Thursday 20 June 2024

மதுவனக் காவலர்கள் | சுந்தர காண்டம் சர்க்கம் - 62 (40)

Guards of Madhuvanam | Sundara-Kanda-Sarga-62 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ததிமுகன் தலைமையிலான மதுவனத்தின் காவலர்கள் சுக்ரீவனிடம் புகாரளிக்கச் சென்றது...

Dadhimukha falling in the feet of Sugreeva

ஹரிசிரேஷ்டனும், வானரரிஷபனுமான ஹனூமான், அவர்களிடம் {வானரர்களிடம், பின்வருமாறு} பேசினான், "வானரர்களே, கலங்காத மனத்துடன் மதுவை {தேனை} அருந்துங்கள்.{1} உங்கள் பாதையில் குறுக்கிடுபவர்களை நான் தடுத்துநிறுத்துவேன்" {என்றான் ஹனுமான்}.(1,2அ)

பிரசன்னாத்மாவான {நிறைவில் திளைப்பவனான} ஹனுமதனின் வாக்கியத்தைக் கேட்ட அங்கதன், பதிலுக்கு {பின்வருவனவற்றைச்} சொன்னான், "ஹரயர்கள் {குரங்குகள்} மதுவைப் பருகட்டும்.(2ஆ,3அ) காரியத்தை நிறைவேற்றிய ஹனுமதரின் வாக்கியம் அகாரியமாக {செய்யத்தகாததாக} இருப்பினும், நான் அவசியம் செய்வேன். மேலும் இத்தகைய சூழலில் {ஹனுமாரே அனுமதிக்கும்போது} என்ன சொல்வது?" {என்றான் அங்கதன்}.(3ஆ,4அ)

அங்கதனின் முகத்திலிருந்து {வாயிலிருந்து} வெளிப்பட்ட சொற்களைக் கேட்ட வானரரிஷபர்களான வானரர்கள், பெரும் மகிழ்ச்சியடைந்து, {அங்கதனைப்} பூஜித்து, "சாது, சாது {நன்று, நல்லது}" என்று பதிலளித்தனர்.(4ஆ,5அ) வானரரிஷபனான அங்கதனைப் பூஜித்த சர்வ வானரர்களும், {வேருடன் பெயர்த்தெடுக்க} மரத்தை நோக்கி வேகமாகச் செல்லும் நதியைப் போல, மதுவனம் இருக்குமிடத்திற்குச் சென்றனர்.(5ஆ,6அ) மைதிலியைக் கண்டும், {அவளைக் குறித்துக் கேட்டு} அறிந்தும், {மது பருகும்} அனுமதி பெற்ற சர்வ படவர்களும் {குரங்கினத்தாரும்}, உற்சாகத்துடன் மதுவனத்தில் பிரவேசித்து, வீரியத்துடன் பாலர்களை {காவலர்களை} மீறி, மதுவைப் பருகிவிட்டு, ரசமுள்ள பழங்களை உண்டனர்.(6ஆ,7)

பிறகு அனைவரும், மதுவனத்தில் நூற்றுக்கணக்கில் ஒன்றுதிரண்டு வந்த வனபாலர்களின் மீது பாய்ந்து, பலவாறு அடித்தனர்.(8) அனைவரும் ஒன்றுசேர்ந்து, துரோணம் மாத்திரமுள்ள மதுவை {தேனைத்} தங்கள் கைகளில் எடுத்துப் பருகினர். வேறு சிலர் அவற்றை {தேன்கூடுகளை} நொறுக்கினர்[1].(9) மதுபிங்களர்களான {தேனின் செம்மஞ்சள் நிறமுள்ள} சிலர் மதுவைப் பருகினர்; சிலர் வீசினர்; உத்கடத்துடன் கூடிய {வெறி கொண்ட} வேறுசிலர், பருகி எஞ்சிய மதுவை அன்யோன்யம் {ஒருவர் மீது மற்றொருவர்} பூசிக் கொண்டனர்.(10) வேறு சிலர், கிளையைப் பிடித்துக் கொண்டு, விருக்ஷத்தின் அடியில் {நிதானித்து} நின்றனர். மதத்தால் {வெறியால்} பெரிதும் பீடிக்கப்பட்ட சிலர், இலைகளைப் பரப்பிப் படுத்தனர்.(11) மதுமத்தத்தால் {மதுவெறியால் / தேன் உண்ட வெறியால்} உன்மத்தமடைந்த பிலவகர்கள் {பித்தானவர்களும், தாவிச் செல்பவர்களுமான குரங்குகள்}, மகிழ்ச்சியுடன் அன்யோன்யம் {ஒருவரையொருவர்} தள்ளிவிட்டனர். மேலும் சிலர், தள்ளாடத் தொடங்கினர்.(12) சிலர் சிங்கமுழக்கம் செய்து கொண்டிருந்தனர். சிலர் மகிழ்ச்சியுடன் {பறவைகளைப் போல} கீச்சிட்டனர். சில ஹரயர்கள் {குரங்குகள்}, மஹீதலத்தில் {தரையில்} மதுவுடன் படுத்துறங்கினர்.(13) ஏதோவொன்றைச் செய்தபடியே சிலர் சிரித்தனர். சிலர், வேறொன்றைச் செய்து கொண்டிருந்தனர், சிலர் தாங்கள் செய்து கொண்டிருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தனர். வேறு சிலர், {செய்கைக்கும் சொல்லுக்குமிடையில்} ஏதோவொன்றைப் புரிந்து கொண்டனர்.(14)

[1] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "துரோணம் என்பது 1024 முஷ்டிகள் {கைப்பிடியளவு} உள்ள ஒரு மரப்பாத்திரமாகும்" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பின் அடிக்குறிப்பில், "இரண்டு லிட்டர் அளவுள்ள தோலாலான கொள்கலன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "துரோணம் என்பதை ஒரு மரப்பாத்திரமாகவும், ஓர் அளவின் அலகாகவும் கொள்ளலாம். அதாவது, ஒரு துரோணம் கொள்ளளவுள்ள ஒரு மரப்பாத்திரம்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "ஒன்றுகூடிய அவர்கள் எல்லோரும் கைகளைக் கொண்டு தொன்னைகள் போல் குவித்து அதில் கொண்ட அளவு மதுக்களை வாங்கிக் கொண்டு குடித்தார்கள். சிலர் அப்படியே சிதற விட்டார்கள்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "சிலர் கைகளால் தேனடையைப் பிய்த்துத் தேனைக் குடித்துவிட்டு, மற்றவர்களைத் தாக்கினார்கள்; மற்றும் சிலர், தேனைக் குடித்துவிட்டு தேனடைகளை விட்டெறிந்தார்கள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவர்களெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து குறுணித்தேன் நிறைந்த தேன்கூடுகளைக் கைகளில் எடுத்துப் பருகிக் கொண்டிருந்தனர். சிலர் பருகிமிகுந்த தேன்கூடுகளை உடைத்துப் போட்டனர்" என்றிருக்கிறது. இங்கே குறுணி என்பது எட்டுப்படி கொண்ட தானிய அளவாகும். எட்டு ஆழாக்குகள் கொண்டது ஒரு படியாகும். அதாவது குறுணித்தேன் என்பது 64 ஆழாக்குகள் கொண்ட தேன்கூடாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் ஒரு துரோணம் என்பது 10.24 கிலோகிராமாகும். "மதூ⁴நி த்³ரோண மாத்ராணி" என்பது ஒரு துரோணம்  {எட்டுப்படி / அறுபத்துநான்கு ஆழாக்குகள் அளவு கொள்ளும் ஒரு குடம் / மரப்பாத்திரம்} போன்ற தேன்கூடாகவும் இருக்கலாம்.

அங்கே ததிமுகனின் பிரேஷ்யர்களாக {பணியாட்களாக} இருந்த மதுபாலர்கள் எவரோ, அவர்களும் பயங்கர வானரர்களால் அங்கிருந்து விரட்டப்பட்டு, பல்வேறு திசைகளுக்குச் சென்றனர்.(15) முழங்கால்கள் பிடிக்கப்பட்ட பிரக்ருஷ்டர்கள் {முழங்கால்களைப் பிடித்து இழுத்ததில் கலவரமடைந்தவர்கள்}, தேவ மார்க்கத்தில், பரமவேதனையுடன் ததிமுகனிடம் சென்று, {பின்வரும்} சொற்களைச் சொன்னார்கள்:(16) "ஹனூமதனிடம் வரம் பெற்றவர்கள், மதுவனத்தை பலவந்தமாக அழிக்கின்றனர். எங்கள் முழங்கால்களைப் பற்றி இழுத்து, தேவ மார்க்கத்தையும் காட்டினர் {எங்களை வானத்தில் தூக்கியும் வீசினர்}" என்றனர்[2].(17)

[2] தர்மாலயப் பதிப்பில், "அப்பொழுது இங்கு ததிமுகனுக்கு வேலைக்காரர்களாகவும், தேன் காவலர்களாகவும் எவர்கள் இருந்தனர்களோ, அவர்கள் அந்த மிகு பலமுள்ள வானரர்களால் மடக்கப்பட்டவர்களாய் மூலைமூலையாய் ஓடிவிட்டார்கள். முழங்கால்களைக் கொண்டு பிடித்து இழுக்கப்பட்டவர்களாய், அபானத்துவாரத்தையும் காட்டப்பட்டவர்களாய், மிக மனம் நொந்தவர்களாய் ததிமுகனிடமே சென்று ஒரு வார்த்தையைச் சொன்னார்கள்: ஹனுமாரினால் கொடுக்கப்பட்ட வரமுடையவர்களால் மதுவனமானது பலாத்காரமாய் ஹதமாக்கிவிடப்பட்டது. நாங்களும் முழங்கால்களைக் கொண்டு பிடித்து இழுக்கப்பட்டவர்களாய் அபானத்துவாரத்தையும் காட்டப்பட்டோம்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவ்வனத்தில் ததிமுகனுடைய கட்டளைப்படி நடக்கிற மதுரக்ஷகர் (தேன் கூண்டுகளைக் காப்பவர்) அனைவரும் பயங்கரமான அவ்வானரர்களால் தடுக்கப்பட்டுத் திசைகளைப் பற்றி ஓடிப்போயினர். மற்றும் அவ்வானரர்கள் அவ்வனரக்ஷகர்களை முழந்தாள்களில் பிடித்திழுத்து அபானத்வாரத்தை முகத்திற்கருகில் கொண்டு வந்து காட்டினர். இங்ஙனம் அவர்கள் பீடிக்கப்பட்டு மிகுதியும் துக்கமுற்றுத் ததிமுகனிடம் வந்து "ஹனுமானிடம் வரம் பெற்று வானரர்கள் மதுவனத்தையெல்லாம் பலாத்காரமாகப் பாழ்செய்தனர். இவ்வளவேயன்றி எங்களை முழங்கால்களில் பிடித்துத் தூக்கி அபானத்வாரத்தை முகத்தருகில் கொண்டுவந்து பார்க்கும்படி செய்தார்கள்" என்றனர்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "ததிமுகனால் அனுப்பப்பட்ட வேலைக்காரர்களும், வனப்பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பயங்கரமான அந்த வானரர்களால் தடுக்கப்பட்டு, எண்திசைகளிலும் ஓடினார்கள். முழங்கால்கள் பிடித்திழுக்கப்பட்டு, ஆகாயத்தை நோக்கி வீசி எறியப்பட்ட அவர்கள், மிகவும் கலவரமடைந்து, ததிமுகனிடம் சென்று முறையிட்டார்கள். "அனுமாரால் உத்தரவு கொடுக்கப்பட்டு, வானர சைன்யத்தால் மதுவனம் அழிக்கப்பட்டது. நாங்களும் முழங்கால் பற்றி இழுக்கப்பட்டு வானத்தில் எறியப்பட்டோம்" என்றனர்" என்றிருக்கிறது.

மதுவனம் அழிக்கப்பட்டதைக் கேட்டு, அங்கிருந்த வனபனான {வனத்தைப் பாதுகாப்பவனான} ததிமுகன் குரோதமடைந்தான். பிறகு அந்த ஹரிக்களை {குரங்குகளைப் பின்வருமாறு} சாந்தவயப்படுத்தினான்:(18) "இதோ வாருங்கள் போகலாம். பலத்தில் செருக்குடன் மதுவை பக்ஷிக்கும் வானரர்களை, பலத்தைக் கொண்டு தடுத்து நிறுத்துவோம்" {என்றான் ததிமுகன்}.(19)

ததிமுகனின் வசனத்தைக் கேட்ட உடனேயே, வீரர்களான வானரரிஷபர்கள் அவனுடன் சேர்ந்து, மீண்டும் மதுவனத்திற்குச் சென்றனர்.(20) அவர்களின் மத்தியில் இருந்த ததிமுகன், ஒரு மரத்தை {வேருடன் பெயர்த்து} எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினான். அந்த பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} அனைவரும் அவ்வாறே செய்தனர் {ததிமுகனைப் பின்தொடர்ந்து ஓடினர்}.(21) குரோதமடைந்த அந்த வானரர்கள் கற்பாறைகளையும், மரங்களையும், பர்வதங்களையும் கூட எடுத்துக் கொண்டு, அந்த கபிகுஞ்சரர்கள் {குரங்குகளில் யானைகளால் அந்த வானரர்கள்} இருக்குமிடத்திற்குச் சென்றனர்.(22) ஹிருதயத்தில் ஸ்வாமியின் {தலைவனின்} வசனத்தைக் கொண்டிருந்த அந்த வீரர்கள், சாலம் {ஆச்சாமரம்}, தாலம் {பனைமரம்}, கற்பாறைகளை ஆயுதமாகக் கொண்டு துரிதமாக விரைந்தனர்.(23) பிறகு, ஆயிரக்கணக்கான அந்த வீர பாலர்கள் {காவலர்கள்}, பலத்தின் செருக்குடன் விருக்ஷங்களிலும், அவற்றின் அடியிலும் இருந்த வானரர்களைத் தாக்கினர்.(24) 

ஹனூமதன் முதலியோர், குரோதங்கொண்ட ததிமுகனைக் கண்டதும், வேகமாக அவனை நோக்கி விரைந்தனர்.(25) கோபமடைந்த அங்கதன், மஹாபலம் பொருந்தியவனும், மஹாபாஹுவும் {நீண்ட கைகளைக் கொண்டவனும்}, விருக்ஷத்துடன் {மரத்துடன்} விரைந்து வந்தவனுமான ஆரியகனை {தாத்தனை / தன் தந்தையின் மாமனான ததிமுகனை} தன் கைகளால் அடித்தான்.(26) பிறகு, மதத்தால் குருடான அவன் {வெறியால் பார்வை மறைந்த அங்கதன்}, "இவர் என் ஆரியகர்"[3] என்றும் கருதாமல், உடனேயே வேகமாக அவனை வசுதாதலத்தில் {ததிமுகனைத் தரையில்} வீழ்த்தி நசுக்கினான்.(27) கைகள், தொடைகள், தோள்கள் பங்கமடைந்து, பீடிக்கப்பட்ட கபிக்குஞ்சரனான அந்த வீரன் {குரங்குகளில் யானையும், வீரனுமான அந்த ததிமுகன்}, விரைவில் சோணிதத்தில் {குருதியில்} நனைந்தவனாகி ஒரு முஹூர்த்தம் நனவிழந்திருந்தான்.(28) அந்த ராஜமாதூலன் {அரசன் சுக்ரீவனின் மாமனான ததிமுகன்}, விரைவில் தெளிந்தெழுந்து, கோபமடைந்து, மதுமோஹிதத்தில் இருந்த வானரர்களை தண்டத்தால் {தடியால்} தடுத்தான்.(29) 

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆரியகர் என்றால் உன்னதமானவர் என்று பொருள்" என்றிருக்கிறது. 

எப்படியோ, அந்த வானரர்களால் விடுவிக்கப்பட்ட அந்த வானரரிஷபன் {வானரர்களில் முதன்மையான ததிமுகன்}, ஏகாந்தத்தை ஆசரித்து {தனிமையான ஓரிடத்தை அடைந்து}, உடன்வந்த தன் பிருத்யர்களிடம் {பணியாட்களிடம், பின்வருமாறு} சொன்னான்:(30) "இவர்கள் {இங்கேயே} இருக்கட்டும். பெருங்கிரீவம் {அகன்ற கழுத்தைக்} கொண்ட வானரனான நம் தலைவன் சுக்ரீவன், ராமர் சகிதனாக எங்கிருக்கிறானோ {அங்கே} நாம் செல்வோம்.(31) அங்கதனின் தோஷங்கள் {குற்றங்கள்} அனைத்தையும், நான், பார்த்திபனை {மன்னனான சுக்ரீவனைக்} கேட்கச் செய்வேன். என் வசனத்தைக் கேட்டுக் கோபமடைபவன், {இந்த} வானரர்களைக் கொல்லச் செய்வான்.(32) இந்த மதுவனம், மஹாத்மாவான பார்த்திபனுக்கு {மன்னன் சுக்ரீவனுக்கு} இஷ்டமானது; பித்ரு பைதாமஹர்களின் {சுக்ரீவனின் தந்தை, பாட்டன்களின்} வழியில் வாய்த்தது; திவ்யமானது {தெய்வீகமானது}; தேவர்களாலும் அடைதற்கரியது.(33) அந்த சுக்ரீவன், தண்டமாக {தண்டனையாக} இந்த சர்வ வானரர்களையும், அவர்களின் நட்புஜனங்களுடன் சேர்த்துக் கொல்லச் செய்வான். மதுவில் கொண்ட ஆசையால், இவர்களின் ஆயுசும் குறைந்தது.(34) நிருப {மன்னனின்} ஆணையை அலட்சியம் செய்யும் இந்த துராத்மாக்கள், வதைக்கப்படத்தகுந்தவர்கள். பொறுமையின்மையில் எழும் நம் ரோஷம் {கோபம்}, நல்லபலனைக் கொடுக்கும்" {என்றான் ததிமுகன்}.(35)

மஹாபலவானான ததிமுகன், வனபாலர்களிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, வனபாலர்களுடன் சேர்ந்து உடனே எழுந்து, விரைந்து சென்றான்.(36) அந்த வனாலயன் {வனக்காவலனான ததிமுகன்}, மதிமிக்க வானரனான சுக்ரீவன் எங்கிருந்தானோ, அவ்விடத்தை நிமிஷாந்தர மாத்திரத்தில் அடைந்தான்.(37) இராமனையும், லக்ஷ்மணனையும், சுக்ரீவனையும் கண்ட உடனேயே, ஆகாசத்தில் இருந்து சம தளமான ஜகத்தில் {நிலத்தில்} இறங்கினான்.(38) மஹாவீரியம் கொண்ட ஹரியும் {குரங்கும்}, பாலர்களின் பரமேஷ்வரனுமான {காவலர்களின் முதன்மைத் தலைவனுமான} அந்த ததிமுகன், சர்வ பாலர்களால் சூழப்பட்டவனாகச் சென்று கீழே விழுந்து,{39} தீனவதனத்துடன் {சோர்ந்த முகத்துடன்} கூடியவனாக, சிரஸ்ஸில் அஞ்சலி செய்து {தலைக்கு மேலே கைகளைக் கூப்பியவனாக}, தன் மூர்த்தத்தால் {தலையால்} சுக்ரீவனின் சுப சரணங்களை {மங்கலப் பாதங்களை} அழுத்தினான்.(39,40)

சுந்தர காண்டம் சர்க்கம் – 62ல் உள்ள சுலோகங்கள்: 40


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை