Dhumraksha killed | Yuddha-Kanda-Sarga-052 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களைத் தாக்கிய தூம்ராக்ஷன்; போரில் பெரும் எண்ணிக்கையிலான வானரர்களும், ராக்ஷசர்களும் கொல்லப்பட்டது; ஹனுமானுடன் போரிட்டு மடிந்த தூம்ராக்ஷன்...
யுத்தத்தை எதிர்பார்த்திருந்த சர்வ வானரர்களும், பீமவிக்கிரமனான ராக்ஷசன் தூம்ராக்ஷன் புறப்பட்டு வருவதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் முழக்கமிட்டனர்.(1) பயங்கர யுத்தத்தை நடத்திய கபிராக்ஷசர்கள் {குரங்குகளும், ராக்ஷசர்களும்} மரங்கள், சூலங்கள், முத்கரங்கள் ஆகியவற்றைக் கொண்டு அன்யோன்யம் கோரமாகத் தாக்கிக் கொண்டனர்.(2) கோரமான வானரர்கள், அனைத்துப் பக்கங்களிலும், ராக்ஷசர்களால் வெட்டி அழிக்கப்பட்டனர். இராக்ஷசர்களும், மரங்களுடன் கூடிய வானரர்களால் பூமி மட்டமாக்கப்பட்டனர்.(3) குரோதமடைந்த ராக்ஷசர்கள், கங்கபத்ரங்களுடன் {கழுகின் இறகுகளுடன்} நேராகச் செல்லக் கூடிய, கோரமான தோற்றம் கொண்ட கூரிய சரங்களால் வானரர்களைத் துளைத்தனர்.(4)
பயங்கரமான கதைகள், பட்டிசங்கள், கூட முத்கரங்கள், கோரமான பரிகங்கள், சித்திரமான திரிசூலங்கள் ஆகியவற்றுடன் கூடிய{5} ராக்ஷசர்களால் கிழிக்கப்பட்டவர்களும், மஹாபலவான்களுமான வானரர்கள், {அவமதிப்பை சகியாமல்} தங்கள் கோபத்தில் பிறந்த கர்மங்களை அச்சமில்லாமல் நிறைவேற்றினர்.(5,6) சூலங்களால் துளைக்கப்பட்ட தேகங்களுடன், சரங்களால் காத்திரங்கள் சிதைந்திருந்த அந்த வானர யூதபர்கள், மரங்களையும், பாறைகளையும் எடுத்துக் கொண்டனர்.(7) பயங்கர வேகம் கொண்டவர்களான அந்த ஹரயர்கள் {குரங்குகள்}, வீர ராக்ஷசர்களைப் புடைத்து, தங்கள் நாமங்களை {பெயர்களை} அறிவித்தபடியே உரக்க நாதம் செய்தனர்.(8) விதவிதமான பாறைகள், ஏராளமான சாகைகளுடன் {கிளைகளுடன்} கூடிய மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வானரராக்ஷசர்களுக்கிடையில் நடந்த அந்த கோரமான யுத்தம் அத்புதமாக இருந்தது.(9)
அச்சத்தை வென்ற வானரர்களால் சில ராக்ஷசர்கள் நசுக்கப்பட்டனர். உதிர போஜனம் செய்யும் {குருதி பருகும்} சிலர் தங்கள் வாய்களில் இருந்து உதிரத்தைக் கக்கினர்.(10) சிலர் விலாப் பக்கங்களில் வெட்டப்பட்டனர், சிலர் மரங்களைக் கொண்டு குவியலாக்கப்பட்டனர். சிலர் பாறைகளால் சூர்ணமாக்கப்பட்டனர் {பொடியாக்கப்பட்டனர்}. சிலர் பற்களால் கிழிக்கப்பட்டனர்.(11) நொறுங்கி பங்கமடைந்த துவஜங்கள், கீழே வீழ்த்தப்பட்ட ரதங்கள், வடிவம் சிதைக்கப்பட்ட ரதங்கள் ஆகியவற்றால் சில ரஜனிசரர்கள் {இரவுலாவிகள்} கலக்கமடைந்தனர்.(12)
வனௌகசர்களின் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களின்} பர்வத சிகரங்களால் நொறுக்கப்பட்ட வசுதாதலத்தில், பர்வதங்களுக்கு ஒப்பான கஜேந்திரங்களும் {தலைமை யானைகளும்}, சாரதிகளுடன் கூடிய வாஜிகளும் {குதிரைகளும்} சிதறிக் கிடந்தன.(13) பீம விக்கிராந்தர்களான வானரர்கள், வேகமாக வரும் ராக்ஷசர்களின் மீது பாய்ந்தும், தாவியும், தங்கள் கூரிய நகங்களால் அவர்களின் முகங்களைச் சிதைத்தனர்.(14) பெரும் விசன வதனம் கொண்டவர்களும் {முக ஒளி மிகவும் குன்றியவர்களும்}, தலைமயிர் கலைந்தவர்களுமான அவர்கள், சோணித கந்தத்தால் {ரத்த நாற்றத்தால்} மயக்கமடைந்து தரணீதலத்தில் {பூமியில்} விழுந்தனர்.(15)
