The lament of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-059 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அயோத்தியில் படிந்த சோகநிழலை விளக்கிய சுமந்திரன்; இராமனை நினைத்து அழுத தசரதன் விரைவில் மயங்கி விழுந்தது...
{சுமந்திரன் தொடர்ந்தான்},[1] "இராமன் வனத்திற்குப் புறப்பட்டதும் திரும்பி வரும்போது என்னுடைய அச்வங்கள் {குதிரைகள்} உஷ்ணமான கண்ணீர் வடித்து மேலும் நகராமல் இருந்தன.(1) அதன்பிறகு நான் அந்த ராஜபுத்திரர்கள் இருவரையும் கைக்கூப்பி வணங்கி துக்கத்தைத் தாங்கிக் கொண்டு ரதத்தில் ஏறி புறப்பட்டேன்.(2) இராமன், என்னை மீண்டும் அழைப்பான் என்ற நம்பிக்கையில், குஹனுடன் அங்கேயே பல நாட்கள் {மூன்று நாட்கள்}[2] வசித்திருந்தேன்.(3)
[1] சில பதிப்புகளில் இதற்கு முன்பு 4 சுலோகங்கள் இருக்கின்றன. முக்கியமான பதிப்புகள் அனைத்திலும் இந்த நான்கு சுலோகங்களும் தவிர்க்கப்பட்டிருப்பதால் இங்கும் அவ்வாறே தவிர்க்கப்படுகிறது. இருப்பினும், அவற்றின் பொருள் பின்வருமாறு: "இவ்வாறு செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்த சுமந்திரனிடம், இன்னும் வேறு எதையும் உள்ளதை விடாமல் சொல்லுமாறு தசரதன் ஆணையிட்டான்.{1} சுமந்திரன் அந்த ஆணையைக் கேட்டு, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் ராமனைக் குறித்த செய்திகள் அனைத்தையும் சொல்லத் தொடங்கினான்.{2} "ராஜரே, மரவுரி உடுத்தியிருந்த அவ்விருவரும் சடைகளைத் தரித்துக் கொண்டனர். இராமனுக்கு வழிகாட்டிக் கொண்டு முதலில் லக்ஷ்மணன் சென்றான். அவன் பின்னால் சீதை சென்றாள். அவ்விருவருக்கும் பின்னால் ரகுகுல ராமன் சென்றான். அவ்வாறு செல்லும் அவர்களைக் கண்டு நான் அப்போது கவலையுடன் திரும்பினேன.{3,4}" அதற்குப் பிறகு பின்வரும் செய்திகள் அப்படியே தொடர்கின்றன.
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாஸ்தவமாகப் பார்க்கில் - செடியின் கீழ் ஒரு நாள், பரத்வாஜாச்ரமத்தில் இரண்டாவது நாள், யமுனைக் கரையில் மூன்றாவது நாள், நான்காவது நாள் சித்ரகூட ப்ரவேசம், ஐந்தாவது நாள் குஹனுடைய சாரர்கள் ராமவ்ருத்தாந்தம் தெரிவித்தல், ஆறாவது நாள் ஸூதன் அயோத்யைக்குப் புறப்படுதல். ஆகையால் ஆறுதினங்கள் ஆயின. அல்லது இரண்டாவது நாள் பரத்வாஜாசிரமத்தில் ராமன் சித்ரகூடத்திற்குப் போவதாக நிச்சயிக்கையால், அது தெரிந்து சாரர்கள் மூன்றாவது நாள் வந்து ஸுமந்தரனுக்குத் தெரிவிக்க, நான்காவது நாள் ஸுமந்த்ரன் புறப்பட்டானென்று நினைக்கலாமாயின், கங்காதீரத்தில் மூன்று தினங்கள் இருந்ததாகத் தெரிய வருகின்றது. ஆகையால் பல தினங்கள் என்றால் மூன்று தினங்களென்று கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. மேலும், பின்வரும் அயோத்தியா காண்டம் 62:18ல் {அயோத்தியா காண்டம் 62ம் சர்க்கம், 18ம் சுலோகத்தில்} ராமன் சென்று ஐந்து இரவுகள் கழிந்துவிட்டன என்று கௌசல்யை தசரதனிடம் சொல்லும் செய்தியையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
மஹாராஜாவே, உமது ஆட்சிப்பகுதியில் உள்ள மரங்கள், ராமனின் பிரிவால், புஷ்பங்களும், தளிர்களும், மொட்டுகளும் மலராமல் வாடியிருந்தன.(4) நதிகளிலும், குளங்களிலும், சரஸ்களிலும் {தடாகங்களிலும் / குட்டைகளிலும்} நீர் கொதித்துக் கொண்டிருந்தது, வனங்களிலும், உபவனங்களிலும் மரங்கள் இலைகளின்றி இருந்தன.(5) இராமனின் பிரிவால் நேர்ந்த சோகத்தில் உயிரினங்கள் அசையாமலும், காட்டு விலங்குகள் திரியாமலும் வனங்கள் அமைதியடைந்திருந்தன.(6) நரேந்திரரே, தாமரை இலைகள் மறைந்திருக்கும் நீரைக் கொண்ட பத்மின்யங்கள் {தாமரையோடைகள்}, வாடிய பத்மங்களுடனும் {தாமரைகளுடனும்}, மீனங்களும், நீர்க்கோழிகளும் இன்றி புழுதி நிறைந்த நீருடன் இருந்தன.(7) ஜலத்தில் பிறக்கும் புஷ்பங்களும், ஸ்தலங்களில் {நிலங்களில்} பிறக்கும் மலர்களும் அற்ப கந்தத்தையே {குறைந்த மணத்தையே} பரப்பின. பழங்களும் முன்பு போல் சுவையாகத் தெரியவில்லை.(8)
மனுஜரிஷபரே, இங்கேயுள்ள உத்யானங்களும் சூன்யமாக {தோட்டங்கள் வெறுமையாக} இருக்கின்றன. பறவைகள் இல்லாத தோட்டங்கள் அழகாகத் தெரியவில்லை.(9) அயோத்திக்குள் பிரவேசிக்கும்போது ஒருவரும் என்னை வரவேற்கவில்லை. இராமனைக் காணாத நரர்கள் {மனிதர்கள்} மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.(10) தேவரே, ராமனில்லாமல் ராஜரதம் இங்கே வந்திருப்பதைக் கண்டு, ராஜமார்க்கத்தில் சென்ற சர்வ ஜனங்களும் துக்கத்தில் உண்டான கண்ணீரால் முகம் நிறைந்தனர்.(11) மாடமாளிகைகளிலும், விமானங்களிலும் {ஏழடுக்கு மாளிகைகளிலும்}, அரண்மனைகளிலும் இருந்த நாரியைகள் {பெண்கள்}, இரதம் வருவதைக் கண்டு, ராமன் இல்லாததை உணர்ந்து, "ஹா, ஹா" என்று நொந்து கொண்டனர்.(12) அதிக வேதனையடைந்த ஸ்திரீகள், கண்ணீரில் பெருகி வழிந்து, பிரகாசிக்கும் தங்கள் நீள்விழிகளால் அன்யோன்யம் அவியக்தமாக {ஒருவரையொருவர் மறைமுகமாக} பார்த்துக் கொண்டனர்.(13) மித்ரர்களாகவோ {நண்பர்களாகவோ}, அமித்ரர்களாகவோ {நட்பில்லாதவர்களாகவோ}, உதாசீன ஜனங்களாகவோ {நடுத்தர மக்களாகவோ} இருந்தாலும் அவர்களின் துன்பத்தில் எந்த விசேஷத்தையும் {வேறுபாட்டையும்} நான் கவனிக்கவில்லை.(14) மகிழ்ச்சியற்ற மனிதர்களையும், களைப்பினால் உரக்கக் கதறி, பெருமூச்சு விட்டு தீனமடைந்த நாகங்களையும், துரங்கங்களையும் {யானைகளையும், குதிரைகளையும்} கொண்டதும், ஓலம் நிறைந்ததுமான அயோத்தியானது, மஹாராஜாவே, ராமனை நாடு கடத்தியதால் புத்திரனை இழந்த கௌசல்யையைப் போல ஆனந்தமற்றிருப்பதாக எனக்குத் தெரிகிறது" {என்றான் சுமந்திரன்}.(15,16)
இராஜா {தசரதன்}, அந்த சூதன் {சுமந்திரன்} சொன்னதைக் கேட்டு, கண்ணீரால் தடைபட்ட பரம தீனமான குரலில் அந்த சூதனிடம் இதைச் சொன்னான்:(17) "பாபப்பிறவியும், பாப நோக்கமும் கொண்ட கைகேயிக்கு இணங்கிய என்னால், ஆலோசனைகள் சொல்வதில் அனுபவமுள்ளவர்களிடமோ, விருத்தர்களிடமோ {பெரியோரிடமோ} முன்கூட்டியே கலந்தாலோசிக்க முடியவில்லை.(18) நண்பர்களிடம் ஆலோசிக்காமலும், அமாத்யர்களிடமோ, நைகமர்களிடமோ {அமைச்சர்களிடமோ, புனித உரைகளுக்கு விளக்கம் சொல்பவர்களிடமோ} ஆலோசிக்கமாலும், மோஹத்தினாலும், ஸ்திரீ ஹேதுவினாலும் {பெண்ணுக்காகவும்} அவசரகதியில் நான் இந்தச் செயலைச் செய்துவிட்டேன்.(19)
சூதரே, இந்த மஹத்தான விசனம் இந்தக் குலத்தின் அழிவுக்காக எதேச்சையாகவோ {தற்செயலாகவோ} நிச்சயமாகவோ தவிர்க்க முடியாத விளைவாக நேர்ந்திருக்கிறது.(20) சூதரே, நான் ஏதோ ஒரு நன்மையையாவது உமக்குச் செய்திருந்தால் என்னை உடனே ராமனிடம் அழைத்துச் செல்வீராக. பிராணன் {உயிர் மூச்சு} என்னை துரிதப்படுத்துகிறது.(21) இப்போதும் எல்லையற்ற அதிகாரம் எனக்கிருந்தால் ராகவனைத் திரும்ப அழைத்து வருவீராக. இராமன் இல்லாமல் என்னால் ஒரு கணமும் ஜீவிக்க முடியாது.(22) ஒருவேளை அந்த மஹாபாஹு {வலிமைமிக்க கரங்களைக் கொண்ட ராமன்} வெகுதூரம் சென்றிருந்தால், ரதத்தில் ஏற்றிச் சென்று சீக்கிரமாக என்னை ராமனுக்குக் காட்டுவீராக.(23) உருண்ட பற்களைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்த லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்} எங்கே? அவனும், சீதையும் நன்றாக இருப்பதைக் கண்டால் நான் ஜீவித்திருப்பேன்.(24) சிவந்த கண்களையும், நெடுங்கைகளையும் கொண்டவனும், ஆமுக்த மணிகுண்டலங்களுடன் கூடியவனுமான ராமனைக் காணாவிட்டால் யமலோகத்திற்கே நான் செல்வேன்.(25) இந்த அவஸ்தையை அடைந்திருக்கும் எனக்கு, இக்ஷ்வாகு குலநந்தனனான ராகவனை இங்கே காண முடியாததைவிட என்ன துக்கம் ஏற்பட முடியும்?(26) ஹா ராமா, ஹா ராமானுஜா {ராமனின் தம்பியான லக்ஷ்மணா}, ஹா தபஸ்வினியான வைதேஹி, அநாதையைப் போல துக்கத்துடன் நான் சாகப்போவதை நீங்கள் அறியமாட்டீர்களே" {என்றான் தசரதன்}.(27)
துக்கத்தில் பெரிதும் விரக்தியடைந்தவனும், கடப்பதற்கு மிகக் கடினமான சோக சாகரத்தில் மூழ்கியவனுமான அந்த ராஜா {தசரதன், மீண்டும் பின்வருமாறு} சொன்னான்:(28) "தேவி, கௌசலையே, நான் மூழ்கியிருக்கும் இந்த சோக சாகரத்தில் ராம சோகமே மஹாபாகமாகும் {பெரும்பகுதியாகும்}, சீதையைப் பிரிவதே மறுகரையாகும். துன்பப் பெருமூச்சுகளே இதன் அலைகளும், பெருஞ்சுழல்களுமாகும். கண்ணீரே இதில் நுரைகளுடன் கலங்கியிருக்கும் ஜலமாகும். கைகளின் வீச்சுகளே துள்ளும் மீன் கூட்டங்களாகும். பேரோலங்களே இதன் பெருங்கோஷமாகும். கலைந்த தலைமுடியே வேலம்பாசிகளாகும். கைகேயியே எனக்குக் கண்ணீரை வரவழைக்கும் வடவாக்னியாவாள் {நீறுபூத்த நெருப்பாவாள்}. குப்ஜையின் {கூனியின்} சொற்கள் பெரும் முதலைகளாகும். அந்தக் கொடூரி {கைகேயி} கேட்ட வரங்களே இதன் கரைகளாகும். இராமனை தொலைதூரம் அனுப்பியதன் மூலம் இது மிக விசாலமடைந்திருக்கிறது {நீண்டிருக்கிறது}. இராமன் இல்லாமல் என்னால் உயிருடன் இந்த சோக சாகரத்தைக் கடக்க முடியாது" {என்றான் தசரதன்}.(29-32)
பெரும்புகழ்படைத்தவனான அந்த ராஜா, "இராகவனையும், லக்ஷ்மணனையும் இப்போதே காண விரும்பினாலும், இங்கே என்னால் அவர்களைக் காண முடியவில்லை. அவர்களை இங்கே கொண்டு வரவும் முடியவில்லை. இது நல்லதல்ல" என்று புலம்பியவாறே, தன் சயனத்தில் மூர்ச்சித்து விழுந்தான்.(33) ராமனின் பொருட்டு புலம்பியதைவிட இரண்டு மடங்கு பரிதாபமாகப் புலம்பிய அவனது வசனங்களைக் கேட்டும், பார்த்திபன் விழுந்ததைக் கண்டும் {கௌசல்யா} தேவி மீண்டும் பயமடைந்தாள்[3].(34)
[3] முதல் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டதைப் போல, அந்த நான்கு சுலோகங்களையும் சேர்த்தால் இந்த சர்க்கத்தின் சுலோக எண்ணிக்கை 38 ஆகும்.
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 059ல் உள்ள சுலோகங்கள் : 34
Previous | | Sanskrit | | English | | Next |