Tuesday 31 May 2022

கௌசல்யை புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 043 (21)

The lament of Kaushalya | Ayodhya-Kanda-Sarga-043 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கௌசல்யையின் அழுகையும், புலம்பலும்...

Kaushalya and Dasharatha

பிறகு, புத்ரசோகத்தால் பீடிக்கப்பட்ட கௌசல்யை, சோகத்தில் தளர்ந்து கிடக்கும் பார்த்திபனை {மன்னன் தசரதனைக்} கண்டு, அந்த மஹீபதியிடம் {பூமியின் தலைவனான தசரதனிடம்} இதைச் சொன்னாள்:(1) “புருஷசார்தூலனான ராகவனிடம் {மனிதர்களிற்புலியான ராமனிடம்} விஷத்தை கக்கிய அரவம் போன்ற கைகேயி, தோலுரித்த பன்னகியை {பெண் பாம்பைப்} போல {சுதந்திரமாகத்} திரிவாள்.(2) ராமனை விரட்டியதில் ஆசை நிறைவேறிய அந்த நற்பேறு பெற்றவள் {கைகேயி}, வீட்டில் துஷ்ட அரவத்தைப் போல என்னைப் பீடித்து அச்சுறுத்தப் போகிறாள்.(3) என் ஆத்மஜனை தாசனாக {என் மகன் ராமனை அடிமையாக} தத்தம் செய்திருந்தாலும் சிறந்தது. அப்போது என் மகன் நகரத்தில் திரிந்து பிச்சையெடுத்தாவது, {கைகேயி} விரும்பிய காரியத்தைச் செய்தவாறு கிருஹத்தில் {வீட்டில்} வசித்திருப்பான்.(4) 

அக்னியை வளர்க்கும் ஒருவன் பர்வ காலத்தில் பாகத்தை {அமாவாசையிலோ, பௌர்ணமியிலோ தேவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்ப்பாகத்தை}  ராக்ஷசர்களுக்குக் கொடுப்பது போலவே, கைகேயியும் தன் விருப்பப்படி ராமனை ஸ்தானத்தில் இருந்து இறக்கி விட்டாள்.(5) மஹாபாஹுவான அந்த வீரன் {பெருந்தோள்களைக் கொண்ட வீரனான ராமன்}, தன் பாரியையுடனும் {மனைவியான சீதையுடனும்}, லக்ஷ்மணனுடனும், தனுதரனாக கஜராஜ கதியில் {கையில் வில்லுடனும் யானைகளின் மன்னனுடைய நடையுடனும்} நிச்சயம் வனத்தில் நுழைந்திருப்பான்.(6) கைகேயியின் விருப்பப்படி வனவாசம் செய்ய உம்மால் அனுப்பப்பட்டவர்களும், இதுவரை துக்கத்தைக் காணாதவர்களுமான அவர்களுக்கு வனத்தில் என்ன அவஸ்தை ஏற்படுமோ?(7) பாலகாலத்தில், ரத்தினங்களற்றவர்களாக நாடு கடத்தப்பட்ட அந்த இளைஞர்கள், பரிதாபத்திற்குரியவர்களாகப் பழங்களையும், கிழங்குகளையும் உண்டு எவ்வாறு பிழைப்பார்கள்?(8) 

இந்த சோகத்திற்கான முடிவைக் கொண்டு வரும் அந்தக் காலமும் எப்போது எனக்கு வாய்க்கும்? சகோதரனுடனும், பாரியையுடனும் கூடிய ராகவனை இனி எப்போது நான் காண்பேன்?(9) அந்த வீரர்கள் இருவரும் திரும்புவதைக் கேட்டுப் பரவசமடையும் மக்களாலும், உயர்ந்த துவஜங்களாலும் {கொடிகளாலும்}, மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டதாக இந்தப் புகழ்வாய்ந்த அயோத்தி எப்போது மாறப்போகிறது?(10) அரண்யத்தில் இருந்து திரும்பி வரும் அந்த நரவியாகரர்களை {மனிதர்களில் புலிகளான ராமனையும், லக்ஷ்மணனையும்} கண்டு பர்வகாலத்தில் {பௌர்ணமியில்} பொங்கும் சமுத்திரத்தைப் போல எப்போது இந்த நகரம் மகிழ்ச்சியடையப் போகிறது?(11) மஹாபாஹுவான அந்த வீரன் {ராமன்}, ரதத்தில் சீதையை முன்னிட்டுக் கொண்டு, கோவைப் பின்தொடரும் ரிஷபத்தை {பசுவைப் பின்தொடரும் காளையைப்} போல எப்போது அயோத்தியாபுரிக்குள் பிரவேசிப்பான்?(12)

ராஜமார்க்கத்தில் நகருக்குள் நுழையும் அரிந்தமர்களான என் ஆத்மஜர்களின் {பகைவரை வெல்பவர்களான என் மகன்களின்} மீது எப்போது ஆயிரக்கணக்கான பிராணிகளும் பொரிகளை பொழியும்? {எப்போது ஆயிரக்கணக்கான மக்களும் அக்ஷதைகளைப் பொழிவார்கள்?}(13) நல்ல குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், சிறந்த விற்களையும், வாள்களையும் தரித்தவர்களுமான அவர்கள், சிகரங்களை மகுடமாகக் கொண்ட பர்வதங்களைப் போல அயோத்திக்குள் பிரவேசிப்பதை நான் எப்போது காண்பேன்?(14) துவிஜர்களும் {இரு பிறப்பாளர்களும்}, கன்னிகையரும் மலர்களையும், பழங்களையும் கொடுக்க, எப்போது அவர்கள் இந்த நகரை மகிழ்ச்சியுடன் பிரதக்ஷிணம் செய்வார்கள் {வலம் வருவார்கள்}?[1].(15) புத்தியில் கனிந்தவனும், வயதில் அமரனைப் போல் ஒளிர்பவனுமான அந்த தர்மஜ்ஞன் {தர்மத்தை அறிந்த ராமன், உலகிற்கு} ஊட்டத்தை அளிக்கும் திரிவர்ஷத்தை {மும்மாரியைப்} போல எப்போது என்னிடம் திரும்பி வருவான்?(16)

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "பிராமணக்ஷத்ரிய வைசிய ஜாதிகளின் ஸுமங்கலிகள் மனமகிழ்ச்சி கொண்டவர்களாய் நகரில் நன்மலர்களையும், கனிகளையும் அர்ப்பணஞ்செய்கின்றவர்களாய் மங்கலஹாரத்தியை எப்பொழுது செய்வார்களோ" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராமன் வந்தானென்னும் மங்கல வார்த்தையைக் கேட்டு ஸந்தோஷமடைந்த ப்ராஹ்மண கன்னிகைகள் புஷ்பங்களையும் பழங்களையும் கொடுத்துக்கொண்டு எப்பொழுது நகரத்தை ப்ரதக்ஷிணஞ் செய்யப் போகிறார்களோ?" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நல்வேதியர்களும், கன்னியர்களும், நன்மலர்களையும், கனிகளையும் மகிழ்ந்து, உபகாரமாகக் கொடுக்க என்னருஞ்செல்வமைந்தர்கள் அவைகளையுவகை கொண்டு அங்கீகரித்து ஆனந்தமுற்று, இத்திருவயோத்தியை எக்காலம் வலஞ்செய்வர்கொல்லோ?" என்றிருக்கிறது.

வீரரே {தசரதரே}, பூர்வத்தில் {முற்பிறவிகளில்} குழந்தைகள் பருக ஆவலுடன் இருந்த மாதாக்களின் ஸ்தனங்களை நான் நிச்சயம் அறுத்திருப்பேன்.(17) புருஷவியாகரரே {மனிதர்களிற்புலியே},  கன்றை விரும்பும் பசுவைப் போன்ற நான், சிங்கத்தால் இளங்கன்றை இழந்த பசுவைப் போல கைகேயியால் பலவந்தமாகப் பிள்ளையற்றவளாக்கப்பட்டேன்.(18) குணங்கள் அனைத்தாலும் அலங்கரிக்கப்பட்டவனும், சர்வ சாஸ்திரங்களையும் நன்கறிந்தவனும், ஏக புத்திரனுமான {ஒரே மகனுமான} என் புத்திரனில்லாமல் நான் ஜீவிக்க விரும்பவில்லை.(19) மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, மஹாபலம் படைத்தவனுமான என் பிரிய புத்திரனைக் காணாமல் இங்கே ஜீவிப்பதற்கான சாமர்த்தியம் கற்பனையிலும் என்னிடம் கிஞ்சித்தும் இல்லை.(20) பெரும் பிரபை கொண்ட பகவான் திவாகரன் {சூரியன்}, கோடை காலத்தில் தன் கதிர்களால் இந்த மஹீயை {பூமியை} எரிப்பதைப் போல, என் மகனால் உண்டான இந்த சோக நெருப்பு என்னைத் துன்புறுத்துகிறது” {என்றாள் கௌசல்யை}.(21)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 043ல் உள்ள சுலோகங்கள் : 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை