Mahaparshva killed | Yuddha-Kanda-Sarga-098 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மஹாபார்ஷ்வனைத் தாக்கிய அங்கதனும், ஜாம்பவானும்; மஹாபார்ஷ்வனின் குதிரைகளைக் கொன்று, ரதத்தை பங்கம் செய்த ஜாம்பவான்; அங்கதனின் முஷ்டியால் கொல்லப்பட்ட மஹாபார்ஷ்வன்...
மஹாபலவானான மஹாபார்ஷ்வன்[1], சுக்ரீவனால் மஹோதரன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, குரோதத்தில் கண்கள் சிவந்து, அங்கதனின் சம்முவை {படையைத்} தன் பயங்கரக் கணைகளால் கலங்கடித்தான்.(1,2அ) காம்பிலிருந்து பழங்களை {வீழ்த்தும்} அநிலனை {காற்றைப்} போல அவன் {மஹாபார்ஷ்வன்}, சர்வ வானர முக்கியர்களின் உத்தம அங்கங்களை காயங்களிலிருந்து வீழ்த்தினான் {தலைகளை அவர்களின் உடல்களிலிருந்து வீழ்த்தினான்}.(2ஆ,3அ) பிறகு விரைவாக அந்த ராக்ஷசன், தன் கணைகளைக் கொண்டு சில வானரர்களின் கைகளைத் துண்டித்தான், மேலும் சிலரின் பக்கவாட்டுகளை வெட்டினான்.(3ஆ,4அ) மஹாபார்ஷ்வனின் பாணவேகத்தால் வேதனையடைந்த அந்த சர்வ வானரர்களும், வேதனையை எதிர்கொள்ள முடியாமல் நனவிழந்தவர்கள் ஆனார்கள்.(4ஆ,5அ)
[1] யுத்த காண்டம் 70ம் சர்க்கத்தில் ரிஷபனால் கொல்லப்பட்ட மஹாபார்ஷ்வன், மத்தன் என்ற பெயரையும் கொண்ட ராவணனின் தம்பி என்றும், இங்கே இந்த சர்க்கத்தில் வரும் மஹாபார்ஷ்வன், ராவணனின் அமைச்சர்களில் ஒருவன் என்றும் சொல்லப்படுகிறது.
மஹாவேகவானான அங்கதன், ராக்ஷசனால் துன்புற்று உத்வேகம் இழந்த பலத்தை {படையைக்} கண்டு, பர்வங்களில் சமுத்திரத்தை {அமாவாசை, பௌர்ணமிகளில் பொங்கும் கடலைப்} போன்ற வேகத்தை வெளிப்படுத்தினான்.(5ஆ,6அ) அந்த வானரசிரேஷ்டன் {வானரர்களில் சிறந்த அங்கதன்}, இரும்பாலானதும், சூரியக் கதிர்களுக்கு சமமான பிரபையுடன் கூடியதுமான பரிகத்தை எடுத்துக் கொண்டு சமரில் மஹாபார்ஷ்வன் மீது வீசினான்.(6ஆ,7அ) அதன் {அந்தப் பரிகத்தின்} தாக்குதலால் உணர்விழந்து, நனவிழந்த அந்த மஹாபார்ஷ்வன், சூதனுடன் கூடிய அந்த சியந்தனத்திலிருந்து புவியில் விழுந்தான் {தேரோட்டியுடன் கூடிய அந்தத் தேரில் இருந்து தரையில் விழுந்தான்}.(7ஆ,8அ)
நீல அஞ்சன {கரிய மைக்} குவியலுக்கு ஒப்பானவனும், மஹாவீரியனும், தேஜஸ்வியுமான ரிக்ஷராஜன் {கரடி மன்னன் ஜாம்பவான்},{8ஆ} மேகத்திற்கு ஒப்பான தன் கூட்டத்திடமிருந்து குரோதத்துடன் வெளிப்பட்டு, கிரிசிருங்கங்களுக்கு ஒப்பான பெரும் பாறையை வலிமையுடன் எடுத்து,{9} அவனது அஷ்வங்களை {குதிரைகளைக்} கொன்று, அந்த சியந்தனத்தையும் பங்கம் செய்தான் {தேரையும் நொறுக்கினான்}.(8ஆ-10அ) மஹாபலவானான மஹாபார்ஷ்வன் ஒரு முஹூர்த்தத்தில் நனவு மீண்டு, ஏராளமான பாணங்களால் அந்த அங்கதனை மீண்டும் தாக்கினான்.(10ஆ,11அ) மூன்று பாணங்களால் ரிக்ஷராஜன் ஜாம்பவந்தனின் மார்பைத் துளைத்து, ஏராளமான சரங்களால் கவாக்ஷனையும் தாக்கினான்.(11ஆ,12அ), கவாக்ஷனும், ஜாம்பவந்தனும் சரங்களால் பீடிக்கப்படுவதைக் கண்ட அந்த அங்கதன், குரோதத்தில் மூர்ச்சித்து, கோரமான பரிகத்தைப் பற்றினான்.(12ஆ,13அ)
அந்த அங்கதன், கோபத்தால் கண்கள் சிவந்து, ராக்ஷசனுக்குரியதும், இரும்பாலானதும்,{13ஆ} ரவியின் {சூரியக்} கதிர்களுக்குச் சமமான பிரபையுடன் கூடியதுமான அந்தப் பரிகத்தைத் தன்னிரு கைகளாலும் எடுத்துக் கொண்டு, அதை வேகமாகச் சுழற்றினான்.{14} அந்த வாலிசுதன் {வாலி மைந்தன் அங்கதன்} தூரத்தில் இருந்த மஹாபார்ஷ்வனைக் கொல்வதற்காக அவன் அதை {அந்தப் பரிகத்தை மஹாபார்ஷ்வன்} மீது வீசினான்.(13ஆ-15அ) பலவானால் இவ்வாறு வீசப்பட்ட அந்தப் பரிகம், அந்த ராக்ஷசனின் கையில் இருந்த சரத்துடன் கூடிய தனுசையும், அவனது தலைப்பாகையையும் கீழே வீழ்த்தியது.(15ஆ,16அ) பிரதாபவானான வாலிபுத்திரன் {அங்கதன்} குரோதத்துடன் வேகமாக அவனை அணுகி, குண்டலங்களுடன் கூடிய அவனது கர்ணமூலத்தில் {காதுகளின் அடிப்பாகத்தில்} உள்ளங்கையால் அறைந்தான்.(16ஆ,17அ)
மஹாவேகத்தையும், பேரொளியையும் கொண்ட அந்த மஹாபார்ஷ்வன், குரோதத்துடன் ஒரு கையால் மஹத்தான பரசு {பெரும் கோடரி} ஒன்றைப் பற்றினான்.(17ஆ,18அ) பரம குரோதம் அடைந்த அந்த ராக்ஷசன், விமலமானதும் {களங்கமற்றதும்}, திடமானதும், தைலத்தால் கழுவப்பெற்றதும் {எண்ணெய் தடவப்பெற்றதும்}, சைலம் {மலை} போல் உறுதியானதுமான அதை {அந்தக் கோடரியை} வாலிபுத்திரன் {அங்கதன்} மீது வீசினான்.(18ஆ,19அ) அந்த அங்கதன், தன் வதத்திற்காக இடது தோளைக் குறிபார்த்து அவனால் ஏவப்பட்ட அந்தப் பரசில் இருந்து ரோஷத்தால் நிறைந்தவனாகத் தன்னை விடுவித்துக் கொண்டான்.(19ஆ,20அ) பிதாவுக்குத் துல்லியமான பராக்கிரமத்துடன் கூடிய அந்த வீர அங்கதன், பெருங்குரோதத்துடன் கூடியவனாக வஜ்ரத்திற்கு ஒப்பான தன் முஷ்டியை இறுக்கினான்.(20ஆ,21அ) மர்மங்களை {உடலின் முக்கியப் பகுதிகளை} அறிந்தவனான அவன், இந்திர அசனிக்கு {இடிக்கு} சமமான ஸ்பரிசத்தைக் கொண்ட தன் முஷ்டியால், ராக்ஷசனின் மார்பின் அருகில் ஹிருதயத்தில் குத்தினான்.(21ஆ,22அ) பெரும்போரில் அவனது அந்தத் தாக்குதலால் {மார்பில் முஷ்டியின் தாக்குதலால்} அந்த ராக்ஷசன், ஹிருதயம் வெடித்து மாண்டவனாகப் புவியில் விழுந்தான்.(22ஆ,23அ)
சமரில் அவன் இறந்து பூமியில் விழுந்ததும் அந்த சைனியம் குழப்பமடைந்தது. இராவணன் மஹா குரோதமடைந்தான்.(23ஆ,24அ) பெரும் மகிழ்ச்சியடைந்த வானரர்கள் சிம்மநாதம் செய்தனர்.{24ஆ} இந்திரனுடன் கூடிய தேவர்களின் மஹாநாதத்தைப் போன்ற அந்த சப்தத்தால் கோட்டை, கோபுரங்களுடன் கூடிய இலங்கையே பிளந்து விடுவதைப் போலத் தெரிந்தது.(24ஆ,25அ,ஆ) இந்திர சத்ருவான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, போர்க்களத்தில் வனௌகசர்களும், திரிதசாலயர்களும் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களும், தேவர்களும்} செய்த அந்தப் பேரொலியைக் கேட்டபோது, பெருங்கோபமடைந்து, மீண்டும் யுத்தம் செய்ய ஆயத்தமாக நின்றான்.(26)
யுத்த காண்டம் சர்க்கம் – 098ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |