The censure of Kausalya | Ayodhya-Kanda-Sarga-061 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனை நாடு கடத்தும் தசரதனின் தீச்செயலை நிந்தித்த கௌசல்யை; பெருந்துயரில் மூர்ச்சித்து விழுந்த தசரதன்...
தர்மத்திற் சிறந்தவனும், மகிழ்ச்சியளிப்பவர்களில் சிறந்தவனுமான ராமன் வனத்திற்குச் சென்றதால் வேதனையடைந்த கௌசல்யை, அழுது கொண்டே தன் பர்த்தாவிடம் {கணவன் தசரதனிடம்} இதைச் சொன்னாள்:(1) "இராகவர் {தசரதர்} கருணையுள்ளவர், தாராள மனம் படைத்தவர், பிரியவாதி {அன்புடன் பேசுபவர்} என்று மூவுலகங்களிலும் உமது மகத்தான புகழ் பரவியிருந்தாலும் {என்ன பயன்?},(2) நரவரசிரேஷ்டரே {முதன்மையான மனிதர்களில் சிறந்தவரே}, சுகமாக வளர்ந்து, துக்கத்தில் பீடிக்கப்பட்டவர்களான உமது புத்திரர்கள் இருவரும், சீதையும் எவ்வாறு வன துக்கத்தை சகிப்பார்கள்?(3) சியாம தாருணியும் {இளமையின் உச்சத்தில் இருப்பவளும்}[1], சுகுமாரியும், சுகத்திற்கே தகுந்தவளுமான அந்த மைதிலி உஷ்ணத்தையும், சீதத்தையும் {வெப்பத்தையும், குளிரையும்} உண்மையில் எவ்வாறு சகித்துக் கொள்வாள்?(4) சுவைமிக்க குழம்புடன் கூடிய சுப உணவை உண்டவளும், விசாலாக்ஷியுமான {நீள்விழியாளுமான} சீதை, வன அரிசியில் உண்டான ஆஹாரத்தை எவ்வாறு உண்பாள்?(5) சுபமான கீத வாத்திய மென் கோஷங்களை {நல்ல பாடல், இசைக்கருவிகளின் மெல்லிசையைக்} கேட்ட அந்த நிந்திக்கத்தகாதவள், ஊனுண்ணும் விலங்குகள், சிங்கங்கள் ஆகியவற்றின் கொடுஞ்சத்தத்தை எவ்வாறு கேட்பாள்?(6)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சியாமம் என்ற சொல்லை நாம் தெரிந்தே மொழிபெயர்க்காமல் விட்டிருக்கிறோம். இதன் வழக்கமான பொருள் கருமை என்பதாகும். ஆனால் சியாமம் என்பது பிள்ளை பெறாத பெண்ணையும் குறிக்கும். இந்த இரண்டாம் பொருளே இங்கே பொருந்தும்" என்றிருக்கிறது.
மஹாபுஜனும், மஹேந்திரனின் துவஜத்தை {இந்திரனின் கொடியைப்} போல மிளிர்பவனுமான அந்த மஹாபலன் {வலிமைமிக்கவனான ராமன்}, பரிகத்தைப் போன்ற தன் புஜங்களையே தலையணையாகக் கொண்டு எங்கே படுத்திருக்கிறானோ?(7) பத்ம வர்ணத்தையும் {தாமரையின் நிறத்தையும்}, அழகிய கேசத்தையும் {தலைமுடியையும்}, பத்ம நறுமண சுவாசத்தையும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும் கொண்டதும், உத்தமமானதுமான ராமனின் வதனத்தை {முகத்தை} நான் எப்போது காண்பேன்?(8) அவனைக் காணாமலும் ஆயிரம் துண்டுகளாக பிளக்காமலிருக்கும் என் ஹிருதயம் நிச்சயம் வஜ்ரசாரமயமானதே {வஜ்ரத்தாலானதே}. இதில் ஐயமேதுமில்லை.(9) சுகத்திற்குத் தகுந்தவர்களும், என் ஆப்த பந்துக்களுமான அவர்கள், உம்மால் கருணையின்றி விரட்டப்பட்டுப் பரிதாபத்திற்குரியவர்களாக வனத்தில் திரிகிறார்கள்.(10)
பஞ்சதச வருஷத்தில் {பதினைந்தாம் ஆண்டில்} ராகவன் திரும்பிவந்தாலும், பரதன் ராஜ்ஜியத்தையும், கோஷத்தையும் {கருவூலத்தையும்} கைவிடுவானென நினைக்கலாகாது.(11) சிலர் சிராத்தங்களிலும் தங்கள் பந்துக்களுக்கே போஜனம் {உணவு} அளிப்பார்கள், காரியம் முடிந்த பின்னரே துவிஜரிஷபர்களை {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்களைத்} தேடுவார்கள்.(12) குணவான்களும், வித்வாம்சம் கொண்டவர்களும் {கல்விமான்களும்}, ஸுரர்களுக்கு {தேவர்களுக்கு} ஒப்பானவர்களுமான துவிஜர்கள் {தேவர்களுக்கு ஒப்பான இருபிறப்பாளர்கள்}, அமுதமாகவே இருப்பினும் பிறருக்கு {பிறர் உண்ட} பிறகு அதை ஏற்க மாட்டார்கள்.(13) {அவ்வாறு உண்டது} நிறைவடைந்தது பிராமணர்களாகவே இருப்பினும், கொம்புகள் ஒடிக்கப் பொறாத ரிஷபங்களைப் போன்ற ஞானமுள்ள துவிஜரிஷபர்கள் அதை உண்ண மாட்டார்கள்.(14) விஷாம்பதியே {உலகத் தலைவரே}, உடன்பிறந்தவர்களில் சிறந்த ஜேஷ்டன் {சகோதரர்களில் சிறந்தவனான மூத்தவன்}, உடன்பிறந்தவர்களில் இளையவனால் அனுபவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை ஏன் மறுக்க மாட்டான்?(15) வேறொன்றால் உண்ணப்பட்ட பக்ஷியத்தை உண்ண விரும்பாத வியாகரத்தை {புலியைப்} போலவே, அந்த நரவியாகரனும் {மனிதர்களில் புலியான ராமனும்}, ஏற்கனவே அனுபவிக்கப்பட்டதை ஏற்க மாட்டான்.(16) {வேள்வியில்} ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ஹவிஸ், நெய், புரோடசம் {பிண்டம்}, குசம் {தர்ப்பை}, காதிரை {கருங்காலி} மரத்தால் செய்யப்பட்ட யூபஸ்தம்பங்கள் ஆகியவற்றை மறுமுறை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.(17) அவ்வாறே ராமனும், சாரம் போன சுராபானத்தைப் போலவோ, சோமம் இல்லாத வேள்வியைப் போலவோ, பிறரால் அபகரிக்கப்பட்ட இந்த ராஜ்ஜியத்தை ஏற்கமாட்டான்[2].(18)
[2] சில பதிப்புகளில் இதன்பிறகு இன்னும் மூன்று சுலோகங்கள் இருக்கின்றன. நரசிம்மாசாரியர் பதிப்பில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவாறு அவற்றின் பொருளைப் பின்வருமாறு கொள்ளலாம்: "ராமன் மிகவும் கோபித்துக் கொண்டிருப்பானாயின், இப்படிப்பட்ட அவமானத்தை அவன் அடைந்தேயிருக்கமாட்டான். அவன் கோபித்துக் கொள்வானாயின், தீக்ஷ்ணங்களாகிய தனது பாணங்களால் மந்தரபர்வதத்தையும் இரு பிளவாகப் பிளந்துவிடுவான்.{19} தான் இப்படிப்பட்ட மஹானுபாவனாயினும், அவன் உன்னை மாத்ரம் தந்தையென்கிற கௌரவத்தைப் பற்றி அடிக்க முயலான். ராமன் கோபமுறுவானாயின், சந்த்ர ஸூர்யர்களோடும் நக்ஷத்ரங்களோடுங் கூடிய ஆகாயத்தையாயினும் ஸ்வர்க்கத்தையாயினும் அறுத்துத் தள்ளிவிடுவான்.{20} நூறு நூறாகப் பர்வதங்கள் நிரம்பிய பூமண்டலம் முழுவதையும் கலங்கடித்து வெல்லவும் வல்லமையுள்ளவன். அப்படிப்பட்ட ஸமர்த்தனாயினும் அவன் உன்னை மாத்ரம் உல்லங்கனஞ் செய்யாதிருக்கின்றனன்.{21}" என்றிருக்கிறது. இவற்றையுஞ் சேர்த்தால் இந்த சர்க்கத்தில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கை 30 ஆகும். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பு, தாதாசாரியர் பதிப்பு ஆகிய தமிழ்ப்பதிப்புகளிலும், கே.எம்.கே.மூர்த்தி, பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் ஆங்கிலப்பதிப்புகளிலும் இந்த மூன்று சுலோகங்களும் விடுபட்டிருக்கின்றன. தமிழில் நரசிம்மாசாரியரின் பதிப்பில் அடைப்புக்குறிக்குள்ளும், ஆங்கிலத்தில் வி.வி.சுப்பாராவ் பதிப்பிலும் இவை இருக்கின்றன.
வாலைத் தீண்டவும் பொறுக்காத பலமிக்க சார்தூலத்தை {புலியைப்} போலவே, ராகவனும் {ராமனும்} அவ்விதமான அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள மாட்டான்.(19) உலகங்கள் ஒன்றுகூடி பெரும்போரில் ஈடுபட்டாலும், அவற்றால் அவனிடம் பயத்தை உண்டாக்க முடியாது. அந்த தர்மாத்மா, அதர்மமான இந்த உலகத்திற்கு தர்மத்தைச் செய்வான்.(20) மஹாபுஜங்களைக் கொண்ட அந்த மஹாவீரன் {ராமன்}, யுகாந்தத்தில் {யுகமுடிவில்} போலவே, தன் காஞ்சனபாணங்களால் {பொற்கணைகளால்} பூதங்கள் அனைத்தையும், சாகரத்தையும் {கடலையுங்கூட} நிச்சயம் எரித்துவிடுவான்.(21) அத்தகைய சிம்மபலங்கொண்டவனும், ரிஷபத்தின் கண்களைக் கொண்டவனுமான அந்த நரரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்}, ஜலஜேனத்தால் {மீனால்} கொல்லப்படும் {மீன்}குஞ்சுகளைப் போலத் தன் பிதாவாலேயே கொல்லப்பட்டான்.(22) தர்மத்தைப் பின்பற்றும் புத்திரன் உம்மால் நாடுகடத்தப்பட்டான். இஃது உமக்கு சாஸ்திரங்களில் காணப்படும் தர்மமா? அல்லது துவிஜர்களால் பின்பற்றப்படும் சனாதனமா {தொன்மையான, அழிவில்லாத நித்திய நடைமுறையா}?[3](23)
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "துவிஜன் என்பது, ஒரு வகை இரண்டாம் பிறப்பாகும், அதாவது அவன் கல்வி முடித்து உபநயன சடங்கைச் செய்து இரு பிறப்பாளன் ஆனவன். துவிஜன் என்பது பிராமணரைக் குறிப்பதாக அடிக்கடி பொருள் கொள்ளப்பட்டாலும், முதல் மூன்று வர்ணத்தாரும் பூணூல் அணியும் துவிஜர்களே" என்றிருக்கிறது.
ராஜரே, ஒரு நாரியைக்கு {பெண்ணுக்கு} பதியே முதன்மையான கதியாவான், ஆத்மஜன் {மகன்} இரண்டாம் கதி, ஞாதிகள் {நெருக்கமான உறவினர்கள்} மூன்றாம் கதி, இங்கே {இவ்வுலகில்} நான்காவது கதியேதும் கிடையாது.(24) இவற்றில் {இந்த மூன்றில்} நீர் இல்லை, ராமனும் வனத்தில் தஞ்சம் புகுந்தான். நான் வனத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அனைத்து வழிகளிலும் உம்மால் நான் அழிந்தேன்.(25) இந்த ராஜ்ஜியமும், ராஷ்டிரங்களும் உம்மால் அழிக்கப்பட்டன. நீரும், மந்திரிகளும் அழிந்துவிட்டீர்கள். புத்திரனுடன் நானும் அழிந்தேன். நகரவாசிகளும் அழிந்தனர். உமது சுதனும் {உமது மகன் பரதனும்}, பாரியையும் {உமது மனைவியான கைகேயியும்} மகிழ்ச்சியாக இருக்கட்டும்" {என்றாள் கௌசல்யை}.(26)
கொடுஞ்சொற்களுடன் கூடிய இந்தக் ஒலியைக் கேட்ட ராஜா, துக்கத்தில் மோஹமடைந்தான் {மூர்ச்சை அடைந்தான்}. அதன்பிறகு அந்தப் பார்த்திபன் {மண்ணின் தலைவன்}, தன் தீச்செயலை மீண்டும் நினைத்து சோகத்தில் விழுந்தான்.(27)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 061ல் உள்ள சுலோகங்கள் : 27
Previous | | Sanskrit | | English | | Next |