Kumbha killed | Yuddha-Kanda-Sarga-076 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கம்பனன், பிரஜங்கன் ஆகியோரை அங்கதனும், சோணிதாக்ஷனை துவிவிதனும், யூபாக்ஷனை மைந்தனும், கும்பனை சுக்ரீவனும் கொன்றது...
வீரஜனங்களுக்கு அழிவைத் தந்த அந்த கோரமான போர் நடந்து கொண்டிருந்த போது, போரில் உற்சாகம் கொண்ட அங்கதன், வீரம் மிக்க கம்பனனைத் தாக்கினான்.(1) அங்கதனை {அறைகூவி} அழைத்த அந்த கம்பனன், கதையைக் கொண்டு கோபத்துடன் வேகமாகத் தாக்கினான். கடுமையாகத் தாக்கப்பட்ட அவன் {அங்கதன்} கலக்கமடைந்தான்.(2) தேஜஸ்வியான அவன் {அங்கதன்}, நனவு மீண்டு, கிரி சிகரம் ஒன்றை வீசினான். அந்த அடியால் பீடிக்கப்பட்ட கம்பனன் புவியில் விழுந்தான்.(3)
அப்போது, ரணத்தில் கம்பனன் ஹதம் செய்யப்பட்டதை {கொல்லப்பட்டதைக்} கண்ட சோணிதாக்ஷன், சீக்கிரம் ரதத்தை எடுத்துக் கொண்டு, அச்சமின்றி அங்கதனை நோக்கி விரைந்தான்.(4) பிறகு, அவன் {சோணிதாக்ஷன்}, காலாக்னி போன்று சீற்றம் மிக்கவையும், கூர்முனை கொண்டவையுமான பாணங்களால் வேகமாகத் தாக்கி அங்கதனின் சரீரத்தைப் பிளந்தான்.{5} க்ஷுரக்ஷுரப்ரங்கள், நாராசம், வத்ஸதந்தம், சிலீமுகம், கர்ணிசல்யம், விபாடங்கள்[1] முதலியவற்றால் தாக்கினான்.(5,6)
[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "க்ஷுரம் - கத்தி போன்ற முனையைக் கொண்ட கணை, க்ஷுரப்ரம் - பிறை வடிவ முனையைக் கொண்ட கணை, நாராசம் - முற்றிலும் இரும்பாலான கணை, வத்ஸதந்தம் - கன்றின் பல் போன்ற முனையைக் கொண்ட கணை, சிலீமுகம் - கங்க இறகுகளுக்கு ஒப்பான கணை, கர்ணி - காதுகளைப் போன்று இருபுறங்களைக் கொண்ட கணை, சல்யம் - குறுகிய நுனி கொண்ட கணை, விபாடம் - கரவீரங்களின் உச்சிகளுக்கு ஒப்பான கணை" என்றிருக்கிறது.
அங்கங்களில் காயமடைந்தவனும், பிரதாபவானும், பலவானுமான வாலிபுத்ரன் அங்கதன், உக்கிரமான தனுவையும், ரதத்தையும், பாணங்களையும் தன் பலத்தைக் கொண்டு நொறுக்கினான்.(7) அப்போது சோணிதாக்ஷன் வாளையும், கேடயத்தையும் சீக்கிரமாக எடுத்துக் கொண்டான். பிறகு, குரோதத்துடனும், தயக்கமில்லாமலும் வேகமாகக் குதித்தான்.(8) பலவானான அங்கதனும் அதி சீக்கிரமாகப் பாய்ந்து, அவனது கரங்களைப் பற்றி, கட்கத்தை {வாளைப்} பறித்து, நாதம் செய்தான்.(9) பிறகு, கபிகுஞ்சரனான {குரங்குகளில் யானையான} அங்கதன், அவனது தோளில் கத்தியால் யஜ்ஞோபவீதம் {இடது தோளில் இருந்து வலப்பக்க இடைவரை தொங்கும் பூணூல்} போல் அவனை வெட்டினான்[2].(10)
[2] வானரர்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டது இதில் தெரிகிறது.
அந்த மஹாகட்கத்தை {பெரும் வாளை} எடுத்துக் கொண்ட வாலிபுத்ரன் {அங்கதன்}, மீண்டும் மீண்டும் நாதம் செய்தபடியே போர்முனையில் பிற பகைவரை நோக்கி விரைந்து சென்றான்.(11) அப்போது யூபாக்ஷனும், பிரஜங்கன் சகிதனாக ரதத்தில் இருந்தபடியே மஹாபலம் பொருந்திய வாலிபுத்ரனைத் தாக்கினான்.(12) கனகாங்கதம் பூண்ட வீரனான அந்த சோணிதாக்ஷன் ஆசுவாசமடைந்து, இரும்பாலான கதையை எடுத்துக் கொண்டு அவனை {அங்கதனை} நோக்கி விரைந்தான்.(13) பலவானும், மஹாவீரனுமான பிரஜங்கன், யூபாக்ஷன் சகிதனாகக் குரோதத்துடனும், கதையுடனும் மஹாபலவானான வாலிபுத்ரனை நோக்கி விரைந்தான்.(14) சோணிதாக்ஷப்ரஜங்கர்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த கபிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த அங்கதன்}, விசாகங்கள் இரண்டுக்கு மத்தியில் செல்லும் பூர்ணச்சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(15) மைந்தனும், துவிவிதனும் பரஸ்பரம் தங்கள் தற்காப்புத்திறனை வெளிப்படுத்தும் நோக்கில் அங்கதனை ரக்ஷிப்பதற்காக அவனது அருகிலேயே நிலைத்து நின்றனர்[3].(16)
[3] தர்மாலயப் பதிப்பில், "மைந்தனும், த்விவிதனும் நான் நான் என்று ஆவலாக அங்கதனை பாதுகாப்பவர்களாய் அவனது அருகில் காத்து நின்றனர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "மைந்தனும், த்விவிதனும் மாமன்மார்களாகையால் அங்கதனைப் பாதுகாத்துக் கொண்டு தந்தமக்கு எதிரிகளான ராக்ஷசர்களைக் கண்டு பிடிப்பதற்காக அங்கதன் ஸமீபத்தில் நின்றிருந்தனர்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில், "மைந்தனும், த்விவிதனும் (மாமன்கள் என்ற உறவுப்பிணைப்பால்) அங்கதனின் அருகில் நின்று அவனைப் பாதுகாத்தவண்ணம், தங்கள் வீரத்திற்கேற்ற எதிராளியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்றிருக்கிறது.
மஹாபலவான்களும், மஹாகாயர்களுமான {பேருடல் படைத்தவர்களுமான} ராக்ஷசர்கள், பதிலடி கொடுப்பதற்காக வாள்கள், பாணங்கள், கதைகள் ஆகியவற்றைத் தரித்தவர்களாக ரோஷத்துடன் வானரர்களை நோக்கி விரைந்தனர்.(17) பதில்தாக்குதல் தொடுத்த மூன்று ராக்ஷசபுங்கவர்களை {சோணிதாக்ஷன், யூபாக்ஷன், பிரஜங்கன் ஆகிய மூவரை}, மூன்று வானரேந்திரர்களும் {அங்கதன், மைந்தன், துவிவிதன் ஆகிய மூவரும்} எதிர்த்தபோது, ரோமஹர்ஷணத்தை விளைவிக்கும் {மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும்} வகையில் மஹத்தான யுத்தம் நடைபெற்றது.(18) அவர்கள் போரில் விருக்ஷங்களை {மரங்களை} எடுத்து வீசினர். மஹாபலவானான பிரஜங்கன் தன் கட்கத்தை {வாளைக்} கொண்டு அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(19) அவர்கள் {வானரர்கள்}, போரில் மரங்களையும், சைலங்களையும் எடுத்து ரதங்கள் மீதும், அஷ்வங்கள் {குதிரைகள்} மீதும் வீசினர். யூபாக்ஷன் தன் சர ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(20) வீரியவானும், பிரதாபவானுமான சோணிதாக்ஷன், துவிவிதமைந்தர்கள் இருவரும் எடுத்து வீசும் மரங்களைத் தன் கதையைக் கொண்டு மத்தியில் தாக்கி முறித்தான்.(21) பிரஜங்கன், பரம மர்மங்களை {முக்கிய உயிர்நிலை உடல் உறுப்புகளைப்} பிளக்கக்கூடிய பெரும் கட்கத்தை {வாளை} உயர்த்தியபடியே வாலிபுத்ரனை எதிர்த்து வேகமாக ஓடினான்.(22)
அப்போது, மஹாபலவானும், அதிபலவானுமான வானரேந்திரன் {அங்கதன்}, தன்னை நெருங்கி வருபவனைக் கண்டு, அஷ்வகர்ண மரத்தால் அவனை {பிரஜங்கனைத்} தாக்கினான்.(23) அவன் {அங்கதன்}, வாள்தாங்கும் அவனது {பிரஜங்கனின்} கையைத் தன் முஷ்டியால் தாக்கினான். வாலிபுத்ரனின் {அங்கதனின்} தாக்குதலால் அந்த வாள் பூமியில் விழுந்தது.(24) பூமியில் விழுந்த முசலத்திற்கு {உலக்கைக்கு} ஒப்பான அந்த கட்கத்தை {வாளைக்} கண்ட மஹாபலவான் {பிரஜங்கன்}, வஜ்ரத்திற்கு ஒப்பான தன் முஷ்டியை இறுக்கினான்.(25) மஹாதேஜஸ்வியான அவன் {பிரஜங்கன்}, மஹாவீரியம் பொருந்திய வானரரிஷபனின் லலாடத்தை {குரங்குகளில் காளையான அங்கதனின் நெற்றியைத்} தாக்கியபோது, அவன் ஒரு முஹூர்த்தம் {அங்கதன் சிறிது நேரம்} துடித்தான்.(26) தேஜஸ்வியும், பிரதாபவானுமான அந்த வாலிபுத்ரன் {அங்கதன்}, நனவு மீண்டு, தன் முஷ்டியைக் கொண்டு பிரஜங்கனின் சிரத்தை காயத்திலிருந்து {தலையை உடலில் இருந்து} விழச் செய்தான்.(27)
இரணத்தில் தன் பித்ருவ்யர் {தன் சிற்றப்பனான பிரஜங்கன் போரில்} மாண்டதால், கண்கள் நிறைந்த கண்ணீருடன் கூடிய அந்த யூபாக்ஷன், கணைகள் தீரவே, சீக்கிரமாக ரதத்தில் இருந்து இறங்கி, ஒரு கட்கத்தை எடுத்துக் கொண்டான்.(28) தன்னை நோக்கி விரையும் அந்த யூபாக்ஷனைக் கண்ட துவிவிதன், குரோதமடைந்து, அவனது மார்பில் அறைந்து, பலவந்தமாக அவனை {யூபாக்ஷனைப்} பிடித்துக் கொண்டான்.(29) மஹதேஜஸ்வியான சோணிதாக்ஷன், மஹாபலம் பொருந்திய பிராதா {தன்னுடன் பிறந்த யூபாக்ஷன்} கைப்பற்றப்பட்டதைக் கண்டபோது, துவிவிதனின் மார்பைத் தன் கதையால் தாக்கினான்.(30)
மஹாபலவானான துவிவிதன், அவனால் {சோணிதாக்ஷனால்} தாக்கப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்தபோதே, மீண்டும் உயர்த்தப்பட்ட அவனது கதையைப் பிடுங்கினான்.(31) இதனிடையில் வீரியவானான மைந்தன், துவிவிதனின் அருகில் வந்து, தன் உள்ளங்கையால் யூபாக்ஷனின் மார்பில் அறைந்தான்.(32) வலிமைமிக்கவர்களான சோணிதாக்ஷ, யூபாக்ஷர்கள் இருவரும் சமரில் {போரில்} அந்தப் பிலவங்கமர்கள் இருவரையும் {தாவிச் செல்பவர்களான மைந்தன், துவிவிதன் ஆகிய இருவரையும்} இழுத்துத் தள்ளி, தீவிரமாகவும், கடுமையாகவும் அறைந்தனர்.(33) வீரியவானான துவிவிதன், தன் நகங்களைக் கொண்டு சோணிதாக்ஷனின் முகத்தைப் பிளந்து, வீரியத்தால் அவனை பூமியில் தள்ளி நசுக்கினான்.(34) வானரபுங்கவனான மைந்தன், பெருங்குரோதமடைந்து, தன் கைகளால் யூபாக்ஷனைப் பீடித்தான். அவன் {யூபாக்ஷன்} கொல்லப்பட்டவனாக பூமியில் விழுந்தான்.(35)
பெரும் வீரர்கள் கொல்லப்பட்டதால் அந்த ராக்ஷசேந்திர சம்மு {ராவணனின் படை} கலக்கமடைந்தபோது, எங்கே கும்பகர்ணாத்மஜன் {கும்பகர்ணனின் மகனான கும்பன்} இருந்தானோ, அவ்விடத்தை நோக்கி விரைந்தனர்.(36) கும்பன், வேகமாக வந்து கொண்டிருந்த அந்த சம்முவை சாந்தப்படுத்தினான். அதேபோல, பெரும் லக்ஷியத்தை அடையக்கூடிய பிலவங்கமர்களில் மஹாவீரர்களால்,{37} ராக்ஷசசம்முவின் மஹாவீரர்கள் வீழ்த்தப்பட்டதைக் கண்டு, தேஜஸ்வியான கும்பன், ரணத்தில் செய்வதற்கரிய கடும் கர்மத்தைச் செய்தான்.(37,38) தன்விகளில் சிரேஷ்டனான {வில்லாளிகளில் சிறந்தவனான} அவன், தன் தனுவை எடுத்து, சமாஹிதத்துடன் கூடியவனாக, தேகங்களைப் பிளக்கக்கூடியவையும், விஷம் மிக்க பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சரங்களை விடுத்தான்.(39) சரம் பொருத்தப்பட்ட அவனது உத்தம தனு, மின்னல், ஐராவதம் ஆகியவற்றின் காந்தியுடன் கூடிய[4] இந்திரனின் இரண்டாம் தனுவைப் போல ஒளிர்ந்தது.(40)
[4] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அந்தக் கும்பனுடைய சிறந்த வில்லானது நாணோடும் பாணத்தோடும் கூடி மின்னலும் ஐராவதமென்னும் இந்த்ரதனுஸ்ஸும் போல் பேரொளியுடன் திகழ்வதாகி இரண்டாவது இந்த்ர தனுஸ்ஸுபோல் ப்ரகாசித்தது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "'இந்திராயுதா நுஸ்ததி தீர்வம்யாஜு ரோஹிதம் ஐராவதம்ச' என்று வைஜயந்தி நிகண்டுவிற் சொல்லியபடி நீண்டு நேராயிருக்கும் இந்த்ரதனுஸ்ஸை ஐராவதமென்கிறது. இங்கு நாணுக்கு மின்னலும் பாணத்திற்கு ஐராவததனுஸ்ஷும் உவமையாகச் சொல்லப்பட்டன. மின்னல் போன்ற நாணும் ஐராவதம் போன்ற பாணமும் அமைந்த கும்பனது தனுஸ்ஸு, மின்னல், ஐராவதம் இவற்றின் காந்தியுடையதாகி மின்னலும், ஐராவதமும் கூடின இரண்டாவது இந்த்ர தனுஸ்ஸு போல் ப்ரகாசித்ததென்று கருத்து. மின்னலும் ஐராவதமெனப்படும் இந்த்ரதனுஸ்ஸும் ஸாதாரணமான இந்த்ரதனுஸ்ஸும் கூடுவது உத்பாத காலத்திலென்று உணர்க. அல்லது கூடாததைக் கூட்டி உவமையாகச் சொல்லுகையால் அபூதோபமையுமாகலாம் {முன் எப்போதும் இல்லாத உவமையாகவும் இருக்கலாம்}" என்றிருக்கிறது.
அவன் {கும்பன்}, இறகுகள் பூட்டப்பட்டவையும், ஹாடகபுங்கங்களுடன் கூடியவையுமான அந்த பத்ரிணங்களை {பொற்புங்கங்களுடன் கூடிய அந்தக் கணைகளைக்} காது வரை இழுத்து ஏவி துவிவிதனைத் தாக்கினான்.(41) திரிகூடத்திற்கு ஒப்பான பிலவகோத்தமன் {தாவிச் செல்பவர்களில் உயர்ந்தவனான துவிவிதன்}, அதனால் தாக்கப்பட்ட உடனேயே கலக்கமடைந்து, கால்கள் நடுங்கக் கீழே விழுந்து துடித்தான்.(42) பெரும்போரில் தன் பிராதா பங்கமடைந்ததை {தன் உடன் பிறந்தவன் முறியடிக்கப்பட்டதைக்} கண்ட மைந்தன், ஒரு பெரும்பாறையை எடுத்துக் கொண்டு அங்கே வேகமாக விரைந்து சென்றான்.(43) இராக்ஷசனை நோக்கி மஹாபலத்துடன் அந்தப் பாறையை எறிந்தான். கும்பன், பளபளக்கும் தன் ஐந்து சரங்களால் அந்தப் பாறையைப் பிளந்தான்.(44) அந்த மஹாதேஜஸ்வி {கும்பன்}, கூர்முனையைக் கொண்டதும், விஷம் மிக்க பாம்புக்கு ஒப்பானதுமான மற்றொரு சரத்தைக் கொண்டு துவிவிதாக்ரஜனின் {துவிவிதனின் அண்ணனான மைந்தனின்} மார்பில் தாக்கினான்.(45) வானரயூதபனான அந்த மைந்தன், அவனது தாக்குதலில் மர்மங்களில் தாக்கப்பட்டு புவியில் மூர்ச்சித்து விழுந்தான்.(46)
மஹாபலவான்களான தன் மாதுலர்கள் {தாய்மாமன்களான மைந்தன், துவிவிதன்} இருவரும் வீழ்ந்ததைக் கண்ட அங்கதன், உயர்த்திய கார்முகத்துடன் {வில்லுடன்} கூடிய கும்பனை நோக்கி வேகமாக விரைந்து சென்றான்.(47) கும்பன், தன்னை நோக்கி விரைந்து வருபவனை {அங்கதனை}, தோமரங்களால் {துளைக்கப்படும்} மாதங்கத்தை {யானையைப்} போல, ஐந்து ஆயசங்களாலும் {இரும்புக் கணைகளாலும்}, வேறு மூன்று கூரிய பாணங்களாலும் துளைத்தான்.(48) வீரியவானான அந்தக் கும்பன், கனக பூஷணங்களுடன் {பொன்னலங்காரத்துடன்} கூடியவையும், மழுங்காதவையும், கடுமையானவையும், கூர்மையான முனைகளைக் கொண்டவையுமான ஏராளமான கூரிய பாணங்களால் அங்கதனைத் துளைத்தான்.(49) வாலிபுத்ரனான அங்கதன், அங்கங்கள் துளைக்கப்பட்டாலும் கலக்கமடையாமல், அவனது {கும்பனின்} தலையில் பாறைகளையும், மரங்களின் மழையையும் பொழிந்தான்.(50) கும்பகர்ணாத்மஜனான ஸ்ரீமான் கும்பன், வாலிபுத்ரனால் எறியப்பட்ட அவை அனைத்தையும் வெட்டி வீழ்த்தினான்; பாறைகளையும் பிளந்தான்.(51)
வானரயூதபன் {குரங்குக் குழுத் தலைவனான அங்கதன்} தன்னை நோக்கி வருவதைக் கண்ட கும்பன், உல்கங்களால் குஞ்சரத்தை {எரிகொள்ளிகளால் தாக்கப்படும் யானையைப்} போல, தன் பாணங்களைக் கொண்டு அவனது புருவங்களைத் துளைத்தான்.(52) அவனுக்கு {அங்கதனுக்கு} உதிரம் பெருகியது, அவனது கண்கள் ரத்தத்தால் நனைந்தன. உதிரத்தால் நனைந்த தன் நேத்ரங்களை ஒரு கையால் மறைத்துக் கொண்டு,{53} மற்றொரு கையால் அருகில் இருந்த சால மரத்தைப் பற்றினான்.(53,54அ) பெரும்போரில், {அந்த மரத்தின்} தண்டுப் பகுதியை மார்பால் அணைத்துக் கொண்டும், அதை {அந்த மரத்தைக்} கைகளால் பற்றி, வளைத்து, வேருடன் பெயர்த்தெடுத்தான்.(54ஆ,55அ) சர்வராக்ஷசர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மந்தரத்தை {மந்தர மலையைப்} போன்றதும், இந்திரகேதுவுக்கு {இந்திரனின் கொடிக்கு} ஒப்பானதுமான அந்த விருக்ஷத்தை {மரத்தை} வேகமாக வீசினான்.(55ஆ,56அ) அவன் {கும்பன்}, உடலைப் பிளக்கவல்ல ஏழு கூரிய பாணங்களால் அவற்றை வெட்டினான். பெரிதும் கலங்கியிருந்த அந்த அங்கதன், மயக்கமடைந்து கீழே விழுந்தான்.(56ஆ,57அ)
ஹரிசிரேஷ்டர்கள் {குரங்குகளில் சிறந்தவர்கள்}, வெல்வதற்கரியவனான வாலிபுத்ரன், சாகரத்தில் {கடலில்} மூழ்குவதைப் போல விழுவதைக் கண்டு, அதை ராகவனுக்குத் தெரியப்படுத்தினர்.(57ஆ,58அ) இராமன், பெரும்போரில் வாலிபுத்ரன் பிணியுற்றதைக் கேட்டபோது, ஜாம்பவதன் முதலிய ஹரிசிரேஷ்டர்களை அங்கே அனுப்பிவைத்தான்.(58ஆ,59அ) இராமனின் சாசனத்தை {ஆணையைக்} கேட்ட அந்த வானரசார்தூலர்கள் {வானரர்களில் புலிகள்}, உயர்த்திய கார்முகத்துடன் கூடிய கும்பனை நோக்கிப் பெருங்குரோதத்துடன் விரைந்து சென்றனர்.(59ஆ,60அ) அப்போது அங்கதனை ரக்ஷிக்க விரும்பிய வானரரிஷபர்கள், கைகளில் மரங்களையும், பாறைகளையும் எடுத்துக் கொண்டு கோபம் நிறைந்த கண்களுடன் விரைந்து சென்றனர்.(60ஆ,61அ) ஜாம்பவான், சுஷேணன், வானரன் வேகதர்சி ஆகியோர் கும்பகர்ணாத்மஜனை {கும்பகர்ணனின் மகனான கும்பனை} நோக்கி குரோதத்துடன் விரைந்து சென்றனர்.(61ஆ,62அ) மஹாபலவான்களான அந்த வானரேந்திரர்கள் தன்னை நோக்கி வருவதைக் கண்டவன், நீர்ப்பெருக்கை {மறைக்கும்} மரக்கூட்டங்களைப் போன்ற சர ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} அவர்களை மறைத்தான்.(62ஆ,63அ) மஹாத்மாக்களான வானரேந்திரர்கள், அவனது பாணங்களின் பாதையை அடைந்ததும், கரையை {கடக்க முடியாத} பெருங்கடலைப் போல அவனைப் பார்க்கவும் சக்தியற்றவர்களானார்கள்.(63ஆ,64அ)
சரவிருஷ்டியால் {கணை மழையால்} துன்புறும் அந்த ஹரிகணங்களை {குரங்குக் கூட்டத்தைக்} கண்ட பிலவகேஷ்வரன், பிராத்ருஜனான {தாவிச் செல்வபர்களின் தலைவனான சுக்ரீவன், தன்னுடன் பிறந்த வாலியின் மகனான} அங்கதனை தன் பிருஷ்டத்தில் {பின்னால்} இருக்கச் செய்தான். பிறகு, சுக்ரீவன் சைலத்தின் சாரலில் செல்லும் நாகத்தை {நோக்கி விரையும்} வேகவானான கேசரியை {மலைச் சாரலில் யானையை நோக்கி விரையும் சிங்கத்தைப்} போலக் கும்பமாஹவனை {கும்பகர்ணனின் மகனான கும்பனை} நோக்கி விரைந்து சென்றான்.(64ஆ-66அ) அந்த மஹாகபி {பெருங்குரங்கான சுக்ரீவன்}, அஷ்வகர்ணம் போன்ற மஹாவிருக்ஷங்கள் ஏராளமானவற்றையும், இன்னும் விதவிதமான விருக்ஷங்களையும் வேருடன் பிடுங்கி வீசினான்.(66ஆ,67அ)
ஸ்ரீமான் கும்பகர்ணாத்மஜன், ஆகாயத்தை மறைத்ததும், தடுக்கப்படமுடியாததுமான அந்த விருக்ஷவிருஷ்டியை {மரங்களின் மழையைக்} கூரிய சரங்களால் வெட்டி வீழ்த்தினான்.(67ஆ,68அ) இலக்ஷியங்களை {இலக்கை} அடைவதில் தீவிரம் கொண்ட கும்பனின் கூரிய சரங்களால் வெட்டி வீழ்த்தப்பட்ட அவை {அந்த மரங்கள் எரிந்து}, கோரமான சதக்னிகளைப் போல ஒளிர்ந்தன.(68ஆ,69அ) பெரும் வலிமைமிக்கவனும், வீரியவானும், ஸ்ரீமானுமான வானராதிபன் {சுக்ரீவன்}, அந்த மரங்களின் மழை கும்பனால் வெட்டி வீழ்த்தப்பட்டதைக் கண்டும் கலங்காதிருந்தான்.(69ஆ,70அ) அந்தச் சரங்களால் தாக்கப்பட்டவன் {சுக்ரீவன்}, அதைத் தாங்கிக் கொண்டு, இந்திர தனுசுக்கு ஒப்பான பிரபையுடன் கூடிய கும்பனின் தனுவைப் பறித்து, உடனேயே அதை முறித்துப் போட்டான்.(70ஆ,71அ)
அந்தச் செயற்கரிய கர்மத்தைச் செய்த பிறகு, சீக்கிரமாகக் குதித்தெழுந்து, சிருங்கம் பங்கமடைந்த துவீபத்தை {தந்தம் முறிந்த யானையைப்} போன்ற கும்பனிடம் கோபத்துடன் இதைக் கூறினான்:(71ஆ,72அ) "நிகும்பாக்ரஜா {நிகும்பனின் அண்ணனான கும்பா}, உன் வீரியமும், பாணவேகமும் அற்புதமானது. உன்னிடமும், ராவணனிடமும் பணிவும், பிரபாவமும் இருக்கின்றன.(72ஆ,73அ) பிரஹ்லாதன், பலி, விருத்ரக்னன் {விருத்திரனைக் கொன்ற இந்திரன்}, குபேரன், வருணன் ஆகியோருக்கு ஒப்பானவனே, நீ ஒருவனே உன் பிதாவை {உன் தந்தையான கும்பகர்ணனை} விட பலம் மிக்கவனாகப் பிறந்திருக்கிறாய்.(73ஆ,74அ) கையில் சூலத்துடன் கூடியவனும், அரிந்தமனும் {பகைவரை அழிப்பவனும்}, மஹாபாஹுவுமான உன் ஒருவனையே,{74ஆ} புலனடக்கத்துடன் கூடியவனை மனக்கலவரங்கள் {எதிர்க்காமல் இருப்பது} எப்படியோ, அப்படியே திரிதசர்கள் {தேவர்கள்} எதிர்க்காதிருக்கின்றனர். விக்ரமத்தை வெளிப்படுத்துவாயாக. மஹாபுத்தியுள்ளவனே, என் கர்மங்களையும் பார்ப்பாயாக.(74ஆ,75) உன் பித்ருவ்யன், வரதானத்தால் தேவ, தானவர்களை சகித்துக் கொள்கிறான் {உன் பெரியப்பன் ராவணன், பிரம்மனிடம் வரம் பெற்ற காரணத்தால் தேவ, தானவர்களின் ஆற்றலைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவனாக இருக்கிறான்}. கும்பகர்ணனோ, வீரியத்தால் ஸுராஸுரர்களை சஹித்தான்[5].(76) துனுசில் {விற்திறனில்} இந்திரஜித்துக்கும், பிரதாபத்தில் {ஆற்றலில்} ராவணனுக்கும் துல்லியனான நீ, இப்போது ராக்ஷசலோகத்தின் பலவான்கள், வீரியவான்களில் சிரேஷ்டனாக {சிறந்தவனாக} இருக்கிறாய்.(77) சக்ரனுக்கும், சம்பரனுக்கும் {இடையில் நடந்த போரைப்} போல, எனக்கும், உனக்கும் இடையில் நடக்கப் போகும் அற்புதமான மஹாவிமர்தத்தை பூதங்கள் {பெரும்போரை உயிரினங்கள்} பார்க்கட்டும்.(78) உன் அஸ்திர கௌசலம் {ஆயுதங்களில் உனக்குள்ள திறன்} காட்டப்பட்டது. பீம விக்ரமர்களான இந்த ஹரிவீரர்களும் {பயங்கர ஆற்றல் மிக்கவர்களான இந்தக் குரங்கு வீரர்களும்} தாக்கப்பட்டனர். உன்னால் செய்யப்பட்ட கர்மம் ஒப்பற்றது.(79) வீரா, செய்த கர்மங்களால் நீ மிகவும் களைத்திருப்பதால், நிந்தனைக்கு அஞ்சி என்னால் கொல்லப்படாதவனாக இருக்கிறாய்[6]. களைப்பு நீங்கியதும் என் பலத்தைப் பார்ப்பாயாக" {என்றான் சுக்ரீவன்}.(80)
[5] 73ஆ,74அ சுலோகத்தில் சொன்னதை அழுத்திச் சொல்லும் வகையில், "நீயோ அந்தக் கும்பகர்ணனையும் விட வலிமை மிக்கவன்" என்ற பொருளில் இங்கே பேசுகிறான் சுக்ரீவன்.
[6] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, 'போரில் களைத்துப் போன கும்பனை சுக்ரீவன் கொன்றான்' என்று மக்கள் என்னை நிந்திக்கக்கூடாது - என்பது பொருள்" என்றிருக்கிறது.
அந்த சுக்ரீவனின் அவமதிக்கும் வாக்கியங்களால் கௌரவிக்கப்பட்டவனின் {கும்பனின்} தேஜஸ், நெய் இட்ட ஹோமத்தின் அக்னியைப் போல அபிவிருத்தி அடைந்தது.(81) அப்போது கும்பன், சுக்ரீவனின் கைகளைப் பற்றினான். அவர்கள் மதங்கொண்ட கஜங்கள் {யானைகள்} இரண்டைப் போல, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி,{82} அன்யோன்யம் காத்திரங்களை கிரஹித்துக் கொண்டும் {உடல்களைப் பிணைத்துக் கொண்டும்}, அன்யோன்யம் இழுத்துக் கொண்டும், களைப்பால் வாயில் தூமத்துடன் கூடிய ஜுவாலைகளை {புகையுடன் கூடிய தழல்களைக்} கக்கிக் கொண்டும் இருந்தனர்.(82,83) அவர்களின் கால்களின் உதையால் மஹீ {பூமி} அழுந்தியது. வருணாலயமும் {கடலும்}, தன் அலைகள் சுழலக் கலக்கமடைந்தது.(84) அப்போது சுக்ரீவன், வேகமாக கும்பனை லவணாம்பசத்தில் {உப்புநீர்க் கடலில்} தூக்கி வீசி, அவனுக்கு அதன் அடித்தலத்தை {கடலின் அடிப்பகுதியைக்} காட்டினான்.(85) அப்போது, கும்பன் வீசப்பட்ட ஜலராசி {பெருங்கடல்}, விந்தியம், மந்தரத்திற்கு ஒப்பாக எழுந்து எங்கும் சிதறியது.(86)
பிறகு குதித்தெழுந்த கும்பன், குரோதத்துடன் சுக்ரீவனைத் தூக்கிவீசி, வஜ்ரத்திற்கு ஒப்பான தன் முஷ்டியால் அவனது மார்பைத் தாக்கினான்.(87) அவனது சர்மம் {தோல்} வெடித்து, ஏராளமான சோணிதம் {ரத்தம்} பெருகியது. முஷ்டியின் மஹாவேகம் அவனது எலும்புக்கூட்டையும் தாக்கியது.(88) பிறகு, மேரு கிரியில் வஜ்ரத்தின் தாக்குதலால் பிறக்கும் ஜுவாலையைப் போல, அங்கே {முஷ்டியின்} வேகத்தால் மஹத்தான தேஜஸ் எழுந்தது.(89) வானரரிஷபனான அந்த சுக்ரீவன், அங்கே அவனால் தாக்கப்பட்டதும், அந்த மஹாபலவான் வஜ்ரத்திற்கு ஒப்பான தன் முஷ்டியை இறுக்கினான்.(90) வீரியவானான அவன் {சுக்ரீவன்}, ஆயிரம் கதிர்களால் சூழப்பட்ட ரவிமண்டலத்தை {சூரியமண்டலத்தைப்} போல ஒளிர்ந்த தன் முஷ்டியைக் கொண்டு கும்பனின் மார்பில் குத்தினான்.(91) அந்தத் தாக்குதலால் பெரிதும் பீடிக்கப்பட்ட அந்தக் கும்பன், ஜுவாலை அடங்கிய பாவகனை {சுடர் அடங்கிய நெருப்பைப்} போலக் களைப்புடன் கீழே விழுந்தான்.(92) அவனது {சுக்ரீவனின்} முஷ்டியால் தாக்கப்பட்ட ராக்ஷசன் {கும்பன்}, யத்ருச்சையாக {தற்செயலாக} ஆகாசத்திலிருந்து ஒளிரும் கதிர்களுடன் {விழும்} லோஹிதாங்கனை {செவ்வாய் கோளைப்} போலத் திடீரெனக் கீழே விழுந்தான்.(93) முஷ்டியால் மார்பு பங்கமடைந்து கீழே விழுந்த கும்பனின் ரூபம், ருத்திரனால் தாக்கப்பட்ட கவாம்பதியின் ரூபத்தை {சூரியனின் தோற்றத்தைப்}[7] போல ஒளிர்ந்தது.(94)
[7] தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்னொருகால் கயிலைநாதரது வரபலத்தால் ஒரு தேவன் விமானத்திலேறிக் கொண்டு சூர்யமண்டலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அதைப் பொறாத சூர்யனால் அவன் கீழே தள்ளப்படவே, கோபம் மூண்ட சங்கரனார் சூர்யனைக் கீழ்வீழ்த்தினார் என்பது புராணக்கதை" என்றிருக்கிறது.
பீம பராக்கிரமம் கொண்ட பிலவங்கமர்களில் ரிஷபனால் {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனான சுக்ரீவனால்} யுத்தத்தில் அவன் {கும்பன்} கொல்லப்பட்டபோது, வனங்களுடனும், சைலங்களுடனும் கூடிய மஹீ {பூமி} நடுங்கியது. இராக்ஷசர்களுக்கு அதிக பயம் உண்டானது.(95)
யுத்த காண்டம் சர்க்கம் – 076ல் உள்ள சுலோகங்கள்: 95
Previous | | Sanskrit | | English | | Next |