பீம விக்கிரமர்களான ராக்ஷசர்களில் சிலர், பரம குரோதமடைந்து, வஜ்ரத்திற்கு ஒப்பான தங்கள் உள்ளங்கைகளால் வானரர்களைத் தாக்கினர்.(16) வேகமாக எதிர்க்கும் அவர்களை {ராக்ஷசர்களை}, அவர்களிலும் அதிக வேகங்கொண்ட வானரர்கள், தங்கள் முஷ்டிகள், சரணங்கள் {கால்கள்}, பற்கள், விருக்ஷங்கள் ஆகியவற்றைக் கொண்டு நொறுக்கினர்.(17) தப்பி ஓடும் சைனியத்தைக் கண்ட ராக்ஷசரிஷபன் {ராக்ஷசர்களில் காளை} தூம்ராக்ஷன், உற்சாகத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த வானரர்களுடன் கோபத்துடன் யுத்தம் செய்தான்.(18)
பராசங்களால் துளைக்கப்பட்ட சில வானரர்கள் உதிரம் பெருக்கினர். முத்கரங்களால் வீழ்த்தப்பட்ட வேறு சிலர் தரணீதலத்தில் {பூமியில்} விழுந்தனர்.(19) சிலர் பரிகங்களால் சிதைக்கப்பட்டனர். வேறு சிலர் பிண்டிபாலங்களால் துளைக்கப்பட்டனர், பட்டிசங்களால் துளைக்கப்பட்ட வேறு சிலர் தங்கள் உயிரை விட்டனர்.(20) குரோதமடைந்த ராக்ஷசர்களால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சில வனௌகசர்கள் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்கள்}, உதிரத்தால் நனைந்து பூமியில் விழுந்தனர், வேறு சிலர் விரட்டியடிக்கப்பட்டுத் தொலைந்தனர்.(21) சிலர் விலாப்பக்கம் நொறுங்கி, ஹிருதயங்கள் பிளந்து கிடந்தனர். வேறு சிலர் சூலங்களால் பிளக்கப்பட்டுக் குடல் பிதுங்கிக் கிடந்தனர்.(22)
பாறைகளையும், மரங்களையும், ஏராளமான சஸ்திரங்களையும் கொண்டு ஹரிராக்ஷசர்களுக்கு {குரங்குகளுக்கும், ராக்ஷசர்களுக்கும்} இடையில் நடந்த அந்த மஹத்தான யுத்தம் மிகப் பயங்கரமாகப் பிரகாசித்தது.(23) தனுசின் நாணொலிகளை மதுரமான தந்தி ஒலியாகவும் {வீணையொலியாகவும்}, விக்கல்களை {குதிரைகளின் கனைப்பொலிகளைத்} தாளங்களாகவும், மைந்த[1] துவனிகளை {யானைகளின் பிளிறல்களை} கீதமாகவும் கொண்டதாக அந்த யுத்த காந்தர்வம் {போர் இசை} ஒலித்தது.(24)
[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “யானை இனங்களில் ஒன்று” என்று இருக்கிறது.
தனுஷ்பாணியான {கையில் வில்லுடன் கூடிய} தூம்ராக்ஷன், சிரித்துக் கொண்டே தன் சரவிருஷ்டியால் ரணமூர்த்தத்தின் {கணை மழையால் போர்க்களத்தின்} திசைகள் அனைத்திலும் அந்த வானரர்களை விரட்டினான்.(25) தூம்ராக்ஷனால் தாக்கப்பட்டுத் தன் சைனியம் கலங்குவதைக் கண்ட மாருதி {ஹனுமான்}, குரோதத்துடன் பெரும் பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு அவனை நோக்கித் திரும்பினான்.(26) குரோதத்தால் இரட்டிப்பாகக் கண்கள் சிவந்தவனும், பிதாவுக்கு துல்லிய பராக்கிரமனுமான அவன் {தன் தந்தை வாயுவுக்கு நிகரான பராக்கிரமம் கொண்டவனுமான ஹனுமான்}, தூம்ராக்ஷனின் ரதத்தை நோக்கி அந்தப் பாறையை எறிந்தான்.(27) பாறை விழுவதைக் கண்டவன் {தூம்ராக்ஷன்}, விரைவாகத் தன் கதையை {கதாயுதத்தை} உயர்த்திக் கொண்டு வேகமாக ரதத்தில் இருந்து கீழே குதித்து வசுதையில் {பூமியில்} நின்றான்[2].(28) அந்தப் பாறை, சக்கரம், கூபரம் {ஏர்க்கால்கள்}, அஷ்வங்கள் {குதிரைகள்}, துவஜம் {கொடிமரம்}, சராசனங்கள் {விற்கள்} ஆகியவற்றோடு கூடிய அவனது ரதத்தை நொறுக்கிவிட்டு புவியில் விழுந்தது.(29)
[2] வகை நின்று உயர் தாள் நெடு மாருதியும்புகையின் பொரு கண்ணவனும் பொருவார்மிகை சென்றிலர் பின்றிலர் வென்றிலரால்சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார்- கம்பராமாயணம் 8369ம் பாடல், யுத்த காண்டம், படைத்தலைவர் வதைப் படலம்பொருள்: அழகாக ஓங்கி நின்ற கால்களைக் கொண்டவனும், உயர்ந்தவனுமான மாருதியும் {வாயு மைந்தன் ஹனுமானும்}, புகையோடு மாறுபடுகிற கண்களை உடையவனும் {தூம்ராக்ஷனும்} மோதும்போது, {ஒருவருக்கொருவர்} மிகை இல்லாமலும், பின்னில்லாமலும், வெற்றி அடையாமலும் போரிட்டு கொழுந்துவிட்டு எரியும் தீயை உமிழ்பவர்களைப் போலிருந்தனர்.
மாருதாத்மஜனான {வாயுவின் மைந்தனான} அந்த ஹனுமான், அவனது {தூம்ராக்ஷனின்} ரதத்தை பங்கம் செய்துவிட்டு, அடிபாகத்துடனும், கிளைகளுடனும் கூடிய மரங்களைக் கொண்டு ராக்ஷசர்களை அழிக்கத் தொடங்கினான்.(30) மரங்களால் தாக்கப்பட்ட சில ராக்ஷசர்கள், சிரசுகள் {தலைகள்} சிதைந்து, உதிரத்தால் நனைந்து தரணீதலத்தில் விழுந்தனர்.(31) மாருதாத்மஜனான ஹனுமான், ராக்ஷச சைனியத்தை விரட்டிவிட்டு, கிரியின் சிகரத்தை {மலைச்சிகரத்தை} எடுத்துக் கொண்டு, தூம்ராக்ஷனை நோக்கி விரைந்தான்.(32) வீரியவானான தூம்ராக்ஷன், திடீரெனத் தன் கதையை உயர்த்தி கர்ஜித்துக்கொண்டே ஹனுமானை நோக்கி விரைந்து சென்று தாக்கினான்.(33) அப்போது கோபமடைந்த தூம்ராக்ஷன், ஏராளமான கண்டகங்களுடன் {முட்களுடன்} கூடிய அந்த கதையைக் கொண்டு அந்த ஹனூமதனின் தலையில் அடித்தான்.(34)
அவன் {ஹனுமான்} அங்கே பயங்கர ரூபம் கொண்ட அந்த கதையால் தாக்கப்பட்டான். மாருதனின் பலத்தைக் கொண்ட அந்தக் கபி அதை {அந்தத் தாக்குதலைப்} பொருட்படுத்தாமல்,{35} தூம்ராக்ஷனுடைய சிரசின் மத்தியில் {தலையின் நடுவில்} ஒரு கிரி சிருங்கத்தை {மலைச்சிகரத்தை} எறிந்தான்.(35,36அ) கிரிசிருங்கத்தால் தாக்கப்பட்ட அவன் {தூம்ராக்ஷன்}, திடீரென சிதறுண்ட பர்வதம் போல் சர்வ அங்கங்களும் சிதற பூமியில் விழுந்தான்[3].(36ஆ,37அ) கொல்லப்படாமல் எஞ்சியிருந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, தூம்ராக்ஷன் கொல்லப்பட்டதைக் கண்டு, பிலவங்கமர்களால் {தாவிச் செல்லும் குரங்குகளால்} கொல்லப்படும் அச்சத்தால் லங்கைக்குள் நுழைந்தனர்.(37ஆ,38அ)
[3] மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு
உலையக் கடல் தாவிய கால் கொடு உதைத்து
அலையின் பருகிப் பரு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து தணிந்தனனால்
- கம்பராமாயணம் 8373ம் பாடல், யுத்த காண்டம், படைத்தலைவர் வதைப் படலம்
பொருள்: மலையினும் பேருடல் படைத்தவனின் {புகை நிறக்கண்ணானின் / தூம்ராக்ஷனின்} உடலை மண்ணில் போட்டு, கடலைத் தாவிய தன் கால்களைக் கொண்டு {உயிர் அழிந்து} வற்றும்படியாக உதைத்து, பெரும் வாயில் தீயை உமிழும் தலையைத் தன் கையைக் கொண்டு பறித்து கடலில் எறிந்து சினமாறினான் {ஹனுமான்}.
மஹாத்மாவான அந்தப் பவனசுதன் {வாயு மைந்தன் ஹனுமான்}, சத்ருக்களைக் கொன்று, சரிதங்களில் {நதிகளில்} குருதியைப் பாயச் செய்து, பகைவரை வதஞ்செய்த சிரமத்துடன் இருந்தாலும், கபிக்களால் {குரங்குகளால்} பூஜிக்கப்பட்டு மகிழ்ச்சியை அடைந்தான்.(38ஆ,இ).
யுத்த காண்டம் சர்க்கம் – 052ல் உள்ள சுலோகங்கள்: 38
Previous | | Sanskrit | | English | | Next |