன்} கோபவசம் அடைந்தான்.(83) இவ்வாறு அவன் கோபமடைந்த போது, "இந்த துர்மதியாளனைப் பிடித்து வதைப்பீராக" என்று மீண்டும் மீண்டும் தன் அமைச்சர்களுக்கு ஆணையிட்டான்[7].(84)
 
[7] சொற்ற வார்த்தையைக் கேட்டலும் தொல் உயிர்
முற்றும் உண்பது போலும் முனிவினான்
பற்றுமின் கடிதின் நெடும் பார்மிசை
எற்றுமின் என நால்வரை ஏவினான்.

- கம்பராமாயணம் 7012ம் பாடல், யுத்த காண்டம், அங்கதன் தூதுப் படலம்

பொருள்: (இவ்வாறு அங்கதன்) கூறிய வார்த்தைகளைக் கேட்டவுடனேயே (ராவணன்) பழமையான உயிர்களையெல்லாம் விழுங்கி விடுபவனைப் போல சினமுடையவனாய், "விரைந்து பிடிப்பீராக. நீண்டு பரந்த பூமியின் மீது மோதுவீராக" என நால்வரை ஏவினான்.


அப்போது, கோரர்களான நான்கு ரஜனீசரர்கள் {இரவுலாவிகள்}, ராவணனின் சொற்களைக் கேட்டு, சம தேஜஸ்ஸுடன் கூடியவனும், அக்னி போல் ஒளிர்பவனுமான அவனை {அங்கதனைப்} பிடித்தனர்.(85) அப்போது அந்த வீர தாரேயன் {தாரையின் மகனான அங்கதன்}, தன் பலத்தை வெளிப்படுத்த விரும்பி தானே அவர்களிடம் அகப்பட்டான்.(86) பிறகு அந்த அங்கதன், தன் கைகளில் சிக்கிக் கொண்ட அவர்களை பதகங்களை {பறவைகளைப்} போலத் தூக்கிக் கொண்டு சைலத்திற்கு {மலைக்கு} ஒப்பான பிராசாதத்தின் மேல் தாவிக் குதித்தான்.(87) சர்வ ராக்ஷசர்களும் அந்தரிக்ஷத்திலிருந்து {ஆகாயத்திலிருந்து} அவனுடைய வேகத்தால் உதறப்பட்டு, ராக்ஷசேந்திரன் {ராக்ஷசர்களின் தலைவன் ராவணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பூமியில் விழுந்தனர்.(88)

Angada threw those four Rakshasas

அப்போது பிரதாபவானான வாலிபுத்திரன், சைலசிருங்கத்தைப் போன்ற உயரமான ராக்ஷசேந்திரனின் பிராசாத சிகரத்தில் {அரண்மனை கோபுரத்தில்} ஏறினான்.(89) பூர்வத்தில் வஜ்ரியால் {இந்திரனால்} மிதித்து நொறுக்கப்பட்ட ஹிமவதசிருங்கத்தை {இமயமலைச் சிகரத்தைப்} போல தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது {அந்த மாளிகையின் சிகரம்} நொறுங்கி விழுந்தது.(90) பிராசாத சிகரத்தை பங்கம் செய்துவிட்டு தன் பெயரை அறிவித்துவிட்டு, மஹத்தான நாதம் செய்தபடியே ஆகாயத்தில் எழுந்தான்.(91) அவன், சர்வ ராக்ஷசர்களையும் துன்புறவும், வானரர்களை மகிழ்ச்சியடையவும் செய்துவிட்டு, வானரர்கள் மத்தியில் ராமனின் அருகில் வந்து நின்றான்.(92) இராவணனும், பிராசாதம் நொறுங்கியதில் பரம குரோதமடைந்து, தன் அழிவையும் கண்டு {முன்னுணர்ந்து} பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(93) இராமனோ, மகிழ்ச்சியில் சிங்க முழக்கம் செய்யும் ஏராளமான பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} சூழ, பகைவரை வதைக்க விரும்பி யுத்தத்திற்காக முன்னோக்கிச் சென்றான்.(94)

மஹாவீரியனும், கிரிகூடத்திற்கு ஒப்பான ஹரியுமான {மலைச்சிகரத்திற்கு ஒப்பான குரங்குமான} சுஷேணன், அங்கே, காமரூபிகளான ஏராள வானரர்களால் சூழப்பட்டவனாக இருந்தான்.(95) வெல்வதற்கரியவனான அந்தக் கபி {குரங்கான சுஷேணன்}, சுக்ரீவன் வசனத்தின் பேரில் நக்ஷத்திரங்களின் மத்தியில் சந்திரனைப் போல, சதுர் துவாரங்களிலும் {நான்கு வாயில்களிலும்} சுற்றித் திரிந்தான்.(96) இலங்கையில் இறங்கி, சாகரக் கரையின் வரையிலும் நிறைந்திருக்கும் அந்த வனௌகசர்களின் நூறு அக்ஷௌஹிணி படையைக் கண்டு ராக்ஷசர்கள் சிலர் வியப்படைந்தனர். வேறு சிலர் அச்சமடைந்தனர். இன்னும் சிலர் போர் விருப்பத்தால் மகிழ்ச்சியில் குதித்தனர்.(97,98) தீன ராக்ஷசர்கள், பிராகாரத்திற்கும், அகழிக்கும் இடையில் உள்ள பெரும்பகுதி முழுவதும் வானரர்களால் சூழப்பட்டு மற்றொரு பிராகாரத்தைப் போலக் கண்டனர். பயமடைந்த ராக்ஷசர்கள், ஹாஹாகாரம் செய்து {"ஹா, ஹா" என்று} கதறினர்.(99) அத்தகைய கோலாஹலத்தால் ஏற்பட்ட மஹாபீஷணத்தின் {அச்சம் நிறைந்த ஆரவாரத்தின்} விளைவாக, ராக்ஷசர்களின் ராஜதானியில் ராக்ஷசர்கள் பெரும் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, யுகாந்தத்தில் வீசும் காற்றைப் போல முன்னேறிச் சென்றனர்.(100)

யுத்த காண்டம் சர்க்கம் – 041ல் உள்ள சுலோகங்கள்: 100

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை