Madhuvanam | Sundara-Kanda-Sarga-61 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கிஷ்கிந்தையின் புறநகரில் உள்ள மதுவனத்திற்குள் நுழைந்த வானரர்கள், மதுவெறியால் அதை அழித்தது...
அப்போது, அங்கதன் முதலிய வீர வனௌகஸர்களும் {காட்டுவாசிகளும்}, மஹாகபியான ஹனுமானும் ஜாம்பவானின் வாக்கியத்தை ஏற்றுக் கொண்டனர்[1].(1)
[1] கம்பராமாயணத்தில் வானரவீரர்களின் உரைப்படி ஹனுமான் ராமனிடம் முந்திச் சென்றான்.ஏத நாள்இறந்த சால வருந்தினது இருந்த சேனைஆதலால்விரைவின் செல்லல் ஆவதுஅன்று அளியம் எம்மைச்சாதல் தீர்த்துஅளித்த வீர தலைமகன் மெலிவு தீரப்போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான்- கம்பராமாயணம் 6018ம் பாடல், சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்பொருள்: "{சீதையைத்} தேடி வரும் காலம் கடந்தது. உன் வரவை எதிர்நோக்கியிருந்த சேனை துயரம் அடைந்தது. வீரா, நீ அன்பு செலுத்தத்தக்க எங்களை சாவிலிருந்து காத்தாய். எங்களால் வேகமாகச் செல்ல முடியாது. எனவே, தலைமகன் {ராமன்} துன்பம் நீங்க, நீ முன்னதாகப் போவாயாக" என்றனர் {வானரர்கள்}. "நன்று" என்று சொல்லிவிட்டு அனுமன் {அவர்களுக்கு முன்பே கிஷ்கிந்தைக்குப் புறப்பட்டுச்} சென்றான். கம்பராமாயணத்தில் பிற வானரர்கள் செல்வதற்கு முன்பே ராமனிடம் ஹனுமான் செல்வது போல் வால்மீகியில் சொல்லப்படவில்லை. மதுவன அழிவின் போது ஹனுமானும் உடனிருக்கிறான்.
பிரீதியடைந்த அந்தப் பிலவகரிஷபர்கள் அனைவரும் வாயுபுத்திரனை {ஹனுமானை} முன்னிட்டுக் கொண்டு, மஹேந்திரத்தின் {மஹேந்திர மலையின்} உச்சியில் இருந்து தாவிச் சென்றனர்.{2} மேருவுக்கும், மந்தரத்திற்கும் {மேரு மலைக்கும், மந்தர மலைக்கும்} ஒப்பானவர்களும், மதங்கொண்ட மஹாகஜங்களைப் போன்றவர்களும், மஹாபலவான்களும், ஆகாசத்தை மறைத்துவிடுவது போன்ற பேருடல் படைத்தவர்களும்,{3} ஆத்மவந்தர்களான பூதங்களால் {தன்னம்பிக்கையுடன் கூடிய உயிரினங்களால்} புகழப்படுபவனும், மஹாபலவானும், மஹாவேகம் கொண்டவனுமான ஹனூமந்தனை திருஷ்டியால் {தங்கள் பார்வையாலேயே} சுமப்பது போலச் செல்பவர்களும்,{4} ராகவனின் அர்த்தத்தை நிறைவேற்றவும், பரம புகழடையவும் தீர்மானித்தவர்களுமான அவர்கள் {வானரர்கள்}, கர்மசித்திகளால் {செயல்கள் நிறைவேறியதால்} காரியம் கைகூடியதில் மேன்மை பெற்றவர்களாக இருந்தனர்.{5} அவர்கள் அனைவரும் பிரியமான செய்தியைச் சொல்லும் ஆவலுடனிருந்தனர்; அவர்கள் அனைவரும் யுத்தத்தை ஆனந்தமாக எதிர்பார்த்திருந்தனர்; அவர்கள் அனைவரும் ராமனுக்குப் பிரதிகாரம் {கைம்மாறு} செய்வதில் உற்சாக மனம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(2-6)
பிறகு அந்தக் கானனௌகசர்கள் {காட்டில் வாழ்பவர்கள்} வானத்தில் குதித்து, மிதந்து சென்று, நந்தவனத்திற்கு ஒப்பாக மரங்களும், கொடிகளும் நிறைந்த ஒரு வனத்தை அடைந்தனர்.(7) சுக்ரீவனுக்குரியதும், மதுவனம் என்ற பெயரைக் கொண்டதுமான அது {அந்த வனம்}, சர்வ பூதங்களும் அணுகமுடியாத வகையில் ரக்ஷிக்கப்படுவதாகவும், சர்வபூதங்களின் மனங்களையும் கொள்ளை கொள்வதாகவும் இருந்தது.(8) கபிக்களில் {குரங்குகளில்} மஹாவீரியனும், மஹாத்மாவும், கபிமுக்கியனான சுக்ரீவனின் மாதுலனுமான {தாய்மாமனுமான} ததிமுகன் {அந்த வனத்தை} சதா ரக்ஷித்துவந்தான்.(9) அந்த வானரர்கள், வானரேந்திரனின் {வானரர்களின் தலைவனான சுக்ரீவனின்} மனத்திற்கு விருப்பமான அந்த மஹத்தான வனத்தை அடைந்ததும் பரம உற்சாகம் அடைந்தனர்.(10) மதுபிங்களர்களான {தேன்போன்ற நிறம் கொண்டவர்களான} அந்த வானரர்கள், மஹத்தான மதுவனத்தைக் கண்டபோது, பெரும் மகிழ்ச்சியடைந்து, மதுவை {தேனைச்} சுவைப்பதற்கு குமாரனிடம் {அங்கதனிடம் அனுமதி} வேண்டினர்.(11) பிறகு குமாரனும் {அங்கதனும்}, ஜாம்பவதன் முதலிய முதிய கபிக்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, மதுவை பக்ஷிக்க அவர்களுக்கு விடை கொடுத்தான்.(12)
அப்போது, {அவ்வாறு} அனுமதிக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சியடைந்த சர்வ வனௌகசர்களும், களிப்பின் தூண்டுதலில் நர்த்தனம் செய்தனர் {நடனமாடினர்}.(13) சிலர் பாடினர்; சிலர் வணங்கினர் {கவிழ்ந்து விழுந்தனர்}; சிலர் ஆடினர்; சிலர் பரிஹசித்தனர் {சிரித்தனர்}; சிலர் விழுந்தனர்; சிலர் திரிந்தனர்; சிலர் தாவினர்; சிலர் பிதற்றினர்;(14) சிலர் பரஸ்பரம் {ஒருவர் மேல் ஒருவர்} சாய்ந்திருந்தனர்; சிலர் பரஸ்பரம் {ஒருவரையொருவர்} தள்ளிக் கொண்டிருந்தனர்; சிலர் பரஸ்பரம் {ஒருவரோடொருவர்} வாயாடிக் கொண்டிருந்தனர்; சிலர் பரஸ்பரம் {ஒருவரோடொருவர்} விளையாடிக் கொண்டிருந்தனர்;(15) சிலர் மரத்திற்கு மரம் தாவினர்; சிலர் மரத்தின் உச்சியில் இருந்து தரையில் விழுந்தனர்; சிலர் மஹீதலத்திலிருந்து {பூமியில் இருந்து} பெரும் மரங்களின் உச்சியை நோக்கிப் பெரும் வேகத்தில் பாய்ந்தனர்.(16) ஒருவன் பாடும்போது மற்றொருவன் சிரித்துக் கொண்டே அவனை அணுகினான். ஒருவன் சிரிக்கும்போது மற்றொருவன் அழுது கொண்டே அவனை அணுகினான். ஒருவன் அழும்போது மற்றொருவன் {மேலும் அழத்} தூண்டிக் கொண்டே அவனை அணுகினான். ஒருவன் தூண்டும்போது மற்றொருவன் பிதற்றிக் கொண்டே அவனை அணுகினான்.(17) அந்தக் கபி சைனியம், அளவுக்கதிகமாக மதுவைப் பருகியதால் குழம்பிய நிலையை அடைந்தது. அங்கே {அந்த சைனியத்தில்} மதமடையாதவன் எவனுமில்லை; அங்கே திருப்தி அடையாதவனும் எவனுமில்லை.(18)
அப்போது, இலைகளும், புஷ்பங்களும் உதிக்கப்பட்டு பக்ஷிக்கப்பட்ட மரங்களையும், பாழான அந்த வனத்தையும் நோக்கிய ததிவக்த்ரன்[2] {ததிமுகன்} என்ற பெயரைக் கொண்ட கபி {குரங்கானவன்}, கோபத்துடன் அந்தக் கபிக்களைத் தடுத்துநிறுத்தினான்.(19) அவர்களில் முதியவர்களால் கடிந்துரைக்கப்பட்டவனும், வனத்தின் கோப்தனும் {காவலனும்}, ஹரிவீரர்களில் முதியவனும், உக்கிர தேஜஸ் படைத்தவனுமான அவன் {ததிமுகன்}, வானரர்களிடமிருந்து வனத்தை ரக்ஷிக்கும் பொருட்டு மீண்டும் தன் மனத்தில் ஆலோசித்தான்.(20)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ததிவக்த்ரன் என்பதும், ததிமுகன் என்பதும் ஒன்றுதான் {ஒரே பொருள் கொண்ட பெயர்தான்}" என்றிருக்கிறது.
சிலரிடம் கடுமையாகச் சொன்னான். வேறு சிலரைப் பொருட்படுத்தாமல் தன் உள்ளங்கைகளால் இடைவிடாமல் தாக்கினான். சிலரை நெருங்கிச் சென்று கலகம் செய்தான். அதேபோல, சிலரிடம் சமாதானத்துடன் {நல்வார்த்தைகளுடன்} அணுகினான்.(21) அவனால் {ததிமுகனால்} பலவந்தமாகத் தடுக்கப்பட்டவர்களும், மதத்தால் எழுந்த அடங்கா வேகத்துடன் கூடியவர்களுமான அவர்களால் அவன் விலக்கப்பட்டான்; பயத்தைக் கைவிட்டு இழுக்கப்பட்டான். தோஷத்தை {குற்றத்தைப்} பார்க்காமல் தாக்கவும்பட்டான்.(22) மதத்தால், நகங்களைக் கொண்டு கீறியும், பற்களால் கடித்தும், உள்ளங்கைகளாலும், பாதங்களாலும் அந்தக் கபியை {குரங்கான ததிமுகனை} நன்றாகப் புடைக்கவும் செய்த கபயர்களால் மஹாவனம் விஷயம் {குரங்குகளால் அந்த பெருங்காடானது, மலர்கள், கனிகள், தேன் என ஏதும்} இல்லாததாகச் செய்யப்பட்டது.(23)
சுந்தர காண்டம் சர்க்கம் – 61ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |