Saturday 18 November 2023

ஹனுமானை நெருங்கிய ஜாம்பவான் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 65 (35)

Jambavan getting near Hanuman | Kishkindha-Kanda-Sarga-65 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தாண்டக்கூடிய தொலைவை அறிவித்தது; கடலைத் தாண்ட அங்கதனுக்குப் பதில் ஹனுமானை அனுப்ப வேண்டுமெனத் தீர்மானித்த ஜாம்பவான்...

Hanuman and Jambavan
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு

அப்போது, அங்கதனின் சொற்களைக் கேட்ட கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன், மைந்தன், துவிவிதன், சுஷேணன், ஜாம்பவான் உள்ளிட்ட அந்த வானரோத்தமர்கள் அனைவரும், கிரமப்படி, அங்கிருந்து தாண்டுவதில் தங்கள் தங்கள் திறனைச் சொன்னார்கள்.(1,2)

அப்போது, கஜன், “பத்து யோஜனைகள் தாண்டுவேன்” என்றான். கவாக்ஷன், “இருபது யோஜனைகள் கடப்பேன்” என்றான்.(3) பிறகு, சரபன் என்ற வானரன், அந்த வானரர்களிடம், “பிலவங்கமர்களே, முப்பது யோஜனைகள் கடப்பேன்” என்று சொன்னான்.{4} அங்கே ரிஷரபன் என்ற வானரன், “நாற்பது யோஜனைகள் கடப்பேன். இதில் ஐயமில்லை” என்று அந்த வானரர்களிடம் சொன்னான்.{5} மஹாதேஜஸ்வியான கந்தமாதனன், “ஐம்பது யோஜனைகள் கடப்பேன். இதில் ஐயமில்லை” என்றான் வானரர்களிடம்.{6} அங்கே மைந்தன் என்ற வானரன், அந்த வானரர்களிடம், “நான் அறுபது யோஜனைகள் வரை உற்சாகமாகத் தாண்டுவேன்” என்றான்.{7} அப்போது, மஹாதேஜஸ்வியான துவிவிதன், “நான் எழுபது யோஜனைகள் கடப்பேன். சந்தேகமில்லை” என்று அங்கே பதிலளித்தான்.{8} மஹாதேஜஸ்வியும், சத்வவானும் {வலிமைமிக்கவனும்}, கபிசத்தமனுமான {குரங்குகளில் உயர்ந்தவனுமான} சுஷேணன், “என் பராக்கிரமம் எண்பது யோஜனைகள்” என்று பிரதிஜ்ஞை செய்தான்.(4-9)

அப்போது அனைவரிலும் விருத்தனான {முதிர்ந்தவனான} ஜாம்பவான், அவர்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, அனைவரையும் பாராட்டிவிட்டு, {பின்வருமாறு} பதிலளித்தான்:(10) “பூர்வத்தில் எமக்கும்[1] கொஞ்சம் கதி பராக்கிரமம் இருந்தது. அத்தகைய நாம், தற்போது வயதின் அக்கரையை அடைந்துவிட்டோம் {வயது வரம்பைக் கடந்துவிட்டோம்}.(11) இஃது இப்படி இருந்தாலும், எந்த அர்த்தத்திற்காக கபிராஜாவும் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனும்}, ராமனும் பணியை நிச்சயித்து, இந்தக் காரியத்தைச் செய்ய முடிவெடுத்தார்களோ, அதைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை[2].(12) தற்போதைய காலத்தில், நாம் எந்த கதியை அடைந்திருக்கிறோமோ, அதைச் சொல்கிறோம் {கேட்பீராக}. தொண்ணூறு யோஜனைகள் கடப்போம். சந்தேகமில்லை” {என்றான் ஜாம்பவான்}.(13)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “எமக்கும்” என்ற இந்தச் சொல்லின் பொருள், “எனக்கும்” என்பதாகும். இங்கே “நாம்”, “எம்” போன்றவை அரசப் பயன்பாட்டு வகையிலான சொற்களாகும்” என்றிருக்கிறது. எனினும், இந்த சர்க்கத்தில் 11 முதல் 13ம் சுலோகம் வரையே ஜாம்பவான் இந்த அரசவகைச் சொற்களைப் பயன்படுத்துகிறான்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே ஜாம்பவந்தன், ராவணனின் லங்கைக்குச் செல்வதைத் தவிர்க்கும் குரங்குகளை எச்சரிக்கிறான். சுக்ரீவன், இதே குரங்குகளைத் திசைகள் அனைத்திலும் அனுப்பியபோது, “நீங்கள் தடையில்லா கதியைக் கொண்டவர்கள், உங்கள் திறன்களுக்கு எல்லையே இல்லை” என்றெல்லாம் சொல்லி அனுப்புகிறான். இருப்பினும், இங்கே இந்தக் குரங்குகள் அனைவரும், ‘நூறு யோஜனைகளைத் தாண்டுவதைக் காட்டிலும், தங்கள் திறன் குறைவானது’ என்று சொல்கின்றனர். இது வெறுமனே தாண்டுவதில் உள்ள தயக்கமல்ல; ராவணன் மீதான பயமே அவர்களைத் தடுக்கிறது. எனவே, இங்கே அவர்களில் கிழவனான ஜாம்பவந்தன், “புறக்கணித்தல், அலட்சியம்” முதலிய சொற்களால் அவர்களைக் கண்டிக்கிறான்” என்றிருக்கிறது.

அந்த ஹரிசிரேஷ்டர்கள் அனைவரிடமும், ஜாம்பவான் {பின்வரும்} இதையும் சொன்னான், “என்னுடைய கடக்கும் பராக்கிரமம் இதுவரையே {தொண்ணூறு யோஜனையே} என்பது நிச்சயமல்ல.(14) பூர்வத்தில் வைரோசனன் {மஹாபலி}, யஜ்ஞங்களை கிரமப்படி செய்து கொண்டிருந்தபோது, பிரபுவும், ஸநாதன விஷ்ணுவுமான திரிவிக்கிரமரை {மூன்றடியால் உலகை அளந்த வாமனரை} நான் பிரதக்ஷிணை செய்திருக்கிறேன் {வலம் வந்திருக்கிறேன்}.(15) இப்போது விருத்தனாக {கிழவனாக} இருக்கும் நான், கடப்பதில் மந்தவிக்கிரமனாக இருக்கிறேன். அப்போது யௌவனத்தில் {இளமையில்}, என் பலம் ஒப்புயர்வற்றதாக இருந்தது.(16) தற்காலத்தில் {இந்த வயதில்}, தானாக நான் கடந்து செல்வது இவ்வளவே இப்போது சாத்தியம். இவ்வளவு அந்தக் காரியத்திற்குப் போதாது” {என்றான் ஜாம்பவான்}.(17)

அப்போது மஹாபிராஜ்ஞனான {பேரறிஞனான} அங்கதன், மஹாகபியான {பெருங்குரங்கான}[3] ஜாம்பவந்தனுக்கு மரியாதை செலுத்திய பிறகு, உயர்ந்த அர்த்தத்துடன் கூடிய {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(18) “நான் இந்த மஹத்தான நூறு யோஜனைகளையும் கடப்பேன். திரும்புவதற்கு என்னிடம் சக்தி இருக்கிறதா, இல்லையா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை” {என்றான்}.(19)

[3] 4:59ல் 1ம் அடிக்குறிப்பில் இதே போலவே ஜாம்பவானைக் குரங்கு என்ற பொருளில் குறிப்பிடுவதில் உள்ள முரண்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கே 59 முதல் 63 வரையுள்ள சர்க்கங்களே முரண்பட்ட செய்திகளைக் கொண்டவை என்று தேசிராஜுஹனுமந்தராவ் குறிப்பிடுகிறார். “மஹாகபி {பெருங்குரங்கு}” என்ற இந்தக் குறிப்பு இதோ 65ம் சர்க்கத்தில் வருகிறது. இங்கே இதற்கு சமாதானமாக, தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “கரடியின் இயல்பும், நடத்தையும் கிட்டத்தட்ட மனிதக்குரங்குகளுக்கும், வாலில்லா குரங்குகளுக்கும், ஏன் சாதாரண குரங்குகளுக்கும்கூட இணையாக இருப்பதால், கரடியாக இருந்தாலும், ஜாம்பவான் இங்கே குரங்குகளில் ஒருவனாகவே கருதப்படுகிறான்” என்றிருக்கிறது.

வாக்கியகோவிதனான ஜாம்பவான், அந்த ஹரிசிரேஷ்டனிடம் {குரங்குகளில் சிறந்த அங்கதனிடம், பின்வருமாறு} சொன்னான், “ஹரிரிக்ஷசத்தமா {குரங்குகளிலும், கரடிகளிலும் உயர்ந்தவனே}, கடப்பதில் உன் சக்தி அறிந்ததே.(20) நீ தேவைப்பட்டால் நூறாயிரம் யோஜனைகளைக் கடந்து, திரும்பக்கூடிய சக்தி கொண்டவன். இந்த விதி உசிதமானதல்ல.(21) தாதா {ஐயா}, அனுப்பிவைக்கும் ஸ்வாமியை {தலைவனை}, எவ்வகையிலும் அனுப்பக்கூடாது. பிலவகசத்தமா {தாவிச் செல்பவர்களில் உயர்ந்தவனே}, இந்த ஜனங்கள் அனைவரும் உன்னால் அனுப்பப்படத்தகுந்தவர்கள்.(22) பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, ஸ்வாமி பாவத்தில் நிறுவப்பட்டிருக்கும் நீயே, எங்களின் களத்திரம் {காப்பு / நீயே எங்களால் காக்கப்பட வேண்டியவன்}. ஸ்வாமியே சைனியத்தின் களத்திரம் {காப்பு / தலைவனே படையால் காக்கப்பட வேண்டியவன்}. இதுவே கதியாகும்.(23) தாதா {ஐயா}, அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, நீயே இந்தக் காரியத்தின் மூலமாக {வேராக} இருக்கிறாய். எனவே களத்திரவானான {காக்கப்பட வேண்டியவனான} நீ சதா பாதுகாக்கப்பட வேண்டியவன்.(24) 

“அர்த்தத்தின் மூலமானது {நோக்கத்தின் / காரியத்தின் வேரானது} காக்கப்பட வேண்டும்” என்பதே காரிய விதாம் நயம் {காரியம் உணர்ந்தவர்களுக்குத் தகுந்த நீதியாகும்}. மூலம் {வேர்} இருந்தால்தான், பழங்களும், புஷ்பங்களும் விளையும்; சர்வ குணங்களும் சித்தியாகும் {நன்மைகள் அனைத்தும் நடந்தேறும்}.(25) எனவே, சத்தியவிக்கிரமா, பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, {சீதையைத் தேடும்} இந்தக் காரியத்தில் புத்தியும், விக்கிரமமும் நிறைந்த சாதனமாக {கருவியாக} நீயே இருக்கிறாய்.(26) கபிசத்தமா {குரங்குகளில் உயர்ந்தவனே}, எங்களின் குருபுத்திரனாகவும் {மதிப்புக்குரிய வாலியின் மகனாகவும்} , குருவாகவும் {மதிப்பிற்குரியவனாகவும்} நீ இருக்கிறாய். உன்னை ஆசரித்தால் {சார்ந்திருந்தால்} நாங்கள் அர்த்தத்தை சாதிப்பதில் சமர்த்தராவோம்” {என்றான் ஜாம்பவான்}.(27)

அப்போது மஹாகபியும், வாலியின் மகனுமான அங்கதன், இந்த வாக்கியத்தைச் சொன்னவனும், மஹாபிராஜ்ஞனுமான {பேரறிஞனுமான} ஜாம்பவந்தனுக்கு பதில்வாக்கியமாக {பின்வரும்} மறுமொழியைச் சொன்னான்:(28) “நானோ, வேறு வானரபுங்கவர்களோ கடக்கவில்லை என்றால், நாம் மீண்டும் இந்தப் பிராயோபவேசன {பட்டினி கிடந்து உயிர் துறக்கும்} காரியத்திலேயே ஈடுபடவேண்டும்.(29) மதிமிக்க அந்த ஹரிபதியின் சந்தேசத்தை {குரங்குகளின் தலைவரான சுக்ரீவரின் கட்டளையை} நிறைவேற்றாமல், அங்கே {கிஷ்கிந்தைக்குச்} சென்றாலும், பிராணன்களின் பாதுகாப்பைப் பார்க்க முடியவில்லை.(30) அந்த ஹரியேஷ்வரர் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவர்}, அருளிலும், கோபத்திலும் மிதம் மிஞ்சியவராவார். அவரது சந்தேசத்தை {கட்டளையை} மீறிச் செல்வதால் நாசமே விளையும்.(31) அந்தக் காரியத்தின் கதி அதுவே; அப்படியே. எனவே, அர்த்தத்தைக் காண்பவரான {காரியத்தின் முடிவைத் தெரிந்தவரான} நீரே, இது வேறுவகையாகிவிடாதபடி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்” {என்றான் அங்கதன்}.(32)

அங்கதனால் இவ்வாறு பதில் கூறப்பட்டவனும், வீரனும், பிலவகரிஷபனுமான {தாவிச் செல்பவர்களில் காளையுமான / சிறந்தவனுமான} அந்த ஜாம்பவான், அப்போது அங்கதனிடம் உத்தமமான இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(33) “வீரா, உன்னுடைய இந்தக் காரியத்தில் குறையேதும் நேராது. இந்தக் காரியத்தை எவன் சாதிப்பானோ {நிறைவேற்றுவானோ}, அவனை நான் ஊக்கப்படுத்தப் போகிறேன்” {என்றான் ஜாம்பவான்}.(34) 

பிறகு, ஹரிபிரவீரர்களில் மேலானவன் {உயர்வான குரங்கு வீரர்களில் மேலான ஜாம்பவான்}, பிலவதர்களில் வரிஷ்டனை {தாவிச் செல்பவர்களில் ஒப்பற்றவனை} ஏகாந்தத்தில் ஆசரித்து {தனிமையில் அணுகி}, சுகமாக அமர்ந்து கொண்டிருந்த ஹரிபிரவீரனான {குரங்குகளில் உயர்ந்தவீரனான} ஹனுமந்தனை ஊக்கப்படுத்தத் தொடங்கினான்[4].(35)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே ஹனுமான், வெறித்தனமான குரங்களின் கூட்டத்திலிருந்து விலகி, சுகமாக அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது, ஹனுமான் எப்படி வசதியாக அமர முடியும். இது சந்தேகம்? “அவன், வசதியாக அமர்ந்திருந்தாலும், அவனது இதயத்தில் கடலைக் கடப்பது குறித்த எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன” என்று பதிலுக்குச் சொல்லப்படுகிறது. ஒருபுறம், ராமன் தன் தங்க மோதிரத்தை ஹனுமானிடம், இதே குரங்குகளின் முன்னிலையில்தான் கொடுத்தான். மறுபுறம் அங்கதனோ, கடலைக் கடக்கப்போவது யார் என பிற குரங்குகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். பிறகு குரங்குகளால், இந்த சந்தர்ப்பத்தில், நூறு யோஜனை தூரத்தைத் தாண்ட முடியாததாலல்ல; ராவணனிடம் கொண்ட பயத்தாலேயே ஏதோவொரு வகையில் தப்ப முயல்கின்றன என்பதை முழுமையாக அறிகிறான். ஹனுமான், ராவணனுக்கோ, அவனது கைக்கூலி அரக்கர்களுக்கோ அஞ்சவில்லை; ஆனால், அவன் தனது கடமையைக் குறித்துக் கவலைப்படுகிறான். எவரும் தாண்டுவதற்கு முன்வரவில்லையென்றாலும், துணையில்லாமலேயே அவன் லங்கைக்கு நிச்சயம் செல்ல வேண்டியிருக்கும். இதில் எதுவாக இருந்தாலும், ஹனுமானே போகவேண்டும். இதனால்தான் அந்த “வசதியும்”, “தீர்மானமான முடிவும்”. எனவேதான் அவன் தன் கடமையிலேயே குறியாக இருக்கிறான். ஸ்கந்த புராணத்தில் இருந்து ஒரு சுலோகம், “நீலோ அங்க³தோ³ ஹனூமான் ச ஜாம்ப³வான் அத² கேஸரீ . ஸமுத்³ர தீரம் ஆக³ம்ய ந ஷே²கு꞉ ஸ்பந்தி³தும் பத³ம். ராவணஸ்ய ப³லம் ஜ்ஞாத்வா தீரே நத³ நதீ³ பதே꞉ . ஸ்காந்த³ புராண” என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் இந்த அடிக்குறிப்பில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சுலோகத்தின் பொருள்: “நீலன், அங்கதன், ஹனுமான், ஜாம்பவான், கேசரி ஆகியோர் கடற்கரையை அடைந்ததும், அவர்களால் கால்களை அசைக்கமுடியவில்லை. இராவணனின் வலிமையை அறிந்த அவர்கள், நத, நதிக்கரையில் வீழ்ந்தனர் என்று கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது” என்பதாகும்.

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 65ல் உள்ள சுலோகங்கள்: 35

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை